அன்புடன் அதியமான் அண்ணாமலை
அத்தியாயம் 22
”உள்ளத்தார் காத வைராக உள்ளி நீ
யாருழைச் சேறிஎன் நெஞ்சு.”
                   -திருக்குறள் (நெஞ்சோடு கிளத்தல்)
பொருள்:
        என் நெஞ்சமே! தலைவர் எப்போதும் உன் உள்ளத்திலேயே தங்கி உள்ளார் என்பதை அறிந்தும், நீ அவரைத் தேடி எங்கே யாரிடம் கேட்கச் செல்கின்றாய்?.
இப்படி நினைத்துதான் அன்பு மூன்று நாட்களாக தன் அன்றாட வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள் சென்னையில். 
மூன்று நாட்கள் கழிந்த பின், தன் வீட்டிற்கு வந்த அழகர் இவளுக்கு அழைக்க,
அண்ணாவின் வீட்டில் உள்ளவர்களைப் பற்றி விசாரித்தாள் அன்பு. 
இவனுக்கு கண்ணீர் அமைதியாக பெருகி வர, “நியாயமா அன்னைக்கு உனக்குதான் நான் முதல்ல போன் பண்ணி சொல்லி இருக்கணும். ஆனா எனக்கு அந்த அளவு  மனதிடம்லாம் அன்னைக்கு இல்லை. மன்னிச்சிடுமா!” என்று சொல்ல,
“புரியுது! நீங்க ரொம்ப பாசம் எல்லார் மேலேயும்” என்று புன்னகைத்தாள்.
எந்தவித குற்றச்சாட்டும் இல்லாமல் அவள் பேசியதில்,
“யார் நானா? என்னைத்தான் எல்லாரும் சண்டைக்காரன், முரடன்னு சொன்னாங்க. இப்போ மூணு நாளா ”அழகரு! சாப்பிட்டியா நீ? அவனையே நினைச்சுட்டு இருக்காத!”னு அந்த பூக்கடை பாட்டி இருக்குல, அதுகூட வந்து விசாரிச்சுட்டு போகுது” என்றான் தன் கண்களை துடைத்தபடி. 
 
”பாட்டிக்கு ஒரு பூலிவர் சாங் போட்டு விட்டுடுங்க!” என்று இவள் புன்னகைக்க,
“இப்போ போட்டா, எல்லாரும் சேர்ந்து என்னை போட்டுத் தள்ளிடுவாங்க. எல்லாருக்கும் அண்ணா மேல ரொம்ப பாசம். ஒரு மாசம் போகட்டும். பாட்டு போடலாம்.” என்றவன், 
“உன்கிட்ட பேசின பிறகுதான் நிம்மதியா இருக்கு. அன்னைக்கு அவன் ரூம் எப்படி இருந்ததோ, அப்படியே கலையாம பூட்டி வைச்சிருக்கேன். நீ வந்து என்ன செய்யணும்னு சொல்லிடுறியாமா?” என்றான்.
“நாளைக்கு ஈவினிங் அங்க இருப்பேன்!” என்றவள், 
பெரியப்பாவிற்கு அழைத்து ”முக்கியமான புக்ஸ் எல்லாம் ஒரு இடத்தில் எடுக்கணும். கார் அனுப்பி விடுங்க. நைட்டுக்குள்ள ஊருக்கு வந்திடுறேன்!” என்றாள். 
அவர் அனுப்பி விட்டிருக்க, மறுநாள் மாலையில் அண்ணாவின் அறையில் நின்றிருந்தாள் அன்பு. 
அழகர் இவளுக்கு இரவு உணவை தயாரித்துக் கொண்டிருந்தவன் “இப்போலாம் அய்யா சூப்பரா சமைப்பார்! தெரியுமா? என்று கிச்சனில் இருந்தபடியே பேச,
“யார் சர்டிபிகேட் கொடுத்தாங்களாம்?” என்றாள்.
”வேற யாரு என் வருங்காலம் தான்!” என்றவன், 
“நாங்களும் குழம்பு குடுத்து எங்க ஆளை அசத்துவோம்” என்றான். 
பின் இவளுக்கான டீயை கொண்டு வந்து மேஜையில் வைக்க,
“இங்க நவீனாவோட கல்யாண போட்டோ ஒண்ணு, எல்லாரும் இருக்குற மாதிரி இருந்திச்சே ஷெல்ப்ல. அதை காணோமே!” என்று தேடியபடியே இவள் கேட்க,
”அது அவனோட சேர்ந்து போயிடுச்சு. என்னோட இதையும் வைச்சுடுங்கன்னு அவன்தான் சொன்னான். ”போட்டோ இருந்தா கும்பிட்டு சாமியாக்கிடுவாங்க. இல்ல நினைச்சு, நினைச்சு அழுவாங்க. அனுபவிச்சு வாழ்றதுக்குத்தான் வாழ்க்கை. அழுகுறதுக்கு இல்லை!”னு சொன்னான். நான்கூட ”அன்புக்கு சொல்ல வேண்டாமா?”னு கேட்டேன். அவன்தான் ”நான் நிறைய நேரம் அவளோட வீடியோ கால்ல பேசிகிட்டே தூங்கியிருக்கேன். என்ன புதுசா வந்து கடைசி தடவையா பார்க்கப் போறா? எங்களுக்கு கடைசினு எதுவும் இல்லை!”னு சொன்னான்.” என்றான் அழகர்.
”நினைச்சேன்!” என்று இவள் அவனை பார்க்க, 
“அவங்க வீட்டுலேயும் ஒரு போட்டோவும் இல்லை. ”எம்புள்ள என் மனசுல இருக்கான். போட்டோக்குள்ள அடங்கிப் போகுறவனா என் மகன்?”னு அவங்கம்மாவே எல்லாருக்கும் பதில் சொல்லிட்டாங்க!” என்றவன் மனபாரம் தாங்காமல் சரிந்து அமர,
இவள் அதன் பிறகுதான் அண்ணாவின் செல்போன் என்று எல்லாவற்றையும் எடுத்து தேடிப் பார்த்தாள். எதிலும் அவனின் புகைப்படங்கள் இல்லை. மாறாக இவள் அனுப்பி வைத்தவைகள் மட்டுமே இருந்தன. 
ஆக, அவன் அவனின் தடயங்கள் அழித்து நானாக எரிந்திருக்கிறான் என்று உணர்ந்தவள், 
“சோர்ந்து போகாதீங்க! நிதானமா நடக்கப் பழகி, நானே அவனாதான் இருக்கேன். துறு, துறுன்ற கண்ணோட ஆட்டம், பாட்டுனு இருந்த அன்பதான் நீங்க எரிச்சிருக்கீங்க!” என்று அழகரை ஆறுதல்படுத்த,
“ஆமால! நான் ஒருத்தன், என்னத்தையாவது நினைச்சிகிட்டு! சரி, இனி என்ன பண்ணலாம்னு சொல்லும்மா!” என்று அடுத்து செய்ய வேண்டிய வேலைகளுக்கு தயாராகினான்.
அன்பு அண்ணாவின் கட்டிலை சுற்றி பார்வையை விட, அருகில் இருந்த ஸ்டாண்டில், கடைசியாக அவன் எழுதிய பக்கங்களை விரித்த வண்ணம் ஒரு நோட் இருந்தது. இவள் அன்று அமர்ந்திருந்த முக்கால் உயர ஸ்டூலில் ஹீரோ பென் திறந்தபடி இருக்க, அழகரை நிமிர்ந்து பார்த்தாள்.
“அன்னைக்கு கடைசியா எழுத்திட்டு, அப்படியே வைச்சிட்டு தூங்கியிருக்கான். காலைல பார்த்ததும் அவனை மட்டும்தான் நாங்க வெளிய கொண்டு போனோம். இங்க உள்ள எதையும் அசைக்கல” என்று சொன்னதில்,
“உங்களை மாதிரி ஆட்களெல்லாம் இருக்குறவரை உலகம் அழியாது போல!” என்றபடி அனைத்தையும் எடுத்து வைத்தாள். 
பின் அலமாரிகளைப் பார்த்தவள், நான்கு அட்டைப்பெட்டிகளில் அவனின் முடிகள் உள்ள முக்கியமான புத்தகங்கள் மற்றும் அவன் கைப்பட எழுதியவைகள் என்று அனைத்தையும் பத்திரமாக பார்சல் செய்தாள். 
கூடவே அவனுக்கு கொடுத்தனுப்பியிருந்த பென் டிரைவ்கள், அந்த அறையில் தேடி எடுத்த மொத்த ஹீரோ பென்கள் என அனைத்தையும் எடுத்த வைத்தவள், ”இந்த மேஜை சேரை மட்டும் கழட்டி காரில் வைக்க வாய்ப்பு இருக்கா?” என்றாள்.
“இருக்கே!” என்று இவன் கழட்டி கொண்டுபோய் வைத்தவன், இவள் பார்சல் செய்தவைகளையும் எடுத்துச் செல்ல,
அண்ணாவின் செல்லில் தன் சிம் கார்டை மாற்றி போட்டு, அதை உயிர்பித்தாள்.
மிச்சமிருந்த ஏராளமான புத்தங்களை அலமாரிகளோடு அருகில் இருந்த இல்லத்தில் கொடுக்கும்படியும், வேறு பொருட்களை எல்லாம் தேவைப்படுபவர்களுக்கு கொடுத்துவிடும்படியும் சொன்னாள்.
அழகர் ”சரி!” என்றவன் சாப்பிடலாமா? என்று கேட்க,
அறையை ஒரு முறை சுற்றி பார்த்துவிட்டு வெளியே வந்தவள், டிரைவரண்ணாவையும் கூப்பிடுங்க. சேர்ந்து சாப்பிடலாம்!” என்றாள்.
அதில் இவன் புன்னகைத்தபடியே ”நீ அவனை தவிர எல்லாரையும் ”அண்ணா!”னு சொல்றமா!” என்று அவரை அழைக்கச் சென்றான்.
உண்டபின் “அடுத்து பார்த்தா பத்திரிக்கையோடதான் பார்க்கணும்” என்று சொல்லிவிட்டு கிளம்பியவள்,
டிரைவரிடம் “பழைய ஹாஸ்டல் ரோட்ல போங்கண்ணா!” என்றாள்.
அன்றுபோல் காரின் பின் சீட்டில் வலது புறமாய் அமர்ந்தவள் விடுதி, பூங்காவில் அவர்களுக்கான இடம் என்று அனைத்தையும் கண் இமைக்காமல் பார்த்தபடி அமைதியாய் கடந்து வந்திருந்தாள்.
அதிர, அதிர ஒரு பாடல் ஒலிக்கும் இடத்தில் அமர்ந்து, ஒரு விரலைக்கூட அசைக்காமல் ஒருவரால் அமைதியாய் வாசிக்க இயலுமா? அன்றைக்கு பிறகான நாட்களில் அன்பு அப்படித்தான் இருந்தாள். எல்லோரிடமும் புன்னகையுடன் பழகினாள். அண்ணாவுடனான தன் நினைவுகளையே தனக்கான புத்துணர்ச்சியாய் மாற்றிக் கொண்டாள். 
அழகரின் வீட்டிலில் இருந்து இவள் வந்த நாளிலிருந்து சரியாக நான்கு மாதங்கள் கழித்து, திருமணப் பத்திரிக்கையுடன் இவளை தேடி வந்திருந்தான் அழகர். படபடப்பு பேச்சுகள் புலம்பல்கள் எதுவும் இன்றி அவன் மகிழ்ச்சியாய் தெரிந்தான்.
”நீ வந்தா அண்ணா வந்த மாதிரி. வந்திடுமா!” என்று கொடுத்துவிட்டுச் சென்றிருந்தான். 
இவள் அவனின் திருமணத்திற்கு சென்றபோது அண்ணாவின் அன்னையும், தம்பியும்கூட வந்திருந்தனர். 
இவள் அவர்களிடம் பேச, 
“நல்லா இருக்கோம். இவனும் படிச்சி முடிச்சிட்டு நம்ம ஊருக்கே வந்திடுறேன்னு சொல்லிட்டான். கண்டிப்பா உனக்கு கல்யாணம் ஆகும் போது மறக்காம கூப்பிடுமா!. அழகரோட நானும் வருவேன்” என்றார் பார்வதி.
எதுவும் சொல்லாமல் புன்னகையை மட்டும் பதிலாய் அளித்துவிட்டு கிளம்பியிருந்தாள்.
அதன் பின் இரண்டரை ஆண்டுகள் கடந்திருக்க, இப்போது சென்னையிலேயே பேராசிரியையாக வேலை என்று அவளின் நாட்கள் நகர்கின்றன. அவள் தங்கியிருந்த அறையை மாற்றாமல் இத்தனை வருடங்கள் இங்கேயே இருந்ததில், அனேக நபர்களுக்கு தெரிந்தவளாக மாறியிருந்தாள் அன்பு.
 
அவ்வப்போது புத்தகம் என்று வாங்காமல், புத்த கண்காட்சியில் போய் மொத்தமாக வாங்கி வைக்க பழகியிருந்தாள். 
அவளின் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவன், நிஷாவின் உறவுக்காரன் என்று தெரிந்ததில், நிஷாவின் எண்ணை வாங்கி பேசியதில், இன்று மதுரையில் நடந்து கொண்டிருக்கும் புத்தகத் திருவிழாவிற்கு வந்திருந்தாள்.
இப்போது அண்ணாவின் பெயரை தன் காதில் கேட்ட நிலையில், இடத்தை விட்டு ஓடிவிட வேண்டும் என்ற மனநிலையில் இருந்தாள். ’அந்தப் பெயர் வெறும் அதியமான் அண்ணா என்றாலே தாங்காது. இவர்கள் என்ன ”அன்புடன் அதியமான் அண்ணா!” என்கிறார்கள்?’ என்ற சிந்தனைதான் அவளுக்கு.
’உயிராக நினைக்கும் பெயர் தன்னை தேடி வருகிறதா? இல்லை, அதற்கும் தனக்கும் எதுவும் சம்பந்தமே இல்லையா? சம்பந்தம் இல்லையெனில் அது யாரோவா இருக்கட்டும். உண்டு எனில் நான் எங்கு ஓடினாலும் என்னை தேடி வரும்!’ என்று நினைத்தாள். அது வார்த்தைகளில் விவரிக்க முடியாத அவளின் அளவு கடந்த நம்பிக்கை. 
‘பேரன்பும், புரிதலும் கொண்ட மனங்கள் எப்போதும் அமைதியாகத்தானே காத்திருக்கும்!’ அப்படித்தான் அவளின் மனநிலையும் இருந்தது.
அதனாலேயே அங்கிருந்து வேகமாக கிளம்பி, நிஷாவின் குடும்பத்துடன் காரில் வந்து கொண்டிருந்தவள் அமைதியாக இருக்க,
தன் கல்லூரி நாட்களை நினைவுபடுத்தி ”செல்விகிட்ட பேசுனியா அன்பு?” என்றாள் நிஷா.
“என்னைக்கு அவகிட்ட பேசுறோனோ, அப்போ கண்டிப்பா உன்கிட்ட சொல்லிடுறேன்” என்றாள் பொதுவாக.
பின்னர் வேறு பேச்சுகள் பேசியவர்களில் அன்பு கவனித்தது ஒன்றுதான் ‘நிஷா நிமிடத்துக்கு ஒருமுறை அவளின் கணவனை தேடுகிறாள்!’.
இவள் புன்னகையுடன் பார்த்திருக்க,
“என்ன அன்பு?” என்றாள் நிஷா.
“யாரை பிடிச்சிருக்குன்னு நீ உன் வீட்டுக்காரர் கழுத்தை பிடிக்கலையே!” என்று புன்னகைக்க,
”அதெல்லாம் ஒரு காலம். என்ன!” என்றாள்.
அதற்குள் ரயில்வே ஸ்டேஷன் வந்திருக்க, நிஷா மகளுடன் இறங்க முயற்சிக்க, 
“தூங்குற பிள்ளையை ஏன் கஷ்டப்படுத்துற? இரு! நானே ட்ரெயின் வந்ததும் போயிக்கிறேன். தனியா உட்கார்ந்திருப்பேன்னு நினைக்காத!. வாங்கின புக்கை வாசிக்க ஆரம்பிச்சா நேரம் ஓடிடும். ஊருக்கு போய், ப்ரீ ஆனதும் போன் பண்றேன்” என்றாள்.
”சரி!” என்று இவர்கள் கிளம்பியிருக்க, அதிகாலையில் அன்பு திருநெல்வேலியில் வந்து இறங்கினாள். அவளை அழைக்கவென டிரைவர் வரவில்லை. மாறாக அவளின் பெரியப்பா வந்து காத்திருக்க, இவள் அருகில் வந்தவள் “மிஸ்டர் துரை!” என்றாள் புன்னகையுடன். அவரை அப்படித்தான் இத்தனை வருடங்களில் அழைத்து பழகியிருந்தாள்.
“இங்க இருக்கியா? நான் ஒவ்வொரு பெட்டியா தேடுறேன்!” என்று அவர் இவளின் புத்தகங்கள் நிரம்பிய பையை வாங்க,
“ஈவினிங் நவீனோட நிச்சயதார்த்தம். இப்போ என்னை கூப்பிட நீங்க வரணுமா?” என்று கேட்டாள்.
“இதையேதான் உங்கம்மாவும் கேட்டுச்சு. அது சாயங்காலம் தானே!. என் மகளை கூப்புடுறதுதான் எனக்கு முக்கியம்” என்றபடி கார் ஓட்டினார். இவள் கார் ஓட்டப் பழகியதில் அவருக்கும் சொல்லிக் கொடுத்திருந்தாள்.
இவளின் வீட்டில் இறக்கிவிட்டவர் “அம்மாகிட்ட சாப்பாடு கொடுத்து அனுப்புறேன். சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடு!. சாயங்காலமா அந்த வீட்டுக்கு வந்திடுமா” என்று பைகளை இறக்கி வாசலில் வைத்துவிட்டு கிளம்பினார்.
இவளிடம் எப்போதும் இருக்கும் சாவியால் வீட்டைத் திறந்தவள், படிக்கும் அறையில் கொண்டு போய் வாங்கிய புத்தகங்களை வைத்தவள், சேரில் கண் மூடி அமர்ந்திருந்தாள்.
சிறிது நேரத்தில் சிவகாமி உணவு தந்துவிட்டு கிளம்பி இருக்க, கதவை அடைத்துவிட்டு வந்தவள், மறுபடியும் புத்தங்கங்கள் நிரம்பிய அந்த அறைக்குள் சென்றாள். 
முன்னாளில் தானும், அண்ணாவும் முதுகை ஒட்டி அமர்ந்திருந்த இடத்தில் அப்படியே படுத்தவள், சிறிது நேரத்தில் உறங்கியும் போயிருந்தாள்.
மாலையில் மணி ஐந்தை தாண்டி ஓடிக்கொண்டிருக்க, தன் பெரியப்பாவின் வீட்டு முற்றத்தில், அவரின் அருகில் இருந்தாள் அன்பு. புடவை கட்டி இருந்தாள்.
“அன்பு! உனக்கொன்னு தெரியுமா? இன்னைக்கு முழுநிலா. நாம மொட்டை மாடியில் போய் பார்க்குறோம். சரியா?” என்று அவர் சொல்ல,
அந்தப் பக்கமாக வந்த அவரின் மனைவி “நைட்ல நவீனோட நிச்சயதார்த்தம். நீங்க மொட்டைமாடிக்கு போறீங்காளாக்கும் என்றவர், 
“சிவகாமி! இங்க வந்து என்னனு இவங்களைக் கேளு!” என்று அழைக்க,
”என்ன?” என்று வந்தார்.
இவர் சொல்ல,
“இவங்களுக்கு வேற வேலையே இல்ல. இவங்களோட சேர்ந்தா நம்மளையும் கிறுக்கா ஆக்கிடுவாங்க. நீ வா வேலைகளை பார்ப்போம்” என்று அவர் வேலைகளை பார்க்கச் செல்ல,
”நாங்க நடுராத்திரிதான் போவோம்!” என்றார் துரை.
அவரின் மனைவி முழிக்க,
”அன்பு! இவளையும் ஒரு போட்டோ எடுத்து நிலாவோட சேர்த்து வைச்சி வரையப்போறேன்” என்றார். 
அவருக்கு பல நாட்களாக ஓவியம் வரைவது பிடித்துவிட்டிருந்தது. ”சொத்தை பாதுகாக்குறது, வேலை இதெல்லாம் பணத்தையும் எதிர்பார்த்துதான் செய்யணும். மனசை நிறைக்கிற மாதிரி பிடிச்சதுனு ஏதாவது உங்களுக்கு இருக்கும் மிஸ்டர் துரை! தேடி கண்டுபிடிங்க!” என்று இவள் சொல்லியதிலிருந்து, அவர் தேடிக் கண்டுபிடித்திருந்தது ஓவியம் வரைவதை. 
இப்போது அதை தன் மனைவியை குளிர்விப்பதற்காக அவர் உபயோகிக்க,
”யாருக்கு தெரியும் பெரியம்மாவோட குரலுக்கு பெரிய பாடகியாகூட வந்திருக்கலாம்!. உங்களால அவங்க வாழ்க்கை…..” என்று அன்பு புன்னகையுடன் சொல்ல,
”எனக்கென்னமோ அவ நின்னு முறைக்கிற சைஸை பார்த்தா, பெரிய டேன்ஸரா வந்திருப்பாளோனு தோணுதுமா!” என்றார் துரை.
“போங்க! உங்க ரெண்டு பேரோடையும்…” என்று தலையில் அடித்துக் கொண்டு அவரின் மனைவி நகர,
இவர்களின் பேச்சு சத்தங்களையும் மீறி, வெளியே ஸ்பீக்கரில் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.
“விசிலடிச்சி கூப்பிட்டாக்கா, வெகு பேரு பார்ப்பாங்கன்னு
உசிரவிட்டு கூப்பிட்டேனே! உள்ளுக்குள்ள கேட்கலையா?” என்று பாடலில் வரிகள் அதிர்ந்து ஒலிக்க,
”நான் கொஞ்சம் வீட்டுக்கு போயிட்டு வந்திடுவா?” என்று இவரிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள் அன்பு.
பாடலின் வரிகள் காதில் விழுந்து கொண்டே இருக்க, கதவை அடைக்கும் சிந்தனையின்றி வீட்டிற்குள் வந்தாள்.
படிக்கும் அறையின் முன் நின்று அதை திறக்க,
“ஓய்!” என்று ஒரு குரல்.
அந்த ஒற்றை அழைப்பினை நினைத்துதானே இவளின் மொத்த நாட்களும் நகர்கின்றன.
இவள் அப்படியே நின்று திரும்பி பார்க்க, 
முகம் கொள்ளாப் புன்னகையுடன் நின்றிருந்தான் ”அன்புடன் அதியமான் அண்ணா”!.
”போன உசுரு வந்திருச்சு! 
உன்ன வாரி அணைக்க சொல்லிருச்சு!
இதுபோல இனிமேலும் நடக்காதே ஒருநாளும்!
உன நானும் ஒட்டியிருப்பேனே!
எங்கண்ணுக்குள்ள உன்ன வைச்சு சிரிப்பேனே!” (பாடல் வரிகள்)…