அத்தியாயம் 8
கனகவேல் ராஜா இளமையிலையே! நுண்ணறிவு மிக்க புத்திசாலி. ஆட்களை எடை போடுவதில் வல்லவர். பேச்சு திறமையும் மிக்கவர். சந்தர்ப்ப சூழ்நிலையில் நண்பரின் தந்தையான எம்.எல்,ஏயின் உயிரை காப்பாற்றி அவரின் இன்னொரு மகனாகவே! மாறியவர்.
முதலமைச்சராகக் கூடிய ராஜயோகம் ஜாதகத்தில் இருப்பதை அறிந்துகொண்ட நொடி தன்னை முற்றாக அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டு, எம்.எல்.ஏ கூடவே இருந்து அரசியலின் நெளிவு சுளிவுகளை எல்லாம் கற்றுக்கொண்டிருந்தார் கனகவேல்.
இதையறிந்த கனகவேலின் தந்தை ஞானவேல் மகனை தடுக்க “குடும்ப சொத்து வேண்டுமானால் நான் சொல்லும் பெண்ணை திருமணம் செய்துகொண்டு வீட்டோடு இரு” என்று கட்டளையிட குடும்ப சொத்தும் வேண்டும், பதவியும் வேண்டும் என்று அவர் குறுக்கு புத்தி கணக்கு போட, தந்தையின் வழியில் செல்வது போல் சென்று சொத்தை எழுதி வாங்கிக் கொண்டவர்.
இதில் ஞானவேல் மகன் மறுத்து விடுவான் என்று குண்டான வத்சலாவை கோவிலில் வைத்துக் காட்டாமல் தங்கை யசோதாவை காட்டி இருக்க, கல்யாண கனவில் மிதந்த கனகவேலுக்கு தாலி காட்டும் நேரத்தில் மணமகள் மாறியதைக் கண்டு பெருத்த ஏமாற்றம்.
சொத்து முக்கியமென்பதால் அமைதியாக வத்சலாவின் கழுத்தில் தாலியை கட்டி குடும்பமும் நடாத்தி அருள்வேலையும் பெற்றபின் யசோதாவை கடத்தி திருமணம் செய்திருந்தார் கனகவேல்.
மகன் வத்சலாவோடு அன்னியோன்யமாக வாழ்வதால் யசோதா காணாமல் போனதற்கு மகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஞானவேல் நினைத்துக்கொண்டிருக்க, மீண்டும் அரசியலில் களமிறங்கினார் கனகவேல்.
அத்தோடு அரசியலில் புழங்கும் கொழுத்த பணம் வேறு அவர் கண்ணை உறுத்த, அவரின் அடி மனது ஆசை. சொத்து சேர்ப்பதில் மும்முரம் காட்ட ஆரம்பித்தது.
மனதுக்கு பிடித்த பெண், பணம், பதவி என்று கனகவேல் ராஜயோகத்தால் உச்சமடையும் பொழுதுதான் வீட்டாருக்கு கனகாவேல்தான் யசோதாவை கடத்தி திருமணம் செய்த்திருப்பது தெரிய வந்தது. அப்பொழுது கிருஷ்ணா பிறந்த அவனுக்கு ஆறு வயது.
“யானைக்கும் அடி சறுக்கும் என்று என் திருமண விஷயத்தில் புரிந்துகொண்டேன். அதற்காக நான் வருத்த படவில்லை. எனக்கு என்ன தேவையோ! அதை அடைய நான் எந்த எல்லைக்கும் போவேன்” என்று தந்தையிடம் கர்ஜிக்க,
தன்னோடு அன்னியோன்யமாக வாழ்ந்த கணவன்தானா இது. “அப்போ அவர் பேசியது? பழகியது? என் கூட வாழ்ந்த வாழ்க்கை எல்லாம் நடிப்பா?” முற்றாக உடைந்து போனாள் வத்சலா.  
“அக்காவையும், தங்கையும் கல்யாணம் பண்ணி வாழ்வது ஊரில் நடக்காததா?” வத்சலாவுக்கு தன்னை விட்டால் போக்கிடம் இல்லை. அது மட்டுமன்றி வத்சலா குணத்தில் சொக்கத்தங்கம் தன்னை விட்டுக்கொடுக்க மாட்டாள் என்று கனகவேல் இறுமாப்பில் இருக்க,
தன்னை பிடிக்காத ஒருவரோடு வாழ முடியாது என்று வத்சலா அருள்வேலை தங்கையிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கிக்கொள்ள, தனது அரசியல் வாழ்க்கைக்கு அதுதான் சரியென்று கனகவேல் வத்சலாவை தன்னோடு சேர்ந்து வாழ அழைக்கவில்லை.  
பதவியும் வேண்டும், சொத்தும் வேண்டும். அவை இரண்டும் இருந்தால்தான் மதிப்பும், மரியாதையோடும் இந்த சமூகத்தில் வாழ முடியும் என்று எண்ணிய கனகவேல் சொத்து சேர்த்ததோடு மக்களுக்கும் சேவைகளை செய்து மக்கள் மனதிலும் நல்ல தலைவர் என்ற பெயரை நிலை நாட்டி வைத்திருந்தார்.
எவ்வளவுதான் சொத்து இருந்தாலும் அதை சேர்க்கும் பேராசை சிலரை விட்டு போவதில்லை. அதில் ஒருவர்தான் கனகவேல் ராஜா. 
என்னதான் அறிவு கூர்மையாக இருந்தாலும், புகழ்ச்சியில் மயங்கும் மனதை கொண்ட முதலமைச்சர் கோதையின் பேச்சில் உருகி கரைந்து மதிமயங்கி போய் அவளை மருமகளாக ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வந்து விட்டார்.
ஆனாலும் அவரின் குணம் மாறுமா? அதனால் கண்ணபிரானை உக்கார வைத்து பெண்கள் இருந்தால் குட்டையை குழப்பி விடக்கூடும் என்று அவர்களை அப்புறப்படுத்தி விட்டு, நடந்து முடிந்த கல்யாணத்துக்கு பேரம் பேச ஆரம்பித்து விட்டார்.
முதலமைச்சர் எதற்கு அடிபோடுகிறார் என்று பெண்ணை பெற்ற கண்ணபிரானுக்கு புரியாமலில்லை. அவர் பேசி முடிக்கட்டும் என்று இவர் மௌனம் காக்க,
க்ரிஷ்ணாவோடு சென்ற கோதைக்கு அத்தையோடு அம்மாவும் பாட்டியும் அந்த பக்கம் செல்வது கண்ணில்பட எதுவோ சரியில்லை என்று தோன்ற “குடிக்க தண்ணி வேணும்” என்று கிருஷ்ணாவை ஏறிட்டாள்.
“ராமையா…” என்று கிருஷ்ணா உள்ளே நோக்கி குரல் கொடுக்கலானான்.
“ஏன் நீ போய் எடுத்துட்டு வர மாட்டியா? சும்மா சும்மா லவ் பண்ணுறேன்னு மட்டும் சொல்லுற? எனக்காக தண்ணி கூட கொண்டு வந்து தர மாட்டியா? தண்ணிக்கே! இப்படின்னா… எனக்கு உடம்பு முடியாம போனா… சீக்காளி வந்த பொண்ணுன்னு திரும்பி கூட பாக்க மாட்டியே!” நெஞ்சில் அடித்தவாறே “ஐயோ நான் நல்லா ஏமாந்துட்டேன். காதலிக்கிறேன்னு சொல்லி என்ன இவன் ஏமாத்திட்டானே!” தரையில் தொப்பென்று உக்காந்து விசும்ப ஆரம்பித்தாள் கோதை.
மிராண்ட க்ரிஷ்ணாவோ! “அடியேய் உனக்கு இப்போ தண்ணி தானே! வேணும் நானே! போய் எடுத்துட்டு வரேன். உசுர வாங்காத. ஒரு செம்பு தண்ணிக்கு என்ன பேச்சு பேசுறா… முடியல” புலம்பியவாறே கிருஷ்ணா நகர,
கணவன் சென்ற உடன் கோதை வாசலுக்கு வந்திருக்க கோதையின் காதில் அருள்வேலிடம் கண்ணபிரானிடம் தனியாக பேச வேண்டும் யுவனையும், வசந்த்தையும் தோட்டத்தை சுற்றிப்பார்க்க அழைத்து செல்லுமாறு முதலமைச்சர் கூறுவது  தெளிவாக விழுந்தது.
“அப்பா கிட்ட என்ன தனியா பேச போறாரு?” என்று அங்கேயே நின்று ஒட்டு கேக்க ஆரம்பித்தாள்.
முதலமைச்சர் பேச பேச “சீதனமா கேக்குறீங்க சீதனம். இருங்க வரேன். வந்து குண்டர் சட்டத்துல உள்ள தூக்கி வைக்கிறேன். அதுல உள்ள போனாதான் உங்கள மாதிரி ஆட்களால் வெளிய வர முடியாது” கருவியவாறே வந்தவள் 
“புரிஞ்சது நல்லாவே புரிஞ்சது மாமா. அதெல்லாம் அப்பா சரியாவே! பண்ணுவாரு. இல்ல அப்பா.. அவருக்கு இருக்குறது ரெண்டு பொண்ணுக. எங்களுக்கு பண்ணாம வேற யாருக்கு பண்ண போறாரு?” என்று கண்ணபிரானின் கையை கோர்த்துக் கொண்டு அமர்ந்தவள் ஆறுதலாக கையை பிடித்துக்கொண்டாள்.
“ஐயா… ஐயா…” என்று கடவுளுக்கு நிகராக பேசியவள் மாமா என்று அழைத்தது கனகவேலின் கவனத்தில் இல்லை. அவர் கண்ணபிரானோடு பேசும் பொழுது இந்த சின்ன பெண் எதற்கு குறுக்கிடுகிறாள் என்று கோபம் தலை தூக்கினாலும், பெண்ணுக்கு தெரிந்திருந்தால் அவள் மூலமாக அப்பனை அதை செய் இதை செய் என்று நச்சரிக்கலாம் என்று அவர் மூளை உடனடி கணக்கு போட்டது.
“சந்தோசம் அம்மா… வீட்டுக்கு வந்த மருமக வெறுங்கைய வீசிக்கிட்டு வந்தானு யாரும் பேசிடக் கூடாது இல்ல. அதற்காகத்தான்”
முதலமைச்சர் தனது பேச்சுத் திறமையால் இந்த சின்ன பெண்ணை மடக்கிடலாம் என்று எண்ணி ஆரம்பித்தார். பாவம் அவருக்குத்தான் தெரியவில்லை. அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பனை பெற்றவர் அவர் அவனுக்கு வாச்ச பொண்டாட்டி மட்டும் அமைதியின் சிகரமா “சரிங்க மாமா” என்று அவர் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டுவாளா?      
“நான் எப்போ வெறுங்கைய வீசிக்கிட்டு வந்தேன். உங்க பையன் கைய இறுக்கமா பிடிச்சிட்டு தான் வந்தேன் மாமா…”
கனகவேல் புரியாது முழிக்க “ஜோக்கு மாமா ஜோக்கு” என்றவள் வெகுளியாக சிரிக்க, கனகவேலும் “ஹா..ஹா..” பொய்யாய் சிரிக்கலானார்.
 எவ்வளவு அனுபவமும், புத்தி கூர்மையும் இருந்து என்ன பிரயோஜனம். சிலநேரம் நம் முன்னால் அமர்ந்திருக்கும் நபர் நம்மளை விட தாழ்ந்தவர், நம்மளை நெருங்க முடியாதவர், சின்ன பிள்ளை. அனுபவமில்லாதவர், ஒன்றும் தெரியாத அப்பாவி என்று நாமே! முடிவு செய்து விட்டால் நம் கண்ணோட்டம் அந்த நபர் என்ன பேசினாலும் சந்தேகம் வராது.
அதே நிலைமையில் தான் இருந்தார் கனகவேல். கோதையை கணிக்க தவறிய முதல் கோணம் முற்றிலும் கோணமாகி, அவள் எதோ! சிறுபிள்ளை தனமாக உளறுவதாக எண்ணி சிரிக்கலானார். விட்டால் அவள் அவரது வலது காதினுள் புகுந்து இடது காதின் வழியாக வெளியேறி இருந்திருப்பாள். ஒன்றும் அறியாதது போல் முகத்தை வைத்திருந்தாலும் அவள் செய்யும் சேட்டைகளை வீட்டாரும் தோழிகளும் மட்டுமே! அறிவர். 
“நாம வரும் போது பட்டாசெல்லாம் போட்டாங்களா… பயந்தே! போய்ட்டேன். பல்லி மாதிரி உங்க பையன் கைய பிடிச்சிகிட்டேன். அவரு வேற அவன்கண்ணன முறைச்சு பாத்தாரா…”
“அம்மா… கோதை…” என்று கண்ணபிரான் குறுக்கிட
“இவரு ஒருத்தர் விட்டா இருக்குற சொத்து பூரா என் மாமனாருக்கு எழுதி கொடுத்துட்டு விரல சூப்பி கிட்டு நிக்க முடிவு பண்ணிட்டாரு போல” அந்த தோற்றம் வேறு கண்ணில் வர மேலும் சத்தமாக சிரித்தாள் கோதை.
“அம்மா… கோதை…” கண்ணபிரான் மீண்டும் அழைக்க,
“விட மாட்டாரு போலயே!”
“சும்மா இருப்பா… நாம வரும் போது மாமா இங்க இல்லல. என்ன நடந்ததுன்னு அவருக்கு தெளிவா எடுத்து சொல்ல வேணாமா? மாநிலத்தையே! ஆளுற முதலமைச்சர் அவரு. எப்பேர்ப்பட்ட மனிசன். வீட்டுல நடக்குற சின்ன சின்ன விஷயமெல்லாம் தெரிஞ்சி வச்சிக்கணுமா? வேணாமா? தெரியல்னு சொன்னா நாலுபேர் நாலுவிதமா பேச மாட்டாங்களா? இல்ல மாமா?” என்று இழுக்க
“ஆ… ஆ…. நீ சொல்லுமா…” வேறு வழியில்லாது கனகவேல் கதைகேற்க ஆரம்பித்தார்.
“முதலமைச்சர் முக்கியமான விஷயம் பேசும் பொழுது இந்த பொண்ணு எதுக்கு குறுக்க வந்து பேசுறா? பொண்ண ஒழுங்கா வளர்க்கலனு சொல்லிட போறாரு” கண்ணபிரான் கவலையில் ஆழ்ந்தார்.    
தண்ணி எடுத்துக்கொண்டு வந்த கிருஷ்ணா மனைவியை தேட கோதை அங்கு இல்லாததை கண்டு “எங்க போய்ட்டா இவ? வீட்டை சுத்தி பார்க்கலாம்னு கிளம்பிட்டாளா?  இருக்காதே! புது இடம் எங்குறதால என்ன கழட்டி விட்டு தனியா சுத்த மாட்டாளே! எங்க போனா? என்றவனுக்கு சிரிப்பு சத்தம் கேட்கவே! எட்டிப்பார்க்க கண்ணபிரான் தவிப்பாக அமர்ந்திருப்பதையும், கோதை சொல்லும் மொக்க கதையை கேட்டு தந்தை அமர்ந்திருப்பதையும் பார்த்து அங்கு என்ன நடந்திருக்கும் என்று ஊகித்தான்.
“அடிப்பாவி ஒன்னு என்ன கோர்த்து விடுற, இல்ல என்ன கழட்டி விடுற. புருஷன்னு கொஞ்சமாச்சும் மரியாதை தரியா? கூப்பிட்டிருந்தா கூடவே! வந்து எங்கப்பாவ கும்மி அடிச்சி உண்டு இல்லனு பண்ணி இருக்கலாமே! பரவால்ல. எங்க அப்பாவ நானே! நல்லா சமாளிப்பேன். நீ எனக்கு மேல இருக்க, அது வரைக்கும் சந்தோசம்” முணுமுணுத்தவனுக்கு கொஞ்சம் கவலை எட்டிப்பார்க்காமல் இல்லை.
கோதை தன்னை விரும்பவில்லை என்று தெரியும், அவளை பொறுத்தவரையில் நடந்தது கட்டாய கல்யாணம் என்பதும் தெரியும். ஒரு மனைவி தன் கணவனிடம் எதிர்பார்ப்பது காதலும் நம்பிக்கையும், காதலை சொல்லியாச்சு. நம்பிக்கையை எப்படி உணர்த்துவது? அவன் மீது நம்பிக்கை இல்லை என்பதால் தானே! “தண்ணீர் கொண்டு வா” என்று அவனை அனுப்பி விட்டு இங்கு வந்து இந்த வேலை பார்த்து கொண்டு நிற்கின்றாள்.
சுயபட்சப்பத்தில் ஆழ்ந்த கிருஷ்ணா   தலையை உலுக்கிக் கொண்டு மனைவியின் அருகில் சென்று அமர்ந்தான்.
ஆதனால் கனகவேல் ராஜாவால் தான் நினைத்ததை கண்ணபிரானோடு பேச முடியவில்லை. கண்ணபிரானும் முதலமைச்சர் பேச ஆரம்பித்ததை தனது செல்ல மகள் பேச விடாது பண்ணி விட்டாளே! என்று வருந்த ஆரம்பித்தார்.
இரவு உணவு மேசையை கல்யாண விருந்துக்கு கொஞ்சமும் குறைவில்லாதுதான் யசோதா ஏற்பாடு செய்திருந்தாள்.
உணவு கோதையின் குடும்பத்தாரோடு கிருஷ்ணாவின் குடும்பத்தாரும் அமர்ந்திருக்க முதலமைச்சரை மட்டும் காணவில்லை.
“ஐயா எங்க? சாப்பிட வரலையா?” பெண்ணை கட்டிக்கொடுத்த இடம் என்றாலும் சம்மந்தி என்று அழைக்க முடியாத நிலையில் கண்ணபிரான் கேட்டிருக்க,
அருள்வேலோ! மிக சாதாரணமாக “அப்பா அப்போவே! சாப்பிட்டுட்டு தூங்க போய்ட்டாரு” என்றான்.
“முதலமைச்சர் என்றா? நம்ம கூட உக்காந்து சாப்பிட கூட மாட்டாரா?” பொருமிய கோதை கிருஷ்ணாவிடம் திரும்பி “என்ன என்னைய காதலிச்சு கல்யாணம் பண்ணி உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்து அவமானப்படுத்தலாம்னு முடிவு பண்ணி இருந்தியா?”
“என்னடி சொல்லுற?” புரியாது முழித்தான் கிருஷ்ணா.
“பின்ன உங்க அப்பா முதலமைச்சர் என்றா கொம்பா மொளச்சிருக்கு? எங்க அப்பா கூட உக்காந்து சாப்பிட மாட்டாராமா? எங்க குடும்பத்தோட உக்காந்து சாப்பிட்டா குறைஞ்சா போய்டும்? நீங்க என்ன ராஜ பரம்பரையா? நாங்க என்ன அடிமை வம்சமா? ஒன்னா உக்காந்து சாப்பிட்டா ஒட்டாதா? அப்போ எதுக்கு என்ன கல்யாணம் பண்ணீங்க? இப்படி என் குடும்பத்தை அவமானப்படுத்த நினைச்சீங்க உங்கள கொலை கூட பண்ண தயங்க மாட்டேன்.
நாளைக்கு உங்க வீட்டுக்கு எங்க குடும்பத்துல இருந்து யாரும் என்ன பார்க்க வரக் கூடாதா? வந்தா? இப்படித்தான் பண்ணுவீங்களா? இன்னக்கி ஒரு நாள்னு விட்டா தினமும் இதைத்தானே! செய்வீங்க? அத விடுங்க, இப்போ நமக்கு கல்யாணம் ஆகிருச்சு. நமக்கு கொழந்த பொறந்தா, பேர் வைக்க, காதுகுத்து, நம்ம கல்யாண நாள் என்று எத்தனை பங்க்ஷன் வரும் எல்லாத்துக்கும் எங்க குடும்பத்தை ஒதுக்கி வச்சிட்டுதான் பண்ணுவீங்களா? கொன்னுடுவேன்”
கோதை பேசப்பேச “என்ன இவ? என்ன எதுன்னு கூட கேக்காம இப்படி மிரட்டுறா? எவ்வளவு தூரத்துக்குத்தான் போறான்னு பாப்போம்” என்று கிருஷ்ணா அமைதியாக கேட்டுக்கொண்டிருக்க, கிருஷ்ணாவின் அமைதி கோதையை இன்னும் தூண்டி கொலை மிரட்டல் விடும் அளவுக்கு சென்றிருந்தது.
“கோதை அங்க என்ன டி பேராண்டி கிட்ட பேசிகிட்டு இருக்க? அதான் ராத்திரி பூரா பேச நேரம் இருக்கே! அப்போ பேசிக்க இப்போ சாப்பிடு” வடிவுப்பாட்டி அதட்ட,
“அது ஒன்னும் இல்ல பாட்டி எங்க அப்பாவும் நம்ம கூட சாப்பிட்டு இருந்தா நல்லா இருக்கும் என்று சொல்லுறா?” என்ற கிருஷ்ணாவின் முகத்தில் கிண்டல் டான் டானாக வழிந்தது.
அருகிலிருந்த அருள்வேலுக்கு பரிமாறியவாறே! “ஐயோ நீ வேறமா.. உங்க மாமாக்கு சுகர், பிரசரு, கொலஸ்டரோலு எல்லாம் ரத்தத்துல எகிறி கிடக்குது. காலைலையும், ராத்திரியில், ராகி தோசை, ராகி கஞ்சிதான், மதியம் கொஞ்சம் சாதம், வேகா வச்ச மரக்கறி, ஒரு துண்டு மீன். இடையிடையே! நறுக்கின பழங்கள் அது தவிர நான் வேற எதையும் கண்ணுல காட்ட மாட்டேன்.
மரியாதைக்காக இங்க உக்கார வச்சா அரசியல் பேசுறேன்னு மொக்க போட்டுக்கிட்டு கண்டதையும் வாயில திணிப்பாரு அப்பொறம், கொலஸ்டரோலு கூடிப்போச்சு, சுகர் ஏறிப்போச்சு, பிரசரு எகிறு போச்சுனு எங்க உசுர வாங்குவார். அதான் ராகி தோசைய அறைக்கே! கொடுத்தனுப்பி, மாத்திரையும் கொடுத்து தூங்க வச்சிட்டு வந்தேன். நாம நிம்மதியா சாப்பிடலாம் இல்ல. இல்லனா தொணதொணனு…” மருமகளிடம் சொல்லியவாறே தனக்கும் பரிமாறிக்கொண்டாள் யசோதா.
அசடு வழிய கிருஷ்ணாவை ஏறிட்ட கோதை கிருஷ்ணா குறும்பாக சிரிக்கவும் கெத்தை விடாது “இங்க என்ன பார்வை தட்ட பார்த்து சாப்பிடுங்க, அப்பொறம் எங்க வீட்டு கிழவி அதுக்கும் ஏதாச்சும் சொல்லிட போகுது”
யசோதாவும் மிக இயல்பாக அனைவரோடும் பேசியவாறு உணவு பரிமாற கோதை இந்த வீட்டில் மாமியார் பிரச்சினை இல்லாமல் இருப்பாள் என்று அபரஞ்சிதாவுக்கு சற்று நிம்மதியாக இருந்தது.
முதலிரவு அறையில் கிருஷ்ணா குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். இரண்டு வருடமாக காதலித்த காதலியை கரம் பிடிக்க போகிறோம் என்ற கனவுகளோடு அமெரிக்காவிலிருந்து விமானம் ஏறியவனுக்கு இந்த இரவை பற்றிய கனவுகள் கண்களில் விரியாமல் இல்லை.
இருந்தாலும் அவளிடம் பேசி புரிய வைக்க வேண்டிய ஒருசில விஷயங்கள் இருக்க, காதலி புரிந்துகொள்வாள் என்று நம்பி இருந்தான்.
இன்று எல்லாம் தலைகீழாக மாறி இருந்தது. அவன் காதலித்தவளுக்கு அவன் அந்நியனாக தோன்ற அவள் ஆசா பாசங்கள் என்னவென்று கூட தெரியவில்லை.
இதில் கட்டாய தாலியை கட்டி விட்டான் என்று எண்ணிக்கொண்டிருப்பவளிடம் இந்த விஷயத்தை பேசி புரிய வைக்க முடியுமா? புரிந்துகொள்வாளா? ஒதுக்கி வைப்பதாக, ஏன் பழிவாங்க தான் தாலி காட்டினாய் என்று பேசி விடுவாள். என்ன செய்வது? என்று புரியாமல் அன்னையிடம் திருமணம் தான் திடிரென்று நடந்தாயிற்று முதலிரவை தள்ளி வைக்கலாம் என்று கூறியும் பார்த்து விட்டான்.
“என்ன டா பேசுற? இன்னக்கி நிறைஞ்ச முகூர்த்த நாள் டா… உங்க வாழ்க்கையை ஆரம்பிக்க ரொம்ப நல்ல நாள்” யசோதா குழப்பமாக மகனை ஏறிட
“அதுக்கு இல்லமா அருளுக்கு கல்யாணமாகி அவன் இன்னும் வாழ்க்கையை ஆரம்பிக்காம இருக்கான். இந்நேரத்துல நான் கல்யாணம் பண்ணிகிட்டது தப்பு. ஆனா சந்தர்ப்ப சூழ்நிலை பண்ண வேண்டியதா போச்சு. சடங்கு சம்ப்ரதாயம் எல்லாம் அப்பொறம் வச்சிக்கலாமே!”
“டேய் நீ அவ்வளவோ! நல்லவனா? வாய்ப்பில்லையே! உண்மைய சொல்லு உன் பொண்டாட்டி மண்டபத்துல பேசின பேச்சுக்கு ரூமுக்குள்ள போக பயப்படுறல்ல நீ” தம்பியை கிண்டல் செய்தவாறே அருள்வேல் வர
“ஏன்பா.. உனக்கு ஒன்னும் வருத்தம் இல்லையே! சாத்திர, சம்பரதாயங்கள் நல்ல நேரத்துல நடக்கணும் என்றுதான் இன்னைக்கே! ஏற்பாடு பண்ண சொன்னேன்”
“என்னம்மா நீங்க.. இவன் ரூமை டெகரேட் பண்ணாதே! நான். என் கிட்ட போய்… இங்க பாருடா தம்பி… என் பொண்டாட்டியோட நான் வாழாம இருக்க காரணம் அப்பாவோ! இல்ல, வேற காரணமோ! இல்ல. அவளே! தான். அவ மட்டும் ம்..னு ஒரு வார்த்த சொல்லட்டும் அடுத்த செக்கன் அவளை தேடி நான் போய்டுவேன். என்ன பத்தி யோசிக்காத உன் வாழ்க்கையை பாரு” என்றவன் தம்பியின் காதில் “உன் பொண்டாட்டி வேற ரொம்ப பேசுறா இந்த இந்த சுவிங்கம் பெக்கட்ட வச்சிக்க. எதுக்கும் யூஸ் ஆகும்” என்று கையில் திணித்து விட்டு சென்றிருந்தான்.
“இது எதுக்கு மென்னு என் காதுல அடச்சிக்கவா?” என்று அதை திருப்பி திருப்பி  பார்த்த கிருஷ்ணா ஷார்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டான். 
என்னதான் இரண்டு தாய் வயிற்றில் பிறந்திருந்தாலும், கிருஷ்ணாவும் அருளும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் போல்தான் இருப்பார்கள். அவ்வளவு ஒற்றுமை. அதற்கு காரணம் கனகாவேல் ராஜா என்றால் மிகையில்லை.
அருள் அமைதியானவன் தந்தையை எதிர்த்து பேசாதவன். தந்தை என்ன சொல்கின்றாரோ! அதை தலையாட்டி பொம்மை போல் அவ்வாறே! செய்பவன். ஆனால் கிருஷ்ணா அவனுக்கு நேர்எதிர் குணம் கொண்டவன்.
தனக்கு நியாபகம் இருக்கும் நாளிலிருந்து அன்னை சதா அழுதவாறு இருக்க, அதற்கு காரணம் தந்தைதான் என்று அறிந்துகொண்ட நொடியிலிருந்து, அவர் என்ன சொன்னாலும் அதற்கு எதிராக செயல்படுபவன் கிருஷ்ணா.
தன்னால் தந்தையை எதிர்க்க முடியாது ஆனால் தம்பி எதிர்த்து நிற்கின்றான் என்றதும் தம்பீயின் மீது அருளுக்கு அளவுகடந்து பாசம் வந்தது.
அன்னையர் இருவர்களும் அக்கா, தங்கையர்களாகிப் போக, அவர்களின் ஒற்றுமையும் இவர்களின் பாசத்துக்கு மேலும் வலு சேர்த்து.
அதனால் தான் இன்று கிருஷ்ணா தான் காதலிக்கும் பெண் மனைவியாக கிடைத்தும் அண்ணன் வாழ்க்கையை நினைத்து கவலை கொண்டு மனைவியிடம் எவ்வாறு பேசுவது என்று யோசனையில் அறையில் நடை பயின்றுகொண்டிருந்தான்.
கதவு திறக்கும் சத்தத்தில் கிருஷ்ணா திரும்ப கரும்சிவப்பு பாடற் வைத்த வெள்ளை நிற பட்டுப்புடவையில் கோதை பால் டம்ளரோடு நின்று கொண்டிருந்தாள்.
அறையின் அலங்காரத்துக்கு ஏற்ப கோதை தேவைதையாய் மிளிர க்ரிஷ்ணாவால் அவள் மேலிருந்து கண்களை அகற்ற முடியவில்லை.
அறைக்குள் நுழைந்தவள் அறையின் விசாலத்தைக் கண்டு கண்களை விரித்து அறையை ஒருமுறை சுற்றி நடந்து வந்து கிருஷ்ணாவின் கையில் பால் டம்ளரை கொடுக்க, சுயநினைவுக்கு வந்தவன்
“என்ன?” எனும் விதமாக புரியாது பார்த்தான்.
“என்ன? என்ன? பார்வை? பின்ன? பால் செம்பா தருவாங்க? டைனிங் டேபிள்ள உக்காந்து நல்லா மொக்கிட்டு தானே! வந்தீங்க? பால் செம்ம குடிச்சிட்டு முதலிரவு அன்னக்கி தூங்க போறீங்களா?”
“அடிப்பாவி என்ன?னு கேட்டது ஒரு குத்தமா?” கிருஷ்ணா மைண்ட் வாய்ஸில் பேசிக்கொண்டிருக்க, பட்டென்று அவன் காலில் விழுந்திருந்தாள் கோதை.
இதை சற்றும் எதிர்பார்க்காத கிருஷ்ணா பதறியடித்தவனாக அவளை தூக்கி நிறுத்தி “ஏய் எதுக்கு இப்போ என் காலுல எல்லாம் விழுந்து கிட்டு, இந்த பார்மாலிடீஸ் எல்லாம் வேணாம்”
“ஐயோ ஆசைய பாரு. எங்க வீட்டு கிழவி சொல்லிச்சேன்னு விழுந்தேன். இதுதான் முதலும் கடைசியும். நாளைக்கி காலைல உன் கிட்ட கேட்டாலும் கேக்கும். பொய்யெல்லாம் சொல்லாம ஆமா விழுந்தானு சொல்லணும் இல்ல அதுக்காததான். இல்லனா நீ முழிக்கிற முழியிலையே! கிழவி பொய் சொல்லுறத கண்டு பிடிச்சி இருக்கும். உன்ன மிரட்டி கால்ல விழுந்தேன்னு சொல்ல எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்” எனறவள் அவள் பாட்டுக்கு போய் நகைகளை கழட்டி வைக்க ஆரம்பிக்க
“அடிப்பாவி அப்போ நீ மரியாதைக்கு கூட கால்ல விலல, நான் பொய் சொல்லி மாட்டிக்க கூடாதுனு விழுந்திருக்க, எவ்வளவு உஷாரா இருக்க” தான் அவளிடம் என்னவெல்லாம் பேச வேண்டும் என்பதையும் மறந்தவனாக கிருஷ்ணா கோதையின் அருகில் நின்று பேச்சுக் கொடுக்கலானான்.
நகைகளை எல்லாம் கழட்டி வைத்தவள் “உனக்கு எந்த சிரமமும் வைக்காமல் நானே! எல்லாத்தையும் பண்ணிட்டேன். சரி வா ஆரம்பிக்கலாம்”
“என்ன சொல்லுறா இவ” என்று கிருஷ்ணா வழக்கம் போல் கோதையின் பேச்சில் புரியாது அவளையே! பார்க்க
“இப்படியே! இங்கயே! நிக்க போறியா?  எனக்கு இதுதான் பாஸ்ட் டைம். உனக்கு எப்படி?”
“நீ எத பத்தி பேசுற?”  கிருஷ்ணாவுக்கு சுத்தமாக புரியவில்லை.
கிருஷ்ணா யசோதாவிடம் பேசியதையும் அருளிடம் பேசியதையும் கோதை எதேச்சையாக கேட்க நேர்ந்திருக்க, அவனை சீண்டவேன்றே தான் இந்த பேச்சை ஆரம்பித்திருந்தாள்.
“ஆமா இந்த அலங்காரம் எல்லாம் எதுக்கு பண்ணி இருக்காங்க? இன்னக்கி நமக்கு முதலிரவு இல்லையா? புடவையையும் நானே! கழட்டட்டுமா? அந்த லைட்ட மட்டும் ஆப் பண்ணிடலாமா?” கிருஷ்ணா அவள் பேச்சில் மலைத்து நிற்பதைக் கண்டுகொள்ளாது “ஆமா உண்மையிலயே! லைட் ஆப் பண்ண பிறகு என்ன பண்ணனும்னு தெரியுமா? இல்ல கைல இருக்குற பால குடிச்சிட்டு தூங்க போறியா?” கிண்டல் குரலில் கேட்க
“உன்னோட இந்த வாய் இருக்கே! முதல்ல இத அடக்கணும் டி..” கடுப்பாகி கத்தினான் கிருஷ்ணா.