அத்தியாயம் – 20

அவளை விட்டு எங்கோ சென்ற நந்தன், அவள் எண்ணத்தை உணர்ந்ததுப் போல, இதழ் விரித்துச் சின்ன சிரிப்பை உதிர்த்தான்(chuckle).

பவளனைப் பற்றிச் சில நிமிடங்கள் நினைத்த அவந்திகா பெருமூச்சுவிட்டாள். பின் அவனை ஒதுக்கிப் பாவனாவும் கார்திக்கும் யாளி உலகம் வந்துவிட்டார்களா என அறிய முடிவெடுத்தாள். முடிவெடுத்ததை ச் செயல்படுத்தும் எண்ணமாகத் தன் கண்கள் மூடி ஆன்மீக விழிப்பில் (spiritual Conscious) தன் கைக்காப்பின் தூரத்தை ஆராய்ந்தாள். அதன் தூரத்தை ஆராய்ந்தவளுக்கு குழம்பி போனது.

ஏனென்றால் அவளுக்கு இரண்டு வெவ்வேறு இடத்திலிருந்து கைக்காப்பின் சமிக்ஞை(signal) வந்தது. ஒன்று அவள் இப்போது இருக்கும் இந்த இடத்தில், மற்றொன்று அவள் இருந்த இடத்திற்கு மேலே சில பத்து ஆயிர காத தூரத்திலிருந்து நொடிக்கு நொடி சில ஆயிரங்களாகக் குறைந்துக் கொண்டே வந்தது.

எச்சரிக்கை உணர்வுடன் எழுந்து நின்றவள், ‘தன் கைக்காப்பு அருகிலிருக்கிறது என்றால் பவி இங்கே அருகில்தான் இருக்கிறாளா!’ என்ற சந்தேகம் தோன்ற, தான் இருந்த இடத்திலே நின்று சுற்றும் முற்றும் பார்த்தாள்.

நந்தன் சென்ற திசைத் தெரியவில்லை. அதனால் அவனுக்காகக் காத்திருக்காமல், உடனே கண்கள் மூடி, தன் ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் நீட்டி நெற்றியில் வைத்தாள். அது நெற்றியை தொட்டவுடன் வெள்ளை நிற ஒளி புள்ளியை முதலில் உருவாக்கியது. பின் அந்த ஒளி புள்ளி மெதுவாகப் பெருகி அவளைச் சுற்றி கவனிக்கும் சக்கரத்தை (Observing Array) உருவாக்கியது.

வெள்ளை நிற வெளிச்சம் நீரில் கல் எறிந்தால் ஏற்படும் அலைகளைப் போல அவளை மையமாகக் கொண்டு காற்றிலே சில இடைவேளி விட்டு விட்டு ஒளி அலைகளாகப் பரவி அந்த அலை போன இடங்களிலெல்லாம் வேறு யாளி யாரேனும் இருக்கிறார்களா என்று அவள் இருந்த இடத்திலே கண் மூடியிருந்த போதும் அவள் மனதிரையில் உருவாக்கியது.

அப்படி பார்த்தவள், அங்குக் குறைந்தது 2 காத(3km) ஆரம்(radius) வரை அவளைத் தவிர வேறு யாருமில்லை என்பதை உணர்ந்தாள். எங்கோ சென்ற அந்த நந்தனும் அதற்குள் எங்குச் சென்றானோ அவளால் அவளது கவனிக்கும் சக்கரத்தினால் அவனைக் கண்டறிய முடியவில்லை.

யாரும் அருகில் இல்லை என்பதை உறுதி செய்துக் கொண்ட அவந்திகா, கண் விழித்துத் தன் கையினைத் தளர்த்தியபடி யோசனையில் ஆழ்ந்தாள். ‘இது நாள்வரை இப்படி ஆன்மீக விளிப்பில் கைக்காப்பு இரண்டு இடத்தைச் சொன்னதில்லையே.

அதுவும் ஒன்று தான் இருக்கும் இடத்திலே இருப்பது போலப் பதிலளிக்கிறது. மற்றொன்று எனக்கு மேல் பல ஆயிரம் காத தூரத்திலிருந்து ஒவ்வொரு நொடியும் குறைந்து பதில் அளித்தது. தூரம் குறைந்து வரும் அதுதான் தன்னுடைய கைக்காப்பாக இருக்க வேண்டும்.

ஏனென்றால் அது இடம்மாற்றும் சக்கரத்தில் மேகன் அவர்களை அழைத்துக் கொண்டு யாளி உலகம் வருவதால் படிப்படியாகத் தூரம் குறைந்துக் கொண்டே வருகிறது. அதனால் அதுதான் என்னுடைய காப்புஎன்று நினைத்தாள்.

மீண்டும் ஒரு முறை கண் மூடி ஆன்மீக விழிப்பில் கைக்காப்பின் தூரம் அறிந்தவள், இப்போதும் இரண்டு இடம் கண்பிக்க கண் விழித்துத் தன் முகவாயில் வலது கையின் ஆள்காட்டி விரலை வைத்து, “ம்ம்? இது எப்படி சாத்தியம்?” என்று முனுமுனுத்தாள்.

அப்போது அங்கு அவளைச் சுற்றி பறந்துக் கொண்டிருந்த மின்மினி பூச்சிகளின் வெளிச்சத்தில் தன் முகத்திற்கு அருகிலிருந்து கையில் தெரிந்த கருநிற கைக்காப்பு கண்ணில் பட்டது. உடனே சந்தேகம் தோன்ற கையிலிருந்த கைக்காப்பை கழற்றி அதனை நோட்டமிட்டாள். ‘ஒருவேளை இதிலிருந்து என் கைக்காப்பின் சமிக்ஞை வருகிறதோஎன்று நினைத்தாள்.

உடனே அதனை உறுதி படுத்திக் கொள்ள அவள் இருக்கும் இடத்திலிருந்து சிறிது தூரம் தள்ளிக் கைக்காப்பினை வைத்துவிட்டு மீண்டும் ஆன்மீக விழிப்பில் தன் கைக்காப்பின் இடம் அறிய நினைத்து அந்தக் கைக்காப்பை அவள் நின்றிருந்த இடத்தில் தள்ளி வைக்க ஒரு எட்டு எடுத்து வைத்தாள்.

அப்போது, அவளைச் சுற்றியிருந்த மின்மினி பூச்சிகள் காற்றிலே மினுமினுக்கும் துகள்களாக மாறி மறைந்து போனது. சட்டெனக் கும்மிருட்டு அவளைச் சுற்றி பரவியது.

அதுவரை ஆர்வமாகக் கைக்காப்பினை ஆராய்ந்துக் கொண்டிருந்தவள் எதிரில் எரிந்துக் கொண்டிருந்தத் தணல் அணைந்ததைக் கூடக் கவனித்திருக்கவில்லை. மின்மினி பூச்சிகள் கலைந்து சென்ற இருண்டப் பிறகே அதனை உணர்ந்தாள்.

அந்த நந்தன் வெகுதூரம் சென்றுவிட்டானோ. அல்லது முன்பு எப்போதும் போல அவளை விட்டுச் சொல்லாமல் மாயாமாகி விட்டானோ. அதனால்தான் இந்த மின்மினி பூச்சிகள் காணமல் போய்விட்டனவோ!’ என்று நினைத்தவிதமாகக் கழற்றிய கைக்காப்பை மீண்டும் கையில் அணிந்துக் கொண்டாள்.

பின் ஒளியிழந்த தணலுக்கு தீ மூட்ட நினைத்து அருகிலிருந்த சுல்லிகளை அள்ளியவிதமாக, ‘எது எப்படியோ? அவனை நம்பி நான் யாளி உலகம் வரவில்லை. அதனால் அவனைப் பற்றி யோசிப்பதை விட்டு நாம் எப்படி பவி இருக்குமிடம் போவதென்று யோசிப்போம்.’ என்று முன்பு தீ மூட்டப்பட்ட தணல் அருகே மீண்டும் சென்றாள்.

அப்போது, “இளவரசிஎன்று ஆன்ம இணைப்பில் (Soul Link) பவளன் அவளை அழைத்தான்.

பவளனின் குரலைக் கேட்டதும் அப்படியே நின்றவள், “பவளன். எங்க இருக்கீங்க? உங்கநீங்கச் சென்ற வேலை முடிந்ததா?” என்று அவசரமாகக் கேட்டாள்.

பவளன், “ம்ம்உங்க தோழர்கள் யாளி உலகம் அடைந்துவிட்டார்கள்.” என்றான்.

அதனைக் கேட்ட அவந்திகா, “அப்படியா?! என்என் தோழர்கள் நலமுடன்தானே இருக்கிறார்கள்?” என்று தன் கைக்காப்பு தந்த குழப்பத்தினை மறந்து அவசரமாகக் கேட்டாள்.

பவளன், “இளவரசி, மேகன் உங்க தோழியுடன் மகர யாளி அரசு மற்றும் மாதங்க யாளி(1) அரசின் எல்லையில் இருக்கும் ஒரு கிராம சத்திரத்தில் இருக்கிறான். மேகன் உங்க தோழியை அக்கறையுடன் பார்த்துக் கொள்கிறான். அதனால் கவலைப்பட வேண்டாம்என்று சில வினாடி நிறுத்தி

பின், “ஆனால் உங்க தோழர் அவர்களுடன் இல்லை. அவரின் இருப்பிடம் அறிய முயன்றுக் கொண்டிருக்கிறேன். அதனை அறிந்ததும் நான் உங்களிடம் சொல்கிறேன்என்றான்.

அதனைக் கேட்டதும் அவந்திகாவிற்கு வியர்த்துவிட்டது. இருந்தும் அவள் பாவனாவைப் பற்றிப் பயந்ததுப் போலக் கார்திக் எங்கிருக்கிறான் என்று முழுதும் பயப்படவில்லை. ‘என் கைக்காப்புடன் இல்லாமல் இருப்பதால் பவியைவிட கார்திக்கின் உயிருக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது.

மிஞ்சிப் போனால் மற்றயாளிகள் அவனை மனித யாளியாக எண்ணக்கூடும். அதனால் அவனுக்கு இங்கு அதிக பாதிப்பு வர வாய்ப்பில்லை. முதலில் பவியிடமிருந்து என் கைக்காப்பை எப்படிப் பிரிப்பது என்பதைத்தான் யோசிக்க வேண்டும்’. எதற்கும் வழி இல்லாமல், என் கைக்காப்பு ஆன்மீக விழிப்பில் ஒழுங்காகச் சமிக்ஞை தர மறுக்கிறதே.!’ என்று சோர்ந்தாள்.

இப்படியாகத் தலை குனிந்து தன் இரு கண்ணின் கருவிழிகள் இங்கும் அங்கும் ஆட யோசித்தவிதமாக இருந்தவள், உடனே நிமிர்ந்து பவளன், நீங்க எங்கே இருக்கீங்க. பவியிடமிருந்து என் கைக்காப்பை உங்களால் இப்போது பிரிக்க முடியுமா?” என்று நேரடையாகக் கேட்டாள்.

பவளன் அவந்திகாவின் முதல் கேள்விக்குப் பதில் அளிக்காமல், “இளவரசி. மேகன் உங்க தோழியைக் கொல்லும் எண்ணமுடன் இல்லை. அதனால் உங்க கைக்காப்பு அணிந்திருப்பதால் மற்ற யாளிகளால் உங்க தோழிக்குப் பாதிப்பு வரக் கூடாது என்று அதனைச் சுற்றி வினோதமான மந்திரபூட்டு(locking Array) சக்கரம் அவன் போட்டிருக்க வேண்டும்.

அதனால் உங்க காப்பு இருக்கும் இடம் மற்றவர்களால் மட்டுமல்ல, உங்களால் கூடத் தெளிவாக அறிய முடியாது. ” என்று தன்னால் இப்போது கைக்காப்பை எடுக்க முடியாது என்பதை சொல்லாமல் சொன்னான்.

அதனைக் கேட்டதும், அவந்திகாவின் முந்தைய குழப்பம் தெளிந்தது. “…” என்றவள், ‘அதனால்தான் என் கைக்காப்பு இப்போது ஒழுங்காகச் சமிக்ஞை தரவில்லையோ!’ என்று நினைத்தாள்

கூடவே, ‘நான் போன இந்த 400 வருடங்களில் யாளி உலகில் என்ன என்ன மாற்றங்கள்.! செயற்கை கைக்காப்பு உருவாக்கியிருக்கிறார்கள். யாளிகளின் ஆன்மாவின் ஒரு நூழிலையில் உருவாகும் கைக்காப்பின் இடத்தை அந்தக் கைக்காப்பின் உரிமையான யாளிக் கூட உணரமுடியாதப்படி, மந்திர பூட்டு சக்கரம் உருவாக்கியிருக்கிறார்கள்என்று வியந்தாள்.

பாவம் அவளுக்குத் தெரியவில்லை செயற்கை கைக்காப்பும், விநோதமான மந்திர பூட்டும் அவளுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டவை என்று.

இப்படியாக அவந்திகா யோசித்துக் கொண்டிருக்கும்போது, பவளனின் குரல், “இளவரசி, நீங்க இருக்கும் இடத்திற்கு யாரோ வருகிறார்கள். எச்சரிக்கை!” என்று அவளை நிகழ்வுக்குக் கொணர்ந்தது.

அவனது குரலில் தெரிந்த தீவிரத்தில் விழி கூர்மையுடன் சுற்றும் முற்றும் பார்த்தாள். அந்தக் கும்மிருட்டில், இரவின் பூச்சிகளின் சத்தத்திலும், ஓடை நீரின் சலசலப்பிலும் லேசாக யாரோ இருவர் பேசிக் கொண்டு வருவது மிகச் சன்னமாகக் கேட்டது.

எச்சரிக்கை உணர்வுடன் சத்தம் வராமல், நுனிக்கால்களில் (tiptoe) நடந்துச் சென்று ஒரு புதரின் பின் நின்று பேச்சுச் சத்தம் வந்த திசையை நோக்கி இலைகளை விலக்கி நிலவின் ஒளியில் ஓடையின் அந்தப் பக்கம் வந்து நின்ற இரு நிழல் உருவங்களைப் பார்த்தாள்.

அவந்திகா இருந்த இடம் மரங்கள் அடர்ந்து நிலவொளி அனுகாதப்படி அடர்ந்த கருநிறத்தில் இருந்தது. ஆனால் ஓடையின் அந்தக் கரை அதிக மரங்கள் இல்லாமல் இரு நிலவுகளின் ஒளியில் தெளிவாகவே தெரிந்தது.

அந்த உருவங்கள் மெல்ல மெல்ல பின்னிருந்த மரங்களிலிருந்து வெளியில் வந்து ஓடை முன் நின்று இங்கும் அங்கும் பார்த்தன. அந்த இரு உருவங்களில் ஒருவர், ஒரு 50லிருந்து 60 வயது இருக்க கூடிய வயதானவராக இருந்தார். அவரைப் பார்த்தால் மனிதயாளி போலத் தெரிந்தது.

மனித யாளிகள் மனிதர்களைப் போலதான். அவர்களின் ஆயிட்காலம், 100லிருந்து 150 வருடங்கள் மட்டுமே. (2) அதனால் 60 வயது என்பது நடுத்தர வயதுடைய மனித யாளிகள். அதனோடு அவர்களின் பிறப்பு, இறப்பு, திருமண முறைகள், உணர்வுகள் எல்லாம் இயல்பான மனிதர்களைப் போன்றதே.

மனித யாளிகளை தவிர மற்ற யாளிகளின் திருமண முறை ஆன்ம பிணைப்பில்(soul bind between soul-mates) உண்டாகும். அப்படி ஆன்ம பிணைப்பு ஏற்பட்டாலும் அவர்களுக்குக் குழந்தைப் பிறப்பது என்பது அதிருஷ்டத்தை பொருத்தது. இந்தக் காரணத்தினால்தான் என்னமோ பொதுவாக மற்ற யாளிகள் திருமணம் செய்துக் கொள்ளாமல் தனிமையில் இருக்கவே அதிகம் விரும்புவர்.

இதுவல்லாமல் இருவேறு வகை யாளிகளும் திருமணம் செய்து கொள்வது சாத்தியமே. ஆனால் அப்படியான கலப்பின யாளிகளின் குழந்தைகளால் எந்த வகை யாளிகளின் ஆன்மீக சக்தி நிலையையும் கைக்காப்பையும் அடைய முடியாது.

அப்படிப்பட்ட கலப்பின யாளிகள் மனித யாளிகளை விடவும் உடல் அளவிலும் மனதளவிலும் மிகவும் வலிமையற்று இருக்கும். அதனால் ஒரு வகை யாளி மற்ற வகை யாளியை திருமணம் செய்துக் கொள்வதும் இயல்பாக நடப்பதில்லை. அதனை யாளிகள் விரும்புவதுமில்லை.

மனித யாளிகளை தவிர மற்ற யாளிகளின் வாழும் காலம் அவை ஒவ்வொரு சக்கர நிலையை அடைய அடைய அது அதிகமடையும். ஒரு சக்கர நிலை அடைந்த யாளி 1000 வருடம்வரை வாழக் கூடியவை.

இதனையெல்லாம் அறிந்திருந்த வன்னியாகிய அவந்திகா அந்த நடுத்தர வயதானவரைப் பார்த்ததுமே அவர் மனித யாளி என்பதை உணர்ந்தாள்.

அதன் பிறகு அவர் அருகில் தெரிந்த மற்றொரு உருவத்தை ஆராய்ந்தாள். அவன் குறைந்தது 6 அடி உயரமேனும் இருக்க வேண்டும். வெள்ளை நிற ஆடையும், கையில் வெள்ளை நிற கைக்காப்பும் அணிந்து நின்றிருந்தான். அவன் தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவன் போல எங்கும் அதிக சதை இல்லாமல் பார்க்க நேர்த்தியான பரியாளி வகையாளன்.

அந்தப் பரியாளி முதுகில் பல அம்புகள் கொண்ட கூடையும், தோளில் ஒரு வில்லும், இடையில் ஒரு வாளும் எனக் கம்பீரமாகத் தோற்றமளித்தான். அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்த அவந்திகா, “முகிலன்!!” என்று அதிர்ந்தாள்.

மறுபிறவி எடுத்து யாளி உலகம் வந்த அன்றே, 400 வருடங்களுக்கு முன்பு பிறந்ததிலிருந்து உடன் வளர்ந்த சிநேகனை காண நேரம் என்று அவந்திகா நினைக்கவில்லை. ‘சிநேகன்! இல்லை. முந்தைய சிநேகன்(Ex-Friend) என்று சொல்ல வேண்டுமோ!’ என்று நினைத்தாள்.

ஒரு நொடி அவள் மூச்சு நின்று அவனை வெறித்தவள், மறுநொடி பெருமூச்சுவிட்டு பழையது மறந்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று நோட்டமிட்டாள்.

ஓடையின் அக்கரையில்…

வேதன்! இந்த ஓடை அருகிலா?” என்று அருகில் இருந்தவரிடம் எதைப் பற்றியோ கேட்டான் முகிலன்.

ஆமாம் ரிஷிமுனி(3). இங்குதான் அந்தத் தாமரை குளம் இருப்பதாக என் மகள் முன்பு ஒருமுறை சொன்னாள்.” என்றார் வேதன்.

ம்ம்…” என்று முகிலன் தன் முகவாயில் ஒரு கையை வைத்துக் கொண்டு, தன் பின் மற்றொரு கையை வைத்து அந்த ஓடைகரையில் முன்னும் பின்னும் இருமுறை நடந்தவிதமாக

அந்தத் தாமரை மலரைப் பறித்து வந்து உங்களிடம் காட்டிய மறுநாளே உங்கள் மகள் பிரம்மைப் பிடித்ததுப் போல் ஆகிவிட்டாள்.” என்று உரக்க சொல்லி எதையோ யோசித்தவன், நடப்பதை நிறுத்தி வேதன்ஐ நோக்கித் திரும்பி, “அப்படிதானே வேதன்!” என்றான்.

அவன் கேள்விக்குப் பதிலாக, “ஆமாம் ரிஷிமுனி. அந்தத் தாமரை குளத்தால்தான் எங்க ஊருக்கே பிரச்சனை. எப்படியாவது என்ன காரணம் என்று அறிந்து என் மகளை மீண்டும் பழையபடி மாற்ற உதவுங்கள்.

என்னுடைய மகளை மட்டுமல்ல, என் மகளைப் போல உயிர் இருந்தும் இறந்தவர்களைப் போல மாறிவிட்ட என் ஊர் மக்களின் மகள்களையும் காப்பாற்றுங்கஎன்று முகத்தில் சோகமும் ஆதங்கமும் தோன்ற சொன்னார் வேதன்.

அவரின் கவலை புரிந்த முகிலன் அவர் அருகில் வந்து அவர் தோளைத் தட்டி, “கவலைபடாதீங்க. இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் யார் காரணம் என்று விரைவில் கண்டுப் பிடித்துவிடலாம்என்று தேறுதல் சொன்னான்.

அதற்கு வேதன், “ரொம்ப நன்றிங்க ரிஷிமுனிஎன்றார் நெகிழ்ச்சியுடன்.

அதன்பிறகு அதிக நேரம் பேசிக் கொண்டிராமல், “நீங்க இங்கே இருங்க. நான் அந்தத் தாமரை குளத்தைத் தேடிவிட்டு வருகிறேன்என்று தன் ஆள்காட்டி மற்றும் நடுவிரலை நீட்டித் தன் கால்களுக்குக் கீழே குறைந்த தூரத்திற்கு பறக்கும் சக்கரத்தை (Short distance Flying Array) வரைந்தான்.

அது வெள்ளை நிற ஒளியினால் ஆன வட்டவடிவ சமதளத்தை அவன் காலுக்கு அடியில் உருவாக்கியது. பின் அவனை அது மேலே உயர்த்தி, மெதுவாகத் தரைக்கு அருகிலே பறந்து சென்றது. அவன் கீழே ஓடை அருகில் ஏதேனும் குளம் தெரிகிறதா என்று மேலிருந்தவிதமாகவே நோட்டமிட்டான்.

அதிக நேரம் ஆகாமல் விரைவிலே அவந்திகா மறைந்திருந்த இடத்திற்கு சற்று அருகில் இருந்த அந்தத் தாமரை குளத்தை அவன் அடைந்துவிட்டான். பின் தரையில் இறங்கி அந்தக் குளத்தின் கரையில் நின்ற முகிலன், “ம்ம்…! இந்தக் குளத்தைச் சுற்றி எவ்வளவு எதிர்மறை சக்தி (Negative Energy).

நிச்சயம் இது அந்தப் பெண்ணின் நிலைக்குக் காரணமாக இருக்கிறதோ இல்லையோ, ஆனால் இந்த ஊருக்கு வேறுவித பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்என்று முனுமுனுத்தான்.

பின், தன் வலது கையின் இரு விரல்களை நெற்றியில் வைத்து, கவனிக்கும் சக்கரத்தை(Observing Array) உருவாக்கி அந்தக் குளத்தை ஆராய்ந்தான். வெள்ளை நிற ஒளி அலைகள் மெல்ல பரவி அவனைச் சுற்றி இருப்பவற்றை அவனுக்கு மனதிரையில் காண்பித்தது.

மனதிரையில் கண்ட காட்சியால் திடுக்கிட்டு இங்கு எப்படி உயிர் உறுஞ்சும் சக்கரம்!!(Soul Absorbing Array) வந்தது!” என்று கத்தினான். பின் வேகமாக வானில் பறந்து தன் வில்லினை கையில் ஏந்தி அம்பினை அதில் பூட்டி, குளத்தின் மையப்புள்ளியை நோக்கி அம்பை ஏய்தான்.

அம்பு ஒரு நொடியில் நீரை துளைத்து அடியாழம் வரைச் சென்றிருக்க வேண்டும். அடுத்த நொடி, குளத்திலிருந்து பெரிய அலரலுடன் 30 சதமமீற்றர்(cm) சுற்றளவும், 5 மீற்றர் நீளமும் கொண்ட ஒரு கருநிற மலைப்பாம்பு வானுயரம் எழும்பி நின்றது.

அது மீண்டும் நீருக்குள் போவதற்குள் முகிலன் அடுத்த அம்பை எடுத்து அதன் ஒரு கண்ணை நோக்கி ஏய்தான். அதுவும் பொய்க்காமல் அந்தப் பாம்பின் வலது கண்ணைத் துளைத்தது. அந்தப் பாம்பு மற்றொரு அலரலை விட்டு நீரில் விழுந்தது.

எதிர்பாராமல் இருமுறை அடிப்பட்டதால் அந்தப் பாம்பு எச்சரிக்கையடைந்திருக்க வேண்டும். அதன் இடத்தை முகிலனால் கவனிக்கும் சக்கரத்தைக் கொண்டு மீண்டும் சரியாகக் கணிக்க முடியவில்லை. நீருக்குள் ஒரு நொடி ஒருபுறம் இருந்த அந்தப் பாம்பு மறுநொடி அதற்கு அடுத்தபுறமாக இருந்தது. அதன் அசைவுக்கு ஏற்ப முகிலன் அடுத்த அம்பை ஏய்ய தயாராகக் கவனித்தான்.

அதன் அசைவு மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியில்(pattern) இருக்க அதன் அடுத்த நகர்வைக் கணித்தவன் தொடுத்த அம்பை ஏய்தான். அது அந்தப் பாம்பின் கழுத்து வளைவில் விழுந்தது. இருந்தும் தடித்த தோலுடன் இருந்த அது இறந்துவிடவில்லை. ஆனால் வலியும் கோபமும் தாங்காமல் அந்தப் பாம்பு வேகமாக நீரைவிட்டு வெளி வந்து முகிலனை தாக்கியது.

இவை அனைத்தையும் அமைதியாகப் புதர் மறைவில் வெகுகவனமாக அவந்திகா பார்த்திருந்தாள். ஒருவேளை முகிலன் கையை மீறிச் சூழல் மாறிவிட்டால், உடனே அவனுக்கு உதவ தயாராக இருந்தாள். அவளது கையிலிருந்த கொடியும் இருப்புக் கொள்ளாமல் பரப்பரத்துக் கொண்டிருந்தது.

பாம்பின் திடீர் பாய்ச்சலில் சற்று அதிர்ந்த முகிலன், அதன் தலையைத் தன் வில்லால் ஒரு கையில் தடுத்து, மறுக்கையால் உடைவாளை எடுத்தான். பின் வில்லினை தன் பணியகத்தில் வைத்திருக்க வேண்டும். அது கண்ணிலிருந்து மறைந்தது. தன் இருக்கைகளாலும் வாளைப் பிடித்து அந்தப் பாம்பின் மற்றொரு கண்ணை நோக்கி வீசி மீட்டான்.

ஆனால் இந்த முறை அந்தப் பாம்பு அவன் எண்ணத்தை உணர்ந்திருக்க வேண்டும். சற்றே தன் கழுத்தை விலக்கி அதிலிருந்து தப்பிக் கொண்டது. அதன் பாதி உடல் நீரிலும் பாதி உடல் நீருக்கு மேலும் என இப்படியும் அப்படியுமாகத் தன் உடலை நெளித்தவிதமாகத் தன் எதிரில் இருந்தவனின் கழுத்தை பதம்பார்த்துத் தன் பாம்பு நாக்கை பல முறை நீட்டி மீட்டு தாக்குவதற்கு தகுந்த தருணத்தைப் பார்த்திருந்தது.

அந்தப் பாம்பின் நோக்கத்தை உணராத முகிலன், மீண்டும் அதன் கண்ணை நோக்கி வாள் வீச முயன்றான். ஆனால் அதற்குள் அந்தப் பாம்பு முந்திக் கொள்ள இரு பெரிய பற்களுடன் இருந்த அதன் வாய் முகிலனின் கழுத்தருகில் வந்துவிட்டது.

அதன் செயலை வெகுதாமதமாகவே உணர்ந்த முகிலனின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது. அவன் அந்த ஆபத்தான தாக்குதலிலிருந்து எப்படி தப்புவது என்று யோசிக்குமுன்னே, “கொடிகழுத்தைப் பற்றுஎன்ற குரலும் அதனைத் தொடர்ந்து வெள்ளை நிற நீண்ட நெடிய சேலைப் போன்ற துணியும் அந்தப் பாம்பின் கழுத்தைப் பற்றி இழுத்தது.

எதிர் பாராத அந்தத் தாக்குதலில் அந்தப் பாம்பு பொத்தென்று பாதி நீரிலும், பாதி தரையிலுமென விழுந்தது. அந்தப் பாம்பு மட்டுமல்லாமல் முகிலனுமே இதனை எதிர்பார்க்கவில்லை.

முன்பு கவனிக்கும் (Observing Array) சக்கரத்தை ஏற்படுத்தியப் போதே அவள் அந்தப் புதர் மறைவில் இருந்ததை முகிலன் அறிந்திருந்தான். இருந்தும் அவன் அவளைப் பெரிதாக நினைக்கவில்லை. சாதரண மனித யாளி எதற்காகவோ காடு வந்திருக்க வேண்டும். அவளால் எந்தப் பாதிப்பும் இருக்காது என்றே அலட்சியமாக இருந்தான்.

ஆனால் இப்போது அவளை ஒரு நொடி கூர்மையாக நோக்கி நானே ஐந்து சக்கர நிலையில் இடைநிலையில்(4) இருக்கிறேன். எனக்கே இந்தப் பாம்பு ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த மனித யாளிப் பெண் என்னைக் காப்பாற்றுவதற்கே என்றாலும் எந்தத் தைரியத்தில் இவள் பாம்பிடம் சண்டைப் போட வந்திருக்கிறாள்.’ என்று நினைத்தான்.

பின் அவள் வலது கையிலிருந்து நீண்டிருந்த கயிறு போன்ற அந்த வெள்ளை நிற துணியைப் பார்த்து, ‘இது என்ன புதுவித ஆயுதமாக இருக்கிறது.’ என்று அதன் சக்தியைக் கண்டு வியந்து ஸ்தம்பித்து நின்றான்.

இப்படியாக அவன் இருக்க, அவந்திகாவின் பிடியிலிருந்து அந்தப் பாம்பு விலகுவதைப் பார்த்து அவள் வேகமாகச் செயல் பட்டு, சிறிது ஆன்மீக சக்தியைக் கொடியினுள் செலுத்தி அதன் கழுத்துப் பிடியை இறுக்கினாள். அந்தப் பாம்பு காற்றில் இங்கும் அங்குமாக ஆடிக் கொடியின் பிடியிலிருந்து தப்ப முயன்றது.

காரியமே கண்ணாக மிகத் தீவிரமாக இருந்த அவள் முகம் லேசாகச் சிவந்திருந்தது. அவள், பிடிமானமாக நினைத்தோ என்னமோ அவளது கீழ் உதடை பற்களால் அழுந்தக் கடித்திருந்தாள். பின் ஸ்தமித்து நின்றிருந்த முகிலனை பார்த்து மற்றது மறந்து, “ஏய்…! முகிலன். இன்னமும் என்ன யோசித்துக் கொண்டு நிற்கிறாய். அதனைத் தாக்குஎன்று கத்தினாள்.

அவளது கத்தலில் கவனம் மீண்ட முகிலன், நொடியும் யோசிக்காமல் ஒரே தாவலில் பாம்பின் முதுகில் ஏறி அமர்ந்தான். பின் அந்தப் பாம்பின் கழுத்தில் இங்கும் அங்குமாகக் கிட்டத்தட்ட, பத்து பதினைந்து முறை அவனது வாளால் வீசி மீட்டான்

அது பாம்பின் கழுத்தில் பல கோடுகளை ஏற்படுத்த இரத்தம் பீறிட்டது. பின் அதிக அலரலுடன் அந்தப் பாம்பு சுருண்டு கையளவு பாம்பு வடிவ தகடாகச் சுருங்கி அவந்திகாவின் அருகில் தரையில் விழுந்தது. திடீரென்று பெரியதாக இருந்த பாம்பு துரும்பைப் போல மாறியதில், அதன் பின் அமர்ந்திருந்த முகிலன் பொத்தென்று நீரில் விழுந்தான்.

கொடியும் அதன் பற்றுதலை விட்டு அவந்திகாவின் கையில் வந்து சுற்றிக் கொண்டது. பின் மெதுவாக நடந்து சென்ற அவந்திகா தரையில் விழுந்த அந்தப் பாம்பு தகடை கையில் எடுத்து அதனைக் கவனமாகப் பரிசோதித்தாள்.

அவள் அதிலே கவனமாக இருக்க, நீரிலிருந்து வெளியில் வந்த முகிலனை கவனிக்கவில்லை. அவள் அருகில் வந்து, அவள் கழுத்தருகே தன் வாளை நீட்டி, “யார் நீ?” என்று கேட்டு எச்சரிக்கையான பாவனையுடன் நின்றான்.

Author Note:

(1) ஒருவேளை மறந்திருந்தால் யாளிகாளின் பூர்வீக உருவம்.மகரயாளி ஆடு, மாதங்க யாளி யானை, சிம்மயாளி சிங்கம், பரியாளி குதிரை மற்றும் மனிதயாளி மனிதன்

(2) மனித யாளிகளின் வயது பற்றி நான் முன்பு விளக்கமாகச் சொன்னேனா என்று தெரியவில்லை. ஒருவேளை சொல்லும்போது எல்லா யாளிகளும் குறைந்தது 1000 வருடமென்று சொல்லியிருந்தால், எனக்கு எந்த அத்தியாத்தில் என்று நினைவு படுத்துங்க. நான் அதைச் சரிச் செய்துவிடுகிறேன். மனித யாளிகள் சக்தியில் மட்டுமல்ல, வாழும் வாழ்க்கை முறையிலும் மனிதர்களைப் போன்றவர்கள்தான்.

(3) ரிஷிமுனி – immortal. பொதுவாக மனித யாளிகள் போல்ல்லாமல் மற்ற யாளிகள் நீண்ட காலம் வாழ்வதால், கிட்டத்தட்ட சாகத அல்லது அழிவில்லாதவர்கள் என்பதை குறிக்க அவர்களை அப்படி அழைப்பர்.

(4) ஒவ்வொரு சக்கர நிலையிலும் மூன்று துணைநிலை இருக்கிறது. முதல் நிலை. மத்திம நிலை மற்றும் முற்றிய நிலை. இந்த முகிலம் இப்போது 5 சக்கரத்தில் மத்திம நிலையில் இருக்கிறான்.