“டேய்… என்னடா? என்ன திடீர்னு?”, ஆராய்ச்சியாய் ஆதியைப் பார்த்தார்.
“எங்கிட்ட பேசறதுக்குக் கூட, தயங்கி ஆதி இப்ப உனக்கு டைம் இருக்குமான்னு பெர்மிஷன் கேட்டு பேசறாங்கப்பா அம்மா? ஏன்னு கேட்டதுக்கு அப்பாகிட்ட கேட்டு பழக்கமாயிடுச்சு, அதுவே உங்கிட்டயும் வருதுங்கறாங்க.”
அவர் புரியாமல் பார்க்கவும், “ அவங்க நம்ம கிட்ட பேசக்கூட தயங்கற அளவுலதான் இருக்காங்க. உங்களுக்கு கல்யாணம் ஆகி முப்பது வருஷம் ஆகப்போது. அப்ப உங்க கூட அவங்க எண்ணங்களை நினைச்சபோது சொல்லக்கூட உரிமையில்லாமத்தான் இருக்காங்க. அப்படித்தானே?”
“ஏய்..என்னடா என்னன்னவோ பேசற? அப்படியெல்லாம் இல்லை ஆதி. உங்கம்மா மேல எனக்கு எவ்வளவு பாசம்னு உனக்கும் தெரியும் அவளுக்கும் தெரியும். ஆபிஸ் டென்ஷன்ல இருப்பேன்னு என் மூட் பார்த்து கேட்டுட்டு பேசுவா. அதுக்காக வீட்டு விஷயத்தை பேசாம இருந்ததெல்லாம் இல்லை ஆதி.”
“அதைத்தான்பா நானும் சொல்றேன். வீட்டு சமாச்சாரம் தவிர, அவங்களுக்கு இன்னிக்கு நாள் எப்படி போச்சு? அவங்க பார்த்த ஒரு விஷயம், ஒரு நியூஸ் அப்படி அவங்களோட எண்ணங்களைப் பகிர்ந்துக்க அவங்களுக்கு நீங்க ஒரு ஸ்பேஸ் தரவேயில்லையேப்பா?”, ஆதி முயன்று குரலை இலகுவாக வைத்திருந்தாலும், அவனின் ஆற்றாமையை கண்டுகொண்டார் ப்ரபாகர்.
“என்ன திடீர்னு ஆதி? அம்மா எதுவும் சொன்னாளா?”
“ம்ச்… எனக்கு கல்யாணம் பத்தி பேச்சு வந்தது. ‘ஆதி, நீ உன் வேலை நேரத்தை குறைச்சி உனக்கு வரப்போறவளுக்கும் நேரம் ஒதுக்கற மாதிரி இருந்தா கல்யாணம் செய். இல்லாட்டி வேண்டாம். இன்னொரு சரஸ்வதி உருவாக விட மாட்டேன். தனிமை கொடுமைடா.’னு சொன்னாங்க. “ வேதனையோடு சொல்லி முடிக்க, ப்ரபாகர் திகைத்துப்போய் பார்த்துக்கொண்டிருந்தார்.
“ஆதி, அந்த வயசுல தொழிலை பார்க்க வேண்டியிருந்ததுடா. எங்கப்பாவும் அப்பத்தான் தவறினார். நான் தொழிலைப் பாப்பேனா, வீட்டை பாப்பேனா?”
“அப்ப சரிப்பா. இப்ப கூட தொழிலைத்தான பாக்கறீங்க?”
“உங்கம்மாவோட பேசறேன் ஆதி. அவளுக்கு நேரம் ஒதுக்கறேன். “, மகனிடம் இந்தப் பஞ்சாயத்து போனதே அவருக்குப் பிடிக்கவில்லை. என்றாலும் அதை மனைவியிடம் கேட்டுக்கொள்ளலாம் என்று பொறுமை காத்தார்.
“உங்களுக்கு முன்னாடி, உங்களை கேக்காமலேயே நான் சொன்னேன்பா. இனி அப்பாவை சாயந்திரம் சீக்கிரமா வீட்டுக்கு வர சொல்றேன்னு சொன்னதுக்கு…”, என்று இடைவெளி விடவும்.
“சொன்னதுக்கு? என்ன சொன்னா?”
“‘ஆபீஸ்ல அவ்வளவு வேலையை வெச்சிகிட்டு இங்க வந்து உட்கார்ந்திருக்கோம்னு அதுக்கும் எரிச்சல் படுவார், அதையும் எங்கிட்டத்தான் காட்டுவார். வேணாம்டா’,ன்னு சொலிட்டாங்க. உங்களுக்கு எப்படி இருக்கோ தெரியலைப்பா, ஆனா அவங்க அவ்வளவு சாதாரணமா சொன்னது என்னை பளார்னு அறைஞ்ச மாதிரி இருந்தது. “
“எங்கம்மாக்கு எவ்வளவு கஷ்டம் மனசுல? ஒண்ணுமே தெரியாம தண்டமா சுத்தி வந்திருக்கேன். அடி உதை மட்டுமில்லைப்பா இது கூட ஒரு வகை டார்ச்சர்தான். “, ஆதி சொல்வதைக் கேட்டு அதிர்ந்துபோய் அமர்ந்திருந்தார் ப்ரபாகர்.
“யோசிங்கப்பா. இத்தனையும் அம்மா எங்கிட்ட கம்ப்ளெய்ண்ட்டா சொல்லலை. இதுதான் என் வாழ்க்கைன்னு ஏத்துகிட்ட மாதிரிதான் பேசினாங்க. ஆனா இது தப்புன்னு எனக்கே புரியுது. எப்படி செஞ்ச, செய்யற தப்பை சரி பண்றதுன்னு நீங்கதான் யோசிக்கணும்.”, மெதுவாய் தலையாட்டி ஆமோதித்தார்.
“என் பங்குக்கு இப்பல்லாம் அம்மாவோட காலைல ரெண்டு மணி நேரம் கூட இருக்கேன். அவங்க பூஜை , சாமிக்கு அலங்காரம்னு வேலை பார்த்தாலும் எதாவது பேசிகிட்டு அவங்களை பேசவெச்சிகிட்டு இருக்கேன்.”
“ம்ஹூம்… உங்களால கண்டுபிடிக்க முடியுதானு பாருங்க. எனக்கு அது கம்ப்ளீட் சர்ப்ரைஸ். குட் நைட் பா. நான் சொன்னது பத்தி அம்மாகிட்ட சண்டை எதுவும் போடாதீங்கப்பா. அவங்க பேர்ல தப்பில்லை.”, ஆதி நிற்க,
“போடா. என் பொண்டாட்டிதான் . நான் பார்த்துக்குவேன்.”
ஆதி சென்றதும் முகம் கசங்க அமர்ந்திருந்தார் ப்ரபாகர். திட்டமிட்டெல்லாம் அவர் மனைவியை புறக்கணிக்கவில்லை. ஆனால் ஒரு பள்ளம் விழுந்ததுபோலத்தான் தோன்றுகிறது. இப்பொழுதெல்லாம், சரஸ்வதி அவருக்கு வேண்டியதை கவனித்து செய்வது போக, பெரிதாய் ஒன்றும் பேசுவதில்லை. உறவுகளின் விசேஷங்கள் பற்றி அல்லது முக்கியமான வீட்டு நிகழ்வுகள் என்று தேவைக்கான பேச்சுகள் மட்டுமே.
எப்போதிருந்து இந்த மாதிரி என்று யோசித்தவருக்கு கடைசியாக மனைவியோடு சாதாரணமாகப் பேசி சிரித்தது ஞாபகத்தில் வரவேயில்லை. எல்லா வகையிலும் மனைவி தனக்கான தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டிருந்தாள். ஆனால் அவளுக்கான தேவைகள் என்ன என்று கூட தான் கேட்டதில்லையோ என்று யோசிக்கத்தொடங்கினார்.
இந்தப் பிளவு நிரவக்கூடியதா, இல்லை மீள முடியாத அளவு அகலமாகிவிட்டதா என்று தெரியவில்லை. மனைவியிடம் பேச முடிவு செய்தவர், நேரத்தைப் பார்க்க நடு நிசியைத் தாண்டியிருந்தது. படுக்கயறைக்குச் செல்ல, சரஸ்வதி அமைதியான உறக்கத்திலிருந்தார். விடிவிளக்கின் ஓளியில், படுக்கையின் அருகிலிருந்த மேசையில் நாலாயிர திவ்யப் ப்ரபந்தம் எளிய உரை என்ற புத்தகம் இருந்தது. அதன் மேலே சரஸ்வதி சில வருடங்களாக படிக்கப் பயன்படுத்தும் மூக்குக் கண்ணாடி.
கண் டாக்டரிடம் கூட ஆதிதான் அழைத்துச் சென்றது நினைவுக்கு வந்து போனது. அவரால் வர முடியாதபடி என்ன தலை போகிற வேலை என்று ஞாபகம் இல்லை.
மறு நாள் அலுவலகம் செல்லப் போவதில்லை. மனைவியுடன் பேச வேண்டும் என்று தீர்மானித்துப் படுத்தவர், வழக்கமான நேரத்திற்கு எழுந்து பேப்பருடன் அமர்ந்தார்.
காப்பியுடன் வந்த மனைவியைப் பார்த்தவர், அதை வாங்கியபடி, “உக்கார் சரசு.”, என்றார்.
“என்னங்க சொல்லணும்?”, என்று கேட்ட சரசுவின் பார்வை பூஜையறை நோக்கிப் போவதைப் பார்த்தார்.
இயல்பாகப் பேசவும், புன்னகைத்துச் சென்றார் சரஸ்வதி. பூஜை முடிந்து வரவும், ஆதி ஜாகிங் முடித்து வரவும் சரியாக இருக்க, அவனுக்கு ஜூசைக் கொடுத்து படியே ஏதோ பேசிக்கொண்டிருந்தார். அம்மாவும் பிள்ளையும் அங்கே சாப்பாட்டு மேசையருகேயே அமர்ந்து அரட்டை அடிப்பதை பார்த்தும் பார்க்காமலும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார் ப்ரபாகர்.
அடுத்து காலை உணவுக்கு மேற்பார்வை என்று சமையலறைக்கு சரஸ்வதி செல்லவும், தான் கேட்டதை மறந்துவிட்டாளோ என்று பொருமியபடி குளிக்கச் சென்றார். சாப்பிட வேட்டி , டீ-சர்ட்டுடன் வரும் கணவரை அதிசயமாகப் பார்த்த சரஸ்வதி, காலண்டரைப் பார்க்க அது அன்று விடுமுறையில்லாத வார நாள்தான் என்பதை உறுதி செய்தது.
“என்னங்க? உடம்பு முடியலையா? ஆஃபிஸ் போகலையா?”, என்று கேட்ட சரஸ்வதியைப் பார்த்தவர்,
“நல்லாத்தான் இருக்கேன். இன்னிக்கு லீவ். எல்லாம் உன் மகன் பார்க்கட்டும்.”, என்றார்.
ஆதி அலுவலகம் செல்லக் கிளம்பி வந்தவன், இதைக் கேட்டதும், சிரித்தபடி, “மா, இன்னிக்கு புயல் மழை எதாச்சம் வருதா பாரு.”, என்று கிண்டலடித்தவாறே அமர்ந்தான்.
இருவருக்கும் உணவை பரிமாறியபடியே, மீண்டும் கணவரின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார் சரஸ்வதி. அன்று அவருக்காக ஆதி பார்க்க வேண்டிய வேலைகளை பட்டியலிட்டபடியே, மனைவி தன்னைப் பார்ப்பதில் சந்தோஷம் கொண்டார் ப்ரபாகர்.
மகன் கிளம்பியதும், சாப்பிட்டு வந்த சரஸ்வதி, “என்னங்க, எதுக்கு லீவ் போட்டிருக்கீங்க. என்ன பேசணும்?”, என்று வந்து அமர்ந்தார்.
“ஒண்ணும் இல்லை. சும்மாதான். உன் கூட இருக்கலாமேன்னு.”, ப்ரபாகர் இழுக்க, திகைத்துப் பார்த்தார் சரஸ்வதி. ‘என்ன திடீர்ன்னு ஞானோதயம்?’, என்று உள்ளுக்குள் எழுந்த கேள்வியை மறைத்தபடியே, அடுத்து என்ன சொல்வது என்று தெரியாமல் கணவரைப் பார்த்து முழித்தார் சரஸ்வதி.
“என்ன சரசு? நான் வீட்ல இருக்கேன்னு சொன்னா சந்தோஷப்படுவன்னு பார்த்தா, நீ இந்த முழி முழிக்கற?”
கடிகாரத்தைப் பார்த்த சரஸ்வதி, “இல்லங்க, நான் கிளாஸ் போகணும். முன்னாடியே தெரிஞ்சிருந்தா வரமாட்டேன்னு சொல்லிருப்பேன். இன்னிக்கு நான்தான் பேசறதா இருக்கு. போகலைன்னா நல்லா இருக்காது.”, ‘மனுஷன் வள்ளுன்னு விழப்போறார்,’ என்று நினைத்தபடியே இழுக்க,
“ஓ… நீ… உனக்கு வேலை இருக்கும்னு எதிர்பார்க்கலை. “, என்ற ப்ரபாகர்
“என்ன கிளாஸ், எப்ப முடியும்?”, என்று கேட்டார்.
“தமிழ் இலக்கியம் பத்தி, போன வருஷம் உங்ககிட்ட சொன்னேனே. வாரத்துல இரண்டு கிளாஸ். மூணு மணி நேரம். மதியம் ஒரு மணிக்கு வந்துடுவேன்.”
“ஓ… நீ எடுக்கப் போறியா? எதைப்பத்தி?”
“ஹ்ம்ம்… அது ஒவ்வொருத்தர் ஒரு வாரம் பேசுவோம். இன்னிக்கு நான். நாலாயிர திவ்யப் பரபந்தத்திலர்ந்து சில பாட்டுகளை பத்தி…”, ‘என்ன இவ்வளவு பொறுமையாக் கேட்கறார்?’, என்று யோசித்தபடியே பதிலளித்தார் சரஸ்வதி.
‘வேணும்டா உனக்கு. எத்தனை நாள் அவ உனக்காக காத்திருப்பா. இன்னிக்கு பத்து நிமிஷம் பேச நீ அரை நாள் உட்கார்ந்திருக்கணும். இரு.’, என்று நினைத்தவர், “சரி சரசு. நீ கிளம்பு. மதியம் சாப்பிட்டுட்டு பேசலாம். வேற எதுவும் வேலை இல்லையில்ல?”
“இல்லைங்க. அந்த நேரம் நான் படிக்கற நேரம்தான். பேசலாம். என்ன பேசணும்….?”, சரசுவிற்கு கொஞ்சம் பயம் எட்டிப் பார்த்தது. ‘என்னவோ சரியில்லையே, இவர் இவ்வளவு பொறுமையா இருக்காரே. என்னவும் வில்லங்கமா? இருந்தா ஆதி சொல்லியிருப்பானே. அவன் கல்யாணம் பத்தியா? அப்படின்னா சொல்லிருப்பாரே.’, எண்ணங்கள் பலவாறாக ஓட,
புன்னகையுடன், “ஒண்ணுமில்லை சரசு. உன்னோட உட்கார்ந்து பேசியே ரொம்ப நாளாச்சு. அதான் . நீ போயிட்டு வா. நான் அதுவரைக்கும் மெயில் பார்த்துகிட்டு இருக்கேன்.” கணவர் இணக்கமாகவே சொல்லவும், தலையசைத்தபடி சென்றார்.
ஆதியிடம் போன் செய்து கேட்கலாமா என்று யோசித்த சரஸ்வதி, வேண்டாம், எதுக்கு அவனை ஆபிசில் தொந்தரவு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தவராய், கிளம்பிச் சென்றார்.
மெயில் அனுப்பத் தொடங்கிய ஐந்தாவது நிமிடம் ஆதி ப்ரபாகரை அழைத்துவிட்டான்.
“அது என்னமோ தமிழ் இலக்கிய கிளாசாம். இன்னிக்கு இவ பேசணும், கான்சல் செய்ய முடியாதுன்னு சொல்லவும், போயிட்டு வான்னு அனுப்பிட்டேன். ஒரு மணிக்குத்தான் வருவாளாம்.”, மகனிடம் புகார் வாசிக்க, அந்தப் புறம் ஆதி பல்லைக் கடித்து,
“அவங்களைக் கொண்டு போய் நீங்க விட வேண்டியதுதானே? அம்மா பேசப் போறேன்ன்னு சொன்னாங்களே, நீ பேசறதைக் கேக்க நானும் வரட்டுமான்னு கேட்டிருக்கலாம் இல்ல? “
மகனின் கேள்வியில் ப்ரபாகர் முழித்தார்.
“தோணலைடா. என்ன பேசப்போறன்னு கேட்டதுக்கு, நாலாயிர திவ்யப் ப்ரபந்தம்ன்னு சொன்னா. அதைப் பத்தி எனக்கு என்ன தெரியும்?”