அத்தியாய்ம் – 9
‘தனியாக எங்கே பாவனாவை மேகன் அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருக்கிறான்’ என்று அதிர்ந்த அவந்திகா ‘எங்கே?’ என்று கேள்வியாகப் பாவனாவை பார்த்தாள்.
அப்போது தன் நாற்காலியிலிருந்து எழுந்த மேகன் “நீ எல்லோரிடமும் சொல்லிவிட்டு வா நான் ஓய்வறை(Restroom) சென்றுவிட்டு வருகிறேன்.” என்று எழுந்து அனைவரிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.
அவந்திகாவின் முகத்தில் அவளுக்குத் தான் மேகனுடன் செல்வது பிடிக்கவில்லை என்பதை பாவனா உணர்ந்தாள். அதனால் எப்படி அவந்திகா சம்மதிக்க வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
பாவனா பதில் சொல்லும் வரையும் காத்திராமல், மேகன் சற்று தொலைவு நகர்ந்ததும், “பாவனா. எங்கே அவருடன் தனியாகச் செல்கிறாய்.?” என்று நேரிடையாகக் கேட்டாள் அவந்திகா
ஏற்கனவே அவந்திகாவின் எச்சரிக்கை உணர்வை உணர்ந்த பாவனா அவந்திகாவின் கைப்பற்றி, “அவந்தி… நான் மேகனுடைய கல்லூரி தோழர்களைப் பார்த்துவிட்டு வருகிறேனடி. கொஞ்சம் நேரம் பிறகு நாங்கள் இருவருமாகத் தாஜ்க்கு போய்விடுக்கிறோம். சரிதானே?” என்றாள்.
பாவனா சொன்னதை கேட்டதும், மேகன் சென்ற திசையில் திரும்பி ஒருமுறை பார்த்தாள் அவந்திகா. அவன் தன் கால் சட்டைபையில் (pant pocket) இருக்கைகளையும் விட்டுக் கொண்டு சென்றுக் கொண்டிருந்தான்.
‘இந்த நான்கு தினங்களில் மட்டும் ஏன் யாளிகள் ஒன்று மாற்றி ஒன்றாக என் கண்ணில் படுகிறது. இந்த மேகனும், அந்தப் பவளனும் ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடுமோ? இவன் எதற்காகப் பாவனாவிடம் நெருங்க வேண்டும்.
நான் யாளி உலகிலிருந்து இங்கு வந்தது யாருக்கும் அங்குத் தெரியாது. அங்கிருப்பவர்களைப் பொருத்த மட்டில் நான் இறந்துப் போனவள்.உண்மையில் எனக்கென்று அங்கு யாருமில்லை. அதனால் என்னைத் தேடி அங்கிருந்து இங்கு வர வாய்ப்பு மிகவும் குறைவு.
அப்படி இருக்க இந்த மேகனையும், பவளனையும் பார்த்தது தற்செயலான சந்திப்புத்தானா? நான் தான் அதிகமாக யோசிக்கிறேனோ. எனக்குத் தீங்கு விளைவிக்க வந்தவர்கள் என்றால் இந்த 3 நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. இப்போதைய என்னால் மனிதர்களின் சக்தியை எதிர்த்து வெற்றிப் பெற முடியும், ஆனால் யாளிகளை எதிர்த்து வெல்வது இயலாது.’ என்று தன்னுள்ளே யோசித்துக் கொண்டிருந்தாள்.
பாவனா கேட்டதற்குப் பதில் சொல்லாமல் யோசனையிலிருந்த அவந்திகாவின் முகம்பற்றி, “என்னடி, பதிலே சொல்லமாட்டேன் என்கிறாய். போய்விட்டு வரட்டுமா” என்று சினுங்கினாள்.
பொதுவாகப் பாவனா அவந்திகாவிற்கு விருப்பமில்லை என்றால் அதனைச் செய்ய முயலமாட்டாள். முதல் முறையாக அவந்தி வேண்டாம் என்று சொன்னாலும் எப்படியும் மேகனுடன் சென்றுவிட்டு வர விரும்பினாள்.
அதே எண்ணத்தில் இருந்த பாவனா, அவந்திகாவின் கவலையையும் முகச் சோர்வையும் உணரவில்லை. அதனால் அவந்திகா சம்மதம் சொல்லும் வரை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தாள்.
நொடிக்கு ஒருமுறை மேகன் திரும்பி வருகிறானா என்று பார்த்தவண்ணம், கேட்டது கிடைக்க வேண்டுமே என்ற எதிர்பார்ப்புடன் அவந்திகாவை பார்த்தாள் பாவனா.
அவளது தவிப்பை உணார்ந்த அவந்திகா தலையை வருடியவண்ணம், “அவசியம் போய்தான் ஆகவேண்டுமா பவி…” என்று ‘ மேகனுடன் பாவனாவை தனியே அனுப்ப விருப்பமும் இல்லாமல், தானும் உடன் செல்ல முடியாமலும் தவித்து’ கேட்டாள்.
எங்கு அவந்திகா போகக் கூடாது என்று சொல்லப் போகிறாளோ என்று எண்ணிய பாவனா அவசரமாக, “ஆமாம் அவந்தி… அவன் நம் நண்பர்களைப் பார்த்ததுப் போல அவனுடைய நண்பர்களை நானும் பார்த்தால்தானே மரியாதையாக இருக்கும். அதனோடு அவனிடம் இயக்கம்பற்றி எவ்வளவு கற்றுக் கொண்டிருகிறேன் தெரியுமா? கார்திக்கிற்கு கூட அவனை ஏற்கனவே தெரிந்திருகிறது என்றார்… அதனால் பயமேதும் இல்லை” என்று அடுக்கடுக்காகச் சொன்னாள் பாவனா.
பாவனாவின் ஆர்வத்தை உணர்ந்த அவந்திகா ‘இதுவரை எதுவும் பேதமாக நடக்காததால் இவற்றை இப்போதைக்கு தற்ச்செயலான ஒன்றாக எடுத்துக் கொள்வதே சரியாகும். ஒருவேளை உண்மையில் மேகனும் பாவனாவும் நேசமாக இருக்கும் பட்சத்தில் அதற்குத் தடங்களாக தான் இருக்கக் கூடாது. ஒரு வாய்ப்பு கொடுப்பதில் தவறில்லை. ‘ என்று நினைத்தாள்
அதற்குள் பாவனா, அருகிலிருந்த கார்திக்கிடம் திரும்பி, “கார்திக். நீங்களும் சொல்லுங்க. அவந்தியிடம் பயம் வேண்டாம் என்று “என்று கேட்டுவிட்டு, ‘ நான் மேகனுடன் செல்லவில்லையென்றால், உங்களை அவந்தியுடன் தனியாகச் செல்ல விடமாட்டேன்’. நானும் உங்களுடன் வருவேன். அதனால் எனக்கு ஆதரவாகப் பேசுங்கள்’ என்று கண்ணடித்து கார்திக்கை மிரட்டும்விதமாக ஆதரவுக்கு அழைத்தாள் .
இவை உணராத அவந்திகா, ஏற்கனவே ஒருமுடிவெடுத்ததால், கார்திக் அவளுக்காகப் பேசுமுன்னே, தன் கைட்டைவிரலை தொடுவிரலால் மடக்கி பாவனாவின் நெற்றியில் சுண்டிவிட்டு “வாயாடி, சரி… நீ போய் வா. பத்திரம். ஆனால் நான் கைப்பேசியில் தொடர்புக் கொண்டால் தவிர்க்காமல் பேச வேண்டும். அதனோடு சீக்கிரமாகவும் வந்து நம் குழுவுடன் சேர்ந்து கொள்ள வேண்டும்” என்று பெரியவள் போல அறிவுரைக் கூறி அவளை அனுப்பி வைத்தாள்.
வலிக்காதப் போதும், “ஸ்…” என்று தன் நெற்றியை தடவியவண்ணம் “ஐ… ” என்று கிளுக்கி சிரித்தாள் பாவனா.
பின்”சரி அவந்தி… விரைவில் வந்துவிடுகிறேன். நீயும் கார்திக்குடன் சுமூகமாகப் பேசு. முகம் திருப்பிக் கொள்ளாதே. சரியா” என்று சொல்லிச் சிரித்தாள்.
“சரிதான் போ… சொன்னது நினைவிருக்கட்டும்” என்று சொல்லிப் பாவனாவை வழி அனுப்பி வைத்தாள் அவந்திகா.
அவள் போவதையே பார்த்திருந்த அவந்திகா ஒரு பெருமூச்சுவிட்டு, கார்திக்கிடம் திரும்பி, “நாம் போகலாமா கார்திக்?” என்றாள்.
“ம்ம்” என்றான் கார்திக்.
முதலில் கார்திக் உடன் வருவது வேண்டாம் என்றுதான் நினைத்தாள் அவந்திகா. ஆனால் அதிகம் மறுத்துப் பேசுவதும் தேவை இல்லாமல் சந்தேகத்தையோ அல்லது கலக்கத்தையோ உண்டாக்கும் என்று உணர்ந்து, “என்னைத் தங்கும் விடுதியில் விட்டுவிட்டு நீங்கத் தாஜ்க்கு திரும்பப் போங்க. “ என்று எதிப்பு சொல்ல முடியாதப்படி தீர்வு கண்டவளாகச் சொன்னாள் அவந்திகா.
அதைக் கேட்ட கார்திக், “சரி அவந்திகா.” என்று அவந்திகாவிடம் அப்போது மறுப்பு சொல்லாமல், மற்றவர்களிடம் திரும்பி, “நாங்க கிளம்புகிறோம். பிறகு சந்திக்கலாம்” என்று கார்திக்கும் அவந்திகாவும் விடைப் பெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டனர்.
அவந்திகாவுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கலாம் என்று எண்ணியிருந்த கார்திக் தானூர்தியில்(car) ஏறும் வரை அவந்திகா உடனே தாஜ்ஜுக்கு கிளம்பு என்று சொன்னதைக் குறித்து எதுவும் கேட்காமல் அமைதியாக இருந்தான்.
தானூர்தி சிறிது தூரம் சென்றபின் அவள் புறம் திரும்பி, “அவந்திகா நான் நீங்க உண்டு, உறங்கும் வரை உங்களுடன் இருந்துவிட்டு பிறகு தாஜ்க்கு செல்கிறேனே என்று மனதில் தோன்றியதை செயல்படுத்த அடித்தளமிட்டான்.
தானூர்தியில் ஏறியதிலிருந்து, ‘எப்படி தான் 400 வருடமாக ஆன்மாவாக இருந்த அந்த மும்பை காட்டுக்குச் செல்வது. நல்லவேளையாக என் ஆன்மா மனித உடலில் இருந்தப் போதும் என்னால் என் ஆன்மாவுடன் இணைப்பில் இருக்கும் என் கைக்காப்பின் (1) தூரத்தைக் கணிக்க முடிகிறது.’
கண் மூடிக் கைக்காப்பின் தூரத்தை உணர்ந்த அவந்திகா, ‘அந்தக் காடு இங்கிருந்து குறைந்தது 20 கிலோமீட்டர் தூரத்திலாவது இருக்கும். இப்போது மணி மாலை 4.30ஆகிறது. தங்கும் விடுதி சேர்ந்ததும் உடனே கிளம்பினால் 4 மணி நேரத்திற்குள் போய்விட்டு என் கைக்காப்பை எடுத்துக் கொண்டு திரும்பி வந்துவிடலாம். பாட்டு நடனம் முடித்துவிட்டு குழுவினர் வருவதென்றால் குறைந்தது இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிடும். அதனால் அவர்களுக்கு முன் நாம் வந்துவிடலாம்.
அருகில் ஏதும் தனியார் தானூர்தி 4 மணி நேரத்திற்கு வாடகைக்கு கிடைக்கிறதா என்று பார்ப்போம். அதுதான் எளிமையான மற்றும் விரைவான வழி’ என்று மனதில் திட்டமிட்டுக் கொண்டு தன் கைப்பேசியில் இணையதளத்தை த் திறந்து தானூர்திப் பற்றித் தேடிக் கொண்டிருந்தாள்.
அப்போதுதான் கார்திக் உடன் இருப்பதாகச் சொன்னது அவள் செவியில் விழுந்தது. ‘ இவன் கொஞ்சம் அதிக நேரம் கூட இருப்பதென்றாலும் என்னுடைய திட்டம் பாழாகிவிடும்’ என்று உணர்ந்து அவசரமாக, “இல்லை. இல்லை. நான் போனதும் உறங்கப் போகிறேன். ஒரு 4 மணி நேரத்திற்கு என்னை யாரும் தொந்தரவு செய்யாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.” என்று மறுத்துப் பேசினாள்.
அவளது மறுப்பை ஏற்கனவே எதிர்பார்த்த கார்திக், முகம் சோர்ந்து, அவளுடன் லேசான நெருக்கம் உணரும்படி, “ஏன் அவந்தி… என்மீது துளிக் கூட நேசம் உண்டாகவில்லையா? இல்லை என்மீது துளியும் நம்பிக்கையில்லையா? ” என்று வருத்தமாகக் கேட்டான்.
அவனை திரும்பி பார்த்த அவந்திகா, “கார்திக், தேவையில்லாமல் யோசித்து குழப்பிக் கொள்ளாதீர்கள். இன்று நான் தனியாக இருக்க விரும்புகிறேன். அதற்கும் நீங்க கேட்பதற்கு எந்தவித தொடர்பும் இல்லை. என்னை புரிந்துக் கொள்ளுங்க” என்று நிமிர்ந்த தலையுடனும் நெருக்கத்திற்கு இடம்தராமலும் சொன்னாள்.
அதனை கேட்ட கார்திக் பெருமூச்சுவிட்டான். “ சரி . இன்று நான் உங்களை தொந்தரவு செய்யவில்லை. ஆனால் எனக்கு விருப்பம்குறித்த உங்கள் பதிலை நாம் திரும்பச் சென்னை செல்லும் நாளுக்குள் சொல்ல வேண்டும்” என்றான்.
அவந்திகாவின் மனதில் மற்ற கவலை ஓடிக் கொண்டிருக்க கார்திக்கிடம் மேம்போக்காக, “ம்ம்” என்றாள்.
அதன் பிறகு கார்திக் அதிகம் பேசவில்லை. தங்கும் விடுதி வந்ததும் ஆயிரம் முறை பாதுகாப்பாக இருக்கும் படி அவந்திகாவிடம் சொல்லிவிட்டு உடனே கார்திக் கிளம்பிவிட்டான்.
அறைக்கு வந்ததும் ஜன்னல் வழியே கார்திக் கிளம்பிவிட்டானா என்பதை பார்த்தாள் அவந்திகா
அவன் கிளம்பிவிட்டான் என்பதை உணர்ந்ததும், தன் கைப்பேசியில் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த தானூர்திக்கு தொடர்புக்கொண்டு உடனே அவள் இருக்கும் விடுதிக்கு வருமாறு பதிவு செய்தாள். பின் அவசரமாகத் தாவணியிலிருந்து தான் கொண்டு வந்த ஒரே ஒரு சுடிதாருக்கு உடை மாறினாள். தளர பின்னியிருந்த கூந்தலை இழுத்து பிடித்துக் கட்டினாள்.
பின் வேகமாக வெளியில் ஓடிவந்தாள். அவள் வருவதற்கும் அங்கே அவள் பதிவு செய்த தானூர்தி வருவதற்கும் சரியாக இருந்தது. நொடி பொழுதும் தாமதம் செய்யாமல் தானூர்தியில் ஏறி அமர்ந்தாள் அவந்திகா.
தானூர்தியை இயக்கியவண்ணம், “அவந்திகா? எங்கே போக வேண்டும்?” என்று கேட்டான் தானூர்தியின் ஓட்டுநர்.
‘என் பெயர் எப்படி இவனுக்குத் தெரியும்? நான் எச்சரிக்கை உணர்வாக மாற்று பெயரில்தானே தானூர்தியை பதிவு செய்தேன்.’ என்று முன் இருக்கையில் அமர்ந்திருந்தவனின் பக்கவாட்டு முகத்தை வெறித்தாள் அவந்திகா.
Author note:

(1) கைக்காப்பு – Bracelet has its spiritual consciousness. Owner can always feel where exactly their bracelet is there once they try to search in mind.