“முருகா.. அன்பு தம்பி வந்தாச்சா..?” என்று அன்னம்மா வீட்டிற்கு முன்னால் இருக்கும் தோட்டத்தில் தண்ணி பாய்ச்சி கொண்டிருந்த முருகனிடம் தன் இளைய பேரன் அன்பரசுவை பற்றி கேட்டார்.
“இல்லேங்கம்மா.. இன்னும் வரல, மணி இப்போ நாலுதானே ஆகுது, தம்பி வர இன்னும் நேரம் இருக்கும்மா..” என்று தன்னுடைய சிறு பட்டன் மொபைலில் நேரம் பார்த்து சொன்னார் முருகன்.
கிருஷ்ணகிரி மாவட்டம், புதூர்.. இன்றளவும் அங்கு பேர் சொல்ல கூடிய அளவில் பெரு விவசாயம் செய்யும் குடும்பம் அண்ணாமலையின் குடும்பம் தான். அண்ணாமலையின் அம்மா தான் அன்னம்மா, அவரது கணவரான தணிகாச்சலம் சிறிது மாதங்களுக்கு முன்புதான் மறைந்திருந்தார்,
அன்னம்மா.. தணிகாச்சலத்திற்கு இரண்டு மகன்கள், ஒரே மகள், அதில் “மூத்தவர்தான் அண்ணாமலை, அவரின் மனைவி ராஜி, இவர்களுக்கு இரண்டு மகன்”,
“அவருக்கு இளையவர் ஆனந்தன், அவரின் மனைவி சாந்தி, இவர்களுக்கு ஓரு மகன், ஒரு மகள்”,
“அடுத்து மகள் மோகனா அவரின் கணவர் பாலா, இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள்”. இதுதான் அன்னம்மாவின் குடும்பம், இதில் மகள் சென்னையிலே இருக்க, மகன்கள் சொந்த ஊரிலே விவசாயம் பார்த்திருந்தனர்,
அதில் அன்னம்மாவின் செல்ல பேரன், அண்ணாமலையின் இளைய மகன் அன்புவைதான் கேட்டார் அன்னம்மா.
“ஓஹ்.. தம்பி வர்ற நேரம் இன்னும் ஆகலையா..?” என்று பேரன் வரும் வழியை பார்த்தவாறே கேட்ட அன்னம்மா, திடிரென்று ஞாபகம் வந்தவராக,
“ அதுசரி.. நீ இன்னக்கு நம்ம நெல்லுக்கு தானே தண்ணி பாய்ச்ச போயிருக்கணும், அதை விட்டு இங்க என்னடா செஞ்சிட்டு இருக்க..?” என்று அதட்டலுடன் கேட்டார்.
“நான் இன்னிக்கு மதியம் வரை அங்கதான்ம்மா இருந்தேன், ஆனா நம்ம ஆனந்திம்மா தான், புதுச்செடி எல்லாம் வந்திருக்கன்னு என்னை கையோடு இங்க கூட்டிட்டு வந்துருச்சு”, என்று சொன்னார்,
முருகன் சொல்லவும், அந்த சிறுக்கி வேலைதானா..? என்று உள்ளுக்குள் நறநறத்த அன்னம்மா,
“அவ கூப்பிட்டா நீ உடனே வந்துடறதா..? உனக்கு எங்க வேலை கொடுத்துச்சோ அங்க செய்ய வேண்டியதுதானே, அதை விட்டு இங்க வந்து இந்த தம்மா துண்டு செடி எல்லாம் நட்டுட்டு இருந்தா, அங்க ஏக்கர் கணக்குல போட்டிருக்கிற நெல்லோட கணக்கு எப்படிடா..?” என்று முருகனை போட்டு காய்ச்ச ஆரம்பித்துவிட்டார்.
அன்னம்மாவின் கோவத்தில் எதுவும் பேச முடியாமல் நின்ற முருகன், “வரலைன்னா ஆனந்திமா திட்டுவாங்க, வந்தா இவங்க திட்டுறாங்க.. என்னடா இது..?” என்று நொந்து போய் நின்றிருந்தார் முருகன்,
“முருகா.. நான் உன்கிட்ட தானே கேட்டுட்டு இருக்கேன், பதில் சொல்லாம இப்படி மரம் மாதிரி நின்னா என்ன அர்த்தம்..?” என்று அதற்கும் காந்திய அன்னம்மாவிடம்,
“இல்லேங்கம்மா..நான் அப்பறம் வரேன்னு தான் சொன்னேன், ஆனா ஆனந்திம்மா தான்..” என்று இழுக்க, புரிந்து கொண்ட அன்னம்மா,
“அவ ஒரு கூறுகெட்ட கழுதை, அவ சொன்னா உனக்கு எங்க போச்சு புத்தி..?” என்று முருகனை விடாமல் வெளுத்து கொண்டிருந்தார் அன்னம்மா, அப்பொழுது,
“யாரை பார்த்து கூறுகெட்ட கழுதைன்னு சொன்னீங்க..?” என்று கத்தியபடி போட்டிருந்த சுடிதார் ஷாலின் நுனியை உதறி வரிந்து கட்டி கொண்டு சண்டைக்கு வந்தாள் ஆனந்தி. அவளின் சத்தத்துக்கெல்லாம் அசராமல் நின்ற அன்னம்,
“கழுதையை பார்த்து கழுதைன்னு சொல்லாம குதிரைன்னு சொல்ல முடியும்..?” என்று கிண்டலாக சொன்னவர்,
“ஆமா நீ யாரைக்கேட்டு இங்க உன்னிஷ்டத்துக்கு செடி எல்லாம் வச்சிட்டு இருக்க..? இதென்ன உங்க அப்பா வீட்டு தோட்டமா..?” என்றார் முறைப்புடன்.
“யாரை கேட்கணும் நான்..? எனக்கு இங்க என்ன செய்யவும் உரிமை இருக்கு”, என்று மிதப்புடன் சொன்ன ஆனந்தியை புழுவை பார்ப்பது போல் பார்த்த அன்னம்,
“இங்க எதுவும் செய்ய என் பேத்திக்கு மட்டும் தான் உரிமை இருக்கு, அதை விட்டு கண்டவளும் வந்து உரிமை கொண்டாட இது ஒண்ணும் சத்திரம் இல்லை”,
“ஆஹா.. யாருக்கு உன் பேத்தி அந்த தளிர் நிலாக்கா..? என்று நக்கலாக இழுத்த ஆனந்தி,
“அது கதை எல்லாம் முடிஞ்சி போச்சு கிழவி, இனிமேல் இந்த வீட்ல எனக்கு தான் எல்லா உரிமையும், ஏன் இந்த வீட்ல மட்டுமில்ல, அன்பு மாமா மேலயும் எனக்கு தான் எல்லா உரிமையும் இருக்கு..” என்று திமிராக சொன்னாள் ஆனந்தி. அவளின் பேச்சில் கொந்தளித்த அன்னம்மா,
“அதெப்படி முடிஞ்சி போச்சுன்னு தான் நானும் பாக்கிறேன், அப்பறம் இன்னொரு முறை உன் வாயிலிருந்து என் பேரன் பேரு வந்துச்சு, அந்த நாக்கை இழுத்து வச்சி ஓட்ட நறுக்கிருவேன் பாத்துக்கோ..” என்று திமிராக நின்றிருந்த ஆனந்தியை மிரட்டிய அன்னம்மா சேலையை உதறி தோளில் போட்டு கொண்டே உள்ளே சென்றார்.
“ஆனந்தி.. ராஜியின் அண்ணன் மகள், அதோடு அவர்களின் குடும்பமும் அதே ஊரில்தான் இருந்தனர். உள்ளே சென்ற அன்னம்மா, நேரே தன் சின்ன பேரன், காலேஜ் இறுதி வருடம் படிக்கும் கோகுலிடம் சென்றவர்,
“கோகுலு என் பேத்திக்கு ஒரு போன் போட்டு கொடுயா..?” என்று கேட்டவாறே கோவத்தில் மூச்சு வாங்கி கொண்டு அமர்ந்தார்,
“என்ன பாட்டி இன்னிக்கும் அந்த ராங்கி வந்துட்டா போலயே..” என்று சிரிப்புடன் கேட்டபடி போன் எடுத்து கால் செய்து கொடுத்தான் கோகுல், அதை வாங்கி காதில் வைத்தவர், அந்த பக்கம் எடுத்தவுடன், படபடவென பொரிய ஆரம்பித்துவிட்டார்.
“நான் உன்னை அப்பவே இந்த வீட்டை விட்டு போகாதன்னு தலை பாடா அடிச்சிகிட்டினே, என் பேச்சை கொஞ்சமாவது கேட்டியா, இப்போ பாரு ஆளில்லா நிலத்தில உழுக கண்ட கண்ட சிறுக்கியெல்லாம் வந்து உரிமை கொண்டாட்டி நிக்கிராளுங்க”, என்று நன்றாக கத்தியவர்,
“போனதெல்லாம் போகட்டும், நீ எப்போ இங்க உன் புருஷன் வீட்டுக்கு வர..?” என்று அதிகாரத்தோடு கேட்டார். அவரின் எந்த அதிகாரத்திற்கும் அசையாமல் இருந்த பேத்தி,
“நான் எப்பவும் அங்க வர்றதா இல்லை..”, என்று ஒரே வரியில் முடித்து வைத்தாள்.
“என்ன எப்பவும் வர்றதா இல்லையா..? அப்போ என் பேரன் நிலைமை என்ன.? அவன் காலத்துக்கும் இப்படி ஒண்டிக்கட்டையாத்தான் இருக்கணுமா..?”
“ஏன் ஒண்டிக்கட்டையா இருக்கணும்..?, அதான் அந்த ஆளில்லா நிலத்தை உழுக தான் ஆள் ரெடியா இருக்கே, அதுக்கே பட்டா போட்டு கொடுத்து, உழுந்துற வேண்டியதுதானே..!!” என்று பாட்டிக்கு தானும் சளைத்தவள் இல்லை என்று நிரூபித்தாள் பேத்தி, அதில் பல்லை கடித்த அன்னம்மா,
“என் பேரன் என்ன கிள்ளு கீரையா..?, ஆளாளுக்கு வந்து கிள்ளிட்டு போக, அவன் அசையாத ஆலம் மரம்டி”,
“அதான் தெரியுமே, சும்மா அல்கு மாதிரிதானே உன் பேரன், என்னா அகலம், என்னா நீளம், சுத்திப்பார்க்கவே ஒரு நாள் வேணுமே..!!” என்று அன்புவின் முரட்டு தோற்றத்தை கிண்டலாக சொன்னாள் பேத்தி.
நிலா சொன்னது போல் அன்பு, வஞ்சனை இல்லாமல் ஓங்கு தங்காக தான் வளந்திருந்தான், உயரத்தில் மட்டுமில்ல, அகிலத்திலும் தான், அதற்கேற்றாற் போல், மீசையும் இரு பக்கம் பெருசாக வைத்து சிங்கம் சூர்யா போல் இருக்கும், அவனின் இத்தகைய தோற்றத்தையே கிண்டாலாக சொன்ன பேத்தியின் மீது மேலும் கொந்தளித்த அன்னம்மா,
“நீ பூனைக்குட்டி மாதிரி இருந்துகிட்டு என் பேரனை குறை சொன்னா ஆகிடுமா..? உன் வயசுக்கேல்லாம் பொம்பளை எப்படிஇருக்கணும்..? நீயும் தான் இருக்கியே..? குச்சி குச்சியா..?” என்று பேரனை விட்டு கொடுக்காமல் பேசிய அன்னம்மாவின் பேச்சில் உதடு சுழித்த நிலா,
“நாங்க எல்ல்லாம் கரெக்ட் வெய்ட் தான், உன் பேரன் தான் வஞ்சனையில்லாம வளர்ந்து நிக்கிறார், அதுக்கு நாங்க பிணையா..? அதிலையும் உன் பேரன் நடந்தா அந்த கையும், காலும் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இல்லை போயி வருது..” என்று அன்புவிடம் இருந்த இத்தனை வருட பயத்தை மறந்து வாயடித்த பேத்தியிடம்,
“இங்க பாருடி இந்த நோணாங்கி பேச்செல்லாம் எங்க என் பேரன் கிட்ட பேசிடு பார்ப்போம், அவனை நேர்ல பார்த்தாலே ஓடி ஒளிஞ்சிட்டு திரிஞ்சவ எல்லாம் இப்போ என்கிட்டே வாயடிக்க கூடாது ஆமா..”, என்று எதற்காக பேச ஆரம்பித்தாரோ அதையே மறந்து தன் பேத்தியிடமே செல்ல பேரனுக்காக சண்டையிட ஆரம்பித்தார் அன்னம்மா. பாட்டியின் ஞாபகப்படுத்தலில் கடுப்பான பேத்தி,
“உன் பல்கு பேரனை பார்த்து ஓடி ஒளிஞ்சதெல்லாம் அந்த காலம், இப்போ நேர்ல வந்தா..!!”
“நேர்ல வந்தா என்ன செஞ்சிடுவியாம்..?” என்று திடீரென்று குரல் மாற்றி கணீரென்று ஒலிக்கவும், பதறி போனை தவற விட்ட நிலா, சட்டென அனிச்சையாக மொபைல் கீழே விழாமல் தாங்கி பிடித்தவள், அச்சம் கலந்த சந்தேகத்துடன் போனை காதில் பட்டும் படாமல் வைத்தவள், அடுத்த பக்கம் விடும் சீறலான மூச்சில், தன் சந்தேகம் கலைந்து கிலி கொண்டாள்,
“ம்ம் சொல்லு.. நேர்ல பார்த்தா என்ன செய்வ..?” என்று கேட்டான் அன்பரசு,
“அது.. அது..”
“ஓஹ் போன்லங்கிறதனால சொல்ல முடியலையோ..? நேர்ல தான் சொல்வியோ..? சரி விடு நாளைக்கு நேரிலே வந்து, என்ன செய்வன்னு பார்த்துரலாம்..” என்று அன்பு போனை வைத்த அடுத்த நொடி,
“ம்மா..” என்று பயத்தில் கத்தியவாறே மயங்கி விழுந்த நிலா, அடுத்த இரண்டு வாரம் முழுதும் குளிர் ஜுரத்திலே தான் இருந்தாள்.
அன்னம்மா பாட்டியும் திடீரென அன்பு வந்து நிற்பான், அதிலயும் போனை வாங்கி நிலாவிடம் இப்படி பேசுவான் என்று எதிரார்க்காதவர், பேரன் பேசிய பேச்சில் கண்டிப்பாக பேத்தி குளிர் ஜுரத்தில் தான் விழுந்திருப்பாள் என்று இத்தனை வருட அனுபவத்தில் சரியாக கணித்தவர், அடுத்த இரண்டு வாரமும் பேத்தி சரியாகும் வரை, சாதாரணமாக நலம் விசாரிப்பதோடு மட்டும் முடித்து கொண்டார்.
ஆனால் நிலாவிற்கு சரியானவுடன், மறுபடியும் போனில் மகளையே அழைத்த அன்னம்மா, தன் பேத்தியை பேரனுடன் வாழ அனுப்பி வைக்கும் படி கேட்டார்,
“ம்மா.. நீ கேட்கிறது நியாயம் தான், ஆனா பாருங்க என் மக அன்புவை பார்த்தாலே பயப்படுறா, அவளுக்கு அன்பு மேல ஈர்ப்பும் இருக்கிற மாதிரி தெரியல”,
“நிலாவுக்கு மட்டுமில்ல ஏன் அன்புவுக்குமே பெருசா ஈடுபாடு இருக்கிற மாதிரி தெரியல, அப்படி இருக்கிறப்போ எப்படி ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா வாழறது..?” என்று ஒரே மகள் வாழ்க்கையில் மீது உள்ள அக்கறையில் கேட்டார் மோகனா.
“இங்க பாரு மோகனா, ஈர்ப்பு எல்லாம் ரெண்டு பெரும் புருஷன் பொண்டாட்டியா சேர்ந்து வாழ்ந்தா தானா வந்துட்டு போக போகுது, அதுக்காக எல்லாம் ஊர் அறிய நடந்த கல்யாணத்தை மாத்த முடியுமா..?” என்று கேட்டார்,
என்னமோ இருவருக்கும் முறைப்படி நிச்சயித்து, கல்யாணம் நடந்தது போல் பேசினார் அன்னம்மா. ஆனால் நடந்தது என்னமோ, சில மாதங்களுக்கு முன்பு தனிகாச்சலம் மரணப்படுக்கையில் இருக்கும் போது, கடைசி ஆசையாக பேரனுக்கும், பேத்திக்கும் யாரும் எதிர்பார்க்காமல் திடிரென நடந்த திருமணம் தான்,
அதிலும் நிலா, அன்புவை விட 6 வயது இளையவள், அன்பு, நிலா உட்பட வீட்டில் உள்ள யாருமே அவரின் ஆசையை எதிர்பார்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்,
ஏனெனில் ராஜியின் அண்ணன் மகள் ஆனந்தி தான் அன்புவுக்கென அவர்க்ளுக்குள்ளே பேச்சு வார்த்தையாக நிச்சயிக்க பட்டிருக்க, எங்கே தன் ஒரே மகள் தனியாக நின்று விடுவாளோ என்ற எண்ணத்தில் தணிகாச்சலம் எடுத்த அவசர முடிவு தான் “அன்பு.. நிலா திருமணம்”.
கணவனின் அந்த அவசர முடிவை காப்பாற்ற போராடும் அன்னம்மா, “இங்க பாரு மோகனா, கல்யாணம் ஆன ரெண்டே நாளே எதோ அன்பு கொஞ்சம் கோவமா பேசிட்டான் நிலாகிட்ட, அதுக்கு புள்ளைக்கு ஜுரம் வந்துருச்சு”,
“அதுக்காக நீயும் நான் சொல்ல சொல்ல கேட்காம உன்கூடவே உன் மகளை கூட்டிட்டு போயிட்ட, ஆனா அதுக்கு அப்பறம் இத்தனை மாசம் ஆகியும் நீ இந்த வீட்டு மருமகளை இங்க கொண்டு வந்து விடாம இருக்கிறது தப்பு பாத்துக்கோ”,
“இதுல இந்த ஆனந்தி வேற பழைய ஆசையை மனசுல வச்சிக்கிட்டு என் பேரனையே விடாம வட்டம் போட்டுட்டு இருக்கா, உன் அண்ணிக்காரியும் ஒன்னும் கண்டுக்க மாட்டேங்கிறா,”, என்று கடுப்பாக சொன்னவர்,
“இங்க பாரு மோகனா எப்படி நடந்தாலும் கல்யாணம் கல்யாணம் தான், அவங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி தான்”,
“நீ எத்தனை மாசம் நிலாவை உன்கூடவே வச்சிருந்தாலும் இந்த உண்மை மாறப்போகுதா..? சொல்லு பார்ப்போம், அதனால நிலாக்கு தைரியம் சொல்லி, காலகாலத்துல இங்க கொண்டு வந்து விடற வழியை பாரு..”, என்று இதே ரீதியில் பேசி பேசி மகளின் மனதை கரைத்தார் அன்னம்மா,
மோகனவுக்குமே அன்புவிடம் எந்த குறையும் இல்லை, அவர் பார்த்து வளர்ந்த அண்ணன் மகன் தானே, மிகவும் மரியாதை தெரிந்தவன் தான், என்ன வளர்ச்சி மட்டும் நம் நிலா சொல்வது போல் வஞ்சனையில்லாமல் தான் இருக்கும்,
அதிலும் நிலா அன்புவின் பக்கத்தில் நின்றால், ஆளே தெரிய மாட்டாள். அன்புவின் குரலும் நல்ல கணீரென்று ஒலித்தால், நிலா கீச்சு கீச்சு என்றுதான் பேசுவாள். அப்படித்தான் இருக்கும் இருவர் பொருத்தமும்,
ஆனால் நிலா..? அவளின் வாழ்க்கை, அதை பார்க்கும் போது இந்த குறைகள் எல்லாம் ஈஸியாக அடிபட்டு போயின, அடுத்து என்ன செய்ய என்று கணவரிடம் கலந்தாலோசித்த மோகனா, இறுதியாக அந்த வாரத்திலே நல்ல நாள் பார்த்து மகளை அன்புவிடம் விட முடிவும் எடுக்கபட்டது.