சாரல் மழையே

அத்தியாயம் 1

சென்னை ஓ. எம். ஆர் சாலை, நேரம் நள்ளிரவு இரண்டு மணி. ரேஸ் விட்டது போல இரண்டு கார்கள் சீறிப்பாய்ந்து செல்ல, அந்த இரண்டில் ஒன்றில் இருந்த விஷால் அதிகபடியாகக் குடித்திருந்தபடியால்… சற்றே அவனின் கவனம் சிதற, பாதையின் நடுவே இருந்த டிவைடர்ல் மோத இருந்தவன், கடைசி நொடி சுதாரித்துக் காரை திருப்ப, கட்டுபாட்டை இழந்த கார், தெருவோரம் இருந்த மரத்தில் பெரும் சத்தத்துடன் மோதி நின்றது. 


நவீன வசதிகளும் இருந்தபடியால் கார் மோதியவுடன் தற்காப்புக்காக இருந்த பலூன் விரிந்துகொள்ள, விஷாலுக்கு அடி எதுவும் இல்லை. அவன் தட்டுத்தடுமாறி காரில் இருந்து இறங்க, அவனுடன் இருந்த அவனது பெண் தோழி அனுஷ்காவும் இறங்கினாள். 

சத்தம் கேட்டதும் அலறியடித்து எழுந்த பாதசாரிகள் இவர்களை நெருங்கும் முன், சுதரித்தவர்கள், இன்னொரு காரில் ஏறி, அங்கிருந்து வேகமாகச் சென்று மறைந்தனர். 

காரில் எரிய விஷாலுக்குக் குப்பென்று வியர்த்து இருக்க, சட்டையின் மேல் பெத்தானை கழட்டி விட்டவன், சட்டையைப் பின்னுக்குத் தள்ளி, காரில் இருந்த பீரை எடுத்து திறந்து அப்படியே வாயில் கவிழ்த்தான். 

சில்லென்று இருந்த பியர் தொண்டையில் இருந்து இறங்கி, அடி வாயிறு வரை குளிரை நிரப்ப, சற்று தளர்வாக இருக்கையில் சாய்ந்து கொண்டான். 

“நல்லவேளை டா நாங்க பின்னாடி வந்தோம். இல்லைனா இந்நேரம் எவனாவது செல் போன்ல ரெகார்ட் பண்ணி இருப்பாங்க.” எனக் காரில் உடனிருந்த ஜகன் சொல்ல, 

“நல்லவேளை வண்டியை மரத்து மேல மோதினீங்க, இதே யார் மேலையாவது மோதி இருந்தா, நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு.” என்றான் ஓட்டுனர் இருக்கையில் இருந்த பிரவீன். 

“ஆமாம் டா நினைக்கவே பயமாத்தான் இருக்கு.”
ஜெகனும் ப்ரவீனுமே பேசிக் கொண்டு வர, விஷால் அமைதியாக இருக்க, 

“என்ன டா பயந்துட்டியா? உங்க அப்பா கார் டேமேஜ் ஆனதுக்குக் கோபிப்பாரா அதை நினைச்சு பயப்படுறியா?” என மற்றொரு நண்பன் பிரஜின் கேட்க, 

“பயமா எனக்கா? நான் ஆளு மேல மோதியிருந்தா கூடப் பயப்பட மாட்டேன். வீட்ல தூங்காம ரோட்ல தூங்கினா அதுக்கு நானா பொறுப்பு…. இட்ஸ் ஜஸ்ட் அன் ஆக்சிடென்ட்.” 

“அப்ப ஏன் ஒரு மாதிரி இருக்க கார் டேமேஜ் ஆனதுக்கா?” 

“அதுக்கு எங்க அப்பா கவலைப்படுவார்? என்னோட கவலை அது இல்லை. எங்க வீட்ல ஒரு நல்லவன் வல்லவன் இருக்கானே, அவனை நினைச்சு தான். ஓவரா அட்வைஸ் பண்ணியே கொல்வான்.” 

ஜகன், “யாரு உன் தர்மா அண்ணனா?” 

“அவரு தான் வேற யாரு?” 

பிரஜின், “அவர் ஒன்னும் உன் சொந்த அண்ணன் இல்லையே பிறகு அவர் என்ன சொன்னா என்ன?” 

“நான் அவரைக் கண்டுக்காம விட்டாலும், அவர் என்னை விட மாட்டாரே… இழுத்து வச்சு பேசும் போது என்ன பண்றது?” 

ஜகன், “உன் அப்பா ஒன்னும் சொல்ல மாட்டாரா?” 

“பிஸ்னஸ் எல்லாம் ஒண்ணாதானே இருக்கு. அதனால ஒன்னும் சொல்ல மாட்டார். அதுவும் அவருக்கு எங்க டா நேரம் இருக்கு. கம்பெனியில இருந்து வந்தா தண்ணி அடிக்க உட்கார்ந்துடுவார். என் அம்மாதான் எனக்குச் சப்போர்ட் பண்ணுவாங்க.” 

“இன்னும் எத்தனை நாள் டா அவருக்குப் பயப்படப் போற?” 

“பயம் எல்லாம் இல்லை. இந்தத் தடவை எதாவது மூக்கை நுழைகட்டும் பிறகு இருக்கு அவருக்கு.” விஷாலின் மனதிற்குள் இருந்த வன்மம் அவன் வார்த்தையில் மட்டும் அல்ல… அவன் முகத்திலும் வெளிப்பட… அந்த நேரம் அவனைப் பார்க்க படு பயங்கரமாக இருந்தது.

எல்லாம் பத்து நிமிடங்கள் தான். பிறகு சாதாரணமாக நண்பர்களுடன் ஜோக் அடித்துக் கொண்டு வந்தான். இப்போது அவன் முகம் வசீகரமாக இருந்தது. 


விஷால் ஆறடிக்கும் மேல் உயரமும் நல்ல நிறமும் வித்தியாசமான சிகை அலங்காரத்தில் மாடல் போல இருந்தான். 

பொறியியல் படிப்பு முடித்து மூன்று வருடங்கள் ஆகிறது. வெளியே வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர்களின் சொந்த தொழில்களே இருக்கிறது. நினைத்த நேரம் கம்பெனிக்கு செல்வான். மற்ற நேரம் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றிக் கொண்டிருந்தான். 

சென்னையின் புறநகர் பகுதியில் பெரிய சுற்று சுவர் கொண்ட வீட்டின் இரும்பு கதவிற்குப் பின்னால், ஒரே மாதிரியான மூன்று வீடுகள் வரிசையாக இருக்க, கடைசி வீட்டில் மட்டும் அந்த அதிகாலையிலும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. 

தனது அறையில் இருந்து வந்த நாயகி, “என்ன காலையிலேயே அம்மாவும் பொண்ணும் இங்க என்ன பண்றீங்க?” எனக் கேட்க, 

“இன்னைக்குத் தான் தர்மா ஊர்ல இருந்து வர்றான். அதுதான் அம்மாவும் பொண்ணும் இருப்புக் கொள்ளாம காலையிலேயே எழுந்து கீழே வந்துட்டாங்க.” எனக் கண்களில் கேலியைத் தேக்கி ஜமுனா மருமகள் கீர்த்தியைப் பார்க்க, 

“இவதான் அவங்க அப்பா வர்றாருன்னு விடியக்காலையே எழுந்து உட்கார்ந்திட்டா…” என்றாலும், கீர்த்தியின் நாணமே அவளைக் காட்டி கொடுத்தது. பெரிய பெண்மணிகள் இருவரும் அதைப் பார்த்தும் பார்க்காதது போல இருந்தனர். 

தரையில் இருந்த பேப்பரை கர்ம சிரத்தையாக எடுத்து சென்று குப்பைக் கூடையில் போட்டு விட்டு வந்த அபிநயாவை பார்த்த ஜமுனா, “அப்படியே அவங்க அப்பாதான்.” என, 

“தர்மாவோட பெண்ணாச்சே… அவனோட வாரிசு அவனைப் போலத்தானே இருக்கும்.” எனத் தன் கொள்ளுப் பேத்தியை அருகில் அழைத்த நாயகி, அவள் முகம் வழித்து நெட்டிமுறித்தார். 

கோயம்புத்தூர் வரை சென்றிருந்த தர்மா வரும் வழியில் கார் ரிப்பேர் என்பதால்… வர தாமதமாக… அதற்குள் மொத்த வீடும் விழித்திருந்தது. 

ரங்கநாதன் நாயகிக்கு மூன்று மகன்கள் . மூன்று மகன்களும் திருமணம் முடிந்தது முதல் தனிக் குடித்தனம் வைத்து விட்டனர். மூத்தவர் நாராயணன் அவர் மனைவி ஜமுனா அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவள் அருணா இளையவன் தர்மா. இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. 

இரண்டாவது மகன் ரவீந்தர் அவரது மனைவி சுனிதா அவர்களுக்கு இரண்டுமே மகன்கள். மூத்தவன் சூரியா இளையவன் வசீகரன். அதில் சூரியாவுக்கு மட்டும் திருமணமாகிவிட்டது. 

மூன்றாவது மகன் உமாநாத் அவரது மனைவி சுபா. அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் விஷால் இளையவள் ரித்விகா.   

வசதி வாய்ப்பு பெருகப் பெருக இருக்கும் வீட்டையும் அவரவர் விருப்பத்திற்குப் பெரிதாக்கி கொண்டனர். தொழில் மட்டும் இன்னும் பொதுத் தான். 

மூத்தவர் நாராயணன் திடீர் மாரடைப்பில் சில வருடங்கள் முன்பு காலமாகி விட, மகனின் இறப்பை தாங்க இயலாது ரங்கநாதன் உடல்நலக் குறைவால் படுக்கையில் விழ… தர்மா வீட்டில் மட்டும் அல்ல தொழிலும் பொறுபேற்க வேண்டிய நிலை. கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, தொழிலில் இறங்கி விட்டான். 

நாராயணன் அளவிற்கு மற்ற இரு மகன்களும் இல்லை. ரவீந்தர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை மட்டுமே பார்ப்பார். அவர் வேலை முடிந்தால் போதும் என்றிருப்பார். உமாநாத் அவருடைய வேலையையும் தட்டிக் கழிக்கவே பார்ப்பார். குடி பழக்கம் வேறு. 

தந்தையின் இடத்தை நிரப்ப தர்மா ஆரம்பத்தில் மிகவும் சிரமப்பட்டாலும், இப்போது அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்ற நிலையில் இருக்கிறான். இதற்காக அவன் தன் ஆசைகள், கனவுகளை இழந்தான் என்றால் அது மிகை அல்ல…. 

ஒரே மதிலுக்குள் இருந்தாலும், எல்லோரும் பார்த்துக்கொள்வது ஞாயிறு மட்டுமே. மற்ற நாட்களில் அவரவர் வேலையில் பிஸியாக இருப்பார்கள். வீட்டின் பெரியவர்கள் ரங்கநாதன் நாயகி வயதான தம்பதிகள் என்பதால்… அவர்கள் இருக்கும் இல்லத்தில் அவர்களைக் கண்டிப்பாக வாரத்தில் ஒரு நாளாவது வந்து பர்ர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் எல்லோரும் ஒன்று கூடுவார்கள். 

அன்று ஞாயிறு என்பதால் அவரவருக்கு வசதியான நேரத்தில் ஒவ்வொருவராக வந்து சேர…. எப்போதும் தாமதமாக வரும் விஷால் அன்று நேரமே வந்துவிட்டான். 

சூரியாவும் அவனது காதல் மனைவி ஷ்ருதியும் சேர்ந்து வர…
“ஜோடி பூரா ரெண்டும் சேர்ந்து தான் வருவாங்க.” என ரித்விகா கேலி செய்ய…. வசீயும், விஷாலும் அவளோடு சேர்ந்து கொண்டனர். 

வசீ, “ஆமாம் பா வெட்டிங் அந்நிவேர்சரி தான் கேள்வி பட்டிருக்கோம். ஆனா இவங்க மந்திலி அந்நிவேர்சரி கொண்டாடுறாங்கப்பா…”  

“இவங்க ரவுசு தாங்களை.” என விஷால் சலித்துக் கொள்ள, 

“நாங்க கொண்டாடினா உங்களுக்கு என்ன டா? வேணா நீங்களும் கல்யாணம் பண்ணிட்டு கொண்டாடுங்க.” கணவன் சொன்னதற்கு, “ஆமாம் அது தானே… எங்களைப் பார்த்து ஏன் பொறாமைப் படுறீங்க.” என்ற ஷ்ருதி சொன்னதும், சூரியா அவளைத் தோளோடு அனைத்துக்கொள்ள… 

“எப்பன்னு காத்திட்டே இருப்பான் போல…” என வசீ மெல்லமாகச் சொல்ல, விஷால் கேலியாகச் சிரித்தான். 

ஏற்கனவே வெண் பொங்கல் செய்து சுனிதா கொண்டு வைத்திருக்க, அதே போல இட்லி அவித்துச் சுபாவும் கொண்டு வந்திருந்தார். நிறையப் பேர் என்பதால் ஆளுக்கு ஒன்று எனப் பகிர்ந்து கொள்வார்கள். 

வடை சுட்டு எடுத்துக் கொண்டிருந்த கீர்த்தியுடன் ஷ்ருதியும் சேர்ந்து கொண்டாள்.