என்னிதயம் கேட்ட ஆறுதல் – 14
எத்துனை கடினமான சூழல் என்றாலும், அதனை கடந்து வந்து தானே ஆகிட வேண்டும்.!
தேங்கி அதனிலயே நின்றுவிட முடியாதே..!
அப்படியொரு முடிவினில் தான் இருந்தான் இளம்பரிதி.
எதுவாகினும் சரி நின்று பார்த்துவிடுவது என்று..
யாராகினும் சரி, நீயா நானவென்று பார்த்துவிடலாம் என்று..
அது வானதியானாலும் சரி.. வெற்றிவேலன் என்றாலும் சரி… இல்லை யாரோ என்றாலும் சரி..
மற்ற அனைத்தையும் விட, அவனுக்கு இப்போது அவனின் மன நிம்மதி பெரும் முக்கியம். அவன் குடும்பத்து அமைதியும் இயல்பும் மிக மிக முக்கியம்.
இப்போது குடும்பம் என்பதில் வானதியும் வந்துவிட, இந்த பொடி வைத்த பேச்சுக்கள், கண்ணாமூச்சி ஆட்டங்கள் எல்லாம் வேண்டாம் என்றே தோன்றியது இளம்பரிதிக்கு.
அவள் மனதில் என்னவென்று கேட்டுவிடலாம். அதுதான் சரி.. அதுமட்டுமே சரி என்ற முடிவு எடுக்க இளாவிற்கு ஓர் நாள் இரவு முழுவதும் ஆகியது.
அருணைப் பற்றி வானதி விசாரித்தது, இதனை எவ்வகையில் ஏற்றுக்கொள்ள? தன் மனைவி, தன் நண்பனின் உடல் நலம் பற்றி கேட்கிறாள் என்றா? இல்லை தன் நண்பன் திருமணம் செய்வதாய் இருந்தவள் அவனைப் பற்றி தன் கணவனிடம் விசாரிக்கிறாள் என்றா?
இந்த என்றாக்களை எல்லாம் அவன் சுமந்துகொள்ள தயாராய் இல்லை. பேசிவிடுவது.. கேட்டுவிடுவது.. அவ்வளவே.
அதன்பின் எதையும் பார்த்துக்கொள்வோம்..!!
இப்படியாக முடிவெடுத்துத் தான் இதோ வானதியின் முன்னம் வந்தும் அமர்ந்துகொண்டான். அவளும் இவன் எதோ கேட்கப் போகிறான் என்றெண்ணி அவன் முகமே பார்த்திருக்க, இளம்பரிதியோ கோர்த்திருந்த அவன் கரத்தினை பார்த்து அமர்ந்திருக்க,
“நம்மள சாப்பிட கூப்பிட்டு நேரமாச்சு.. இன்னும் போகலைன்னா என்ன நினைப்பாங்க…” என்றாள், நேரம் பார்த்தபடி வானதி.
“ஹ்ம்ம்…” என்று ஒரு பெருமூச்சு விட்டவன், “நீ என்ன நினைக்கிற..?” என்று நேரடி கேள்விக்கு வர,
“எ… எதுபத்தி..?” என்றாள் சற்றே திடுக்கிட்டு.
முதல்நாள் அருண் பற்றி கேட்டதில் இருந்து, இளம்பரிதி ஏதேனும் பேசுவான் என்று காத்திருக்க, கொஞ்சம் இப்படியான கேள்விகள் வரும் என்று வானதி எதிர்பார்த்தே இருந்தாள்.
இருந்தும் ஒரு தயக்கம் இருந்திடவே தான் செய்தது.
“உனக்கு புரிஞ்சதுன்னு தெரியும் வானதி… என்கிட்டே ப்ரீயாவே பேசலாம்…” என்றவனின் முகத்தினில் இருந்தும் எதையும் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.
‘இதென்ன இப்படியொரு ரியாக்சன்.. ரியாக்சனே இல்லாத ஒரு ரியாக்சன்…’ இப்படிதான் அவளால் நினைக்க முடிந்தது.
வானதி மௌனமாய் இருக்க, “நம்ம எப்போ சாப்பிட போகலாம்…” என்றான் அடுத்து.
அதாவது உன் பதிலை நீ சீக்கிரம் சொல் என்பதுபோல, சட்டென்று வானதியிடம் ஓர் மெச்சுதல் பார்வை வந்து செல்ல, அதை மறைக்கவும் அவள் எண்ணவில்லை, அதை பார்த்து உடனேயும் அவன் உருகவில்லை.
சலனம் நிஜம்.. அதுவே சாஸ்வதமா தெரியவில்லை. அந்த நிலை இருவருக்கும்.
“ஹ்ம்ம்…!! இப்போதைக்கு என் மனசுல எதுவுமில்லை.. அதாவது.. லைப் பத்தி எந்த கண்ணோட்டமும் இல்லை.. ஏனா இப்போ வாழ்க்கை எப்படி போகுதோ அதோட இழுப்புக்கு நம்ம போனாதான் சரி.. அதாவது இப்போ இருக்க சூழ்நிலைல..” என்று ஒவ்வொரு வார்த்தையையும் வானதி நிறுத்தி நிதானமாகவே சொல்ல,
“ம்ம்…!!!” என்று தலையை மேலும் கீழுமாய் ஆட்டியவன்,
“சூழ்நிலை மாறிட்டா… அடுத்து…” என்றான் அடுத்து.
அவனையும் மீறி சற்று ஆவல் எட்டிப் பார்த்ததுவோ என்று இருந்தது அவளுக்கு.
“மாற்றம் ஒன்றுதானே மாறாதது… பாப்போம்.. எப்படி மாறுது என்ன மாறுதுன்னு.. எனக்குமே சுத்தி வளைச்சு பேசுறது பிடிக்காது தான்.. நேராவே சொல்றேன்.. நேத்து அருண் பத்தி நான் கேட்கவும் உங்களுக்குள்ள நிறைய தாட்ஸ்… அது நேச்சர் தான்.. பட் எனக்கும் அருணுக்கும் நடுவில எப்படிப்பட்ட ஒரு ரிலேஷன்ஷிப் இருந்ததுன்னு உங்களுக்குத் தெரிஞ்சு தானே இருக்கும்…” என்றவள் முயன்றே தன்னை திட படுத்திக்கொண்டாள்.
பேசித்தான் ஆகிட வேண்டும் என்று..!!
“எனக்குத் தெரியாதுன்னு சொன்னா…??!!” என்றவன் பார்வையோ, அவளை பேசவிட்டு வேடிக்கை பார்க்கும் பாவனை காட்ட, வானதி சும்மா இருப்பாளா என்ன??!!
‘ஓ…!!’ என்று உதடு சுழித்தவள், “ஓகே… அருண் நல்லாகி வரட்டும்.. அவர்க்கிட்டவே கேட்டுக்கோங்க.. இப்போ சாப்பிட போகலாம்…” என்று எழுந்தும் விட,
“எனக்கு இன்னும் பசிக்கல…” என்றான் இளம்பரிதி.
வானதிக்கு இவனோடு இந்த முறையில் பேசுவது சுவாரஸ்யமாய் இருக்க, “எனக்கு பசிக்குதே…” என்று லேசாய் வயிற்ரை தொட்டுக் காட்டிச் சொல்ல, அவளின் அந்த செயலில் இளம்பரிதி லேசாய் சரியத்தான் செய்தான்.
‘எவளோ ஒருத்தியா? இல்லையே… உன் பொண்டாட்டி டா.. தாராளமா ரசிக்கலாம்…’ என்று அவனின் புத்தி வேறு உத்தரவு போட,
‘எவளோ ஒருத்தியா இருந்தப்போவே என்னவோ பண்ணா… இப்போ கேட்கணுமா என்ன??’ என்று மனதும் சொல்ல,
“சரி சரி.. சாப்பிடலாம்…” என்று எழுந்துகொண்டான்.
பேச வந்த எதையும் இன்னும் முழுதாய் பேசிடவில்லை தான். இருந்தும் இது நன்றாக இருப்பதாய் தோன்ற, மெல்லிய ஒரு இதம் பரவத்தான் செய்தது.
இங்கே இப்படியோர் நேர்மறை சூழல் எனில், அங்கே வெற்றிவேலன் வீட்டினில் சரோஜா அவரை பிடி பிடியென பிடித்துக்கொண்டு இருந்தார். திருமணமாகிய இத்தனை ஆண்டுகளில் இப்படி அவர் பேசியதே இல்லை எனலாம். எப்போதும் அப்படியே இருந்திட முடியுமா என்ன??!!
அதிலும் சற்று நேரத்திற்கு முன்னம் கோபியும், வெற்றிவேலனும் பேசியது கேட்டு, கேட்டு என்றுகூட சொல்லுதல் கூடாது, வெற்றிவேலன் கோபியை கண்டபடி திட்டி என்றுதான் சொல்லவேண்டும்.
முதலில் இருவரும் கோபமாய் பேசுவதைப் பார்த்து சரோஜா எதோ பிரச்சனை என்றுதான் நினைத்தார். ஆனால் வெற்றிவேலன் கோபியை அடிக்கக் கை ஓங்கவும் தான் “என்ன இதெல்லாம்…” என்றபடி இருவருக்கும் நடுவில் செல்ல,
அப்பா மகன் இருவரின் முகத்திலும் ஓர் திகைத்த பாவனையே…!!
அதிலேயே புரிந்து போனது பெரியதாய் ஏதோ விஷயம் இருக்கிறதென்று.!!
“எனக்குத் தெரிஞ்சே ஆகணும்.. இங்க நடக்குது நம்மள சுத்தின்னு…” என்று சரோஜா தோரணையாகவே கேட்க,
“எதுவுமில்ல சரோ… நாங்க சும்மா…” என்று வெற்றிவேலன் பேச வருகையில்,
“என் கண்ணு குருடு இல்ல.. உண்மைய சொல்லிடுங்க.. நேத்து இளா வந்து மிரட்டாத மாதிரி உங்களோட பேசினதை நானும் பார்த்தேன்.. அதுவும் ஹாஸ்பிட்டல்ல வச்சு.. அப்போவே கேட்கணும் நினைச்சேன்.. இப்போ அப்பாவும் புள்ளையும் இப்படி நிக்கிறீங்க.. சொல்லுங்க என்ன நடக்குது..? என்ன மறைக்கிறீங்க..?” என்று விடாது கேட்க, வெற்றிவேலன் பகிரங்கமாய் பெரிய மகனை முறைக்க,
“நீங்க முறைக்கிறது எல்லாம் இருக்கட்டும்… எனக்கு பதில் தெரிஞ்சே ஆகணும்…” என்றார் சரோஜா..
அருணுக்கு நேர்ந்த விபத்து அவரை மனதளவில் மிகவும் பாதித்து இருக்க, என்னவோ தங்களை சுற்றி எதோ நடக்கிறது என்ற எண்ணம் அவருக்கு வந்திருந்தது.
அதன் காரணம் “போலீஸ் கம்ப்ளைன்ட் குடுக்கலாம்…” என்று ரேணு பேச்சு வாக்கில் பேசியதற்கு “அதெல்லாம் ஒன்னும் வேணாம்…” என்று வெற்றிவேலன் வேகமாய் மறுத்தார்.
“ஏன் மாமா… போலீஸ் வந்தே கேட்டாங்கதானே.. ஏன் வேணாம் சொல்றீங்க…” என்று ரேணுகா சாதாரணமாய் கேட்க,
“ஏய்… சும்மா இரு…” என்று கோபி அதட்டிவிட, அப்போதே சரோஜாவிற்கு லேசாய் சந்தேகம் வந்தது.
அப்பாவும் பிள்ளையும் இந்நேரம் காவல் துறை உயர் அதிகாரியை வீட்டிற்கே வரவழைத்துப் பேசியிருப்பார்களே, அதைவிட்டு இப்போது வேண்டாம் என்கிறார்களே என்று அப்போ நினைத்தது இப்போது நினைவில் வர,
“அப்பாவும் பையனும் என்ன திருகுதாளம் செஞ்சு அதை மறைக்கிறீங்க…?” என்றார் உருத்து விழித்து.
“அதெல்லாம் எதுவுமில்ல சரோ.. நீயா எதையும் நினைக்காத…” எனும்போதே,
“ஓ..!! சரி இருங்க.. இந்த வீட்ல இன்னொருத்தி இருக்காதானே அவளையும் கேட்கிறேன்.. அவளும் இதுல பங்கா இல்லை என்னைப் போலவான்னு…” என்று சொல்லிக்கொண்டே “ரேணு…” என்றழைக்க,
“ம்மா.. ம்மா ஏம்மா ஏன்.. அதெல்லாம் அவளுக்கு எதுவும் தெரியாது…” என்றான் வேகமாய் கோபி.
சிக்கிக்கொண்ட உணர்வு இருவருக்குமே..!!
“அது அவளே வந்து சொல்லட்டும்… ரேணு….” என்று மீண்டும் சத்தமாய் சரோஜா குரல் கொடுக்க,
“ஷ்…! சரோ போதும்…” என்று மேலே குரலை உயர்த்தினார் வெற்றிவேலன்.
“என்னன்னு சொல்ல முடியுமா முடியாதா?? இல்ல, இந்த வயசுலயும் உங்களோட வாழ புடிக்காம பிறந்த வீட்டுக்கு வந்துட்டான்னு எல்லாரும் பேசுறதுபோல செஞ்சிடுவேன்…!” என்ற சரோஜாவின் ஆங்காரம் கட்டுக்கடங்காது போக,
‘ஐயோ…!!’ என்றாகிப்போனது.
ஒருவார்தைக்கு மறுவார்த்தை பேசாதவர் இன்று இப்படி நடந்துகொள்ள, வெற்றிவேலனுக்கு ஒரு பக்கம் தவிப்பாய் இருந்தது. இருந்திருந்து இப்படியா குடும்பத்தில் ஒன்றோடொன்று நடந்திட வேண்டும்.
கைகளை பிசைந்துகொண்டு மகனைக் காண, அவனோ ‘வேணாம்…’ என்பது போல் தலையை ஆட்டினான்.
“என்னடா சைகை… உங்கம்மாவோட பிடிவாதம் நீ பார்த்தது இல்லை… என் சின்ன மகனுக்கு ஆக்சிடன்ட் ஆகிடுச்சு.. என் பெரியமகன் மேலதான் சந்தேகமா இருக்குன்னு நானே போய் கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன் பார்த்துக்கோ…” என, அவ்வளோ தான் இருவருமே ஆடித்தான் போகினர்..
“ம்ம்ச் சரோஜா… நான் சொல்லிட்டிருக்கேனே…”
“இன்னும் எதுவும் நீங்க சொல்லலை…” என்றவர் “ரேணு…” என்று சத்தமாய் வீடே அதிரும்படி கத்த, கீழே வேலை செய்யும் பெண் “அம்மா.. சின்னம்மா கோவிலுக்கு போயிருக்காங்க…” என்று குரல் கொடுக்க,
‘நல்ல வேளை…’ என்றுதான் நினைத்தனர் வெற்றிவேலனும், கோபியும்.
“உங்க நல்ல நேரம்…” என்றவர் “ம்ம் சரி சொல்றீங்களா இல்லை இளாவுக்கு பிருந்தாவுக்கு எல்லாம் கூப்பிடவா.. எப்படியும் அவங்களுக்குத் தெரியாம இருக்காதே…” என்று அடுத்தத் தாக்குதலுக்குப் போக,
“ஐயோ போதும்…” என்று சத்தமிட்ட வெற்றிவேலன், நடந்தவைகளை சொல்ல, கேட்க கேட்க அப்படியே ஓய்ந்து போனார் சரோஜா..
இத்தனை கன்றாவிகளா நடந்திருக்கிறது??!!
இது எதுவுமே தெரியாமல் வீட்டில் இரண்டு பெண்கள்..
என்னவோ மிக மிக அவமானமாய் உணர்ந்தார் சரோஜா..
இளாவின் விலகல், அருண் – வானதியின் அவசர கல்யாணம், பிருந்தாவின் கட்டாயம்.. இப்போது அருணின் விபத்து..
இவை அனைத்துக்கும் காரணம் கோபி.. அவன் செய்த தவறை குடும்ப கௌரவம் என்கிற ஒன்றிற்காக மூடி மறைக்க நினைத்த கணவன். என்ன சொல்வது என்றுகூட தெரியவில்லை.
சிறிய தவறா, மகனை கண்டிக்க, கணவனோடு சண்டையிட.? எத்தனை பேரின் வாழ்கையை இது புரட்டிப் போட்டு இருக்கிறது??!!
என்ன சொல்லப் போகிறாரோ என்று கோபி அம்மாவின் முகத்தையேப் பார்க்க, வெற்றிவேலனோ ‘சரோஜா…!!’ என்று அவர் கை பிடிக்க,
“ச்சே..!!” என்று கையை உதறியவர், “ரெண்டு பேரும் என் முன்னவே நிக்காதீங்க…” என்றவருக்கு பயங்கரமாய் அழுகை வந்தது.
இத்தனை ஆண்டுகள் இங்க வீட்டினில், இந்த மனிதர்களோடு வாழ்ந்து என்ன பயன்?! மகனின் குணம் தெரியவில்லை.. கணவனின் இன்னோர் முகம் அறியவில்லை. என்னடா வாழ்ந்தோம் என்றாகிப் போனது சரோஜாவிற்கு.
வெளியில் சொல்லக் கூடிய காரியமா இது??!!!
எத்தனை நேரம் அப்படியே சிந்தையில் அமர்ந்திருந்தாரோ, “அத்தை… என்ன இப்படி உக்காந்து இருக்கீங்க..?” என்ற ரேணுகாவின் தொடுகையில் திடுக்கிட்டு பார்க்க, அங்கே அவரும் அவளும் மட்டுமே.
“என்னாச்சுத்தை… உடம்பு முடியலையா??!!”
“அ… அதெல்லாம் இல்ல…” என்றவர் சுற்றிலும் பார்க்க,
“யாருமில்ல.. எல்லாரும் வெளிய போயிட்டாங்க… ஹாஸ்பிட்டல் போகணும்.. நேரமாச்சு.. கிளம்பலாமா??” என,
“எங்க போயிருக்காங்க…” என்றார் சரோஜா..
“எப்போ சொல்லிட்டு போயிருக்காங்க…” என்ற மருமகளின் பதிலில், அப்படியொரு பேரடி அவரினுள்ளே..
நிஜம் அதுதானே..!!
முன்பிருந்தே இப்படியொரு பிடிவாதம் செய்து இருந்திருக்க வேண்டுமோ என்று தோன்றியது.. இப்போது தோன்றி என்ன பயன்?!
மீண்டும் சரோஜா சிந்தனைக்கு சென்றுவிட, “அத்தை ஹாஸ்பிட்டல்…” என்று ரேணு இழுக்க,
“ம்ம் போலாம்.. அதுக்கு முன்ன இளா வீட்டுக்கு போகணும்.. புதுசா கல்யாணம் ஆகிருக்கு.. நம்ம போய் பார்க்கணும்.. சூழ்நிலை இப்படி எல்லாம் இருந்தாலும், அவனும் எனக்கு புள்ளதான்…” என்றவர் முகத்தினை அழுந்தத் துடைக்க,
“ம்ம் போலாம்…” என்று ரேணு சந்தோசமாகவே சொல்ல,
“போறோம்னு இப்போதைக்கு யாருக்கும் சொல்லவேணாம்.. போய்ட்டு வந்து சொல்லிக்கலாம்…” என்ற சரோஜா புதிதாய் தெரிந்தார் ரேனுகாவிற்கு.