கண்டுகொண்டேன் காதலை
அத்தியாயம் – 8
மறுநாள் மாலையில் சுமித்ரா புதுப் பள்ளி கட்டிடத்திற்குக் கலாவதியை சந்திக்கச் சென்றாள். அப்போது பிரேமும் அங்கேதான் இருந்தான்.
கலாவதி அவளைக் கேள்வியாகப் பார்க்க… சுமித்ரா எடுத்ததும் நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.
“மேடம், எனக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கு. இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம்.” சுமித்ரா மகிழ்ச்சியாகச் சொல்ல… கேட்ட கலாவதியின் முகம் மலர… ப்ரேமின் முகமோ இருண்டது.
கலாவதி ஆவலாக அவளிடம் மாப்பிள்ளையைப் பற்றி விசாரித்தார். சுமித்ரா தனக்குத் தெரிந்த அளவில் சொல்ல…
“மாப்பிள்ளை இருக்கிறது பல்லாவரத்தில… அப்ப நீ அங்க இருந்து எப்படி வேலைக்கு வருவ சுமித்ரா?”
“அதுதான் மேடம் சொல்ல வந்தேன். என்னால வேலைக்கு வர முடியாது. இந்த மாசத்தோட வேலையை விட்டு நின்னுகிறேன். உங்களுக்கு அதுக்குள்ள வேற ஒரு டீச்சர் கிடைப்பாங்க இல்லையா….”
“கிடைக்கலாம் சுமித்ரா, ஆனா உன்னை மாதிரி ஒரு டீச்சர் எனக்கு எப்பவுமே கிடைக்க மாட்டாங்க.” என்ற கலாவதியின் குரல் நெகிழ்ச்சியாக இருக்க….
“அதெல்லாம் கிடைப்பாங்க மேடம்.” எனப் புன்னகையுடன் சொன்ன சுமித்ரா எழுந்துகொள்ள… கலாவதியும் அவளோடு பேசியபடி வெளியே வரை சென்றார்.
அவர் திரும்பி உள்ளே வந்த போது… ப்ரேம் தலையைக் கைகளில் தாங்கியபடி அமர்ந்து இருந்தான்.
கலாவதி உள்ளே வந்ததும் நிமிர்ந்து பார்த்தவன், “இப்ப உங்களுக்குச் சந்தோஷமா…இதுக்குத்தானே அந்தப் பெண்ணைப் போட்டு இவ்வளவு பாடுபடுத்துனீங்க.” என்றான் குத்தலாக….
ஏற்கனவே குற்ற உணர்வில் இருந்த கலாவதி மேலும் கலங்கினார்.
“பணதுக்காகவும் அந்தஸ்த்துக்காகவும் தான இதெல்லாம். ஆனா அதே பணத்தையோ அந்தஸ்த்தையோ வச்சு ஒரு பொண்ணு மனசுல இடம் பிடிக்க முடியாது.”
“உங்க சித்திகிட்ட இந்த விஷயத்தைச் சொல்லிடுங்க, ரொம்பச் சந்தோஷப்படுவாங்க.” என்ற ப்ரேம் எழுந்து செல்ல… கலாவதி வருத்தமாக இருந்தார்.
மாலை வீட்டிற்கு வந்த சுமித்ராவை ஈஸ்வரி பரபரப்பாக் வரவேற்றார்.
“மாப்பிள்ளை எத்தனை தடவை போன் பண்ணிட்டார். சீக்கிரம் முகம் கழுவிட்டு வந்து போன் பண்ணு.”
தான் வேலைக்குச் செல்வது அவனுக்குத் தெரியும் தானே… பிறகு ஏன் அழைத்தான் என வியந்தபடி சுமித்ரா முகம் கழுவி விட்டு வந்தவள், உடனே தீனாவை அழைத்தாள்.
“ஹலோ…”
“ஹலோ நான் சுமி, நீங்க போன் பண்ணதா அம்மா சொன்னாங்க.”
“ஹாய் சுமி எப்படி இருக்க?”
“ம்ம்… நல்லா இருக்கேன். எதுக்குப் போன் பண்ணீங்க?”
“எதாவது காரணம் இருந்தாத்தான் போன் பண்ணனுமா என்ன? சும்மா உன்னோட பேசலாம்ன்னு நினைச்சேன்.”
“ஓ… சரி சொல்லுங்க.”
“உனக்குன்னு தனிச் செல் இல்லையா…”
“நான் வேலை பார்க்கிற ஸ்கூல்ல எதாவது அவசரம்ன்னா மட்டும்தான் போன் பேசலாம். அங்க போன் எடுத்திட்டு போனாலும் வேஸ்ட் தான். அதுதான் நான் கொண்டு போறது இல்லை…”
“நீ இப்படிக் கஷ்ட்டப்பட்டு அந்த வேலைக்குப் போகனுமா… பேசாம வேலையை விட்டுடேன்.”
“போன் பேசலைனா என்ன கஷ்ட்டம்?”
“எனக்குக் கஷ்ட்டமா இருக்கே…”
தீனா சொன்னதைக் கேட்டு சுமித்ராவுக்குக் கொஞ்சம் மகிழ்ச்சியாகத் தான் இருந்தது. அவள் தனக்குள் சிரித்துக் கொண்டாள்.
“இன்னும் ஒரு மாசம் தான். அதுக்குப் பிறகு வீட்லதான் இருப்பேன். எப்ப வேணா போன் பேசலாம்.”
“அப்ப நீ இப்ப வேலையை விட மாட்ட… உனக்கு என்னை விட வேலைதான் முக்கியம்.”
“இல்லை அப்படியில்லை… ஆனா நான் திடிர்ன்னு வேலையை விட முடியாது. ஒரு மாசம் நோட்டீஸ் கொடுக்கணும்.”
“பெரிய கம்பெனியில வேலை பார்க்கிற மாதிரி சொல்ற… சின்ன ஸ்கூல் தான…. சம்பளத்தைப் பிடிச்சா பிடிச்சிகட்டும்.”
“சின்ன ஸ்கூல்லா இருந்தாலும், அங்க சில ரூல்ஸ் இருக்கு. அதுபடி தான் நடக்க முடியும். அதோட அங்க நான் ஏழு வருஷம் வேலை பார்த்திருக்கேன். அப்படிச் சட்டுன்னு எல்லாம் வேலையை விட முடியாது.”
சுமித்ரா சொன்னதைக் கேட்டு தீனா அந்தப் பக்கம் கோபத்தில் பல்லைக் கடித்தான்.
“ஆமாம், உங்க ஆபீஸ்ல வேலை நேரத்தில போன் பேசினா ஒன்னும் சொல்ல மாட்டாங்களா…”
“எவனும் என்னைக் கேள்வி கேட்க முடியாது. அப்படிக் கேட்டா உன் வேலையே வேண்டாம் போடா ——ன்னு வேலையை விட்டு வந்திடுவேன்.”
தீனா கோபத்தில் உபயோகித்த கெட்ட வார்த்தையைக் கேட்டு சுமித்ரா முகத்தைச் சுளித்தாள். இப்போது எதற்கு இவ்வளவு கோபம் என்று அவளுக்குச் சுத்தமாகப் புரியவில்லை.
தீனா அப்படித்தான் அவன் நினைத்தது நடக்கவில்லை என்றால்… கோபத்தில் எக்குத்தப்பாகப் பேசி வைப்பான்.
“அப்புறம் அத்தை மாமா எப்படி இருக்காங்க?”
“நேத்து தான பார்த்த… அதுக்குள்ள ஒன்னும் ஆகலை நல்லத்தான் இருக்காங்க.”
இப்படி எதற்கு எடுத்தாலும் குதர்க்கமாகப் பேசினால்… அவளும் என்னத்தான் செய்வது? சுமித்ரா செய்வது அறியாமல் முழிக்க… நல்லவேளை தீனாவே பேச்சை முடித்துக் கொண்டான்.
“நான் வச்சிடுறேன்.”
“சரிங்க….” என்ற பதில் சுமித்ராவிடம் இருந்து வேகமாக வந்தது.
ஒரு தடவை பேசினதுக்கே கண்ணைக் கட்டுதே சாமி என நினைத்தவள், ஆனா இந்தச் சுபத்ரா கல்யாணத்துக்கு முன்னாடி போன் பேசும் போது, பேசிட்டே இருப்பாளே… அவளால மட்டும் எப்படி முடிந்தது? என வியந்தபடி சென்றாள்.
ஆனாலும் மறுநாள் பள்ளி முடிந்து வந்ததும் சுமித்ராவே அவனை அழைத்தாள்.
“என்ன?” அவனிடமிருந்து வெறும் ஒரு வார்த்தையில் கேள்வி வர….
“சும்மாத்தான் போன் பண்ணேன்.” என்றாள் சுமித்ரா.
“நான் என் ப்ரண்ட்ஸ் கூடப் பேசிட்டு இருக்கேன். பிறகு பேசுறேன்.” என வைத்தே விட்டான்.
நேத்து எதோ போன் பேச முடியலைன்னு ரொம்பப் பீல் பண்ணாங்க. இன்னைக்கு நாமே போன் செஞ்சும் கொஞ்ச நேரம் கூடப் பேசலையே…. என நினைத்தாள்.
அடுத்தடுத்த நாட்களில் தீனா அழைக்கவில்லை என்றாலும், சுமித்ரா அவனை அழைத்துப் பேச.. முதலில் முறுக்கினாலும் பிறகு அவனுமே அவளிடம் நன்றாகத்தான் பேசினான்.
தினமும் பள்ளிக்கு சென்று வருவது, மாலையில் தீனாவுடன் பேசுவது எனச் சுமித்ராவின் நாட்கள் செல்ல… அவளுக்கு வீட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
தீனாவின் அப்பா சிதம்பரம் திருமண வேலையாக அடிக்கடி இவர்கள் வீட்டிற்கு வந்து செல்வார். வரும் போது எல்லாம் பெரிதாகப் பந்தா பண்ணிக் கொள்வார்.
ஒருமுறை அப்படி வந்திருந்த போது… “உங்க பொண்ணுக்கு நீங்க என்ன கம்மியாவா செஞ்சிட போறீங்க? ஏற்கனவே ஒரு பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணி இருக்கீங்க, பையன் வேற நல்ல வேலையில இருக்கான்.” எனப் பேச்சு வாக்கில் சொல்வது போல் சொல்லிவிட்டு சென்றார்.
இவர்கள் சுமித்ராவுக்கு எதுவும் செய்யாமல் இருக்கப் போவது இல்லை… இருந்தாலும், மாப்பிள்ளை வீட்டில் இவர்கள் நன்றாகச் செய்வார்கள் என எதிர்பார்க்கும் போது…. அப்படித்தானே செய்ய வேண்டும். இப்போது பணத்துக்கு என்ன செய்வது என ஈஸ்வரிக்குக் கவலையாகிவிட்டது.
அவர் பாலாவை அழைத்து யோசனை கேட்டார். அவன் நேராக வீட்டிற்கே வந்துவிட்டான்.
“இந்த வீட்டை பேங்க்ல அடமானம் வைப்போமா பாலா… ஆனா சுமித்ராவுக்கு மட்டும் இது தெரியக்கூடாது. அவளுக்குத் தெரிஞ்சா கல்யாணமே வேண்டாம்ன்னு சொல்லுவா….”
“இருக்கிற வீட்டை அடமானம் வச்சிட்டு அதை எப்படி மீட்பீங்க? உங்களுக்கு நியாபகம் இருக்கா அத்தை, ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ஊருக்கு வெளிய ஒரு இடம் வாங்கிப் போட்டீங்களே…. அதை வேணா விக்கலாம்.”
“ஆமாம் பாலா, நீ சொன்னதும் தான் அது நியாபகமே வருது. அப்ப நாற்பதாயிரத்துக்கு வாங்கினோம். ஆனா அந்த இடம் ரொம்ப வருஷமா அப்படியேத்தான் இருக்கு. இப்ப யாரும் அதை வாங்குவாங்களா என்ன?”
“நீங்க பத்திரத்தை எடுத்துக் கொடுங்க. நான் போய் விசாரிச்சிட்டு வரேன்.”
பத்திரத்தை தேடி எடுத்துக் கொண்டு வந்த ஈஸ்வரி, “என்ன விலை போனாலும் கொடுத்திடலாம் பாலா.” எனச் சொல்லியே அனுப்பினார்.
மறுநாள் வந்த பாலா, “இப்ப அந்த இடம் நாலு லட்சம் போகுதாம் அத்தை. நான் ரியல் எஸ்டேட் ஆளுங்க கிட்ட சொல்லி வச்சிருக்கேன். ரெண்டு நாள் பார்ப்போம். இல்லைனா வேற வழியில்லை திலிப்கிட்டத்தான் கேட்கணும்.”
“அவன்கிட்ட அவ்வளவு பணம் இருக்குமா பாலா…”
“பணம் இருக்காதுதான். ஆனா அவன் லோன் போட முடியும்.”
“ஆனா அவன் கொடுப்பானா… இப்ப வரை அக்கா கல்யாணத்துக்கு எதாவது வேணுமான்னு கூட அவன் கேட்கலை…. அவன் இப்படி இருப்பான்னு நான் நினைச்சு கூடப் பார்க்கலை.”
“அவன் கண்டிப்பா கொடுத்துத்தான் ஆகணும். நான் பார்த்துகிறேன்.”
“அவன் லோன் போட்டு கொடுத்தா…. எங்களுக்கு அவன் மாசம் தரும் பணத்தை வேணா நிறுத்திக்கச் சொல்லு….” என ஈஸ்வரி சொல்ல…
சொந்த அக்காவுக்குக் கல்யாணம் செய்ய உடன்பிறந்த தம்பியிடமே பேச வேண்டியது இருக்கிறதே என நினைத்து பாலா ஒரு பெருமூச்சு விட்டபடி அங்கிருந்து சென்றான்.
ஆனால் அடுத்த இரண்டு தினத்தில் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்தான். “அத்தை அந்த இடத்தை வாங்க ஆள் கிடைச்சிட்டாங்க. ஆனா நாலு லட்ச்சதுக்கு ஒரு இருபதாயிரம் கம்மியா கேட்கிறாங்க.”
“பரவாயில்லை பாலா, இவ்வளவு கிடைக்கிறதே பெரிசு.”
“நாளைக்கு அட்வான்ஸ் தர்றாங்க. அடுத்த வாரம் பத்திர பதிவு வச்சுக்கலாம்.”
“ஹப்பா ! இப்பத்தான் சந்தோஷமா இருக்கு. உங்க மாமாகிட்ட முதல்ல சொல்றேன்.”
பத்திர பதிவுக்கு முன்தினம் தான் சுமித்ராவுக்கு விஷயம் சொல்லப்பட்டது. அவளுக்கும் மகிழ்ச்சி தான். ஆனால் மொத்த பணமும் அவளது கல்யாணத்துக்கு என்பதைத்தான் அவளால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.
எவ்வளவு நாள் சுந்தரத்தால் வேலை பார்க்க முடியும். அவர் பெயரில் ஒரு தொகை பாங்கில் வட்டி வருவது போல் செய்யவேண்டும் என அவள் சொல்ல….அதை அவள் பெற்றோர் ஒத்துக் கொள்ளவில்லை.
“சுபத்ராவுக்குச் செஞ்சது போல… எங்க உனக்குச் செய்ய முடியாம போயிடுமோன்னு நாங்க ரொம்பக் கவலைப்பட்டோம். ஆனா பாலா புண்ணியத்துல….. இப்ப உன் கல்யாணமும் சிறப்பா நடக்கப் போகுது.”
“முதல்ல உன் கல்யாணத்தை முடிப்போம். பிறகு அதை எல்லாம் யோசிக்கலாம். எங்களுக்குத் திலிப் வேற மாசாமாசம் பணம் கொடுக்கிறான். சொந்த வீடு இருக்கு. வாடகை செலவும் இல்லை. எங்களுக்கு வேற என்ன செலவு இருக்கு?”
ஈஸ்வரி என்ன சொன்னபோதும், சுமித்ரா மனம் சமாதானம் அடையவில்லை… அவள் கவலையாக இருக்க…
“இங்க பாரு சுமித்ரா, நீயும் கல்யாணம் ஆகி போயிட்டா… நானும் உங்க அப்பா மட்டும்தான். உங்க அப்பா சம்பாதிகிறதே… எங்களுக்குத் தாராளமா போதும், அதனால திலிப் கொடுக்கிறதை நான் சேர்த்து தான் வைக்கப் போறேன். நீ எங்களை நினைச்சு கவலைப்படாதே…” என்றார் ஈஸ்வரி.
இடம் விற்றுப் பணம் கைக்கு வந்ததும் திருமண வேலைகள் வேகமாக நடந்தது. ஏற்கனவே பத்து பவுன் நகை இருந்தது.
சுமித்ராவின் கடைசி வேலை தினத்தன்று, பள்ளியில் கலாவதி அவளுக்கு ஒரு பிரிவு உபச்சார விழா ஏற்பாடு செய்திருந்தார். ஆசிரியர் மாணவர்கள் என இருதரப்பும் அந்த விழாவில் கலந்து கொண்டனர்.
சுமித்ரா இதை நிச்சயமாக எதிர்பார்த்திருக்கவில்லை… கலாவதி அவளை மிகவும் புகழ்ந்து பேசினார். பதிலுக்குச் சுமித்ராவும் அவர் இத்தனை நாள் செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்தாள்.
மாணவர்கள் அவர்களால் முடிந்த சிறிய பூங்கொத்து, வாழ்த்து அட்டை, சாக்லேட் எனக் கொண்டுவந்து கொடுத்து அவளைச் சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்தனர்.
மாலையில் கைநிறைய பரிசுகளோடும், மனம் நிறையச் சந்தோஷத்தோடும் சுமித்ரா வீடு திரும்பினாள். தினமும் பள்ளி செல்பவளுக்கு மறுநாளில் இருந்து வீட்டில் இருக்கவே கஷ்ட்டமாக இருக்க… எதாவது வேலையை இழுத்துப் போட்டுச் செய்து கொண்டிருந்தாள்.
ஒவ்வொருமுறை நேரம் பார்க்கும் போதும், தான் இந்த நேரத்தில் பள்ளியில் இருந்தால்… என்ன செய்துகொண்டிருப்போம் என்றே எண்ணத் தோன்றியது.
கலாவதிக்கு சுமித்ராவின் பெற்றோர் சென்று பத்திரிக்கை வைத்து விட்டு வர… பள்ளி ஆசிரியர்களுக்குப் பத்திரிகை வைக்கச் சுமித்ராவே சென்றாள்.
பள்ளி விடுவதற்குச் சிறிது நேரம் முன்பு சென்றவள், பள்ளி விட்டு ஆசிரியர்கள் வந்ததும், அவர்களுக்குத் தனித்தனியே பத்திரிகை கொடுத்தாள்.
வெகு நேரம் எல்லோரோடும் பேசிக்கொண்டிருந்தவள், அவர்கள் அனைவரும் கிளம்பியதும் கலாவதியின் அறைக்குச் சென்று, அவரிடம் பிரேம்க்கு என ஒரு பத்திரிகை கொடுக்க….
“அவன் இங்க இல்லை சுமித்ரா… திரும்ப வெளிநாட்டுக்கே போயிட்டான்.” என்றார் கலாவதி சோகமாக.
அவள் தனக்குத் திருமணம் நிச்சயம் ஆனதை சொன்ன நாளன்று அவனைப் பார்த்ததுதான். அதன்பிறகு அவனை அவள் பார்க்கவில்லை.
நன்றாகப் பழகிய மனிதர் சொல்லிக் கொள்ளாமலே சென்று விட்டாரே என வருத்தமாக இருந்தாலும், இதுவும் நல்லதிற்குத்தான் என நினைத்துக் கொண்டாள்.
திருமணம் சென்னையில் பெரிய மண்டபத்தில் நடந்தது. தீனா வீட்டினர் நன்றாகத் திருமணதிற்குச் செலவு செய்தனர். ஆனால் என்ன பெண் வீட்டினரை சிறிது கூட மதிக்கவில்லை.
தீனா கூட அப்படித்தான். அவன் நண்பர்கள் மேடைக்கு வந்தால் சிரித்துப் பேசுபவன், அதே சுமித்ராவின் பக்கம் யார் வந்தாலும், கண்டுகொள்ளவே மாட்டான். சுமித்ராவாக அறிமுகம் செய்தால்… ஒரு சிறு தலையசைப்பு மட்டுமே… ராஜபரம்பரை என்ற நினைப்பு போல….
தன் வீட்டினரை அலட்சியமாக நடத்துவதைப் பார்த்து சுமித்ராவுக்குக் கண் கலங்கிவிட்டது. அவள் சமாளித்துக் கொண்டு நிற்க… அதை மேடையின் கீழே இருந்து பார்த்த ஈஸ்வரிக்கு வருத்தமாக இருந்தது.
அப்போது அவர் அருகில் நின்ற பெண்மணி, “உங்களுக்குப் பெண் கொடுக்க வேற நல்ல இடம் கிடைக்கலையாமா…” எனக் கேட்டதும், ஈஸ்வரிக்கு மனதுக்குள் திக்கென்று இருக்க…
“ஏன் அப்படிச் சொல்றீங்க?” எனப் பயந்தபடி கேட்டார்.
“இவங்க குடும்பத்துல யாரையும் மதிக்கவே மாட்டாங்களே…அந்தக் குடும்பமே ஒரு விசித்திரமான குடும்பம். யாரையும் கிட்ட சேர்க்காது.” என்றார் அந்தப் பெண்மணி. இத்தனைக்கும் அவர் மாப்பிள்ளை வீடு தான்.
“என்னமா சொல்றீங்க?”
“அந்தப் பையனோட அம்மா இருக்காங்களே… அவங்க வசதியான குடும்பத்துல இருந்து வந்தவங்க. இப்ப இருக்கிற வீடே அந்த அம்மாவுக்குச் சீதனமா கொடுத்ததுதான். அதனால அது என்னவோ தான் மகாராணி போலவும், புருஷனை வேலைக்காரன் போலவும்தான் நடத்தும்.”
“கல்யாணம் ஆன புதுசுலேயே… அந்த அம்மா சட்டமா உட்கார்ந்திட்டு அந்த ஆளைத்தான் வேலை வாங்கும். இப்படியே உட்கார்ந்து உட்கார்ந்துதான் உடம்பு பெருத்து போய், மூட்டு வலி வந்து நடக்க முடியாம போயிடுச்சு.”
“பையன் நல்ல மாதிரி தான?”
“இந்தப் பையனுக்கு முன்னாடி ஒரு பையன் பிறந்து சின்ன வயசுலேயே இறந்து போயிடுச்சு… அதனால அடுத்து பிறந்த இந்தப் பையனுக்கு ஓவர் செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்காங்க.”
“காசு கொடுத்து இன்ஜினியரிங் படிக்கச் சேர்த்து விட்டாங்க. ஆனா அவன் படிப்பை முடிக்கக் கூட இல்லை….”
மாப்பிள்ளை படிப்பை கூட முடிக்கவில்லை என்றதும், ஈஸ்வரிக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
“அப்ப வேலை…” என அவர் இழுக்க…
“அதெல்லாம் வேலைக்குப் போறான். ஆனா என்ன ஒரு இடமா இருக்க மாட்டான். மாறிட்டே இருப்பான்.”
அந்தப் பெண்மணி சாப்பிட செல்ல… ஈஸ்வரி அங்கேயே ஒரு சேரில் சோர்ந்து போய் அமர்ந்துவிட்டார்.
கழுத்தில் புது மஞ்சள் தாலி மின்ன.. கல்யாணக்களையுடன் நின்ற மகளைப் பார்த்தவருக்கு, பக்கத்தில் நின்ற தீனாவை பார்க்க பார்க்க வயிறு எரிந்தது.
குணவதியான தனது மகளை இப்படிக் குணம் கெட்ட ஒரு குடும்பத்தில் கொடுத்துவிட்டோமே என நினைத்து மிகவும் வருந்தினார். இனி வருந்தி என்ன பயன்?