“ப்ச்… இல்லடா, நான் ஊட்டில ஹாஸ்டல்ல தங்கி தானே படிச்சேன்… வீட்டுக்கு வர்ற டைம்ல அவ அப்பாவை மட்டும் பார்த்திருக்கேன்… குந்தவை அண்ணன் ஆதித்யாவையும், அம்மாவையும் மட்டும் ஒரு பங்க்ஷன்ல பார்த்திருக்கேன்… இவங்க அப்பா அதிகமா பாமிலியை எங்கேயும் கூட்டிட்டு வர மாட்டார்… அதனால என் குந்தவையை இத்தனை நாள் பார்க்காம மிஸ் பண்ணிட்டேன்…” என்றான் வருத்தத்துடன்.
“ம்ம்… கூட ரெண்டு பிகருங்க வந்திருந்தாங்களே… அது யாரு… அதுல அந்த ஓமனக்குட்டியும் சூப்பரா இருந்துச்சு…”
“ச்சீ போடா… குந்தவை எனக்கு ஜோடின்னா கூட வந்திருந்த பொண்ணுங்க எல்லாம் எனக்கு சிஸ்டர் மாதிரி… என்னோட சிஸ்டர் என் நண்பனுங்க உங்களுக்கும் சிஸ்டர் மாதிரி தானே, அப்படி எல்லாம் பேசக் கூடாது…” என்றான் தேவ்.
“அடப்பாவி… உன் குந்தவையைத் தவிர ஆல் இந்தியன் கேர்ள்ஸ் ஆர் யுவர் சிஸ்டர்னு சொல்லி எங்களை வெளிநாட்டுல பொண்ணு தேட வச்சிருவ போல…”
“விடுடா, விடுடா… உங்களுக்குன்னு ஒரு நீக்ரோவோ, சைனீசோ பொறக்காமலா போயிருக்கும்…”
தேவ் சொல்லவும் அவன் இருபக்கமும் நின்று காதைத் திருகினர் அவன் நண்பர்கள் பார்த்திபனும், கந்தசாமியும்.
“ஆ… வலிக்குது, விடுங்கடா… உங்களுக்கு இன்னைக்கு ட்ரீட் வைக்கலாம்னு நினைச்சேன்…” என்றதும் விட்டனர்.
“ம்ம்… அப்படி வா வழிக்கு… சரி, கிளம்புவோமா…” என்று பார்க்கிங்கில் இருந்த வண்டியை நோக்கி சென்றனர்.
மாலில் இருந்து கிளம்பும்போதே ஓலா வில் குந்தவை டாக்ஸி புக் பண்ணியிருந்தாள். கீழே வந்து பத்து நிமிடக் காத்திருப்பில் டாக்ஸி வர மூவரும் அமர்ந்தனர். அவர்கள் மனது இப்போதும் ஐஸ்க்ரீம் பார்லரில் நடந்த நிகழ்விலேயே இருக்க மூவரும் அமைதியாய் இருந்தனர். வானதி தான் முதலில் பேசினாள்.
“அவன் பிரச்சனை பண்ணனும்னு நினைச்சா இவ்ளோ நாள் சைலன்டா என்னைப் பார்த்துட்டு போவானா…” சொன்னவளின் கண்களில் ஒரு மலர்ச்சி தெரிய அவளையே பார்த்துக் கொண்டிருந்த வானதியின் மனதில், “ஒருவேளை இவளுக்கும் அந்தப் பையனைப் பிடித்திருக்கிறதோ…” என நினைத்தவள் அவனை யோசித்துப் பார்த்தாள்.
ஆறடியை எட்டிப் பிடிக்கும் உருவம்… ஒட்ட வெட்டிய கிராப்பும், கட்டி மீசையும் கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசும் தைரியமும், உண்மையை ஒத்துக் கொள்ளும் நிமிர்வும் அவனை நல்லவன் என்றே மனது சொல்லியது.
“குந்தவை, நீ அந்தப் பையனை இஷ்டப் பெடுனுண்டோ…” வானதி சட்டென்று கேட்கவும் திகைத்தாள்.
ஒரு நிமிடம் அமைதியாய் யோசித்தவள், “அவன் மேல இஷ்டம் இருக்கா இல்லியான்னு தெரியலை… ஆனா இஷ்டப் படறதுக்கு உண்டான தகுதி எல்லாமே அவன்கிட்ட இருக்குன்னு தோணுது…” என்றாள்.
“இதென்னடா பதில்…” என்பது போல் மணிமேகலை தலையை சொறிய வானதி அமைதியாய் பார்த்தாள்.
“நாம அவனைப் பார்த்து கிண்டல் பண்ணறது தெரிஞ்சும் கோபப்படாம, எனக்கு உன்னைப் பிடிக்கும்னு மனசுல உள்ளதை எவ்ளோ தெளிவா தைரியமா சொல்லிட்டு போனான்… சம்திங் கிரேட் இல்ல…” என்றவளின் மயக்கம் கலந்த புன்னகையும் வார்த்தைகளும் அவள் மனம் அவன் பக்கம் சரிந்து கொண்டிருப்பதை உணர்த்த வானதிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
அவன் அழகன் என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாமல் எந்த நம்பிக்கையில் இந்தப் பெண் மனதில் சலனம் கொள்கிறாள் என அவள் மனம் அடித்துக் கொண்டது.
“எப்படியோ, ஆளு செம ஸ்மார்ட்டா இருக்கான்டி… உனக்கு செட் ஆவான்னு தான் தோணுது… இருந்தாலும் அவனைப் பத்தி வேறெதுவும் தெரியாம எந்த முடிவுக்கும் வந்துடாத…”
மணிமேகலை நல்ல தோழியாய் அறிவுரை சொல்ல, “அட அவனைப் பிடிச்சா தப்பில்லைன்னு தானே சொன்னேன்… என்னமோ, அவன் இல்லாம நான் வாழ முடியாதுன்னு சொன்ன ரேஞ்சுக்கு ரெண்டு பேரும் ரொம்ப யோசிக்கறிங்க… கூல் பேபிஸ்…” என்றவள், “நீ வீட்டுக்கு வர்றியா, இல்ல ஹாஸ்டல்ல இறக்கி விடறதா…” என்றாள் மேகலையிடம்.
“டைம் ஆச்சுல்ல, ஹாஸ்டல்ல இறங்கிக்கறேன்…” என்றவள் அவளது துணிக் கவரை எடுத்து இறங்கத் தயாரானாள். அவர்கள் வீட்டுக்கு வந்தபோது சகுந்தலா மட்டும் ஹால் சோபாவில் கண்ணை மூடி அமைதியாய் சாய்ந்திருந்தார்.
“அம்மா…” என்று கத்திக் கொண்டே உள்ளே வந்தவள் அவர் முகத்தைக் கண்டதும் “என்னமா, உடம்புக்கு முடியலையா…” மகள் விசாரிக்க வானதி நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள்.
“ப்ச்… ஒண்ணும் இல்லமா, சும்மா தலை வலிச்சுதுன்னு கண்ணை மூடி உக்கார்ந்திருந்தேன்…”
“காபி எடுக்கட்டே ஆன்ட்டி…”
“வேண்டாம் மா, குடிச்சுட்டேன்…”
“சரி, ரெஸ்ட் எடுக்கு ஆன்ட்டி…”
“ம்ம்… அரை மணி நேரம் கழிச்சு என்னைக் கூப்பிடும்மா… நீ தனியா எதுவும் பண்ணாத…”
“அம்மா, வேணும்னா உலகத் தொலைகாட்சி வரலாற்றில் முதன்முறையாக இந்தக் குந்தவை யூ டியூப் பார்த்து சமைக்கட்டுமா…” என்றாள் மகள் உற்சாகத்துடன்.
அவளை விநோதமாய் பார்த்தவர், “என்னாச்சு உனக்கு, நீ இப்படில்லாம் மறந்து கூடக் கேக்க மாட்டியே…” என்று அவளை ஆராய்ச்சிப் பார்வை பார்க்க சிணுங்கினாள் மகள்.
“சரி, உன்னை ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டு சமைக்கலாம்னு பார்த்தா ஓவரா கேள்வி கேக்கற சகு… சோ, என் கையால சாப்பிடற பாக்கியம் உனக்கு இல்லை… நான் சமைக்கலை…” என்றவள், “ஈஈ…” என்று பழிப்புக் காட்டிவிட்டு செல்ல,
“இவளுக்கு என்னாச்சு… கிறுக்கு ஏதாச்சும் பிடிச்சுகிச்சா…” என்று கேட்டவரிடம் புன்னகைத்துக் கொண்டே, “டிரஸ் மாற்றி வராம் ஆன்ட்டி…” என்று உள்ளே சென்ற வானதியின் மனது, “உங்க மகளுக்கு காதல் கிறுக்கு ஸ்டார்டிங் லெவல்ல இருக்கு ஆன்ட்டி…” என்று சொல்லிக் கொண்டது.
ரெஸ்ட் எடுக்க சென்ற சகுந்தலா நல்ல உறக்கத்தில் இருந்ததால் இரவு தோசை ஊற்ற முடிவு செய்து வானதியே ரெண்டு வகை சட்னி அரைத்து வைக்க தேங்காய் துருவிக் கொடுத்து பெரிய உதவி செய்தாள் குந்தவை.
ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வந்த சுந்தரம் மனைவி உறங்குவதைப் பார்த்து மகளிடம் விசாரிக்க தலைவலியில் படுத்ததாய் சொல்லவும் குளித்துவிட்டு ஹாலுக்கு வந்தார்.
“தோசை தரட்டே அங்கிள்…” வானதி வந்து கேட்கவும், “சரியா பசிக்கல… ரெண்டு தோசை மட்டும் குடு மா…” எனவும் அவள் சந்தோஷத்துடன் அவருக்கு ஓவராய் முறுகாமல் மெதுவாகவும் இல்லாமல் தோசை வார்த்துத் தர ரெண்டு என்றவர் நான்கு தோசையை உள்ளே தள்ளிவிட்டே எழுந்தார். அடுத்து குந்தவையும் சாப்பிட அமர அவளுக்கு முறுகலாய் கொடுத்தாள்.
“குந்தவை, நீ ஆன்ட்டியை விளிக்கு, தோச கழிச்சிட்டு கிடந்தோட்டே…” வானதி சொல்லவும் சாப்பிட்டு முடித்த குந்தவை அன்னையை எழுப்ப, ஒரு கிளாஸ் பால் மட்டும் போதுமென்று அவர் சொல்லிவிட இளம் சூடில் பாலோடு தலைவலிக்கு மாத்திரையும் போட சொல்லி கொடுத்தாள்.
“நீ சாப்பிட்டியாம்மா…” தனக்கு முடியாத நிலையிலும் சகுந்தலா அக்கறையாய் தன்னை விசாரித்தது நெகிழ்வாய் இருக்க, “கழிக்காம் ஆன்ட்டி… நிங்கள் கிடந்தோளு…” என்றவள் தன் வயிற்றுக்கு மூணு தோசையை வார்த்துவிட்டு அருளுக்கு காத்திருந்தாள்.
நேரம் பத்து மணி ஆகியும் அவனைக் காணவில்லை. சுந்தரம் குந்தவையிடம் அவனது எண்ணுக்கு அழைக்குமாறு சொல்ல சிறிது நேரத்தில் வந்து விடுவதாய் சொன்னான்.
சிறிது நேரம் டீவி பார்த்துக் கொண்டிருந்தவர், படுக்க செல்ல பெண்கள் இருவரும் டீவி பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்திலேயே குந்தவை கொட்டாவி விடத் தொடங்க, “சரி, நீ போயி கிடந்தோ… நாள காலேஜ் போவண்டே…” என்று வானதி சொல்ல, “தேங்க்ஸ் வானு… தூக்கம் தள்ளுது, தாங்க முடியல…” என்றவள் ஓடி கட்டிலில் விழுந்தாள்.
பதினொரு மணியாகியும் அருளைக் காணாமல் சோபாவில் அமர்ந்தவாறே உறங்கத் தொடங்கி இருந்தாள் வானதி. முன் கதவை வெறுமனே சாத்தி வைத்திருந்ததால் மெல்லத் திறந்து உள்ளே வந்த அருள் சோபாவில் அமர்ந்தபடி உறங்கும் வானதியைக் கண்டு நின்றான். அதற்குள் அந்த ஓசையில் உறக்கம் கலைந்து உணர்ந்திருந்த வானதி அவனிடமிருந்து புதிதாய் வீசிய மது வாடையில் முகத்தை சுளிக்க வேகமாய் அறைக்கு சென்று விட்டான்.