அதுவரை சகமாணவத் தோழர்களுக்காய் வருந்திக் கொண்டிருந்தவர்கள், இப்போது தங்களுக்கும் பிரச்சனை வந்துவிட்டதில் பயத்துடன் பார்க்க,
“பீ ரெடி டு ஃபேஸ் தி சிச்சுவேஷன்!” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டான் பேரழகன்.
பயந்து போன சில மாணவர்கள் அவன் பின்னேயே, “சார் சார்” என்று ஓட,
“சார் கோர்ட்டு கேசுன்னு போனா, எங்க லைஃபே போய்டும் சார்! ப்ளீஸ் சார்!” என்று கெஞ்சினர் அவன் முன்னே வந்து நின்று.
“உங்க ஈகோவால பல உயிரே போயிருக்கே! அதுக்கு என்ன செய்ய போறீங்க?!” என்றான் பதிலுக்கு.
அவர்கள் தலை குனிந்து நிற்க, ஒருவன் மட்டும் சட்டென்று, “நாங்க அவங்க இடத்துல இருந்து அவங்க குடும்பத்தைப் பார்த்துக்கறோம் சார்!” என்றான்.
“வாட்?!” என்று அவன் கேள்வி எழுப்ப, மற்றவர்கள் இவன் என்ன சொல்ல வருகிறான் என்று அவனைப் பார்த்தனர்.
“நாங்க ஒவ்வொருத்தரும், உயிரிழந்த ஒவ்வொரு மாணவரோட இடத்துல இருந்து அவங்கவங்க குடும்பத்துக்கு உறுதுணையா இருந்து அவங்க ஸ்தானத்துல என்ன செய்யணுமோ அதை செய்யிறோம் சார்!” என்றான் உறுதிமொழி போல்!
“ம் இதெல்லாம் சாத்தியமா?!” என்று அவன் நம்பிக்கையற்றுப் பார்க்க,
“சாத்தியமாக்கிக் காட்டுறோம் சார்!” என்றவன், தன் நண்பர்களைப் பார்த்து,
“இன்னைலயிருந்து நமக்கு ஒரு குடும்பம் இல்லை! ரெண்டு குடும்பத்தைக் காப்பாத்த வேண்டிய பொறுப்பு கூடி இருக்கு! ஒவ்வொருவரும் உயிரிழந்த ஒவ்வொரு மாணவரோட குடும்பத்தை தத்தெடுப்போம்! நம்மளோட பைனல் செம்மை நல்லபடியா முடிச்சு வேலைக்குப் போய் ரெண்டு குடும்பத்துக்கும் செய்ய வேண்டிய கடமைகளை முன்ன நின்னு செய்வோம்!” என்று சொல்ல, சிலர் தயக்கமாகவும், சிலர் உறுதியுடன் தலையசைத்தனர்.
“நல்ல முடிவு, ஆனா இது எந்த அளவுக்கு சாத்தியப்படும்னு எனக்குத் தெரியலை!” என்று அவன் நிறுத்த,
“ஒருவேளை நாங்க எங்க கடமைல இருந்து மீறினா நீங்க என்ன அக்ஷேன் வேணா எடுங்க சார்! நாங்க எழுதிக் கொடுக்கறோம்” என்றான் அந்த மாணவன்,
மற்றவர்கள், குழப்பமாய் பார்க்க, “அப்படி எழுதி வாங்கிட்டு உங்களைப் பாசம் வைக்க சொன்னா, அது வெறும் பயத்தினால் வந்த பாசமாதான் இருக்கும்! இப்போ நீ சொன்னியே அதை மனசார நீங்க ஒவ்வொருத்தரும், அவங்களைத் தங்களோட இன்னொரு தாய் தந்தையா, சகோதர, சகோதரியா ஏத்துகிட்டு வாழனும். அதுக்கு கையெழுத்து தேவையில்லை, உங்க மனசு மட்டும்தான் சாட்சியா இருக்கணும்” என்றவன்,
“இனி வாழ்க்கைல எப்போவும் இப்படி தப்புப் பண்ண மாட்டீங்கன்னு நினைக்கிறன்” என்றுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.
மாணவர்கள் கலக்கத்துடன் அவன் செல்வதையே பார்த்திருக்க, “கவலைப்படாதீங்க பசங்களா! சார் ரொம்ப தங்கமானவரு! உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராம பார்த்துக்குவாரு” என்று பேரழகனின் ஓட்டுனர் இளங்கோ அவர்களுக்கு தைரியம் சொல்ல அவர்கள் மனதில் சற்றே நிம்மதி எழுந்தது.
அவனும் அவரது டிரைவரும் அங்கிருந்து நகர்ந்தவுடன், “டேய் என்னடா லூசு மாதிரி பேசுற? இதெல்லாம் சாத்தியமா? நம்ம படிக்குற படிப்புக்கு நம்ம குடும்பத்தையே காப்பாத்த முடியுமான்னு தெரியலை! இதுல எப்படி இன்னொரு குடும்பத்தைக் காப்பத்துறது?!” என்றான் ஒரு மாணவன்.
“முடியும் அவங்களையும் நம்ம குடும்பமா நினைச்சா கண்டிப்பா முடியும்! இறந்துபோன ஒரு சில பசங்களோட குடும்பம் வசதி நிறைஞ்சவங்களாகவும் இருக்கலாம்! ஆனா அவங்களுக்கும் ஒரு ஆண் பிள்ளையா அவன் செய்ய வேண்டிய சில கடமைகள் இருக்கும்! அதை நாமதான் அவங்க பிள்ளை இடத்துல இருந்து செய்யனும்! வசதி இல்லாத குடும்பத்தை நாமதான் கரை சேர்க்கணும்!” என்று அவன் சொல்ல, எல்லோரும் முடியுமா என்று தெரியாவிடினும், முயல்வோமே என்று தலையாட்டினர் நம்பிக்கையுடன்…
*************
இரு டிரைவரில் ஒரு டிரைவர் இறந்து விட்டதாலும், ஒருவன் தற்போது வரை கண்விழிக்காததாலும், அது தற்செயலாக நிகழ்ந்த விபத்தாகவே இருக்கக் கூடும் என்று நினைத்து டிரைவரின் மேலும், பிள்ளைகள் மேலும் கடும் கோபத்தில் இருந்தான் பேரழகன்.
ஆனால், விபத்து பற்றிய ஆய்வை மேற்கொண்டிருந்த காவலதிகாரி அவனுக்கு நன்கு அறிமுகமானவர் ஆதலால், அவர் ஸ்பாட்டில் விசாரணை மேற்கொண்டதில் இருந்து ஏதோ சரியில்லை என்று யூகித்து அவனுக்கு உடனே விவரம் தெரிவிக்க வேண்டும் என அங்கிருந்து மருத்துவமனைக்குக் கிளம்பினார்.
அதேநேரம் அங்கு, அடிபட்ட டிரைவர் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்த அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்த நர்ஸ் ஒருவர் வெளியே வந்து,
“சார் டிரைவர் கண்விழிச்சிட்டார்! போலீஸ் இருந்தா கூப்பிடச் சொல்றார்!” என்றார்.
“அவர் விசாரணைக்காக வெளியே போயிருக்கார்! நான் ஆர்டிஓ தான். நான் போய் பேசவா?!” என்றான் அனுமதியாய்.
அவன் தோற்றத்தைப் பார்த்து நம்பிக்கை கொண்டவராய், “ம் சரிங்க சார்!” என அனுமதி கொடுக்க, அவன் உள்ளே சென்றதும்,
“போ போலீஸ் வரலையா?!” என்று மூச்சு வாங்கக் கேட்டார் அந்த ஓட்டுனர், அவன் காக்கி உடையில் இல்லாததால் யார் என்று புரியாது.
“அவர் விசாரணைக்குப் போய் இருக்கார்! நான் ஆர்டிஓ தான் சொல்லுங்க!” என்றான்.
“வ வந்து சார்!” என்று அவன் தயங்க,
“பரவாயில்லை சொல்லுங்க! அதான் செய்ய வேண்டியதை எல்லாம் செஞ்சு பல பசங்களோட உயிரை பறிச்சாச்சே!” என்று நக்கலும் வேதனையும் கலந்த குரலில் கூற, அந்த ஓட்டுனரின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
“இ இல்ல சார்! நாங்க நிறைய முறை இப்படிப் போட்டி போட்டுப் போயிருக்கோம்! ஆனா எப்பவுமே சின்னதா கூட யாருக்கும் எந்த ஆபத்தும் நடந்தது இல்லை! ஆனா, ஆனா இன்னிக்கு நடந்தது தெரியாம நடந்த விபத்து இல்லை! அ அந்த லாரி வேணுமின்னே எங்க முன்னாடி போன பஸ்ஸைத் தாக்க வந்தது! அந்த டிரைவர் வண்டியை நகர்த்த முற்பட்டது எனக்கு நல்லாத் தெரிஞ்சுது! ஆனா அப்பவும் அது வேணுமின்னே வந்து மோதுச்சு!” என்றான் மூச்சு வாங்க.
“அப்படின்னா இது ஏதோ திட்டமிட்டு நடந்ததுன்னு சொல்றீங்களா?!” என்றான் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று யூகித்தவனாய்.
“நிச்சயமா சார்! ஆனா யார், ஏன் அப்படிப் பண்ணாங்கன்னு தெரியலை!” என்ற டிரைவருக்கும் தங்கள் கல்லூரி முதலாளியே இப்படி ஒரு காரியத்தைச் செய்யச் சொல்லி இருப்பார் என்று யூகிக்க முடியாமல் போனது.
அவனோ, “ஒரு தனிப்பட்ட ஆளைத் தூக்கணும்னா, நீங்க சொல்ற மாதிரி நடந்திருக்கலாம்! ஆனா, இதுல ரெண்டு காலேஜ் பசங்களும் சம்பந்தப் பட்டிருக்காங்களே!” என்றவன், யோசனையுடன்,
“சரி நாங்க விசாரணை பண்றோம்” என,
“என்னை மன்னிச்சிடுங்க சார்!” என்ற ஓட்டுனர், மீண்டும் கண்ணீர் சிந்த, அவனால் இப்போது ஆறுதல் சொல்லவும் முடியவில்லை, கோபம் கொள்ளவும் முடியவில்லை! ஏனெனில் அவருமே தவறை உணர்ந்து கண்ணீர் சிந்தியபடி பலத்த காயங்களுடன் தான் படுத்துக் கிடந்தார். பிழைத்தால் அதிசயம்தான்!
வெளியே வந்தவன், கேசை விசாரணைக்கு எடுத்திருந்த அந்த காவலருக்கு கைபேசியில் அழைக்க, அவர் கைபேசி எடுத்து,
“இதோ அஞ்சு நிமிஷத்துல நேர்லயே வந்துடறேன் சார்” என்றார்.
வந்தவர், தான் விபத்து நடந்த இடத்திற்கு அருகே இருந்த கடைகளில் விசாரித்ததை வைத்து,
“சார் டிரைவர் சொன்னதையே தான் அங்க இருந்தவங்களும் சொன்னங்க! லாரி மோதின அடுத்த செகண்ட்ல செம வேகத்துல ரிவர்ஸ் எடுத்து எஸ்கேப் ஆகியிருக்கு! அந்த டிரைவருக்கும் கூட நிச்சயமா அடி பட்டிருக்கும்! ஆனாலும் அவன் எப்படியோ, தானேவோ இல்லை வேற யாரோட உதவியாலயோ அவ்ளோ சீக்கிரம் லாரியோட எஸ்கேப் ஆகி இருக்கான்!” என்றார்.
“அப்போ அந்த லாரி டிரைவர பிடிச்சாதான் விஷயம் தெரியும் என்றவன்,
“அந்தப் பகுதியில கேமரா இருக்கும் இல்லை! அதில் பதிவாகி இருந்திருக்குமே பார்த்தீங்களா?!” என்றான்.
“பாலன் பண்ணி காலேஜ் பசங்களைத் தூக்கி இருக்காங்க சார்! இது விபத்துன்னு தான் எல்லோரும் பேசாம இருக்காங்க. வேணுமின்னே செய்ததுன்னு தெரிஞ்சா பெரிய இஸ்யூ ஆகும்” என்றார் கவலையாய்.
“ம்! முடிஞ்சா வரை வெளில தெரியாம விசாரணை பண்ணுவோம். இதுக்கு காரணம் யாருன்னு கண்டுபிடிச்ச பிறகு விஷயத்தை வெளியிடலாம். அப்புறம் உங்க ஹையர் ஆபிசியல்ஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணிட்டீங்கள்ல?” என்றான்.
“எஸ் சார்” என்றவருக்கு அதற்குள் கைப்பேசியில் அழைப்பு வர, அதற்கு செவிமடுத்தவர் முகம் வெகுவாய் மாறியது.
பேசி முடித்தவுடன், “சார்! இது நிச்சயமா யாரோ பெரிய ஆள் செய்த வேலையாதான் இருக்கும்! ஆக்சிடென்ட்னு கேசை முடிக்க சொல்றார் அசிஸ்டென்ட் கமிஷனர்” என்றார்.
“இவங்களையெல்லாம் திருத்தவே முடியாது!” என்றவன்,
“சரி நீங்க உங்க சைட்ல இருந்து அப்படியே கேசை முடிச்சிடுங்க! ஆனா தனிப்பட்ட முறையில நான் இந்த கேசை விசாரிச்சு கோர்ட்ல பைல் பண்றேன். அதுக்கு உங்களால எனக்கு உதவ முடியுமா?! அப்போ இவங்க விசாரணைக்கு மறுபடியும் எடுத்துதானே ஆகணும்” என்றான்.
“நிச்சயமா சார்” என்றவர், அவன் சொன்ன சில விஷயங்களை கவனமாய்க் கேட்டுக் கொண்டார்.