தூறல் 5:
சித்தார்த், இப்ப இந்த கல்யாணத்தை உண்மையான கல்யாணமா ஏற்காமல் போனாலும் என்றாவது ஒரு நாள் அவன் மனம் மாறும் வரை கண்மணியை பொறுத்து போகணும் என்று தினமும் அவனுக்குள்ளே பல தடவை சொல்லிக் கொண்டு தான இருக்கிறான்.
அப்படி இருக்கையில் கண்மணியே இவனிடம் இப்படி பேசினதை கேட்டு கோபத்தின் உச்சிக்கே சென்றான். கண்களில் ரௌத்திரமாக “நான் பத்து எண்ணுவதற்குள் என் கண்முன்னால் நிற்காமல் ஓடிப் போய்டு! அப்படி நின்றால் அதற்கு பிறகு நடப்பதற்கு நான் பொறுப்பு இல்லை” என்றவுடன் அங்கு நிற்க அவளுக்கு என்ன பைத்தியமா ? கண்மணி ஒரே ஓட்டமா ஓடி சென்றுவிட்டாள். இந்த குட்டி பிசாசு எல்லாம் பேசும் படி வந்திடுச்சு ..எல்லாம் இந்த அம்மாவை சொல்லணும் என்று ஜானகியை திட்டினான் .
அடுத்த நாள், எல்லாரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் போது அது தான் தக்க சமயம் எண்ணி “அத்தை நான் ….எனக்கு, இன்னும் மூன்று செமஸ்டர், ஒன்றரை வருட படிப்பு இருக்கு. நான் படிக்கணும். எப்ப ஊருக்கு கிளம்ப. இன்னும் ஒரு வாரத்தில் செமஸ்டர் லீவ் முடியுது” ..
சித்து சந்தோஷமாக அப்ப, இவளே கிளம்பராளா? நிம்மதி. எப்படி அனுப்ப யோசித்துக் கொண்டு இருந்தேன் . இல்லை என்றால் அவன் ஒரு மாத பயணமாக கனடா செல்ல திட்டமிட்டு இருந்தான்.
சித்து முக உணர்வுகளை கண்மணி படித்துக் கொண்டு தான் இருந்தாள்.
எதேர்ச்சியாக திரும்பி பார்த்த சித்து கண்கள், அவள் கண்களை சந்தித்தது .அதில் தெரிந்த ஏதோ ஒன்று அவனை தடுமாற செய்தது.
“ஆமாம் அப்பா ! பாபி கோல்ட் மெடலிஸ்ட் .நானே உங்களிடம் இன்று பேசணும் இருந்தேன். அண்ணா போலவே நல்லா படிப்பாங்க போல. படிப்பை விட கூடாது. தொடரட்டுமே” .
சித்தார்த் வேகமாக “அதிதி சொல்வதும் சரி தான். இன்னும் ஒன்றரை வருடம் தான், நாட்கள் சீக்கிரமா போய்டும் . படிப்பை தொடரட்டும்” என்ற போது சந்தோசம் கொண்ட கண்மணி “நாளைக்கே ஊருக்கு கிளம்பட்டும், டிக்கெட் போடறேன்” என்ற போது வருத்தம் அடைந்தது.
இங்கயே படிக்கலாம் நினைத்தேனே! என்னை இங்க இருந்து துரத்துவதில் இவனுக்கு இத்தனை சந்தோஷமா?
அதிதி “பாபி, ஊருக்கு போகணும் என்ன அவசியம். இங்கயே நம்ம ராஜ் மாமாவிடம் சொன்னால் அவர் கல்லூரியிலே படிக்க ஏற்பாடு செய்வாங்க. அன்றே மாமா சொன்னது தான”
“நீ சும்மா இரு அதி. அது எல்லாம் சரிபட்டு வராது. படித்த இடத்திலே படித்தா தான் அவளுக்கு வசதி. என்ன கண்மணி? உனக்காக நானே பேசிக்கிட்டு இருக்கேன், நீ சொன்னா தான புரியும்”. சித்து கண்ஜாடையாக சொல்லி தொலை என்றவுடன் அவள் வருத்தத்தை மறைத்து “அத்தை என்ன சொல்லறாங்களோ அப்படி” என்றுவிட்டாள்.
கல்யாணாம் ஆன ஒரு வாரத்திலே ஊருக்கு போனா அங்க எல்லாரும் என்ன சொல்லுவாங்க. பெண்ணை துரத்தி விட்டாங்களா? அவங்களுக்கு இந்த பட்டிக்காடு பெண்ணை பிடிக்கலையா? இவ அனுசரித்து போய் இருக்க மாட்டா? வேற என்ன? எதனால்? என்று கேள்வி கேட்டு வறுத்து எடுப்பாங்களே? படிப்பை காரணம் சொன்னால் கூட ஒத்துக்க மாட்டாங்களே ! இதனால் ஊருக்குள் அப்பாக்கு தலைகுனிவு ஏற்பட்டால் என்னால் தாங்க முடியாதே?
அப்பாவிடம் எனக்கு இந்த கல்யாணம் வேண்டும் கேட்டேனா ? கல்யாணம் ஆகவில்லை என்றாலும் நிம்மதியா இருந்து இருப்பேனே ? தினமும் என்ன நடக்குமோ பயப்பட தேவை இல்லையே ! எல்லாம் அந்த ஜோசியரை சொல்லணும்.
இப்ப என்ன செய்ய? அத்தை, நீங்க தான் நல்ல முடிவா சொல்லணும் என்று மனதில் வேண்டியபடி ஜானகி முகத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
ஜானகி , “நீ தாராளமா படிப்பை தொடரலாம் தேனு. எனக்கு இன்னும் ரெண்டு நாளில் ஆபரேஷன் . நான் வீட்டுக்கு வந்தவுடன் கிளம்ப முடியுமா? நான் அன்று சொன்னது தான். நீயும் அதிதி போல எனக்கு ஒரு மக தான் .ஊருக்கு எல்லாம் போய் படிப்பை தொடரனும் அவசியம் இல்லை. இங்க இருந்தே படிக்கலாம். மாமா ஏற்பாடு செய்வார்” .
“என்ன அம்மா? அவளுக்கு எது சௌரியமா இருக்கோ அதை செய்யட்டும்,” என்ற சித்துவை பார்த்து “நான் சொன்னா சொன்னது தான் சித்து” என்று முடித்துக் கொண்டாள்.

அவர்கள் அறையில் சித்தார்த் கோபமாக “என்ன மாமியாரை கைக்குள் போட்ட திமிரா? நான் அன்றே இந்த கல்யாணத்தை நிறுத்த சொன்னேனா? இல்லையா? எத்தனை தடவை படித்து படித்து சொன்னேன். எல்லாம் உன்னால தான். என் நிம்மதியே போச்சு! என் கண் முன்னால் வராத” என்று கத்தினான்.
அடுத்த ரெண்டு நாளில் ஜானகி ஆபரேஷன் நல்ல படியா முடிந்தது. அதிதி தான் கண்மணியை பிரியமா பார்த்துக் கொண்டாள். இல்லை என்றால் ஒழுங்கா சாப்பிடாமல், தூங்காமல் மாமியார் பெட் பக்கத்திலே பெட் போட்டு படுத்து இருப்பாள் .
ஜானகி உடல் தேறி வீட்டிற்கு வந்தவுடன் கண்மணிக்கு வேலை அதிகமானது . முன்பின் பழக்கமில்லாத வேலையை பார்க்க திண்டாடித்தான் போனாள்.
இதற்கிடையில் வெற்றி மூலம் கல்லூரியிலும் சேர்ந்துவிட்டாள். என்ன? ஏது ? என்று புரிந்து கொள்ள தடுமாறினாள்.
வெற்றிகரமாக படிப்பை தொடர போகிறாள் என்ற சந்தோஷத்திலே மற்ற கஷ்டங்கள் எல்லாம் பின்னோக்கி சென்றது .
கண்மணி குணத்திற்கு எளிதாக நண்பர்கள் அமைந்தனர். தேவ் தங்கச்சி,வினிதா அதே கல்லூரியில் அவள் வகுப்பிலே படிப்பதால் அவளுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் கல்லூரி வாழ்க்கை எளிதாக சென்றது.
தனிமையில் எப்படியாவது படிப்பை முடித்து இவனை விட்டு கண்காணாத தூரத்துக்கு போய்ட வேண்டும். தினமும் வார்த்தையால் இப்படி காயிந்தால் என்ன செய்ய? என்றாவது இவனுக்கு என்னை பிடிக்குமா? கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தால் தான் பிடிக்கும் .
கல்லூரி போயிடு வந்தவுடன் அவளுக்கு வேலை சரியாக இருக்கும்.
வீட்டில், எல்லாத்துக்கும் ஆள் இருந்தாலும் மேற்பார்வை பார்க்க ,என்ன சமையல் என்று சொல்ல, தோட்டம் பராமரிக்க, ஜானகியை கவனித்துக் கொள்ள என்று நேரம் பறந்தது. நேரம் கிடைக்கும் போது எல்லாம் அந்த வீட்டின் பின் பக்கத்தில் இருக்கும் தோட்டத்திற்கு சென்று இயற்கையை ரசித்த படி அமர்ந்து கொள்வாள்.
இப்படி ஒரு நாள் கண்மணி அமர்ந்து இருக்கும் போது மேலே அவர்கள் அறையில் இருந்து சித்தார்த் பார்த்து விட்டான் .
உடனே செல் போனில் அவளை அழைத்து “ நீ என்ன தான் நினைத்துக் கொண்டு இருக்க? மகாராணி, இப்படி உட்கார்ந்து இருக்கவா உன்னை கல்யாணம் செய்து கொண்டு வந்தேன் .பட்டிக்காடு . அம்மாவை போய் பாரு . வந்து என்னுடைய துணியை எடுத்து கொடு . எனக்கு காபி கொண்டு வா” என்று வேலை வாங்கினான். ஏற்கனவே அதிக வேலையினால் சோர்ந்து இருந்த கண்மணிக்கு குளிர் ஜுரம் வருவது போல இருந்தது. குளிரில் கைகால் நடுங்கியது .
இங்கே அமர்ந்து இருந்தால் மேலும் திட்டு வாங்க வேண்டியது வரும் என்று பயந்து உள்ளே விரைந்து சென்றாள்.

அவன் முன் சென்று அவன் சட்டையை பிடித்து உனக்கு என்னை திட்ட மட்டும் தான் வாய் வருமா? அன்பா பேசாமல் போனாலும் திட்டாமல் இருக்கலாமே! என்னை திட்டுவது அல்வா சாப்பிடுவது போல இருக்கா?என்று கேட்க எண்ணினாள்.
அப்படி கேட்டுவிட்டால் அது கண்மணி இல்லையே ?
ஜானகிக்கு தேவையானதை செய்து கொண்டு இருந்த போது கண்மணி சோர்ந்த முகம் அவள் கண்ணில் பட்டது .”என்ன டா இந்த அத்தை இப்படி படுத்துக் கொண்டு நம்மளை வேலை வாங்குதே யோசிக்கிறியா? ரொம்ப சோர்ந்து தெரியறியே தேனு” என்ற போது கண்களில் கோர்த்த கண்ணீரை உள்ளுக்குள் இழுத்து கொண்டு “அப்படி எல்லாம் இல்லை அத்தை .கொஞ்சம் தூங்கி எழுந்தா சரியா போய்டும்” .
ஜானகி மனதில் சின்ன பெண் பாவம் .
வெளியே போக கிளம்பி வந்த சித்து, கண்மணி சோர்ந்த முகத்தைக் கண்டு எல்லாம் இவள் இழுத்துக் கொண்டது தான் . வேண்டாம் சொன்னதை கொஞ்சமாவது கேட்டாளா? நல்லா அனுபவிக்கட்டும் என்று வெளியேறினான்.
ஏனோ மனம் கேட்காமல் அதிதிக்கு போன் செய்து அவளை பார்த்துக்க சொன்னான் .இது தான் கல்லுக்குள் ஈரமா ?
கண்மணி மனதில் சித்தார்த் கொஞ்சம் அனுசரணையா நடந்து கொண்டால் இது எல்லாம் ஒன்றும் பெரிய விஷயம் இல்லையே ! இதை விட அவள் அம்மா எத்தனை வேலை எல்லாம் செய்கிறாள். அப்பாக்கு பிடிக்கும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி பார்த்து பார்த்து செய்வாள். அப்பாவைக் கண்டவுடன் அவள் உடல் சலிப்பை மீறி முகம் சந்தோஷத்தில் ஜொலிக்குமே! எனக்கு அந்த மாதிரி கொடுப்பனை எல்லாம் இல்லை போல .
படிப்பை முடித்து பிரவீன் சென்னைக்கு திரும்பினான். வீட்டில் கண்மணி, அதிதி ,பிரவீன் சேர்ந்தால் கும்மாளம் தான். சித்துவை கழட்டிவிட்டு மூன்று பேரும் எந்நேரமும் சேர்ந்து ஷாபிங் ,சினிமா ,பீச் என்று சுற்றினார்கள் .
கண்மணி பெற்றோர்கள், மாமா, அத்தை ,பாட்டி என்று அனைவரும் ஊரில் இருந்து அடுத்த நாள் ஜானகியை பார்க்க வருவதாக இருந்தது . அவங்க முன்பு இவன் நம்மளை காயாமல் இருக்கணுமே! அவர்கள் கிளம்பும் வரை அவன் அறையில் வேற தங்கனுமே! என்ன செய்ய !எனக்கு தைரியத்தை கொடு என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டு அவன் அறைக்குள் நுழைந்தாள்.
அவன் கணினியில் வேலை செய்து கொண்டு இருந்ததால் கண்மணியை கவனிக்கவில்லை. முதலில் தயங்கிக் கொண்டு உள்ளே நுழைந்த கண்மணி சித்து வேளையில் பிசியா இருப்பதை பார்த்து சோபாவில் அமர்ந்து கொண்டாள்.
டிவியை இயக்கி கார்ட்டூன் பார்க்க தொடங்கினாள்.
சித்தார்த் வேலை முடித்து பார்த்த போது டிவியில் நிகழ்ச்சி ஓடிக் கொண்டு இருந்தது . நான் டிவி போடவே இல்லையே!
கண்மணி சோபாவிலே அழகா துயில் கொண்டு இருந்தாள். இவ எதுக்கு இங்க வந்த. எப்படியோ போகட்டும் என்று விட முடியாமல் அவளுக்கு போர்வை போர்த்திவிட்டு நகர்ந்தான் .
அடுத்த நாள் சித்து எழுவதற்குள் குளித்து கீழே கிளம்பி போய்டணும் நினைத்தாள். சரியா குளித்து வரும் சமயம் அவனிடம் மாட்டிக் கொண்டாள்.
புத்துணர்வான முகம், அவள் மீது இருந்து வந்த இதமான நறுமணம் அறை முழுதும் பரவியது. குளித்து ,ஏனோ தானோ புடவையை அவசரமாக சுற்றி வந்திருந்தாள். என்ன தான் அவனை கண்ட்ரோல் செய்ய நினைத்தாலும் அவள் அழகில் கொஞ்சம் தடுமாறத்தான் செய்தான். அவனை தொலைத்தான் .
அதுவே அவள் மீது கோபமாக திரும்பியது . “நீ உன் மனதில் என்ன தான் நினைத்துக் கொண்டு இருக்க. ஒரு தடவை சொன்னால் புரியாது! அறிவில்லை . நீ எல்லாம் என்னத்த படித்து கிழிக்கரையோ? எதற்கு என் அறைக்கு வந்த! என்னை மயக்கவா ..
ஒழுங்கா என் கண் முன் வராமல் இருப்பது என்றால் இங்க இரு ! இல்லை என்றால் உன் வீட்டை பார்த்து நடையைக் கட்டு” என்னும் போது கண்மணி கண்ணில் கண்ணீர் .
“அழுது என்னை மேலும் இரிடேட் செய்யாத! பெண்கள் இதை ஒரு ஆயுதமா பயன் படுத்திக்கோங்க” என்று அவள் அருகில் முன்னேறிய காலை கஷ்டப்பட்டு திருப்பி அறையை விட்டு வெளியேறினான் .
அறை வாசலில் ‘தேனு’ என்றதை கேட்டு அவள் இதயமே வெளி வந்துவிடும் போல துடித்தது. வள்ளி ஆத்தா !
இவங்க ,இங்க …
வேகமாக கண்களை துடைத்து வெளியே சென்றாள். ஆத்தா எல்லாத்தையும் கேட்டு இருப்பாங்களா என்று வள்ளி முகத்தை வைத்து கண்டு பிடிக்க முயற்சி செய்தாள் .எதையும் அறியமுடியவில்லை .
“என்ன கண்ணு அப்படி உறைந்து நிற்கிற?”என்றவுடன்
“ஆத்தா வாங்க! இப்ப தான் உன் பேராண்டி, நேரத்திலே என்னை எழுப்பி இருக்கலாம். நானே போய் அழைத்து வந்து இருப்பேன் சத்தம் போட்டுக் கொண்டு போனார். உங்களால் எனக்கு திட்டு .
கீழே நானே வந்து இருப்பேனா! நீ எதுக்கு கால் வலியில் மாடி ஏறி வந்த?” என்று சமாளித்தாள்.
அப்போது தான் மாடி ஏறி வந்த வள்ளி ,சித்து ,கோபப்பட்டு வெளியே போவதை தான் பார்த்தாள்.. முதலில் இருவருக்கும் என்ன சண்டை ,எதனால்? என்று பயந்த வள்ளி, ஒருவேளை கண்மணி சொல்வது போல தான் இருக்குமோ !அப்படி தான், இல்லை என்றால் கல்யாணம் ஒரு மாதத்திற்குள் என்ன சண்டை வர போகுது !
“இதுக்கு எதுக்கு டா சண்டை போட்ட! நல்ல வேலை நீ என் பேரனை ரயில் வண்டிக்கு அனுப்பல! நாங்க கார்ல தான வந்தோம்! சின்ன சிறுசுக !உங்களை எதுக்கு தொந்தரவு செய்திட்டுனு உங்க அப்பா வண்டியிலே போய்க்கலாம் சொல்லிட்டான். போய் மாப்பிளையை சமாதன படுத்து.”.
“மாடிக்கு தான் போனார்! போ தேனு !”
அச்சோ! இந்த அத்தா நிலைமை தெரியாம இம்சை செய்யுதே!
“நீ போய் பேசி சமாதனபடுத்தி அழைத்துக் கொண்டு வா! எல்லாரும் குளிக்க தான் போய் இருக்காங்க !”
வள்ளியை திரும்பி பார்த்த படி மாடி ஏறினாள் .

மாடியில் சித்து கோபமாக யாருடனோ பேசிக் கொண்டு இருந்தான் . அவன் பேசி முடித்தவுடன் அருகில் சென்று மெதுவாக “ப்ளீஸ் கோபப்படாதீங்க! ஊரில் இருந்து எல்லாரும் வந்து இருக்காங்க. அவங்களுக்காக தான் அறைக்கு வந்தேன் !”
கண்கள் கலங்கி “நீங்க சொல்வது போல எல்லாம் இல்லை. சாமி சத்தியமா அது தான் காரணம். அவங்களுக்கு நான் தான் உலகம் .எனக்காக பொறுத்துக்கோங்க! அவங்க தங்கும் வரை உங்க அறையிலே இருந்துக்கிறேன்! ப்ளீஸ்!கோபம் வேண்டாம், எனக்கு வேற வழி தெரியல !” என்று சொல்ல வேண்டியதை கண்ணை மூடிக் கொண்டு சொல்லிவிட்டு வேகமாக இறங்கி ஓடிவிட்டாள்.
அப்பா, அம்மாவை பார்த்தவுடன் அவளுக்கு ஏனோ கண்ணில் கண்ணீர். ஓடி சென்று கட்டிக் கொண்டாள்.
மிகவும் செல்லமா வளர்ந்த பெண். கல்யாணம் பிறகு இப்ப தான் பார்ப்பதினால் அனைவரிடத்திலும் “கல்யாணம் பண்ணதோட சரி. நான் எப்படி போன என்ன என்று என்னை ஒருத்தரும் பார்க்க கூட வரவில்லை” என்று உரிமையாக சண்டை போட்டுக் கொண்டு இருந்தாள் .
“அப்படி எல்லாம் இல்லை ராஜாத்தி. எப்படியும் உங்க அத்தை உடம்பு கொஞ்சம் குணம் ஆகட்டும், அவர்களுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம் என்று தான் வரவில்லை. அது தான் நித்தம் 10 தடவை ஆள் மாற்றி ஆள் போன் பேசறோமே! அப்புறம் என்ன டா !”
செல்லம்மா, அவள் அத்தை மல்லி, செல்வி தனிமையில் ” என்ன கண்மணி சந்தோஷமா இருக்கியா? மாப்பிளை நன்றாக பார்த்துக் கொள்ளறரா? எப்படி இருக்கு உன் கல்யாண வாழ்க்கை”
ரவுண்டு கட்டி கேள்வி கேட்கிறாங்களே! கண்மணி என்ன என்று சொல்லுவாள். சிரித்து மழுப்பினாள் .
அவள் அத்தை செல்வி “சிரிச்சா என்ன கண்ணு நினைக்க .வாயை திறந்து சொல்லு !”
“உங்க அருமை மாப்பிளை என்னை ரொம்ப சந்தோஷமா பார்த்துக் கொள்கிறார். நேரம் தவறாமல் போன் செய்து சாப்பிடு தொந்தரவு . அத்தைக்கு ஜூஸ் போகுதோ? இல்லையோ? வேலையால் ரொம்ப சோர்ந்து இருக்க, நீ ஜூஸ் குடித்து தெம்பா இரு என்று வேலையாட்களிடம் நேரா நேரத்துக்கு ஜூஸ் கொடுக்க சொல்லி ஆர்டர். வந்த ஒரு மாதத்தில் இப்ப ரெண்டு சுத்து பெருத்துட்டேன் தான? அதிதியும் ,பிரவீனும் பிரியமா பார்த்துக் கொள்கிறார்கள் .
அத்தை உடம்பு முடியாமல் இருந்தாலும் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். கல்லூரி வாழ்க்கை அங்க விட இங்க நல்லா இருக்கு” ..
அவள் சொல்வதை எல்லாம் கேட்டு செல்லமா சந்தோசம் அடைந்தாள் .இதை விட ஒரு தாய்க்கு என்ன வேண்டும்.
செல்வி தனிமையில் “தேனு, மாப்பிளை தனியா இருக்கும் போது எப்படி நடந்து கொள்கிறார்.உங்களுக்குள் ……” .
முதலில் என்ன சொல்வது என்று தெரியாமல் திணறி “கூண்டுக்குள் மாட்டின மான் போல தான் என் கதி .என்னை ஒரு நிமிடம் கூட தனியா விட மாட்டார்” பல்லைக் கடித்து
“அப்படி பிரியம். அறைக்குள் கால் வைத்தால் போதும். நான் திணறும் அளவிற்கு மழை பெய்ய தொடங்கிடும்! இந்த மாதிரி மழையை நான் கேட்டதே இல்லை!”
செல்வி ஆச்சிரியமாக , “மழையை எப்படி கண்ணு கேட்க முடியும் ..”
“அது அப்படி தான் செல்வி.”
மனதில் என்னை திட்டுவதை கேட்டே என் காது ஜவ்வு கிழிந்து விடும். அப்படி கோப மழை!
செல்வி “ஒ! ஒ கட்டிலுக்கு அப்படியே தூக்கிக் கொண்டு போய்டுவாரோ! முத்த மழையோ. முத்த சத்தமோ! உங்க மாமனும் அப்படி தான். என் கொலுசு மெட்டி,சத்தத்துக்கு காத்துக் கொண்டு இருப்பார் . அப்புறம்…….” என்று திணறி அழகா வெட்கப்பட்டாள் ..
“அத்தை , இப்ப பார்க்க எத்தனை அழகா இருக்க தெரியுமா? என் மாமன் எதுக்கு உன் முந்தனையே பிடித்து சுத்தறார் இப்ப தான தெரியுது. அத்தை,உண்மையை சொல்லு . இப்பவுமா அப்படி ?நிஜமாவா?”
“இப்ப இல்லை. கல்யாணம் ஆன புதிதில் சொல்லறேன், ஒரு முறை எனக்காக காத்துக் கொண்டு இருந்த போது உங்க பாட்டி உள்ளே நுழைந்து விட்டார்கள் . நான் நினைத்து உங்க பாட்டியை தூக்கிவிட்டார். நல்ல வேலை நான் பின்னாலே போனதுனால சமாளித்தார், உங்க பாட்டி தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்ததை பார்த்தவுடன் உங்க மாமா முகத்தை பார்க்கணுமே”
கண்மணிக்கும் செல்விக்கும் எட்டு வயது தான் வித்தியாசம் . அதனால் அவர்களுக்குள் எப்போதும் நெருக்கம் அதிகம் .
“கண்மணி, இவங்களை இப்படியே முடிந்து வைத்துக் கொண்டால் தான் நமக்கு நல்லது! நானும் பார்த்தேனே! உன் வீட்டுக்காரர் உன்னை பார்த்தாலே உருகராறு.”
கண்மணி மனதில் தலையில் அடித்துக் கொண்டு கஷ்டகாலம் . இன்று காலையில் நீ அவரை பார்த்து இருக்கணும். கோபத்தில் உருகி இருப்பார்.

என்னை பார்த்தாலே ஓவனில் வைத்த பாப்கார்ன் போல பொரிந்து கொண்டு இருப்பார். விட்டா, கடித்தே கொதறிடுவார் என்றதை மறைத்து “போ அத்தை .வெட்கமா இருக்கு “
“படிப்புக்காக குழந்தை எல்லாம் தள்ளி போடாத! அது பாட்டுக்கு அது” என்றதை கேட்டு எல்லா பக்கமும் தலை ஆட்டிக் கொண்டாள்.
கல்லூரிக்கு தினமும் காலை ஐந்தரை மணிக்கே அறக்க பறக்க கிளம்பி, இரவு ஏழு மணிக்கு வீடு திரும்பி கல்லூரி வேலையை முடிக்க இரவு பதினோரு மணி ஆகிவிடும் .சித்தார்த் எதையும் கண்டுக்காமல் எப்போதும் போல அவன் போக்கிலே இருந்தான் .
கண்மணி சித்தார்த்திடம் அவன் முதல் கல்யாணம் பற்றி எப்படி பேச, என்ன கேட்க என்று தினமும் ஒத்திகை பார்த்தாலே தவிர அவனை கேள்வி கேட்க தைரியம் வரவில்லை.
ஜானகி கட்டளைப்படி இருவரும் ஒரே அறையிலே தங்கினார்கள். முதலில் கோபமான சித்து ஜானகி உடல் நிலையை எண்ணி பொறுத்துக் கொண்டான். எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் தான் . அம்மா உடம்பு சரி ஆனவுடன் அடுத்த முடிவு எடுக்கிறேன் .
அவருக்கு பயந்து இருவரும் ஒரே அறையிலே இருந்தாலும், இருவரும் இரு துருவங்களாக தான் இருப்பார்கள். சித்து அலுவலக வேலையோ , இல்லை போன் காலோ,அதே போல கண்மணி கல்லூரி வேலையோ, கணினியோ இல்லை அமைதியாக டிவி பார்ப்பாள். அவர்களுக்கு பிடித்ததை செய்து கொண்டு அமைதியாக படுக்க சென்றுவிடுவார்கள் .
தேவைக்கு மட்டும் பேசிக் கொள்வார்கள். இப்படியே பல மாதங்கள் உருண்டோடியது.
அன்று இரவு வெகு நேரம் ஆகியும் கண்மணி அறைக்கு வரவில்லை .என்ன ஆச்சு .மாலையில் இருந்தே அவளை பார்க்கவில்லை . எப்படியோ போகட்டும் என்று விடவும் மனதில்லை .
அவளுக்கு தொடர்பு கொள்ள நினைத்தால் அவள் செல் போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது. எங்க போனா? சொல்லிட்டு போகணும் தெரியாது!
மெதுவாக அதிதி அறைக்கு சென்று பார்த்தான். சில நேரத்தில் அதிதிக்கு வேலை அதிகம் இருந்தால் கண்மணி ஆர்வமாக அவளுக்கு உதவி செய்வாள். அது போல அங்க இருக்காளோ என்று பார்த்த போது அங்கேயும் அவள் இல்லை .
சித்துவை அவள் அறையில் பார்த்த அதிதி ,”என்ன அண்ணா? என்ன விஷயம்! எதாவது வேண்டுமா”
“இல்லை ..சும்மா தான் ..உன் வேலை எல்லாம் எப்படி போகுது . நிறையா ஆர்டர்ஸ் வருது கேள்விபட்டேன். வேண்டும் என்றால் இன்னும் ரெண்டு ஆளை எடுத்துக்கோ?”
“ஆமாம் அண்ணா! இப்ப எல்லாம் கொஞ்சம் பிசி தான். பாபி தான் உதவி செய்யறாங்க”
“அது என்ன பாபி ..”
“அண்ணி சொன்னா ரொம்ப பெரியவங்க மாதிரி தெரியறாங்க . அது தான் பாபி …பாவம் பாபி அவங்களுக்கு இருக்கும் வேலை நடுவிலும் எனக்கு உதவி செய்யறாங்க .சோ ச்வீட்..நல்லா டலெண்ட் அண்ணா . இன்று அவங்க இல்லாமல் போர்!”
சின்ன பெண்ணிடம் என்ன கேட்க என்று யோசைனையாகவே நின்று கொண்டு இருந்தான். அதிதி ,கண்மணி எங்க என்று மட்டும் சொல்லவில்லை .சித்தார்த்தும் கேட்கவில்லை .
அடுத்து வந்த நாட்களில் இதே தொடர் கதையானது. ஒரு வேலை ஊருக்கு போய்ட்டாளோ ! அவன் மனம் அவளை தேட தொடங்கியது. இவளுக்கு எல்லாம் எதுக்கு போன்! ரயில் தண்டவாளத்தில் வைக்க வேண்டியது தான?
அவனை அறியாமலே கண்மணி அவன் மனதில் இடம் பிடிக்க தொடங்கினாள்.
எங்க தான் போனா? சொல்லிவிட்டு போகணும் தோணாது என்று மனதில் கண்மணியை திட்டிக் கொண்டான்.
அவள் நினைவுகள் அவன் மனதில் தூறலாக…
