எந்தன் காதல் நீதானே
இறுதி அத்தியாயம்
வெண்ணிலா வீட்டிற்குள் வந்தவள், அகல்யாவைப் பார்த்து நலம் விசாரித்தாள்.
அகல்யா குழந்தை உண்டாகி இருப்பதால்… இந்த நேரம் பிரயாணம் செய்ய வேண்டாம் எனக் குழந்தைக்குப் பெயர் வைத்த அன்று வந்ததோடு சரி. அதன்பிறகு அண்ணியும் நாத்தனாரும் இன்றுதான் பார்த்துக் கொள்கிறார்கள். அதனால் இருவருக்கும் பேச நிறைய இருக்க…. இருவரும் அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.
அமுதா வந்து “உன் பையன் அமைதியா இருக்கும் போதே நீ வந்து சாப்பிடு.” என அழைக்கும் வரை இருவரும் பேச்சை நிறுத்தவில்லை.
“உனக்கும் பசிக்கும் நீயும் வந்து சாப்பிடு.” என வெண்ணிலா அகல்யாவையும் அழைத்துக் கொண்டு உணவு உண்ண செல்ல, அங்கே ஏற்கனவே ஜெய்யும் புகழும் உணவு உண்டு கொண்டிருந்தனர்.
“அப்படி என்ன பேசுவீங்க?” என ஜெய்யும்,
“இன்னைக்கே எல்லாம் பேசனும்ன்னு இல்லை. நாளைக்கும் பேசலாம்.” எனப் புகழும் சொல்ல, வெண்ணிலாவும் அகல்யாவும் புன்னகையுடன் அவர்களுடன் சேர்ந்து உண்டனர்.
இங்கே நிறையப் பேரைப் பார்த்ததும் அர்ஜுனுக்குக் குஷி தாங்கவில்லை. ஹா ஹூ என அவன் சத்தம் கொடுக்க… அதைப் பார்த்து எல்லோரும் சிரிக்க என வீடே களைகட்டியது.
வெண்ணிலா அவள் அறைக்குக் கிளம்பும் நேரம், ராதிகாவிடம் இருந்த மகனை கேட்க,
“அவன் என் கூடவே தூங்கட்டும் அண்ணி.” என்றாள்.
“ராத்திரியில அழுதா பால் நீயா கொடுப்ப, ஒழுங்கா பிள்ளையை அவகிட்ட கொடு.” எனக் காமாக்ஷி சொல்ல, ஓ இது வேற இருக்கா என அசடு வழிந்தபடி ராதிகா அர்ஜுனைக் கொடுத்தாள்.
அமுதா மருமகள் பேரனை உட்கார வைத்து டிஷ்ட்டி எடுத்து விட்டே அறைக்கு அனுப்பினார்.
வெண்ணிலா உடைமாற்றிவிட்டு வரும் வரை ஜெய் மகனை வைத்திருந்தான். வெண்ணிலா வந்து பசியாற்ற, அர்ஜுன் பால் குடித்தபடி உறங்கி விட்டான்.
“அடப்பாவி, அங்க எங்க வீட்ல ராத்திரி எல்லாம் தூங்க மாட்டான். இங்க பாரு உடனே தூங்கிட்டான்.” என வெண்ணிலா ஆச்சர்யப்பட…
“கொஞ்சம் ஆட்டமா அவனும் போட்டான். அதோட இன்னைக்குத் தான ஊர்ல இருந்து வந்திருக்கீங்க, அவனுக்கும் அலுப்பா இருக்கோ என்னவோ.” என ஜெய் சொன்னதற்கு, வெண்ணிலாவும் இருக்கும் என்றாள்.
சிறிது நேரம் தோளில் போட்டு தட்டியவள், ஏற்கனவே தயாராக இருந்த தொட்டிலில் மகனை படுக்க வைத்து விட்டு வந்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்த கணவனின் மார்பில் தலை சாய்த்துக் கொண்டாள்.
“ஆமாம் இப்ப எதுக்குத் திடிர்ன்னு கார் வாங்கினீங்க? பொய் சொல்லாம சொல்லுங்க, உங்க பையனுக்குத் தானே வாங்கினீங்க.”
“என் பையன் என்னை மாதிரி. அவனுக்குக் கார் எல்லாம் தேவை இல்லை. நீதான் நோஞ்சானா இருக்க… இந்நேரம் பஸ்ல வந்திருந்தா பத்துதரம் வாந்தி எடுத்திருப்ப… உனக்காகத்தான் வாங்கினேன்.”
கணவனின் பதிலில் திருப்தி உற்றவள், அவனை இன்னும் ஒன்ற, ஜெய்யும் மனைவியை அனைத்துக் கொண்டான்.
மறுநாளும் எல்லோரும் வீட்டில் இருந்தனர். ஒன்றாக அரட்டை, உணவு என நேரம் சென்றது. அன்று மாலை அகல்யா கணவன் வீட்டிற்குக் கிளம்பி விட… யஸ்வந்தும் கோயம்புத்தூர் சென்று விட்டான்.
ராதிகா கல்லூரி சென்று வரும் நேரம் தவிர மற்ற நேரம் அர்ஜுனை அவள்தான் வைத்திருப்பாள். விளையாட்டுத் தனமாகத் தெரிந்தாலும், அர்ஜுனை நன்றாகத்தான் பார்த்துக் கொள்வாள்.
“ஒன்னுத்துக்குமே ஆக மாட்டான்னு நினைச்சேன். எதோ இதாவது செய்றாளே?” எனக் காமாக்ஷி ஆச்சர்யப்பட…
“நீயா ஏன் அப்படி நினைக்கிற? செய்ய வேண்டிய நேரத்தில அதெல்லாம் அவ செய்வா.” என அமுதா சொல்ல,
“அப்படிச் சொல்லுங்க பெரியம்மா.” என்றால் ராதிகா.
கரண் திருமணத்திற்கு முன்தினம் காரில் வெண்ணிலா கணவன் மற்றும் மகனுடன் சென்றுவிட்டு, திருமணம் முடிந்ததும் அன்றே திரும்பி விட்டாள்.
ஏழாம் மாதம் வளைகாப்பு போட்டு அகல்யாவும் இங்கே வந்து விட… அவளைப் பார்க்க எனப் புகழ் வந்து போய் இருக்க, நேரம் போவதே தெரியாது.
வெண்ணிலா பொறுப்பான மருமகளாய் இருந்த காரணத்தினால், வீட்டினரின் முகம் பார்த்தே, அவர்களுக்கு என்ன தேவை எனப் புரிந்து கொண்டு விடுவாள்.
ஜெயராமன் கூட அடிக்கடி சொல்லுவார். “உன்கிட்ட எல்லாம் கேட்டாதான் டீயோ காபியோ வரும். வெண்ணிலா தான் முகம் பார்த்தே என்ன வேணும்ன்னு கரெக்டா கொண்டு வரும்.” என்பார்.
மற்றவர்களைப் பற்றி வெண்ணிலா தெரிந்து வைத்திருகிறாலோ இல்லையோ. ஆனால் ஜெய் மனைவியைப் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருந்தான்.
இப்போது தோட்டம் போட நிறைய ஆர்டர் வருவதால்.. ஜெய் இன்னும் சிலரை வேலைக்கு வைத்துக் கொண்டு, அவனும் அடிக்கடி சென்று பார்த்துக் கொள்வான். அதே நேரம் மனைவியை விட்டு அதிக நேரம் வெளியில் இருக்காதபடியும் பார்த்துக் கொள்வான். அப்படி அடிக்கடி வெளியே செல்லும்படி இருக்கிறது என்றால்… கார்தான் இருக்கிறதே, அதனால் மனைவி மகனையும் அழைத்துச் சென்று விடுவான்.
“உன் மிரட்டல் எல்லாம் எங்ககிட்ட தான். ஆனா அண்ணியைப் பார்த்து நீதான் பயப்படுற.” என ராதிகா கூடக் கேலி செய்வாள்.
அப்படி வெளியில தெரியுற மாதிரியா இருக்கோம் என ஜெய்க்கு தோன்றினாலும் ஒத்துக்கொள்வானா என்ன?
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு….
யஸ்வந்திற்குத் திருமணதிற்கு வரன் தானாகவே வந்தது. பெண் வீட்டினரும் கோயம்புத்தூர் தான். அவர்கள் பெண்னும் கணினி பொறியாளராக வேலைப் பார்க்க, யஸ்வந்தும் அதே துறையில் இருப்பதால்… அதோடு இவர்கள் குடும்பத்தைப் பற்றி விசாரித்துப் பிடித்துப் போனதால்… சம்பந்தம் பேச வந்திருந்தனர்.
“எங்க வீட்ல சின்னப் பொண்ணுக்கு பண்ணிட்டு தான் பையனுக்குப் பார்க்கணும்.” என ஜெயராமன் சொல்லி விட… பெண் வீட்டாரும் காத்திருப்பதாகச் சொல்லி விட்டு சென்றனர்.
எத்தனை முறை எல்லோரையும் எடுத்தெறிந்து பேசி இருக்கிறோம். தனக்காகப் பெரியப்பா அண்ணனின் திருமணத்தையே தள்ளி வைக்கிறாரே… நாம் மட்டும் சுயநலமாக யோசித்தோமே என ராதிகாவுக்கே வெட்கமாக இருக்க… அதன் பிறகு கொஞ்சம் பொறுப்பும் வந்தது.
அங்கே யுவராஜுக்கும் பெண் பார்த்துக் கொண்டிருந்தனர்.
வெண்ணிலாவுக்கு முதலில் ஏற்பாடு செய்த திருமணம் நின்று போனதால்… யுவராஜிற்குத் திருமணதிற்குப் பார்க்கும் போது நிறையவே தயக்கம் இருந்தது. இதற்கு மேலும் கடத்த முடியாது என்றுதான் பெண் பார்க்க ஆரம்பித்தனர்.
ஒரு வரன் முடிவான நிலையில், இவர்கள் அந்த இடத்திலேயே செய்வோம் என இருக்கும் போது, பெண் வீட்டினர் வேண்டாம் என்பதாகத் தகவல் வந்தது. பிறகு ஏன் என்று ஆராய்ந்த போது, அந்தப் பெண் இன்னொரு பையனை விரும்புவது தெரிந்தது.
நல்லவேளை ஆரம்பத்திலேயே தெரிந்தது. மனமேடை வரை சென்று நின்றிருந்தால்… அதை நினைத்து பார்க்கவே முடியவில்லை.
இன்னொரு இடத்தில் நம்பி பெண் பார்க்க செல்லவே அச்சமாக இருக்க… அப்போது கற்பகம் தான் சொன்னார். “வெளிய செய்ய யோசிக்கிறீங்க. பேசாம உன் அண்ணன் பெண்ணையே உன் மகனுக்குச் செய்ய வேண்டியது தானே..” என்றதும், மகேஸ்வரிக்கு உண்மையாகவே அப்படி ஓர் எண்ணமே இல்லை. வெண்ணிலாவின் திருமணமே எதிர்பார்க்காமல் நடந்தது தானே… அதனால் ஒன்றும் சொல்லாமல் நின்றார்.
அம்மா சொன்னதும் ராஜகோபாலும் யோசித்துப் பார்த்தார். பொண்ணு எல்லாம் நல்ல பொண்ணு தான். ஓரளவுக்குச் செய்வாங்க. நம்மகிட்ட என்ன காசு பணத்துக்கா பஞ்சம். வரும் மருமகள் நன்றாக இருந்தால் போதும் என்ற எண்ணத்திற்கு அவரும் வந்திருந்தார். அதனால் சரி அங்கேயே செய்யலாம் என்றார்.
மகேஸ்வரிக்கு நம்பவே முடியவில்லை. அவர் முதலில் வெண்ணிலாவிடம் சொல்ல, அவளிடம் எதிர்பார்த்த குதுகுலம் இல்லை.
ஏற்கனவே கணவன்தான் தன் தங்கைகளை அங்கே கொடுக்க மாட்டான் எனச் சொல்லி இருந்தானே… அதனால் சுரத்தே இல்லாமல் பேசினாள்.
அன்று இரவு உணவுவேளையின் போது, “ராதிகாவை அண்ணனுக்குக் கேட்கிறாங்க.” என வெண்ணிலா பொதுவாகச் சொல்லிவிட…. இது என்னடா வம்பு என்பது போல இரண்டு மாமன்களும் பார்க்க, ஜெய் மட்டும் முறைத்தான்.
“நீ என்ன சொல்ற சந்திரா?” என ஜெயராமன் தம்பியைப் பார்க்க, அவர் காமாட்சியைப் பார்த்தார்.
“ஜெய் சொன்னா சரியா இருக்கும். நீ என்ன ஜெய் சொல்ற?” என்றதும்,
“என்னை ஏன் கேட்கிறீங்க? உங்க இஷ்டம்.” என்றான் ஜெய்.
“இது என்ன டா பதில்?” என ஜெயராமன் மகனைப் பார்க்க,
“உங்களுக்கு எல்லாம் எவ்வளவு பட்டாலும் புத்தியே வராதாப்பா… அத்தையைக் கட்டி கொடுத்திட்டுப் பட்டது எல்லாம் மறந்து போச்சா… இன்னைக்கு இன்னொரு பெண்ணையும் தரேன்னு சொல்றீங்க.”
“இது நீ அங்க இருந்து பெண் எடுக்கும் போது தெரியலையா? அவங்க பெண்ணையே எடுத்திட்டு.. இப்ப பொண்ணு மட்டும் கொடுக்க முடியாதுன்னு சொல்ல முடியாது.”
“என்னவோ பண்ணுங்க என்னை ஏன் கேட்கிறீங்க?”
“அண்ணனுக்கு இஷ்டம் இல்லைனா எனக்கு வேற இடமே பாருங்க.” என ராதிகா சொல்ல,
“இங்க பாரு உனக்கு இஷ்டமா கல்யாணம் பண்ணிட்டு போ… பிறகு உனக்கு வந்த நல்ல இடத்தை நான் கெடுத்துட்டேன்னு நீயே ஒரு நாள் சொல்லுவ. உனையெல்லாம் நம்ப முடியாது.” என ஜெய் ராதிகாவிடமும் எரிந்து விழுந்தான்.
“நான் அப்படியெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டேன். எனக்குத் தெரியும் அண்ணா, நீங்க எது செஞ்சாலும் என் நல்லதுக்குதான் இருக்கும்.” என்றாள். ஆனால் ஜெய் எதுவும் பதில் சொல்லாமல் சென்று விட்டான்.
காமாட்சிக்குமே கற்பகத்தை நினைத்து அங்கே செய்யப் பயம் தான். ஆனால் அமுதாவுக்கு விருப்பமே.
“நீ அவன்கிட்ட எடுத்து சொல்லு வெண்ணிலா.” என்றார் மருமகளிடம்.
அர்ஜுன் கீழே அவன் தாத்தா பாட்டியுடன் தான் உறங்குவான். வெண்ணிலா அறைக்கு வந்தவள், எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என யோசித்துக் கொண்டிருக்க, ஜெய் எந்தப் பேச்சையும் கேட்க விரும்பாதவன் போலப் படுத்து உறங்கிவிட்டான்.
ஜெய் யாரோடும் பேச விரும்பாமல், வேலை என்று வெளியவே சுற்றிக் கொண்டு இருந்தான்.
ஜெய் சம்மதிக்காமல் இருப்பதால்… வீட்டினரும் பதில் சொல்லாமல் நாளை கடத்த,