நா ஆத்தமாட்டாம மனசுல நினைச்சது எல்லாம் அவியகிட்ட படபடன்னு கொட்டி வைக்க அவிய என்னைய பார்த்தாவளே ஒரு பார்வை ஆத்தி இதுக்கு முன்ன அவியளை நா அப்படி பாத்ததே இல்லை.
“வள்ளி…”
வள்ளிக்கண்ணுல இருந்து இப்போ நான் வள்ளியாகிட்டேன், கோவமா இருப்பாவ போல. வைவாவளோன்னு நினைச்சுட்டு இருக்கேன். அவிய வேற சொன்னாவ, அதுக்கு அவிய என்னைய நல்லா வைஞ்சிருக்கலாம் போல.
“வள்ளி கொஞ்சம் நிறுத்து…”
“என்ன??”
“எதுக்கு இப்படி மூச்சுவிடாம பேசுறே??”
“வேற எப்படி தான் நா பேசுறது, என்னைய அவிய அப்படி ஏசுதாவ. எனக்கு கஷ்டமா இருக்காதா…”
“அதுக்காக என்ன வேணாலும் பேசுவியா??”
“நா என்ன தப்பா சொல்லிட்டேன்”
“ஒண்ணுக்கிடக்க ஒண்ணு ஆகிபோகும்ன்னா என்ன அர்த்தம்ன்னு…” கேட்டுட்டு அவிய என்னை பார்த்த பார்வை எனக்கு ஜில்லுன்னு ஆகிட்டு.
நா ஏதோ கோவத்துல சொல்லிட்டேன் இவிய அந்த வார்த்தைய பிடிச்சு தொங்குவாவன்னு நா எங்க நினைச்சேன்.
“அது தெரியாம…”
கையை அமத்தி பேசாம இருக்க சொன்னாவ. நா வாயை மூடிக்கிட்டேன்.
“உன்னோட டிரஸ் எல்லாம் எடுத்து வைச்சுக்கோன்னு…” சொன்னாவ.
என்னது டிரஸ் எடுத்து வைக்கணுமா எதுக்கு எனக்கு அடிவயிறு எல்லாம் கலங்கி போச்சு. “எதுக்குன்னு??” கேட்டுட்டேன்.
“ஊருக்கு போக…”
“எந்… எந்த ஊருக்கு??”
“உங்க ஊருக்கு தான்…”
“இப்… இப்போ எதுக்கு??”
“நீ அங்க கொஞ்ச நாள் இரு… நான் ஊருக்கு போயிட்டு வந்து உன்னை கூட்டிட்டு வர்றேன்…”
“இல்… இல்ல வேணாம்…”
“நாம இது விஷயமா மேற்கொண்டு எதுவும் பேச வேணாம். எனக்கு பேச பிடிக்கலை… உனக்கு ஒரு விஷயத்தை நான் ஒரு தடவை தான் சொல்லுவேன்…”
“நீ ஒண்ணும் சின்ன குழந்தை இல்லை. நான் என்ன சொல்றேன்னு புரிஞ்சுக்காத அளவுக்கு. அன்னைக்கே உன்கிட்ட சொன்னேன். எங்கம்மா எதுவும் சொன்னா பேசாம கடந்து போக பழகுன்னு…”
“அவிய என்ன பேசினாலும் நான் பேசாம இருக்கணுமா, நா என்ன ஜடமா…” மறுபடியும் வார்த்தையை விட்டேன் அவியல பேச விடாம.
“இதுக்கு தான் சொன்னேன். நீ கூட கூட பேசுவே, எனக்கு டென்ஷன் தான் ஆகும். நான் ஊருக்கு போகும் போது நல்ல மைன்ட் செட்டோட போகணும். கண்டதும் நினைச்சுட்டு போகக் கூடாது…”
“இதுக்கு மேல உன்கிட்ட பேச எதுவும் இல்லை. நான் நாளைக்கே டிக்கெட் பாக்குறேன். இந்த வாரமே உன்னை கூட்டிட்டு போய் ஊர்ல விட்டு வர்றேன்…”
“எங்கம்மா என்னன்னு கேப்பாங்க??”
“கண்டிப்பா சொல்ல மாட்டேன் இங்க சண்டை அதனால தான் கூட்டிட்டு வந்து விட்டேன்னு, போதுமான்னு…” சொல்லிட்டு என்னைய பாக்க கூட பிடிக்காம மூஞ்சியை திருப்பிட்டு கட்டில்ல போய் படுத்திட்டாவ.
எனக்கு அழுகையா வருது. பேசாம எழுந்து பால்கனிக்கு போய் உட்கார்ந்திட்டேன். எனக்கு அவிய மேல கொஞ்சம் கோவம் தான்.
நா இவ்வளவு சொல்லுதேன், அவிய அம்மாவை போய் என்னன்னு ஒரு வார்த்தை கேக்கலாம்ல. என்னையவே குத்தம் சொல்லுதாவ, நா தான் பேசாம போவணும்ன்னு சொல்லுதாவ. எனக்கு தொண்டை அடைக்கி, அழுகக்கூடாதுன்னு பேசாம இருந்தேன்.
அவிய ஊருக்கு போற நேரம் நா இங்க இருக்கணும்ன்னு நினைச்சேன், இப்போ அவிய என்னைய ஊர்ல விட போவுதேன்னு சொல்லுதாவ.
ஒரு வாரம் எப்படி போச்சுன்னு தெரியலை. அத்தைகிட்ட நா எதுவும் சொல்லலை. எப்பவும் போல தான் இருந்தேன், அவிய ஏசினாலும் பேசாம கேட்டுக்கிட்டேன்.
எப்பவும் நா எதுத்து பேசினதில்லை. இருந்தாலும் மனசுல இப்படி வைதாவளேன்னு சங்கடமா இருக்கும். இப்போலாம் அது கூட எனக்கு தோணலை, பழகிட்டு.
இரண்டு நா கழிச்சு இவிய ஊருக்கு போவ ஞாயிற்றுக்கிழமை டிக்கெட் போட்டேன்னு சொன்னாவ. காலையில டிபன் சாப்பிடும் போது அத்தைட்ட அவியளே சொன்னாவ.
அத்தை என்னைய தனியா கூப்பிட்டு வைஞ்சாவ. எதுக்கு ஊருக்கு போவணும்ன்னு. நா உங்க மகன் தான் சொன்னாவன்னு சொன்னேன்.
டிரைன்ல கூட என்ட எதுவும் பேசலை. ஒரு வாரம் ஆச்சு இவிய என்னோட சரியா பேசி. பேசாதவன்னா பரவாயில்லை.
நானா போய் பேசினாலும் சரியாவே பதில் பேச மாட்டேன்னுட்டாவ. அதுக்கு மேல நா என்ன பேச அவியட்ட
ஏதோ கோட்டித்தனமா மனசுல இருந்ததை கொட்டிட்டேன், அதுல என்னத்தை குத்தத்தை கண்டாவலோ எனக்கு விளங்கலை.
ஆட்டோ பிடிச்சு எங்க வீட்டுக்கு வந்திட்டோம். நாங்க வர்றோம்ன்னு அவியகிட்ட நாங்க சொல்லவே இல்லை. காலையில நாங்க வீட்டுக்கு வந்து இறங்கவும் உள்ள இருந்தே அம்மா பார்த்திட்டு ஓடி வந்தாவ.
“என்னட்டி இப்படி திடுதிப்புன்னு வந்து நிக்கன்னு??” கேட்டாவ. கொஞ்சம் பயந்து தான் என்னைய பாத்தாவ.