அத்தியாயம் 6
“என்னத்த? என்ன விஷயமா வரச்சொன்னீங்க?”, காலில் இருந்த ஷூ-வை கழட்டியவாறே கேட்டான் மாதேஷ்.
ஹாலில் அமர்ந்திருந்த பர்வதம், ஸ்ருதியும் ஸ்ரீகுட்டியும் உறங்குகிறார்களா என்று அறையை எட்டிப் பார்த்து உறுதி செய்து கொண்டு, மாதேஷிடம், “முதல்ல உள்ள வா, வந்து ட்ரெஸ் மாத்து, நிதானமா பேசலாம்”, என்றார்.
“அக்கா தூங்கிட்டாளா?”
“ம்ம். இப்போதான் ஒரு அரைமணி நேரம் இருக்கும், அதுக்கு முன்ன ஸ்ரீகுட்டியோட விளையாடிட்டு இருந்தா”
“சரித்தை, ப்ரெஷப் ஆயிட்டு வர்றேன்”, எதற்காக இத்தனை பீடிகை என்ற சிந்தனையோடு, இவன் இங்கே வந்தால் எப்போதும் தங்கும் படுக்கையறைக்கு சென்றான். பத்து நிமிடத்த்தில் வெளியே வந்து, நேரே சமையலறை சென்றான். அங்கு பர்வதம் இவனுக்காக டைனிங் டேபிளில் காத்திருந்தார். இவனைப் பார்த்ததும் ஒரு தட்டில் சப்பாத்தியை வைத்தார்.
“சாப்பிடுப்பா”
டேபிளில் அமர்ந்தவன், “சொல்லுங்கத்த”
வெண்டை பொரியலை தட்டில் வைத்து, காய்கறி கூட்டையும் வைத்தார். ” ஸ்ருதியை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போலாம்-னு இருக்கேன்”
தட்டில் இருந்து நிமிர்ந்த மாது, புருவம் சுருக்கி “என்னாச்சு, கொஞ்ச நேரம் முன்ன போதும்போது கூட நல்லாத்தானே இருந்தா?”
அவன் தட்டைப் பார்த்துக் கொண்டிருந்த பர்வதம், நிமிர்ந்து மாதேஷின் முகம் பார்த்து, “அவ முழுகாம இருக்கா-ன்னு நினைக்கறேன் பா”
அதிர்ச்சியை அவன் முகம் ப்ரதிபலிக்க, பிய்த்த சப்பாத்தி விள்ளல் மாதேஷின் கையிலேயே நின்றது. “ஓஹ்…!”
“இப்போவே ரெண்டு மாசத்துக்கு மேல இருக்கும், ஹூம். அவன் போயே அம்பத்தெட்டு நாளாச்சே”, என்றார் அமைதியாக. ராகவ் இறந்தபோது அழுது ஆர்ப்பாட்டம் செய்யாது இறுகி, மகனில்லாத நாட்களை எண்ணிக்கொண்டு, தன் இழப்பை உள்ளுக்குள் வைத்து குமைந்தாலும், மருமகளை அன்றாட நடப்புகளுக்கு இழுத்து வந்தவராயிற்றே? குரல் கூடினால் ஒருவேளை ஸ்ருதி எழுந்துவிடுவாளோ என்று இப்போதும் அமைதியாகத்தான் பேசினார்.
“ம்ம்..”, மாதேஷால் சாப்பிட முடியவில்லை. மனதுக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள்.
“அதான் நாளைக்கு செக்-அப் போயிட்டு வந்திடலாம்னு நினச்சேன், நீ கூட இருந்தா நல்லாயிருக்கும்னு தோணுச்சு”
“அக்காக்கு இன்னும் தெரிலையா?”
“ம்ம். தெரியலன்னு தான் தோணுது, இல்லன்னா சொல்லியிருப்பாளே?, அவளுக்கு தைராய்ட் பிரச்சனைன்னால மாசாமாசம் ஒதுங்க மாட்டா, கூடவே இப்போ ரகு போனது, வேலைக்கு போறதுன்னு இருக்கால்ல? தெரில போல”
மாதேஷ், “அத்தை எனக்கு என்ன சொல்றதுன்னே தெரில”, விரலால் தட்டை அளைந்தான். மனம் மிகவும் குழம்பியது. அக்காவைப் பற்றி இவன் எண்ணங்கள் வேறு.
“…”, பர்வதம் இலக்கில்லா பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்.
சிறிது நேரம் மௌனத்தில் கழிந்தது.
ஒரு தீர்மானத்திற்கு வந்த மாது, “அத்தை நா ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டிங்களே?”
“சொல்லுப்பா”
“வந்து… இந்த குழந்தை வேணாமே…”
கண்களில் அதிர்வோடு, “மாது ..!”
“இல்லத்தை, யோசிச்சு பாருங்க, இருந்திருந்து ஸ்ருதிக்கு இருபத்தெட்டு இருவத்தோம்போது வயசு இருக்குமா? என்னைவிட ஒன்னரை வருஷம் பெரியவ, உங்களுக்கு கஷ்டமாத்தான் இருக்கும் இல்லேங்கல”
“ஆனா, ஸ்ருதியை இப்படியே விட்டுட முடியாது அத்த, விடவும் மாட்டேன்.அஃப் கோர்ஸ் அவ கூட நீங்க இருப்பீங்க, இல்லன்னு சொல்லல, ஆனா இவ லைஃப் இப்படியே முடிஞ்சிடக்கூடாது”, என்று நிறுத்தி.. பர்வதத்தின் முகம் பார்த்து பேசினான். “அத்தை, எங்க ஆபிஸ்-ல ஒரு விடோயர் இருக்கார். குழந்தை கிடையாது. என்ன ஒன்னு அவர் நம்ம கேஸ்ட் இல்ல, அவர்க்கு ….”, என்று முடிக்காமல் நிறுத்தினான்.
பர்வதம் மாதேஷைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் என்ன நினைக்கிறார் என்பது அவனுக்கு புரியவில்லை, “க்கும்”, தொண்டையை செருமி, “அத்தான் போனது எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு, இப்போதான் ஒரு வாரம் முன்னாடி இந்த யோசனை வந்தது. சரி கொஞ்ச நாள் பொறுத்து, சொல்லலாம்னு இருந்தேன்”
“அக்கா கண்டிப்பா ஏத்துக்க மாட்டான்னு தெரியும், ஏதாவது ஏடாகூடமா சொல்லுவா, ஏன்னா அவளுக்கு அத்தானை அவ்ளோ பிடிக்கும், உங்க கிட்ட தான் இந்த விஷயம் பத்தி சொல்லி அவளை எப்படியாவது சம்மதிக்க வைக்கணும்னு நினைச்சேன். அதுக்குள்ள…”
“…”
“அத்தை இந்த கல்யாணத்த பத்தி இப்ப சொல்லணும்னு நினைக்கல, அத்தான் போயி இன்னும் அறுபது நாள் கூட ஆகலை. எனக்கே தெரியுது, இது ரொம்ப சீக்கிரம்தான், ஆனா, நீங்க என் இடத்தில இருந்து பாருங்களேன், ப்ளீஸ்”, என்று அத்தையிடம் மன்றாடினான்.
அவனைப் புரிந்தவராக பர்வதம், “ப்ச். நாம என்ன நினைச்சு என்ன பிரயோஜனம் மாது? போனது வரவா போகுது?, விடு, நீ சொல்ல வர்றது எனக்குப் புரியுது, ஆனா ஸ்ருதி..?”, என்று யோசித்தவர், பெருமூச்சு விட்டு “சரி இப்ப படுப்போம் நாளைக்கு பிரச்சனை நாளைக்கு பாக்கலாம்”
“அத்த… நீங்க என்ன தப்பா….”
“ப்ச். பெத்தவங்க கூட பிறந்தவங்க எப்படி போனா என்னன்னு நினைக்கற காலத்துல உங்கப்பாவையும் பாத்துகிட்டு அக்கா வாழ்க்கையும் சரி பண்ணனும்னு நினைக்கற. இதுல தப்பென்னப்பா?”, என்றார் நிதானமாக.
“அத்தை, உங்களையும் எங்களோட கூட்டிட்டு போயிடுவேன், தனியால்லாம் விட மாட்டேன்”, என்றான் அவசரமாக. அத்தையை அம்போவென விட்டுவிட்டேன் என்று அவர் நினைப்பாரோ என்ற பதற்றத்துடன்.
மெல்ல புன்முறுவல் பூத்தவர், “நீயும் எனக்கு ரகு மாதிரிதான், தட்டை அளைஞ்சிட்டே இருக்க பாரு, முதல்ல சாப்ட்டு முடி”, என்றார்.
மாது விரைவாக இரண்டு சப்பாத்திகளை முடித்ததும், “போ, போய் தூங்கு”, என்று அவனை அனுப்பி வைத்தார்.
மாதேஷை தூங்க அனுப்பியவருக்கு, தூக்கமில்லாது போனது. குழந்தையாய் இருந்தால்.. என்று முன்பு யோசித்தவருக்கு, கரு கலைத்தல், மருமகளுக்கு மறுமணம் என்றெல்லாம் யோசிக்க முடியவில்லை. வெகு நேரம் குழப்பத்துடன் இருந்தவர், மெல்ல சிவ நாமத்தை ஜபித்து அமைதியானார். ஓரளவு மனம் சமநிலைப்பட்டதும், அவரே அவரை தள்ளி நிறுத்தி, ஒரு மாமியாராக இல்லாமல் சக பெண்ணாக, ஒரு மூன்றாம் மனிதனாக ஸ்ருதியை பார்த்தார்.
இப்போது மாதேஷின் முடிவு சரி என்றே தோன்றியது. அவன் சொன்னதுபோல, என்ன வாழ்ந்துவிட்டாள்? ஐந்தாறு வருடங்கள். இவளது மிச்ச வாழ்க்கையை கைம்பெண்ணாக கழிக்க வேண்டியதுதானா? மாதுவுக்கு தெரிந்தவன், நல்லவன்.. திருமணம் செய்ய முன்வந்தால்.. செய்து கொள்ளலாமே? என்று மனம் வாதிட்டாலும், ரகு இடத்தில் மற்றொருவனை வைத்துப் பார்க்க முடியாமல் அன்னையாக தோற்றுத்தான் போனார். கூடவே அந்த சிசு ..? அது என்ன பாவம் செய்தது? அதை அழிக்க..? ம்ஹூம் கடைசியில் பாரத்தை இறைவன் மீது போட்டுவிட்டு கண் அயர்ந்தார், பர்வதம்.
மறுநாள் விடிந்தது. வழக்கம் போல எல்லா வேலைகளும் நடக்க, மாதேஷ் அலுவலக விஷயமாக வந்ததாக ஸ்ருதியிடம் கூறி விட்டு, “அப்டியே அத்தைய ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போலாம், வர்றியா க்கா?”, என்றதும்..
“ம்ம். நானே சொல்லணும்-ன்னு இருந்தேன்டா, நேத்து பூரா தலைவலிக்குதுன்னு சொன்னாங்க”, ஸ்ருதி.
“ஸ்ரீகுட்டிய ரெடி பண்ணுக்கா, கார்ல போலாம், நான் குட்டிமாவை வெளிய வச்சுக்கறேன், நீங்க உள்ள போயி காமிசிட்டு வந்துடுங்க”, என்றான்.
“ம்ம். ஓகே”, என்ற பின், அரை மணியில் அனைவரும் காரில் ஏறி இருந்தனர். பர்வதத்தின் மெடிக்கல் ரிப்போர்ட் அடங்கிய பைல், மற்றும் ஸ்ரீ குட்டியின் தடுப்பூசி அட்டவணை என்று சுருதி அனைத்தையும் கையில் எடுத்துக் கொண்டாள். பதினைந்து நிமிடத்தில் மருத்துவமனை வந்துவிட, “க்கா, நாங்க இங்க இருக்கோம், நீ முதல்ல அத்தையோட போயிட்டு வா”, என்று மாதேஷ் கூறவும், “ஸ்ரீகுட்டியையும் காமிச்சிடலாம் மாது”, என்றதும்.. “நோ.. நா மாமாகூட இருக்கேன், தேகி டாக்டர் ஊசி போடுவாங்க”, என்று மாதுவின் கழுத்தை கட்டிக்கொண்டாள் சின்னவள்.
“முதல்ல நீ போக்கா, வேணும்னா போன் பண்ணு, கூட்டிட்டு வர்றேன்”, என்று ஸ்ருதியை கத்தரித்தான்.
“ப்ச்”, என்று முணுமுணுத்து உள்ளே சென்றாள். மிதமான கூட்டம் இருந்தது. ஆறாவது நபராக டாக்டரை பார்க்க காத்திருந்த நேரத்தில், அத்தை பர்வதத்தைப் பார்த்தாள். அவர் முகம் வியர்த்து டென்ஷனாக இருப்பதை உணர முடிந்தது. அவர் கையை மெதுவாக பிடித்து, “என்னாச்சு அத்த?, ஏன் வேர்க்குது உங்களுக்கு?”, என்று கேட்டாள். அவர் ஸ்ருதியை பார்த்த பார்வையில் கடலளவு வருத்தம் இருந்தது. என்ன என்று ஸ்ருதி யோசிக்கும் முன் ரிசப்ஷனில் இருந்த பெண், ‘நீங்கள் செல்லலாம்’, என்று கூற, அத்தை, “தேவகிம்மா கிட்ட நா பேசறேன், நீ.. நீ அமைதியா இருக்கணும், சரியா?”,என்று அவள் கையை இறுக்கப் பற்றிக் கொண்டார்.
‘இவருக்கு என்னாயிற்று?’, “சரி வாங்க போலாம்”, என்று மருத்துவர் அறைக்கு இருவரும் சென்றனர்.
“அடடே, பர்வதமம்மாவா? வாங்க, சொல்லுங்க எப்படி இருக்கீங்க? என்ன பண்ணுது? சாமான்யமா வர மாட்டீங்களே?”, என்று கேள்வியால் துளைத்தார் தேவகி.
“…”, எதுவும் பேசாமல் நின்றவரை, “அங்க உக்காருங்கத்த”, என்று டாக்டரின் அருகே நோயாளிகள் அமரும் இருக்கையை காட்டினாள் ஸ்ருதி. ஒரு முறை மருமகளை பார்த்து, பின் தேவகியிடம் திரும்பி, “எனக்கொன்னுமில்ல தேவகி, இவளைத்தான் செக் பண்ணனும்”, என்றார்.
புரியாத பார்வையோடு, “அத்தை..”, என்று ஸ்ருதி கேட்க..,
மருத்துவர் இருவரையும் பார்வையிட்டார். அவருக்கு பர்வதத்தை தெரியும் அவர் விளையாட்டாகவோ கோபமாகவோ எதையும் கூற மாட்டார் என்பதால், “சரி நீ வந்து உக்காரு ஸ்ருதி, என்னன்னு பாத்துடலாம்’, என்றார்.
குழப்பத்தோடு அவர் அருகே அமர்ந்து கொண்டாள். சம்பிரதாயமாக ஸ்டெத் வைத்து பரிசோதித்தார், கண்களை பரிசோதித்தார். “கொஞ்சம் அனிமிக்-கா இருக்க ஸ்ருதி, ஸ்ரீகுட்டி ரொம்ப படுத்தறாளா?”, என்க..
“அவ மாசமா இருக்காளா பாருங்க தேவகி”, பட்டென போட்டுடைத்தார், பர்வதம்.
“அத்த..!!!”, என்றாள் அதிர்ந்து.
“ஆமாம்மா, உனக்கு பாக்கத்தான் இங்க வந்தோம்”, என்று மருமகளிடம் சொல்லிவிட்டு, மருத்துவரிடம் திரும்பி,”நீங்க பாருங்க தேவகி”, என்றார் பர்வதம்.
“என்ன ஸ்ருதி, உன் மாமியார் கவனிச்சிட்டாங்க? உனக்கு தெரிலையா?”, சொல்லியபடியே, பஸ்ஸரை அழுத்தினார்.
டாக்டரின் அழைப்பு வந்ததால் ஒரு நர்ஸ் உள்ளே வந்தார், “டாக்டர்?”
“இவங்கள உள்ள கூட்டிட்டு போய் ப்ரக்நன்சி கிட் குடுங்க, ரிசல்ட் வந்ததும் இங்க எடுத்திட்டு வாங்க”, என்று விட்டு, “நீ அவங்க கூட போம்மா”, என்றார்.
ஸ்ருதி சாவி குடுத்தால் இயங்கும் பொம்மை போல, அந்த நர்ஸ் பின் சென்றாள்.
“சொல்லுங்க பர்வதம்மா, ராகவ் கிட்ட சொல்லி நீங்களே வீட்ல டெஸ்ட் பண்ணி பாத்துருக்கலாமே? செக் அப்புக்கு வந்தா போதுமே?”
வறண்ட குரலில், “ராகவ் இப்போ இல்ல தேவகி, அவன் போயி கிட்டத்தட்ட ரெண்டு மாசமாச்சு”, பர்வதம் சொன்னார்.
இதை உள்வாங்க தேவகிக்கு முழுதாய் பத்திருபது வினாடிகள் பிடித்தது. “ஓஹ்!”, என்று சொல்லும்போதே ராகவ் முகம் நினைவுக்கு வந்தது. கூடவே ஸ்ருதியின் இன்றைய நிலையை எண்ணி மனம் பிசைந்தது. ஆனால், எத்தனையோ பார்த்தவராயிற்றே? எப்படி? ஏன்? என்று ராகவ் இறப்பைப் பற்றி தூண்டி துருவாமல், “ஐயம் ஸாரிம்மா”, “தைரியமா இருங்க, நீங்கதான் ஸ்ருதிக்கு ஆறுதலா இருக்கனும்”.
பர்வதம் மெல்ல ஆமோத்திப்பாக தலையசைத்தார். அப்போது நர்ஸோடு ஸ்ருதியும் உள்ளே வந்தனர். ரிப்போர்ட்-ஐ நர்ஸ் கையோடு கொண்டு வந்திருந்தார். பார்த்ததும் “வெல், கங்கிராஜூலேஷன்ஸ் ஸ்ருதி”, என்று ஸ்ருதியைப் பார்த்து இலகுவாக சிரித்து, “பர்வதம்மா, மறுபடியும் பாட்டியாகப் போறீங்க”, என்றார்.
“எத்தனை மாசமாச்சுன்னு..?”, பர்வதம்.
டேபிளில் இருந்த பிரிண்ட் செய்த காகிதத்தை எடுத்து அதில் எதையோ டிக் செய்து, “நர்மதா, இவங்களை ஸ்கேனிங்-க்கு கூட்டிட்டு போங்க”, என்று மீண்டும் இருவரையும் வெளியே அனுப்பினார்.
“டாக்டர், இந்த குழந்தைய இப்போ ..?”
“இப்போ?”
“வந்து.. இந்த குழந்தை வேணுமான்னு?”, தயங்கி தயங்கி பர்வதம் கூறினார்.
டாக்டரின் முகம் ஒரு நொடி கடினமாகி பின் இலகுவானது.”ஸ்கேன் ரிப்போர்ட் வந்ததும் கலைக்க வாய்பிருக்கான்னு சொல்றேன் பர்வதம்மா”, என்றவர் சிறிது இடைவெளி விட்டு, “ஆனா ஏன்னு தெரிஞ்சிக்கலாமா?”
நீண்ட பெருமூச்சு விட்டு, “நாளைப்பின்ன ஸ்ருதிக்கு ஒரு வாழ்க்கை அமைய ரெண்டு பசங்க-ங்கிற விஷயம் தடையா இருந்தா?”, பர்வதம் தேவகியின் முகம் பார்த்து பேசினார். அதிலிருந்த உணர்வற்ற தன்மையிலேயே இவருக்கு இதில் உடன்பாடில்லை ஆனாலும், மருமகளின் வாழ்க்கைக்காக பார்க்கிறார் என்பது மருத்துவர் தேவகிக்கு புரிந்தது.
“இதை ஸ்ருதி ஒத்துக்கணும் இல்ல?”
“ஆமா, இன்னிக்கு பேசனும்…”, பர்வதம் பேசும்போதே ஸ்கேன் திரை உயிர் பெற்றது.
ஸ்கேன் ஸ்க்ரீன் அவரது அருகே இருந்த கணினி திரையில் தெரிய.., [அங்கு ஸ்கேன் செய்வதை தேவகி காண்பதற்காகவும், கருவுற்ற மனைவிகளின் கூட வரும் கணவர்களுக்கு காண்பிப்பதற்காகவும் இந்த வசதி] “ம்ம். சரி பேசிட்டு சொல்லுங்க”, பேச்சு பர்வதத்திடம் இருந்தாலும் கண் திரையில் இருந்தது.
பர்வதம் தேவகியின் எதிரே அமர்ந்திருந்தால், திரை தெரியவில்லை, இவரும் காண்பிக்க முயலவில்லை. ‘ஹ்ம்ம். ஆரோக்யமான குழந்தை, இதன் எதிர்காலம்?’, என்று மனதில் தோன்றியதை மறைத்து, “ரெண்டரை மாசம் இருக்கும், எதுவா இருந்தாலும் சீக்கிரம் முடிவெடுங்க”, என்று சொன்னார், மருத்துவர்.
“ம்ம்”.
சிறிது நேரத்தில் ஸ்ருதி வந்துவிட, “நல்லா சாப்பிடணும் ஸ்ருதி, மாதுளை நிறைய எடுத்துக்கோ, ரொம்ப அனிமிக்-கா தெரியற”, சொல்லும்போது சின்ன கரிசனம் சேர்ந்து வந்தது.
“ம்ம், சரி டாக்டர், வர்றோம்”, என்று விட்டு இருவரும் கிளம்பினர்.வெளியே காருக்கு வரும்வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
ஸ்ருதி ஒருவிதமான கலவையான மகிழ்வும் வருத்தமும் மாறிமாறி தாக்கும் மனநிலையில் இருந்தாள். அவள் மனம் உறுதியாக நினைத்ததுபோல ராகவ் அவளுள்ளே தான் இருந்திருக்கிறான், இன்னொரு உயிராக. ஆனாலும், இது அவனல்லவே? இதைக் கொண்டாட அவனில்லையே? என்று வருத்தம் ஒருபுறம். அவன் இல்லாவிட்டாலும் அவனது பிரதியை விட்டு சென்றிருக்கிறான் என்ற மகிழ்ச்சி ஒரு புறம். இதில் அத்தை ஏன் தன்னிடம் முன்கூட்டியே சொல்லவில்லை என்பதை ஸ்ருதி உணரவில்லை.