எந்தன் காதல் நீதானே

அத்தியாயம் 22 

மறுநாள் அதிகாலையே வெண்ணிலா எழுந்துகொள்ள, அவள் எழும் போதே ஜெய்யும் எழுந்து விட்டான். 


“இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தான.” என்ற கணவனின் கேள்வி காதில் விழாதது போல அவளது வேலைகளைப் பார்த்தவள், குளித்துவிட்டு கீழே சென்றுவிட்டாள். 

சிறிது நேரம் சென்று ஜெய் சென்றபோது, “ரெண்டு அத்தையும் கூடிட்டு போங்க மாமா. நானும் அகல்யாவும் பார்த்துக்கிறோம்.” என வெண்ணிலா சொல்லிக் கொண்டிருந்தாள். 

ஜெயராமன் யோசனையில் இருக்க, கணவன் வருவதைப் பார்த்ததும் வெண்ணிலா, அவனை நீயே சொல்லு எனப் பார்வையாலையே மிரட்ட, “அவதான் சொல்றாளே, நீங்க எல்லாம் கிளம்புங்க. நான் சாயங்காலம் சீக்கிரம் வந்து பார்த்துகிறேன்.” என்றான். 

“நீங்க என்ன பார்ப்பீங்க. நீங்க வந்து சமைப்பீங்களா?” என வெண்ணிலா வேண்டுமென்றே கேட்க, 

“கொழுப்பு டி உனக்கு. கொஞ்சம் விட்டா வாய் வங்காள விரிகுடா வரைக்கும் நீளும் போல…. உனக்கு நான் சமைக்க வேற செய்யணுமா? வேணா ஹோட்டல்ல வாங்கித் தரேன்.” என்றான் ஜெய். 

“சரிமா நீயும் கிளம்பு. இன்னைக்கு உங்க வீட்டுக்கும் போய்ப் பத்திரிகை வச்சிட்டு வந்திடுவோம்.” என ஜெயராமன் காமாட்சியைப் பார்த்து சொல்ல, அவர் மகிழ்ச்சியுடன் கிளம்பச் சென்றார். 

காமாட்சிக்கு எப்போதுமே நன்றாக உடை அணிந்து கொண்டு வெளியே செல்வது விருப்பம். அது தெரிந்து தான் வெண்ணிலாவும் போகச் சொன்னாள். அவளுக்கே தெரியும் போது அமுதாவுக்குத் தெரியாதா? 

இவர்கள் எல்லோரும் பேசிக்கொண்டிருக்க, “வெண்ணிலா, நான் மீன் குழம்பு வச்சிட்டேன். நீ சாதம் மட்டும் வச்சிடு. அகல்யா நீ வீட்டு வேலையைப் பார்த்திட்டு போன் பேசு.” என்றபடி அமுதா வந்தார். 

“நீங்க ஏன் அத்தை பண்ணீங்க நான் பண்ண மாட்டேனா.” 

“நான் குழம்பு வச்சிட்டா உனக்கு ஈசியா இருக்குமேன்னு பார்த்தேன்.” 

“சரிங்க அத்தை நீங்க போய்க் கிளம்புங்க.” என்றவள், 

“பார்த்தியா இவ்வளவு எளிதா தீர்க்கிற விசயத்தை நீ பேசி பிரச்சனை ஆக்கி விட்டாய்.” என்ற குற்றச்சாட்டு இருந்தது. ஜெய்கும் அது புரிய, நல்லா இருந்தா சரிதான் என நினைத்தபடி மாடிக்குச் சென்றான். 

அவன் அலுவலகம் செல்லக் கிளம்பி வந்த போது, பெரியவர்கள் பத்திரிகை வைக்கக் கிளம்பி சென்றிருந்தனர். அவனும் உண்டுவிட்டு அலுவலகம் சென்றான். 

அன்று மதிய உணவு நேரத்தில் ஜெய்யைப் பார்க்க புகழ் வந்தான். இருவரும் மதிய உணவுக்கு உணவகம் சென்றனர். 
அவன் திடிரென்று வந்ததும் அகல்யாதான் எதுவும் சொல்லிவிட்டாளோ என நினைத்த ஜெய், “டேய், நேத்து நான் எதோ டென்ஷன்ல கத்திட்டேன். நீ எதுவும் நினைச்சுக்காத.” எனச் சொல்ல, புகழுக்கு புரியவில்லை. அவன் பார்வையில் இருந்தே உணர்ந்த ஜெய், நாமதான் உலறிட்டோமா என நினைத்தவன், முன் தினம் நடந்ததைச் சொன்னான். 

“நீ சொன்னது கரெக்ட் தான். பிள்ளைதாச்சி பெண்ணை அதிகமா வேலை வாங்கிறதும் தப்பு தானே.” 

“ஆனா என் பொண்டாட்டிக்கு பரிஞ்சிட்டு நான் பேசினா, அவளே அவங்க பக்கம் தான் டா பேசுறா. இவளுக்காகப் பேசிட்டு நான் தான் கெட்டவன் ஆகிட்டேன். ராதிகா சும்மாவே என்னை வில்லனைப் போலத்தான் பார்க்கிறா, இனி கேட்கவே வேண்டாம்.” 

“நீ ஏன் டா எல்லாத்துக்கும் டென்ஷன் ஆகிற?” 

“உண்மைய சொன்னா நான் வெண்ணிலாவை கல்யாணம் பண்ணிட்டுக் கஷ்டம்தான் படுத்துறேன். என் மேல இருக்கத் தப்பை மறைக்க நான் மத்தவங்களைக் கத்துறேன்.” 

“உனக்கே தெரியுதே டா… பிறகு சரி பண்றதுக்கு என்ன?” 

“வெண்ணிலா என்கிட்டே இருந்து வேற எதையும் எதிர்பார்க்கலை. நான் அவளோட இருக்கணும் அதுதான் எதிர்பார்க்கிறா. ஆனா நானோ வேலைன்னு ஓடிட்டு இருக்கேன்.” 

“உனக்குத் தெரியும் தான எங்க கல்யாணம் எப்படி நடந்ததுன்னு. கரணோட கல்யாணம் நின்ன போது கூட வெண்ணிலாவை எனக்குக் கொடுக்க அவங்க வீட்ல நினைக்கலை டா… காரணம் வசதி தான்.” 

“அவங்க முன்னாடி நல்லா வந்து காட்டனும் டா… அதுதான் எனக்கு.” 

“நீ நினைக்கிறது சரிதான். ஆனா நீ நினைக்கறதை அடையறதுக்காக, நீ எதை அடகு வைக்கிற தெரியுமா? உங்க ரெண்டு பேர் சந்தோஷத்தையும்.” 

“நிறையப் பேர் பண்ற தப்பு என்ன தெரியுமா? முதல்ல சம்பாதிச்சிட்டு அப்புறம் அனுபவிக்கலாம்னு நினைக்கிறது தான். ஆனா வாழ்க்கை நமக்காகக் காத்திட்டு இருக்காது.” 

“இழந்த தருணம் இழந்தது தான். பின்னாடி ஏங்கிறதுல எந்தப் பயனும் இல்லை. நீயும் அந்த வரிசையில சேரப் போறியா?” 

“நீ சொல்றது புரியுது. ஆனா என்ன பண்றது?” 

“நீயே ஏன் டா எல்லாத்தையும் பண்ணும்னு நினைக்கிற? வேலையை மேற்பார்வையிட ஒரு ஆளைப் போடு. நீயும் நடுவுல நடுவுல போய்ப் பார்த்துக்கோ.” 

“அதை நானும் யோசிக்காம இல்லை. நான் பரம்பரை பரம்பரையா இந்தத் தொழில் பண்ணலை. கொஞ்சம் வேலை சரியில்லைனாலும் வேற ஆள்கிட்ட போயிடுவாங்க.”
நண்பனின் வாதம் புகழுக்கும் புரிந்தது. 

“அகல்யா கல்யாணம் முடிஞ்சு, வெண்ணிலாவுக்கும் வளைகாப்பு போட்டு அவ வீட்டுக்கு போறவரை ஒரு ஆள்தான் போடணும் வேற வழியில்லை.”

ஜெய் சொன்னது போல மேற்பார்வையிட அவர்கள் தோட்டத்தில் இருந்தே ஒருவரை நியமித்திருந்தான். தெரிந்தவர் என்றால் ஒழுங்காக வேலை செய்வார் என்ற நம்பிக்கை. 

ஜெய் நேரத்திற்கு வீட்டிற்கு வர ஆரம்பித்தான். ஆனால் இப்போது வெண்ணிலா பிஸியாக இருந்தாள். நாத்தனாரின் திருமணம் என்றால் வேலை இருக்காதா? அகல்யாவின் புடவைகளுக்கு ரவிக்கை தைத்து வர வர, அகல்யா அதை அணிந்து காண்பிப்பதும், சரியாக இருக்கிறதா எனப் பார்ப்பது, அலங்காரத்திற்கு எந்தப் பார்லரில் சொல்வது என வேலைகள் வரிசைகட்டி நின்றது. 
இவள் நேரமில்லாமல் இருக்க, முதலில் வேண்டுமென்றே செய்கிறாளோ என நினைத்தவன், பிறகு உண்மையிலேயே அவள் பிஸியாக இருக்கவும், ஜெய் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் இரவு உணவு சீக்கிரமே முடித்து, நாளைக்குப் பார்க்கலாம் என மனைவியை அழைத்துக் கொண்டு மாடிக்கு சென்று விடுவான். 

மதியம் ஒருமுறை உறங்கி எழுவதால், வெண்ணிலா இரவு உறங்கவும் வெகு நேரம் ஆகும். அதுவரை ஜெய் விழித்திருந்து மனைவியோடு கதைப் பேசிக்கொண்டிருப்பான். 

“நீ வளைகாப்பு முடிந்து, குழந்தை பிறந்து வர நாலு மாசமாவது ஆகும். அதுவரை நான் தனியா தூங்கணும். எப்படி எனக்குப் பொழுது போகப் போகுதுன்னே தெரியலை.” என அவன் புலபும் போது, பிரசவத்திற்கு இங்கேயே இருந்து விடலாமோ என்றெல்லாம் வெண்ணிலாவுக்குத் தோன்றும். ஆனால் உடனையே நினைத்துக் கொள்வாள். இவனை நம்பி ஏமாத்திடாத, இப்ப வேலை இல்லாமல் இருக்கிறான். அதனால் சொல்கிறான் எனத் தெரிந்தும் வைத்திருந்தாள். 
அகல்யா திருமணத்திற்கு வீட்டினர் யாருக்கும் புது உடைகள் எடுக்கவில்லை. யஸ்வந்த் திருமணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் என ஜெயராமன் சொல்லிவிட, ராதிகா ஒரே அழுகை. சந்திரன் அவளை திட்டிவிட்டார். 
“என்கிட்டே நிறைய புதுசே இருக்கு. ஆனா ராதிகாவுக்கு அப்படியில்லை. அதனால அவளுக்கு மட்டும் எடுங்க.” என வெண்ணிலா சொல்ல, ஜெய் பத்தாயிரம் கொடுத்து அவளையே எடுத்துக்கொள்ள சொல்ல, ராதிகாவை கையில் பிடிக்க முடியவில்லை. 

அகல்யா புகழ் திருமணம் வெகு சிறப்பாக நடக்க, மகேஸ்வரி திருமணத்திற்கு மூன்று நாட்கள் முன்பாகவே வந்திருக்க, ராஜகோபால், யுவராஜ் கற்பகம் மூவரும் திருமணத்திற்கு முன்தினம் வந்திருந்தனர். 

எட்டு மாத கர்ப்பிணி என்றாலும் வெண்ணிலா தன்னுடைய பங்கை சிறப்பாகவே செய்தாள். 
அகல்யாவை மணமேடையில் விட்டு, நாத்தனாரின் கழுத்தில் தாலி ஏறும் வரை உடன் இருந்தவள், அதன் பிறகு கீழே வந்து அவள் அம்மாவின் அருகே உட்கார்ந்து கொண்டாள். 

ஜெய் இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருக்க, திருமணதிற்கான அதிகபடியான வேலையில் அவன் சற்று கருத்துப் போயிருந்தாலும், கணவனின் தோற்றம் எப்போதும் போல மனதைக் கவர, வெண்ணிலாவின் பார்வை அடிக்கடி கணவனைத் தொட்டு மீண்டது. 

வேலையில் கவனமாக இருந்தாலும், மனைவியையும் ஜெய் மறக்கவில்லை. அவளை முதலில் உணவுண்ண செய்தவன், “நீ வீட்டுக்குக் கிளம்பு. மதிய சாப்பாடு உனக்கு வீட்டுக்கு வரும்.” என்றவன், யாரை உடன் அனுப்புவது என யோசிக்க, யுவராஜ் செல்வதாகச் சொன்னான். 

வெண்ணிலாவுக்கு அப்போது ஒன்றும் களைப்பாக இல்லை. ஆனால் கணவன் சொல்லவும் மற்றவர்களும் சேர்ந்துகொள்ள, வேறுவழியில்லாமல் தான் கிளம்பினாள். அவளோடு கற்பகமும் வருவதாகச் சொன்னார். 

இவர்கள் மூவர் மட்டும் வீட்டிற்குச் செல்ல, வெண்ணிலா அவர்களுக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து விட்டு கீழே இருந்த அறையிலேயே உடைமாற்றிவிட்டு வந்தாள்.