அத்தியாயம் 7

இரவின் போர்வை விலகி செங்கதிர்கள் நிலத்தின் மேல் படர முகம் வரை இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தவள் தன் தாயின் குரலில் அடித்து பிடித்து எழுந்தமர்ந்தாள். அவள் வருவதற்குள் அவளின் அறைக்கு வந்த ரேணு “சாஹி இன்னிக்கி நீ ஆஃபீஸ் போக வேண்டாம் லீவ் போட்டுடு”

“அம்மா அது காலேஜ் கிடையாது அந்த மாதிரி லீவ்லாம் போட முடியாது”

“அதெல்லாம் பரவால்ல நீ போன் பண்ணி சொல்லிடு” , சற்று அதிகார தோணியில் கூறிவிட்டு அவர் செல்ல ‘இவங்க என்ன சொல்லாம வந்திருக்காங்க’ என மனதில் நினைத்து கொண்டே  சமருக்கு அழைத்தாள்.

சமரிடம் பேச அவன் லீவ் தர முடியாது என்று மறுத்துவிட்டான். அவனை வசை பாடிக்கொண்டே ஹர்ஷாவிற்கு அழைக்க அவன் அழைப்பை ஏற்கவில்லை “என்னடா இது எனக்கு வந்த சோதனை” , தன்னை நொந்துகொண்டவள் அபிக்கு அழைக்க அவன் அழைப்பை ஏற்றான்.

சாஹி “ஜி உங்க உடன்பிறப்ஸ் என்ன பண்றாரு”

“ஜிம்ல இருப்பான் ஏன்”

“இன்னிக்கி ஒரு நாள் எனக்கு லீவ் வேணும் ஜி அம்மா வந்திருக்காங்க”

“தாராளமா எடுத்துக்கோ நான் ஹர்ஷாகிட்ட சொல்லிடுறேன்.  அப்படியே மாயவையும் லீவ் எடுத்துக்க சொல்லு நீ இல்லாம அவ மட்டும் எதுக்கு”

“ஹ்ம்ம்..” என்று அழைப்பை துண்டித்தவள் அறையிலிருந்து வெளியே வர அங்கு அவளின் தந்தை அர்ஜுனுடன் பேசிக்கொண்டிருந்தார். “அப்பா”  என்று அவரின் கழுத்தை கட்டி கொண்டாள் அவரும் மகளை கட்டிக்கொண்டு உச்சி நுகர்ந்தார்.

மதியம் உணவு முடித்து அனைவரும் ஓய்வேடுக்க ரேணு சாஹியின் அறைக்கு சென்றார். சாஹியுடன் அமர்ந்தவர் அவளின் தலையை வருடி “சாஹிம்மா அம்மா உனக்கு எப்போவும் நல்லது தான நினைப்பேன்”

“அம்மா என்ன விஷயம் சொல்லுங்க முதல”

“இன்னிக்கி உன்னை பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டிலயிருந்து வராங்க”

“அது சரி இதுக்கு தான் இவ்ளோ பில்டப்பா. நீங்க யாரை கை காட்டினாலும் கல்யாணம் பண்ணிக்குவேன் மா ஆனா ஒரு கண்டிஷன்” என்று முகத்தை சுருக்கியவளை கலக்கத்துடன் பார்த்து “என்ன கண்டிஷன்”

“கல்யாணம் காலேஜ் முடிச்சிட்டு தான் ஓகே” , அவளை வழித்து திருஷ்டி எடுத்தவர் “சரி டி.. இப்போ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு ஈவினிங் 6 மணிக்கு ஆளுங்கலாம் வந்திடுவாங்க” என்று மாயாவை அவளுக்கு துணையாய் அமர்த்திவிட்டு சென்றார்.

மாயா “என்னடி அம்மா கிட்ட அப்படி சொல்லிட்ட.. அபிக்கு என்ன பதில் சொல்லுவ”

“அபி சும்மா விளையாட்டுக்கு சொல்லிருப்பார் டி.. அப்படி ஹர்ஷாக்கு என்ன பிடிச்சிருந்தா அவர் கண்டிப்பா என்கிட்ட பேசிருபார் ஆனா அவர் அப்படி பேசல” என்று தோளை உலுக்கிக்கொண்டு கட்டிலில் சரிந்தாள்.

மாலை வீடே பரபரப்பாக இருக்க மாயா சாஹிக்கு புடவை கட்ட உதவி செய்துகொண்டிருந்தாள். மாயா “இந்த மடிப்பை பிடி”

“ஏன் மாயா பேபி சுடிதார் போட்டா பையன் பார்க்க மாட்டானா புடவை தான் கட்டனுமா”

“இந்த கேள்வியை உங்க அம்மாகிட்ட கேளு தங்கம்”

“சரி சரி விடு” என்று பேசிக்கொண்டே புடவை கட்டி முடித்தாள்.

அர்ஜுன் மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க வந்துட்டாங்க என்று குரல் கொடுக்க, ரேணுவும் மகேஸ்வரனும் சாஹியின் அறைக்கு சென்று அவளை பார்க்க பிரேம் தம்பதியினர் அவர்களை வரவேற்றார்.

விமல் மற்றும் யசோதா அமர ரேணுவும் மகேஸ்வரனும் சாஹியின் அறையிலிருந்து வெளியில் வந்தனர். மகேஸ்வரன் விமலை பார்த்து அதிர விமல் அவரிடம் “நீங்க.. இனியாவோட அப்பா தான”

“ஆமா உங்களுக்கு என்னை நியாபகம் இருக்கா”

“மறக்க கூடிய சம்பவமா நடந்தது அன்னிக்கு”

“இனியா.. ” , என்று விமல் இழுக்க ‘இல்லை’ என்பதாய் தலையசைத்தார் மகேஸ்வரன். பிரேம் “பழைய விஷயமெல்லாம் எதுக்கு சார் நல்ல விஷயம் பேச வந்திருக்கீங்க அதை பத்தி பேசுவோமே” , விமல் புன்னகையுடன் அதை ஆமோதித்தார்.

விமல் “என்னோட பெயர் உங்களுக்கு தெரியும் இவ என்னோட மனைவி யசோதா எங்களுக்கு ரெண்டு பசங்க ரெண்டு பேரும் ட்வின்ஸ். அதுல மூத்தவன் ஹர்ஷவர்தன் இளையவன் அபிவர்தன். உங்க பொண்ணை நாங்க ஹர்ஷாவுக்கு தான் பார்க்க வந்திருக்கோம். என் பையனை பத்தி சொல்லணும்னா ரொம்ப பொறுப்பான பையன். வர்தன் குரூப் ஆஃப்  இண்டஸ்ட்ரீஸ் கேள்வி பட்டிருப்பீங்க அது என்னோடது தான் இப்போ என் பசங்க தான் அதை கவனிச்சிக்கிறாங்க” என்று பெருமையாய் அவர் முடிக்க அவர் கூறியதை கேட்டுக்கொண்டிருந்த சாஹி குடும்பத்தினர் அவர் கூறிய இறுதி வாக்கியத்தில் அதிர்ந்தனர் , பின்ன இவ்வளவு பெரிய வீட்டு சம்மந்தம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அன்று மகேஸ்வரனுக்கு அழைத்தவர் சாஹித்யாவை பிடித்திருக்கிறது அதனால் நாளைக்கு பெண் பார்க்க வருகிறோம் என்று சுருக்கமாக கூறியிருந்தார் அவ்வளவு தான்.

மகேஸ்வரன் “விமல் சார் உங்களுக்கு தெரியும் நாங்க அவ்ளோ வசதியானவங்க கிடையாது”

யசோதா  “என்ன அண்ணா இப்படி சொல்றீங்க எங்களுக்கு காசு என்னிக்குமே பெருசு கிடையாது. நீங்க பொண்ணை வர சொல்லுங்க”

“ஜானு மாயாவை அக்காவ கூட்டிட்டு வர சொல்லு” என்று பிரேம் கூற ஜானு மாடிக்கு சென்றாள்.

அடர் நீல நிற புடவையில் எழிலோவியமாக வந்தவளை பார்த்தவுடன் பிடித்துப்போனது யசோதாவிற்கு. கீழிறங்கி வந்தவள் தலையை தாழ்த்தியவாறே தன் தாயுடன் நின்றுகொள்ள யசோதா “சாஹித்யா இங்க வா” என்று யசோதா தன் இருக்கைக்கு பக்கத்தில் இருந்த இருக்கையை காட்ட அப்போது நிமிர்ந்தவள் விமலை கண்டு அதிர்ந்தாள். மனது படபடக்க கால்கள் நகர முடியாது பின்னிக்கொள்ள கண்கள் சொக்க கீழே சரிந்தவளை ஓடி வந்து தன் இரும்பு கைகளில் தாங்கினான் ஹர்ஷவர்தன்.

ரேணு பதறிக்கொண்டு அவளை எழுப்ப முயல அவளை கையிலேந்தியவன் அங்கிருந்து சோபாவில் அமர வைத்துவிட்டு தண்ணீர் தெளிக்க அப்போது கண்விழித்தவள் உடல் நடுங்க ஹர்ஷா “என்ன ஆச்சு சாஹித்யா. ஆர் யூ ஆல்ரைட்”
“ஆம்” என்று அவள் தலையசைக்க அதற்கு நேர்மாறாக  அவள் உள்ளமும் உடலும் பயத்தில் நடுங்கியது. மாயா சில மாத்திரைகளை கொடுக்க அதை போட்டுக்கொண்டவள் அங்கிருந்து எழுந்து உள்ளே செல்ல ஹர்ஷா “என்ன ஆச்சு அவளுக்கு” என்று மகேஸ்வரனை நோக்கி கேள்வியை தொடுக்க பதினைந்து வருடங்களாக புதைத்து வைத்திருந்த நிகழ்வுகளை கூற தொடங்கினார்.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு..

  “இனியா ஸ்கூலுக்கு டைம் ஆகுது சீக்கிரம் கிளம்பு” என்று தன் பத்து வயது மூத்த மகள் இனியவர்ஷினியை  கிளப்பிக்கொண்டிருந்தார் ரேணு அப்போது அவரின் ஆறு வயது மகள் “மா நான் ரெடி”

“என் செல்லம்” என்று திருஷ்டி கழித்தவர் இவருவரையும் பள்ளிக்கு அனுப்பிவைத்தார்.

அன்று ரேணுவின் வீட்டிற்கு எதிர் வீட்டிலிருந்த பெண்ணுக்கு பிரசவ வலி எடுக்க அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றர். அந்த வேலையில் தன் மகள்களை அழைத்து வர மறந்து போனார் ஆனால் அதை நினைத்து வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படுவோம் என்று அவர் அறியவில்லை.

மாலை ஐந்து மணி கடந்தும் யாரும் வராததால் இனியா தன் தங்கையை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு நடக்க துவங்கினாள். வீட்டிற்கு செல்லும் வழியில் அவர்களை மறைத்தான் அவர்கள் தந்தையுடன் வேலை செய்யும் நாற்பது வயது மிக்க ஒருவன். அவன் “என்ன இனியா குட்டி தங்கச்சி பாப்பாவை கூட்டிட்டு எங்க போறீங்க””அம்மா எங்களை கூட்டிட்டு போக வரல அங்கிள் அதான் வீட்டுக்கு போறோம்””சரி வாங்க அங்கிள் உங்களை வீட்ல விட்டுடுறேன்” என்று அவர்கள் இருவரையும் வண்டியில் ஏற்றியவன் ஊரின் ஒதுகுபுரம் இருந்த காலி இடத்திற்கு அவர்களை அழைத்துவந்தன்.

இனியா அவரிடம் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கத்த , சாஹி வண்டியிலிருந்து இறங்காமல் அழ தொடங்கினாள் அதில் ஆத்திரமடைந்தவன்  இருவரையும் நான்கு அறைய இனியா மயங்கினாள். அவள் கையை பிடித்து அவளை தூக்கி தோளில் போட்டுகொண்டும் சாஹியை இழுத்துக்கொண்டும் சென்றான்.  அங்கு அவனின் கூட்டாளி ஒருவன் இருக்க அவன் சாஹியையும் இனியாவையும் கட்டி போட்டுவிட்டான். இருவரும் மது அருந்த தொடங்கினர். மணி இரவு எட்டை நெருங்க அவ்விடமே மயான அமைதியாய் இருந்தது.

ரேணுவும் மகேஸ்வரனும் மகள்களை காணாது தவித்துக்கொண்டிருந்தனர்.

சுற்றிலும் இருட்டு ஒரே ஒரு குட்டி குண்டு பல்ப் மட்டுமே அவ்விடத்திற்கு உயிர் கொடுத்துக்கொண்டிருந்தது.  சாஹி பயத்தில் கத்திகொண்டே அழ அந்த பிஞ்சின் கண்முன்னே அவளின் தமக்கையை நாய் போல கடித்து கோதறினர் அவ்விருவரும். அக்கா வலியில் முணங்குவதை பார்த்து அவள் இன்னும் பயந்து அழ அதில் கடுப்பான அந்த கூட்டாளி சாஹித்யாவின் கட்டுகளை கழட்டிவிட்டு  அவளை தூக்கிக்கொள்ள  அவனிடமிருந்து விடுபெற அவன் தோளில் கடித்தாள் அதில் வலி தாங்க முடியாமல் அவன் அவளை இறக்கி விட அங்கிருந்து திரும்பி கூட பாராமல் ஓடியது அந்த ஆறு வயது பிஞ்சு. சுற்றிலும் இருட்டாக இருக்க கால் போன திசையில் ஓடியவள் நின்றது ஒரு காரின் முன்னாள்.

அன்று ஒரு கல்யாணத்திற்காக மதுரை வந்திருந்த விமல் தம்பதியினர் ஒரு சிறுமி ஓடி வருவதை கண்டு காரை நிறுத்த அந்த சிறுமி தனக்கு தெரிந்த வார்த்தைகளால் அங்கு நடந்த சம்பவத்தை கூற விமல் அவளை யசோதாவிடம் கொடுத்துவிட்டு  இனியாவை தேடி சென்றார். ஆள் வருவதை  கண்ட காமுகர்கள்  ஓடிவிட ஆதரவற்ற கிடந்தாள் இனியவர்ஷினி. அவளை தூக்கிக்கொண்டு வந்தவர் அவளை மருத்துவமனையில் சேர்த்துவிட்டுவிட்டு சாஹியின் கழுத்திலிருந்த ID கார்டிலிருந்து மகேஸ்வரனிற்கு அழைத்தார்.

ரேணுவும் மகேஸ்வரனும் அங்கு வந்திட அதுவரை நடுங்கியபடி அமர்ந்திருந்த சாஹித்யா தன் தாயுடன் ஒன்றிக்கொள்ள விமல் மகேஸ்வரனிடம் நடந்தவற்றை கூறினார். விமல் யசோதா  மருத்துவமனையில் இருக்க அபிக்கு உடல்நிலை சரியில்லை என்று அழைப்பு வந்ததில் அவரிடம் கூறிவிட்டு விடைபெற்றனர் விமல் வர்தன் தம்பதியர்.


வெகு நேர சிகிச்சைக்கு பின்னர் மருத்துவர்கள் இனியா இறந்து விட்டதாக கூற பெற்றோர்கள் இருவரும் துவண்டனர். நாட்கள் அதன் போக்கில் செல்ல ரேணுவும் மகேஸ்வரனும் சற்று தேறியிருந்தனர் ஆனால் சாஹித்தியாவின் நிலை தான் கவலைகிடமாந்து. இருட்டை பார்த்தால் பயந்து அலறுவதும் , இரவு நேரத்தில் ரோட்டில் தனியே சென்று பேசுவதும் என்று அவள் நடந்துகொள்ள அதில் பயந்தவர்கள் அவளை மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றனர்.

அது அவள் இளம் வயதில் நடந்ததால் அவளின் மனதில் பசுமரத்தாணி போல் ஆழமாக பதிந்திருந்தது என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர்.  நான்கு வருடங்கள் சைக்காலஜிஸ்ட்யிடம் சிகிச்சை பெற்ற பின்பு தான் ஓரளவு தேறியிருந்தாள் ஆனால் அப்போதும் இருளை பார்த்தாளே அலறுவாள். வருடங்கள் தான் ஓடியதே தவிர அவளின் அந்த பயம் நீங்கவில்லை” என்று அவர் கூறி முடிக்க அனைவரின் கண்களும் கலங்கியிருந்தது.