அத்தியாயம் 7 2

பேசியது அத்தையும் மாதேசும் என்பது முதலிலேயே ஸ்ருதிக்கு புரிந்தாலும் பேச்சில் கவனமின்றி அசிரத்தையாக இருந்தவள், டாக்டர் தேவகி என்றதும், முழு கவனம் திரும்பியது. உடனே பேச்சும் முடிந்து போக, யோசிக்க ஆரம்பித்தாள். ஏன் நான் டாக்டரிடம் பேசக்கூடாது? என்ன மாதேஷ் சொல்ல வந்தான்? அத்தை எதை மாற்றி சொன்னார்கள்? என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டு, எதுவாயிருந்தாலும், இது தன் கருவைப் பற்றியது, அது தனக்கு நிச்சயமாக தெரியவேண்டும் என்ற எண்ணம் உறுதியாக வந்தது.

அத்தையிடம் கேட்போமா என்ற எண்ணம்தான் முதலில் எழ, ஆனால், கேட்டால் உண்மை வருமா? அல்லது வேறு ஏதேனும் மழுப்பல்கள் வருமா? அவர் உண்மையே சொன்னாலும், தனக்கு இது நிஜமா என்ற சந்தேகம் போகுமா?, இதற்கு ஒரே வழி, டாக்டரிடம் பேசுவதுதான் என்று முடிவெடுத்தாள் ஸ்ருதி. ராகவ் இறந்ததையே தாங்கியாயிற்று, இன்னும் என்ன புதிதாக வந்தது இவர்கள் என்னிடம் மறைக்கும் அளவுக்கு?

ஸ்ருதி பால்கனியில் இருட்டில் நின்றிருந்ததால், அத்தைக்கும் மாதேஷுக்கும் இவளிருப்பது தெரியவில்லை. தவிரவும் ஸ்ருதி பால்கனிக்கு செல்லும் கதவிலிருந்து தள்ளி சுவரை ஒட்டி நின்றதால் அறையில் இருந்து பார்த்தாலும் தெரியாது.

அறையில் அரவம் இல்லாதிருக்க, மெல்ல வெளியே வந்து பார்த்தாள். மாலை நேரத்தில்  சிவபுராணம் படிப்பது அத்தையின் வழமையாதலால், அவர் பூஜை அறையில் இருந்தார் (அகர்பத்தி மணக்க). அவர் துதி பாடல்கள் முடிக்க ஒரு மணி நேரமாவது ஆகும், அதற்குள் டாக்டரிடம் சென்று வர முடிவெடுத்து, ஸ்ரீகுட்டியோ தூக்கத்தில் இருந்தாள், எழுந்தாலும் அத்தை இருக்கிறார், என்று நினைத்து, மெல்ல டூ வீலர் சாவியோடு வாசலுக்கு வந்தாள்.

என்ன வரப்போகிறதோ? என்று கொஞ்சம் படபடப்பாக இருந்தது, கூடவே தனியாக சாலையில் இரு சக்கர வாகனத்தில் செல்லப்போவதும் இப்போது சேர்ந்து கொண்டது. நேரே கீழே வந்து தனது வாகனத்தில் தாங்கியை விடுவித்தாள். (சென்ட்ரல் ஸ்டாண்ட்), கடினமாகத்தான் இருந்தது, கேட் திறந்து வண்டியில் அமர்ந்து ஸ்டார்ட் செய்து காம்பவுண்டின் இறக்கத்தில் இறங்கும்போது, திடீரென வாசல் கேட்டின் அருகே சரத். க்க்…க்ரீச், கை அனிச்சையாக பிரேக் பிடிக்க.. அது முன் சக்கரத்திற்கான பிரேக். வண்டி சறுக்கியது.

“ஏ…..ய்..”, நொடியில் சூழலை புரிந்து, ஒரு கையால் வண்டியின் ஹாண்டிலை பிடித்து, மறுகையில் சரியும் ஸ்ருதியையும் பிடித்து வண்டியை நிமிர்த்தினான்.

சற்று தள்ளி நின்றவன், “என்ன வீட்டுக்காரம்மா? கண்ண புடனில வச்சிக்கிட்டு வர்றீங்களா?”, என்று கோபமாய் வினவ,

இவன் முன்பாக வண்டி ஓட்டி சவால் விட நினைத்த ஸ்ருதி யோகியின் இந்த பேச்சில் மனம் குன்றினாள். தன்னால் எதையும் சமாளிக்கவோ, தைரியமாக எதிர்கொள்ளவோ முடியாதென்ற தாழ்வு மனப்பான்மை முதலில் தோன்ற, முன்பே டென்ஷனில் இருந்தவள் முகம் ஜிவுஜிவுவேன சிவந்து கண்களில் நீர் கோர்த்தது.

அதுவுமின்றி யோகிசரத் மட்டும் அவளையும் வண்டியையும் பிடித்திராவிட்டால், கண்டிப்பாக நடு வீதியில் விழுந்திருப்பாள், சும்மா நாளென்றால் பரவாயில்லை, இப்போது வயிற்றில் பிள்ளையோடு விழுந்திருந்தால்..? ஏற்கனவே அதற்கு ஏதோ சரியில்லை என்கிறார்கள்.. என்ற பதட்டமும் சேர்ந்துகொள்ள அந்த அதிர்வு வேறு. விளைவு.. முகம் சிவந்து கண்களில் நீராய் திரண்டு நின்றது ஸ்ருதிக்கு.

எதிர்த்து ஏதேனும் முறைப்பாகப் பேசுவாள் என்று எதிர்பார்த்த யோகி பதிலேதும் வராமல் கண்ணில் நீர் திரள நின்ற ஸ்ருதியைப் பார்த்ததும் ‘அடடா இந்தம்மாவ பயமுறுத்திட்டோனோ? கொஞ்சம் நிதானமாக பேசி இருக்கலாமோ?’ என்று நினைத்தான். “அய்ய, இதுக்கெதுக்குங்க கண்ல தண்ணீ வைக்கறீங்க?”

இந்த கேள்வியில் இடவலமாய் தலையசைத்து இல்லை என்று சொல்லி, வெளியே புறப்படுவதற்காக வாகனத்தை மீன்றும் உயிர்ப்பித்தாள். ஸ்ருதியின் முக பாவம் சரத்திற்கு ஏதோ செய்ய, அவள் சரியில்லை என்பது தெரிந்தது. “அவசரமா போனுங்களா?”

ஆமென தலையசைத்தாள்.

“அப்ப, உபர் புக் பண்ணி தர்றேன், வெயிட் பண்ணுங்க”, என்றான் அவன்.

அத்தகு மறுப்புக் கூறுவது போல ஸ்ருதி மீண்டும் வண்டியை கிளப்ப நினைக்க, “அட.. இருங்க உங்க வீட்டுக்கு போயிட்டு சாவி கொண்டுவர்றேன், கார்-ல போலாம்”, என்றான் அதட்டலாக.

ஸ்ருதி, “இல்ல, உடனே இப்பவே போனும், நா நா பாத்துக்கறேன்”, எச்சில் கூட்டி விழுங்கி தனது குரலின் நடுக்கத்தை மறைத்தாள் ஸ்ருதி. உள்ளங்கை முழுதும் வியர்த்திருந்ததில் கை பிடியில் நில்லாமல் வழுக்கியது.

மனசு.. ‘ஐயோ இதை எப்படி ஓட்டிட்டு போவேன்? நடுல எங்கயாவது விழுந்தா..?’ என்று பயமுறுத்தியது.

“வந்து நீங்க தப்பா எடுக்கலைன்னா பின்னால உக்காருங்க, நா ஓட்டறேன். நீங்க வண்டி ஓட்டற நிதானத்துல இல்ல”, என்றான்.

ஸ்ருதிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

பதில் ஏதும் வராதிருக்க, ‘சர்தான் ரோட்ல போறவனோட தலையெழுத்து நல்லாயிருந்தா வீட்டுக்காரம்மாட்டேந்து புழச்சிக்கட்டும்’, எப்போதும் போல இடக்காக யோசித்து, யோகி தனது வீட்டுக்கு செல்ல திரும்பினான்.

அதற்குள்ளாக ஒரு முடிவுக்கு வந்த ஸ்ருதி, மருத்துவமனைக்கு உடனே சென்றேயாக வேண்டுமென்று நினைத்ததால், வண்டியிலிருந்து இறங்கி நகர்ந்து நின்றாள்.

அவள் குறிப்பினை புரிந்தவனுக்கு கொஞ்சம் ஆச்சர்யமாகக்கூட இருந்தது. மேலே எதுவும் பேசாமல் வண்டி எடுக்க, பின்னால் அமர்ந்த ஸ்ருதி பாதை சொல்ல, மருத்துவமனை வந்தது.  வேகமாக இறங்கிய ஸ்ருதி, சரத்தை அம்போவென த்ராட்டில் விட்டு விடுவிடுவென உள்ளே நுழைந்தாள். அங்கிருந்த ரிசப்ஷன் பெண்ணிடம் டாக்டர் தேவகியின் அலைபேசி எண்ணைத் தருமாறு கேட்டாள்.

“நீங்க பேஷண்ட்டா?”

“ஆமா, காலைல வந்திருந்தேன், பேர் ஸ்ருதின்னு பாருங்க”

அப்பெண், திரையில் தேட, ஸ்ருதியின் பெயர் இருக்கவே, மருத்துவரின் அலைபேசி நம்பரை தந்தாள். ஸ்ருதி சுற்றும் முற்றும் பார்த்து சரத்தை தேடி,அவன் இல்லாததால், வெளியே பார்க்கிங் இடத்திற்கு சென்று தேடினாள். அங்கே அவன் ஓரமாக நின்று வாட்ஸாப் பார்த்துக் கொண்டிருக்க, “கொஞ்சம் போன் குடுங்க, ஒரு போன் பண்ணனும்” என ஸ்ருதி கேட்க.. குடுத்தான்.

உடனடியாக தேவகியை தொடர்பு கொண்டு, “டாக்டர், நா ஸ்ருதி…, காலைல அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பாத்தீங்கல்ல?”

“..”

“இப்போ ஒரு சின்ன சந்தேகம், இங்க ஹாஸ்பிடல் வெளியதான் இருக்கேன், நேர்ல பாக்கலாமா?”

“..”

“இதோ உடனே வர்றேன் டாக்டர்”, என்று அழைப்பைத் துண்டித்து, பேசியை சரத்தின் கையில் கொடுத்து “தேங்க்ஸ்” சொல்லிவிட்டு, மீண்டும் மருத்துவமனையின் உள்ளே சென்றாள். இப்போது முன்போலன்றி சரத் அவளை பின் தொடர்ந்தான். ஸ்ருதியின் முகத்தில் இருந்த பதட்டம் அவனை பின்தொடர சொன்னது.

பின்புறம் இருந்த உள்நோயாளிகளை பார்க்கும் கட்டிடத்தில் தேவகி, மாலை நேர ரௌண்ட்ஸ்-ல் இருந்தார். முதல் மாடியில் இருந்த அவரை தேடி கண்டுபிடித்த ஸ்ருதி, அவர் அருகே சென்று “டாக்டர்..”என்று மூச்சு வாங்கினாள்.

“நெக்ஸ்ட் ரூம் காலியாதான் இருக்கு வா பேசலாம்”, என்று சொல்லி அருகிலிருந்த  அறைக்கு ஸ்ருதியை அழைத்துச் சென்றார்.

“உக்காரு”

“இல்ல அதெல்லாம் வேணாம் டாக்டர்”, என்று தனது கைரேகையினைப் பார்வையிட்டவள், “எனக்கு வெளிய அவசர வேலை இருந்ததால இங்கேயிருந்து அப்படியே போயிட்டேன், அதான் பேபி எப்படி இருக்கு-ன்னு உங்ககிட்ட கேட்டு தெரிஞ்சிக்க வந்தேன்”, என்றாள்.

“ஓஹ். பேபி நல்லா ஆரோக்கியமா இருக்கு. ஆனா, நா பர்வதம் கிட்ட சொல்லிட்டேனே ஸ்ருதி, அவங்க கூட மதியம் கால் பண்ணி நாளைக்கு டி அண்ட் சி க்கு வர்றதா சொன்னாங்களே?”, யோசனையோடு தேவகி.

“ஆமா, எங்கிட்ட கூட கேட்டாங்க, நா அப்போ ஓகே சொன்னேன், ஆனா யோசிச்சு பாத்தா, இந்த குழந்தை இருக்கட்டுமே ன்னு தோணுது. சோ..”

“ஓஹ்! ஓகே நோ ப்ராப்ளம்”, பர்வதம் ஸ்ருதி இருவருக்குமிடையே என்னவோ பிரச்சனை எனபதை சடுதியில் யூகித்தார்.

“அப்போ, புதன் கிழமைலேர்ந்து ரொட்டின் செக் அப்க்கு வந்துடு, சரியா?”

“எஸ் டாக்டர்” என்றவள்.. “ஒரு டவுட், நா இப்போ வேலைக்கு போறேன், பரவால்லியா?”

“எல்லா வேலையும் பண்ணலாம் ஸ்ருதி, அதிகமா பாடி ஸ்ட்ரைன் ஆகறா  மாதிரி வேலை பண்ண வேண்டாம், ஜஸ்ட் நார்மலா இரு”

“ஓகே டாக்டர் தேங்க் யூ”

இந்த உரையாடலை அறையின் வாசலில் நின்றுகொண்டிருந்த சரத்தும் கேட்க வேண்டியதாயிற்று. ஸ்ருதி அந்த அறையிலிருந்து வெளியேறும்போது அவள் முகத்தில் அப்படி ஒரு அடக்கப்பட்ட கோபம். அது இவன் மீதல்ல என்பது அவனறிந்ததே.

‘அய்யோ பர்வதம்மா, வீட்டுக்காரம்மா உங்கள கிழிகிழிகிழி.. போங்க’ MV

விடுவிடுவென மருத்துவமனை வாசலுக்கு வந்து நின்ற ஸ்ருதி, சரத் வண்டியை எடுத்து வந்ததும், “நா ஓட்டறேன், நீங்க பின்னால உக்காருங்க ப்ளீஸ்”, என்றாள் தீர்மானமாக.

‘அய்யயோ.. இந்தம்மாட்ட அடிபடாம போறது ரோட்ல போறவன் தலையெழுத்துன்னு நினச்சேன், இப்போ என் தலையெழுத்துதான் சரியில்ல போலயே? அய்யனாரே என்ன காப்பாத்து’, யோகி சரத் அய்யனாருக்கு அவசர விண்ணப்பம் வைத்தான்.

மனசு ‘பதக் பதக் என்று அடித்துக் கொண்டாலும் வாகனத்தின் சாவியை ஸ்ருதியிடம் கொடுத்து, அவள் ஸ்டார்ட் செய்ததும் பின்னால் அமர்ந்தான். ஆனால், அய்யனார் அனுக்ரஹமோ என்னவோ இவன் பயந்தபடி இல்லாமல் வண்டியை மிக நேர்த்தியாகவே ஸ்ருதி ஓட்டினாள். ஓரிரு முறை திருப்பங்களில் இண்டிகேட்டர் போடாமல் விட்டது தவிர எந்த பிழையுமில்லை. யோகிக்கு அப்பாடா என்று  இருந்தது.

வீடு வந்துவிட யோகி முதலில் இருங்கிக்கொள்ள அடுத்து இறங்கியவள் நேர் கொண்ட பார்வையாக சரத்தை பார்த்து, “தேங்க்ஸ்”, என்றாள். சொன்னவள் முகம் மட்டும் உணர்வு துடைத்திருந்தது. அவளை பார்த்த சரத்திற்கு ஒன்று நிச்சயமாய் தெரிந்தது, இனி இந்தப் பெண் எதற்கும் கலங்கமாட்டாள்.

ஆனாலும் அதை உறுதி செய்து கொள்ள, “புதன்கிழமை நா ஊர்ல இருக்க மாட்டேங்க”, என்றான்.

ஒரு நொடி கேள்வியாய் சரத்தை பார்த்து, ‘தேவகி செக் அப் வர சொன்னது புதனன்றல்லவா?’ அதைச் சொல்கிறான் என்பதை புரிந்து, “நா தனியா போயிடுவேன்”, என்றாள் ஸ்ருதி நம்பிக்கையுடன்.