22.1:
ஹோட்டல் தாஜில் சிவா, கண்ணன் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதை கண்டான் . பணக்காரர்கள் மத்தியில் இது எல்லாம் சகஜம் தான் என்று விட்டான் .. அவன் வேலை முடித்து கிளம்பும் போது அவர் யாருடனோ தீவிரமாக பேரம் பேசிக் கொண்டு இருந்தார் .. என்ன என்று கூர்ந்து கவனித்த போதும் அவனுக்கு என்ன என்று விளங்கவில்லை .. அவருடன் பேசின ஆள் கொஞ்சம் முரடன் போல தான் இருந்தான் . அவர்கள் பேசுவதை வைத்தே எதோ நடக்க போகுது என்று மட்டும் புரிந்தது .
அந்த முரடனை அதற்கு பிறகு அவன் பல முறை பார்த்துவிட்டான் ..தற்செயலா நடக்கிறதோ ! இல்லை பாலோ செய்யறானோ என்று சிவாக்கு குழப்பமாக இருந்தது .
கண்ணன் மறுபடியும் ஷிவேந்தரிடம் “ உங்க பெண்டாட்டியிடம் கேஸ் வேண்டாம் சொல்லுங்க .. எனக்கு பணம் வேண்டும் …இல்லை என்றால் அவள் உயிருக்கே ஆபத்து வந்துவிடும் . நீங்க சொன்னால் புரிந்து கொள்வாள்.. எடுத்து சொல்லுங்க . தாமதிக்காதீங்க .நாம தாமதம் செய்யும் ஒவ்வொரு நொடியும் ஆபத்து நெருங்கிட்டு இருக்கு… வேற வழி இல்லை”..
அவர் பேசுவதை கேட்ட சிவா , நான் எண்ணியது போல கண்ணன் இல்லையோ ! ஷிவானி சொன்னது போல தானா .. ஐயோ வனி, உன்னை நம்பாமல் .. என்று அவன் மனம் அடித்துக் கொண்டது.
“சிவா, நான் சொன்னது” என்ற கண்ணன் குரலை கேட்டு , இவர் மறைமுகமா மிரட்டுகிறாரா? என்ன தைரியம் என்று ஷிவேந்தர் கோபம் கொண்டான் ..
ஷிவேந்தர், ஜீவாவிடம் இதை பற்றி சொன்னவுடன் ஜீவா , “அவர் பேசினதை பற்றி வனியிடம் பேச வேண்டாம் . அவரை பற்றி நீங்க பேச போய் ஏற்கனவே உங்க மீது கோபமா இருக்கும் அவள், இன்னும் கோபம் கொள்ள போகிறாள் .. கவலை படும் படி இருக்காது . அவர் சும்மா மிரட்டறார். இது எல்லாம் அவருக்கு கை வந்த கலை. நான் அவள் அண்ணா கருணிடம் பேசிட்டு சொல்லறேன்” என்று ஆறுதல் செய்தான்.
‘ஜீவா’ இன்னும் உனக்கு என் மீது கோபமா என்று சிவா கேட்டவுடன்
“ இல்லையே ! நான் என்ன வேதாளமா… நீ சொன்னதையே பிடித்து தொங்க.. அப்படி எல்லாம் உன் பெண்டாட்டி தான் செய்வா ..” என்று ஜீவா பேசியதைக் கேட்ட சிவா “என் செல்லத்த நீ எப்படி அப்படி சொல்லலாம் . என் ச்வீட் செல்ல கட்டிய நான் மட்டும் தான் வேதாளம் சொல்லுவேன்” .
“நீயே சொல்லு .. நீ கொஞ்சம் மறுபடியும் சொன்னால் ரெகார்ட் செய்து அவளுக்கு அனுப்பிடுவேன்.. ரெடியா ! என்று ஜீவா செல் பேசியை எடுத்தவுடன்
“அடே துரோகி ..உன்னை ..”
“சரி சிவா ,திடீர் என்ன ?”
“இல்லை ஜீவா ! இன்னும் நமக்குள் என்ன மரியாதை ..உரிமையா டேய், வாடா ,போடா சொல்லு” .
“சொல்லிடல டா ! இதற்கு தான் டா காத்துக் கொண்டு இருந்தேன் டா ! சரி டா ..செய்திடறேன் டா ..நீயும் அப்படியே கூப்பிடு டா” என்று வார்த்தைக்கு வார்த்தை ஜீவா டா போட்டான் ..
சிவா பலமா சிரித்து “என் ஷிவானியை மிஞ்சுவ போல ..”
“அது எப்படி? அவளுக்கு நிகர் அவள் தான்” என்று ஜீவா முடித்தான் ..
*****************
அந்த வாரத்தில் ஷிவானி பெயருக்கு கொரியர் வந்தது . வனி அப்போது ரஞ்சனியுடன் டாக்டர் வீட்டுக்கு சென்று இருந்தாள் .ஷிவேந்தர் தான் கையெழுத்து போட்டு வாங்கி வைத்தான் . கவரில் ஜெர்மனியில் இருக்கும் புகழ் பெற்ற மருத்துவ கல்லூரி பெயரைக் கண்டான் .. அப்போது தான் ஷிவானிக்கு கிடைத்த ஸ்காலர்ஷிப் அவனுக்கு நியாபகம் வந்தது ..
இவள் தான் அங்கு போக போவது இல்லையே! ஒரு வேலை மறுபடியும் வர சொல்லி ..இவங்களுக்கு எல்லாம் ஆள் பிடிக்கணும் என்றால் எத்தனை தடவை வேண்டும் என்றால் அனுப்புவாங்க .. அது ஷிவானி போல புத்தி சாலிகளை யாராவது வேண்டாம் சொல்லுவாங்களா? இவள் மூலம் கல்லூரிக்கு பெயர் ஆச்சே என்று அதை அப்படியே மேசையில் போட்டான் ..
அதையே பார்த்துக் கொண்டு இருந்த ஷிவேந்தர் , ஒரு வேலை வனி படிக்க ?
இவ எங்க படிக்க போறா ? அவள் படித்த கல்லூரியிலே என்று சொன்னாளா? என்ன யோசித்தும் நினைவு இல்லை . என்ன சொன்னா? அவள் அருகில் இருந்தா மூளை வேலையே செய்யாது …
அன்று சிவா என்னை விட்டு எங்கேயும் போகாதே பேசின போது வனி முகம் அதிர்ந்ததே! ஒரு வேலை….
கைகள் நடுங்கிய படி அந்த கவரை பிரித்தான் . அதில் அவள் எப்போது சேர வேண்டும், இவள் எடுக்க போகும் பிரிவின் விவரம், கல்லூரி பற்றி எல்லாம் அடங்கிருந்தது. சிவா மனதில் இதற்கு எதுக்கு கவலை படனும் . இவ படிக்கவே வேண்டாம் . படிக்கணும் என்றால் தான போக வேண்டும் ..இவளை யார் விட போறா..
அவன் பள்ளி தோழன் மற்றும் கண்ணன் பர்சனல் பி ஏ ஷகீம் அழைத்து இருந்தான் .. “சிவா , கண்ணன் ஏதோ கோபமாக கத்திக் கொண்டு இருக்கிறார் ..என்ன தெரியல ..” கொஞ்ச நாளாகவே சிவா ஷகீமிடம் சொல்லி கண்ணனை கண் காணிக்க சொல்லி இருந்தான் .அதன் படி அவர் செயலில் மாற்றம் தெரிந்தவுடன் உடனே தெரிவிக்கவும் செய்தான் ..
சிவா மனதில் ஒருவேளை வனி அவரை அழைத்து கோபப்படுத்தி இருப்பாளோ? இப்ப என்ன சண்டை.. நான் கம்ப்ளைன்ட் கொடுத்தது பற்றி விசாரித்து இருப்பாங்களோ ? வனி தான் புகார் செய்ததா நினைத்து சண்டையோ !
“சிவா….. லைனில் இருக்கியா ? முருகப்பா என்று கத்திக் கொண்டு இருக்கிறார் . உள்ளே நுழைந்தவுடன் கோபத்தை கண்டு ஓடி வந்துவிட்டேன் ..”
இந்த பெயரை எங்கையோ கேட்டது போல இருக்கே என்று ஷிவேந்தர் யோசிக்க தொடங்கினான் .அவனுக்கு சுத்தமாக நியாபகம் இல்லை .. அன்று ஹோட்டலில் கண்ணனை பார்த்த போது இதே பெயரை சொல்லி தான் ஏதோ கோபமாக பேசி, கத்திக் கொண்டு இருந்தார் என்று மறந்தான் ..அவனை தொடர்பவன் தான் அந்த முருகப்பா என்று சிவாக்கு தெரியாது
வனிக்கு எதாவது??
உடனே வனிக்கு அழைத்தான் .. அவள் எடுக்கவில்லை என்று அவன் அக்கா ரஞ்சுக்கு அழைத்தான் .
“எங்க இருக்க .. எங்க என் பெண்டாட்டி? உனக்கு உடம்பு எல்லாம் நார்மல் தான ? மீண்டும் எப்ப போகணும் .. இவளை கொஞ்சம் வேகம் கம்மியாகவே ஓட்ட சொல்லு . வயிற்றில் இருக்கும் பாப்பா பயந்துக்க போகுது ..நான் வேண்டாம் சொல்லியும் ஆடி வேற எடுத்திட்டு போய் இருக்கா ..இவளை….”
“டேய் போதும், விடு டா ..பாவம் .. நீ சொல்வது போல எல்லாம் இல்லை ,உன் பெண்டாட்டிக்கு எத்தனை மதிப்பு தெரியுமா ? அந்த டாக்டர் புகழாரம் சூட்டாத குறை தான் . நீ தான் எப்போதும் அவளை பேசிகிட்டே இருக்க ..”
பெருமையாக உணர்ந்தாலும் , “அக்கா ..உன்னையும் கவுத்திட்டாலா? டாக்டருக்கு எதாவது காசு கொடுத்து செட் அப் செய்து இருப்பா ..நீ நம்பாத .. என்னுடன் சண்டை போடவே ரூம் போட்டு யோசிப்பா ? அப்பேர்பட்டவ ..ஜகதலகில்லடி… இப்ப யார் கூட சண்டை அக்கா ?”
“உன் பெண்டடியை பற்றி சரியா தெரிந்து வைத்து இருக்க டா.. இளநீர் குடிக்கணும் போல இருக்கு சொன்னேன் . அவனிடம் பேரம் பேசி சண்டை . இன்னும் வந்தபாடு இல்லை.”
“எங்க இருக்கீங்க?”.. இடத்தை சொன்னவுடன் “அவளை அழைக்க சொல்லு ,நான் கண்டிப்பா பேசணும் அக்கா !”
“அதற்குள் சண்டை போடணுமா? வீட்டுக்கு வந்தவுடன் தொடங்கு தம்பி..”
“நானா சண்டையா ..கலி முத்தி போச்சு …”
ஏனோ அவனுக்கு அப்போதே ஷிவானியை பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்று இருந்தது ..எதற்காக இந்த தவிப்பு என்று அவனுக்கே புரியவில்லை
என்னை விட்டு படிக்க போறா என்பதற்காகவா?
அவளை யாரு அத்தனை தூரம் அனுப்ப போறா ? எந்த படிப்பனாலும் இங்க இருந்தே படிக்கட்டும் ..என்ன சண்டை போட்டாலும் அவளை விடுவதா இல்லை ..ராட்ஷசி.. வர வர பிடிவாதம் அதிகம் ஆகிக் கொண்டே வருது .. இன்று வரட்டும் ..என்ன பேசி கெஞ்சினாலும் மயங்க கூடாது .. இவளை மட்டும் பேசவே விட கூடாது..
Travel agent அழைத்து , அடுத்த நாள் ஹனி மூன் செல்ல எல்லா ஏற்பாடும் செய்தாச்சு, மாலைக்குள் அணைத்து விவரமும் கைக்கு கிடைக்கும் தெரிவிக்க, எஸ் ! என்று துள்ளி குதித்தான் .இனி என்னிடம் தப்பவே முடியாது செல்லம்..நீ கேட்டதை கொடுக்க போறேன் ..சீக்கிரம் வா என்று அவள் வரவுக்காக காத்துக் கொண்டு இருந்தான் .
அந்த சந்தோஷத்திலும் மனம் இறுக்கமாக இருந்தது … கண்டிப்பா ஷிவானி படிப்பு விஷயம் பற்றி இல்லை என்று தெளிவானான் . எப்படியும் நடக்காத ஒன்று. பிறகு.. ஹனி மூன் போறோம் . வனி அவனிடம் ஆசையாக கேட்ட, அவளுக்கு பிடித்த Switzerland. இப்போதைக்கு இதை விட வேற சந்தோசம் என்ன வேண்டும்..
திடீர் என்று குளிர், ஜுரம் வந்தது போல அவன் உடல் நடுங்கியது .. நமக்கு நெருக்கமானவர்களுக்கு எதாவது என்றால் இதயம் தாளம் தப்பி துடிக்கும் கேள்வி பட்டு இருக்கேனே ! யாருக்கு என்ன ? அவனுக்கு பிடிக்காத ஒன்று நடக்கபோவதாக வருந்தினான் .. இதற்கு முன்பு கூட அவன் ஆசையா வளர்த்த நாய் இறந்து போது, இதே போல தான் உணர்ந்தான்.. அதே மனவலி !
.
சும்மா நரேன், சுரேன், அவன் தாத்தா ,சித்தப்பா ,சச்சின் அழைத்து பேசி வைத்தான் .அக்கா இப்ப தான் பேசின .. அக்கா மாமா கார்த்திக் அழைத்து ,இப்ப தான் மாமா அக்காவுடன் பேசினேன் ..வந்துடன் பேச சொல்லறேன் ..
குணாக்கு, எங்க இருக்க ? முடிந்தால் மீட் செய்யலாம் மெசேஜ் விட்டான்
எல்லாரும் நலம் என்று நிம்மதி பெருமூச்சு விட்டு , நடந்த படி வீட்டை அளந்து கொண்டு இருந்தான் . நித்யா, “என்ன கொழுந்தனாரே ! வீட்டை எதுக்கு இப்படி அளக்கறீங்க.. எதாவது தொலைந்து விட்டதா என்ன ? சொன்னால் நானும் தேடுவேனே !”
நித்யா கையை பிடித்து “அண்ணி, எனக்கு என்னமோ பயமா இருக்கு! என்ன சொல்ல தெரியல ?”
சின்ன பையன் போல பேசும் சிவாவிடம் “ஒன்றும் இல்லை சிவா”
சரண்யா பையன் ராகுல் பற்றி பேசி பேச்சை திருப்பினாள். அவன் கண்ணில் நீரை கண்டு பதறி “அத்தை இங்க வாங்க . பாட்டி வாங்க”.
விசாலம் ,வைதேகியும் விரைந்து வந்தனர் ..ஷிவேந்தர் கண்ணில் கண்ணீரை கண்டு “சிவா என்ன ஆச்சு !”எதையும் பேசாமல் அவன் அன்னை மடி மீது படுத்துக் கொண்டான் ..
தாயுள்ளம் பதறியது .. “என்ன ஆச்சு சிவா ! என்ன சொல்லு” ..
“எனக்கு தெரியலையே அம்மா! பயமா இருக்கு அம்மா ..”
“ஒன்றும் இருக்காது டா ..இப்ப உன் பெண்டாட்டி வந்திடுவா ..கிரெச்சில் அம்மாவை காணாமல் அழும் குழந்தை போல அழுகிற” என்று பாட்டி வைதேகி கிண்டல் செய்தாள். அவன் கண்ணில் கண்ணீர் நிற்காமல் வழிவதை கண்டு பாட்டி திருநீறு பூசிவிட்டாள். என்ன என்று தெரியாமல் என்ன சொல்லி ஆறுதல் செய்ய? அனைவரும் அங்கே இருந்தனர் …
டேபிள் மீது இருந்த கல்லூரி படிவத்தை பார்த்த விசாலம், “வனி கிளம்பராளா ?அதுக்கா கவலையா இருக்க .. வெளிநாடு போறா முன்பே சொல்லி இருந்தாலே ..”
அதிர்ச்சியாக “உங்களுக்கு தெரியுமா ?”
“எல்லாருக்கும் தெரியுமே ..நீயும் சரி சொன்னதா சொன்னாலே .. ரெண்டு வருடம் ,ஓடி போய்டும்.. இதுக்கா கவலை ..போடா, போய் வேலையை பாரு ..நம்ம வீட்டில் இருந்து கொண்டு இப்படி செய்தால் என்ன சொல்ல ?”
“நான் சரி சொல்லவே இல்லை .. அவள் அங்கு போக போவது இல்லை. நான் அவளை விட மாட்டேன், எங்கும் விட மாட்டேன், என்னுடன் தான் இருப்பா ! யாராவது இதை பற்றி சொன்னீங்களா? ஏன் சொல்லவில்லை” என்று கத்தினான் ..
சிறு வயதில் இருந்து எந்த ஒரு விஷயத்துக்கும் ஷிவேந்தர் இப்படி கத்தி ஆர்ப்பாட்டம் செய்தது இல்லையே! அவனின் இயல்பு இது இல்லையே என்ன ஆச்சு என்று அனைவரும் வியந்தனர் . இவனுக்கு என்ன தான் பிரச்சினை ..போக வேண்டாம் என்றால் போக மாட்டா ..அதுக்கு எதுக்கு ரகளை செய்யறான் என்று விசாலம் கடுப்பானாள் .
வைதேகி, “சரி வேண்டாம் என்றால் போக மாட்டா கண்ணா .. நீ டென்ஷன் ஆகாதே ..”
பேரனை எண்ணி வைதேகி , இந்த பெண் போனா சீக்கிரம் வர வேண்டாம் .. எத்தனை நேரம். அப்பவே ரஞ்சு டாக்டரை பார்த்தாச்சு சொன்னாலே! கடைக்கு எதாவது போகணும் என்றால் வீட்டுக்கு வந்து தலை காட்டி அப்புறம் எங்க வேண்டும் என்றாலும் போய் இருக்கலாமே . பேரன் ப்ரசரை வேற எகிற வைக்கிறா! அவளை பார்த்தால் சரியாகிவிடும் என்று வாசலை பார்த்துக் கொண்டு இருந்தார்.
****************
ரஞ்சு போன் செய்து பதற்றமாக “சிவா ……”
அன்னை குரலை கேட்டு ரஞ்சனி அழுகுரலில் “அம்மா…..அம்மா . சிவாவிடம் கொடு அம்மா!” அவள் வாயில் இருந்து வார்த்தைகள் முழுதா வரவில்லை..
“என்ன ஆச்சு ரஞ்சனி ! எங்க இருக்க ? ஏன் இத்தனை நேரம் .. அப்பவே டாக்டரை பார்த்தாச்சு வனி சொன்னா” என்ற விசாலத்திடம் ரஞ்சனி அழுத படி “ஐயோ அம்மா, தயவு செய்து சிவாவிடம் கொடு ப்ளீஸ்.. அவன் எங்க? எனக்கு பயமா இருக்கு! நம்ம வனி, வனி……….”
அவன் அம்மா பேசுவதை கேட்ட சிவா பதறி, “என்ன ஆச்சு அக்கா! ஏன் இத்தனை நேரம் ..” அவள் சொன்ன செய்தியை கேட்டு அவன் இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டது ..
“அக்கா விளையாடாத ? ப்ளீஸ் நீ வனியிடம் கொடு! அவள் குறும்புத்தனத்தை நேரில் வந்து காட்ட சொல்லு .. எந்த நேரத்தில் விளையாட்டு என்று இல்லை.. கையில் கிடைத்தால் தொலைந்தா சொல்லு ..ஒழுங்கா அவளிடம் போனை கொடு” என்று மிரட்டினான்.
“அச்சோ சிவா ! நான் சொல்வது உண்மை டா ! இப்போது தான் அம்புலன்ஸ் வந்தது .. என்ன செய்வதென்றே புரியவில்லை” என்று அழ தொடங்கினாள் ..
பின்னால் அம்புலன்ஸ் ஒலி அவன் காதை கிழித்தது. அத்தனை நேரம் சிறுவனாய் கலங்கின சிவா அக்கா நிலைமையை எண்ணி பெரிய மனிதனாய்
“அக்கா அழாதே ! நீ அங்கு போக வேண்டாம் . அந்த ஏரியா தான் ஜீவா அலுவலகம் இருக்கு . நான் ஜீவாவை வர சொல்லறேன் !” உடனே ஜீவாவிடம் அக்காவை வீட்டில் விடும் படி தெரிவித்து யார் சொல்வதையும் கேட்காமல் பித்து பிடித்தது போல கிளம்பினான் ..எந்த மருத்துவமனை ?
ரஞ்சனி , “கண்ணன் மாமா மருத்துவமனைக்கு தான் அழைத்து போறாங்களாம் சிவா .. நீ கிளம்பி வா சிவா” . அச்சோ அங்கேயா? கண்ணனால் மனைவி உயிருக்கு மேலும் ஆபத்து நேர கூடும் என்று அங்கு விரைந்தான் ..
வழி எல்லாம் பொய் சொல்லறாலோ ? இருக்கும் என்று ஒரு மனது சொன்னாலும் அடுத்த மனது அடித்துக் கொண்டது..
ரத்த வெள்ளத்தில் அம்புலன்ஸ் மருத்துவமனை வந்த ஷிவானியை அடையாளம் கண்ட மருத்துவர் உடனே கண்ணனுக்கு விவரத்தை கூறினர்.. அவர் பதறிய படி “ஐயோ ஷிவானி ! நான் எது நடக்க கூடாது நினைத்தேனோ அதுவே நடந்து விட்டதே ..கண்ணா , தங்கமே என்னை பாரு ..”
எப்போதும் கம்பீரமாக வளம் வரும் கண்ணன் அழுவதை பார்த்து அவருக்குள் இப்படி பாசமா என்று வியந்தனர் .. அனைவரும் அங்கு கூடிவிட்டனர் ..
“ சார் உடனே ட்ரீட் மெண்ட் ஆரம்பிக்கலாம். பல்ஸ் ரொம்ப கம்மி ஆகி இருக்கு ,ப்ளீஸ்” …. என்று ஆபரேஷன் தேடருக்கு விரைந்தனர் .. வாசலிலே ஷிவேந்தரை கண்ட ரஞ்சனி
“சிவா , நானே உன் பெண்டாட்டி உயிருக்கு எமனாகிட்டேனே! இளநீர் வாங்கிட்டு ரோடு கிராஸ் செய்யும் போது வேகமாக வந்த கார் மோதி……” என்று தலையில் அடித்து அழுக ஆரம்பித்தாள்..
“அக்கா ,ப்ளீஸ்! என் ஷிவானிக்கு ஒன்றும் ஆகாது ”
கண்ணன் உள்ளே நுழைவதை பார்த்து stretcher பிடித்து “என் பெண்டாட்டிக்கு நீ ஆபரேஷன் செய்ய கூடாது .. உள்ளே போகாத .. அவளை ஒன்றும் செய்திடாத ?அவளை எனக்கு உயிரோட கொடுத்திடு .. ப்ளீஸ் அவளை விட்டிடு” என்று கண்ணனை பிடித்து தடுத்து கத்திக் கொண்டு இருந்தான் .
“எனக்கு என் ஷிவானி வேண்டும் .. பயமா இருக்கு ..எங்களுக்கு உங்க சொத்து , பணம் எதுவும் வேண்டாம் . என்னுடையது கூட எடுத்துகோங்க , எத்தனை கையெழுத்து வேண்டும் என்றாலும் போடா சொல்லறேன்” என்று கதறினான் ..
“எங்களை விட்டிடு, நான் அவளை வேற மருத்துவமனைக்கு கூட்டிகிட்டு போறேன் ப்ளீஸ்!”
கண்ணன், ஷிவானியை பரிசோதித்த படி , “சிவா, கொஞ்சம் புரிந்து நடந்துக்கோ , நாம தாமதிக்கிற ஒவ்வொரு நிமிடமும் ஆபத்து .. உனக்கு பெண்டாட்டி ஆவதற்கு முன் அவ எனக்கு மக. நியாபகம் இருக்கட்டும்” .
ஷிவா வெறியா “மகளா ? ஜோக் அடிக்காதீங்க ! என்றாவது அவளிடம் பிரியமா பேசி இருக்கீங்களா ? அவளிடம் அப்பா மாதிரி நடந்து கொண்டு இருக்கீங்களா ? கல்யாணம் ஆனா இத்தனை நாளில் உன்னை பற்றி சிந்தித்தே எங்க நிம்மதியை எடுத்துக் கொண்டா” ..
ஸ்ட்ரெச்சரில் மனைவி உயிரற்ற ஜீவனா இருப்பதை பார்த்து ஷிவேந்தர் கண்கள் இருண்டது . பயத்தால் உடல் நடுங்கியது .. வனி, நீ சொன்ன போது எல்லாம் கேட்கவே இல்லையே கண்ணம்மா ! என்னை மன்னித்து விடு ..
கண்ணனிடம் “இவளுக்கு நேர்ந்த இந்த விபத்துக்கு நீ தான் காரணமா இருப்ப ..பணத்துக்காகவே செய்து இருப்ப” என்று அவர் சட்டையை பிடித்தான் .
“நீ உள்ளே போகாத … போனா போலிஸ் போவேன் ..”
பொறுமை இழந்த கண்ணன் ‘செக்யூரிட்டி’ என்று அழைத்தவுடன் பத்து ஆட்கள் வந்தனர் .. “ஒழுங்கா நான் சொல்வதை கேளு . ஷி இஸ் இன் கிரிடிகல் ஸ்டேஜ் . உன்னிடம் இப்ப எதையும் விளக்க நேரம் இல்லை . நீயும் மருத்துவன் தானே ! என்னுடன் உள்ளே வா .. சத்தம் போட்டால் உன்னை இங்க இருந்து வெளியே தள்ளவும் தயங்கமாட்டேன்” என்று கண்ணன் அடிக்குரலில் சீறினார் ..
கண்ணன் மீது நம்பிக்கை இல்லை என்றாலும் அவர் தொழில், கைராசி மீது அவனுக்கு நம்பிக்கை இருந்தது ..கண்ணனை நம்ப முடியாது என்று ஷிவேந்தர் அவன் பின்னே சென்றான்
.எப்போதும் துள்ளி திரியும் அவன் மனையாள் இன்று பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கிய நிலையில் பார்க்க அவன் உள்ளம் பதறியது .. அவள் உடல் , துணி முழுதும் ரத்த கறை.. அதுவும் அவன் ஆசையாக வாங்கிக் கொடுத்த புடவை ..வெள்ளையில் சின்ன பிங்க் நிற பூக்களுடன் முத்துக்கள் பதித்த புடவை ரத்தத்தால் குளித்து சிகப்பு புடவையாக மாறி இருந்தது .
எப்போதும் அதில் தேவதையாக தோன்றும் ஷிவானியை அப்படி பார்க்க உயிரை யாரோ கசக்கி பிழிவது போல வலி .. சிவா பல்ஸ் பார்க்க, அது இறங்கிக் கொண்டே இருந்தது ..கன்னம் தட்டி “வனி என்னை பாரு , இந்தர் கூப்பிடு டி” கெஞ்சினான் .
“ஷிவானி, உனக்கு ஒன்றும் ஆகாது ,விடமாட்டேன் ..என் மனைவிக்கு மட்டும் எதாவது ஆச்சு நீ உயிரோடவே இருக்க மாட்ட” என்று ஷிவேந்தர் கண்ணனை மிரட்டி தான் கத்தியை தொட விட்டான் .
நடந்த விபத்தில் ஷிவானி வயிற்றில் வளர்ந்த நாற்பத்தைந்து நாள் கரு அவளுக்கு தெரியாமல் வயிற்றிலே அழிந்தது .. இதை அறிந்த ஷிவேந்தர், அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.. வந்த சுவடே தெரியாமல் அழிந்துவிட்டாயே கண்ணா ..
அப்போதைக்கு அது எல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டு அவன் மனையாள் உயிர் மட்டும் தான் கண்ணில் தெரிந்தது ..
நித்யா கருவை அழிக்க சொன்ன அவருக்கு அவர் வாரிசு என்றவுடன் நெஞ்சு பதறியது. மகள் நிலையை கண்டு கண்ணனே கலங்கி விட்டார் .இப்போது அதுக்கு எல்லாம் நேரம் இல்லை என்று அடுத்து செய்ய வேண்டியதை எல்லாம் வேகமாக செய்தார் . அவள் நிலையை கண்டு டாக்டர் பிரேமாவே கலங்கிவிட்டார் ..
என்ன தைரியமா எதிர்த்து பேசினா ? மிரட்டினா ?
கார் மோதி தூக்கி வீசியதால் அவள் இதயத்தில் பலமான அடி (myo cardiac contusion ). நடந்த விபத்தில் இதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்கள் சேதம் அடைந்து இருந்தது .ஷிவானிக்கு மூச்சு திணறி இதயம் வேகமாக துடித்தது .. இருதய நிபுணரான கண்ணன் உடனே தீவிர சிகிச்சையில் ஈடு பட்டார் . நேரமாக அவள் நிலைமை மிகவும் பின்னடைந்தது .
இத்தனை வருட அனுபவத்தால், சர்வ சாதரணமாக இதயத்தை பிரித்து மாட்டும் கண்ணனே திணறித்தான் போனார் .. சிவா, அவர் நிலையை கண்டு “உங்களால் முடியவில்லை என்றால் டாக்டர் செரியனை அழைக்கலாம் ..ப்ளீஸ் . நானே அழைக்கிறேன்.”
அவர் குரலே எழும்பாமல் “அவர் ஊரில் இல்லை சிவா ..”
என்னை காப்பாற்ற உங்களால் முடியுமா? முடியாது கண்ணன் என்று இந்த விஷயத்தில் கூட மகள் அவரிடம் சண்டை போட்டு, சவால் விடுவது போல இருந்தது .. என் மீது இறக்கம் வை தங்கம்.. அவர் படித்த படிப்பு ,திறமை எல்லாம் சேர்த்து மகளுக்கு வைத்தியம் பார்த்தார் . ஐந்து மணி நேரம் போரட்டத்துக்கு பின் சர்ஜரி வெற்றிகரமாக முடிந்தது . அவள் உடல் இந்த அறுவை சிகிச்சையை ஏற்றுக் கொண்டதா என்று பொறுத்து இருந்து தான் பார்க்கணும் என்றார் .
நான்கு நாள் ஆகியும் ஷிவானி உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை . ..கோமதி பாட்டி “எப்படி திரிந்த பேத்தி இப்படி ஆகிட்டா . காதலில் அவசரம் ,கல்யாணத்தில் அவசரம் , குழந்தைக்கும் அவசரம் .. அதுவும் உன்னை போல தான் ..வந்த அவசரத்திலே போய்டுச்சு.. எல்லாத்துக்கும் அவசரப்பட்டு, இப்ப இந்த உலகத்தை விட்டு செல்ல அவசரம் காட்டுறியே கண்ணம்மா ! உனக்காக உன் ஷிவேந்தர் உருகுவது உனக்கு தெரியவில்லையா டா ..அவனுக்காகவாது சீக்கிரம் எழுந்து வா..”
நிர்மலா, “என்னுடன் வந்துவிடு செல்லம் .நீ அம்மா எப்படி எல்லாம் இருக்கணும் ஆசைபட்டாயோ, அப்படி எல்லாம் உன்னை கண்ணில் வைத்து பார்த்துக்கிறேன்” கதறினாள் ..
ஷிவேந்தர் “என்னை விட்டு போய் பாரு டி, நான் என்ன செய்வேன் எனக்கு தெரியாது.. வந்திடு குட்டிமா ..என்னுடன் வந்துவிடு ..உன்னிடம் சண்டையே போட மாட்டேன் டா ..எனக்கு நீ வேண்டும் டி..உன் கோபம் ,செல்ல சண்டை எல்லாத்தயும் ரசித்த என்னால் இதை காண சகிக்க முடியவில்லை.. உன் படிப்பு விஷயத்தில் நான் சண்டை போட கூடாது முன்ஜாக்கிரதையாக இங்கு வந்துவிட்டாயா?” என்று கதறி துடித்தான் .
ஷிவேந்தர், ஷிவானி நிலையை எண்ணி வருந்தி கண்ணனிடம், “எப்படி உங்களுக்கு இப்படி மனசு வந்தது. என்ன தான் இருந்தாலும் அவ உங்க ரத்தம் இல்லையா ?உங்களுக்கு பயந்து தான் என்னை பிரிய கூட ஒத்துக்கொண்டா போல ..ராட்ஷசி..அவளுக்கு தெரியாது அவ எங்க போனாலும் அவளை விட போவதில்லை என்று ..
இப்ப எனக்கு பயமா இருக்கு .. நான் போக முடியாத இடத்துக்கு அவ மட்டும் தனியா போய்டுவாலோ என்று .. என் குட்டிமாவை ,என் உயிரை எனக்கு திருப்பி தந்திடுங்க ப்ளீஸ்” … மகளுக்காக உருகும் ஷிவேந்தரை எண்ணி ஒரு வகையில் அவருக்கு பொறாமையா கூட இருந்தது ..
இந்த பாசம் ஏன் எனக்கு இல்லாமல் போனது?
கண்ணன் தொண்டையை செருமிய படி , “நான் சொல்வதை நீங்க நம்பனும் ..”
ஷிவேந்தர் சீற்றமாக “போதும் ! உங்களை நம்பி தான் இந்த நிலை ..”
“நான் கெட்டவன் தான் .ஆனா என் மகளையே கொல்லும் அளவிற்கு மோசமானவன் கிடையாது மாப்பிளை” . அவர் வாயால் முதல் தடவை மாப்பிள்ளை கூப்பிடுவதை சிவா குறித்துக் கொண்டான் ..
“உங்க குடும்பத்தை பழி வாங்கணும் நினைத்து நான் பல காரியத்தை செய்து இருக்கேன்” . அதை அவர் வாயாலே கேட்க கொதித்து எழுந்தான் . இப்படியும் நடக்குமா? இவரால் எனக்கும் வனிக்கும் எத்தனை சண்டை …
“ஆனா என் மகளை நானே .. இதற்கு எல்லாம் காரணமான அந்த ராஜ் , தேவாவை நான் சும்மா விட போவது இல்லை ..”
என்ன புது கதை ஷிவேந்தர் நம்பாமல் பார்த்தான்..
“புது கதை எல்லாம் இல்லை, பழைய கதை தான் ஷிவேந்தர் .தேவாக்கும், ஷிவானிக்கும் கல்யாணம் முடிவு செய்த போது உங்களை தான் கல்யாணம் செய்வேன் அடம்பிடித்தாள். அதுவே என் ஈகோவை தட்டி எழுப்பியது. எனக்கு தெரியாமல் என் இடத்தை விற்று, நான் கட்ட வேண்டிய பணத்தை எல்லாம் கட்டி மேலும் என் பகையை சம்பாதித்துக் கொண்டாள்.
உங்க கல்யாணம் முடிந்த பிறகும் தேவாக்கு ஷிவானியை எப்படியாவது கல்யாணம் செய்துக் கொள்ள வேண்டும் எண்ணம் .”
இதை கேட்கவே சிவா அருவருத்தான்… கோபத்தை அடக்கிக்கொண்டு அமர்ந்து இருந்தான்..
“என் மூலமா நிறைவேறுமா… ஏற்கனவே போட்ட திட்டம் படி அவர்கள் மருத்துவமனையுடன் ஜாயின்ட் வெஞ்சர்.. அதாவது வட நாட்டிலும் எங்கள் மருத்துவமனை தொடங்கும் திட்டத்துக்கு ஆசை காட்டினான் . என் லட்சிய கனவே அது தான்.
ஷிவானி போல கருண் என் மீது கேஸ் போட்டான் என்று அவன் மீதும் கோபமாக இருந்தேன். என் மருமகள் மூலம் நான் தாத்தா ஆக போகிறேன் என்றதை விட அப்போது பணம் தான் பெரிதா தோன்றியது ..
முதலில் என் லட்சியத்தை பற்றி யோசித்த நான், பிறகு நந்தினி நிச்சயம் போது உங்கள் இருவரிடம் இருக்கும் ஒற்றுமையை, அன்னியோனியத்தை எண்ணி சந்தோசம் கொண்டேன். என் மகளை நீங்க பூ போல தாங்குவதை நேரில் கண்டு தேவா எண்ணம் பலிக்காது, சரிவராது என்று கூறினேன் ..
அன்று நிர்மலாவும் என்னிடம் கடுமையாக பேசினாள்.
நான் வாங்கி போட்டு இருந்த இடத்தில் அவன் குடும்பத்துக்கும் பங்கு இருக்கு . அவங்க ஷேர் அதிகமாக அதில் முடக்கி இருந்தான் . நான் சொன்னதை ஒத்துக்க முடியாமல், உடனே பணத்தை திருப்பி தா, இல்லை பெண்ணை தா சண்டை போட்டான் ..
பணத்தை திருப்பி தரலாம் பார்த்தால் ஷிவானி , கருண் செய்த வேலையால் என் பணம் அத்தனையும் முடங்கியது . அவனுக்கு தர என்னிடம் தனியா பணம் கிடையாது .. என்னை பொறுத்த வரை இந்த துறையில் சம்பாதித்த பணம் அத்தனையும் இதிலே முடக்கி இருந்தேன் .. மகன் ,மகள் செய்த வேலையால் மருத்துவமனையில் என்னால் பெரிய தொகை எடுக்க முடியாமல் போனது.. என்னுடைய shares அனைத்தையும் விற்றாலும் முடியாது. தேவாக்கு பணத்தை திருப்பி தர தான் வனி கையெழுத்து கேட்டேன் .
தேவாவிடம் அவன் எண்ணம் பலிக்காது சொன்னவுடன் ,உங்களால் முடியவில்லை என்றால் நானே என் வழியில் சென்று பார்த்துக் கொள்கிறேன் சவால் விட்டான் ..
பணத்தை கொடுத்து இருந்தால் ராஜ் அடங்கி இருப்பானோ என்னமோ ! அவனை ஏமாற்றினதா சொல்லி தேவா அவன் அப்பாவையும் தூண்டி இருக்கான் ..இது உண்மை . சத்தியம். அவர்களால் தான் விபத்து என்று detective agency மூலம் அறிந்து கொண்டேன்..”
கண்ணன் கண்களில் வெறியுடன் “அவர்களை….. இவன் மட்டும் ஒழுக்க சீலனா நீங்க கேட்பது புரியுது மாப்பிள்ளை ..எல்லாத்துக்கும் நானும் ஒரு காரணம் .. நான் மாறிவிட்டேன் ..”
“எது நடத்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ
அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையதை எதை இழந்தாய்
எதற்காக நீ அழுகிறாய் ?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய் அது வினாக்குவதர்க்கு ?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ
அது இங்கிருத்து எடுக்கப்பட்டது
எதை கொடுத்தாயோ
அது இங்கேயோ கொடுக்கப்பட்டது
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவனுடையது
மற்றொருநாள் அது வேறு ஒருவனுடையதாகும்
” இதுவே உலக நியதியாகும் “
“ எப்போதும் நான் என்று மமதையாக இருக்கும் என்னை அன்று எங்க அம்மா படித்த பகவத் கீதை தலை கீழாக மாற்றியது . இந்த வரிகளை நான் முன்பு படிக்காமல் இல்லை ..ஏனோ அன்று தான் அதன் கருத்தை உள்வாங்கிக் கொண்டேன் . எனக்காகவே சொன்னது போல இருந்தது .
நிதானமா யோசித்த பிறகு தான் பேர், புகழ் மட்டும் வாழ்க்கை இல்லை, அழகான குடும்பம், அமைதியான வாழ்க்கை தான் சிறந்த வாழ்க்கை உணர்ந்து கொண்டேன். கடைசியில் நாம் எதை கொண்டு போக போகிறோம் ..நம்ம சம்பாதித்த பணமா ,சொத்தா ,புகழா?
வாழ்க்கை இது தான் உணரும் போது என் மகனும், மகளும் என்னை விட்டு தொலை தூரம் சென்று விட்டார்கள் .. உங்க குடும்பத்தில் இருந்து அவளை துரத்தும் படி செய்யறேன் , இல்லை அவளா பிரியும் படி செய்யறேன் சவால் விட்டேன் மாப்பிளை ..”
இதை கேட்க அவன் உடல் இறுகியது ..இவரால் தான் என்னை பிரிய முன் வந்தாளா…. ஐயோ வனி என்று உள்ளுக்குள் கதறினான்..
“நீங்க துரத்த மாட்டீங்க என்று அவளே …….. என் மகள் இனி என்னுடன் பேசவே மாட்டாளோ பயமா இருக்கு மாப்பிள்ளை” என்று அவன் கையில் கண்ணீர் விட்டார் . “பேசாமல் போனாலும் சண்டையாவது போடட்டும் ..” அவன் என்ன ஆறுதல் சொல்ல ? ஷிவேந்தரும் கலங்கி தான் இருந்தான் .
“ஷிவானியை பார்த்துக் கொள்ளவே, தேவாவிடம் இருந்து உங்கள் இருவரையும் காக்கவே முருகப்பா என்று செக்யூரிட்டி ஏற்பாடு செய்தேன் .. அப்படியும் பயன் இல்லாமல் போச்சே ..என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே” வருந்தும் அவரை என்ன சொல்லி தேற்ற . செத்த பாம்பை அடித்து என்ன பிரயோஜனம் ..
“உங்களை தான் குறி வைப்பான் என்று தப்பு கணக்கு போட்டேன் மாப்பிளை .”
சிவா வருத்தமாக , “என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே ..என் குட்டிமாவை என் கண் மணி போல பாதுகாத்து இருப்பேனே ….”