ஸ்ருதிபேதம் 5

ஸ்ருதி சரத்தினை முறைக்கும் அதே நேரத்தில், “அட, ஸ்ருதி வந்துட்டியா?”, என்று அத்தையின் குரல் வர, அவரோடு ஸ்ரீ குட்டி  & அந்த சரத்தின் அம்மா இருந்தனர். கீழே அவர்கள் குடியிருக்கும் வீட்டில் இருந்து மூவரும் கார் நிறுத்துமிடத்திற்கு வந்தனர்.

“ஏம்மா இங்கயே நின்னுட்ட?”, ஸ்ருதியின் முகம் சுண்டியிருந்ததை பார்த்த அத்தை, அவராகவே, “கார் ரொம்ப நாளா சும்மா நின்னுட்டு இருந்தா, எதோ பாட்டரி போயிடுச்சின்னா வண்டி கிளம்பாதுன்னு தம்பி சொன்னார், அதான் சரி பண்ணுங்கன்னு சொன்னேன்”

“ம்ம்”, ‘வீட்டுக்கு போனதும் முதல் வேலையா அத்தைட்ட இந்த ‘தம்பி’ கிட்ட அதிகம் வச்சுக்காதீங்கன்னு சொல்லணும்’, மனதில் நினைத்தாள்.

“அம்மா, ஸ்னாக்ஸ் வாங்கிட்டு வந்தீங்களா?”, என்று மகள் பிருத்வி கேட்க..

“ம்ம், வா வீட்டுக்கு போயி சாப்பிடலாம்”, என்று மகளின் கைபிடித்து அவள் வீட்டிற்கு செல்ல நடைபாதையில் நடந்தாள்.

அதற்குள் காரிலிருந்து இறங்கியிருந்த சரத், “இந்தங்கமா கார் சாவி”, என்று அங்கே அவனருகே அம்மாவுடன் நின்றுகொண்டிருந்த பர்வதம் அத்தையிடம் தருவதற்கு வர..

“அட, நாளைக்கு ஈஸ்வரி வர்றா, அவளை கூட்டிட்டு வரணும்னு சொன்னீங்க?”, அத்தை.

இலகுவாக, “இல்ல, நா ஏதாச்சும் வாடகைக்கு பாத்துக்கறேன்மா”, சரத்.

“ஏன்? அரை மணி நேரம் முன்னால நம்ம கார் கொண்டு போறேன்னு சொன்னீங்க?”, புருவ நெரிப்போடு பர்வதம் கேட்க..

“அது.. உங்க வண்டிய எடுக்கறது ஸ்ரீ அம்மாக்கு பிடிக்கல போல..”,

இருவரும் பேசுவது படிகளில் ஏறும் ஸ்ருதிக்கு, (சிறு தொலைவில் இருந்தாலும்) கேட்கத்தான் செய்தது, ஆனாலும் நிற்காமல், தன் நடையைத் தொடர்ந்தாள்.

“ஸ்ருதி ஏதாவது சொன்னாளா?”, என்று சரத்திடம் சற்றே ஆராய்ச்சியாக கேட்ட அத்தை, “எதுவும் அப்டி டக்குன்னு சொல்ல மாட்டாளே?”, என்று தனக்குத்தானே சொல்வது போல பேசினார்.

“சே சே .. அதெல்லாமில்ல, ஆனா கொஞ்சம் கடுகடுன்னு..”, அவனுக்கே குழப்பமாக இருந்தது, வீட்டுகாரம்மா கோபமாக பேசியது போலத்தான் இருந்தது.

“அதுவா? ஆபிஸ்லேர்ந்து இப்பத்தான வர்றா? அதான் அப்படி இருந்திருப்பா, வெளிய போய் வர்றது அவளுக்கு புதுசு அதனால அப்படி இருந்திருப்பா, ஹூம்”, என்று மருமகளை நினைத்து பெருமூச்சோடு சொன்னவர், சரத்தினைப் பார்த்து, “நா ஸ்ருதிட்ட சொல்லிக்கறேன், விடிகாலைல வந்து சாவி வாங்கணும்னா உங்களுக்கும் கஷ்டம்,  எனக்கும் கஷ்டம்”

அவர் ஸ்ருதி பற்றி பேசியதில் கொஞ்சம் தெளிந்தவன், கோபம் போல கண்டனமாய் ஒரு பார்வை பார்த்து, “அட.. ?  எங்கம்மா வயசு இருக்கும் உங்களுக்கு, என்னைப்போய் நீங்க வாங்க ன்னு பேசறீங்க?”, கடின குரல், மிரட்டும் தோற்றம், நறுக் பேச்சு, அதுதான் சரத்.

‘இந்த பையனும் நிறைய தடவ சொல்லிவிட்டான், என்னை நீங்க வாங்கன்னு கூப்பிடாதன்னு, ஆனாலும், அப்படித்தான் வருது’ என்று எண்ணியபடி, மெல்லிய சிரிப்போடு, “சரிப்பா, இனி நீ வா போ ன்னே கூப்பிடறேன். சாவி உன்கிட்டயே இருக்கட்டும்”, என்று அத்தை தன் வீட்டுக்கு செல்ல மாடிப்படி நோக்கிச் சென்றார்.

வீட்டிற்கு சென்றதும் ஸ்ருதி, தனது கைப்பையில் இருந்த சிறுதீனியை எடுத்து ப்ருத்விக்கு கொடுத்துவிட்டு, “கிட்ச்சன்ல இருந்து சின்ன தட்டு எடுத்துக்கோடா, அதுல வச்சு கீழ கொட்டாம சாப்பிடு”, சொல்லிவிட்டு முகம் கழுவ, உடை மாற்ற அவளறைக்குச் சென்றாள்.

சரத்தோடு பேசிவிட்டு மேலே வந்த அத்தை, சின்னவள் “உஷ் உஷ்”, என்று கண்களில் நீர் வர, ஸ்னாக்ஸ் சாப்பிடுவதை பார்த்து, “காரமா இருக்காடா, இரு தண்ணீ எடுத்திட்டு வர்றேன்”, என்று உள்ளே சென்றார்.

அவர் நீர் எடுத்து ஹாலுக்கு வரும்போது ஸ்ருதி, “அத்த, ஏன் அந்தாளையெல்லாம் கார் எடுக்க சொல்றீங்க?” கேட்க..

“ஏன் ஸ்ருதி? என்னாச்சு?”,

சிறு தோள் குலுக்கலுடன், “ம்ப்ச். எனக்கென்னவோ பிடிக்கல”, ப்ரித்விக்கு ஸ்னாக்ஸ் ஒரு வாய் ஊட்டியவாறு, “அப்பறம் நா நாளைலேர்ந்து ஒரு மணி நேரம் டிரைவிங் ஸ்கூல் போலாம்னு இருக்கேன்”, என்றாள்.

“…. ?”, கேள்வியாக பர்வதம் பார்க்க…,

சிறு தயக்கத்தோடு, “ஒரு ஒரு வாரம் போல அங்க ரோட்ல ஓட்ட பழகிட்டா நல்லா இருக்கும்னு தோணுது, அதான்…”

“சரிம்மா, போயிட்டு வா”,

“அப்பறம் அத்த, இங்க பக்கத்துல ஒரு ஓட்டு வீடு இருக்கே, அது யாருது?”

“எது அந்த ஐஞ்சு மனை தள்ளி இருக்கிற வீடா? ஒரு பொண்ணு ரெண்டு பிள்ளைங்களோட இருந்தா, ஆனா இப்போ யாரும் இருக்கிறா மாதிரி தெரிலையே? ஏன் கேக்கற?”

“இல்ல ஒண்ணுமில்ல சும்மாதான் கேட்டேன். ஆட்டோல வரும்போது அந்த வீடு மட்டும் தனியா தெரிஞ்சது, அதான்”

“ஆமா, பழைய கால ஓட்டுவீடு. விக்கணும்னு சும்மா வச்சிருக்காங்களோ என்னவோ?”

ஸ்ருதி, “ம்ம்”, என்றாள் யோசனையாக.

அவளது யோசனையை கலைக்கும் விதமாக, “ம்மா, உன் போன் குடும்மா, கேம் ஆடணும்”, ஸ்ரீகுட்டி.

“ரொம்ப நேரம் போன் பாக்க கூடாது ஸ்ரீகுட்டி,  ஹோம் வொர்க் முடிச்சிட்டியா?”

ஸ்ருதியின் கையில் இருந்து போனை வாங்கிக்கொண்டே, “ம்ம்ம்ம். ம்ம்ம்ம்”, தஞ்சை தலையாட்டி பொம்மைபோல தலையசைத்தாள் மகள்.

அவளது செயலில் ஸ்ருதிக்கு சிரிப்பு எட்டிப்பார்த்தது. பேசியை மகளிடம் குடுத்து, அறைக்கு சென்று ஸ்ரீகுட்டி  நோட்டு புத்தகங்களை சரி பார்த்தாள், எல்லா வீட்டுப் பாடங்களையும் முடித்திருந்தாள். டைரியில் ஏதாவது ஆசிரியரிடமிருந்து குறிப்பு இருக்கிறதா பார்த்தாள். எதுவுமில்லை. அனைத்தையும் அடுக்கி ஸ்ரீயின் பையில் வைத்தாள்.

பின், மறுநாள் பணிக்குச் செல்ல தேவையான உடையை & மகளுக்குத் தேவையான சீருடை, காலுறைகளை பீரோவில் இருந்து வெளியே எடுத்தாள். ஐயன் செய்யும் டேபிளை விரித்து, ஆடைகளை இஸ்திரி செய்து டேபிளில் தயாராக வைத்தாள். மணி எட்டரை ஆகி இருந்தது. இரவு உணவினை முடித்து விடுவோம் என ஹாலுக்கு வர, பர்வதம் கிச்சனில் தோசை ஊற்ற ஆரபித்திருந்தார்.

“நா வருவேனில்லத்த?” சொம்பில் தண்ணீர் எடுத்து டைனிங் டேபிளில் வைத்தாள்.

“கூப்பிட்டிருக்கலாமில்லத்தை?”, இரண்டு தட்டுகளை பரத்தி வைத்தாள்.

“எதோ வேலையா இருந்த, அதான் நானே செய்யலாம்னு வந்தேன், ஸ்ரீகுட்டிக்கு இட்லி சூடா செஞ்சிருக்கேன், இப்போவே சாப்பிட சொல்லு, இன்னும் கொஞ்ச நேரத்துல சாமியாடுவா”

“வரச்சொல்றேன், நம்ம கூடவே உக்காந்து சாப்பிடட்டும்”, “ஸ்ரீம்மா…”

“ம்மா”

“சாப்பிடவா”

“போம்மா, நா கேம் ஆடிட்டு இருக்கேன்”

“ஆடினது போதும், போனை எடுத்து வை ஸ்ரீ, த்ரீ சொல்றதுக்குள்ள வந்தீன்னா அம்மா ஊட்டுவேன், இல்லனா நீயேதான் எடுத்து சாப்பிடணும்”, என்று சொல்லி முடிக்கக்கூட இல்லை. ஸ்ரீ ஸ்ருதியின் அருகே அமர்ந்துவிட்டாள்.

இதைப் பார்த்த பர்வதம் மெல்ல அடுப்பை பார்ப்பதுபோல தலை திருப்பிக் கொண்டார். சிறுவயதில் ராகவ் இப்படித்தான் ஊட்டி விடுகிறேன் என்றால் ஓடி வந்துவிடுவான். மகனின் நினைவை மனதிலேயே நிறுத்தி, நிமிர்ந்து மருமகளை சில நொடிகள் பார்த்தார்.

இந்த கொஞ்ச நாட்களிலேயே நன்றாக இளைத்திருந்தாள், கழுத்தெலும்பு துருத்திக் கொண்டு தெரிந்தது. ஆனால், முகப்பொலிவு அதிகமானதுபோல தோன்றியது. இருவத்தேழு வயது. வாழ்க்கையை நன்கு அனுபவிக்க வேண்டிய பருவத்தில், ராகவ்-க்கு இப்படி அநியாயம் நேர்ந்திருக்க வேண்டாம், என்று தோன்றியது. டேபிளில் உணவுண்ணும் ஸ்ரீகுட்டியையும் ஊட்டி விடும் ஸ்ருதியையும் பார்க்கும்போது, அரைமணி நேரம் சேர்ந்தாற்போல் நிற்க கூட முடியாத தன்னால் இன்னும் எத்தனை நாள் மருமகளுக்கும் பேத்திக்கும் தான் காவலாய் இருக்க முடியும்?  என்று சற்றே ஆயாசமாக இருந்தது.

கண்டதையும் அசைபோட்டபடியே, ஸ்ருதியின் தட்டைப் பார்த்து தோசையை எடுத்தது வைத்தார். ஸ்ரீகுட்டி சாப்பிட்டு முடித்துவிட, வாய் துடைத்துவிடவும் குழந்தை ஹாலுக்கு சென்றாள். மீதமிருந்த இவரும் உணவினை உண்ண ஆரம்பித்தனர்.

ஸ்ருதிக்கோ, அந்த ஓட்டு வீட்டுப் பெண்ணின் அலைபேசி உரையாடல் மனதை உறுத்திக் கொண்டிருந்தது. ராகவ் இறப்பு தற்செயலான ஒன்று என்று அவனது அலுவலகத்தில் வேலை பார்க்கும் சுசீலா சொன்னாலும், மனம் ஒத்துக் கொள்ள முரண்டியது.

மருமகளை பற்றி யோசித்த பர்வதம், அவள் சாப்பிடுவதை அப்போதுதான் கவனித்தார். இவருக்கு சேர்த்து செய்த தோசையும் கிட்டத்தட்ட காலியாகி இருந்தது.

ஸ்ருதிக்கு சிறிய தைராய்ட் பிரச்சனை இருந்ததால், எப்போதுமே அவளது மாதாந்திர சுழற்சி சரி வர இருக்காது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, திடீரென பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை என்று அவஸ்தைப்படுத்தும்.

அத்தை பர்வதம் இப்போது வேறொரு கண்ணோட்டத்தில் எதையோ யோசித்துக் கொண்டே சாப்பிடும் ஸ்ருதியை அளவிட்டார். உடல் மெலிவு கூடவே தோல் மினுமினுப்பு அவரை சற்று குழப்பியது.

வாய்விட்டு கேட்கவும் சங்கடமாக இருந்தது. பிள்ளையோ, இல்லையோ எதுவாக இருந்தாலும், கேட்டால் ஸ்ருதிக்கு ராகவ் நினைவு வருவது நிச்சயம், என்று அமைதி காத்தார்.

இரவு உறங்கும் நேரம் வந்துவிட, மூவரும் படுத்து விட்டனர். பர்வதம் மட்டும் உறங்காமல் விழித்திருந்தார். ஒரு மணி நேரம் சென்றதும் மெல்ல இருவரும் படுத்திருக்கும் கட்டில் அருகே வந்து அமர்ந்து பேத்திக்கு சொடக்கு எடுத்து விட்டார். ஸ்ரீகுட்டி உறங்கியதும் அவர் எப்போதும் செய்வதுதான், என்பதால் ஸ்ருதி அமைதியாய் இருப்பாள். இன்றோ அலுப்பு மிகுதியாக இருக்க, அடித்துப் போட்டாற்போல் தூங்கினாள். ஸ்ரீகுட்டி ஸ்ருதியின் மீது கை போட்டு படுத்திருக்க, கால் விரல்களுக்கு நெட்டி எடுத்து முடித்து மெல்ல கைகளுக்கு வந்தார் பர்வதம்.

அப்படியே மெல்ல ஸ்ருதி அறியாவண்ணம் அவள் நாடி பிடித்துப் பார்த்தார். பர்வதத்தின் மனம் வேகமாக அடித்துக் கொண்டது. ஒருபுறம் மகிழ்வாக இருந்தாலும், இப்போது இந்த நிலையில் இன்னொரு பிள்ளையா? எப்படி சமாளிப்பது?, என்று பயமும் வந்தது. “கடவுளே, இப்போ என்ன பண்ணுவேன்? போக வேண்டிய வயசுல இருக்கிற என்னை விட்டுட்டு, ரகுவைப் போய் ஏன்?”, ஆயிரமாவது முறையாக மனதுள் கடவுளிடம் முறையிட்டார்.

அவள் சாதாரணமாக இருப்பதால், இன்னும் ஸ்ருதி உணரவில்லை என்றே தோன்றியது. ராகவ் போன அதிர்ச்சியில் இருந்தே அவள் இன்னும் மீளவில்லை. அப்படியிருக்க இதை எப்படி யோசித்திருப்பாள்?

பர்வதம் மெல்ல எழுந்து சென்று அவரது கட்டிலில் படுத்தார். எதையும் தெளிவாக நிதானமாக யோசிக்கும் அவருக்கே கண்ணைக் கட்டி விட்டாற்போல் இருந்தது. ஒரு புறம் பெற்ற மகனைப் பறிகொடுத்த ரணம், இன்னொரு பக்கம் வீட்டில் தடாகத் தாமரையாக இருந்த மருமகள் இன்று வெளியே அலைந்து திரிந்து சீப்படுகிறாளே என்ற துயரம், ஸ்ரீகுட்டி போதாதென்று இன்னொரு சிசுவும் தந்தையின்றி வளரப் போகிறதே? என்ற அலைப்புறுதல். தவிர, தனது தள்ளாமை குறித்த பயம் அவரை தூங்கவொணாமல் செய்தது.

மறுநாள் காலை அதன் வழக்கமான தாளகதியில் செல்ல, ஸ்ருதி மட்டும் அத்தையின் முகத்தைப் பார்த்து, “என்னத்த? முகம் வீங்கினாப்புல இருக்கு?”, என்று கேட்டாள்.

“அதுவா, தூக்கம் சரியாயில்லை, தலைவலியும் சேர்ந்து..”

“அமிர்த்தாஞ்சன் தேய்ச்சீங்களா? ரொம்ப வலிக்குதுன்னா சொல்லுங்க டாக்டர்கிட்ட போலாம்”

“அதெல்லாம் நல்லா தூங்கினா சரியாப்போயிடும், நீ கிளம்பு. ஆமா நாளைக்கு சனிக்கிழமை உனக்கு லீவுதான?”

“ஆமாத்த, தலைவலி இன்னிக்கு சரியாகுடா பாருங்க இல்லைன்னா நாளைக்கு ஹாஸ்பிடல் போயிடலாம், பாத்திரம் எல்லாம் ஒழிச்சுப்போட்டுட்டேன். வேலைகாரம்மா வந்தா ரொம்ப பேச்சுக் குடுக்காம படுத்து ரெஸ்ட் எடுங்க. கோவிலுக்குக் கூட முடிஞ்சா போங்க, இல்லன்னா, வீட்ல இருங்க”.

“ம்ம். சரி நா பாத்துக்கறேன்”, ‘நீ ஜாக்கிரதையா போயிட்டு வா’ என்ற வார்த்தையை அப்படியே விழுங்கி, கடவுளிடம் வேண்டுதலாக வைத்தார் பர்வதம்.

மருத்துவரிடம் செல்லும்போது ஸ்ருதியின் தம்பி இங்கிருந்தால் சமாளிக்க முடியும் என அத்தை பர்வதத்திற்கு தோண்றியதால், அவளிடம் எதுவும் கேட்கவில்லை. இவரளவில் ஸ்ருதி கர்ப்பமென்பது உறுதிதான். ஆனாலும்.. டாக்டர் சொல்லட்டுமே, என்று அமைதியானார்.

மாலை ஸ்ருதி அலுவலகத்தில் இருந்து வீட்டின் காம்பௌண்டில் நுழையும்போதே ஒரு வித்தியாசம் தெரிந்தது. உயர்ந்த ஸ்தாயியில் சரத் வீட்டில் இருந்து சளசளவென பேச்சு சப்தம் கேட்டது. கொஞ்சம் அமர்த்தலான குரலில், “யாரோ என்னவோ சொன்னா நீ அதை கேட்டுட்டு பிடிவாதமா இருப்பியா?”, ஒரு பெண் பேசிக்கொண்டிருந்தாள்.

“சொன்னது யாரோவா?”, கடினமான குரலில் சரத்.

“யோகண்ணே, சும்மா சலம்பாத, மாமா உன்னைய இங்க வரவேணாம்னு கூடத்தான் சொன்னாரு, நீ கேட்டியா?”

“ஈஸு, அது வேற இது வேற..”

ப்பா.. இவன் குரல் என்ன சாந்தமாகவே இருக்காதா?  என்று நினைத்தவாறே ஸ்ருதி படிக்கட்டை நோக்கி நடந்தாள். அந்த பெண்ணும் விடுவதாய் இல்லை, “என்ன வேற? எல்லாம் ஒண்ணு….”, அதற்கு மேல் அவளுக்கு கேட்கவில்லை. அந்த ஈஸு வின் குரலும் அதிர்வாகத்தான் வந்தது. ‘நல்ல குடும்பம் வந்து சேர்ந்தது வாடகைக்கு.. ஹ்ம். கீழே இவர்கள் வீட்டின் எதிர் போர்ஷனில்  குடியிருக்கும் குருக்கள் வீட்டில் மனிதர்கள் இருப்பதே தெரியாது, இங்கானால்…? என்று நினைத்தவாறே மேலே சென்றாள்.

“என்ன ஸ்ருதி லேட்டு? டிரைவிங் க்கா போன?”, என்று கேட்டார் பர்வதம்.

“இல்லத்த. என் ப்ரான்ச்சுக்கு சுசீலாக்கா வந்தாங்க. அவங்களோட பேசிட்டு இருந்தேன், அதான் கொஞ்சம் நேரமாயிடுச்சு, ஸ்ரீகுட்டி என்ன பண்றா?”,

“உள்ள ட்ராயிங் புக்-ல கலரடிச்சுட்டு இருக்கா, போ ட்ரெஸ் மாத்திட்டு வா காஃபி போடறேன்”

“ம்ம்”, என்று ஆடை மாற்றிவிட்டு முகம் திருத்த குளியலறை சென்றாள். இடது  கையில் ஆங்காங்கே  கிரீஸ் இருக்க அதை சோப் போட்டு கழுவினாள். சுசீலாவின் இரு சக்கர வண்டியில் பிரேக் பிடிக்கும் ஹாண்டிலில் இருந்த கிரீஸ் ஸ்ருதியின் கையில் ஒட்டி இருந்தது. இன்றைய தாமதத்தின் காரணமும் அதுதான். டூ வீலர் ஓட்டம் பழக, டிரைவிங் வகுப்பு செல்ல வேண்டுமென சொன்னவளை, சுசீலா தடுத்து, நான் மாலை ஒரு மணி நேரம் உன்னோடு வந்து இரு சக்கர வாகனம் ஓட்டிப் பழக்குகிறேன், என்றதனால் ஏற்பட்ட தாமதம் இது.

சொன்னபடி சுசீலா டூ வீலரில் வந்துவிட, இன்றே ஸ்ருதி அவள் அலுவலகத்தின் அருகிலிருக்கும் வளாகத்தில் இரண்டு ரவுண்ட் தனியாக ஓட்டியும் பார்த்து விட்டாள். ஏற்கனவே அடிப்படை தெரியுமென்பதால் இலகுவாக வந்தது.

திங்களன்று சுசீலாவோடு சாலையில் செல்ல முடிவெடுத்திருந்தாள். அவரும் வண்டியின் பின்னால் அமர்ந்து டிரைவிங் நுணுக்கங்களை சொல்லித் தருவதாக கூறியிருந்ததால், சாலையில் பயணிக்க ஸ்ருதி சரி என்றிருந்தாள்.

அந்த சரத் முன்னால், டூ வீலரை ஓட்டி காண்பிக்க வேண்டும் என்ற வெறி ஸ்ருதிக்கு வந்திருந்தது. ‘என் வண்டிய நானே பாத்துப்பேன், நீ மூக்க நுழைக்காத’, என்று அவனிடம் முகத்துக்கு நேரே சொல்லவேண்டும், என்ற நினைவோடு முகம் கழுவி, வெளியே வந்தாள்.

மாமியார் காஃபி தரவும், அவளது மொபைல் அடிக்கவும் சரியாக இருந்தது.  யார் என்று பார்த்தாள், தம்பி மாதேஷ். “சொல்லு மாது”

“அக்கா நைட் வீட்டுக்கு வர்றேன், போன் ம்யூட்-ல போட்டுடாத”, என்றான் மாதேஷ்.

என்ன விஷயமாக வருகிறான் என்று மனதில் ஓடினாலும், “ம்ம். சரி அப்பா எப்படி இருக்கார்?”

“நல்லா இருக்கார், அவருக்கு நைட் அட்டெண்டர் ஒருத்தரை போட்டுருக்கேன், இவளால பசங்களையும் பாத்துகிட்டு அவரையும் பாக்க முடில”

“சரிடா, கொஞ்ச நாள் அப்பாவை இங்க கொண்டு வந்து விடேன் மாதேஷ்”

“ப்ச். எப்டிக்கா? போன தடவ கூட்டிட்டு வந்தபோது, நீ வீட்ல இருந்த. பாத்துக்கிட்ட. இப்போ எப்படி முடியும்? நீயோ ஆபிஸ் போயிடுவ, அப்பறம் அத்த மட்டும்தான் இருப்பாங்க, உனக்கே தெரியும் அவர் கூட யாராவது கண்டிப்பா இருக்கனும்ன்னு. அவர் திடீர்னு கிளம்பி எங்கயாவது போயிட்டா, எல்லாருக்கும் கஷ்டம். இங்கன்னா, கேட்டட் கம்யூனிட்டிங்கிறதால வெளிய செக்யூரிட்டி கிட்ட சொல்லி வச்சிருக்கேன், இங்கதாங்க்கா safe”

“ம்ம். சரிடா ஏர்போர்ட் வந்ததும் கால் பண்ணு, வச்சிடறேன்”

“ஓகே. க்கா”, அழைப்பை துண்டித்தான்.

ஸ்ருதி பர்வதத்தைப் பார்த்து, “அத்த, மாதேஷ் நைட் வர்றானாம்”

“ம்ம், பசங்க நல்லா இருக்காங்களா?”, இயல்பாக கேட்டார்.

“ம்ப்ச். கேக்கலத்தை, வந்துடுவான் வந்ததும் பேசலாம்”,

“அவன் இருக்கும்போதே நாளைக்கு தேவகிக்கிட்ட போயி  என்னோட BP, சுகர் செக் பண்ணிட்டு வந்துடலாமா?”, தேவகி- இவர்கள் எப்போதும் செல்லும் டாக்டர்.

“ஆங். அப்டியே பண்ணிடலாம், நானே அவனை கூப்ட்டு சொல்லணும்னு இருந்தேன்

“சரி அப்போ  அவனுக்கும் சேர்த்து சப்பாத்தி பண்ணிடு, நான் காய் நறுக்கறேன்”.

வேலைகளை முடித்த ஸ்ருதி, மறுநாள் விடுமுறை என்பதால் சாவகாசமாக ஸ்ரீகுட்டியோடு விளையாடினாள். பின் மகள் உறக்கம் வருவதாக கூற, “நீ போய் அவளோட தூங்கு, மாதேஷ் வந்தா கூப்பிடறேன்”, என்றார் பர்வதம்.

கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்தில் மாதேஷ் வந்துவிட, உள்ளே நுழைந்தும் ஸ்ருதி இல்லாததை அறிந்து, “என்ன விஷயம்த்த? திடீர்னு வர சொன்னீங்க?”, கேட்டான்.