அத்தியாயம் – 1
அமைதியான அந்த முதியோர் இல்லம், சென்னையின் பரபரப்பிலிருந்து சற்று வெளியே அமைந்துள்ளது. வார நாளின் ஆரவாரம் எதுவுமின்றி காலைப் பொழுது அங்கிருந்தவர்களுக்கு எப்போதும் போல் பொறுமையாக நகர்ந்துகொண்டிருந்தது.
அந்த அறையில் இருந்த விசாலமான இரு மேசைகளை சுற்றி அறுபது, எழுபது வயது மதிக்கத்தக்க ஆண்களும் பெண்களுமாய் பத்து முதியவர்கள் ஆர்வமாய் வண்ணக் காகிதங்கள் கொண்டு எதையோ மும்மரமாக மடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை சுற்றி வந்து சின்ன சின்ன திருத்தங்கள் சொல்லியவாறே அவர்கள் செய்வதை மெச்சிக்கொண்டிருந்தாள் மதுவந்தி.
இருபத்தி மூன்று வயதில், ஐந்தரை அடி உயரத்தில், ஒல்லி என்று சொல்லாதபடிக்கு சற்றே பூசினார் போன்ற தேகம். சென்னை வெயிலுக்கும் கருக்காத கோதுமை நிறம், திருத்தமான முகவெட்டு, யாரையும் திரும்பிப் பார்க்கவைக்கும். பார்த்தவுடன் எளிதில் பழகிவிடத்தோன்றும் மதுவந்தியின் பார்வையும் பேச்சும். அதனாலேயே வயது வித்தியாசமின்றி பலதரப்பட்ட ஃப்ரெண்ட்ஸ்.
“என்னவோடிமா, சின்ன புள்ளைங்களாட்டம், பேப்பர்ல மடிச்சி மடிச்சி செய்ய வெக்கற. எங்க காலத்துல கப்பல், மிஞ்சி போனா கத்திக் கப்பல் செய்வோம். இப்பதான் இந்த வாத்து மயிலுன்னு செய்ய சொல்ற.”, ராணி பாட்டி அவர் தோழிக்கு வரும் அளவு தனக்கு வரவில்லை என்ற பொறாமை தலை தூக்க நொடித்தார்.
“இதுக்கு ஆரிகாமின்னு பேரு மாமி. ஜப்பான் நாட்டு கலை தெரியுமா ? உங்க ஞாயபக சக்திக்கு, விரலுக்கு எக்ஸர்சைஸ். இன்னும் கொஞ்சம் அழுத்தி மடிங்க.”, என்று பொறுமையாக அவருக்கு சொல்லிக் கொடுக்க, மீண்டும் அவளது கைபேசி அதிர்ந்து , யாரோ அழைப்பதைக் காட்டியது.
“போய் யாருன்னு பாருமா, பத்து நிமிஷத்துல ரெண்டு வாட்டி கூப்பிடறாங்கன்னா எதாச்சம் முக்கியமா இருக்கப் போகுது.”, என்றார் சபேசன் தாத்தா.
காலைல பத்து மணிக்கு யாரு என்ற லேசான எரிச்சலில் சற்று தள்ளியிருந்த மேசையில் ஒளிர்ந்த போனைப் பார்த்தவள், ‘சுப்பு காலிங்’ என்று பார்த்ததும், உடனே எடுத்தாள்.
‘பாட்டி கூப்பிடாம சுப்பு ஏன் கூப்பிடுறார் அதுவும் அவர் போனிலிருந்து’, என்று எண்ணம் ஓட, அதற்குள் கால் அட்டெண்ட் செய்து ‘ஹலோ, சுப்பு மாமா ?”
“அம்மா மது, பாட்டிக்கு முடியலைன்னு ஹாஸ்பிடல் வந்திருக்கோம். லாயர் ஐயா உன்னை கிளம்பி வர சொல்றார்மா.”, என்று குரல் நைந்து வந்தது.
“என்னாச்சு மாமா ?, பதட்டப்படாம சொல்லுங்க. பாட்டி எப்படி இருக்காங்க ?”, மனம் திக்கென்றாலும் காட்டிக்கொள்ளாமல் பேசினாள்.
“காலைல மூச்சு விட ஒரு மாதிரி இருக்கு சுப்புன்னாங்க பாட்டி. நம்ம டாக்டரை வர சொன்னேன். உடனே வந்தவரு, அவர் கார்லயே அவர் நர்சிங் ஹோம் அழச்சிட்டுபோய் ஆக்சிஜின் வெச்சார். ஆனா ஆம்புலன்ஸ் வெச்சி கோயம்பத்தூர் போயிடலாம்னு லாயருக்கு செய்தி சொல்லிட்டு, அவரும் எங்களோடவே வந்தாரு.”, சுப்பு நிறுத்தவும்,
“என்னாச்சு பாட்டிக்கு, எந்த ஹாஸ்பிடல்ல இருக்கீங்க ?”, மதுவந்திக்கு இதயம் வேகமாக துடிக்கத் துவங்கியது.
“ராமகிருஷ்ணாலதான் சேர்த்திருக்கோம்மா. பாட்டிய ஐ.சி.யு கூட்டிட்டு போயிட்டாங்க, லாயர் சார் வந்து டாக்டர பார்த்து பேசிகிட்டு இருக்காங்க. உங்களுக்கு விவரம் சொல்லி வர சொல்லிட்டு போனாரு ஐயா.”, பாட்டிக்கு கிட்டதட்ட முப்பது வருடங்களாக சமைத்துப்போட்டு, அவரை பார்த்துகொண்டிருக்கும் சுப்பு ஒரு மகனுக்கான தவிப்போடு பேசினார்.
இதைக்கேட்டு உள்ளம் அதிர்ந்தாலும், “ பாட்டிக்கு ஒண்ணும் ஆகாது, சும்மா நம்ம பயம் காட்டிட்டு சரியாகிடும். நான் அடுத்த பிளைட்ல கிளம்பறேன் சுப்பு. அது ஆசை பேரனுக்கு சொன்னீங்களா ? அவன் குரல் கேட்டாலே எழுந்து உட்கார்ந்துக்கும்.”, அவரை சற்று தேற்றினாள்.
“போன் போகலைமா, ரெண்டு மூணு தரம் பண்ணிட்டேன்.” மது எதிர்பார்த்தபடியே, சுப்பு சற்று தெளிந்தார்போல் பேசினார்.
‘அவன் கூடவே இருக்கிற அல்லக்கைக்கு அடிக்க வேண்டியதுதானே ?”
“சபரி தம்பி நம்பர் வீட்ல டையரில இருக்குமா, என் போனுல இல்லை.”
“சரி, நான் சொல்றேன். நீங்க எழுதிகிட்டு அவனை கூப்பிடுங்க. நான் கிளம்பி வர ஏற்பாட்டைப் பார்க்கணும். “
அவர் பேனா ஏற்பாடு செய்ததும், பார்த்து வைத்த சபரியின் கைபேசி எண்ணைக் கொடுத்தவள், “ ப்ளேன் ஏறதுக்கு முன்னாடி, லாயர் அங்கிளை கூப்பிடறேன்னு சொல்லுங்க சுப்பு. தைரியமா இருங்க. நான் நேர ஹாஸ்பிட்டலுக்கே வரேன்.”
போனை வைத்து விட்டு ஒரு நொடி முழித்தவள், சுதாரித்து, அவள் எடுத்துக் கொண்டிருந்த முதியோர் ஆரிகாமி கிளாசை அத்துடன் முடித்துக்கொண்டு அவர்களிடம் விடை பெற்றாள்.
போனில் அடுத்த கோயம்பத்தூர் விமானம் ஒன்றரை மணி நேரத்தில் இருக்க, அவள் தோழி ஸ்வாதிக்கு அழைத்தாள்.
“ஸ்வாதி, பாட்டிய ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்க. அடுத்த கோயம்பத்தூர் ப்ளைட் பன்னெண்டு மணிக்கு இருக்கு. நீ எனக்கு அதுல டிக்கெட் புக் பண்ணிட்டு , காப்பி ஈமெயில் பண்ணு. நான் இப்படியே ஏர்போர்ட் கிளம்பறேன். “
“ஹோ, சரி நான் பார்த்துக்கறேன். நீ வீட்டுக்கு போறியா, பாக் பண்ண ?”
“இல்லை, இங்க ஹோம் வந்தேன். இப்படியே ஏர்போர்ட் பக்கம். வீட்டுக்கு போனா, லேட் ஆகிடும். வேணுங்கறது அப்பறம் அங்கயே வாங்கிக்கறேன். காரை இங்கயே விட்டுட்டு நான் ஓலால போறேன். நீ அப்பறம் வந்து எடுத்துகிறயா ?”
அவளோடு பேசி முடித்து, ஓலா காரில் அமர்ந்ததும், அடுத்து என்று யோசித்தவள் , வீட்டுக்கு சொல்லணுமே என்று நினைத்தாள். அப்பா, அம்மா யாரும் இப்ப போன் எடுக்க மாட்டாங்க. அம்மா அழகு நிலையத்தில் வயதை குறைக்கும் முயற்சியில் இருப்பார். அப்பா, பிசினஸ் மீட்டிங் என்று இருப்பார். அப்படியே சொன்னாலும் ஒன்றும் பதறப் போவதில்லை. ஒரு முடிவுடன், விஷயத்தை எழுதி, அதனால் கோயம்பத்தூர் செல்வதாக இருவருக்கும் மெசெஸ் தட்டி விட்டதோடு கடமை முடிந்தது என்று நினைத்துக் கொண்டாள்.
ஏர்போர்ட் அடைந்து செக்கின் முடிந்து உள்ளே வந்தவள், ஒரு காபியுடன் பாட்டியின் லாயர் நவனீதனை அழைத்தாள்.
“மது, எப்பமா வருவ ?”, என்றார் நவனீதன் எடுத்தவுடனே.
“ஏர்போர்ட்லதான் இருக்கேன் அங்கிள். பன்னெண்டு மணிக்கு கிளம்புது. பாட்டிக்கு என்ன ? இப்ப எப்படி இருக்காங்க ?”, கேள்விகளை அடுக்கினாள்.
“கொஞ்சம் சிவியர் ஹார்ட் அட்டாக்மா. வயசும் ஆகிட்டது. டாக்டர்ங்க ட்ரை பண்றாங்க, உடம்பு சிகிச்சையை தாங்கணுமே. அதுதான். பவர்ஃபுல் மெடிசன் எதுவும் சட்டுன்னு குடுக்க முடியாது. நடுவுல நினைவு வரவும் உன்னையும் ஆதியையும்தான் கேட்டாங்க. “
அவர் சொல்ல சொல்ல கண்களில் நீர் பெருகியது மதுவிற்கு.
“அங்…அங்கிள்…”
“சீரியஸ்தான். ஆனா தைரியமா இரு. நல்லதையே நினைப்போம். நீயாச்சம் உடனே வா. ஆதி டெல்லி ப்ளைட்ல இருக்கானாம். அவன் இறங்கி திரும்ப கிளம்பி வர நைட் ஆகிடும் போல.”
அடக் கடவுளே என்று நினைத்தவள், “சரி அங்கிள், நேர்ல பார்க்கலாம்.”, என்று கைபேசியை அணைத்து, விமானதில் ஏற ஆயத்தமானாள்.
ஜன்னலோரம் சீட் புக் செய்திருந்த தோழியை மெச்சியவள், அமர்ந்து சீட் பெல்ட்டைப் போட்டு , சாய்ந்து, கண்களை மூடினாள்.
கண்ணுக்குள் முதல் முதலாய் அவள் பாட்டியைப் பார்த்த ஞாபகம் வந்தது. தனலக்ஷ்மி பாட்டி. சென்னையில் ஒன்பதாம் வகுப்பு ஆரம்பித்த சமயம், வகுப்பிற்கு மட்டம் போட்டு சினிமா சென்று சிக்கி கலாட்டா ஆகவும், அவள் தந்தை மனோகர் ‘ஹாஸ்டலில் சேர்க்கிறேன். அப்போதுதான் ஒழுக்கம் வரும் ‘, என்று ஊட்டி கான்வெண்டில் சேர்த்துவிட்டார்.
அவருக்குத் தெரியும், அவர் கிழக்கே சென்றால், மனைவி மேற்கே சென்று விடுவாள். மகள் கண்டிக்க ஆளில்லாமல் வேண்டாத பழக்கமெல்லாம் பழகிவிடுவாளோ என்று பயம். மதுவிற்கோ, இப்படி முகம் கொடுத்துப் பேசிக்கொள்ளாத வீட்டிலிருப்பதை விட ஹாஸ்டலில் இருப்பது தேவலாம் என்று தோண, சம்மதித்தாள். தாய் பரிமளாவிற்கோ, மகள் ஊட்டி கான்வெண்டில் படிக்கிறாள் என்று சொல்லிக்கொள்வது அவர் சர்க்கிளில் பெருமை, கூட மகளுக்காக என்று இனி வீடு தங்க வேண்டியதில்லை. வேண்டுமட்டும் ஊர் சுற்றலாம்.
இப்படியாக ஊட்டி வந்தவர்களை, தனலக்ஷ்மி குன்னூரிலிருக்கும் தன்னை பார்க்க வரச் சொல்லியிருந்தார். மனோகரின் தந்தை கோவிந்தனும் , தனலக்ஷ்மி பாட்டியின் கணவர் ராமசாமியும் உடன் பிறந்தவர்கள். பள்ளியில் லோக்கல் கார்டியனாக தன்னைப் போடச் சொல்லியிருந்தார் தனம். பெரியப்பா தவறிய பின் , பெரியம்மாவுடன் பெரிதாக போக்குவரத்து இல்லாவிடினும், அருகே இருக்கிறார்கள் என்பதே ஒரு பாதுகாப்பு என்று அவர் பெயரையே கொடுத்துவிட்டு, தனம் பாட்டியின் வீட்டிற்கு குடும்பத்தை அழைத்து வந்திருந்தார் மனோகர்.
ஐந்தடிக்கு சற்று மேலேதான் உயரம். மானிறம். பூசிய உடல்வாகு. நெற்றியில் விபூதி, அழகான வெளிர் மஞ்சள் நிற காட்டன் சேலையில் முகம் முழுதும் சிரிப்பாய் வரவேற்ற தனலக்ஷ்மி பாட்டியை பார்த்ததும் சட்டென்று பிடித்தது. அவர் சொன்ன “ஹாய் மது”, தானாய் ஒரு புன்னகையை வரவழைத்தது மதுவின் முகத்தில்.
குறை சொல்ல முடியாத பாட்டியின் விருந்தோம்பலில் அம்மா அப்பா கூட கொஞ்சம் இணக்கமாக இருந்தது போலத் தெரிந்தது.
“வா மது. உன் ரூம் காட்டறேன்.” என்று அழைத்தார்.
“இல்ல பாட்டி, இப்ப கிளம்பிடுவோமே, எதுக்கு ரூம் ?”, என்ற மதுவை கைப்பிடித்து அவருடன் மாடிக்கு அழைத்து சென்றவாறே,
“இங்க நீ எப்ப வந்தாலும் தங்கிக்க உனக்கு ஒரு ரூம் ரெடி பண்ணிருக்கேன். ஹாஸ்ட்டல் சாப்பாடு பிடிக்கலை, ரெண்டு மூணு நாள் சேர்ந்தாப்பல லீவ் வந்தா, இங்க வந்துடு. என்னோட இல்லைன்னாலும், உன் வயசு பிள்ளைங்களும் இங்க பக்கத்துல இருக்காங்க. அவங்களோட உனக்கு பொழுது போகும்.”, என்று அவள் அறையைக் காட்டினார்.
அறையைவிட அந்திருந்த ஜன்னலில் அவள் பார்த்த பச்சைபசேல் என்ற இயற்கையும், மலைகளும் மிகவும் பிடித்தது மதுவந்திக்கு.
“உனக்கு பிடிச்சிருக்காமா ? என்னோட வந்து அப்பப்ப இருக்கியா ?”, அவர் ஆர்வத்தோடு அவள் முகம் பார்க்கவும், அவளை அறியாமலே தலை ஆடியது.
“சரி. வந்து உங்களோட இருக்கேன் பாட்டி.”
பாட்டி முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. “உனக்கு பிடிச்ச மாதிரி இருக்கலாம் சரியா ? நீ போன் பண்ணு, நான் கார் எடுத்துட்டு வந்து உன்னை கூட்டிட்டு வரேன்.”, என்றார்.
“நீங்க கார் ஓட்டுவீங்களா பாட்டி ?”, ஆச்சரியமாக கேட்கவும் , “ அது எதுக்கு நமக்கு ? உன் தாத்தா இருந்த வரை அவர்தான் எனக்கு ட்ரைவர். நான் கத்துக்கவே இல்லை. இப்ப சுப்புதான் சமையலோட எனக்கு காரும் ஓட்டுவான். என் பேரன் வந்தா, அவன் என்னை கூட்டிட்டு போவான்.”, பேரனைப் பற்றி சொல்லும்போதே பெருமை பொங்கியது,
“பெங்களூர்ல காலேஜ் படிக்கறான். அடுத்த லீவுல வரதா சொல்லிருக்கான்.”, அவள் கேட்காமலேயே தகவல் தந்துகொண்டிருந்தார்.
“பேரனை ரொம்ப பிடிக்குமா பாட்டி ?”
சிரித்தவர், “ஆமாம், என் தம்பியோட பிள்ளை வழி பேரன் ஆதித்யன். “
பாட்டிக்கு குழந்தை இல்லை என்று அப்பா சொன்னது போல ஞாபகம். மதுவந்தி பாட்டியிடம் கேட்டுக்கொள்ளவில்லை. அப்போது ஆரம்பித்த உறவு, அவள் மிகவும் நேசிக்கும் நபராகிப் போனார் தனலக்ஷ்மி பாட்டி.
பாட்டியோடு சீக்கிரமே ஒன்றிக் கொண்டாள் மது. பாசத்திற்கு ஏங்கிய உள்ளம், பாட்டி அதை அள்ளிக் கொடுக்க சட்டென்று பற்றிக்கொண்டது. கிடைக்கும் சிறிய விடுமுறைக்கெல்லாம் குன்னூர் வந்துவிடுவாள். வருடாந்திர விடுமுறை மட்டுமே சென்னைக்கு வருகை என்றானது. இடையில் அவள் தந்தை எப்போதேனும் வந்துவிட்டு போவார்.
மதுவந்தி விடுமுறையில் அவள் வயது தோழிகளோடு சுற்றியதைவிட, பாட்டியோடு அவள் அடித்த கொட்டம் சொல்லி மாளாது. குழந்தையைப்போல குதூகலமான மனது பாட்டிக்கு.
“ம்ம்.. பாட்டின்னு சொன்னாலே கோவம் வந்துடும். நோனா, இப்போதெல்லாம் நோனா என்றுதான் அழைப்பது. அவள் தனம் பாட்டியின் ஆர்டர். புன்னகை தவழ்ந்தது மதுவந்தியின் முகத்தில்.