முகூர்த்தம் 14
உயிர்த்துடிப்புகள்
நீயாகையில்
உள்ளக்கிடக்கைக்கள்
உயிர்கொள்கிறதே
அழகான மலர்களை ரசித்துக் கொண்டிருக்கையில் எங்கிருந்தோ வந்த ஒரு கலவரக்கூட்டம் அந்த பூஞ்சோலையையே இல்லாமல் செய்துவிட்டுப் போகும் திரைக்காட்சியைப் பார்ப்பது போலிருந்தது மைவிழிச்செல்விக்கு.
”நல்லாத்தானா போய்கிட்டு இருந்தது, இந்த கொஞ்ச நேரத்தில இந்த இடமே அடையாளம் தெரியாமல் மாறிப்போயிருச்சே”
பெரிய மரக்கட்டைகள் கிடத்திவைக்கப்பட்டிருந்த இடத்திற்குப் பின்னால் கையில் சிறு சிராய்ப்புகளோடு ராஜாவின் முதுகில் ஒட்டிக் கொண்டிருந்தாள் அவள்.
அவனாய் பிரித்துவிடும் வரை அவனை இறுக கட்டிக் கொண்டிருந்தவளுக்கு என்ன நடந்தததென்று தெரியவில்லை.
அவனின் ஸ்பரிசம் உணர்ந்த நொடி சட்டென விலகி கண்விழித்துப் பார்க்க கை கால் கட்டப்பட்டு முகமும் மூடப்பட்ட ஒருவனை கோணியில் கட்டிக் கொண்டிருந்தனர் சேதுபதியும் பூபதியும்.
சற்று தள்ளி கீழே சரிந்து கிடந்த ராயலென்ஃபீல்டை நிமிர்த்திக் கொண்டிருந்தாள் மலர்விழி.
முகத்தில் ருத்ரம் சற்றும் குறையாதவர்களாய் சேதுபதியும் பூபதியும் நின்றிருக்க, கோணியில் கட்டிக் கிடந்தவனை மீண்டும் நன்றாக நான்கு உதை விட்டான் பூபதி.
”விடு மச்சான் மயக்கத்தில கிடக்குறவனுக்கு வலி தெரியாதுடா”
“இவனையெல்லாம் சாகடிச்சா கூட எனக்கு ஆத்திரம் அடங்காது டா”
“கொஞ்சம் பொறுமையா இருடா, நமக்கு இது வேலை இல்லை, ஏற்கனவே போட்ட ப்ளான் இப்ப நிறைவேத்தியாச்சு, சோ இனிமேலும் ரொம்ப இமோஷனஸ் ஆகீட்டு இருக்காத”
“எப்படிடா இருக்க முடியும் கண்ணுக்கு முன்னாடி இன்னும் எத்தனை பொண்ணுங்க உயிர் போகுறதை பாத்துகிட்டு இருக்க சொல்ற”
”இங்க என்ன நடக்குது எனக்கு ஒண்ணுமே புரியலை, இவன் பேரு பூபதியா…? பாண்டியன் இல்லையா” என்று தூக்கத்திலிருந்து விழித்த குழந்தையாய் அவள் கேள்வி கேட்க,
இவ்வளவு நேரமாக இருந்த இறுக்கம் தளர்ந்து அனைவரும் சிரித்துவிட்டனர்.
கையிலிருந்த லாலிபாப்பை பிடுங்கிக் கொண்டு சிரிக்கும் அரக்கர் கூட்டம் போல் தெரிந்தனர் அவளுக்கு மீதி நால்வரும்.
”சிரிக்காம பதில் சொல்றீங்களா” அவள் முறைக்கத்துவங்க,
அதைப்பார்த்த ராஜா இன்னும் நன்றாக சிரிக்கத்துவங்கினான்.
பூபதி இவளைப் பார்க்காமல் திரும்பிக் கொள்ள, சேதுபதி மட்டும் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கியபடி அவளை நோக்கி வந்தான்.
“ஆமா நீ எந்த காலேஜ் மா”
“என்.கே காலேஜ்”
“திருச்சியாமா”
“ஆமா”
“என்ன டிபார்ட்மெண்ட்டு”
“ஐ.டி”
“யூ மீன் இன்பர்மேஷன் டெக்னாலஜி”
“ம்ம்ம்”
“ராஜாவை தெரியுமா உனக்கு”
பதில் சொல்லாமல் அவள் முறைக்க,
”ஓ கே ஓ கே கூல், இந்த பூபதி ஸ்ஸ்ஸ் சாரி பாண்டியனை எப்படி தெரியும்”
“அவன் எங்க பக்கத்துக்கு கிளாஸ்”
“ஓ நீ எல்.கே.ஜி ‘A’ செக்ஷன் அவன் ‘B’ செக்ஷனா”
முறைத்தபடியே, ”ம்ம்ம் அவன் ப்ரொடக்ஷன் டிபார்ட்மெண்ட், ஒரு டைம் லாப்டாப் ப்ராப்ளம்காக ஸ்டிரைக் பண்ணும் போது ப்ரெண்ட்ஸ் ஆனோம்”
“அப்பயிருந்து இப்ப வரை நீ அவன் முழுபேரை கேக்கவே இல்லை”
“ஓ அப்போ அவன் நேம் பூபதி பாண்டியனா”
“அப்போ மட்டுமில்லை இப்ப வரைக்கும் அவன் பேரு அது தான்”
“ஓ”
“ஓ வா, சரி என்னை பாத்திருக்கியா இதுக்கு முன்னாடி”
“இல்லையே”
“சுத்தம்”
“என்னது” இப்பொழுது மீண்டும் அனைவரும் சிரிக்க,
சேதுபதி கையெடுத்து கும்பிட்டு “யம்மாடி எனக்கு இருக்குறதோ லிட்டில் ஹார்ட் அதுல இதுக்கு மேல தாங்க முடியாதும்மா”
“ஏன் நான் என்ன பண்ணேன்”
“இதுக்குமேல என்னைய அசிங்கப்படுத்தாத, அதே காலேஜில தான் நானும் படிச்சேன் என்கூட சுத்துன இவனைத் தெரியுது, அந்த தடியனைத் தெரியுது என்னை மட்டும் பார்த்ததே இல்லைன்னு சொல்லுற, ப்ளான் பண்ணி செய்யிற உன்கிட்ட இதுக்கு மேல அசிங்கப்பட முடியாதும்மா”
ராஜாவும் பூபதியும் இன்னும் பலமாய் சிரித்தபடி”அசிங்கப்பட்டான் போலீஸ்காரன்” என்றனர், மைவிழிச்செல்விக்கு என்னவோ போலாகிவிட்டது.
அவளைப் பொறுத்த வரையில் தன் வரையில் எல்லா இடத்திலும் விழிப்போடு தான் இருந்திருக்கிறாள்.
மூன்று பேர் சேர்ந்து வந்த இடத்தில் ஒவ்வொரு முறையும் ஒருவன் மட்டும் தானா நம் கண்ணிற்கு தெரிந்தான்…. யோசனையில் அவள் மூழ்க,
”நல்லா யோசனை பண்ணிகிட்டே இரும்மா, உன் பொறுமையில மயக்கத்தில் இருக்கவன் தெளியறதுக்கு முன்னாடி டிஸ்போஸ் செஞ்சிட்டு வரேன்” என்றபடி சென்றான் சேதுபதி அவனோடே பூபதியும் செல்ல, கிளம்ப வந்த ராஜாவை மைவிழிசெல்விக்கும், மலர்விழிக்கும் துணையாய் இருக்கும் படி கூறிவிட்டு இருவரும் அந்த கோணியை அங்கிருந்த புதரின் பின்னால் மறைந்திருந்த ஜீப்பின் பின்னல் போட்டுக் கொண்டு, கையை அசைத்து காட்டிவிட்டு சென்றனர்.
அடுத்து தன் விசாரணையை துவக்கினாள், அறிந்தும் கொள்ளும் ஆர்வமே அதிகமாயிருந்தது அவள் முகத்தில்…
”உங்களுக்குத்தான் ஆக்சிடெண்ட் ஆகியிருந்துச்சே, எப்படி நீங்க இங்க, காயம் எதையுமே காணோம்”
”நீ காணாம போனதும் அதுவும் போயிடுச்சு”
“அப்போ நான் வந்தா திரும்ப வந்திடுமா”
“ஆரம்பிச்சுட்டியா, எப்படி நீ டக்குன்னு இவ்வளவு முட்டாளா ஆன” சற்றே எரிச்சலோடே கேட்டான் ராஜா.
இவ்வளவு நேரமும் இல்லாத ஒரு வித்தியாசம் அவன் முகத்தில், நடவடிக்கையில், பேச்சில் என எல்லாவற்றிலும் தெறித்தது.
ஆனாலும் அசராமல், “கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான், எனக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணாங்க, அப்போயிருந்து தான் இப்படி” என்றாள்.
இதழில் தோன்றிய சிறு புன்னகையை மறைத்துக் கொண்டு, “மத்த விசயத்திலே ஆயிரம் விளக்கம் பேசத் தெரியுது, படிச்சு என்ன பிரயோசனம் மூளையை கொஞ்சமாச்சு யூஸ் பண்ணத்தெரியனும், அதை விட்டுட்டு என்ன பழக்கம் இது சொல்லாம கொள்ளாம கிளம்பி போகுறது, நான் சொன்னேனா உன்கிட்ட உன்னால தான் எனக்கு இப்படி ஆச்சுன்னு”
“……………”
“முதல்ல எனக்கு ஆக்சிடெண்ட்டே ஆகலை இது எல்லாமே செட் அப், அதை சொல்றதுக்குள்ள, எவ்வளவு அமளி ஆர்ப்பாட்டம், எதையாவது கொஞ்சம் நிதானிச்சு யோசிச்சு செஞ்சா என்ன, உன்னால இப்போ எவ்வளவு குழப்பம் பிரச்சனைன்னு தெரியுமா”
“ ஓ அப்போ எல்லாத்துக்கும் நான் தான் காரணம், நான் எதுனால இப்படி எல்லாம் செஞ்சேன்னு கூட உங்களால யோசிக்க முடியலை, அவ்வளவும் காதல்ன்னு புரியலை”
“காதல்ன்னு புரிஞ்சதுனால தான் நீ நானும் இங்க நின்னு பேசிகிட்டு இருக்கோம் “
“நான் இங்க வந்ததுக்கு கூட நீங்க தான் காரணம்னு சொல்லுவீங்க போல”
“ஆமா”
”எப்படி எப்படி..”
“இப்பவாச்சும் யோசிக்கிறியா பாரு, பூபதி கூடதானே இங்க வந்த, ”
“ஆமா”
“பூபதி உனக்கு முன்னாடியே என் ப்ரெண்ட், நான் பூபதி, சேதுபதி மூணு பேரும் பத்துவருஷத்துக்கும் மேலா ப்ரெண்ட்ஸ்”
“ஓ, இதை அவன் என்கிட்ட ஒருதரம் கூட சொன்னதே இல்லையே”
“மேடம் அப்படியே டெய்லி பேசுறீங்க அவன் சொல்லாம விடுறதுக்கு”
“அவனாச்சும் சொல்லியிருக்கலாம்ல , வரட்டும் அவன்”
“சொல்லியிருந்தா இப்பயும் என்கிட்ட வந்து சேர்ந்திருக்க மாட்டாய், எல்லாமே ஒரு நல்லதுக்குத் தான் ஆனா நீயா ஒரு முறை கூட எங்க மூணு பேரையும் சேர்த்து பார்த்ததே இல்லையா”
“இல்லையே”
“ம்க்கும்… நாம வந்தாலே மூஞ்சியை திருப்பிகிட்டு போயிட வேண்டியது, அப்புறம் எங்கயிருந்து அவனுகளை பாக்குறது”
”என்ன முனகுறீங்க எதுவா இருந்தாலும் சத்தமா சொல்லுங்க”
“சொல்லீட்டாலும்”
பேசவேண்டியது இன்னும் அதிகம் இருப்பது புரிந்தது அவளுக்கு, சேதுபதியும் பூபதியும் தானாகவே சென்று விட்டார்கள், ஆனால் மலர் இருப்பது அவளது பேச்சை சற்றே தடை செய்தது.
இதற்கு மேல் இனி தனிமையில் தான் பேசவேண்டும் என்று மனதிற்குள் முடிவு கட்டியவளாய், மலர்விழியை நோக்கி பேச்சை திசை திருப்பினாள்.
“ஆமா இவங்க யாருன்னு சொல்லவே இல்லை”
“இவங்க மலர்விழி ஃப்ரெம் கொச்சின்”
“ஓ உங்க ப்ரெண்ட்டா”
“இவங்க பூபதிய கல்யாணம் பண்ணிக்க போறாங்க, அவனை பார்க்க தான் வந்திருக்காங்க”
“ஓ அப்படியா அவனுக்கு கல்யாணமா சொல்லவே இல்லை”
என்று அவள் மீண்டும் எரிச்சலுற, ஒரே நாளில் தன்னை சுற்றியிருந்த உலகம் மாறிபோயிருப்பதை உணர்ந்தாள்.
அவள் அமைதியாகிவிட, ராஜா மலரிடம் பேசத் துவங்கியிருந்தான்