8
“வள்ளி… வள்ளி… வள்ளி…” என்று வெகு நேரமாக கதவு தட்டும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. நான் மெதுவா திரும்பி பக்கத்துல பார்க்க என்னை நெருக்கி வள்ளிக்கண்ணு படுத்திட்டு இருக்கா.
பக்கத்துல இருந்த என் போனை எடுத்து நேரம் பார்க்க மணி ஆறாக பத்து நிமிஷம் காமிச்சுது. இந்த நேரத்துல எதுக்கு எழுப்பறாங்கன்னு யோசிச்சுட்டே நான் அவளை எழப்பலாமா வேணாமான்னு பார்த்திட்டு இருந்தேன்.
அம்மணிக்கு தூங்கிட்டா இடியே விழுந்தாலும் கேட்காது போல எனக்கு சின்ன சத்தம் வந்தாலும் விழிப்பு வந்திடும். இவ என்னடான்னா இப்படி தூங்குறா…
வெளியே மீண்டும் கதவை தட்டும் சத்தமும் அவளை எழுப்பும் சத்தமும் கேட்டது. இப்போ என் அக்கா வேற வந்திட்டா,
மதினி நீங்க இருங்க நான் ஆரவ்க்கு போன் பண்றேன் என்று அக்கா சொல்வது தெளிவாய் எனக்கு கேட்டது இப்போது.
போனை அவசரமாய் எடுத்து சைலென்ட் மோடுக்கு வைச்சுட்டு பக்கத்துல படுத்திட்டு இருந்தவளை தான் பார்த்தேன்.
உடம்பை குறுக்கி என் மேல சாய்ஞ்ச வாக்குல படுத்திருக்கா, கொஞ்சம் ப்ரீயா படுக்கட்டும்ன்னு நான் எழுந்து கட்டிலை சுத்தி வந்து அவ பக்கத்துல படுத்துக்கிட்டேன்.
இன்னும் கொஞ்சம் நேரம் அவ தூங்கட்டும்ன்னு நான் நினைக்கும் போதே என் போன் கிர் கிர்ன்னு வைபிரேட் ஆச்சு.
‘அவங்க தான் எழுப்புறாங்கன்னா இந்த அக்காவுக்கு அறிவே கிடையாது…’ இருவரையுமே பாரபட்சம் பார்க்காம தான் திட்டிக்கிட்டேங்க.
என் வள்ளிக்கண்ணுக்கு அக்காவா போய்ட்டாங்க. இல்லன்னா அவ்வளவு தான். நேத்து அவ மனசுல இருக்கறதை எல்லாம் பேசினதை கேட்டபோ நான் நினைச்சது தான் சரின்னு தோணிச்சுங்க…
வளர்ந்திருக்கா ஆனா அவ குழந்தை தாங்க… வள்ளிக்கண்ணு தூக்கத்தில் பிரண்டு மறுபடியும் என் பக்கம் தாங்க வர்றா.
இதுக்கு மேல தாங்காது. என்னைவிட்டா இன்னைக்கு நாள் பூரா அவளைப் பத்தியே பேசிட்டு இருப்பேன்.
என் அக்காவும் அவ அக்காவும் கதவை உடைச்சிட்டு உள்ள வர்றதுக்குள்ள நானே அவளை எழுப்பிடறேன்.
ஆமா நான் என்னன்னு சொல்லி அவளை எழுப்பறது… (பேரு வைப்பாராம் ஆனா சோறு வைக்க மாட்டாராம் மொமென்ட், அடேய் வள்ளிக்கண்ணுன்னு சொல்லி எழுப்புடா…)
“ஆமால என் வள்ளிக்கண்ணுவை வேற எப்படி சொல்லி எழுப்பறதாம்…”
“வள்ளிக்கண்ணு… வள்ளிக்கண்ணு…” என்று மெதுவாய் அழைத்தேன்.
சத்தியமா அந்த சத்தம் என் காதுக்கே கேட்கலைங்க… முறைக்காதீங்க, நான் பண்றது கொஞ்சம் ஓவர்ன்னு எனக்கே தெரியது…
வெறும் காத்து தான் வருது… (இஞ்சி… இஞ்சின்னு இஞ்சி இடுப்பழகா பாட்டாடா உன்னை பாடச் சொன்னாங்க…)
இப்போ ரொம்ப பக்கத்துல போயிட்டேன். கன்னம் நல்லா புஸ்ஸுன்னு இட்லி மாதிரியே இருந்துச்சு… (இவன் சாப்பாட்டு ராமன் போல…)
அப்படியே கடிக்க சொல்லி என்னோட மைன்ட் வாய்ஸ் சொல்லுது… டேய் ஆரவ் இதெல்லாம் தப்புடான்னு என் மைன்ட் வாய்ஸ் தான் மறுபடியும் குரல் கொடுக்குது.
மானங்கெட்ட மைன்ட் வாய்ஸ், நல்லது கெட்டது ரெண்டையும் அதுவே சொல்லுதுங்க…
அடேய் ஆரவ் மறுபடியும் கதவு தட்டுற சத்தம் கேட்குதுடா… அவளை எழுப்பு…
இந்த தடவை எதையும் யோசிக்காம அவ கையை சுரண்டினேன். “வள்ளிக்கண்ணு எழுந்திரு…”
“இன்னும் கொஞ்ச நேரம் தூங்கறேன்ம்மா…”
“அம்மா இல்லை வள்ளிக்கண்ணு…”
“ஆச்சியா… ஆச்சி இன்னும் கொஞ்ச நேரம்…” என்று சொன்னவள் எழுந்து அமர்ந்திருந்த என் மடி மீது தலை வைத்து படுத்துக் கொண்டாள். (சத்திய சோதனை…)
“வள்ளிக்கண்ணு… எழுந்திரு உங்க அக்கா உன்னை ரொம்ப நேரமா கூப்பிட்டு இருக்காங்க…” என்றேன் குனிந்து அவள் காதில்.
என் சத்தத்தில் சட்டென்று இமை திறந்தாள் அவள். பக்கத்துல நெருக்கத்துல அவளோட முகம் எதாச்சும் பண்ணுடான்னு ஒரு குரல்.
அவ முழிச்சு பார்க்கவும் நிமிர்ந்தேன். என்ன நினைச்சாளோ சட்டுன்னு எழுந்து உட்கார்ந்து அவ ட்ரெஸ் எல்லாம் சரி பண்ணா எனக்கு கொஞ்சம் கோபம் வந்திடுச்சு.
நான் என்ன பேட் பாயா இப்படி எல்லாம் செய்யறான்னு தோணிச்சு. அவளை பார்க்காம “உங்க அக்கா உன்னை கூப்பிடுறாங்கன்னு சொன்னேன்…”
“ஓ!!” என்றவள் “நா குளிச்சுட்டு வெளிய போறேன்…” என்று சொல்லிவிட்டு வேகமாய் அங்கிருந்த குளியலறைக்குள் நுழைந்துவிட்டாள். போன வேகத்தில் திரும்பியும் வந்தாள்.
“என்னாச்சு…”
“என் டிரஸ், பிரஷ்…” என்றாள்.
“உன் டிரஸ் எங்கன்னு தெரியலையே… பிரஷ் வேணும்ன்னா என்கிட்ட புதுசு ஒரு செட் இருக்கு அதை தர்றேன்” என்றேன்.
“ஒரு வேளை எங்க அக்கா என் டிரஸ் கொடுக்கறதுக்காக தான் என்னை எழுப்பி இருப்பாளோ…”
“ஆமா இப்போ தாங்க எனக்கு ஞாபகம் வருது, நேத்து நைட் புடவை மாத்திட்டு என்னோட திங்க்ஸ் எல்லாம் கீழே இருக்க ரூம்லவே வைச்சுட்டோம்” என்றவள் வேகமாய் கதவை திறந்தாள்.
அவ சொன்னது போல தாங்க அவ டிரஸ் கீழ ரூம்ல வைச்சதை கொடுக்கவும் அவளை குளிச்சுட்டு கிளம்பி வரச்சொல்லவும் தான் கூப்பிட்டிருக்காங்க…
“நா குளிச்சுட்டு வந்திடறேன்…” என்று என்னிடம் சொன்னாள்.
“பிரஷ் கேட்டியே??”
“இல்லை என் பேக்ல இருக்கு…” என்று சொல்லி தனக்கு தேவையானதை எல்லாம் எடுத்துக்கொண்டு அவள் உள்ளே சென்றாள்.
நானும் எழுந்து வாஷ் பேசின்ல போய் பிரஷ் பண்ணிட்டு பேஸ் வாஷ் பண்ணிட்டு வந்தேன்.
இப்போ கட்டிலை பார்த்தேன் ஒரே குப்பையா இருந்துச்சு. நைட் பார்க்க அழகா இருந்த பூவெல்லாம் நாங்க படுத்து உருண்டதுல கசங்கி போயிருந்துச்சு… (டர்டியா யோசிக்காதீங்க, நாங்க ரெண்டு பேரும் தூங்கினதை தான் அப்படி சொன்னேன்)
அதை மொத்தமா வாரி அங்க இருந்த டஸ்ட்பின்ல போட்டேன். பெட்ஷீட் உதறி விரிச்சேன். எனக்கு எப்பவும் நீட்டா இருக்கணும் அது தான் பிடிக்கும். கன்னாபின்னான்னு இருந்தா பிடிக்காது.
யாரையும் எதிர்ப்பார்க்க மாட்டேன், நானே என் வேலைகளை செஞ்சுக்குவேன்… அவ வர்றதுக்கு முன்னாடி கீழே விழுந்து கிடந்த கொஞ்ச பூவையும் துடைப்பம் எடுத்து பெருக்கி குப்பையில போட்டேன்.
வள்ளிக்கண்ணு குளிச்சுட்டு வந்திட்டா… என்னடா இது நைட்டியோட வர்றா…
நான் அவளை வினோதமா பார்க்கறதை எல்லாம் அவ கவனிக்கலை மறுபடியும் அவளோட பெட்டி எடுத்து ஏதோ தேடினா…
அந்த ஏதோ புடவை தாங்க… நல்ல வாடாமல்லி கலர்ல லேசாய் பார்டர் வைச்ச புடவையை எடுத்து கட்டில் மேல வைச்சா…
இந்த புடவை இவளுக்கு எப்படி இருக்கும் என் கற்பனை அங்க தான் போச்சு.
இப்போ நிமிர்ந்து என்னை பார்த்தா… எதுக்கு பார்க்குறா…
“நா புடவை கட்டணும்”
“சரி…”
“நீங்க கொஞ்சம் வெளிய இருக்கீங்களா…”
“ஓ… சாரி…” என்றேன்.
“நான் வெளிய போகலை, உள்ளே போறேன்… குளிக்க போறேன், அதுக்குள்ளே கட்டிடுவல்ல…”
“ஹ்ம்ம்…” என்று அரைகுறையாய் தலையாட்டினாள்.
நான் எனக்கு தேவையானதை எல்லாம் எடுத்திட்டு குளிக்க போயிட்டேன்.
உள்ள குளிக்கறதை விட்டுட்டு என்னோட மைன்ட் முழுக்க அந்த சேலையில அவ எப்படி இருப்பான்னு தான்…
சம்மந்தமே இல்லாம் பாட்டு வேற ஓடுதுங்க… சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்கன்னு…
வாய்விட்டு பாடிட்டே குளிச்சு முடிச்சேன். வெளிய போகவா வேணாமான்னு ஒரு எண்ணம். இவ இன்னும் சேலை கட்டிட்டு இருந்தா நான் என்ன செய்ய அதான்.
மெதுவா கதவை திறந்து வெளிய எட்டிப் பார்த்தேன் அவளைக் காணோம். வெளிய போய்ட்டா போலன்னு நினைச்சுட்டே வந்தேன். கண்ணாடி முன்னாடி உட்கார்ந்து இருந்தா.
என்னை பார்த்ததும் சட்டுன்னு எழுந்து நின்னா… “நா வெளிய போகணுமா…”
“எனக்கு உன் முன்னாடி டிரஸ் மாத்துறதுல எந்த ஆப்ஜெக்ஷனும் இல்லைன்னு” சொன்னேன்.
அவ முகம் அப்படியே சிவந்து போச்சு. ஒண்ணுமே பேசலை, நீ தலைவாரப் போறேன்னு நினைக்கிறேன். நீ அதைப்பாரு நான் ஓரமா நின்னு டிரஸ் மாத்திக்கறேன்.
கண்டிப்பா உனக்கு ப்ரீ ஷோவெல்லாம் காட்டுற ஐடியா எனக்கில்லைம்மா, என்னை நம்பலாம்…
டேய் ஆரவ் உனக்கு இப்படியெல்லாம் பேச வருமாடா… நீ 90s கிட்ஸா இருந்தாலும் உனக்குள்ளயும் ஒரு ரெமோ ஒளிஞ்சு கிடக்குறான்டா… எனக்கு நானே சொல்லிக்கிட்டேன், நீங்க தான் யாரும் சொல்ல மாட்டீங்களே.
அவ திரும்பி போய் கண்ணாடி முன்னாடி உட்கார்ந்துக்கிட்டா, என்னோட ரூம்ல நான் வாங்கி வைச்ச டிரெஸ்ஸிங் டேபிள் அதுல என் பொண்டாட்டி நல்லா தான்யா இருக்கு இந்த பீலு…
சொல்ல மறந்திட்டனே அந்த வாடாமல்லி கலர் புடவையில சும்மா அசத்துறா போங்க…
அவ உட்காரவும் தான் நான் பார்த்தேன். இதென்னெங்க இந்த காலத்துல இவ்வளவு பெரிய முடி வைச்சிருக்கா…
பொண்ணு பார்க்க போனப்போ இதை நான் கவனிக்கலையே… ஆத்துல இருந்து அவ திரும்பி வந்தப்போ பார்த்தியே அப்போ கூட நீ கவனிக்கலைன்னு என் மைன்ட் வாய்ஸ் எனக்கு எடுத்து கொடுத்திச்சு.
நான் அவளை பார்த்திட்டு இருக்கேங்க, ஆனா அவளுக்கு அது தெரியாது. அவதான் ரொம்ப மும்முரமா கண்ணாடி முன்னாடி உக்காந்து ஜடை போட்டுட்டு இருக்காளே!! முன்னாடியே பார்த்திருக்கேன் தான். ஆனால் இப்படி அவளை நான் பார்த்ததே இல்ல. ஆமாங்க!! இது என்னோட மனைவிங்கிற உரிமையான பார்வை. அட, அவ எப்படி இருப்பான்னு உங்களுக்கு தெரியுதா? ஆனா என்னோட கண்ணு வழியா நீங்க அவளை பார்த்தது இல்லைதானே?? இப்போ பாருங்க!! அவளோட ஜடை ரொம்ப நீளம்ங்க, அதோட ரொம்ப அடர்த்தி. நீளம்னா, அவளோட பின்னழகை தாண்டி விழுது!! அவ தல வாரி முடிச்சிட்டா போல, ஜடைல எதையோ மாட்டி பின்னாடி தூக்கிபோடறா.
அம்மாடி!! அது என்னங்க ஜாடையா?? இல்ல சாட்டையா?? ஒண்ணு சொல்லவா திட்ட மாட்டீங்களே, பின்னாடி விழுந்தது அவளோட ஜடை மட்டுமில்லைங்க; நானும்தான்!! இப்ப என்ன பார்த்து நிக்கிறா, என்கிட்ட எதையோ பேச கூட செய்யறா. ஆனா எனக்குதான் அவளோட வார்த்தை எதுவும் காதுல விழவே மாட்டேங்குதுங்க. என் கண்ணும் கவனமும் அவளோட முகத்துல மட்டும் தான்!! உங்களுக்கு தெரியுமா?? அவளோட வலது புருவத்தோட ஓரத்துல சின்னதா, ரொம்பவே சின்னதா ஒரு மச்சமிருக்குங்க. அது எப்படி எனக்கு தெரியும்ன்னு நினைக்கறீங்க அதானே!!
வேற எப்படி தெரிய போகுது, அதான் அவ இப்போ என் பக்கத்துல அதாவது எனக்கு ரொம்ப நெருக்கமா எதிர்ல நின்னு பேசிட்டு இருக்காளே!!
அப்படி தான் தெரிஞ்சுது… அந்த மச்சம் அவளோட முகத்துக்கு அவ்ளோ அழகை கொடுக்குது. மச்சமா அது?? மிச்சமிருக்க என் உயிரை கொஞ்சம் கூட மிச்சமில்லாம உறிஞ்சிடும் போல. ஆமா?? முகத்துல மச்சமிருந்தா அந்த பொண்ணுங்க அழகுன்னு பொதுப்படையான ஒரு கருத்து இருக்குல?! அதை நம்புவீங்களா??
நானே இதுவரைக்கும் நம்பினது இல்லைங்க, ஆனா இப்போ நான் அதை நம்புறேங்க… என்னோட வள்ளிக்கண்ணை பார்த்த பிறகு சத்தியமா நம்புறேன்.
அட அதுமட்டும் இல்லைங்க, அவளோட இடது கன்னத்துல மட்டும் சிரிக்கும்போது நீளவாக்குல குழி விழுகுதுங்க. அதை எப்படி சொல்ல?? மழை துளி விழுந்தா சிக்கிற குழி இல்ல இது, மழைத்துளி விழுந்து வழிஞ்சு ஓடுற கன்னக்குழி… அந்த நீளவாக்கான கன்னக்குழியில நான் விழுந்தா என்ன ஆவேன்?? அப்படியே உருகி கரைஞ்சு கன்னம் தாண்டி கழுத்தை தாண்டி மெல்ல மெல்ல இறங்குவேனோ? அட ஏடாகூடமா யோசிக்காதீங்க!! நான் நெஞ்சுக்குழிக்குள்ள இறங்குவேன்னு சொன்னேன்!! வேற எதவும் தப்பா யோசிக்காதீங்க!!
“நான் உங்கட்ட தான் பேசிட்டு இருக்கேன்… ஏங்க??” என்று அவள் என் தோளை தட்ட நான் நடப்புக்கு வந்தேன்…
இவ்வளவோ நேரம் நான் எங்க இருந்தேன் மொமென்ட் தான். “சொல்லு வள்ளிக்கண்ணு…” என்றேன்.
“நா கீழே போறேன்னு சொன்னேன்…”
“ஹ்ம்ம் சரி…” என்ற நான் செல்லும் அவளின் மீதே பார்வையை வைத்தேன். சென்றது அவள் மட்டுமல்ல என் மனதும் தான் அவளின் பின்னேயே சென்றது.
நேத்து நைட் அம்மணி என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்னு பாடினது எனக்கு கேட்டுச்சு. ஏன் பாடின்னான்னு தெரியலை.
அதை இப்போ பாடணும்ன்னு தோணிச்சு. உம் புருஷன் தான் உனக்கு மட்டும் தான்னு என் வாய் சன்னமா பாட்டை முணுமுணுக்க கதவை திறக்க போனவ நின்னு திரும்பி பார்த்தா, அப்புறம் வேகமா கதவை திறந்து போய்ட்டா…
அவளுக்கு தெரிஞ்சு போச்சு நைட் அவ பாடினதை நான் கேட்டேன்னு. அதான் ஓடிட்டா போல… எனக்கு என்னவோ ஆச்சுங்க… நான் இப்படியே இருந்தேன் வேலைக்கு ஆகாது, நான் கிளம்பறேன் மாமியார்வீட்டில எல்லாரும் எங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க…