கண்டுகொண்டேன் காதலை
அத்தியாயம் – 13
தீனாவும் சுமித்ராவும் தங்கள் திருமண உடையில் காரில் வந்து மண்டபத்தில் இறங்கினர். வாசலில் நின்று விருந்தினர்கள் வரவேற்றுக் கொண்டிருந்த சுந்தரம் சம்பந்தி வீட்டினரை பார்த்ததும் விரைந்து வந்து அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.
மகளைப் பார்த்தும் முகம் மலர்ந்த ஈஸ்வரி, “சுபத்ரா, உங்க அக்கா வந்திட்டா வா…” என அழைத்தபடி விரைந்து சென்றார். மகள் திருமணதிற்கு வருவாளோ வரமாட்டாளோ எனப் பயந்து கொண்டு இருந்தார்.
“வாங்க அத்தான்.” எனத் தீனாவை பார்த்து சொன்ன சுபத்ராவும் அவளது திருமணப் புடவையில் தான் இருந்தாள். ஏற்கனவே அக்காவும் தங்கையும் பேசி வைத்து இருந்தனர். திலிப் வாங்கிக் கொடுத்த புடவையை இரவு வரவேற்புக்கும், தங்கள் கல்யாண புடவையைக் காலையில் கட்டுவது என்றும்.
மாப்பிள்ளை அழைப்பு முடிந்து, சுமித்ராவும் சுபத்ராவும் தங்கள் வீட்டில் எடுத்த திருமணப் புடவையை மணமகளிடம் கொடுக்க எடுத்து சென்றனர்.
ஷாலினி இருவரையும் பார்த்து புன்னகைத்தாள். அழகு கலை நிபுணர் இருந்ததால்… அவரே ஷாலினிக்கு புடவையைக் கட்டிவிட… சகோதரிகள் அதே அறையில் ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது உள்ளே வந்த அவளின் அம்மா டேபிலில் ஷாலினி கழட்டி வைத்த நகைகளைப் பார்த்தவர், “நகை பத்திரம் ஷாலினி.” என்றார்.
இது என்ன டா வம்பு என நினைத்த சுமித்ரா சுப்தராவை அழைத்துக் கொண்டு வெளியே வந்துவிட்டாள்.
மணமகள் தயார் ஆனதும், சகோதரிகள் இருவரும் அவளை மண மேடைக்கு அழைத்துச் சென்றனர். தன் வேலை முடிந்ததும், சுமித்ரா சென்று தீனாவின் அருகே உட்கார்ந்து கொண்டாள்.
“ஏன் வந்திட்ட?” தீனா கேட்க….
“நான் இங்கே இருந்தே பார்க்கிறேன்.” என்றாள்.
திருமணம் முடிந்து எல்லோருக்கும் காலை விருந்து பரிமாறப்பட்டது. மாப்பிள்ளை வீட்டினருக்கு தர வேண்டிய சம்பந்தி விருந்தையும் அன்று மதியமே மண்டபத்தில் வைத்தே கொடுத்து விட்டனர்.
புதுமணத் தம்பதிகளை நேராக மாப்பிள்ளை வீட்டிற்குத் தான் அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால் இங்கிருந்து செங்கல்பட்டுத் தூரம் என்று ஒரு காரணத்தைச் சொல்லி, தங்கள் மகளுக்கு அவர்கள் வாங்கிக் கொடுத்த வீட்டிற்கே முதலில் சென்றனர்.
அபார்ட்மெண்ட்டில் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட பெரிய வீடு. வீட்டில் எல்லாப் பொருட்களையும் வாங்கி முன்பே அடுக்கி இருந்தனர். திருமணதிற்கு நான்கு நாட்கள் முன்புதான் வீட்டிற்குப் பால் காய்ச்சி இருந்தனர்.
புதுமணத் தம்பதிகளுக்குப் பால் பழம் கொடுத்த பிறகு சுமித்ரா இரு வீட்டினருக்கும் குளிர்பானம் ஊற்றி கொடுத்துக் கொண்டு இருந்தாள். தீனா பால்கனியில் நின்று இருக்க… அவனோடு கார்த்திக்கும் இருந்தான்.
“உங்க அக்கா பாரு பொறுப்பா வேலை செய்றாங்க. நீ இங்க என்ன பண்ற?” கார்த்திக் சுப்தராவை வம்புக்கு இழுக்க…
“எங்க அக்கா எப்பவுமே பொறுப்புதான். சின்ன வயசுலேயே வேலைக்குப் போய், திலிப்பை இன்ஜினியரிங் படிக்க வச்சாங்க. அப்புறம் என்னையும் காலேஜ் சேர்த்து விட்டாங்க.”
“நான் உங்களைப் பிடிச்சிருக்குன்னு சொன்ன ஒரே காரணத்துக்காக, அவங்களுக்கு முன்னாடி எனக்குக் கல்யாணம் பண்ணி வச்சாங்க.”
சுபத்ரா சொல்வதைக் கேட்ட தீனாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது, அவனுக்கு இதெல்லாம் தெரியாது. அவள் தங்கைக்கு முதலில் திருமணம் ஆகிவிட்டது தெரியும். மற்றபடி அதன் காரணங்கள் தெரியாது.
சிறிது நேரம் சென்று சுமித்ராவும் இவர்களோடு சேர்ந்து கொண்டாள். மாலையில் அவர்கள் கிளம்பும் போது ஷாலினியின் அம்மா வந்து நாத்தனார் சீர் கொடுத்தார்.
இருவருக்கும் ஆளுக்கொரு வெள்ளி தட்டும், பலகாரங்களும் இருந்தது. அவர் என்ன நினைத்தாரோ திரும்ப உள்ளே சென்று மீண்டும் இரு தட்டுகள் கொண்டு வந்து ஒன்று சுபத்ராவிடம் கொடுத்துவிட்டு, இன்னொன்றை சுமித்ராவிடம் கொடுக்க….
“இல்ல… ஒன்னே போதும்.” எனச் சுமித்ரா மறுக்க… சுபத்ராவும் மற்றொன்றை திரும்பக் கொடுத்து விட்டாள். திலிப் சகோதரிகளை வழியனுப்ப கீழே வரை சென்றான்.
“அடிக்கடி வீட்டுக்கு வாங்க.” எனச் சகோதரிகள் இருவரையும் பார்த்து திலிப் சொல்ல….
“நாங்க இங்க வந்தா உன் வசதிக்காக வந்த மாதிரி இருக்கும். நீ வா… இல்லைனா அம்மா வீட்டுக்கு வரும் போது சொல்லு, நாங்களும் வரோம்.” சுமித்ரா அழகாக நிதர்சனத்தைச் சொல்ல… கேட்ட திலிப் முகம் வாடினான்.
இது என்ன அவன் சுயசம்பாத்தியமா? அவன் மாமனார் வீட்டில் கொடுத்தது. இதில் இவர்களும் வந்து சீராடினால் பாசத்துக்காக வந்ததாகவா சொல்வார்கள், பணத்துக்காக வருவதாகத் தானே சொல்வார்கள்.
“நாங்க உன்கிட்ட இருந்து எதையும் எதிர்பார்க்கலை… ஆனா அப்பா அம்மாவை மட்டும் விட்டுடாத…. அவங்களை மாசம் ஒரு தடவையாவது போய்ப் பாரு.”
சுமித்ரா சொல்ல, எல்லாவற்றிற்கும் சரி சரி எனத் திலிப் தலையசைத்தான்.
உடன்பிறந்த தம்பியிடமே இவ்வளவு சுயமரியாதை பார்க்கிறாள் தன் மனைவி, இவளைப் போய்த் தன் மாமனார் பணத்தில் சாப்பிட சொன்னால்… அவளுக்குக் கோபம் வராமல் எனத் தீனா நினைத்தான்.
வீட்டிற்கு வந்த பிறகும் தீனா அமைதியாகத்தான் இருந்தான். சுமித்ரா குழந்தை வேண்டாம் என்று நினைத்து மாத்திரை சாப்பிட்டது, அவனுக்கு மிகப் பெரிய அடி.
சுமித்ரா மற்ற பெண்களைப் போல் சண்டை பிடித்து இருந்தாலோ… அல்லது கோபப்பட்டு வீட்டை விட்டு வெளியே சென்றிந்தாலோ கூடத் தீனாவை இந்த அளவு பாதித்து இருக்காது. அவனும் பதிலுக்குச் சண்டை போட்டிருப்பான். பிறகு அதோடு அதை மறந்து எப்பவும் போலவே இருந்திருப்பான்.
இப்போது கதையே வேறு…. தன் குழந்தையை அவள் வேண்டாம் என நினைத்தது, தன் ஆண்மைக்கே இழுக்கு என்பது போல் அவனுக்குத் தோன்றியது.
தான் மாறினாலே ஒழிய சுமித்ரா தன் இடத்தில் இருந்து கொஞ்சமும் இறங்கி வர மாட்டாள் என அவனுக்கு நன்றாகத் தெரியும்.
எப்பவும் இந்த நேரத்தில் நண்பர்களைப் பார்க்க செல்பவன், இன்று எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்தான். அவனுக்கே பயம் எங்கே சென்றால் தான் குடித்து விடுவோமோ என்று…. குடித்து விட்டால் தன் உறுதி எல்லாம் போய் விடும் என அவனுக்கே நன்றாகத் தெரியும்.
அன்று இரவு சுமித்ரா வேலைகளை எல்லாம் முடித்து விட்டு அறைக்குள் வந்த போது, “சரி சொல்லு உனக்கு மாசம் எவ்வளவு பணம் வேணும்.” என அவன் கேட்க….
“நிஜமாத்தான் கேட்குறீங்களா?” சுமித்ரா சந்தேகமாகப் பார்க்க…
“ப்ச்… எரிச்சலை கிளப்பாத…. எவ்வளவு பணம் வேணும்ன்னு மட்டும் சொல்லு…”
“மாசம் பத்தாயிரம் கொடுங்க.”
“பத்தாயிரமா?”
“பின்ன நாலு பேரு சாப்பிட அவ்வளவு ஆகாதா? நம்ம ரெண்டு பேருக்கு மட்டும் கொடுத்தா நல்லா இருக்குமா?”
தீனா பணத்தை எடுத்து கொடுத்தவன், “பணம் தான் வாங்கிட்டியே இனி குழந்தை பெத்துப இல்ல….” எனக் கேட்க….
அவனைத் தீ பார்வை பார்த்த சுமித்ரா, “எண்ணப் பத்தி நீங்க என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?” என ஆத்திரமாகக் கேட்க…
“ஹே… நான் சாதாரணமாதான் சொன்னேன். நீ தப்பா புரிஞ்சிகிட்டா நான் பொறுப்பு இல்லை…” என்றான்.
“எனக்கு நீங்க எப்ப பொறுப்பா இருக்கீங்கன்னு தோணுதோ அப்பத்தான் குழந்தை பெத்துப்பேன்.”
“இப்ப கல்யாண ஆனவுடனே எல்லோரும் குழந்தை பெத்துகிறது இல்லை… யாரவது கேட்டா நீங்களும் நாம ப்ளேனிங்ல இருக்கோம்ன்னு சொல்லுங்க.”
“உனக்கே இவ்வளவு இருக்குன்னா எனக்கும் எவ்வளவு இருக்கும். உனக்கு என்னைக்குக் குழந்தை பெத்துக்க இஷ்ட்டமோ, அப்பத்தான்டி நானும் உன்னைத் தொடுவேன்.”
தீனா சொல்லிவிட்டுக் கட்டிலில் சென்று படுத்து விட… ‘ரொம்ப நல்லது.’ என நினைத்த சுமித்ரா தரையில் பாய் விரித்துப் படுத்துக் கொண்டாள்.
கட்டிலில் இருந்து வேகமாக எழுந்து உட்கார்ந்தவன், “உன்னை இந்த வீட்டை விட்டு துரத்த எவ்வளவு நேரம் ஆகும்ன்னு நினைக்கிற?” எனக் குத்தலாகக் கேட்க….
“நானும் அதைச் செய்ங்கன்னு தான் சொல்றேன்.”
“நீங்க அப்படிச் செஞ்சா வருத்தபடுவேன்னு நினைச்சீங்களா…. நான் தப்பிச்சிட்டேன்னு சந்தோசம் தான் வரும். ஆனா நீங்க இப்படியே தான் கடைசி வரை இருப்பீங்க.”
“உங்களை யாரும் மதிக்க மாட்டாங்க. ஏன் உங்க அப்பாவே நீங்க இல்லாதப்ப என்ன பேசுறாருன்னு எனக்குதான் தெரியும்.”
“மரியாதையோட வாழணும்ன்னு நினைச்சா மாறுங்க. இல்லனா எக்கேடும் கெட்டு ஒழிங்க… எனக்கு என்ன வந்துச்சு?”
சுமித்ரா பொரிந்ததைக் கேட்ட தீனா கப்பென்று வாயை மூடிக்கொண்டு படுத்து விட்டான். ‘ஹப்பா… நான் ஒரு வார்த்தை பேசினா… இவ பத்தா இல்ல பதில் கொடுக்கிறா… பார்க்கத்தான் ஆளு ஊமை மாதிரி இருக்கா…. சரியான எமகாதகி’ என மனதிற்குள் திட்டிக் கொண்டு இருந்தான்.
இப்போதுதான் ஒரு அடி எடுத்து வைத்திருக்கிறான் பார்ப்போம் எனச் சுமித்ரா நினைத்துக் கொண்டாள்.
மறுநாள் காலை தீனா சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, சிதம்பரம், “கடைக்குப் போறேன். எதாவது சாமான் வேண்டுமா?” எனக் கேட்க…
“இல்லை மாமா, உங்க பையன் பணம் கொடுத்திருக்கார்… இனி வீட்டிற்குத் தேவையான மளிகை சாமான் நானே வாங்கிக்கிறேன்.” என்றாள்.
தன் மகனா பணம் கொடுத்தது என்பது போல் சிதம்பரம் ஆச்சர்யமாகப் பார்த்தார்.
“பணம் கொடு நான் வேணா வாங்கிட்டு வரேன்.”
“இல்லை வேண்டாம், உங்களுக்கு ஏன் சிரமம்? இனி நானே பார்த்துகிறேன்.” எனச் சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டாள்.
அன்று தீனா வீட்டில் தான் இருந்தான். மதியம் ஒரு விருந்தே சுமித்ரா தயார் செய்து இருந்தாள்.
“இதெல்லாம் உனக்குச் சமைக்கத் தெரியுமா?” தீனா சாப்பிட்டபடி கேட்க….
“தெரியாம… ஆனா ஓசி காசுல ஓரளவுக்குத்தான் சமைக்க முடியும்.” எனக் குத்தலாகப் பதில் கொடுத்தாள்.
சிதம்பரம் மளிகை சாமான் வாங்கிக் கொடுக்கவே அழுவார். அவரது பென்ஷன் பணம் எல்லாம் கரைவதை நினைத்து உள்ளுக்குள் எரியும்.
வீட்டு வாடகையை வேறு திலகா வாங்கி வைத்துக் கொள்வார். அவரிடம் பணம் இல்லையென்றால் மதிக்க மாட்டார்கள் என்ற நினைப்பு அவருக்கு.
இருப்பதை வைத்துச் சுமித்ரா தன் சமையலை முடித்துக் கொள்வாள். இப்போது தன் கணவனின் பணம் என்றதும், அவளால் சுதந்திரமாகச் செயல்பட முடிந்தது.
மாலை வேளையில் வீட்டிற்கு வந்ததும் என்ன செய்வது என்று தீனாவுக்குத் தெரியவில்லை…. அவன் அறையில் பாடலை சத்தமாக வைத்துக் கொண்டு படுத்து விடுவான்.
சும்மாவே இருந்தால் சீக்கிரம் திரும்ப நண்பர்களைச் சந்திக்கச் சென்று, குடிக்க ஆரம்பித்து விடுவான் எனச் சுமித்ராவுக்குப் புரிந்தது.
“என்னங்க கோவிலுக்குப் போகலாமா?”
“நீ போயிட்டு வா…”
“திரும்ப வரும் போது இருட்டிடும். எவனாவது செயின் அத்துட்டு போயிட்டா… பயமா இருக்கே….”
“அப்பாவை கூடிட்டு போ…”
“ஒன்னும் தேவை இல்லை போங்க…” என்ற சுமித்ராவும் கட்டிலில் திரும்பி படுத்துக் கொள்ள…. அவனுக்கும் போர் அடித்தது.
“சரி வா போயிட்டு வரலாம்.” என்றான். இருவரும் உடனே கிளம்பினர்.
தீனா பைக்கை எடுக்கச் செல்ல…. “பக்கத்தில தானே நடந்தே போகலாம். அப்பத்தான் டைம் கொஞ்சம் ஆகும். இல்லைனா உடனே வந்திடும்.” என்றாள்.
அவளது கவலையைப் பார்த்து தீனாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. வண்டி சாவியைப் பாக்கட்டில் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
“நீங்க குடும்பத்தோட வெளி ஊருக்கு போய் இருக்கீங்களா?”
“இல்லை போனது இல்லை.”
“இங்கயே எங்காவது?”
“இல்லை.”
“ஏன்?”
“அம்மாவுக்குத் தனக்குப் பொருத்தமில்லாத மாப்பிள்ளையைப் பார்த்து கட்டி வச்சிட்டாங்கன்னு நினைப்பு… அதனால அப்பாகிட்ட எப்பவுமே சண்டை தான் பிடிப்பாங்க. அவங்களுக்கு அவரோட வெளிய போகப் பிடிக்காது. ”
“எப்பவும் உடம்பு சரி இல்லைன்னு காரணம் சொல்லி… அப்புறம் அதுவே உண்மை ஆகி… அவங்க எங்கையும் போக முடியாம போச்சு….”
தீனா நண்பர்களோடு அதிக நேரம் செலவழிப்பதற்குக் காரணம் இதுதான் எனச் சுமித்ராவுக்குப் புரிந்தது.
கோவிலில் இருந்து திரும்பி வரும் போது…. “நான் கேட்டது போல் என்னைக் கேட்க மாட்டீங்களா?”
சுமித்ரா சொன்னது புரியாமல் தீனா பார்க்க…
“நானும் எங்கையும் போனது இல்லை….. எங்ககிட்ட ஊர் சுத்துற அளவு பணம் இல்லை… ஆனா லீவ் விட்டா அத்தை பசங்க எங்க வீட்டுக்கு வருவாங்க. நாங்களும் அங்க போவோம்.”
“தீபாவளிக்கு டிரஸ் எடுக்கப் போற அன்னைக்கு மட்டும் ஹோட்டல்ல சாப்பிடுவோம். அப்புறம் எப்பவாவது ஒரு தடவை பீச். எனக்குப் பீச் ரொம்பப் பிடிக்கும்.”
சுமித்ரா சொன்னது தீனாவுக்குக் கேட்டது போல் கூட அவன் காட்டிக்கொள்ளவில்லை… ஆனால் அந்த வார ஞாயிற்றுக்கிழமை கிழமை மதியம் சாப்பிட்டதும், “இன்னைக்குப் பீச் போகலாம். நாலு மணிக்கெல்லாம் கிளம்பனும்.” என்றான்.
சுமித்ரா துள்ளிக்குதித்துக் கொண்டு தயாரானவள், தன் மாமியாரிடம் சொல்ல சென்ற போது….
“ஊர் சுத்தி இருக்கிற காசை எல்லாம் கரைச்ச்சிடாத.” என்றார்.
சுமித்ரா அவர் சொன்னதைக் கண்டுகொள்ளவே இல்லை… தான் எதாவது அனுபவித்தால் தானே மற்றவர்கள் அனுபவிக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும்… இல்லையென்றால் இப்படித்தான் காந்தும்.
இருவரும் பைக்கில் சென்றனர். கோவளம் வழியாக ஈ.சி.ஆர் ரோட்டில் சென்ற போது… பெரிய பெரிய மாளிகைகள் கொண்ட வீடுகளைக் கடந்து, சாலை முடிவில் கடற்கரை வந்தது.
மிகவும் அமைதியான இடம். கூட்டம் மிகவும் குறைவு… அதனால் சுத்தமாகவும் இருந்தது.
இவர்கள் போல் இன்னும் சிலரும் குடும்பத்துடன் வந்திருந்தனர். சுமித்ரா தீனாவின் கையோடு கை கோர்த்தபடி அலையில் கால் நனைத்தாள்.
“ரொம்பச் சூப்பரா இருக்கு இந்த இடம்.”
“ம்ம்.. ஆமாம். ஆனா இங்க இருட்டுறதுக்கு அப்புறம் இருக்கிறது பாதுகாப்பு இல்லை.”
சொன்னது போல் இருட்ட ஆரம்பித்ததும், இருவரும் கிளம்பினார்கள். அந்தக் கடற்கரையை ஒட்டி ஒரு பெரிய பெருமாள் கோவில் இருந்தது.
“அங்க போயிட்டு போகலாமா?” சுமி கேட்க…. தீனா அந்தக் கோவிலை நோக்கி சென்றான்.
பெருமாள் மச்ச அவதாரத்தில் இருந்தார். இன்றைய நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் கோவில் இருந்தது. சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்த போது நன்றாகவே இருட்டி விட்டது.
இருவரும் வண்டியில் சிறிது தூரம்தான் வந்திருப்பர், ஒரு பைக் பழுதாகி நின்று கொண்டிருந்தது. அந்தத் தெருவே இருட்டாக இருந்ததால்…. வண்டியில் வந்தவர்கள் பதட்டமாக இருந்தனர். அவர்களும் இவர்களைப் போல் கணவன் மனைவிதான்.
தீனா அவன் வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு, என்னவென்று விசாரித்தான். பிறகு வண்டியில் இருந்து இறங்கி அவனே சரி பார்த்தான்.
பெட்ரோல் செல்லும் பைப்பில் தான் அடைப்பு இருந்தது. அதை அவன் சரி செய்து விட…. அவர்கள் தீனாவுக்கு நன்றி சொல்லி கிளம்பினர்.
அவர்கள் கிளம்பியதும் தான் தீனா சுமித்ரா எங்கே என்பது போல் பார்த்தான். அவள் அங்கே இல்லை… ஒரு நொடி மனதிற்குள் பகீரென்று ஆகிவிட்டது.
இதுவரை அவன் எதற்காகவும் இப்படிப் பயந்ததே இல்லை….. “சுமித்ரா….” குரலே அவ்வளவு சத்தமாக வந்தது.
“இங்க தாங்க இருக்கேன்.” என்றபடி ஓரமாக நிறுத்தியிருந்த அவன் வண்டியில் இருந்து சுமித்ரா குதித்தாள். அவளுக்கு நின்று நின்று கால் வலித்ததால்…. வண்டியில் உட்கார்ந்து இருந்தாள்.
அவள் அருகே சென்று, அவள் தலையில் கைவைத்து ஆட்டியவன், “ஒரு நிமிஷம் உயிரே போயிடுச்சு.” என்றான்.
கேட்ட சுமித்ராவுக்கு அவ்வளவு சந்தோஷம். அந்த அளவுக்குத் தன் கணவன் மனதில் தான் இடம் பிடித்திருக்கிறோமா என்ன? என்ற எண்ணமே வானில் அவளைப் பறக்க வைத்தது.
திரும்பும் போது பைக்கில், தன் கணவனின் அருகே நெருங்கி உட்கார்ந்து, “பார்த்த முதல் நாளே…” என்ற பாடலை வாய்க்குள் பாடிபடியே வந்தாள்.
அவ்வளவு சந்தோஷபட்டுக்காத என்பது போல் தீனாவின் நண்பன் அவனுக்காக வீட்டு வாயிலில் காத்து இருந்தான். இவன் செல்லவில்லை என்றால் அவர்கள் தேடி வராமல் இருப்பார்களா….
சுமித்ராவை வீட்டு வாயிலில் விட்டுவிட்டுத் தீனா செல்ல…. சுமித்ராவுக்குக் காத்து போன பலூன் போல் முகம் சுருங்கிவிட்டது. வீட்டிற்குச் செல்ல சோர்வாகப் படி ஏறினாள்.