எல்லா வருடமும் அங்குப் போட்டி நடந்தப் போதும் இருவர் இணைந்தக் குழுவாகப் போட்டியாளர்கள் கலந்துக் கொள்ள வேண்டும் என்ற விதிமுறை இந்த வருடமே முதல் முறையாகப் பயன்படுத்தப்பட்டது. அதனால் மாணவர்கள் போட்டிக்கு முன் பார்த்த ஒத்திகைகள் எதுவும் பயன் இல்லாமல் போனது. அதே சமயம் அவர்களின் உத்வேகம் குறையவுமில்லை. ஒவ்வொருவரும் மிகவும் ஆர்வமாகக் கலந்துக் கொண்டனர்.
ஏற்கனவே தெளிந்த மெல்லோடைப் போல நட்புடன் இருந்த ரோஷன் மற்றும் காயத்ரி ஜோடியும், கவிப்பிரியன் மற்றும் மாலதி ஜோடியும் அதிக ஆர்பாட்டம் இல்லாமல் நேர்த்தியாகக் கதையினை சமர்பித்தும், அசைவூட்டப்பட்ட படத்திற்கு உயிரூட்டியும், எளிதாக அன்றைய போட்டியில் வெற்றியும் பெற்றுவிட்டனர்.
புதியவர்களாக அறிமுகமானப் போதும் மேகன் மற்றும் பாவனாவின் நட்பும் போட்டி ஆரம்பித்தில் மொட்டாக இருந்துப் போட்டி முடிவில் மலராக மலர்ந்தது.
ஆனால் அவந்திகா மற்றும் பவளனின் கதையோ கிணற்றில் போட்ட கல்போல ‘அவர்கள் இருவரும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்களா?’ என்று சந்தேகிக்கும் அளவு அவர்களுள் பேச்சு வார்த்தையே இல்லாமல் போனது.
ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒரு தலைப்பு என்ற விதத்தில் ஏற்கனவே போட்டிகான தலைப்புகள் காகிதத்தாள்களில் எழுதப்பட்டு கண்ணாடி குடுவையில் நிரப்பப்பட்டிருந்தது. ஒவ்வொரு குழுவும் ஒரு காகிதத்தாளை அந்தக் கண்ணாடி குடுவையிலிருந்துத் தேர்ந்தெடுத்து அந்தத் தலைப்பில் அவர்களின் கற்பனைத் திறனைக் காட்ட வேண்டும். முதலில் போட்டி அறையில் நுழையும் குழுவிற்குத் தலைப்பைத் தேர்ந்தெடுக்க முதல் வாய்ப்பு என்ற முறையில் ஏற்கனவே விதிமுறைக்கான அறிக்கை ஒலிப்பெருக்கியில் சொல்லப்பட்டது. இந்த விதிமுறை ஓவிய போட்டி மட்டுமல்லாது, கதை மற்றும் அசைவூட்டப்பட்ட போட்டிகளிலும் விதிவிலக்கு இல்லாமல் பின்பற்றப்பட்டது.
கடைசியாகப் போட்டி அறையில் நுழைந்த அவந்திகா மற்றும் பவளன் முன் ஒரு கண்ணாடி குடுவையை நீட்டினார் போட்டி நடத்துபவர். அந்தக் கண்ணாடி குடுவையில் அந்தோ பாவம் என்பதுப் போலக் கடைசியாக ஒரே ஒரு காகிதத் துண்டு மட்டும் இருந்தது.
கடைசி தலைப்பைப் அவந்திகா ஜோடியிடம் கொடுத்த போட்டி நடத்துபவர், தொடர்ந்து “அவந்திகா. உங்க ஜோடி தான் கடைசி. அதனால் பலதில் ஒன்று எனத் தலைப்பைத் தேர்ந்தெடுக்க உங்களுக்கு வாய்ப்பில்லை. மன்னித்துக் கொள்ளுங்க” என்று புன்னகைத்தார்.
அவருக்கு பதிலாகப் புன்னகைத்த அவந்திகா, “எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.” என்று காகிதத்தைப் பிரித்துப் பார்த்தாள். பின் தன் அருகில் நின்றிருந்த வெள்ளை சட்டை காரனிடம் திரும்பி, “போட்டியின் தலைப்பு அரண்மனை” என்றாள்.
பதிலேதும் சொல்லாமல் தான் போட்டிருந்த சோடாபுட்டி கண்ணாடியினை தன் மூக்கின் தண்டின் மீது மேலும் கண்ணை நோக்கி நகர்த்தி, “ம்ம்” என்றான் பவளன்.
பவளனின் கண் கண்ணாடி அவனது வசீகரமான முக அமைப்பிற்கு திருஷ்டிப் போல அமைந்து அவனைப் பார்ப்பவர்கள் அவன் யாரைப் பார்த்துப் பேசுகிறான் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு இருந்தது. ஆனால் அவந்திகாவிற்கு அப்படி எதுவும் தோன்றவில்லையோ என்னமோ. அவனது கண்ணை நோக்கி, இல்லை இல்லை அந்தச் சோடாபுட்டியை நேராகப் பார்த்துப் பேசினாள்.
ஆனால் போட்டி நடத்துபவருக்குப் பவளனின் முகத்தைப் பார்க்கப் பிடிக்கவில்லை. ‘ஒன்றரைக் கண்ணோடு இவன் ஒழுங்காக ஓவியத்தை எப்படி வரையப் போகிறான்’ என்று ஏளனமாக அவனை நோக்கி ஒருப் பார்வைப் பார்த்துவிட்டுப் பின் திரும்பி அவந்திகாவை நோக்கி ‘இவனோடு கலந்துக் கொண்டு இந்தப் பெண் எப்படி போட்டியில் வெற்றி பெற போகிறதோ’ என்று பாவமாக நினைத்தார்.
மனதில் தோன்றியதை மறைத்து, “என்னுடன் வாங்க” என்று அவர்களை அழைத்துச் சென்று ஒலிபுகாதக் கண்ணாடி அறையைக் காண்பித்தார் அந்தப் போட்டி நடத்துபவர். “இது உங்களுக்கான அறை. போட்டி முறைப்படி, நீங்கள் இருவரும் தலைப்பிற்கு ஏற்றப் படி என்ன, எப்படி வரையலாம் என்பதை இங்கிருந்து ஆலோசிக்கலாம். அதற்காக உங்களுக்கு 30 நிமிடங்கள் தரப்படும்.
அதன் பிறகு இருவருக்கும் தலா ஒரு மணி நேரம் என்ற ரீதியில் 2 மணி நேரம் ஓவியம் வரைய காலவகாசம் தரப்படும். முதலில் உங்களுள் ஒருவர் அந்தத் தனி அறையில் அடுத்தவர் அறியாமல் ஓவியத்தின் முதல் பாதியை வரைய வேண்டும். அதன் பின் அடுத்தவர் அடுத்த பாதி ஓவியத்தை வரைய வேண்டும். இந்த அறை போலல்லாமல் அடுத்த அறையின் சுவர் கண்ணாடியால் ஆனது அல்ல. இங்கிருந்து நீங்க மற்ற குழுவினரைப் பார்க்க முடிவது போல அந்த அறையில் நீங்க யாரையும் பார்க்க முடியாது. அதில் நீங்க ஒருவர் மட்டுமே இருப்பீர். அந்த 1 மணி நேரமும் யாரையும் நீங்கப் பார்க்க முடியாது.
அதனோடு முதல் 30 நிமிடங்களுக்குப் பின், நீங்க இருவரும் போட்டி முடிந்தப் பின்னே ஒருவருக்கொருவர் பேச முடியும். அதனால் இந்த 30 நிமிடத்தை முழுமையாகப் பயன்படுத்தி யார் எப்படி ஓவியத்தை வரைய வேண்டும் என்பதை முடிவு செய்துக் கொள்ளுங்க.” என்று போட்டிக்கான விதிமுறைகளை வாசித்துக் காட்டினார் போட்டியை நடத்துபவர்.
“ம்ம்… புரிகிறது…” என்றாள் அவந்திகா.
போட்டி நடத்துபவர் மறந்தும் பவளனை பார்க்கவில்லை. அவந்திகாவே அங்கு அவளுடன் போட்டியில் கலந்துக்கொள்ள என்று ஒரு ஜீவன் இருப்பது உணர்ந்து பவளனிடம் திரும்பி, “உங்களுக்குப் புரிகிறதுதானே” என்று கேட்டாள்.
பவளன் எனக்கென்ன என்பதுப் போல் அக்கறை இல்லாமல் முழு நேரமும், கோணாலாகத் தெரியும் அந்த ஓட்டை கண்ணாடியின் உதவியால் அவந்திகா அறியாமல் அவளையே பார்த்திருந்தான். இருந்தபோதும் அவன் செவி அதன் வேலையைச் செய்துக் கொண்டுதான் இருந்தது.
அவந்திகாவிற்கு பதிலாகப் புன்னகைச் செய்து, “ம்ம்…” என்றான் பவளன். தொடர்ந்து “நீங்க முதல் பாதி வரைந்துவிடுங்க. நான் மீதி பாதியை வரைகிறேன்” என்றான்.
அவந்திகா “ம்ம்”.
அதனைக் கேட்ட அந்தப் போட்டி நடத்துபவர் ஆச்சரியமாக ‘என்ன ஒரு தன்னம்பிக்கை. ஒருவேளை இவன் கண்தான் குறை, கைகள் ஓவியத்தை நன்றாக வரைய கூடுமோ’ என ஒரு நொடி பவளனைப் பார்த்துவிட்டுப் பின், “இன்னும் ஒன்று உங்களின் ஒவ்வொரு செயலும் இந்தப் புகைப்பட கருவியின் மூலமாகத் தொடர்ந்து கண்கானிக்கப்படும். அதனால் போட்டியல்லாத தனிப்பட்ட(personal) விசயங்களைப் போட்டி முடியும் வரைபேசாமல் இருப்பது நல்லது.” என்றார்.
பாவம் அவருக்கு அப்போது தெரியவில்லை. அவர்கள் போட்டிகுறித்துக் கூடப் பேசிக் கொள்ள போவதில்லை என்று.
“ம்ம்” என்று அந்தப் புகைப்பட கருவியைப் பார்த்தாள் அவந்திகா.
பவளன் “…” ஒன்றும் பேசவில்லை. அவனது அவந்திகாவைப் பார்த்துக் கொண்டிருந்த பார்வைத் தொடர்ந்தது.
தொடர்ந்து பேசிய போட்டி நடத்துபவர், “உங்களுக்கு இன்னமும் எவ்வளவு நேரம் இருக்கிறது என்பது அந்த நிறுத்தற்கடிக்காரத்தின்(stop watch) மூலம் அறிந்துக் கொள்ளலாம். ஒருவேளை உங்களது கலந்தாலோசனை 30 நிமிடங்களுக்கு முன் முடிந்துவிட்டால் இந்தச் சிவப்பு நிற பொத்தானை(button) அழுத்தினால் அடுத்த அறைக்கான கதவு திறக்கப்படும். அந்தக் கதவு ஒருவர் உள்ளே நுழைந்ததும் தானாக மூடப்படும். பின் நிறுத்தற்கடிகாரத்தில் அடுத்த 1 மணிநேரத்திலிருந்து நேரம் குறைய ஆரம்பிக்கும்.
அந்த அறையில் ஓவியம் வரையத் தேவையான எல்லா பொருட்களும் இருக்கும். முதல் ஒரு மணி நேரம் கழிந்ததும் ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு வரும். அப்போது அடுத்தவர் முதலாமவர் விட்டதிலிருந்து ஓவியத்தை அடுத்த ஒரு மணி நேரத்தில் வரைந்து முடிக்க வேண்டும். அவ்வளவு தான். வேறு எதுவும் கேள்வி இருக்கிறதா அவந்திகா?” என்று கேட்டார்.
“இல்லை.” என்ற அவந்திகா அருகில் மௌனமாகக் கைகளை உடலுக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு நின்றிருந்தவனை பார்த்தாள்.
அவளது பார்வை உணர்ந்த பவளன், பதிலேதும் சொல்லாமல், ‘சரிதான்’ என்பதுப் போல் தலை அசைத்தான் பவளன்.
“அப்போது உங்களது ஆலோசனையைத் தொடங்கலாம். ஆலோசனை முடிந்ததும் விதிமுறைபடி ஓவியத்தை வரையலாம். நன்றாக வரைந்து வெற்றிப் பெற என் வாழ்த்துக்கள்” என்று அந்த அறையை விட்டுச் செல்ல எத்தனித்தார் போட்டி நடத்துபவர்.
அவர் அறைகதவைக் கடக்கவுமில்லை, பவளன் அந்தச் சிகப்பு நிற பொத்தானை அழுத்திவிட்டு, “அவந்திகா. நீங்க என்ன தோன்றுகிறதோ அதை வரையுங்கள். உங்களுக்காக நான் காத்திருக்கிறேன். எதுவாக இருந்தாலும் மீதி பாதியை நான் வரைகிறேன்” என்று திறந்த கதவின் முன் கையினை காண்பித்து அவந்திகாவிடம் சொன்னான்.
அதற்குப் பதிலாக எதுவும் பேசாமல், “ம்ம்” என்று உள்ளே நுழைந்தாள் அவந்திகா.
அதனைப் போட்டி நடத்துபவர் மட்டுமல்லாமல் கலந்தாலோசனைக்காக அருகிலிருந்து குழுவில் இருந்த அந்தக் கண்ணாடிசுவரின் மூலம் பார்த்து அனைவரும் முகத்தாடையும் தரைக்கு வருவதுப் போல “ஆ…” என வாய் பிளந்து நின்றனர்.
“அவ்வளவுதானா… ?” என்று ஒருவரும், “ஒருவாக்கியத்தில் ஆலோசனை முடிந்துவிட்டாதா?” , என்று மற்றொருவரும், “பொழுது போக்குகாகப் போட்டிக்கு வந்திருக்க கூடும். ஒரு தீவிரமே இல்லாமல் போய் இருக்கையில் அமர்ந்துவிட்டான் அந்தச் சோடாபுட்டி.” என்று ஆள் ஆளுக்கு ஒரு கதையைச் சொல்லி சில நிமிடம் வம்பு பேசினர்.
**
அவந்திகாவின் ஜோடி இப்படி நடந்துக்கொள்ள பாவனாவின் ஜோடி அதற்கு நேர்மாறாக நடந்தது. பாவனா மற்றும் மேகன் தேர்ந்தெடுத்த தலைப்பு “ஒரு ராஜாவின் கதை”.
வரலாற்று சிறப்பு மிக்க கதையினை இயக்குவது பாவனாவின் திறமைக்குச் சவால் விடக்கூடியது. பார்த்ததுமே பாவனாவிற்கு ‘அவ்வளவுதான். போட்டி அம்பேல்’ என்று போட்டியில் கலந்துக் கொள்ளுமுன்னே அவள் உயிர் (sprit) எங்கோ போய் மீண்டது.
லேசாகத் திரும்பி மேகனை பார்த்தாள் பாவனா. அவன் முகம் அவளைப் போல அச்சமோ சந்தேகமோ இல்லாமல் சாந்தமாகவும் ஆர்வமாகவும் போட்டி நடத்துபவர் சொல்லும் விதிமுறைகளைத் தீவிரமாக கேட்டுக் கொண்டிருந்தது. அவனைப் பார்த்து அவளுள் ஏற்பட்ட பயம் விலகிச் சாந்தமானது. அவனைத் தொடர்ந்து பாவனாவும் போட்டி நடத்துபவரின் வார்த்தைகளைக் கவனிக்கலானாள்.
மற்ற போட்டிகளுக்குப் போல இயக்கம் தொடர்பான போட்டியாளர்களுக்கும் ஒரு கண்ணாடி அறையும் அதனைத் தொடர்ந்து முழுதும் மூடப்பட்ட அறையும் வழங்கப்பட்டது.
அந்தக் கண்ணாடி அறையில் நின்றுக் கொண்டு போட்டியின் விதிமுறைகளைச் சொல்லலனார் போட்டி நடத்துபவர். “ உங்களுக்கான கால அவகாசம் 4 மணி நேரம். உங்களுக்கு இரண்டு நடிகர்களும், கதைகளமும் தரப்படும். 30 நிமிட கலந்தாலோசனைக்குப் பின் நீங்க ஒன்றாக அடுத்த அறைக்குச் செல்லலாம். இருவரும் இணைந்து இரண்டு நடிகர்களைக் கொண்டு அந்தக் கதைக்கலத்தை இயக்க வேண்டும். இதிலேதும் சந்தேகம் இருக்கிறதா?” என்று கேட்டார்.
“இல்லை…” என்றான் மேகன்.
அந்த நேரத்தைப் பயன்படுத்தி அருகிலிருந்த மேகனின் காதில் கிசுக்கிசுப்பாக “ஏய் குதிரைவால், எனக்கு வரலாற்று சிறப்பு மிக்க படம் எடுக்க அவ்வளவாக வராது. வேண்டுமென்றால் நீ வேறு யாரையும் ஜோடியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறாயா? இன்னமும் 4 ஜோடிகள் உள்ளே வரவில்லை. என்னோடு கலந்துக் கொண்டாயானால் தோற்றுவிடுவாய்” என்று இலவச ஆலோசனை கொடுத்தாள் பாவனா.
அவள்புரம் திரும்பிய மேகன் அவளது கள்ளங்கபடமில்லாத அறிவுரையில் சட்டெனச் சிரித்துவிட்டு, “அப்படியா? பரவாயில்லை. நான் தோற்றாலும் உன்னுடன் தோற்றால் சந்தோஷமே! ரொம்ப யோசிக்காதீங்க பாவனா.” என்றுவிட்டு குழந்தைப் போல(cute) வட்டவிழி விரித்து அவனையே பார்த்திருந்த பாவனாவின் தலையினை பிடித்து ஆட்டிவிட்டான்.
கூடவே ‘இப்படி கள்ளங்கபடம் இல்லாமல் சிறு போட்டியில் கூடத் தன்னால் மற்றவர்களுக்குப் பாதகம் வரக் கூடாது என்று நினைக்கும் பெண்ணா அத்தனை நபர்களின் உயிர் போகக் காரணமானாள்’ என்று ஒருநொடி நிகழ்வையும், நடந்ததையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாமல் தலையினை திருப்பிக் கொண்டான் மேகன்.
அதனைக் கேட்ட பாவனா, “எனக்கென்னப்பா. நான் போட்டி ஆரம்பிக்குமுன்னே சொல்லிவிட்டேன். பிறகு தோற்றுவிட்டால் உங்க குதிரைவால் நனையும் வரை மூக்கால் அழுதால் நான் பொருப்பல்ல. நான் சமாதனம் செய்யவெல்லாம் வரமாட்டேன். நினைவிருக்கட்டும்” என்று ஆள்காட்டி விரலைப் பத்திரம் காட்டி சொன்னாள்.
அவள் சொல்வதை கற்பனையில் நினைத்து உடனே சிரித்துவிட்ட மேகன், “நானா குதிரைவால், நீதான் வாலு. அதுவும் வாயைத் திறந்தால் மூடாமல் அட்டாகாசம் செய்யும் அறுந்த வாலு” என்றான்.
அவர்களின் பேச்சை அதுவரை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த போட்டி நடத்துபவர் ‘நல்ல ஜோடி’ என்று அவர்களுடன் சேர்ந்து சிரித்தப் போதும்,” முக்கிய குறிப்பு நீங்க என்ன செய்தாலும் இந்தக் கண்ணொளியின் மூலம் படம்பிடிக்கப்படும். அதனால் தனிப்பட்ட பேச்சைப் பேசாமல் இருப்பது நல்லது” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
அவர்களின் இயக்கத்தில் நடிக்க இருவர் வழங்கப்பட்டனர். அவர்களின் திறமையின் மூலம் அவர்கள் 4 மணி நேரத்தில் ஒரு காட்சி(Scene) இயக்க வேண்டும். மேகனின் உதவியால் பாவனா இந்தப் போட்டியில் இயக்கம்குறித்து மிகவும் நேர்த்தியாகவும் புதுவித யுக்திகளையும் கற்றுக் கொண்டாள்.
இருந்தப் போதும் மேகனின் ஒவ்வொரு அசைவையும் அவள் கண்கள் ஆர்வமாக விழுங்கிக் கொண்டிருந்தது. அவன்மீது அவளையும் அறியாமல் அவளுக்கு ஈர்ப்பு வந்தது. அவனைக் குதிரைவால் என்று அழைப்பதையும் அவள் நிறுத்தவில்லை. ஆனால் மேகன் காரியமே கண்ணாக அவளது கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பதிலும், இயக்கத்தில் நடிக்க அளிக்கப்பட்டவர்களிடம் நடிப்புச் சொல்லிக் கொடுத்துக் கொண்டும் இருந்தான். மேகனின் திறமையால் பாவனா முதல் நாள் போட்டியில் வெற்றிப் பெற்றாள்.
ஓவிய போட்டியைத் தவிர மற்ற போட்டிகளின் முடிவுகள் உடனடியாக வழங்கப்பட்டது. அதனால் மற்ற குழுவினர் அவந்திகா வெளியில் வருவதற்காக அவளது போட்டிக்கான கட்டிடத்தின் முன் காத்திருப்பவர்கள் இருக்கையில் காத்திருந்தனர். மேகன் முகமன் கூறி “நாளைப் போட்டியில் சந்திக்கலாம்” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.
எந்தக் கலந்தாலோசனையும் இல்லாமல் ஓவியத்தை வரைந்த அவந்திகாவிற்கு வெற்றி பெருவதிலெல்லாம் அவ்வளவு ஈடுபாடில்லை. அதனோடு அவளால் அவள் வாழ்ந்த அரண்மணையின் வடிவம் மட்டுமே வரைய முடிந்தது. அதற்கான நிறங்களைத் தேர்ந்தெடுக்க கூட இல்லை. அதற்குள் நேரம் முடிந்துவிட்டது.
என்ன வேகமாக வரைந்தாலும் மீதி பாதி அரண்மணையின் ஓவித்தோடு வண்ணமும் அடிக்கப் பவளனால் முடியாது என்று நினைத்தாள். அதனால் நம்பிக்கையின்றி முடிவிற்காகக் காத்திருந்தாள்.
ஆனால் அவந்திகாவின் கணிப்பு தவறாகுமாறு அன்றைய போட்டியில் முதல் பரிசுக் கொண்டு வெற்றிப் பெற்றது அவந்திகா மற்றும் பவளன் ஜோடியே. அவர்களின் இறுதி ஓவியத்தை பெரிய திரையில் காண்பித்தப் போது மற்றவர்கள் ஆச்சரியமுற்றதை விட, அதிகமாக அதிர்ந்தது அவந்திகாவே.
அந்த அதிர்ச்சி முதல் பரிசு வாங்கியதற்காக இல்லை. தான் வாழ்ந்த அரண்மையின் ஒவ்வொரு சுவரின் வடிவமும் நிறமும் இம்மியளவும் மாறாமல் திரையில் தெரிந்த அந்த ஓவியம் அவளது மனதில் படப்படப்பை ஏற்படுத்தியது. நேரில் பார்த்ததுப் போல் அதனை வரைந்திருந்த பவளனை திரும்பி விழி கூர்மையுடன் பார்த்தாள்.
அவள் பார்ப்பது உணர்ந்து அவளை நோக்கி அவனும் திரும்பிப் பார்த்தான் பவளன். தன் இருக்கைகளையும் தன் உடலுக்குக் குறுக்காக கட்டிக் கொண்டு அங்கிருந்த தூணில் சாய்ந்துக் கொண்டு எனக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்பதுப் போலான அவனது பார்வை, அவந்திகாவின் சந்தேகத்தைத் தூண்டியது.
அவன் பார்கிறான் என்று தெரிந்தப் போதும் தன் விழிகளை அவள் திருப்பவில்லை, மின்னல் ஒளிப் போலக் கூர்மையாக அவனை அளவெடுத்தாள். ‘யார் இவன்’ என்ற சந்தேகம் ஆழமாக மனதில் ஊன்றியது.
அவளது பார்வையினை தளர்த்தாததை உணர்ந்து அவள் அருகில் வந்த பவளன், “இளவரசி. அதிகம் யோசிக்காதீங்க” என்று விட்டு, அவளைக் கடந்து ஓய்வறை நோக்கிச் சென்றுவிட்டான்.
அவனது இளவரசி என்ற அழைப்பில் பிரமைப் பிடித்தவள் போல அப்படியே நின்றுவிட்டாள் அவந்திகா. படப்படவென்று வேகமாகத் துடித்த இதயத்தைத் தன் வலது க்கையால் அழுத்தி நிறுத்திட முயன்றாள். அதிர்ச்சியும், பயமும் யாளிகளுக்கு விரக்தியாக இருக்கும்போது மட்டுமே உண்டாகும். அதனால் இப்போது பொறுமை இழந்து துடிக்கும் இந்த மனித இதயத்தை எண்ணி அவந்திகாவிற்கு எரிச்சலாக வந்தது.
இப்போது எதற்காகப் பரதம் ஆடுவதுப் போல, ‘இந்த மனித இதயம் துடிக்கிறது’ என்று உள்ளுக்குள் புயல் அடித்துக் கொண்டிருந்த போதும், அவந்திகா வெளியில் பார்க்கச் சாந்தமாக முகத்தை வைத்துக் கொண்டாள்.
அமைதியாக அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து, ‘யாளி உலகிலிருந்த வந்த அந்த மேகனா இவன்.? முகம் வேறு போல இருக்கிறது. கண்ணாடி வேறு அணிந்திருக்கிறான். யாளியாக இருந்தால் பார்வைக் குறைவு எப்படி ஏற்படும்? அதனோடு, நான் யாளி என்பது தெரிவதே அரிது. அப்படியிருக்க இவனுக்கு நான் இளவரசியாக இருந்ததும் தெரிந்திருக்கிறது. இல்லை இவை அனைத்தும் என் பிரமையா?’ என்று தனக்குள் பட்டி மன்றம் நடத்திக் கொண்டிருந்த அவந்திகா அவன் மீண்டும் ஓய்வறையிலிருந்து வெளியில் வருவதற்காகக் காத்திருந்தாள்.