அடிவாங்கிய வாசவிற்கு ஒன்றும் புரியவில்லை. என்ன நடக்கிறது.? ஏது நடக்கிறது.? என்று புரிவதற்குள் அனைத்துமே நடந்து முடிந்து கைகளை கொண்டு கண்ணத்தை தாங்கி நின்றாள் நித்ய வாசவி..
“என்ன நினைச்சிட்டு இருக்க நீ..??” என கோபமாக கண்கள் சிவக்க அடித்தவன் கத்த
“….”
“பராக்கு பாத்துட்டே இப்படி முன்னாடி போனின்னா போக வேண்டியது தான் திரும்ப உன்னால வரவே முடியாது. பெரிய பொண்ணு தானே நீ ,கொஞ்சம் கூட சுய புத்தி வேணாமா சொல்லு. இப்படியே கடலுக்குள்ள நடக்க முயற்சி பண்ணின்னா உயிரோடவே திரும்ப முடியாது ” என்று நிதர்சனத்தை கோபமாக அவள் முன் கத்தலானான்.
அவளோ அவன் அடித்ததில் கண்கள் பனிக்க , கண்ணீர் இதோ அதோ என்று வெளி வரும் நொடிக்காக காத்திருந்தது. அதனால் அவனின் முகம் அவளுக்கு சரிவர தெரியவில்லை.
“வாய திறந்து பேசுனா என்ன முத்து குறைஞ்சிடுமா சொல்லு ” என பல்லை கடித்தவாறே கேட்க
கண்கள் சொறிய ,”நீங்க அடிச்சது எனக்கு ரொம்ப வலிக்குது ” என குழந்தைப்போல் பாவமாக அவள் சொல்ல
அவளின் இந்த பதிலில் கோபம் எல்லாம் குன்றி போய்விட , இதழில் வெளிய தெரியாத படி மென்னகை பூத்தது.
இவர்கள் பேசவும் அவர்களை மக்கள் யாவும் சூழ்ந்து கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.
வாசுவியின் தாயும் தந்தையும் மகளை பற்றி பேசியதில் ,மகளை கவனிக்க தவற விட அவளின் நிலை அவர்கள் அறியவில்லை.
இருவரும் பேசிக்கொண்டு இருந்ததில் திடிரென மாதவி ,”ஏங்க வாசு எங்கங்க.?இங்க தான விளையாடிட்டு இருந்தா..??” என அவளை காணாது தவிப்போடு கேட்க
அப்போதே மகளின் எண்ணம் வந்தவராக , சுற்றிலும் பார்வையை பதிக்க மகளை காணாது போக பதறினார் சந்திரசேகர்.
“இரு இரு இங்க தான் இருப்பா நாம தேடுவோம்..” என்று சொல்லி பார்வையை சுழல விட்டவருக்கு அங்கே ஏதோ கூட்டமாக இருப்பது தெரிய அங்கே இருந்து வேடிக்கை ஏதோ பார்ப்பாளோ என்று நினைத்தவாறே மனைவியுடன் அங்கே சென்றார்.
“சாரி மா ..சாரி மா..ஐம் ரியலி சாரி..ஏதோ ஒரு கோபத்துல அடிச்சிட்டேன்..” என அவளை பார்த்து மன்னிப்பு வேண்ட
“இட்ஸ் ஓகே..அன்னைக்கு நீங்க பண்ண ஹெல்ப்க்கு இந்த அடிக்கு மன்னிச்சி விடுறேன்..” என்று கண்களில் நயனங்கள் காட்டி பேசினாள் பாவையவள்.
அவளின் கண்களை பார்த்தவன் ஒரு நொடியேனும் தன்னை அவளிடம் இழந்திருந்தான். அழகாய் நயனகள் புரியும் அவள் விழிகளை பார்க்க பார்க்க மனது ஏனோ பரவசமடைந்தது.
‘இது தவறு ‘ என்று தன்னை தானே கட்டுக்குள் கொண்டு வந்து முடியை சிலுப்பிக் கொண்டவனின் பார்வை அப்போது தான் சுற்றி இருந்தவர்களின் மீது பதிந்தது.
அனைவரின் பார்வையும் இருவரின் மீது இருந்தாலும் ஆண்கள் சிலரின் பார்வை ஏனோ அந்த இளஞ்சிட்டின் மீது ஆர்வமாக பதிவதை கண்டவன் துனுக்குற்று அவளை நோக்க , அவளின் ஆடையில் பாதியிடம் சொர்ப்பமாக நனைந்து உடல் மேனியில் ஒட்டி இருந்து அவளது அங்கங்களை காட்டிக்கொடுக்க பார்த்தவன் வேகமாக அவனின் சட்டையை கழட்டி அவளுக்கு அணிவித்தவன்
அங்கிருந்தவர்களை நோக்கி ,”இங்க என்ன நாங்க ரெண்டு பேரும் லேகியம் விக்கிறதுக்காக கூவிட்டு இருக்கோமா என்ன.?இப்படி எங்களையே பார்த்துவிட்டு இருக்கீங்க ..”என கோபமாக அவளை மறைத்தாற் போல் நின்று அந்த இளைஞன் கோபத்தை கக்க
“இது என்ன டா வம்பா போச்சி.. ” என பலரும் அவர்களை பற்றி கிசு கிசுத்த படி சென்றனர்.