Kaathirupenadi Kannammaa 12 9915 கண்டுகொண்டேன் காதலை அத்தியாயம் – 12 வீட்டிற்குச் சென்று சிறிது நேரம் குட்டி போட்ட பூனை போல் அறைக்குள் சுற்றிய தீனா, பிறகு மனதிற்குள் இருந்த குடைச்சல் தாங்காமல் சுமித்ராவை செல்லில் அழைத்தான். உறக்கத்தில் இருந்தவள், இந்த நேரத்தில் அதுவும் தீனா அழைக்கவும், செல்லை எடுத்துக் கொண்டு யாரும் இல்லாத இடமாகச் சென்று பேசினாள். “ஹலோ…” “ஹே ! என்னடி எவனைக் கேட்டாலும் என் பொண்டாட்டி மாசமா இருக்கான்னு சொல்றானுங்க. ஆனா நீ மட்டும் சொல்ல மாட்டேங்கிற….” “எனக்கும் அப்படிச் சொல்ல ஆசைதான். ஆனா அப்படி இருந்தா தான சொல்ல முடியும்.” “அதுதான் ஏன்னு கேட்கிறேன்.” “என்னைக் கேட்டா? நீங்கதான் சொல்லணும்.” “என்னை ஆம்பிளை இல்லைன்னு சொல்றியா?” “நான் அப்படிச் சொல்லலை…. குழந்தை கொடுக்கிறதுனால மட்டும் ஆம்பிளை ஆகிட முடியாது. தன்னுடைய பொண்டாட்டி பிள்ளைங்களை எந்தக் கஷ்ட்டதிலும் விடாம காப்பத்துறான் பாருங்க, அவன்தான் என்னைப் பொறுத்தவரை உண்மையான ஆம்பிளை…” “ஹே திமிராடி?” “திமிர் இல்லை உண்மைதான் சொல்றேன். உங்களுக்கு எதுக்குத் தீனா குழந்தை? அதை நீங்க அக்கறையா வளர்க்க போறீங்களா? என்னை எப்படி உங்க அப்பாகிட்ட கையேந்த வச்சு இருக்கீங்களோ….. அதே நிலைதான் நாளைக்கு உங்க பிள்ளைக்கும்.” “இப்ப நீ ஏன் தேவை இல்லாதது எல்லாம் பேசிட்டு இருக்க?” “நீங்க ஆம்பிளைன்னு உலகத்துக்குக் காமிக்க உங்களுக்குக் குழந்தை வேணும். பாவம் ! ஆனா இல்லையே என்ன பண்றது? டாக்டர் கிட்ட போவோமா?” “என்கிட்டே குறை இருக்காது.” “சரி என்கிட்டே தான் குறைன்னு வச்சுக்கலாம். அப்படி இருந்தா என்ன பண்ணுவீங்க தீனா?” அவன் பதில் சொல்லவில்லை… அவளே தொடர்ந்தாள். “என்னை ஒதுக்கி வச்சிட்டு, என்னை மாதிரியே வசதி இல்லாத வீட்டுப் பெண்ணைக் கொடுக்க யாரவது இளிச்சவாயன் வருவாங்க. இன்னொரு கல்யாணம் பண்ணிப்பீங்க அப்படித்தானே…” “இப்ப ஏன் தேவை இல்லாதது எல்லாம் பேசுற?” “அப்படித்தான் நீங்க பண்ணுவீங்க எனக்குத் தெரியும். ஆனா எனக்குக் குழந்தை இல்லாதது சந்தோஷம்தான். அதுவும் பிறந்து கஷ்ட்டபடக் கூடாது.” “இப்ப உனக்கு இங்க என்ன டி கஷ்ட்டம்?” “ஒரு நாளாவது என்கிட்ட அன்பா பேசி இருக்கீங்களா…. இல்லை எங்கையாவது வெளிய அழைச்சிட்டு போய் இருக்கீங்களா…” “சரி அதுதான் இல்லை. வீட்லயாவது எனக்கு நிம்மதி இருக்கா… மளிகை சாமான் வாங்கனும்ன்னு சொன்னா, உங்க அப்பா இவ்வளவான்னு கேட்கிறார். புடவை கடைக்குப் போனா.. விலை கம்மியா எடுன்னு சொல்றார். உங்க அப்பாகிட்ட இருந்து இந்தப் பேச்செல்லாம் கேட்கணும்ன்னு எனக்குத் தேவையா….” “இனிமே இப்படிப் பேசக்கூடாதுன்னு நான் அவரைச் சொல்லி வைக்கிறேன்.” “அப்ப இனிமேயும் நீங்க இப்படித்தான் இருப்பீங்க. அவரைக் குறை சொல்லி என்ன ஆகப்போகுது. உங்க பொண்டாட்டி நீங்கதான் பார்த்துக்கணும்.” “என் அப்பா பணமும் என் பணம்தான். இந்த வீடு ஒன்னும் எங்க அப்பாவோடது இல்லை…. என் அம்மாவழி தாத்த வாங்கி கொடுத்தது. எனக்கு அந்த பணத்தை செலவு செய்ய உரிமை இல்லையா?” “எனக்கு அதெல்லாம் தெரியாது. ஒன்னு நீங்க பணம் தாங்க. இல்லைனா நான் வேலைக்குப் போய் என்னோட செலவை பார்த்துகிறேன். இனியும் என்னால அதெல்லாம் பொறுத்து போக முடியாது.” சுமித்ரா தீனாவோடு நேரில் கூட இவ்வளவு நேரம் பேசியது இல்லை. தீனாவுக்கு மண்டை காய்ந்தது. “சரி வை போன்னை…” என வைத்து விட்டான். சுமித்ரா பேசிவிட்டுத் திரும்பிய போது, அங்கே ஈஸ்வரியும் பாலாவும் நின்று கொண்டு இருந்தனர். அவர்களை எதிர்பார்க்காத சுமித்ரா திகைத்து விழிக்க….ஈஸ்வரி கண் கலங்கினார். சுமித்ராவாக எதுவும் சொல்லமாட்டாள் எனத் தெரிந்துதான், அவள் பேசுவதை இருவரும் நின்று கேட்டனர். “உன்னைக் கொண்டு போய் இப்படி ஒரு இடத்தில கொடுத்திட்டோமே….” “அதெல்லாம் ஒன்னும் இல்லை மா… சரி ஆகிடும்.” எனச் சுமித்ரா தன் தாயை தேற்றினாள். “நான் வந்து தீனா கிட்ட பேசட்டுமா….” பாலா கேட்க… “உங்களை அசிங்கமா திட்டுவார். அப்புறம் உங்களுக்கும் எனக்கும் உள்ள உறவும் முறிஞ்சிடும் பரவாயில்லையா… விடுங்க நான் பார்த்துகிறேன்.” தீனா அங்கே கடுப்பாக இருந்தான். கோபத்தில் கட்டிலில் இருந்து போர்வையை அவன் இழுக்க…. படுக்கைக்கு அடியில் சுமித்ரா மறைத்து வைத்திருந்த கருத்தடை மாத்திரைகளும் சேர்ந்து வந்து விழுந்தது. என்ன மாத்திரை எனப் புரியாமல் பார்த்தவனுக்கு, அதில் போட்டிருந்த படமே விளக்கமாகச் சொல்ல…. அவன் ரத்தம் கொதித்தது. உடனே சுமித்ராவை அழைத்தான். அவள் அப்போதுதான் அறையில் சென்று படுத்து இருந்தாள். திரும்ப எதற்கு அழைக்கிறான் என எரிச்சலாகப் போன்னை எடுத்து பேச… “எவ்வளவு திமிருடி உனக்கு. நீ மாத்திரை போட்டுக்கிட்டு… என்னை லூசு மாதிரி புலம்ப வச்சிருக்க இல்லை…” அவன் சொன்னதைக் கேட்டதும் சுமித்ராவுக்குத் தான் மாட்டிக் கொண்டோம் எனப் புரிந்து விட்டது. “நான் ஏன் அப்படிப் பண்ணேன்னு உங்களுக்குக் ஏற்கனவே காரணம் சொல்லிட்டேன் தீனா….” “என்னையே ஏமாத்துறியா…. இரு டி நாளைக்கு அங்க வந்து உனக்குக் கச்சேரி வச்சுகிறேன்.” என்று அவன் செல்லை வைத்து விட…அறையில் இருந்தவர்கள் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தனர். அவளது குடும்பம் மற்றும் சுபத்ராவின் கணவரும் மாமியாரும் அந்த அறையில் தான் இருந்தனர். அவள் அத்தை குடும்பங்கள் அடுத்த அறையில் இருந்தனர். சுமித்ரா தலையில் கைவைக்க… அவள் அருகில் வந்து உட்கார்ந்த ஈஸ்வரி, “என்ன ஆச்சு சுமி?” எனக் கேட்டதும், அவர் மடியில் படுத்தவள், குலுங்கி அழ ஆரம்பித்தாள். எல்லோருமே அதிர்ச்சியில் இருக்க… சுபத்ரா பயந்தே போய் விட்டாள். இப்படி எதற்கும் சுமித்ரா அழுது அவள் பார்த்ததே இல்லை…. ஆளாளுக்கு என்ன ஆச்சு என்று கேட்க… சுமித்ரா பதிலே சொல்லவில்லை…. சுந்தரம் சென்று பாலாவை அழைத்து வந்தார். “சுமி, இப்ப எதுக்கு அழற?” பாலா கேட்க.. உடனே எழுந்தவள், “நான் வீட்டுக்கு போகணும்.” எனத் தன் பையில் இரவு கலைந்த உடைகளை எடுத்து வைக்க ஆரம்பித்தாள். “இந்த நேரத்தில எதுக்குப் போற? காலையில கல்யாணம் வேற இருக்கு.” “தீனா என் மேல ரொம்பக் கோபமா இருக்காரு.” “இருந்தா இருந்திட்டு போகட்டும்.” “உங்களுக்கு என்னோட நிலைமை புரியாது. நான் இப்ப போகலைனா… நாளைக்குத் தீனா இங்க வந்து தகராறு பண்ணுவாரு. திலிப்க்கு தான் அசிங்கமா ஆகிடும்.” அப்போது கூடத் தன்னால் தன் தம்பிக்குப் பிரச்சனை வரக் கூடாது என்றுதான் நினைத்தாள். “என்ன நடந்துச்சு சொல்லு?” “ஒன்னும் இல்லை… நான் இப்ப வீட்டுக்கு போகணும்.” சுமித்ரா பிடிவாதமாக இருக்க… “சரி ஆனா நாங்களும் கூட வருவோம்.” என்றான் பாலா. “அவர் ஏற்கனவே கோபத்தில இருகாரு, இதுல நீங்க வேற வந்தா சண்டைதான் நடக்கும்.” “சரி பாலா வேண்டாம். நானும் அம்மாவும் வந்து விட்டுட்டு வரோம்.” என்ற சுந்தரம், திலிப்பை டாக்ஸிக்கு சொல்ல சொன்னார். அவர்கள் எல்லோரும் அறையில் இருந்து சென்ற பிறகு…. “எல்லாம் என்னால தான். எங்க அக்காவுக்கு முதல்ல கல்யாணம் நடந்திருந்தா இப்படியெல்லாம் நடந்திருக்காது.” எனச் சுபத்ரா அழுதாள். அதைப் பார்த்து அவள் கணவனுக்கும் மாமியாருக்கும் வருத்தமாக இருந்தது. “நாம தான் தேவையில்லாம இந்த இடத்தைச் சுமித்ராவுக்குச் சொல்லிட்டோமோ…” என மேகலாவுக்கு குற்ற உணர்வாக இருக்க… “அம்மா, நீங்களும் அவங்களோட போய்ட்டு வாங்க மா… நீங்க போய்க் கொஞ்சம் சமாதானமா பேசி விட்டுட்டு வாங்க மா …” என்று கார்த்திக் சொன்னதும், மேகலாவும் கிளம்பினார். டாக்ஸி வந்ததும், எல்லோரும் அதில் ஏறும் போது…. “அக்கா நீங்க காலையில கல்யாணத்துக்கு வந்துடுவீங்க தானே…” எனத் திலிப் கவலையாகக் கேட்க…. “எல்லாம் உன்னால தான்டா… பண்றதையும் பண்ணிட்டு, இப்ப வந்து ரொம்ப அக்கறையா கேட்கிறான்.” என ஈஸ்வரி எரிச்சலாகச் சொல்ல…. “வருவா…” என்றான் பாலா. காரில் ஜன்னல் வழியாகத் தெரிந்த காட்சிகள் எதுவும் சுமித்ராவின் மனதில் பதியவே இல்லை…. வீட்டிற்குப் போனால் என்ன நடக்குமோ எனக் கவலையாக இருந்தது. ஈஸ்வரி மெல்லிய குரலில் தனக்குத் தெரிந்தவற்றை மேகலாவிடம் சொல்ல…. “நாங்க பத்து வருஷம் முன்னாடி வரை அவங்க எரியவில தான் இருந்தோம். அப்ப பார்த்த வரை நல்ல குடும்பமாதான் தெரிஞ்சது.” “நான் அதை வச்சுதான் நல்ல இடம்ன்னு சொன்னேன். ஆனா உண்மையிலேயே அவங்க இப்படிபட்டவங்கன்னு எனக்குத் தெரியாது.” என்றார் மேகலா. இனி அதைப் பற்றிப் பேசி என்ன ஆகப் போகுது என நினைத்து ஈஸ்வரி மெளனமாக இருந்தார். கார் வீட்டு வாசலில் நிற்க… கேட் பூட்டு போட்டு பூட்டி இருந்தது. சுமித்ரா தீனாவை செல்லில் அழைத்தாள். அவன் உறங்காமல்தான் இருந்தான். ஆனால் செல்லை எடுக்கவில்லை. சுமித்ரா சிதம்பரத்தின் செல்லில் அழைத்துத் தான் கீழே இருப்பதாகச் சொல்ல… அவர் வந்து கேட்டை திறந்து விட்டார். அவர்கள் எல்லோரையும் அந்த நேரத்தில் பார்த்ததும் சிதம்பரம் சுதாரித்தார். “வாங்க, என்ன இந்த நேரத்தில வந்திருக்கீங்க?” என்றபடி அவர் கேட்டை திறக்க… “சுமித்ரா தான் வீட்டுக்கு போகணும்ன்னு சொன்னா… அதுதான் அவளை விட்டுட்டு போகலாம்ன்னு வந்தோம்.” என்றார் சுந்தரம். சுமித்ராவின் முகத்தைப் பார்த்தே எதோ சரியில்லை எனச் சிதம்பரத்துக்குப் புரிந்து விட்டது. “காலையில உங்க பையனுக்குக் கல்யாணம் ஆச்சே… நீங்க கிளம்புங்க நாங்க சுமித்ராவையும் கூடிட்டு நாளைக்குக் கல்யாணத்துக்கு வரோம்.” “இல்லை மாப்பிள்ளைகிட்ட ஒரு வார்த்தை சொல்லி விட்டுட்டு போறோம்.” ஈஸ்வரி சொல்ல… “அம்மா, அவர் தூங்கி இருப்பார். நீங்க கிளம்புங்க.” என்றாள் சுமித்ரா. ஈஸ்வரி கிளம்ப மனமில்லாமல் அவளைப் பார்க்க… “இருங்க வரேன்.” என்றவள், மாடிக்கு சென்று, அவர்கள் அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள். கதவு திறந்த சத்தத்தில் தீனா கண்திறந்து பார்க்க.. சுமித்ரா நிற்பதை பார்த்ததும் திகைத்துப் பின் அலட்சியமாகப் பார்த்தான். “அம்மா அப்பா வந்திருக்காங்க. ப்ளீஸ்… கொஞ்சம் வெளிய வந்திட்டு போங்களேன். அப்பத்தான் அவங்க நிம்மதியா போவாங்க.” சுமித்ரா சொல்ல… தீனா முதலில் போக வேண்டாம் என்றுதான் நினைத்தான், பிறகு என்ன நினைத்தானோ அவனே எழுந்து வந்தான். சுமித்ராவும் அவன் பின்னே கீழே இறங்கி சென்றாள். “உங்க பெண்ணை நான் ஒன்னும் பண்ண மாட்டேன், பயப்படாம போங்க.” தீனா சொல்ல…. ஈஸ்வரி சற்று நிம்மதி அடைந்தார். “காலையில கல்யாணத்துக்கு வந்திடுங்க.” எனச் சொல்லிவிட்டு அவர்கள் காரில் ஏற…. மேகலா மட்டும் காரில் ஏறாமல், “நான்தான் சுபத்ராவை ஒரு கல்யாணத்துல பார்த்திட்டுப் என் பையனுக்கு பெண் கேட்டேன். ஆனா நிறைய முறை சுமித்ராவை செய்யாம போயிட்டோமேன்னு நினைச்சிருக்கேன்.” “ரொம்ப அருமையான பொண்ணு… அதனாலதான் நீங்க தீனாவுக்குப் பெண் பார்ப்பது தெரிஞ்சதும் உங்களுக்குச் சொன்னேன். உங்களுக்குப் பெண் குழந்தை இல்லை… அதனால நீங்க அவளை உங்க பெண்ணைப் போலப் பார்த்துக்கணும்.” என்றவரின் குரல் நெகிழ்ந்திருக்க…. “நிச்சயமா… சுமித்ரா எனக்கும் பொண்ணு போலத்தான். ஆனா அதுதான் எங்களை வித்தியாசமா பார்க்குது. போகப் போகப் புரிஞ்சிக்கும்.” என்றார் சிதம்பரம். இந்த நள்ளிரவு நேரத்தில் வேறு என்ன பேச முடியும். சரி பிறகு பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து கிளம்பினர். கார் கிளம்பி சென்றதும், தீனாவும் சுமித்ராவும் மாடிக்கு ஏறினர். சிதம்பரம் கேட்டை பூட்டி விட்டு வந்தார். சுமித்ரா அறைக்குள் சென்றதும் மகனை தங்கள் அறைக்குக் கூப்பிட்ட சிதம்பரம், “தீனா, உன் பொண்டாட்டியை பார்த்தியா பஞ்சாயத்து பண்ண அவங்க வீட்டு ஆளுங்களைக் கூடிட்டு வந்திருக்கா….” என்றார். திலகா என்ன நடந்தது என விசாரிக்க.. சிதம்பரம் நடந்ததைச் சொல்ல… “இன்னைக்கு இந்த நேரத்தில வந்ததுனாலதான் நான் எதுவும் பேசலை… நாளைக்கு அவங்க வரட்டும், உங்க பெண்ணை நீங்களே கூடிட்டு போங்கன்னு சொல்றேன்.” எனத் தீனா கோபப்பட…. “தீனா கோபப்படாத, நாம பேசினா அவங்களும் பேசுவாங்க.” என்றார் திலகா. அவ என்ன பண்ணான்னு தெரியுமா? என மனதிற்குள் கொந்தளித்தவன், எதுவும் பேசாமல் நிற்க… “நீ படிப்பை முடிச்சதா சொல்லி இருக்கோம், மறந்துடாத. அதனால சின்னப் பிரச்சனையைப் பெரிசாக்காம பார்த்துக்கோ…. படிச்ச பொண்ணுன்னு திமிர் காட்றா போலிருக்கு, மத்தபடி வீட்டை நல்லத்தான் பார்த்துக்கிறா… ஒரு குழந்தை பிறந்திட்டா சரி ஆகிடும்.” தன் மனைவி சொல்வதை அமோதித்த சிதம்பரம் “சரி போய்ப் படு.” என்றார். தீனா எதோ யோசனையாக அறைக்குள் சென்ற போது… சுமித்ரா கட்டிலில் போர்வையை ஒழுங்காக விரித்துக் கொண்டு இருந்தாள். அவளையே பார்த்தபடி கட்டிலில் உட்கார்ந்தவன், “மாத்திரை போட்டுட்டியா?” எனக் கிண்டலாகக் கேட்க…. சுமித்ரா பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். “உன்னைத் தான் டி கேட்கிறேன்.” “அப்பவே போட்டுட்டேன்.” சுமித்ரா சொல்லிக் கூட முடிக்கவில்லை… கட்டிலில் இருந்து விரைந்து எழுந்தவன், அவள் தலைமுடியை சென்று அழுந்த பற்றி “என்ன சொன்ன?” என ஆத்திரமாக உலுக்க…….. அவளுக்கு வலித்த போதும், அவனைத் தைரியமாக நிமிர்ந்து பார்த்தா சுமித்ரா, “இத்தனை நாள் குடிச்சிட்டுதான் வந்தீங்க. இப்ப அடிக்கவும் ஆரம்பிச்சிடீங்களா?” என கேட்டதும், தீனா உடனே கையை எடுத்து விட்டான். “நீ பண்றது மட்டும் சரியா சுமி?” “இதுவரை உங்க பொண்டாட்டின்னு நீங்க எனக்கு என்ன செஞ்சிருக்கீங்க? அப்புறம் எந்த உரிமையில என்னை நீங்க கேள்வி கேட்குறீங்க?” கோபமாகப் பேசினால் அவளை அடக்கி விடலாம் என்ற தீனாவின் எண்ணம் தோற்க, கொஞ்சம் இறங்கி வந்தான். “எனக்குப் புரியவே இல்லைடி….. உனக்கு இங்க என்ன பிரச்சனை?… இங்க எல்லாமே இருக்கு.” “எல்லாமே இருக்கு, ஆனா என்னாலதான் உரிமை கொண்டாட முடியலை… நீங்க உங்க பொண்டாட்டியை மதிச்சாதானே மத்தவங்க மதிப்பாங்க.” “நான் இப்படித்தான். என்னால உட்கார்ந்து உன்னைக் கொஞ்சிட்டு எல்லாம் இருக்க முடியாது.” “இங்க யாரும் உங்களைக் கொஞ்சிட்டு இருக்கச் சொல்லலை.. உங்க கடமையைச் செய்ங்கன்னு தான் சொல்றேன். அதோட பொண்டாட்டியை கொஞ்சுறது ஒன்னும் கேவலமான விஷயம் இல்லை.” “ஓ…நான் என் கடமையைச் செய்யலை… ஆனா நீ மட்டும் உன் கடமையைச் செஞ்சியா?” தீனா அவளைக் கூர்மையாகப் பார்த்து கேட்க…. “நான் என்ன பண்ணேன்?” “ஏன் சுமி அப்படிப் பண்ண? உனக்கு என்னைப் பிடிக்கலைனா என்கிட்டே நேரா சொல்லி இருக்கணும். அதைவிட்டுட்டு என்னோட குழந்தை வேண்டாம்ன்னு மாத்திரை போட்டிருக்கக் கூடாது.” “யாரு சொன்னா உங்களை எனக்குப் பிடிக்காதுன்னு? எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும் தீனா… அதனாலதான் இப்படிப் பண்ணேன்.” “என்னைப் பிடிக்கிறவ செய்யிற வேலை மாதிரி இது தெரியலையே….” “நான் இந்த வீட்டை விட்டு போக எவ்வளவு நேரம் ஆகும்ன்னு நினைக்கிறீங்க? ஆனா நான் அப்படிப் பண்ணலை… என்னோட தீனாவோட மதிப்பு யார் முன்னாடியும் குறையக் கூடாதுன்னு தான் நான் அப்படிச் செய்யலை….” “ஆனா எனக்குக் குழந்தை மட்டும் பெத்துக் கொடுக்கக் கூடாதுன்னு நினைச்ச….” “அப்படி இல்லை… நம்ம குழந்தையை நீங்க உதாசீனப்படுத்தினா, அதைத் தாங்குற சக்தி எனக்கு இல்லை. நம்ம குழந்தைக்கு எல்லாம் நீங்கதான் செய்யணும். அந்தச் செலவையும் உங்க அப்பா செஞ்சா…. அது உங்களுக்குதான் ரொம்பக் கேவலம்.” “நீங்க கொஞ்சம் மாறின பிறகு குழந்தை பெத்துக்கலாம்ன்னு நினைச்சேன். நம்ம குழந்தையை நாம ரொம்ப அன்பா பாசமா வளர்க்கணும்ன்னு நினைச்சேன், அதுல ஒன்னும் தப்பு இல்லையே….” “நான் மாறவே இல்லைனா நீ என்ன பண்ணுவ?” “எனக்குன்னு வாழ்க்கையில சில வரைமுறைகள் இருக்கு. ஒரு குடும்பம்னா கணவனும் மனைவியும் அன்பா இருக்கணும். கணவன் கொண்டு வந்து கொடுக்கிற பணத்துல மனைவி குடும்பம் நடத்தனும். நாமே சேர்த்து வச்சு நமக்குத் தேவையானதை வாங்கணும். இப்படி எனக்குன்னு சில எதிர்பார்ப்புகள் இருக்கு.” “எப்படி வேணா வாழ என்னால முடியாது. நான் இன்னும் கொஞ்சநாள் பார்ப்பேன். அப்பவும் நீங்க மாறலைனா நாம பிரியறதை தவிர வேறவழி இல்லை.” “நான் பொய்யா மாறிட்டேன்னு சொல்லி உன்னை ஏமாத்த முடியும் தெரியுமா…” “இன்னைக்கு நீங்க இவ்வளவு பொறுமையா பேசுறதுக்குக் காரணமே குடிக்காம இருக்கீங்க அதனாலதான். நாளைக்குக் குடிச்சதும், நீங்க வேற மாதிரி பேசுவீங்க. எனக்கு அதுவும் தெரியும்.” “உங்களை யாராலும் திருத்த முடியாது. உங்களைத் திருத்தவும் நான் வரலை… நீங்களா உங்க தவறை உணர்ந்து மாறனும்.” “மாறினா உங்களுக்கு, எனக்கு, நம்ம குடும்பத்துக்கு நல்லது. இல்லைனா உங்க ப்ரண்ட்ஸ் கூடச் சேர்ந்து இப்படியே வெட்டி பேச்சு பேசி உங்க வாழ்க்கையே முடிஞ்சு போகும்.” “இப்படி நீங்க வெட்டியா சுத்துறீங்களே… இதனால எதாவது கிடைக்கப் போகுதா? ஒருநாள் உங்க வாழ்க்கையைத் திரும்பி பார்த்து, நீங்க உங்க தவறை உணருவீங்க. ஆனா அப்ப உங்களை நேசிக்கிற யாரும் உங்களோட இருக்க மாட்டாங்க. போன காலமும் நேரமும் திரும்பி வராது.” “பிறகு நீங்க திருந்தி என்ன ப்ரோஜனம்?” “இன்னைக்கு உங்களுக்கு ஜால்ரா போடுறவங்க. உங்களுக்குக் கஷ்ட்டம்ன்னு வந்தா கூட இருப்பாங்களா?” “நான் சொல்றது சொல்லிட்டேன். இனி உங்க இஷ்டம்.” சுமித்ரா சென்று கட்டிலில் படுக்க… வெகு நேரம் வரை உறங்காமல் இருந்த தீனாவும் விடியும் நேரம் உறங்கினான். காலையில் சிதம்பரம் வந்து கதவை தட்டித்தான் இருவரும் எழுந்தனர். “எந்திரிச்சு கல்யாணத்துக்குக் கிளம்பிங்க.” வெளியே இருந்து சிதம்பரம் குரல் கொடுக்க…. சுமித்ரா தீனாவை பார்த்தாள். “கிளம்பு போயிட்டு வரலாம்.” அவன் சொன்னதும் அவள் அவனை ஆச்சர்யமாகப் பார்க்க… தீனா அவளைக் கண்டுகொள்ளாமல் சென்றான்.