கீர்த்தனா அருகில் சென்றவர் அவள் கன்னத்தை பிடித்து அவளையே இமைக்காமல் பார்த்த படி “மகேன் நீ உண்மையா தான் சொல்றியா?”, என்று கேட்டார். 
“ஆமா மாமா. சில கேடு கெட்டவங்களுக்கு பயந்து தான் பாதர் சகாயம் இவளை மறைச்சு வச்சிருந்துருக்கார். மேரி அம்மா தான் உண்மையைச் சொன்னாங்க. அப்புறம் உங்களுக்கே தெரியலையா? அவ அப்படியே லட்சுமி பாட்டி மாதிரியே இருக்குறா”
“கீர்த்தனா”,என்று உச்சரித்தவர் அவள் கன்னத்தை தடவிய படியே மயங்கிச் சரிந்தார். “அப்பா”, என்ற அலறலுடன் அவரைத் தாங்கிப் பிடித்தாள் கீர்த்தனா. 
அனைவரும் ஒரு நிமிடம் திக் பிரம்மைப் பிடித்து நின்று விட்டார்கள். சரவணன், நிர்மலா, துர்கா முகம் வெளுத்துப் போனது. ரேகாவோ வயிற்றெரிச்சலுடன் நின்றாள். 
திலீபனோ எதுவோ மனதுக்கு பிடிக்காத உண்மை வெளியே வரப் போகிறது. அதை தாங்க சக்தி வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தான். நந்தினியும் பவித்ராவும் அதே குழப்பத்துடன் தான் நின்றார்கள். 
மயங்கிக் கிடந்த பிரசாத்தை அங்கிருந்த சோபாவில் படுக்க வைத்த மகேந்திரன் விஜி கொண்டு வந்த தண்ணீர் தெளித்து அவரை எழுப்பினான். 
சிறிது டீயை அவருக்கு புகட்டினாள் கீர்த்தனா. பிரசாத்தோ கீர்த்தனாவையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். 
கீர்த்தி என்ற அவரின் ஏக்கமான குரல் அவளை இளக்கினாலும் அதே அளவு பாசத்தை அவளால் திருப்பி காட்ட முடிய வில்லை. கிரிஜா அனுபவித்த வலிகள் நினைவு வந்து அவளை சாதாரணமாக இருக்க விட வில்லை.
அதை அவரும் உணர்ந்து தான் இருந்தாரோ என்னவோ? கிரிஜாவை கண்டுக்காம இருந்துட்டேனே? அவ காதலுக்கு உண்மையா இல்லையே என்று புலம்ப ஆரம்பித்தார். 
திலீபனோ வெறித்து பார்த்த படி நின்றிருந்தான். அவனுடைய அப்பா அவனை ஆசையாக தூக்கியதில்லை தான். ஆனால் இப்படி தங்களுக்கு மட்டுமல்லாமல் இன்னொரு பெண்ணுக்கும் தந்தையாக இருப்பார் என்று அவன் எண்ணவில்லை. தன் தாய் ஏமாற்றப் பட்டுவிட்டாளோ  என்று அவன் தீவிரமாக எண்ணிக் கொண்டிருந்தான். 
அதுவும் கீர்த்தனாவிடம் அவர் காட்டும் பாசம் அவனை பொறாமைத் தீயில் தள்ளியது. அப்போது அவன் காலருகில் நின்ற அருண் தன்னை தூக்கு என்றதும் மகனை வாரி இறைத்துக் கொண்டான். தனக்கு கிடைக்காத தந்தையின் பாசத்தை அவன் அருணுக்கு எப்போதுமே கொடுக்க வேண்டும் என்று முன்னமே முடிவெடுத்திருந்தான். இப்போது மனதில் பாரம் அழுத்த அதற்கு ஆறுதலாக தன் மகன் இருப்பது போல அவனை அணைத்துக் கொண்டான். 
அவன் மனது உணர்ந்த பவித்ராவும் அவன் கையோடு தன் கையை பிணைத்துக் கொண்டாள். அந்த நேரம் அவளின் ஆறுதல் திலீபனுக்கு தேவையாக இருந்தது. 
பிரசாத் கீர்த்தனாவிடம் பாசத்தைக் காட்டிக் கொண்டிருக்க அதை தாங்க முடியாமல் சரவணன், நிர்மலா, துர்கா மூவரும் துடித்தார்கள். 
அதற்கு மேல் அதை பொறுக்க முடியாமல் “மகேன் நீ என்ன பண்ணிட்டு இருக்கன்னு புரியுதா? நம்ம வீட்டுக்கு நர்சா வந்த ஒரு பொண்ணை திருப்பியும் கூட்டிட்டு வந்து உன் மாமாவோட பொண்ணுன்னு சொல்ற? அது மட்டுமில்லாம வேற என்னல்லாமோ சொல்ற? இதனால உன் அத்தை மனசு என்ன பாடு படும்னு யோசிச்சியா? ஒழுங்கு மரியாதையா அந்த பொண்ணை வெளிய அனுப்பு”, என்றார் சரவணன். 
“யாரு யாரை வெளிய அனுப்பனும்? இது கீர்த்தனா வீடு. அவ தான் நம்ம எல்லாரையும் வெளிய அனுப்பனும். அவ மாமாவோட பொண்ணு தான். உண்மை எப்பவும் கசக்க தான் செய்யும் அப்பா. ரகசியம் எப்போதும் புதைந்தே இருக்குறது இல்லை. ஒரு நாள் வெளிய வர தான் செய்யும். கிரிஜா அத்தை யாருன்னு உங்களுக்கு தெரியாதா? இதை நான் நம்பனுமா? கீர்த்தனா இனி இங்க தான் இருப்பா. கூடிய சீக்கிரம் எனக்கும் அவளுக்கும் மாமா தலைமைல கல்யாணம் நடக்கும்”
“நடக்காது, நடக்க விட மாட்டோம். நீ ரேகாவைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும்”, என்றாள் நிர்மலா. 
“அதை நீங்க சொல்லக் கூடாது. நான் தான் சொல்லணும். அப்புறம் நீங்க என் பேர்ல எழுதி வச்ச சொத்து எல்லாம் நான் கீர்த்தனா பேர்ல எழுதி வச்சிட்டேன். திலீபன் பவித்ரா பேர்ல இருக்குறதை தவிர மத்த எல்லாமே இப்ப கீர்த்தனா பேர்ல தான் இருக்கு. உடனே உங்க குறுக்கு புத்தியால நீங்க அவளை ஏதாவது செஞ்சா…. நான்  செய்ய விட மாட்டேன். அப்படி ஏதாவது நடந்தா கூட சொத்து எல்லாம் தர்மத்துக்கு போகும். அப்புறம் நான் சொத்தை மாத்தி எழுதும் போதே கீர்த்தனா மேல ஒரு கீறல் விழுந்தா கூட அதுக்கு நீங்க மூணு பேர் தான் காரணம்னு போலீஷ்ல எழுதிக் கொடுத்துட்டேன். பழைய கேசையும் கிளற வைக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். கிரி மத்த எல்லாருக்கும் இந்த உத்தமமானவங்களைப் பத்தி எடுத்து சொல்லு”
“மகேன், அப்ப என் மகளுக்கு என்ன வழி சொல்லப் போற?”, என்று கேட்டாள் துர்கா. 
“உங்க மகளுக்கு என்கிட்ட வழி கேட்டா நான் என்ன சொல்ல முடியும்? நீங்க தான் வழி ஏற்படுத்திக் கொடுக்கணும்?”

“முதல்ல இவ அம்மா என் புருஷனை மயக்கினா. இப்ப மக உன்னை மயக்கிட்டாளா?”
“அப்பா கூட பிறந்த அத்தைன்னு பாக்குறேன். இந்த மாய்மால பேச்சை எல்லாம் என்கிட்ட வச்சிக்காதீங்க. அடுத்தவங்க கணவன் மேல ஆசைப் பட்டு அவங்க வாழ்க்கையை தட்டிப் பறிச்சது நீங்க. அந்த அசிங்கம் எல்லாம் உங்களுக்கு எங்க இருக்கப் போகுது? உங்க குணத்தோடே பிறந்துருக்காளே உங்க மக. என்ன அப்படி பாக்குறீங்க? கிரியை லவ் பண்ணுறேன்னு அவன் பின்னாடியே அலைஞ்சு கடைசில என் கூட கல்யாணம்னு சொன்னதும் பல்லைக் காட்டினவ தானே? உங்க குணம் உள்ள எவனையாவது கட்டி வைங்க. இவ்வளவு தான் உங்களுக்கு மரியாதை”, என்றவன் “விஜி, என்னோட ரூமுக்கு பக்கத்து ரூமை கீர்த்திக்கு ரெடி பண்ணு”, என்று சொல்லி விட்டு பிரசாத் மற்றும் கீர்த்தனாவை அழைத்துக் கொண்டு பிரசாத் அறைக்கு சென்று விட்டான். 
உள்ளே சென்றதும் பிரசாத் ஏதேதோ புலம்பிக் கொண்டிருந்தார். அவருடைய அன்பை கீர்த்தியிடம் காட்ட முயற்சி செய்தார். ஆனால் அவளோ யாரோ பேசுகிறார் என்ற மனநிலையில் அமர்ந்திருந்தாள். 
“மாமா கொஞ்சம் பொறுமையா இருங்க. கிரிஜா அத்தை பத்தி தெரிஞ்சதுல இருந்து கீர்த்திக்கு உங்க மேல கொஞ்சம் கோபம் இருக்கு. காலப் போக்குல தான் அது போகும். உங்க மக உங்க கூட இருக்கான்னு சந்தோஷப் படுங்க. அவ மனசு மாறுறதுக்கு கொஞ்சம் டைம் கொடுங்க”, என்றதும் சரி என்ற பிரசாத் தன்னுடைய மனதையும் தேற்றிக் கொண்டார். 
அப்பா அப்பா என்று தன்னுடைய மகள் தாங்க வில்லை என்றாலும் தன்னுடன் ஒரே வீட்டில் இருப்பதே போதும் என்று எண்ணிக் கொண்டார். 
“கிரி என்ன தான் டா நடக்குது இங்க? ஷோபனா தானே அவ பேர். இப்ப கீர்த்தின்னு சொல்றான். கிரிஜா யாரு? எனக்கு குழப்பமா இருக்கு”, என்று பவித்ரா சொல்ல “ஆமா எனக்கும் ஒண்ணும் புரியலை”, என்றாள் நந்தினி. 
உடனே கிரி சரவணன், நிர்மலா, துர்காவை முறைத்து பார்க்க அவர்கள் மூவரும் அந்த இடத்தை விட்டு காலி செய்தார்கள். பவித்ரா, நந்தினி, திலீபன், ரேகாவுக்கு நடந்த கதை அனைத்தையும் சொன்னான்  கிரி. உண்மை தெரிந்த அத்தனை பேருக்கும் அது அதிர்ச்சி தான். கீர்த்தியின் வேண்டுகோளின் படி கிரிஜாவின் கடைசி மூச்சை நிறுத்தியது பிரசாத் தான் என்று மட்டும் யாரிடமும் அவன் சொல்ல வில்லை. 
கல் மனம் கொண்ட ரேகாவே தன்னுடைய தாயா இப்படி என்று தான் நினைத்தாள். திலீபன் மன நிலையோ சொல்லவே வேண்டாம். தன்னுடைய தந்தையின் பாராமுகத்துக்கு காரணமும் அதற்கு தன்னுடைய தாயே காரணம் என்றும் புரிந்தது. 
அதுவும் இறந்து போன கிரிஜாவை எண்ணி அனைவருக்கும் மனம்
பாரமாக ஆனது. 
ஏனோ திலீபனால் இனிமேலும் இங்கே இருக்க முடியும் என்று தோன்றவில்லை. தன்னுடைய தாய்க்கு மானம் ரோஷம் எதுவும் இல்லை என்று புரிந்தது,. ஆனால் தன்னுடைய தந்தையின் மகள் கீர்த்தனா இங்கே இருக்க தானும் இந்த வீட்டில் சகஜமாக இருக்க முடியாது என்றும் அவளை அக்கா என்று தன்னால் சொல்ல முடியாது என்றும் புரிந்தது., 
தங்களுடைய அறையில் தனிமையில் “பவி, நாம பாரின் போகலாமா?”, என்று கேட்டான்.
சொந்த ஊரை விட்டு அவன் கிளம்பலாம் என்று சொன்னால் அவனுக்கு எவ்வளவு மனவேதனை இருக்கும் என்று புரிந்தவள் “கிளம்பலாம்ங்க. எனக்கும் இங்க அம்மா, அப்பா, அத்தைன்னு யாரோட முகத்தையும் பாக்க பிடிக்கலை. இங்கயே இருந்தா நம்ம பிள்ளைங்களோட வாழ்க்கையிலும் அவங்க பாவத்தின் நிழல் படியும். நாம போகலாம்”, என்று சொன்னாள். 
“சரி, நான் எல்லாம் அரெஞ்ச் பண்ணுறேன்”
“ஆனா, நம்ம மகேன் அண்ணன் கல்யாணம் முடிஞ்ச அப்புறம் போவோமா?”, என்று தயக்கத்துடன் கேட்டதும் சரி என்றான் திலீபன். 
அடுத்த நாளே அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று எண்ணியவன் ரேகாவிடம் “நான் உனக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்குறேன். என் கூட நீ பாரின் வரியா?”, என்று கேட்க அவள் என்ன சொல்ல என்று தெரியாமல் தடுமாறினாள். 
ஏனோ அவளுக்கு கிரி, மகேந்திரனை நிம்மதியாக விட்டு விட வேண்டும் என்று தோன்றவில்லை. அவள் யோசித்ததும் “அண்ணனா உன்னோட கடைமையை செய்யணும்னு நினைச்சேன். உனக்கே விருப்பம் இல்லை. எனக்கென்ன? எப்படியோ போ”, என்று சொல்லி விட்டு திலீபன் சென்று விட்டான்.
அடுத்த நாள் காலை குளித்து முடித்து தன்னுடைய அறையில் அமர்ந்திருந்தாள் கீர்த்தனா. 
அவளை போனில் அழைத்த மகேந்திரன் “சாப்பிட வா”, என்று அழைத்தான்.
பழைய நிலையையும் புதிய நிலையையும் எண்ணிய படியே அவள் கீழே சென்றாள். பிரசாத் கூட அதிசயமாக டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தார். அது கீர்த்தனாக்காக என்று அனைவருக்கும் புரிந்தது.
“வா கீர்த்தி மா”, என்று வரவேற்றார் பிரசாத். அவள் மகேந்திரனுக்கும் பிரசாத்துக்கும் இடையில் இருந்த சேரில் அமர்ந்தாள். அவர்களுக்கு இடையில் இருப்பது தான் தனக்கு பாதுகாப்பு என்றும் புரிந்தது. 
“உங்க நல்ல மனசை புரிஞ்சிக்காம தப்பா பேசிட்டேன். என்னை மன்னிச்சிருங்க அண்ணி”, என்று முழு மனதுடன் மன்னிப்புக் கேட்டாள் நந்தினி. 
ஒரு புன்னகையில் அதை அங்கீகரித்தாள் கீர்த்தி. திலீபனும் பவித்ராவும் அங்கே வரவில்லை. விஜி போய் அழைத்ததற்கும் “அப்புறம் வறோம்”,என்று சொல்லி விட்டார்கள். 
அப்போது அங்கே சரவணன், நிர்மலா வர ஒரு ஆழ்ந்த மௌனம் நிலவியது அவர்களுக்குள். 
நிர்மலா அங்கிருந்த சேரில் அமரப் போக “மகேன் நான் நிம்மதியா என் பொண்ணு கூட உக்காந்து சாப்பிடலாம்னு வந்துருக்கேன். கண்டவங்க இங்க வந்து உக்கந்தா என்னாலயும் நிம்மதியா சாப்பிட முடியாது. அவங்களை அப்புறமா சாப்பிட சொல்லு”, என்று சொல்லி விட்டார் பிரசாத். 
அதில் முகம் சுருங்கிப் போய் இருவரும் சென்று விட்டார்கள்.  கிரி, நந்தினி, மகேந்திரன், கீர்த்தனா, பிரசாத், அவர்களுடன் குட்டி அருண் என்று அனைவரும் அமர்ந்து பேசிய படியே உணவு உண்டனர்.