வெகுநாட்களுக்கு பிறகு அத்தையிடம் நேரிடையாக ஸ்ருதியின் பேச்சு. அங்கே சட்டென ஒரு நிசப்தமான சூழல் உருவாகியது. பதில் எதுவும் வராததால் அவரது முகத்தைப் பார்க்க, அவர் இவளைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தார். கண்களில் மெல்லிய நீர்த்திரை.
அத்தை கலங்கி ஸ்ருதி பார்த்ததே இல்லையல்லவா? மனதுக்குள் என்னவோ பிசைய, “என்னாச்சுத்தை? ரொம்ப வலிக்குதா? டாக்டரை கூப்பிடட்டுமா?”, ஈகோ கோபம் எனும் திரை அகன்று, பழைய மருமகளாய் ஸ்ருதி.
வசந்தி, “என்ன பர்வதம்மா? ஸ்ரீகுட்டி பயந்துக்கும்னு வலிய காமிக்காம விட்டுடீங்களே?, வீக்கம் மட்டும் இல்லீன்னா இவ்ளோ சீக்கிரமா ஆசுபித்திரிக்கு வந்திருப்போமா? இப்படியா இருப்பீங்க?”, நிலைமையை இலகுவாக்க ஏதேதோ பேசி சமாளித்தார்.
பர்வதமும் அதற்க்குள் சுதாரித்திருந்தார். வசந்தம்மாவை பார்த்து “வலி இருக்கு, ஆனா முதல்ல இருந்ததுக்கு இப்ப பரவால்ல. டாக்டர் என்ன சொன்னாங்க?”
“ஒரு சின்ன சர்ஜரி பண்ண சொல்லியிருக்காங்க, நாளைக்கு காலைல செய்ய போறாங்க”
“ஓஹ்”, கொஞ்சம் யோசனையானவர், “எத்தனை நாள் இங்க இருக்கணுமா கேட்டியா?”
“ஒரு வாரம் வரைக்கும் இருக்க வேண்டியிருக்கும்னு தேவகி சொன்னாங்க”
“ஹூம். “, என்று பெருமூச்சு விட்டார். எப்படி இவள் ஒரு ஆளாக தன்னையும், ஸ்ரீகுட்டியையும் சமாளிக்க போகிறாள் என்று கவலை வந்தது. மாதேஷை கூப்பிட சொல்லலாமா? என்று ஒரு கணம் யோசித்து, இப்போதுதான் சரிவர பேசுகிறாள். இரண்டொரு நாள் செல்லட்டும், மெல்ல சொல்லி பார்க்கலாம். இல்லையெனில், இங்கேயே யாராவது ஆள் வைத்து கொள்ளலாம். ஸ்ருதிக்கு அலைச்சல் மிச்சமாகும் என்று நினைத்தார்.
“கண்டிப்பா ஆபரேஷன் பண்ணனுமா?”
“ஆமாத்த, தொடை எலும்பு க்ராக் ஆயிருக்கு, ஒரு கோடு மாதிரி, எவ்ளோ சீக்கிரமா பன்றோமோ அவ்ளோ சீக்கிரம் நல்லது-ன்னு சொன்னாங்க”
“ஹ்ம்ம்”, நீண்டதொரு பெருமூச்சு வந்தது அவரிடம்.
“ஸ்ஸ். அத்தை நீங்க என்ன சாப்பிடலாம்னு டாக்டர்கிட்ட கேக்க மறந்துட்டேன், இருங்க வர்றேன்”, என்று ஸ்ருதி எழ நினைக்க..,
“இரு இரு, நர்ஸ் கிட்ட கேட்டா சொல்ல போறாங்க, படக் படக் க்குன்னு எந்திரிக்காத”, என்று தலைமாட்டில் இருந்த மணியை அழுத்தினார்.
அவ்வளவுதானே? உறவுகளுக்குள் எத்தனை நாள் கோபதாபங்களை இழுத்துப் பிடிக்க முடியும்? இருவரும் அவரவர் வழக்கமான சுபாவத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.
பர்வதம் இலகு உணவு எடுத்துக் கொள்ளலாம் என்று நர்ஸ் சொல்லவும், “நல்ல வேளை இட்லியும் சாம்பாரும் எடுத்துட்டு வந்திருக்கேன்”, ஸ்ருதி அறிவிப்பு போல தனக்குள் சொல்லி, அத்தைக்கு தேவையானதை தட்டத்தில் போட்டு வைத்தாள். அவர் எழ நினைக்க, நர்ஸ் காலை கொஞ்சம் கூட அசைக்க வேண்டாம் என்று கண்டித்து சொல்ல, வசந்தம்மா பர்வதத்தை கொஞ்சம் சாய்ந்தாற்போல் அமர வைத்து முதுகின் கீழ் தலையணை வைத்தார். பின் அத்தை சாப்பிட ஆரம்பிக்க ஸ்ருதி அவர் அருகிலேயே நின்றவாறே மகளுக்கும் உணவு கொடுத்து முடித்தாள். உள்ளே இருக்கும் குழந்தை எனக்கு என்று கேட்டு அடம் பிடித்து உருண்டது.
சாப்பிட்டு முடித்ததும், ஸ்ருதியின் முகவாட்டத்தை கண்டு, “இங்க கேன்டீன் இருக்கு, போய் சாப்டு வந்திருங்க”, என்றார் அத்தை, இருவரிடமும் பொதுவாக.
நர்ஸ், அவருக்கான மாத்திரைகளை கொண்டு வந்து தர, ஸ்ரீகுட்டியோ அப்போதே உறக்கத்தின் பிடியில் இருந்தாள். அவளை தூக்கி படுக்கையில் படுக்க வைத்து, வசந்தியோடு உணவருந்தி அவருக்கு மீண்டுமொருமுறை நன்றி தெரிவித்து, அவர் வீடு செல்ல அந்த நம்பிக்கையான ஆட்டோ ட்ரைவரை வரவழைத்து, ஸ்ருதி அனுப்பி வைத்தாள்.
பின் கேஷ் கவுண்டர் சென்று டெபிட் கார்டை தேய்த்து தேவகி சொன்ன தொகையை கட்டி, அறைக்கு வரும்போது, பாட்டி, பேத்தி இருவரும் நல்ல தூக்கத்தில் இருந்தனர். கொண்டு வந்த போர்வையை விரித்து, அக்கடா என்று படுத்தாள். படுத்த நொடியில் மிகுதியான அசதியில் உறங்கியும் போனாள்.
அடுத்த இரு நாட்களும் ஸ்ருதிக்கு இறக்கை கட்டி பறந்தது. ஸ்ரீகுட்டியை வசந்தம்மா வீட்டுக்கு கூட்டி சென்றுவிட, அது கொஞ்சம் உதவியாக இருந்தது. டாக்டர் சொன்னதுபோல, ஒரு செவிலியை பிரத்தேயகமாக அத்தைக்காக இருக்குமாறு பார்த்துக்கொண்டாள். பகலில் அவரது பேச்சுத்துணைக்கு வசந்தம்மா வந்து மருத்துவமனையில் இருக்க, ஸ்ருதி வீடு சென்று அவளது வேலைகளை முடித்து வருவாள்.
விஷாலுக்கு விபரம் தெரிய வந்ததும், அறுவை சிகிச்சை ஆன அன்றே நேரே பர்வதத்தை பார்க்க வந்தவன், “ஏன்மா என்கிட்டே ஒரு வார்த்த சொல்லி இருக்கலாமே?”, என்று அங்கலாயித்தான். “நானே சமாளிக்க முடியும்னு தோணுச்சு, அதுவுமில்லாம கீழ் வீட்டு ஆண்ட்டி ரொம்ப உதவியா இருக்காங்க, நீங்களும் புது ஷோ ரூம் போடறீங்கல்ல ? வேலை இருக்குமில்லையா? அதான்”, ஸ்ருதி அவனிடம் பேசி விபரங்கள் கூறினாள்.
பேச்சின் இடையே மாதேஷை கூப்பிடலாமே என்று ஸ்ருதியிடம் ஆலோசனை தெரிவிக்க, ‘பரவால்ல அவனுக்கு எங்க அப்பாவை பாக்கறதுக்கே சரியா இருக்கும், அவன் கிட்ட இத சொல்ல வேணாம், நானே பாத்துப்பேன்’, என்று இவளும் பூடகமாகவே சொல்லி தம்பிக்கு விஷயம் செல்வதை தவிர்த்தாள்.
சிறிது நேரத்தில் மருத்துவமனையில் ஸ்ருதி மற்றும் பர்வதத்திடம் இருந்து விடைபெற்று வெளியேறிய விஷால், அடுத்த பத்தாவது நிமிடத்தில், ஒரு பெரிய கட்டுமான நிறுவனத்தின் வாயிலை அடைத்திருந்தான். உள்ளே, ஸ்ருதியை பார்க்க வந்த அந்த வெள்ளை சட்டைக் காரரும், இன்னொருவரும் நின்று கொண்டிருந்தனர். எதிரே, தேக்கினால் இழைத்த டேபிளின் மறுபக்கம் உட்கார்ந்திருந்தவனிடம் விஷால் பேசினான்.
“இப்போ நீங்க என்ன தான் தலைகீழா நின்னாலும் அவங்க கிட்ட இந்த விஷயமா பேச முடியாது. சமயம் சரியா இல்ல, அதனால, இந்த ப்ராஜெக்ட்டை ஒரு நாலஞ்சு மாசம் ஆறப்போடுங்க. இவங்களயெல்லாம் அனுப்பாதீங்க, சந்தேகப்படுவாங்க. கண்டிப்பா நா முடிச்சு தர்றேன், ஆனா பேசினா மாதிரி மெட்டீரியல் கான்டராக்ட் நம்மளதா இருக்கனும்”
“இப்போ நடக்கற ப்ராஜெக்ட்க்கு நீங்க தான சப்ளை பண்றீங்க?, அடுத்தும் உங்களுக்குத்தான். இந்த நாலஞ்சு மாசதுக்கு ஏதாவது சின்ன ப்ராஜெக்ட் பண்ணிரலாம்”, என்றான் அவன்.
******************
அத்தையை பார்க்க மருத்துவமனையிலேயே தனியாக ஒரு நர்ஸ் வைக்கிறேன் என்று சொன்னதற்கு நா சும்மாதானே இருக்கேன் பாத்துக்க மாட்டேனா? என்று வசந்தம்மா ஒரே சண்டை. தேவையில்லை, நீங்கள் பேச்சுத்துணைக்கு அத்தை உடனிருந்தால் போதும் கூடாது என்று சமாதானம் செய்ய வேண்டியதாயிற்று. நல்லபடியாக ஆபரேஷன் முடிந்து நான்கு நாட்கள் ஆகியிருந்த நிலையில், மருத்துவமனை ஓரளவுக்கு பழகி இருந்தது. அங்கே அத்தைக்கு துணையாய் இருந்த வசந்தம்மாவை ரிலீவ் செய்ய மாலை நேரம் ஸ்ருதி வழக்கம் போல கிளம்பி சென்றாள் .
அங்கே, வசந்தியோ ஸ்ருதிக்கும் சேர்த்து, கேன்டீனில் செய்த சாம்பார் வடை வாங்கி வைத்து இவளுக்காக காத்திருந்தார். மாலை நேரம் இப்படி ஏதேனும் சிறுதீனி வாங்கி சாப்பிடுவார்தான். அத்தை எப்போதும் வெளி உணவு எடுத்துக் கொள்ள மாட்டார். அதேசமயம் மற்றவர் சாப்பிடுவதை தடுக்கவும் மாட்டார். இப்போது கையில் அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகம் வைத்து அமைதியாக படித்துக் கொண்டு இருந்தார்.
இவள் சென்றதும், “சுடச் சுட வடை வாங்கி வச்சிருக்கேன். கேன்டீனகாரரு எங்க ஊர்க்காரரு. என்புள்ள பேரை சொன்ன உடனே, தனியா ஸ்பெஷலா போட்டு குடுத்தாரு. சாம்பாரும் சுண்டி இழுக்குது. சாப்பிட்டு பாரு”, என்றார்.
“இப்போவே எதுக்குமா?”
“அட உனக்கு வேணும்னு வாங்கலம்மா, எனக்கு வடை பிடிக்கும், ஆனா உடம்புக்கு கேக்காது, என்கூட ஒரு ஆள் சாப்பிட்டா நா கம்மியா சாப்பிடுவேன்ல”, வெள்ளந்தியாய் சிரித்து தனது சாம்பார் வடையை கையால் விண்டு சாப்பிட ஆரம்பித்தார். அத்தை இவரது பேச்சில் புன்முறுவல் பூத்தார். ஸ்ருதிக்குமே சிரிப்பு வந்தது.
அவர் ரசித்து ருசித்து சாப்பிட ஆரம்பிக்க, ஸ்ருதியும் சரி சாப்பிடுவோம் என்று பேப்பர் பிளேட்டை தன்னை நோக்கி இழுத்தாள். வசந்தம்மாவின் போன் ஒலிக்க, அவரோ வடையில் பிஸியாகி.. ‘ஸ்பீக்கர்ல போடுமா’, என்றார்.
தொடர்பு ஏற்படுத்ததியதும், மறுமுனை, “என்னாத்தா? வீட்டுக்காரம்மா அத்தையம்மா காலை உடைச்சுடுச்சாமா? ஹ ஹ ஹ”, என்று சிரித்து…, வசந்தம்மா வடையை அவசரமாக விழுங்கி பதில் சொல்லும்முன்,
“நா இத எப்பவோ எதிர்பார்த்தேன் ஹ ஹ ஹ, இப்போதா ஈஸ் சொல்லுச்சு”, யோகி சரத்தின் கணீர்க்குரல் அந்த பத்துக்கு பத்து அறையில் எதிரொலித்தது. புத்தகத்தை திருப்பிய பர்வதத்தின் கை அப்படியே நிற்க, ஸ்ருதியின் முகத்தை அசடு வழிய பார்த்த வசந்தம்மா, எட்டி அலைபேசியை எடுத்து, ஸ்பீக்கரை அமர்த்தி, “ஏப்பு, யாரு எவருன்னு தெரியாம பேசிட்டு இருக்க?”, என்றார். பார்த்துக் கொண்டிருந்த பர்வதம்மா வெகுநாட்களுக்கு பிறகு மனம் விட்டு சிரித்தார். ஸ்ருதிக்கு மட்டும் சுறுசுறுவென மூக்கு விடைத்து, வசந்தம்மா காதில் இருந்த போனையே முறைத்து பார்த்துக் கொண்டு இருந்தாள்.