ஒரு வருடம் கழித்து ராம்குமாரும் வஞ்சுவும் அதே பப்பில் அதே மேஜையில் ஒரு சனிக்கிழமை மாலையில் அமர்ந்திருந்தனர்.
இடையே பல முறை இங்கே வந்திருந்தாலும் இந்த முறை தான் இருவரும் தனியாக வந்திருந்தனர்.
ஆதியும் ரபீக்கும் மணிமேகலையும் புதிதாக வந்திருந்த சினிமாவுக்கு போயிருக்க சோனலும் ரஞ்சித்தும் சொந்த ஊருக்கு போயிருந்தனர். வந்தனா இன்னொரு தோழியுடன் ஷாப்பிங் போயிருந்தாள்.
ராம்குமாருமே அன்று இரவு ரயிலில் சென்னை கிளம்புகிறான். ஒரு வாரம் விடுப்பு.
இரவு பயணம் என்பதால் ராம்குமார் எதிரே ஒரு ஆரஞ்சு ஜூஸ். வஞ்சுவுக்கும் அதே தான்.
தன் எதிரே முகம் மலர அமர்ந்திருந்தவளை ராம்குமார் புன்னகையோடு பார்த்தான்.
வெளிர் மஞ்சள் நிற ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் கருப்பு நிற டிசைனர் ஜீன்ஸ், கழுத்தில் ப்ளேக் மெட்டல் லாங் செயின், கையில் அதே மஞ்சள் நிற நெயில் பாலிஷ். நெற்றியில் கடுகளவு கருப்பு பொட்டு,
ஒரு வருஷத்துல சின்ன பக்கெட் செமையா தேறிடுச்சு என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.
அன்று தான் பீர் கொண்டு வந்து உட்கார்ந்ததற்கு ஷாக் ஆனவள் இன்று ஆவாளா என்று நினைத்துப் பார்த்தான்.
இந்த ஒரு வருடத்தில் அவளிடம் தான் எவ்வளவு மாற்றங்கள்?
அவன் கோடிட்டு காட்டியதை கப்பென்று பிடித்துக் கொண்டவள் எல்லா விதங்களிலும் தன்னை மாற்றிக் கொண்டாள்.
தோற்றத்தில், பேச்சில், பழகும் விதத்தில் என எல்லாம் தான். இந்த வருட அப்ரைசலில் அவள் பெயர் வந்திருப்பது பற்றியும் அவனுக்கு தகவல் வந்திருந்தது.
முடிந்த வரையில் எல்லோருக்கும் உதவுவது அவன் இயல்பு தான் என்றாலும் அதை பயன்படுத்தி தன்னை வளர்த்துக் கொண்ட அவள் வளர்ச்சி தான் நிறைவாக இருந்தது.
புதிதாக வரும் டீம் லீடர், ஹெச்ஆர் பற்றி அவன் அறிந்ததை சொல்லி எச்சரிப்பதை அப்படியே கேட்டு நடந்து கொள்வாள். ஒரு முறை கூட அவன் முடிவையோ ஆலோசனையையோ ஏன் என்று கூட கேட்டது கிடையாது.
அவன் மேல் அவள் வைத்திருக்கும் அசைக்கக் முடியாத நம்பிக்கையை பார்த்து அவர்கள் நட்புக்கூட்டத்தில் வஞ்சுவிற்கு ஹட்ச் (டாக்) என்று கூட சொல்லி கிண்டல் செய்தனர்.
ஆனால் வஞ்சு எப்போதும் ராம்குமாரின் மேல் வைத்திருந்த நம்பிக்கை என்பதை விட கண்மூடித்தனமான விசுவாசம் மாறவேயில்லை.
சில நாட்கள் வேலையின் காரணமாக பார்க்க முடியாமல் போனால் கூட போன் அடித்து விடுவாள். வாட்சப்பில் மணிக்கொரு மெசேஜ் பறக்கும்.
அவள் என்ன சாப்பிட்டாள் என்பதில் ஆரம்பித்து யார் யார் என்ன சொன்னார்கள் என்பது வரை எல்லாம் சொல்லி விடுவாள். அவனிடம் பெரிதாக பதில் எல்லாம் எதிர்பார்ப்பதில்லை. சொன்னாலே போதும் அவளுக்கு.
லாவண்யாவைக் கூட அவனுக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தாள். ஆன்லைனில் தான்.
பொதுவாக கார்பரேட்டில் ஒருவருக்கொருவர் போட்டியாளர் தான். அதனால் அடுத்தவர் காலை வாருவதில் தான் எல்லோரும் கவனமாக இருப்பர்.
இனிக்க இனிக்க பேசினாலும் ஒன்றாக சுற்றினாலும் உள்ளுக்குள் இருக்கும் இந்த போட்டியும் பொறாமையும் போகாது.
ஆனால் அதையும் தாண்டி இந்த சில மாதங்களில் அவர்களின் நட்பு வட்டம் இறுகி இருந்தது.
சோனலுக்கு பூட் பாய்சன் ஆகி மருத்துவமனையில் இருந்த போது இவர்கள் அனைவரும் தான் மாறி மாறி கூட இருந்து பார்த்துக்கொண்டனர்.
வந்தனாவின் அக்கா கல்யாணத்திற்கு அனைவரும் அவள் ஊருக்கு போய் இழுத்துப் போட்டு வேலை செய்து கல்யாணத்தையும் கொண்டாடி விட்டு வந்தனர்.
நடுவே ஊட்டியில் மூன்று நாட்கள் ட்ரெக்கிங் வேறு போய் வந்தனர்.
இந்த சந்திப்பும் வஞ்சு ராம்குமாரை ஒரு வாரம் பார்க்க முடியாது என்பதால் ஏற்பட்ட சந்திப்பு.
அவள் அப்படி சொல்ல்வில்லை என்றாலும் முக்கியமாக பேச வேண்டும் என்று சொல்லி அவனை வரவழைத்திருந்தாள். அவன் என்ன விஷயம் என்று கேட்டால் ஏதாவது சொல்லிக்கொள்ளலாம் என்று எண்ணம்.
காதல் வந்ததும் கள்ளமும் வந்து விடுகிறதே!
தன் எதிரில் பழைய ப்ளு ஜீன்ஸ் வைட் டீஷர்டில் கூட ஆண்மையின் சின்னமாக தெரிந்த ராம்குமாரை கண்களில் நிரப்பிக்கொண்டு சந்தோஷமாக அமர்ந்திருந்தாள்.
இன்னும் மனதை அவனிடம் திறக்க தைரியம் வரவில்லை. தன் செய்கைகளாலும் முகநூல் பதிவுகளிலும் விதவிதமாக சொல்லிக்கொண்டு தான் இருக்கிறாள்.
ஆனால் ராம்குமார் அதை புரிந்து கொண்டானா என்பது தான் தெரியவில்லை. பெண் மனம் மட்டுமல்ல ஆணின் மனமும் புரியாத புதிர் தான்.
ராம்குமார் அவளிடம் காட்டும் அக்கறையை எப்படி எடுத்துக்கொள்வது என்று புரியாமல் அந்த பெண் மனம் தவித்தது.
மற்றவர்களை விட அவளிடம் அதிக அக்கறை காட்டுகிறான் தான். ஆனால் அது அவள் மேல் அனுதாபத்தாலா அல்லது ஜூனியர் என்ற கரிசனையா இல்லை அவளைப் போல அவன் மனதிலும் அவள் மேல் ஈடுபாடு உண்டா என்று புரிந்து கொள்ள முடியவில்லை.
அன்று பீரோடு அவள் எதிரே வந்து அமர்ந்த போது வஞ்சு உண்மையில் அதிர்ந்து தான் போனாள். என்ன அவள் குரு கூட ஒரு குடிகாரனா? என்று திகைத்துப் போனாள்.
என்ன முயன்றும் அவளால் முகத்தில் இருந்து அதை மறைக்க முடியவில்லை. அல்லது அவள் அதிருப்தியை மறைக்க விரும்பவில்லை என்றும் சொல்லலாம்.
ராம்குமார் ஆனால் கூலாக தான் இருந்தான்.
“ஹொவ் வாஸ் த டான்ஸ்? என்ஜாய்ட் இட்?”
மனம் சுணங்கிப் போனாலும் அவன் கேள்வியை தவிர்க்க முடியாமல் பதில் சொன்னாள்.
“ம்…ரொம்ப நல்லா இருந்துச்சு…”
உண்மையாகவே தன் தயக்கங்களை உதறியதும் டான்ஸ் எப்போதும் போல அவளுக்கு ஒரு நல்ல உணர்வைத் தந்தது.
அவள் பள்ளி கல்லூரி மேடைகளில் ஆடியது உண்டு தான். இப்போதும் தங்கள் வீட்டில் தோழிகளோடு ஆடுவாள். அதனால் இங்கே ஆடுவது புதிதில்லை.
அதுவும் யாரும் அவளை கவனிக்கவில்லை என்பதே அவள் கூச்சத்தை போக்க நன்றாகவே என்ஜாய் செய்தாள்.
அதுவே மன அழுத்தம் குறைந்தது போல இருக்க சந்தோஷமாக அதை ராம்குமாரிடம் சொல்ல வந்தவளுக்கு தான் அவன் அதிர்ச்சியை கொடுத்தான்.
அவன் எதிரே இருந்த க்ளாஸ் மேலேயே அவள் பார்வை இருக்க ராம்குமார் அதை கவனித்தான். அடுத்த பாடத்திற்கான நேரம் இது.
“இது சோஷியல் டிரிங்கிங்….இங்க எல்லோரும் குடிகாரங்க இல்லைன்னாலும் பலருக்கும் இந்த பழக்கம் உண்டு. எனக்கும்…” என்று எதிரில் இருந்த கிளாஸை காட்டினான்.
ஒரு சில சமயங்களில் ஓவர் ஸ்ட்ரெஸ் ஆகும் போது இது உதவியா இருக்கும். பெண்கள் யார் கிட்டயாவது சொல்லி அழுவாங்க. பசங்களால அது முடியாது.
புண்பட்ட மனசை பீர் போட்டு ஆத்துவாங்க. சில பெண்கள் கூட தான் வைன் அடிப்பாங்க..பீர் அடிச்சா தொப்பை விழும் இல்ல….”
ராம்குமார் இப்போது க்ளாஸ் எடுத்து உதட்டில் வைத்தவன் ஒரு சிப் குடித்தான். வஞ்சுவின் பார்வை அசையாமல் அவன் உதட்டின் மேலேயே இருந்தது.
அதை கவனியாதவன் போல
“சில சமயம் இந்த பீர் வேற வகையில் கூட உதவும். எந்த ஹெச்ஆர் டீம் லீடரையாவது கழுவி ஊத்தணும்னா தண்ணியப் போட்டு மனசுல இருக்கறத எல்லாம் பேசி ஆத்திரத்தை தீத்துக்கலாம். மறுநாள் தண்ணிய போட்டு பேசிட்டேன் என்று சொல்லி சமாளிச்சிக்கலாம்.
அந்த காலத்துல டச்சு வீரர்களை எதிர்த்து சண்டை போட பயந்து பிரிட்டிஷ் வீரர்கள் தண்ணிய போட்டு தைரியத்தை வர வழைச்சுக்கிட்டு போருக்கு போவாங்களாம். இதை டச் கரேஜ் (Dutch courage) என்று சொல்வாங்க.
நீ கூட அடுத்த பார்ட்டில ஒரு பீர் அடிச்சிட்டு ரவிய என்னவெல்லாம் நாக்கை புடுங்கிக்கற மாதிரி கேக்கணும் என்று நினைக்கிறியோ கேட்டுடு. அடுத்த நாள் மப்புல பேசிட்டேன்னு சொல்லி சமாளிக்கலாம்…டச் கரேஜ்! என்ன?”
என்று ஆலோசனை சொல்லி விட்டு ராம்குமார் சிரிக்க வஞ்சுவால் அதை நகைச்சுவை ஆக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
அவள் ஸ்தம்பித்து போய் இருப்பதை பார்த்தவன் “நீ இப்ப வேண்டாம் என்று சொன்னாலும் உனக்கும் இதைப் போடணும் என்று தோணும் நாள் வரலாம்….” என்று சொல்லி இருந்தான்.
வஞ்சுவால் அவனின் இந்த யோசனையை மட்டும் ஏற்க முடியவில்லை என்றாலும் பார்ட்டியில் மற்றவர்கள் குடிப்பதை ஜீரணிக்க பழகிக் கொண்டாள்.
இப்போதும் சுற்றி பல மேசைகளில் தண்ணீர் ஆறாக ஓட எந்த உறுத்தலும் இல்லாமல் போனது.
“என்ன வந்ததுல இருந்து அமைதியாவே இருக்கே வஞ்சு? என்ன யோசனை?”
அவள் யோசனையை ராம்குமார் கலைத்தான்.
“எதோ பேசணும்னு சொன்னே? இன்னும் வாயே திறக்கல? ஏதாவது புது பிரச்சனையா? யாரும் எதுவும் சொன்னாங்களா?”
வஞ்சுவால் உடனடியாக ஏதும் காரணம் யோசிக்க முடியாமல் போக பேச்சை அவன் பக்கம் திருப்பினாள்.
வஞ்சு இன்னும் அவள் பிரச்னையை சொல்லத் தயாராகவில்லை என்று புரிந்து கொண்ட ராம்குமார் மெதுவாக அவளே சொல்லட்டும் என்று அவள் போக்கிற்கே போனான்.
“ம்ம்… அதெல்லாம் இல்லை. அம்மா ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்காங்க. உங்க அக்காவுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. உனக்கும் அடுத்து பண்ணிட வேண்டியது தான்…சொல்லிட்டே இருந்தவங்க இப்ப ஒரு பொண்ணும் பார்த்து இருக்காங்களாம்.
அவங்க சொன்னா கேக்க மாட்டேன் என்று இப்ப அப்பாவை விட்டு கூப்பிட வெச்சிருக்காங்க…அப்பா கிட்ட ஒண்ணும் பேச முடியாது. அதான் கிளம்பிட்டே இருக்கேன்.”
ராம்குமார் அமைதியாக சொல்ல அதைக்கேட்ட வஞ்சுவுக்கு தான் அமைதி பறிபோனது.
இவ்வளவு சீக்கிரம் ராம்குமார் கல்யாணம் செய்வான் என்று அவள் நினைக்கவில்லை.
அவளிடம் இருந்த பிடிவாதத்தை பார்த்தவன் என்ன அப்படிப்பட்ட பிரச்சனை என்று முடிச்சிட்ட புருவங்களோடு வைன் ஆர்டர் செய்தான்.
வந்த ஒயினை வஞ்சு பழக்கமாக அருந்துபவள் போல் அருந்த ராம்குமார் முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது.
அவளையே பார்க்க வஞ்சுவோ தைரியம் வருவதற்காக காத்திருந்தாள். ஆனால் துணிவு தான் வரவில்லை.
“இன்னொரு க்ளாஸ் சொல்லுங்க குரு…!”
ராம்குமார் இப்போது அவள் சொன்னதை கேட்கவில்லை. முதல் முறையாக குடிககும் போது இவ்வளவு தீவிரம் ஏன் என்று புரியாமல் “எதுவா இருந்தாலும் சொல்லு வஞ்சு! பாத்துக்கலாம்….!” என்று மறுபடி சொன்னான்.
“சொல்றேன் குரு! இப்ப இன்னொரு க்ளாஸ் ஒயின் சொல்லுங்க!”
அவள் முகத்தில் இருந்த பிடிவாதத்தை பார்த்து ஒரு பெருமூச்சுடன் ராம்குமார் மறுபடி சொல்ல ஒயின் வந்தது.
வஞ்சு அதையும் ஒரு தீவிரத்துடன் அருந்த ராம்குமார் அவளை கவலையாக பார்த்திருந்தான்.
“குரு! இன்னொரு க்ளாஸ்!”
குடித்து முடித்து வஞ்சு மறுபடி சொல்ல ராம்குமார் “வஞ்சு!…நோ! கிளம்பு போகலாம்!” அதட்ட வஞ்சு அசையவில்லை.
“இன்னொரு க்ளாஸ் வேணும் குரு!”
“வஞ்சு! முதல் தடவை குடிக்கிற! இதுவே அதிகம்! வா! போலாம்! எதுவா இருந்தாலும் நான் பாத்துக்கறேன்…எழுந்துரு!”
ராம்குமார் அவள் கையைப்பிடித்து எழுப்ப வஞ்சு அசைய மறுத்தாள்.
“வஞ்சு! அப்படி என்ன தலை போற பிரச்சனை? சொல்லுமா! நான் இருக்கேன் உனக்கு..!”
அதற்கு மேல் பொறுக்க முடியாமல் வஞ்சு வெடித்தாள்.
“எனக்கு நீங்க எப்பவும் வேணும் குரு! இருப்பீங்களா சொல்லுங்க? ஐ லவ் யூ சோ மச்! அது உங்க கிட்ட சொல்ல தான் தைரியம் இல்லாமல் இப்படி டச் கரேஜ் வர வெச்சுக்க ட்ரை பண்றேன்.”