அத்தியாயம் 7 1

ஸ்ருதி மற்றும் அத்தை இருவரும் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்ததை மாதேஷ் கவனித்து காரை வாசல் அருகே நிறுத்தியிருந்தான்.  இருவரும் நேரே காரில் ஏறிக்கொள்ள, ஸ்ருதியின் முகம் பார்த்ததும் அத்தை யூகித்தது சரிதான் என்பதை புரிந்து கொண்டான். மேலே எதுவும் பேசாமல், வீடு செல்ல ஆயத்தமாக, “மாம்ஸ் அம்மாக்கு ஸ்ப்ரிங் பொடோட்டோ?”, என்று ஸ்ரீகுட்டி கேட்டாள். அவள் கையில் இருந்த நீள குச்சியில், பாதி சாப்பிட்ட  ஸ்ப்ரிங் உருளைகிழங்கு இருந்தது.

உடனே ஸ்ருதி, “வேணாம் மாது, பாசுந்தி வாங்கிட்டு வா, நாலு பேருக்கும்”, என்றாள்.

“ஐ! பாஸுந்தி… யம்மி.”, என்ற பற்களைக் காட்டிய ஸ்ரீகுட்டியை ஸ்ருதி பார்க்க..

இனிப்பு வாங்கி வராகி சொல்லும் அக்காவின் எண்ணவோட்டத்தை அறிந்த மாதேஷ், மனதில் சின்ன அதிர்வுடன் பர்வதம் அத்தையைப் பார்த்தான். அவர் கண்களாலேயே தன் நம்பிக்கையின்மையை தெரிவித்தார். நொடியில் சமாளித்து  மாதேஷின் முகம் ஒரு தீர்மானத்திற்கு வர, “கரெக்ட் க்கா, இன்னிக்கு நா சொல்லப்போறதும் இனிப்பான விஷயம்தான்”, என்றுவிட்டு, அருகே இருந்த A2B-க்கு சென்றான்.

அவன் அகன்றதும், திரும்பி அருகே அமர்ந்திருந்த பர்வதத்தைப் பார்த்து, “ஏன்த்த என்கிட்டே முன்னாடியே சொல்லல?”,ஸ்ருதி.

“நேத்துதான் ஒரு சந்தேகம் வந்தது, அதான் தேவகிட்ட உறுதி பண்ணிடலாம்னு இருந்தேன்”

“மாதுவை நீங்கதான் வரச்சொன்னீங்களா? அவனுக்கு தெரியுமா?”

“ம்ம். வரச் சொன்னேன் ஆனா இதான் விஷயம்னு சொல்லல, வீட்டுக்கு வந்ததும் இப்படி இருக்குமான்னு சந்தேகமா இருக்குன்னு சொன்னேன்”

“ஓ!”, என்று யோசித்து, “டாக்டர் இன்னும் ப்ரக்நன்சி சார்ட் போடலியே அத்தை? அதைக் கேக்காம வந்துட்டேனே?  நம்ம ஸ்ரீகுட்டிக்கு அம்பது நாள்லயே அயன் டேப்லெட்டும், வைட்டமின்ஸும் (folic) போலிக்-கும் எடுத்துக்க சொன்னாங்க இல்ல?”, என்று புது வரவிற்காக கவலைப்பட்டவள், “அடடா, ஸ்ரீகுட்டிக்கு தடுப்பூசி போடணுமா ன்னு கேக்க நினச்சேன் அதுவும் மறந்துட்டேன், போயி கேட்டுட்டே வந்துட்டா? “

இந்த கேள்வியில் ஸ்ருதியின் மனநிலை பர்வதத்திற்கு தெளிவாகப் புரிய, இவளிடம் என்ன சொல்லி?… என்று மனம் கனக்க, அவள் முகம் பார்த்து,  “இப்போ போனா, மறுபடியும் டோக்கன் போட சொல்லுவாங்க. நாளைக்கு போன்-ல டாக்டர்கிட்ட பேசிட்டு வருவோம் ஸ்ருதி”.

“ம்ம்”, பர்வதத்தின் குரல் சுரத்தில்லாது இருப்பது போல தெரிய, ஓ ராகவ் நினைவில் இருக்கிறார் என்று அவளாகவே யூகித்து, அமைதியானாள். கடைக்கு சென்ற மாதேஷும் வந்துவிட, ஸ்ரீகுட்டி மொபைலில் மாஜோங் (mahjong)   ஆடுவதில் கவனமானாள். வீடு வரும்வரை பெரியவர்கள் அனைவரும் அவரவர் எண்ணங்களில்.

மெயின் கேட்டில் நுழையும்போது, கார் நிறுத்துமிடத்திற்கு அருகே சரத் அவன் அம்மாவோடு பேசியபடி நின்று கொண்டிருந்தான். முதலில் இறங்கிய ஸ்ரீகுட்டி, சரத்தைக்  கண்டதும் ,அவன் அருகே சென்று, “யோகன்னா இங்க பாருங்க நா மேட்ச் வின் பண்ணிட்டேன்”, என்று கையில் இருந்த அலைபேசி விளையாட்டை காண்பித்தாள்.

“அட ஸ்ரீ குட்டி..!”, என்று வசந்தி ஆச்சர்யப்பட்டு, குட்டியை தன்னோடு அணைத்து நிமிர்ந்து பார்த்தவர், “வெளிய போயிட்டு வர்றீங்களா?”, என்றார் காரில் இருந்து இறங்கிய மூவரிடமும் பொதுவாக.

“ம்ம்”, என்று சொல்லி, “அப்பறம் வர்றேன் வசந்தி, ஸ்ரீகுட்டி வாடா”, பர்வதம்.

அவர்களை கவனியாது சரத் (யோகிசரத்) ஸ்ரீகுட்டி தந்த மொபைல் விளையாட்டை பார்வையிட்டுக் கொண்டிருந்தவன், பர்வதத்தின் குரல் இயல்பாய் இல்லாதிருக்க, நிமிர்ந்து காரின் வந்த மூவரையும் நொடியில் பார்வையால் எடை போட்டான். ஸ்ருதியின் முகம் சற்றே மலர்ச்சியை காண்பிக்க, மாதேஷ் மற்றும் பர்வதத்தின் முகம் இருண்டு கவலை அப்பிக் கிடந்தது.

“நான் அப்பறம் வர்றேன் பாட்டி, ஈஸ் அத்தை கூட செஸ் ஆடப்போறேன்”, ப்ருத்விஸ்ரீ.

“குட்டிம்மா, நீ இன்னும் சாப்பிடல”,ஸ்ருதி.  ஸ்ரீ நேரே சரத்-திடம் சென்றது அவளுக்கு நிரடியது. அது என்னவோ ஸ்ருதிக்கு சரத்தைக் கண்டால் ஒரு பிடித்தமின்மை., தவிர, மாதேஷின் மனைவியைக் கூட ஆன்ட்டி என்று கூப்பிடும் மகள்.. அது யாரோ ஒரு ஈஸ்.. அவளை அத்தை என்றது இன்னும் முரண்டியது. எப்படி இவர்களோடு இத்தனை நெருக்கமானாள்? ஆனால் இதெல்லாம் மனதில் ஓடினாலுமே, ஒரு இனம் புரியா நிம்மதி இழையோடியது, ஸ்ருதிக்கு.

“மா, இப்போதான் ஸ்னாக்ஸ் சாப்பிட்டே, பசிக்கலம்மா”, அங்கிருந்தே பிடிவாதக் குரலில் ஸ்ரீகுட்டி.

மறுப்புக் கூற நினைத் ஸ்ருதியை தடுத்து, “விடுக்கா, அவ கொஞ்ச நேரம் கழிச்சே வரட்டும், நீ வா”, என்றான் மாதேஷ்.

“நீ போ மாது, இதோ வர்றேன்”, என்று தம்பியிடம் சொல்லி, இருபதடி தூரத்தில் நின்ற மகளிடம் செல்ல நடந்தாள் ஸ்ருதி.

அவள் ஸ்ரீகுட்டி அருகே செல்வதற்குள், “அம்மா…”, சரத்தின் வீட்டில் இருந்து பெண்ணின் (ஈஸ்வரி) குரல் வர..,

“தோ வர்றேன் ஈஸு..”, என்று வசந்தி உள்ளே சென்றுகொண்டே, “நீ குட்டிய கூட்டுவா சரத்து, அவளுக்கு பிடிச்ச மைதா முறுக்கு செஞ்சிருக்கேன்”, மகனுக்கு சொல்லிச் சென்றார். இப்போது ஸ்ரீகுட்டி சரத்தின் கைபிடித்து நின்று கொண்டிருந்தாள்.

இந்த பக்கம் மாதேஷ் அத்தையோடு மாடிக்கு சென்றுவிட, ஸ்ருதி மகள் அருகே சென்று,  “கையையாவது துடைச்சிக்கோ ஸ்ரீமா”, என்று கைக்குட்டையை குடுத்தாள்.

கைகுட்டைக்காக கை நீட்டிய குழந்தையை தடுத்து, “நாம கையை கழுவிக்கலாம் சொல்லும்மா”, சம்பந்தமின்றி ஆஜரானான் சரத்.

ஒரு நொடி நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், மகளிடம், “கை பூரா ஸாஸ் ஒட்டியிருக்கு, ட்ரெஸ் கரையாயிடும்டா”, என்றாள்.

ஸ்ருதி எப்படி சரத்திடம் பேசாமல் ஸ்ரீகுட்டியிடம் பேசினாளோ, அதுபோல “செல் ஸ்க்ரீன் மொத்தமும் மசாலாப்பொடியும் சாஸுமா இருக்கு, கண்ல பட்டா கஷ்டம். ஸ்ரீகுட்டி, அந்த பைப்-ல கைய கழுவிட்டு வந்திடு”, என்றான் சரத்.

இதை எப்படி மறுத்துப் பேச?

ஸ்ரீயும் சமத்தாக கையை சுத்தம் செய்ய குழாய் அருகே செல்ல, “ட்ரெஸ்ஸ விட கண்ணு முக்கியமில்லையா வீட்டுக்காரம்மா?”, அவனென்னவோ வீட்டுக்காரம்மா இயல்பாக வருகிறது. ஆனால் அது ஸ்ருதிக்கு இடக்காக தெரிந்தது. “ம்”, என்று ஒப்புக்கு கூறி, கைக்குட்டையை அங்கிருந்த அவனது இரு சக்கர வாகனத்தின் மீது வைத்து, “சீக்கிரமா மேல வந்திடனும் ஸ்ரீ”, என்று கூறி மாடிப் படிகளை நோக்கி நடந்தாள். “ஓகே மாம்”, கீச்சென தொலைவிலிருந்தே பதில் வந்தது.

ஸ்ருதி கீழே இருந்த அந்த நேரத்தில் மாதேஷ், அத்தையிடம், “அக்காட்ட நா பேசறேன் அத்தை, தேவைப்பட்டா நீங்களும் ஒரு வார்த்த சொல்லுங்க”, என்றான். உள்ளம் வேண்டாமென்று கூக்குரலிட்டாலும் ஒப்புதலாக தலையசைத்தார், பர்வதம்.

தன வீட்டுக்கு வந்த ஸ்ருதி ஹாலில் அமர்ந்திருந்த தம்பியிடம், “அரைமணி நேரம் இரு மாது, குக்கர் வச்சிடறேன். பாஸுந்தி எடுத்து டேபிள்ள வை. அத்த, காய் என்ன இருக்கு பாருங்க”, என்றவாறே உள்ளே நுழைந்தாள்.

“அக்கா, லன்ச்-சே வாங்கிட்டு வந்துட்டேன், நீ ஒன்னும் செய்ய வேணாம், அமைதியா கொஞ்ச நேரம் உக்காரு”, தம்பி அக்காவின் பரபரப்பை அமர்த்தினான்.

“ப்ச். ஏன்டா?, அத்தை வெளிச் சாப்பாடு சாப்பிட மாட்டாங்கன்னு தெரியும்தான?”

குழந்தை விஷயம், மறுமணம் குறித்து மாதேஷ் பேசியது, அரைகுறை தூக்கம் என்று ஒரு வித மன அழுத்தத்தில் இருந்த பர்வதம், “இதெல்லாம் இனிமே பழகிக்க வேண்டியதுதான்”, என்று தன்னை மறந்து ஒரு வார்த்தை விட்டுவிட, சட்டென அங்கே ஒரு மௌனம் கவிழ்ந்தது.

“அது நீ வேலைக்கு போற இல்ல, அதான்..”, என்று தன் பேச்சை சமாளித்து,  “நா ஒரு ரசம் வைச்சுக்கறேன் ஸ்ருதி, நீங்க ரெண்டுபேரும் சாப்பிடுங்க”, என்றார்.

“ரசம் தான? நா கரைச்சு வச்சிடறேன், கூடவே அப்பளம் பொரிச்சி துவையல் அரைச்சிடறேன். பத்து நிமிஷத்துல ஆயிடும், எல்லாருமா சாப்பிடலாம்”, ஸ்ருதி  கிச்சன் சென்று, வேகமாக வேலை ஆரம்பித்தாள்.

அவள் சொன்னதுபோல அனைத்தும் தயாராக, அரைமணியில் மூவரும் சாப்பிட்டு முடித்தனர். ஸ்ருதியோ வரப்போகும் குழந்தையின் நினைவிலும் அத்தை மனம் வருந்தி பேசியதையும் முடிச்சுப்போட்டு பார்க்க, மாதேஷ்-ம் அத்தையை நோகடிக்கிறோமோ என்று யோசனையில் இருக்க, பர்வதமோ இத்தனை வயதாகி நித்தமும் சிவபுராணம் சொல்லி என்ன? வார்த்தையை கட்டத் தெரியவில்லையே என்று மறுகினார்.

கையைத் துடைத்தபடி, ஹாலில் வந்து அமர்ந்த ஸ்ருதி, நிலைமையை இயல்பாக்க, “ஆமா, என்ன இனிப்பான விஷயம் மாது? பாசுந்தி வாங்கப்போம் போது சொன்ன? ஏதாவது ப்ரமோஷனா?”, என்று கேட்க..

அக்காவிடம் எங்கே எப்படி ஆரம்பிப்பது என்பது தெரியாமல் திணறிய மாதேஷ், சொல்லக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த நினைத்தான். “அக்கா, ஒரு விஷயம் சொல்லுவேன், நீ கோவப்படாம கேக்கணும்”

அப்படி நான் கோவப்படும்படி என்ன சொல்லப்போகிறான்? புருவம் முடிச்சிட்டு, “ம்ம். என்னன்னு சொல்லு”

“இந்த குழந்தை உனக்கு வேணாங்க்கா”, தயங்கினாலும் தீர்மானமாக சொன்னான்.

கண்கள் தானாய் விரிந்து அவளது அதிர்ச்சியை பேசிக் கொண்டிருந்தவனுக்கு கடத்த, “ஏன்டா?”, வந்தது.

“உஷ்… அக்கா. டென்ஷானாகத..,  பொறுமையா இரு”

தம்பியின் பேச்சில் குழம்பி , “ஏன்?, டாக்டர் பேபிக்கு ஏதாவது பிரச்சனைன்னு சொன்னாங்களா?”, என்று விட்டு சில நொடி யோசித்து,  “இல்லியே, நீ உள்ளேயே வரலையே?”, என்று தம்பியிடம் பேசியவள், அத்தையைப் பார்த்து, “அத்த, உங்ககிட்ட டாக்டர் ஏதாச்சும் சொன்னாங்களா?”, என்று வேகமாக கேட்டு, “ஆனா, ஸ்கேன் பண்ணினவங்க எதுவுமே சொல்லலையே? பேபி ஹார்ட் பீட் அசைவு எல்லாம் நல்லாவே தெரிஞ்சதே?”, “என்ன பிரச்சனைத்த?”

“அது வந்துக்கா, எங்க ஆ…”

சட்டென மாதேஷின் பேச்சில் குறுக்கிட்டு, “ஆமா ஸ்ருதி, பேபி வளர்ச்சி சரியில்லன்னு தேவகி சொன்னாங்க”, என்றார் பர்வதம்.

“அத்த..!”, அதிர்ந்தாள் ஸ்ருதி. மாதேஷுமே இதை எதிர்பார்க்கவில்லை. ஆனால், இப்படியொரு காரணம் சொன்னால், அக்கா சுலபமாக கருக்கலைப்பிற்கு சம்மதித்து விடுவாளே? என்ற எண்ணமும் அவனுக்கு எழாமலில்லை.

“அதான் நாளைக்கு வெறும் வயித்தோட வர சொல்லி இருக்காங்க, போன் பண்ணி வர்றோம்னு உறுதிப்படுத்தணும்”, சிலையாய் நின்ற மருமகளிடம், மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு பேசினார் பர்வதம்.

“நீ உள்ள போயி படுத்துக்கோ ஸ்ருதி”, “மாது தேவகி ஹாஸ்பிடல்க்கு போன் போட்டுக் கொடு”, சூழ்நிலையை தனது கட்டுப்பாட்டில் கொணர்ந்தார் பர்வதம்.

“அத்த…”, என்று அழத் தயாரான ஸ்ருதியை, “ரெண்டு மணி நேரம் முன்னால, உனக்கு இது பத்தி தெரியாதில்ல, இப்போவும் தெரியாதுன்னே நினைச்சுக்கோ, யார்கிட்டயும் எதுவும் சொல்லவேணாம். போ போய் தூங்கு”, என்று விரட்டினார்.

இயந்திரத்தனமாக படுக்கையறை சென்றவளை தடுத்து, பாதி உடைத்த மாத்திரையை கையில் குடுத்து,”அரை மாத்திர, உடம்பு வலி கேக்கும், போட்டுக்கோ”, என்றார்.  மறுபேச்சின்றி அதைக் கையில் வாங்கிய ஸ்ருதி அவரிடமிருந்த தண்ணீரை வாங்கி மாத்திரையை விழுங்கினாள்.

ஸ்ருதியின் எண்ணவோட்டங்கள், ‘இரண்டு மணி நேர மகிழ்ச்சி கூட நமக்கு நிலைக்கவில்லை. கண்ணீர் கூட வரவில்லை, ராகவ், நீங்கதான் திரும்ப வந்துட்டீங்கன்னு கொஞ்சம் சந்தோஷமா இருந்தேன்?, இப்போ அதுவும் இல்லன்னு ஆகப்போகுது..ம்ப்ச்…”, கவலைகள் ஆக்டொபஸாக அவளை சுருட்ட, மாத்திரையின் வீரியத்தில் தன்னையறியாது உறங்கிப்போனாள்.

ஸ்ரீகுட்டி வந்ததோ, சாப்பிட்டு தன் அருகே படுத்ததோ தெரியாது, அப்படி ஒரு உறக்கம். எழுந்த போது, மாத்திரையின் தாக்கமோ என்னவோ தலை சுற்றியது. மணி மாலை ஆறுக்கு மேல் இருக்கும் போல தெரிய, எதிர் அறையின் பால்கனிக்கு சென்று வானம் பார்த்தாள். மஞ்சளையும் இருட்டையும் குழைத்து பூசினாற்போல மேகம் இருந்தது. ராகவ் சென்றபின்னான என் வாழ்வைப்போன்ற இருட்டு. இருந்தும் இல்லாத வெளிச்சம்.

ஸ்ருதி, இலக்கின்றி எங்கோ வெறித்துக் கொண்டிருந்த நேரம், அறையில் தாழ்ந்த குரலில் பேச்சு சப்தம் கேட்டது.

“அத்தை, நாளைக்கு டாக்டர்கிட்ட ஸ்ருதி எதுவும் பேசாம நீங்க பாத்துக்கோங்க”

“ம்ம்”

“காலைல சொன்ன நேரத்துக்கு போனா போதும், அங்க குடுக்கற போர்ம்ஸ்-ல சைன் பண்ண சொல்லிடுங்க. நா கூட இருப்பேன் ஆனாலும் உங்களுக்கும் சொல்லிடறேன்”

“ம்ம்”, என்றவர், “இன்னும் கொஞ்ச நாள் போகட்டும், நீ சொன்ன விஷயத்தை அவ காதில போட்டு வைக்கிறேன்”

“இன்னிக்கே சொல்லிடலாம்னு இருந்தேன்”

“கேக்க மாட்டா, உன்கிட்ட பழி சண்டை போட்டிருப்பா, அதான் இப்படி மாத்தி சொன்னேன்”

“சரித்த, நான் கொஞ்சம் வெளிய போவேண்டியிருக்கு, போயிட்டு வந்திடறேன், ஸ்ருதி தூங்கறா இல்ல?”

“ம்ம் ஸ்ரீகுட்டிய கட்டிட்டு அசந்து படுத்திருக்கா, நல்லா தூங்கட்டும்னுதான் அரை தூக்க மாத்திரை கொடுத்தேன், இல்லன்னா உக்காந்து அழுதிட்டு இருப்பா”

“ம்ம். சரி வர்றேன்”, என்று மாது புறப்படும் சப்தம் ஸ்ருதிக்குக் கேட்டது.