இளவளவனின் கேள்விக்கு யாழினி நேரடியாக பதில் அளிக்காமல், அளிக்க பிடிக்காமல், அவனை கடந்து செல்ல, அவனோ துள்ளலுடன் தன்னவளை பின் தொடர்ந்தான்.
இருவரும் பாதி படிகளை கடந்த போது, கீழே இருந்தவர்கள் இவர்களின் கண்ணுக்கு புலனாக, பாவம் அவர்கள் தான் இவர்களை கவனிக்கவில்லை.
கூடத்தை சுத்தப்படுத்தி கொண்டிருந்த இரு பெண்களில் ஒருவர், அங்கிருந்த யாழினியின் புகைப்படத்தில் இருந்த தூசியை தட்டிவிட்டபடி மற்றவரிடம்,
“ஏக்கா, நம்ப முதலாளி பொண்ணா இது இம்புட்டு அழகா இருக்கு”
என்று கேட்க, சுற்றும் முற்றும் பார்த்த இன்னொரு பெண்மணி, மாடிபடியில் நின்றிருந்தவர்களை கவனிக்காமல்,
“ஆமாடி அழகு தான், ஆனா என்ன அழகா இருந்து என்ன பண்றது, அந்த பொண்ணுக்கு …………”
என்று மேடை இரகசியமாக தனக்கு தெரிந்த அரைகுறை தகவலை பகிர்ந்து கொள்ள, தாடையில் கை வைத்து அதிசயத்த முதலில் பேசிய பெண்மணி,
“இப்படி எல்லாம் கூடவா நடக்கும்”
என்று நம்பாமல் கேட்க, தன்னை சந்தேகிதத்தில் கடுப்பான இன்னொரு பெண்மணி,
“யாருடி இவ கூறுகெட்டவ, பின்ன என்ன நான் பொய்யா சொல்றேன்”
என்று காட்டமாக கேட்க, உடனே பம்பிய முதலாமவள் உச்சு கொட்டியபடி,
“இப்படி முன்ன பின்ன கேள்விப்பட்டது இல்லையா, அதான் ஒரு இதுல அப்படி கேட்டுட்டேன், பாவம் தான்க்கா இல்ல அந்த பொண்ணு, ஆமா அந்த பொண்ணு இப்போ எங்க”
என்று தான் வேலைக்கு வந்த ஆறு மாதத்தில் யாழினியை பார்த்தே இராததால், முதலாளி வீட்டு விஷயம் வேறு என்பதால் கூடுதல் சுவாரஸ்யத்துடன் கேட்க, இன்னொருவருவரோ,
“ஏதோ வெளிநாட்டுக்கு அனுப்பி வச்சிட்டீங்க போலடி”
என்று அவள் கேட்ட கேள்விக்கு, எப்படி ‘எனக்கு தெரியாது’ என்று சொல்வது, அது தனக்கு இழுக்கு என்பதால் ஒரு பொய்யை அவிழ்த்து விட்டார்.
இருவரும் பின்பு வேறு ஏதோ பேசியபடி, அவர்களின் வேலையை பார்த்தவாறு நகர்ந்து சென்றனர்.
யாழினிக்கு நடந்ததை பற்றி, ஒரு வேலைக்கார பெண்மணி சொல்லும் போது தான், இளவளவன் பதற்றத்துடன் யாழினியை பார்த்தது.
‘ஆமா அது தான் உண்மை, அதுக்கு இப்போ என்ன’
என்று கேட்டுவிட்டு அவர்களின் பேச்சை எளிதில் கடந்து விடலாம் தான். ஆனால் அதற்கான நிமிர்வு இன்னும் யாழினிக்கு வரவில்லையே.
என்ன செய்வது என்று இளவளவன் யோசிக்கும் போதே, அவனின் உடல் அன்னிச்சையாக யாழினியின் முன்பு நகர்ந்து, அந்த பெண்மணிகளை அவளின் பார்வையில் இருந்து மறைத்தபடி நின்றது.
யாழினியோ அவனை உணர்வுகள் எதுவும் இன்றி பார்க்க, இளவளவன் ஏதோ பேசவேண்டும் என்பதற்காக,
“நீ உன்னோட ரூம்க்கு போ, நான் போய் அவங்களை”
என்று சொல்ல, அவனை இடை வெட்டிய யாழினி,
“போய் அவங்களை என்ன பண்ண போறீங்க, வேலையை விட்டு தூக்க போறீங்களா, வேலையை விட்டு தூக்கிட்டா எல்லாம் சரியா ஆகிடுமா, ஊர் வாயை மூட முடியாதுன்னு சொன்னது நீங்க தானே”
என்று சற்றே காரத்துடன் பேச, அவளின் தெளிவான பேச்சில் ஒரு நிமிடம் இளவளவன் மகிழ, அதற்கு ஆப்பு வைக்கும் வண்ணம் தொடர்ந்த யாழினி,
“என்னோட அப்பாக்கா நான் இதை செய்யனும்னு முடிவு எடுக்கும் போதே இதை எல்லாம் நான் பேஸ் பண்ண வேண்டி இருக்கும்னு எனக்கு தெரியும், இது தான் என்னோட தலையெழுத்து”
என்று சுய பட்சாபத்தில் கரைய, இளவளவன் அவளை இயலாமையுடன் பார்த்த படி நின்றான்.
யாழினியோ எதுவுமே பேசாமல், மீண்டும் அவனை கடந்து, தலையை குனிந்தபடியே, தனது பெற்றோரின் அறைக்கு சென்று விட்டாள்.
செல்லும் அவளை பார்த்து கொண்டிருந்த இளவளவனுக்கு உள்ளுக்குள் பெரும் கவலையின் ஊற்று.
ஒன்னரை வருட காயத்தை, ஓரிரு வாரத்தில் சரி செய்துவிட முடியாது என்பதை இளவளவன் உணர்ந்து தான் இருந்தான்.
யாழினி திடிரென அன்று எதிர்கொண்ட சூழலும், அவளின் இழப்பும், அது தந்த பாதிப்பும் பெரிது என்பதையும் அவன் அறிவான்.
யாழினி இழந்தவற்றில் பெரிதாக இளவளவன் நினைப்பது, அவள் இழந்த அவளின் தன்னம்பிக்கையை தான்.
அதை அவளுள் மீண்டும் விதைக்க தான் அவனும் போராடி கொண்டிருக்கிறான். மனிதர்களில் சிகை அலங்காரம், அவர்களின் மனநிலையில் முக்கிய பங்கு வகிப்பது.
துக்கம் விழுந்த வீட்டின் துக்கம் அனுசரிப்பவர் மொட்டை அடிப்பதும், மணப்பெண் சவுரி வைத்து ஜடையை நீளமாக காட்டி கொள்வதும், அது மாதிரியான உளவியல் தான்.
யாழினியின் உடை, சிகை என்று இளவளவன் மாற்றியது எல்லாமே அதே காரணத்திற்காக தான்.
பெண்கள் தங்களை அலங்கரித்து கொள்வதும், கண்ணுக்கு இனிமையாக இருப்பதும் மற்றவர்களை கவர்வதற்காக என்பதை விட அது அவர்களுக்கே ஒரு புத்துணர்வையும், தன்னம்பிக்கையையும் தரும் என்பதும் அவன் படித்து தெரிந்து கொண்டது.
இன்று கண்ணாடி முன்பு நின்று, தன்னை ஒரு முறை யாழினி பார்த்த பார்வையில், அவன் எதிர்பார்த்த புத்துணர்வு இல்லை என்றாலும், ‘இது நானா’ என்னும் ஒரு ஆச்சர்யம் இது.
இப்படி கொஞ்சம், கொஞ்சமாக யாழினியின் அகத்தை மாற்றுவதற்கு முன்னோடியாக, அவளின் புறத்தையும், சுற்றுப்புறத்தையும் நேர்மறையாக மாற்ற சித்தம் கொண்டிருந்தான் இளவளவன்.
ஆனால் முதல் நாளே, அவள் இப்படி ஒரு எதிர்மறை சூழ்நிலையை எதிர்கொள்வாள் என அவனும் எதிர்பார்த்திருக்க வில்லை.
அதை நினைத்து இளவளவன் பெருமூச்சு விடவும், அவன் சொல்லியிருந்தபடி வேலையாட்கள் ஆண்கள், பெண்களாக நால்வர், அவனை நெருங்கவும் சரியாக இருந்தது.
அவர்களை அழைத்து கொண்டு, மீண்டும் யாழினியின் அறைக்கே சென்று விட்டான் அவன்.
யாழினியின் அறையில் இருக்கும் அனைத்து பொருட்களையும், அவர்களின் துணை கொண்டு, இடம் மாற்றி வைத்தான்.
யாழினியின் படுக்கையறையையும், வரவேற்பரையையும் முழுக்க முழுக்க, மனதுக்கு அமைதியும், இதமும் தரக்கூடிய இளம்நீல நிறத்தில் அலங்கரிக்க செய்தா .
அவளின் ஓவிய அறை, பாட்டு பாடும் அறை என அவற்றை எல்லாம் தன்னம்பிக்கையும், கற்பனை வளத்தையும் தூண்டும் இளம் மஞ்சள் நிறத்தில் அலங்கரிக்க சொன்னான்.
பொதுவாக மனதில் மாற்றம் ஏற்பட, இட மாற்றம் அவசியம். ஆனால் யாழினிக்கு இட மாற்றம், புது மனிதர்கள் என்பதே பெரும் பிரச்சனை என்பதால் தான் இந்த ஏற்பாடு.
அவள் ஒன்னரை வருடங்கள் அடைந்து கிடந்த அவளின் அறையையே, அவளுக்கு புதிதாக தெரியும் படி மாற்றியமைத்தான்.
உபரியாக வீட்டின் உள்ளே வளர கூடிய அழகிய செடிகளை சின்ன, சின்ன தொட்டிகளிலும், பல வண்ண மீன்களை கொண்ட ஒரு பெரிய மீன் தொட்டியும் குடியேற்றினான்.
இது எதையும் அறியாமல், விரக்தியோடு சென்ற யாழினி, பெற்றோரின் அறையை நெருங்கியதும் முகத்தை சீராக்கி கொண்டு உள்ளே நுழைய, அவளை பார்த்ததும், அவளின் பெற்றோரோ மகிழ்ச்சியின் உச்சத்தில்.
மகிழ்ச்சி உடனே சிறுது நேரம் மகளுடன் அளலாவி விட்டு, பின்பு ஒன்றாகவே காலை உணவை உண்டனர்.
ஒருவேளை அன்று போல் இன்றும் உணவு முடிந்ததும் சென்று விடுவாளோ என்று அவர்கள் நினைக்க, அவளோ அவர்களின் அறைக்கு வந்து அமைதியாக அமர, அவர்களுக்கு இரட்டை சந்தோஷம்.
ஆசை மக்களோடு உரையாட ஒன்னரை வருட கதை காத்திருக்க, இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் எதாவது பேசியபடியே இருந்தனர்.
தன்னை அவர்கள் எந்த அளவுக்கு தேடி இருக்கிறார்கள் என்பது இதிலிருந்தே யாழினிக்கு புரிய, தன்னை வருத்தி கொண்டு, தான் எடுத்த முடிவு தான் சரி என்பதாக அவளுள் ஒரு சின்ன நிம்மதி.
மாலை ரவிச்சந்திரன் தோட்டத்தில் பத்து நிமிடம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்று லீலாவதி சொல்ல, சற்று தயங்கினாலும் யாழினியே அவருடன் செல்ல ஒப்பு கொண்டாள்.
புற்களில் அப்போது தான் தண்ணீர் பாய்ச்சி இருக்க, உள்ளங்காலில் வழியே அந்த குளுமை உடல் முழுவதும் ஊடுவருவது போல இருக்க, அதை அனுபவித்தபடி தந்தையுடன், அமைதியாக நடந்தாள் யாழினி.
நிரம்ப நாட்களாக சாளரத்தின் வழியே மட்டும் கண்டு இரசித்திருந்த தன் பிரியமான தோட்டத்தில், இறங்கி நடப்பது ஒரு அலாதியான இன்பமாக இருந்தது யாழினிக்கு.
அப்போது தான் யாழினியை கவனித்தவராக தன் வயதையும் பொருட்படுத்தாமல் அவளிடம் ஓடி வந்தார் தோட்டகார தாத்தா.
இத்தனை நாள் கழித்து யாழினியை பார்த்ததில் அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி.
அந்த மகிழ்ச்சி அப்பட்டமாய் அவரின் முகத்தில் தெரிய, கண்களில் உண்மையான அன்புடன் அவளை பார்த்தவர்,
“பாப்பா எப்படி இருக்கீங்க, இந்த தாத்தாவை, உங்க பிரின்ட்ஸ் எல்லாம் இவ்ளோ நாளா பார்க்க வரமா இருந்துட்டிங்களே”
என்று உரிமையுடன் அவளிடம் கோபித்து கொண்டவர், யாழினி பதில் அளிக்கும் முன்பே,
“இங்க வந்து பாருங்களேன்”
என்று சொல்லி முன்னாள் நடக்க, யாழினி முதல் முறையாக உதட்டில் அரும்பிய சிறு இளநகையுடன் அவரை பின் தொடர்ந்தாள்.
யாழினி ஆசையாய் வைத்து, பூவே பூக்க வில்லை என்று அவள் நெடுநாள் வருந்திய சம்பங்கி மரத்திடம் அவளை அழைத்து சென்றவர், தன் பொக்கை வாய் நிறைய புன்னகையுடன்,
“பார்த்தீங்களா எவ்ளோ பூ பூத்து இருக்குன்னு, நான் பறிச்சி தாறேன், அம்மா கிட்ட கொடுத்து தொடுத்து வச்சிக்கிறீங்களா”
என்றவர் யாழினியை கையோடு தோட்டம் முழுக்க அழைத்து சென்று, புதிதாக பதியம் வைத்த செடிகள், பூக்க ஆரம்பித்த செடிகள் என்று ஒரு சிறிய சுற்றுலாவே அழைத்து சென்றார்.
வாய் ஓயாமல் செடிகளை பற்றி பேசிய படியே தாத்தா இருக்க, யாழினியோ அவர் பேசுவதில் கவனம் செலுத்தாமல், அவரின் முகத்தையே தான் பார்த்து கொண்டிருந்தாள்.
தன்னை பார்த்ததினால் அவரின் முகத்தில் ஏற்பட்டறிருந்த உண்மையான மகிழ்ச்சி, அவளை வெகுவாக இளக்கியது என்று தான் சொல்ல வேண்டும்.
நிட்சயம் அவருக்கும் தன்னுடைய நிலைமை தெரிந்து இருக்கும். இருந்த போதிலும் அன்று போலவே, இன்றும் தன்னுடன் பேசும் தாத்தாவை அவ்வளவு பிடித்தது யாழினிக்கு.
வாய் ஓயாமல் பேசிய தாத்தாக்கு ஓரிரண்டு வார்த்தைகள் விடையளித்து பின்பு அவரிடம் விடைபெற்று, நடைப்பயிற்சி முடிந்து அமர்ந்திருந்த தன் தந்தையுடன் சென்று அமர்ந்து கொண்டாள்.
யாழினியின் மனம் பலதும் யோசித்து கொண்டிருக்க, ரவிச்சந்திரனும் அவளின் சிந்தனையை தடை செய்யாமல் அமைதியாக இருந்தார்.
பின்பு இரவு உணவும் முடித்து, யாழினி தனது அறைக்கு செல்ல படியேறும் போது தான் அவளுக்கு, இன்று முழுவதும் இளவளவன் கண்ணில் படாதது உரைத்தது.
‘எங்க ஆளயே காணோம், எங்க போய் இருக்கும் அந்த இம்சை’
என்று யோசித்த படியே படியேறிய யாழினி, அறை கதவை திறக்க, அந்த பக்கம் கதவின் அருகே தான் நின்றிருந்தான் இளவளவன்.
தான் செய்த மாற்றங்களை எல்லாம் கடைசியாக ஒரு முறை பார்த்து, பெருமையாக தன் தோளில் தானே தட்டி கொண்டவன்,
“சூப்பர்டா இளா”
என்று தன்னை தானே பாராட்டியும் கொண்டான். கதவு திறக்கும் சத்தம் கேட்டவுடன் ஒரு எதிர்பார்ப்புடன் திரும்பி பார்த்தான் இளவளவன்.
தான் செய்து இருக்கும் மாற்றங்களை பார்த்து, யாழினியின் முகம் எப்படி மாறும் பார்க்க அவன் ஆசையாய் இருக்க, அவளோ எதையும் கவனித்தாக கூட தெரியவில்லை.
வேலை என்று எதுவும் செய்யாத போதும், பிடிக்காத சூழல் என்பதாலோ என்னவோ மனம் இன்று முழுக்க ஒரு அழைப்புறுதலுடனே இருந்திருக்க, யாழினி வெகுவாக களைத்து போய் இருந்தது.
சற்று முன்பு கூட அவனை பற்றி யோசித்து கொண்டு வந்தவள், இப்போது அங்கு ஒருவன் நிற்பதே கண்ணில் படாதது போல, அவனை தாண்டி உள்ளறைக்குள் சென்று விட்டாள்.
செல்லும் அவளை இடுப்பில் கைவைத்து முறைத்த இளவளவன்,
“ஏண்டி இங்க நாயக்கர் மகால் தூண் கணக்கா ஒருத்தன் நிக்கிறது உன் கண்ணுக்கு தெரியல, காலையில் இருந்து இதையே தான் பண்ணி கிட்டு இருக்க நீ, ஒரு நாள் என்கிட்ட சிக்குவ மவளே, அன்னைக்கு சிக்கன் பிரியாணி தாண்டி”
என்று மனதுக்குள் கருவி கொண்டு தனது அறைக்கு சென்று விட்டான். உடலும், மனமும் ஓய்வுக்கு கெஞ்சிய போதும், உறக்கம் மட்டும் வரவில்லை யாழினிக்கு.
இன்று முழுக்க நடந்தவைகளை மனம் அசைப்போட, அவளின் எண்ணம் தோட்டகார தாத்தாவிலும், அவரை பற்றிய தன் எண்ணத்திலும் வந்து நின்றது.

சிறிது நேரம் அதை பற்றி யோசித்து கொண்டிருந்த அவளுக்கு, அப்போது தான் இன்னொன்றும் புரிந்தது.

இளவளவனும் அவளிடம் பரிதாபம், இரக்கம் என்று எந்த உணர்வும் இன்றி வெகு இயல்பாக தான் அவளிடம் பேசுகிறான்.
தாத்தா அவளிடம் பாசத்தோடு பேசுகிறார் எனில் அந்த இம்சையோ எப்போது பார்த்தாலும் திட்டி கொண்டே, எதாவது சொல்லி குற்றம் சுமர்த்தி கொண்டே இருக்கிறான் என்று தோன்ற, அவளின் உதடுகள் கடுப்புடன் வளைந்தன.
அதேநேரம் காலையில் பேசிய அந்த இரு பெண்களின் பேச்சும் நினைவுக்கு வர, அதை இப்போது நினைக்கு போது,
சற்றே சிரிப்பு வரும் போல இருந்தது அவளுக்கு.
தன்னை பரிதாபமாக தான் மட்டும் மற்றவர்கள் பார்ப்பார்கள் என அவள் நினைத்திருக்க, தன்னை ஆச்சர்யமாக கூட பார்ப்பார்கள் என்று இன்று தான் தெரிந்தது அவளுக்கு.
மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இரகம் என்று தோன்றியது யாழினிக்கு
சதா தன்னை பற்றி கவலை பட்டாலும், தன் முன்னால் சிரித்து பேச முயலும் பெற்றோர்.
பார்க்கும் போது எல்லாம் தன்னில் குற்றம் கண்டு பிடிக்கும் அந்த இம்சை.
எந்தவித மாற்றமும் இல்லாமல் தன்னை நடத்தும் தாத்தா.
தன் நிலையை ஆச்சர்யமாக நினைக்கும் சில பேர், பாவமாக பார்க்கும் சிலர்.
இப்படி வழக்கத்துக்கு மாறாக யோசனையில் மூழ்கிய யாழினிக்கு, அவளின் இனிமையான நாட்கள் நினைவுக்கு வர, இடது கண்ணின் ஓரம் கண்ணீர் துளிர்த்து.
ஒரு குறையும் இல்லாமல், மகிழ்ச்சி மட்டுமே நிறைந்து இருந்த அந்த நாட்களை இப்போது நினைத்து பார்க்கும் போது, அது எல்லாம் போன ஜென்மமோ என்று எண்ண தோன்றியது அவளுக்கு.
அந்நாள் நினைவில் மூழ்கி தனியே தவித்தவள், தன்னையும் அறியாமல் தன் பிரியமான இசையை துணைக்கு அழைத்தவளாக, அவளையும் அறியாமல் பாட ஆரம்பித்தாள்.
மோகனம் இசைக்கும்…………