வானம் – 13
அனுவுக்கு கையில் தையல் பிரித்து காயம் ஆறி இருந்தாலும் விரல்கள் இயல்புக்கு திரும்பவில்லை. பிசியோ பயிற்சிகள் செய்தும் பெரிதாய் பலனளிக்கவில்லை. அடுத்த முறை செக்கப் சென்றபோது இதை டாக்டரிடம் கூறினர்.
“மெயின் நரம்பை தையல் போட்டு ஜாயின்ட் பண்ணிட்டாலும் ரொம்ப குட்டியா இருக்கற உணர்வு நரம்புகள் சிலநேரம் இணைக்கப்படாம விட்டுப் போயிருக்கலாம்… மறுபடி ஒரு ஆப்பரேஷன் பண்ணி தான் சரி பண்ண முடியும்…” என்றனர்.
டாக்டர் சொன்னதைக் கேட்டதும் பரத் அதைப் பற்றி யோசிக்கத் தொடங்க இருக்கும் பணப் பிரச்சனையில் இது வேறயா என யோசித்த அனு “முதல்ல காயம் நல்லா காயட்டும்… மறுபடி கைல ஆப்பரேஷன் பண்ணி கட்டுப் போட்டுட்டு இருக்கறதெல்லாம் சரியா வராது… இப்பவே நான் வேலை செய்ய முடியலைன்னு அவங்களுக்கு கோபம் வருது… பிராக்டீஸ் பண்ணி சரி பண்ணிக்கலாம்…” என்று சொல்லிவிட்டாள். கொஞ்ச நாளாக பரத் தண்ணி அடிக்காமல் இருக்க அவளுக்கு அதுவே நிம்மதியாய் இருந்தது.
பரத்துக்கு அதற்குள் பாங்கில் இருந்து லோனுக்கு வட்டி கட்டாததால் நோட்டீஸ் வந்திருக்க தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தவனிடம் தாலி செயினை கழற்றிக் கொடுத்தாள் அனு. கொண்டு வந்த நகைகள் எல்லாம் போயிருக்க இறுதியாய் இருந்த தாலிச் செயினும் போனது.
சுரேஷ், மனைவி, மகனை மும்பை அழைத்து செல்வதற்கு ஊரிலிருந்து வருவதாக சொல்லி இருந்தான். அப்போது தொடங்கி நந்தினி கணவன் சுரேஷைப் பற்றி குற்றப் பத்திரிகை வாசிக்கத் தொடங்கினாள்.
“நான் ஊருக்குப் போக மாட்டேன்… அந்தக் குடிகாரன் ஆளும் சரியில்லை… அவன் நண்பர்களை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து வருகிறான்… தண்ணி அடிச்சிட்டு என்னை ஒரு மாதிரிப் பாக்குறாங்க… அவன்கிட்ட சொன்னா அப்படில்லாம் இல்லன்னு தட்டிக் கழிக்கிறார்… இவனே என்னைக் கூட்டிக் கொடுத்தாலும் கொடுப்பான்… நான் போக மாட்டேன்…” என்று ஏதேதோ அன்னையிடம் சொல்லி அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். முதலில் அவளை மறுத்துப் பேசிய அமிர்தவள்ளியும், மகளது அழுகையில் கரைய மருமகன் மீது கோபத்தை வளர்த்துக் கொண்டார்.
சுரேஷ் வீட்டுக்கு வந்தபோது இரண்டு நாள் அமைதியாய் கழிய மூன்றாவது நாள் மும்பை செல்வதைப் பற்றி பேச்சு வரவும் அவள் அங்கே வர முடியாது என்று அவனது குற்றங்களைப் பட்டியலிடத் தொடங்க முதலில் சுரேஷ் திகைத்துப் போனாலும் பிறகு நயமாய் பேசிப் பார்த்தான்.
“நான் இந்த ஊருக்கே வந்திடறேன்… இங்கயே எதாச்சும் வேலை பார்த்துக்கறேன்… என் அம்மா, ரெண்டு அண்ணன்கள் எல்லாம் இங்க தானே இருக்காங்க… நாம அவங்களோட இருக்கலாம்…” என்றெல்லாம் சொல்லிப் பார்த்தும் நந்தினி எதற்கும் மசியவில்லை. பரத்துக்கு அன்னை விஷயத்தை சொல்ல அவனும் பேசிப் பார்த்தான்.
“அவர்தான் இங்கயே வந்திடறேன்னு சொல்லுறாரே, அப்புறம் ஏன் ஒத்துக்க மாட்டேங்கற…” என்றதும், “எனக்கு அவனோட வாழப் பிடிக்கல… நாங்க இங்க இருக்கறது உங்களுக்குப் பிடிக்கலைனா சொல்லிடு… விஷம் குடிச்சு செத்துப் போயிடறேன்…” என்று மிரட்டலாய் சொல்லவும் திகைத்துப் போன பரத்தும், தம்பியும் பிறகு எதுவும் சொல்லவில்லை.
கோபப்பட்டால் சரியாகாது என்று பக்குவமாய் எடுத்து சொல்லியும் கேட்காமல் மறுத்துவிட்டாள். சுரேஷ் மீண்டும் மும்பை செல்ல விருப்பமில்லாமல் அவர்களின் குடும்ப வீட்டில் அண்ணன் குடும்பத்துடனே தங்கி விட்டான்.
எப்போதாவது குழந்தைகளுக்கு ஸ்நேக்ஸ் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து பார்த்து செல்வான். பிறகு நந்தினி முகம் கொடுத்துப் பேசக் கூட மறுக்கவும் அவனுக்கும் வரத் தயக்கமாய் இருந்தது. அவனது இங்கே உள்ள அண்ணன்கள், மும்பையில் உள்ள சகோதரிகள் எல்லாம் வந்து பேசியும் வீம்பு பிடித்து போக மறுத்தாள் நந்தினி.
இவர்கள் இல்லாமல் மும்பை போக விரும்பாமல் இங்கேயே ஒரு பத்திரிகை ஆபீசில் வேலைக்கு சேர்ந்துவிட்டான். நாட்கள் அதன் பாட்டில் நகரத் தொடங்கியது. அஸ்வினை அருகே உள்ள சென்ட்ரல் சிலபஸ் ஸ்கூலில் LKG சேர்த்தினர். தன்யாவுக்கும் ரெண்டரை வயது ஆகியிருந்தது.
“அனு… ஆபீஸ்ல எல்லாரும் ஒரு பாமிலி டிரிப் பிளான் பண்ணிட்டு இருக்காங்க… நாமளும் போகலாமா…”
“இருக்கற கடன்ல அதுக்கு வேற எதுக்குங்க செலவு… அத்தையும், அக்காவும் போன டைம் டூர் போயிட்டு வந்தப்ப பண்ணின பிரச்னை பத்தாதா…”
“அவங்களைப் போக சொல்லு… கடன்லாம் முடிஞ்சுதான் நாம ஒவ்வொண்ணும் பண்ணனும்னா எப்பதான் வாழறது… கஷ்டப்பட்டு சம்பாதிச்சு எல்லாத்தையும் கடன் அடைக்க தானே செலவு பண்ணறேன்… நமக்காக சில ஆயிரம் செலவு பண்ணறது ஒண்ணும் தப்பில்லை…” என்றான் பரத்.
“இல்ல, வேண்டாங்க… அத்தை எதுவும் சொல்லுவாங்க…” அனுவுக்கு ஆசை இருந்தாலும் தயங்கினாள்.
“எப்பவும் பணம், பிரச்சனைன்னே வாழ்க்கை முடிஞ்சிரும் போல… கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண இப்படி எங்காச்சும் போகலாம்னா நீயே புரிஞ்சுக்க மாட்டேங்கற…” அவன் கடுப்புடன் சொல்லவும் அனு இறங்கி வந்தாள்.
“எனக்கு சந்தோசம் தான்… ஆனா அத்தை…”
“அதை நான் பார்த்துக்கறேன் அனு… அடுத்த தடவை அவங்களையும் கூட்டிட்டு ஒரு டூர் போயிட்டு வரலாம்…”
“ம்ம்… சரிங்க…” என்றாள் அரை மனதுடன். கிளம்புவது பற்றி சொன்னதுமே அமிர்தவள்ளியின் முகம் மாறியது.
அதைக் கண்டுகொள்ளாமல் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு அவர்கள் கிளம்ப, அம்மா, மகள் முகத்தில் அனல் பறந்தது. இந்த முறை கர்நாடகாவில் குடகு மலை, தலைக்காவேரி, திபெத் தங்கக் கோவில், மைசூரு அரண்மனை என்று பிளான் பண்ணி இருந்தனர்.  பனி படர்ந்த காடுகளும், மலை முகடுகளும், பச்சைப் பசேலென பள்ளத்தாக்குகளும், மணம் கமழும் காபி, தேயிலை, பழத் தோட்டங்களும் அழகான நீர்வீழ்ச்சிகளும் அமைந்துள்ள இடம் தான் குடகு. இந்தியாவின் ஸ்காட்லாந்து என்றும் இதை சொல்வார்கள். இந்தக் குடகு மலையில் தான் தலைக்காவிரி என்னும் இடத்தில் காவிரி ஆறு உற்பத்தியாகிறது. அழகான கோவிலுடன் சுற்றிலும் பனி படர்ந்த கண்ணைக் கவரும் இயற்கை அழகுக்கு மத்தியில் கவரம்மா தேவி கோவிலில் வீற்றிருக்கிறாள்.
கண்கள் விரிய அங்கே கொட்டிக் கிடந்த இயற்கை அழகை அதிசயமாய் பார்த்து நின்றாள் அனு. இடுப்பில் தன்யா சமத்தாய் அமர்ந்திருந்தாள். தேவியைக் கும்பிட்டு காவிரி நீரைத் தீர்த்தமாய் தலையில் தெளித்துக் கொண்டு மேலிருந்து கீழே விரிந்து பரந்து கிடக்கும் அழகுக் காட்சிகளைப் பார்த்து நின்றனர். 
“அழகாருக்குல்ல அனு…” அவள் தோளைப் பற்றியபடி நின்ற பரத் மகளை வாங்கிக் கொண்டான்.
“ம்ம்… ஆமா பரத்… வேற ஏதோ உலகத்துக்கு வந்துட்ட போல மனசு ரொம்பவும் ரிலாக்ஸா இருக்கு…”
“ம்ம்… வா… போட்டோ எடுத்துக்குவோம்…” என்றவன் அவர்களை நிற்க வைத்து நண்பனிடம் காமிராவைக் கொடுத்து எடுக்க சொன்னான். அங்கே சிறிது நேரம் சுற்றி அடித்துவிட்டு கிளம்பினர்.
அடுத்து கோல்டன் டெம்பிள் என்று சொல்லப்படும் தங்கக் கோவில் மடாலயத்துக்கு சென்றனர். சூரியனின் ஒளிபட்டு தங்கமாய் ஜொலித்துக் கொண்டிருந்தது. பிரமிப்பில் விரிந்த விழிகள் அங்கிருந்து கிளம்பும் வரை தொடர்ந்தது. மடாலயத்தின் நுழைவாயில் முன்பு மலைப்பாம்பு போல் நீண்டிருக்கும் அமைதியான மைதானம், அதன் முடிவில் ஓங்கி உயர்ந்து நிற்கும் வண்ண மடாலயம். அதை ஒட்டி அமைந்திருந்த துறவிகளுக்கான குடியிருப்புகளில் சிவப்பு அங்கிகள் காற்றில் ஆடிக் கொண்டிருந்தன. வான் கோழி, வாத்து, முயல்கள் துள்ளிக் கொண்டிருக்கும் பச்சைப் புல்வெளிகளைக் கடந்து மடாலயத்துக்குள் நுழைந்தனர்.
தன்யா, “ம்மா… கோயி…” உற்சாகத்துடன் சொன்னவள் அதை வேடிக்கை பார்க்க பரத்தின் கை பிடித்து உள்ளே சென்றாள். அங்கே அமைந்திருந்த பிரம்மாண்டத்தில் அதிசயித்து கண்கள் விரிய ஆச்சர்யத்துடன் பார்த்து நின்றாள் அனு.
“வாவ்… சூப்பர்….” வாய்விட்டு சொன்னவளை நோக்கிப் புன்னகைத்த பரத் அவள் கையைப் பற்றி முன்னே நடந்தான்.
அடித்தளம், தூண், கூரை, கதவு, கைப்பிடி, சுவர் ஓவியம் என்று மடாலயத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் திபெத்திய கட்டடக்கலை மிளிர்ந்தது. திபெத்திய எழுத்துகள் பொறிக்கப்பட்ட பெரிய மணியை சில சுற்றுலாப் பயணிகள் ஆட்டி நகர்த்திப் பார்த்துவிட்டு போட்டோ எடுக்க, இவர்களும் அங்கே நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர்.
வாசலில் காலணிகளை விட்டுவிட்டு படிக்கட்டுகளில் ஏறினால் திபெத் கண் முன்னே விரிந்தது. முகப்பில் ஒரு துறவி அமர்ந்திருக்க அவர் முன்னில் இருந்த பெரிய வெண்கல முரசை அவர் விதவிதமாய் இசைக்கத் தொடங்கினார். அதைக் கேட்டதும் நாலாபுறத்தில் இருந்தும் துறவிகள் திரண்டு வந்தனர். சின்ன வயது முதல் பொக்கை வாய் தாத்தா வரை அதில் இருந்தார்கள். அவர்களை வியப்புடன் இவர்கள் நோக்கி நிற்க வழிபாடு தொடங்கியது.  அவர்களை எட்டி நின்று பார்க்கலாமே ஒழிய அருகில் செல்ல அனுமதி இல்லை. கருஞ்சிவப்பு, இளமஞ்சள் நிறத்தில் ஆடை உடுத்தியிருந்த நூற்றுக்கணக்கான துறவிகள் நீளமான வரிசைகளில் சம்மணமிட்டு அமர்ந்தனர். எதிரில் பிரம்மாண்டமாய் தங்கத்தில் ஜொலிக்கும் புத்தர். திபெத் மொழியில் அச்சிடப்பட்ட தொழுகைப் புத்தகம் ஒவ்வொருவரின் முன்னிலும் விரிந்து கிடக்க சிறு இடைவெளியுடன் ஓதுதல் ஆரம்பமாக ஆளுயர ட்ரம்பட்டை இரு துறவிகள் அவ்வப்போது இசைத்தனர். அரை மணி நேரம் தொழுகை நடைபெற்றது.