“இரு இரு உன்ட்ட தனியா பேசணும், உள்ள போனா என்னால பேச முடியாது…”
“அத்தான் எங்கே??”
“அவியளை எதுக்கு கேக்க?? அவிய அக்காக்கு விசா விசயமா அலைஞ்சுட்டு இருக்காவ போல. எங்களை இங்க கூட்டிட்டு வந்து விட்டுட்டு தான் போனாவ…”
“ஆ… ஆ… எதுக்குட்டி கொட்டுத??”
“உம் புருஷனை தான் அத்தான்னு சொன்னேன்…”
“ஓ அவியளா, என் ரூம்ல தான் இருக்காவ…”
“அவியளை அங்கவிட்டு நீ இங்க என்ன செய்தே… கூறுகெட்ட குப்பாயி…” என்று மறுபடியும் ஏசினாள்.
“இப்போ என்ன வேணும் உனக்கு, என்னைய ஏசிட்டே இருக்கவ??” என்று கோபமாய் சொன்னேன்.
“வித்யாக்கா சொன்னதை பார்த்து நானும் உனக்கு அறிவு வந்திட்டு நினைச்சுக்கிட்டு கிடந்தேன், நீ என்னட்டி இப்படி இருக்க…” என்று மீண்டும் என்னை ஏச தொடங்கிவிட்டாள் கல்யாணி.
“எங்கக்கா உன்னைய எப்போ பார்த்துச்சு??”
“நீங்க வந்திருகீயன்னு சொல்லிட்டு போவ வந்தாவ…”
“சரி அக்கா என்ன சொல்லுச்சு உன்கிட்ட”
“அடியேய் நீ மத்ததுல விவரமில்லாம இருந்தாலும் அந்த விஷயத்துல விவரமா தாட்டி இருந்திருக்க…”
“எந்த விஷயத்துல??”
“தெரியாத மாதிரியே நடிப்பியே??”
“என்னன்னு சொல்லுட்டி??” என்று கடுகடுத்தேன்.
“நேத்து நைட் எல்லாம் முடிஞ்சிருச்சாம்ல…”
“என்ன முடிஞ்சிருச்சு??”
“ஹம்ம் நடிக்காதட்டி??”
அவள் சொன்ன அந்த முடிஞ்ச விஷயம் என்னவா இருக்கும்ன்னு யோசிக்கவும் அதை சொல்லுதாலோ அப்படின்னு நினைச்சுட்டே “இப்படின்னு உனக்கு சொன்னது எங்கக்காவாட்டின்னு…” கேட்டேன்.
“ஆமா…”
“நீ கேட்டியா நேத்து என்ன நடந்துச்சுன்னு, இல்லை எங்க அக்காவா சொல்லியாவுதா…”
“ஏன்ட்டி கேக்க?? நா அக்காவை தனியா கூப்பிட்டு தான் கேட்டேன், அக்கா தான் சொல்லிச்சு…”
நா பல்லைக் கடிச்சேன். நா எப்போ அப்படி சொன்னேன்னு. நா அக்காகிட்ட என்ன சொன்னேன்னு யோசிச்சு பார்த்தேன், நா பேசுனது ஞாபகம் வந்திச்சு. ஆத்தி இந்த அக்கா நா பேசுனது வைச்சு கண்டதும் யோசிச்சு வைச்சிருக்கு போலவே…
“என்னட்டி ஒண்ணும் பேசாம இருக்கவ…”
“என்னத்தை சொல்ல சொல்லுத, நா ஒண்ணு சொல்லி வைச்சா இந்த அக்கா என்னவோ புரிஞ்சு வைச்சு இருக்கு…”
“அப்படின்னா எதுவும் நடக்கலையா??”
“நேத்தே தான் எல்லாம் நடக்கணுமா என்ன… அதெல்லாம் உங்ககிட்ட வந்து வேற சொல்லுவேனா நானு… பேசி வைச்சிருக்குங்க பாரு பக்கிங்க…”
“இப்போ நீ எதுக்குட்டி என்னைய ஏசுத??”
“உங்களுக்கு பேச வேற விஷயமே கிடைக்கலையாட்டு இருக்குது… என் தலையை எதுக்கு உருட்டியாவுது…”
“இதெல்லாம் கேக்குறது தானேட்டி… நா நேரா வந்து தான் உன்கிட்ட கேக்கணும்ன்னு நினைச்சேன். ஒரு ஆர்வத்துல அக்காவை பார்த்ததும் கேட்டுட்டேன்…” என்றாள் அவள்.
“அச்சோ…”
“என்னட்டி??”
“ஒண்ணுமில்லை என் மானத்தை மொத்தமா வாங்கியாவுது, போட்டி உள்ளே…” என்று அவளைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தேன்.
நா பார்த்த மாதிரி அவுக ஜன்னலோரமா வந்து என்னை பார்த்து இருப்பாவலோன்னு எனக்கு சந்தேகம். இவ வேற கண்டதும் பேசியாவுது, முருகா இதெல்லாம் அவிய கேட்டிருக்கக்கூடாது என்று வேண்டிக் கொண்டேன்.
அடுப்படிக்கு சென்றேன், “அம்மா நான் சமைக்கவா??”
எங்கம்மா மேல இருந்து கீழே வரை என்னைய வித்தியாசமா பார்த்து வைச்சாங்க…
“ஏட்டி ஒரே நாள்ல என்னாச்சு உனக்கு??”
“இப்படி நீ ஆவேன்னு தெரிஞ்ச்சு இருந்தா உனக்கு முன்னாடியே கல்யாணம் பேசியிருப்பேனே??” என்று என் அம்மா வேறு என்னை கலாய்த்தார்.
“ம்மா…” என்று சிணுங்கினேன்.
“அம்மா ஏம்மா அவளை கேலி பேசுதீங்க??” அக்கா பரிந்து வந்தாள் எனக்காக.
“பெரியம்மா கேலி பேசலை வித்யாக்கா… இந்த குப்பாயிக்கு இப்போ வாச்சும் பொறுப்பு வந்துச்சுன்னு நினைச்சிருப்பாவ… என்னா பெரிம்மா நான் சொன்னது சரி தானே…” என்றாள் கல்யாணி.
“ஒரு ஹெல்ப் பண்றேன் சொன்னது தப்பா…”
“தப்பில்லை ஆனா உனக்கு தான் எதுவும் சமைக்க தெரியாதே??”
“யார் சொன்னாங்க உங்களுக்கு??” வீம்பாய் சொன்னேன்.
“எனக்கு தான் தெரியுமேட்டி??”
“என்ன தெரியும் உங்களுக்கு என்னைப்பத்தி… நா சமைச்சு நீங்க யாரும் சாப்பிட்டதில்லைன்னு சொல்லுங்க. எனக்கு சமைக்க தெரியாதுன்னு எல்லாம் சொல்லாதீங்க…”
“அந்த கறியை கொண்டாங்க நா குழம்பு வைக்கேன்…”
“வேணாம்லே நானே செஞ்சுகிடுதேன்…”
“அம்மா அவ தான் ஆசைப்படுதால்ல, எதாச்சும் செய்ய சொல்லுங்கம்மா…” மீண்டும் அக்காவே தான் எனக்கு பேசினாள்.
அம்மாவுக்கு இன்னும் யோசனையே தான். “இவ்வளவு யோசனை எல்லாம் வேணாம் போங்கன்னு” சொல்லிட்டு நா கோபமாய் கிளம்ப போக “இந்த முட்டையை நீ என்ன செய்யணுமோ செய்…” அப்படின்னாங்க அம்மா.
“கஷ்டப்பட்டு ஒண்ணும் சொல்ல வேணாம்…”
“நிசமா தான் சொல்றேன், நீயே செய்”
அவிய ஒரு பக்கம் சமைச்சுட்டு இருந்தாவ, நா வெங்காயத்தை உரிச்சு பொடியா அறிஞ்சு வைச்சேன், தக்காளி நறுக்கி வைச்சு பூண்டு உரிச்சு வைச்சேன்.
“நீங்க அடுப்பு வேலை முடியவும் சொல்லுங்க நா செய்யறேன்…”
“என்னட்டி செய்ய போறே?? முட்டைய அவிய போடணுமா??” என்றாள் கல்யாணி.
“ஆமா அவிக்கணும்…”
“அப்போ போட வேண்டியது தானேட்டி”
“ரெண்டு அடுப்பும் தான் ப்ரீயா இல்லையே…”
“கரண்ட்டு அடுப்பு தான் இருக்குதுல அதுல வையி” என்று அக்கா எடுத்துக் கொடுத்தாள்.
“ஹ்ம்ம் ஆமால…” என்றுவிட்டு முட்டை எங்கே இருக்குன்னு கேட்டு வாங்கிக்கிட்டேன்.
அதை அவிய போட்டேன்… அம்மாவும் அக்காவும் அடுப்பு வேலை முடிச்சாவோ.
“கல்யாணி நீ கூட இருட்டி” என்றுவிட்டு அக்காவை அழைத்துக்கொண்டு அவர் சென்றுவிட்டார்.
“நீயே சமைச்சிருவியாட்டி”
“ஏன் உனக்கு என்ன டவுட்டு…”
“சரி சரி நீ செய் ஆத்தா…”
நா வேக வேகமாய் சமைச்சு முடிச்சேன். “இந்தா டேஸ்ட் பண்ணிப்பாருன்னு…” சொல்லி கல்யாணிகிட்ட கொடுத்தேன்.
அவ சாப்பிட்டு விட்டு “ஏட்டி நீ தான் செஞ்சியா, உனக்கு இம்புட்டு நல்லா சமைக்க வரும்ன்னே இன்னைக்கு தான்ட்டி எனக்கு தெரியுது…”
“முட்டையில உள்ள இந்த கிரேவி நல்லாயிருக்குட்டின்னு…” அவ மனசார பாராட்ட இப்போ தான் எனக்கு திருப்தியே…
“அம்மா பாயாசம் செஞ்சு வைச்சு இருக்காவ, நா இன்னொரு ஸ்வீட் செய்யவா ஈசியா…”
“இன்னைக்கு நீ எனக்கு அதிர்ச்சி மேல அதிர்ச்சி கொடுக்குறியேட்டி”
“விடுட்டி விடுட்டி இதெல்லாம் ஜகஜம்…” என்றுவிட்டு
எங்கள் வீட்டில் இருந்த தேங்காய் எடுத்து உடைத்தேன். இருவருமாக சேர்ந்து துருவினோம். கடகடவென்று தேங்காய் பர்பி செய்து அதை தட்டில் கொட்டி ஷேப் செய்து ஆறவிட்டேன்.