காதல் துளிர் 10.2:
இவளை முதலில் எப்படி வழிக்கு கொண்டு வர .. இதற்கு காரணமான அவன் மாமனார் கண்ணனை திட்டி தீர்த்தான் . காதல் என்றால் எங்க தான் பிரச்சினை முளைக்குமோ ? எல்லாருக்கும் வெளியே இருந்து பிரச்சினை வரும். எனக்கு என் செல்லம் மூலமாகவே முளைக்குது ..
ஷிவானியை கல்யாணம் செய்ய எதையும் சமாளிக்கலாம் மனவுறுதி கொண்டான். பார்க்கலாம் என்ன சோதனை எல்லாம் கடந்து வரணும் என்று?
ஷிவேந்தர் வீட்டுக்கு சென்றவுடன் அவன் அன்னையை தேடி சென்றான் .அவன் பாட்டியும் அங்கு தான் இருந்தாள். “ஹே தேகி செல்லம். நீயும் இங்க தான் இருக்கியா ? வசதியா போச்சு ! நாளைக்கு முக்கியமான விருந்தாளியை அழைத்து வர போறேன்” .
“யாரு கண்ணா ?நமக்கு தெரிந்தவர்களா?”
“எனக்கு நெருங்கிய உறவாக போறவங்க ! எனக்காகவே பிறந்தவங்க . நம்ம வீட்டில் ஒன்றாக போறவங்க . சரண்யா அண்ணி , நித்யா அண்ணி மாதிரி சாதுவா இல்லாமல் உன் கூட சண்டை போட போறவங்க! குறும்பு ,சுட்டி தனத்தில் நம்ம நரேன் அண்ணா மகன் ராகுலே தேவல என்று சொல்லும் அளாவிற்கு வாலு தனம் செய்யறவங்க!”
இவன் என்ன சொல்லவறான் என்று வைதேகியும், விசாலமும் திருதிருத்தனர் . இவனை படிக்க வைத்ததுக்கு எங்களையே பைத்தியமா ஆக்கி வைத்தியம் பார்ப்பான் போல என்று விசாலம் நொந்து கொண்டாள் .
“நீங்க தான் என் மாமியார், இப்பவே என்னை மருமகளா ஏத்துக்கோங்க என்று அவளை சொல்ல வைத்து விடனும். முடியும் தான ? உங்களால் முடியாதது உண்டா ?”
‘என்னது’ என்று விசாலமும் , அவன் பாட்டி வைதேகியும் ஒரே நேரத்தில் அதிர்ந்தனர் .
“என் செல்ல மம்மி தான ?”
“என்ன சிவா, நீ சொல்வது உண்மையா? விளையாடாத சிவா” என்று அவன் அன்னை விசாலம் கோபம் கொண்டாள். ஷிவானி பற்றி அணைத்தும் கூறினான் .
“எனக்கு இஷ்டம் இல்லை சிவா. அப்ப என்ன சொன்ன? இப்ப என்ன சொல்லற.. என்னால இதுக்கு கண்டிப்பா ஒரு போதும் ஒத்துக்கவே முடியாது . விளையாடுறியா சிவா ? நான் பார்க்கும் பெண் தான் இந்த வீட்டு மருமகளா வரணும்” கண்டிப்பான குரலில் மறுத்தாள்.
அவன் அன்னை விசாலம் , நான் பயந்த படியே நடந்துவிட்டதே! மகனிடம் சொன்னால் வீண் பிடிவாதம் தான் பிடிப்பான் அறிந்து முதலில் அவன் அப்பாவிடம் பேசி, அப்புறம் இவனுடன் பேசிக் கொள்கிறேன் .என்னை மீறி எப்படி அவளை கல்யாணம் செய்வான் பார்க்கிறேன் .
ஷிவேந்தர் என்ன சொல்லியும் விசாலம் அவன் பேச்சை கேட்பதா இல்லை .
அவன் பாட்டி , அண்ணியிடம் “என்னை பற்றி ஷிவானியிடம் ஒன்றும் சொல்ல வேண்டாம் . நானே தக்க தருணம் பார்த்து சொல்லிக்கிறேன் . அம்மாவை நினைத்தால் தான் பயமா இருக்கு அண்ணி .”
சரண்யா கவலையாக , “சிவா, அத்தையை சமாதனம் செய்து அப்புறம் ஷிவானியை அழைத்துக் கொண்டு வரலாமே!”
“இல்லை அண்ணி , நாளைக்கே வரட்டும். எதா இருந்தாலும் உடனே முடிக்கலாம்” என்று அவனும் பிடிவாதமானான் .
மறுபடியும், “பாட்டி, உன் பேரன் பெருமை பேசறேன் என்று என் படிப்பை பற்றி ஒளறி வைக்காதீங்க”
“சொல்லாத சொன்னா அதையே தான் சொல்ல தோன்றும் கண்ணா ? நீ எல்லாம் என்னத்த படித்த? அரைகுறையா படித்து பட்டம் வேற வாங்கியாச்சு . உன்னை நம்பி அரைகுறை கும்பலே இருக்கு. அவர்களை நினைத்தால் பாவமா தான் இருக்கு” என்று வைதேகி ஷிவேந்தர் முதுகில் ஒன்று வைத்தாள் .
பாட்டி வைதேகியும் , “சிவா, அந்த பெண்ணை அழைத்து வரும் போது வீட்டில் நல்ல சூழ்நிலை இருக்கட்டுமே! என் மருமக விசாலம் கோபம் கொஞ்சம் குறையட்டுமே கண்ணா …”
ஷிவேந்தர் குறை கம்ம, “ பாட்டி, அம்மா ஷிவானி மீது கோபம் கொண்டு ..”
“ச, அசடே, உங்க அம்மாவை பற்றி உனக்கு தெரியாது . அத்தனை அநாகரீகமா எல்லாம் நடந்து கொள்ள மாட்டாள். பட பட பேசுவா தவிர மனதில் ஒன்றும் இருக்காது”
“இதே போல எனக்கு வர போற பெண்டாட்டிக்கும் சபோர்ட் செய்யணும் செல்லம்ஸ் , ஓகே தான” என்று நைசாக வெளியேறினான்.
ஷிவானி விடிய விடிய தூங்காமல் சிவா வீட்டில் எல்லாரும் எப்படி இருப்பாங்க ? என்ன சொல்லுவாங்க என்று டென்ஷனாக இருந்தாள்.
அவள் ஷிவேந்தரையும் தூங்க விடவில்லை .ஷிவேந்தர் அவளிடம் “நான் இருக்கும் போது எதுக்கு இந்த பயம். உன்னை யாரும் ஒன்றும் சொல்ல மாட்டாங்க ..என்னை நம்பு” என்று தைரியம் கொடுத்தான் . அவளை சீண்டி, வம்புக்கு இழுத்து இயல்புக்கு கொண்டு வந்தான்.
“அவங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் என்னை கல்யாணம் செய்து கொள்ள மாட்டாயா ?” என்று அவள் குழந்தை போல கேட்டவுடன் “உன் சம்மதமே வேண்டாம் நினைக்கிறவன் நான். அவங்க சம்மதத்தை பெரிதா எடுத்துப்பேனா செல்லம் .சொல்லு பார்க்கலாம்” .
“ஹா , அது எப்படி” என்று வாயை பிளந்தாள்.
“அது அப்படி தான் . என்னை கட்டி பிடித்து தூங்குவதா நினைத்து நான் கொடுத்த கரடியை கட்டி பிடித்து தூங்கு . இன்னும் கொஞ்ச நாள் தான் ..அப்புறம் “என்று இழுத்தவுடன்
“அப்புறம் தான் நிஜ கரடி என் அருகில் இருக்குமே!”
“அடிங்க! என்னையா கரடி சொல்லற ? குட்டி போலார் கரடி போல பொசு பொசு நீ இருந்திட்டு பேச்சை பாரு . உன்னை கவனிக்கும் விதத்தில் கவனிக்கிறேன் செல்லம்” மார்கமாக “எதுக்கும் ரெடியா இரு பெண்டாட்டி ” என்று சிரித்து போனை வைத்தான் .
*******
அடுத்த நாள் காலை கண்ணன் அத்தனை டென்ஷனாக இருந்தார் . வீடே பரபரப்பாக இருந்தது . அவர் மனைவி நிர்மலா வேற ஊரில் இல்லை .கருண் , தாரா அனைவரும் அங்கு கூடி இருந்தனர்.
பிரச்சனை வீடு தேடி வந்ததை அறியாமல், ஷிவானி சந்தோஷமாக வெளியே கிளம்பி வந்த போது, இது என்ன, என்றும் இல்லாத திருநாளா எல்லாரும் ஒன்றாக இப்படி என்று அதிசயித்து நின்றுவிட்டாள்.
அப்போது தான் வீட்டில் அவர்களை தவிர வேற நபர்களும் இருப்பதை பார்த்தாள். இவர்கள் யார். எதுக்கு வந்து இருக்காங்க ? ஒரு வேலை என் கல்யாண விஷயமா? என் மூடை கெடுக்கவே வந்து இருக்காங்க..மணி வேற ஆச்சு! ஏற்கனவே சிவா பல தடவை அழைத்துவிட்டார் . இப்ப என்ன சொல்லி கிளம்ப !
இவர்களை பார்த்தால் தேவ், ராஜ் அங்கிள் வீட்டு ஆட்களை போல இல்லையே! ஏதோ நெருடியது. அப்போது தான் அவர்கள் சுற்றி இருந்த பேப்பர், கம்ப்யுட்டர் மற்ற ஆவணங்களை எல்லாம் கவனித்தாள் .
என்ன நடக்குது?
அவள் அருகே வாட்ட சாட்டமாக வந்த நபர் “நீங்க எங்க கிளம்பறீங்க?”
‘எனக்கு இன்று..’ வார்த்தை வராமல் தந்தி அடித்தது. இப்படி மிரட்டனுமா ? இந்த ஆளுக்கு எல்லாம் சிரிக்கவே தெரியாதா? பாவம் இவர் பெண்டாட்டி !
“சொல்லுங்க, எங்க போறீங்க?” என்று அதட்டியவுடன்
“எங்கள் கல்லூரியில் சின்ன பாராட்டு விழா . என் பிரண்ட் வீட்டுக்கு போயிட்டு அங்கிருந்து கிளம்பனும்” .
“எங்க வேலை முடியும் முன் உங்களை நாங்க வெளியே விடுவதா இல்லை” என்று அவர் குரல் அதிகாரமாக ஒலித்தது…
“நீங்க யாரு என்னை விட ! அப்பா, அண்ணா என்ன இது . இவங்க எல்லாரும் யாரு” .
“நாங்க இன்கம் டாக்ஸ் ஆபிஸ் இருந்து வந்து இருக்கோம். உங்க மருத்துவமனை ,வீடு எல்லா இடத்திலும் ரைட் நடந்து கொண்டு இருக்கு . நீங்க எங்கேயும் போக கூடாது. உங்க அறைக்கு போங்க, இல்லை அங்க போய் உட்காருங்க ! எங்க வேலையை செய்ய விடுங்க ..”
“வாட் ? என்ன அப்பா ? ப்ளீஸ் நான் போய் ஆகணும் . இன்று விட்டால் நான் அவர்களை எல்லாம் ஒரே இடத்தில் பார்க்கவே முடியாது. எனக்கு சிறப்பு பரிசு கொடுக்க போறாங்க ! நான் கண்டிப்பா போகணும்” கெஞ்சினாள்.
அதற்குள் ஷிவேந்தர் பல முறை அழைத்துவிட்டான் .
“உங்க போனை கொடுங்க !”
அதில் இந்தர் காலிங் என்று ஷிவேந்தர் புகைப்படம் மின்னி மறைந்தது .
கஸ்டம்ஸ் உயர் அதிகாரி மணிவாசகம் மகன் என்று அங்கு உள்ள அனைவருக்கும் தெரியும் . அவருக்கும் இவங்களுக்கும் என்ன என்று குழம்பினார் . அவரும் அங்கே தான் இருந்தார். அவரிடம் இந்த விஷயத்தை கண்டிப்பா தெரிவிக்கணும் என்று அந்த அதிகாரி முடிவு செய்தார் .
அவள் கெஞ்சுவதை பார்த்து மணிவாசகம் மனம் இறங்கி , அவள் எடுத்து செல்லும் பையை சோதனை செய்து விட்டனர் .
அலசி ஆராய்ந்ததில் மருத்துவமனையில் பல கோடி அளவில் ஊழல் நடந்து இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டது .
கண்ணன் , “உங்களை தனியா கவனிக்கிறேன் மணிவாசகம். நீங்க நினைத்தால் இந்த கேஸ் ஒன்றும் இல்லாமல் செய்திட முடியும்” என்றவுடன் மணிவாசகம் மிகவும் கோபமானார் .
“இப்படி வரி கட்டாமல் நாட்டை இப்படி ஏமாத்தறீங்க? அனைத்திலும் ஊழல் . தகுந்த ஆதாரங்களை சமர்பிக்கவும். இல்லை நாங்க சொல்லும் தொகையை கட்டவும்” என்று கண்டிப்புடன் கூறிவிட்டார் .
கண்ணன் கோபமாக “பாதி பணத்துக்கு மேல் வரியா ? என்னை முட்டாள் என்றா நினைத்தாய். உன்னை என்ன செய்யறேன் பாரு ?” அவர் பக்கத்தில் உள்ள ஆடிட்டர், சார் அவரை பகைத்துக் கொள்ள வேண்டாம் . மிகவும் பெரிய அதிகாரி .
“இவனை விட எத்தனை பேரை பார்த்து இருக்கேன்” .
ஆடிட்டர், கண்ணனிடம் தனியாக “சார், இந்த விஷயத்தை காதும் காதுமாக முடிக்க டிரை செய்யலாம் . கேட்ட தொகையை கட்டிடலாம் . முழுவதுமா வேண்டாம் . இப்போதைக்கு கால் பங்கு. அப்புறம் சரி செய்ய முயற்சி செய்யலாம் …”
கண்ணன் கோபமாக “என்ன பாண்டு விளையாடறீங்க ? ஐந்து பைசா கொடுக்க முடியாது” .
கஸ்டம்ஸ் அதிகாரி மணிவாசகம், கண்ணனிடம் “நாங்க குறிப்பிட்ட தேதிக்குள் அளவுக்கு அதிகமா சேர்த்த சொத்துக்கு, ஒழுங்கா கணக்கு சொல்லவும். இல்லை கைது வாரண்ட் தேடி வரும், உங்க மருத்துவமனைக்கு சீல் வைக்க வேண்டியது வரும்” என்று கூறிவிட்டு சென்றார் .
யாருக்கு கைதி வாரண்ட் என்று கண்ணன் கோபமானார்.
அவர் சென்ற பிறகு, “டேய் உருப்படாத பாண்டு, நீ எல்லாம் என்னத்தை படித்து கிழித்தாய் ! எத்தனை தடவை சொல்வது கணக்கை நேர் செய்து வை என்று , இப்ப எவனோ நடுவில் வந்து குட்டையை குழப்பிகிட்டு போறான் . ஒரு கோடியா? ரெண்டு கோடியா? என் சொத்தில் பாதியா ? ஏதோ கொடுத்தால் எடுத்திக்கிட்டு போக வேண்டியது தான இந்த மணிவாசகம் . பிழைக்க தெரியாதவனா இருக்கான் . ரிடையர் ஆகி வீட்டில் நிம்மதியா இருப்பதை விட்டு நம்மளை ஏன் டா படுத்தறான்” .
ஷிவானி அண்ணன் “அப்பா, இத்தனை பணத்தை அரசுக்கு கட்டுவது முட்டாள் தனம். உடனே எதாவது செய்யுங்கள் .இப்பவே மீடியாக்கு விஷயம் கொஞ்சம் கசிய ஆரம்பித்து இருக்கு .”
கண்ணன் கோபமாக “நேற்றில் இருந்து ஒரு நாள் முழுதும் வீடு, ஆபிஸ் ,மருத்துவமனை என்று சோதனை செய்தால் தெரியாமலா இருக்கும் . மீடியா ஆட்கள் உன்னை தொடர்பு கொண்டால் உடனே அவர்களிடம் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து இருக்கிறோம் . அவர்கள் கேட்பதை , செய்ய வேண்டியதை ஒழுங்கா செய்வோம் அறிக்கை கொடுத்திடு. பாண்டு, முதலில் கணக்கை நேர் செய்யும் வழியை பாரு . இல்லை உன்னை தொலைத்து கட்டிடுவேன்”.
“அப்பா, கோதண்டராமன் அங்கிள் வர சொல்லுங்க . அவர் வந்தா உங்களுக்கும் கொஞ்சம் யானை போல இருக்கும்”.
அச்சோ ! அவரா என்று பாண்டு அலறினான். கண்ணில் விரலை விட்டு ஆட்டுவாறே !
ஷிவானி அண்ணன் கருண் “இந்த மணிவாசகம் சரி வரவில்லை என்றால் தூக்கிடலாமா அப்பா ?”
கண்ணன் “சும்மா இரு கருண் . இப்ப எதாவது எக்கு தப்பா செய்தால் கண்டிப்பா நாம மாட்டிக் கொள்வோம் . கொஞ்சம் ஜாக்கிரதையாக தான் செய்யணும் ..என்ன என்று யோசிக்கலாம் . அவனை வேற வழியில் சரி செய்யலாமா பார்க்கலாம் ”
இனி என்ன நடக்கும் ? ஷிவேந்தர் ஷிவானி காதல் கை கூடுமா ? திருமணத்தில் முடியுமா?