பகுதி – 31
திரும்பிப் படுத்தவள் தன்னைச் சமாதானம் செய்வான் என்று எதிர்பார்த்திருக்க அவன் அமைதியாய் இருந்தது அவளை சந்தேகப்படுத்தியது. உடனே திரும்பினால் தான் வலிந்து போனதாய் ஆகிவிடும் மேலும் தன் கோபத்திற்கும் அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்றெண்ணி அமைதியாய் படித்திருக்க அவன் கரம் தன் வெற்றிடையில் படரவும் தலையணையை இறுக பற்றிக் கொண்டாள். இதயம் புல்லட் வேகத்தில் துடிக்கத் துவங்கியது.
கண் இமைக்கும் நேரத்தில் முன்னேறி வந்தவனின் மூச்சுக் காற்று அவள் கழுத்தில் பட உடல் சிலிர்த்து படபடக்கும் இமைகளை மூடிக்கொண்டாள்.
“கண்ணைத் திற…” என்று அவள் காதில் கிசுகிசுத்தவன் தன் முத்தங்களையும் சேர்த்தளித்தான்.
“முடியாது…” என்று கேட்டும் கேட்காத குரலில் அவள் சொல்ல அவன் இதழ்கள் அவள் தேகத்தில் ஊர்வலம் நடத்தின.
“என்னைப் படுத்துகிறாயடி…” என்று அவன் முணுக அன்று அவன் கூறியதற்கான அர்த்தம் இன்று விளங்கியது அவளுக்கு.
முகம் அந்திவான நிறத்தை பூசிக்கொள்ள தலையணையில் முகம் புதைத்தாள் அனு. அவளின் சிலிர்த்த மேனியும், மழையின் உபயத்தாலான ஜில்லென்ற தேகமும் அதனோடு சேர்த்து நனைந்து ஈரத்தில் நலிந்திருந்த ஆடையும் அவன் கொள்கை முடிவை சுக்குநூறாய் தகர்த்தியது. தங்கள் நோக்கங்களை மறந்து காதலோடு இசைந்தவர்கள், கால மாற்றத்தின் விளைவாய் வரும் எதிர்பாரா திடீர் மழையால் ஏற்படும் வெள்ளம் போல் பெருக்கெடுத்த உணர்வுகளால் கலந்தவர்களின் விடியல் கால மாற்றத்தைப் போல் கணிக்க முடியாததாக இருக்குமா என்பது சூரியன் உதித்த பின்பு தான் தெரியும்.
தன் வெண்கதிர்களை வீசி இப்பூவுலகை ஆதவன் பிரகாசிக்க நாயகனோ நித்திராதேவியின் ஆசியில் உழம்ப அதை ரசித்தபடி அவன் மேல் படர்ந்திருந்தாள் அவன் நாயகி.
நேற்றிரவு நடந்தேறிய அனைத்தும் வரிசைகட்டி நினைவில் வர துளிர்விட்ட நாணத்துடன் இதழை கடித்துக்கொண்டு தன்னை அவனுள் புதைத்துக் கொண்டாள்.
அவர்களின் மூச்சுக் காற்று மட்டுமே அவ்வறையை  நிரப்பியிருக்க, கதவு தட்டும் சத்தம் கேட்டு தன்னிலை  மீண்டாள் அனு. கதவையும் ஆதியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருக்க சத்தம் அதிகமானது.
“ஏங்க… எழுந்திருங்க… கயல் முழித்துவிட்டாள் போலிருக்கு… ம்ச்…  என்று அவனை உலுக்க அவன் அசராமல் படுத்திருந்தான்.
தன்னால் முடிந்த அளவு அவனை எழுப்ப முயன்று தோற்றவள் அவன் மூக்கை நன்றாக கடித்து வைத்தாள்.
“ஆ… ஏன்டி கடிக்கிறாய்?” என்ற அலறலுடன் விழித்தவன் அவன் மூக்கை தேய்த்துக் கொண்டே பதறியடித்து எழுந்தான். 
அதை காதில் வாங்காதவள், “கயல் கதவை தடுக்கிறாள். போய் கதவைத் திறங்கள்.” என்று அவன் முகத்தை பார்க்காமல் சொல்லிவிட்டு திரும்பி அவனுக்கு முதுகு காட்டிப் படுத்துக் கொண்டாள்.
“நீ போய் திற. எனக்கு தூக்கம் வருகிறது.” என்றவன் கொட்டாவி வெளியேற்றி அவள் அருகிலே தொப்பென்று விழுந்தான்.
“ம்ச்… நான் எப்படி… ம்ச்… என்னால் முடியாது. நீங்கள் போங்கள்…” என்றவள் அவன் கையை பிடித்து தள்ள முயன்றாள்.
“என்ன இது புதிதாக… எப்பொழுதும் நீ தானே முதலில் எழுந்து கதவைத் திறப்பாய்… போ… என்னைத் தொந்தரவு செய்யாதே.” என்று அவள் கையை உதறிவிட்டான்.
“ம்ச்… ப்ளீஸ் இன்று ஒரு நாள்… எனக்கு… ஏதோ ஒரு மாதிரி இருக்கிறது.” என்ற சிணுங்களுடன்  தலையணையில் முகம் புதைத்தாள்.
“ப்ச்… என்ன உளருகிறாய்?” என்று கண்ணை திறக்க அவர்களின் நிலையே நேற்று நடந்ததற்கு சான்றாக இருந்தது.
தன்னை எதுவால் அடித்துக் கொள்வது, தான் இத்தனை நாள் காத்திருந்ததற்கான அர்த்தத்தையே வீணடித்து விட்டோமே என்று அவன் மனம் குமுறியது. அவள் இளம்பெண் என்பதால் அவசரப்பட்டு அவள் கருவுற்றால் என்னவாவது என்பதை ஏற்கனவே டாக்டருடம் ஆலோசித்து தான் அவளை விட்டு ஒதுங்கி இருந்தான். மருத்துவ உலகம் எவ்வளவு முன்னேற்றம் கண்டிருப்பினும் துணிந்து முன்னேறிச் செல்ல அவனுக்குத் தயக்கமே. ஆனால் அது அத்தனையும் இப்பொழுது வீணாகிவிட்டது. அடுத்து என்ன செய்வது என்று அவன் மூளை யோசனையில் ஆழ அதை தடுக்கும் விதமாய் அவன் மார்பில் லேசாக அடித்தாள் அனு.
என்ன என்பது போல் அவளை நோக்க அவள் கண்ணாலே கதவை சுட்டிக் காட்டினாள். கவலை மறந்து குறும்பு துளிர்விட அவள் புறம் திரும்பியவன், “நேற்று யாரோ தைரியமாக இருந்த மாதிரி தெரிந்தது… யாரது?” என்று தேடுவது போல் அறையை நோட்டமிட அவன் கழுத்தில் மாலையிட்டு தன் புறம் இழுத்தவள், “ப்ளீஸ்… இன்று ஒரு நாள்… எனக்கென்னவோ… ஒரு மாதிரி… வெட்கமாய் வருகிறது.” என்றவள் அவன் கரம் கொண்டு தன் முகத்தை மூடிக் கொண்டாள்.
“சோ க்யூட்…” என்று சிரித்தவன் தன் கைகளை அவள் பிடியிலிருந்து உருவி அவள் நெற்றியில் இதழ் ஒற்றி எடுத்தான்.
“சீக்கிரம் வெளியில் வருகிற வேலையைப் பார்… இல்லையென்றால் அவள் உள்ளே வந்து விடுவாள் அது நன்றாயிராது,” என்றவன் கட்டிலை விட்டு கீழ் இறங்க, “ஏய்…” என்று கத்தினாள் அவள்.
“என்ன ஏய் யா??? என்ன வரவர மரியாதை தேய்கிறது?” என்றான் பொய்யான முறைப்போடு.
“யோவ்… சட்டையைப் போடு” என்று சிரித்துக் கொண்டே உடுப்பை அவன் மேல் விட்டெரிய, அதை மாட்டிக்கொண்டவன் வெளியிலிருந்து கயல் சத்தமாய் கூப்பிடுவது கேட்டு அனுவை முறைத்துவிட்டு வெளியே சென்றான்.
“மாமா, இன்னும் தூங்குகிறாளா அவள்? இரவு மழை பெய்திருக்கிறது… என் சீருடை?” என்று கயல் அழுவது போல் கேட்க அப்போது தான் நேற்று இரவு கட்டிலில் வீசிய அவளது யூனிபார்ம் நினைவு வர நாக்கை கடித்துக்கொண்டான்.
“என்ன மழை பெய்ததா? எங்களுக்குத் தெரியவே இல்லையே… நீ ஏதும் கவலைப் படாதே நான் ட்ரையரில் காய வைத்துத் தருகிறேன்.” என்று எதுவும் தெரியாதது போல் அதிர்ச்சியாய் காட்டிக் கொண்டு அவளை நம்பவைத்து விட்டான். அவனது நல்ல நேரம் இரவு இவர்கள் அறைக்கு சென்றவுடனே கயலும் அறைக்கு சென்று விட்டாள் அப்படியே அவள் ஹாலில் இருந்திருந்தாலும் அவர்கள் கவனித்திருக்க மாட்டார்கள்.
“இப்பொழுதெல்லாம் மழை பெய்யுமா என்ன? நான் பார்த்ததில்லையே… சென்ற வருடம் மழை நாளில் கூட மழை பெய்யவில்லை.” என்றாள் கயல் சந்தேகத்துடன்.
“ம்ம்… எல்லாம் குளோபல் வார்மிங் படுத்தும் பாடு. சொல்லப் போனால் எல்லாவற்றிற்கும் காரணம் நாம் தான். நவீனமயமாதல் என்ற பெயரில் எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறது என்று பூமியை பாடாய் படுத்துகிறோம். விளைவு பூமி கரப்ட் ஆகி விட்டது. அதன் ப்ரோடோகாலில் பிழை வந்துவிட்டது. அதனால் தான் சம்மந்தம் இல்லாமல் ஆனி மாதத்தில் மழை பெய்கிறது, அதுவும் நன்றாக கவனித்துப் பார்த்தால் இப்பொழுது பெய்யும் மழைத் துளியின் அளவு பருவமழையில் பெய்வதை விட பெரியதாக இருக்கிறது. அரசின் அலட்சியத்தால் நீரை தேக்கவும் முடியாமல், அதன் விளைவாய் நிலத்தடியில் நீர்மட்டமும் உயராமல் இவ்வளவும் வீணாகி கோடை காலத்தில் நம் தேவைக்கு மற்ற மாநிலங்களிடம் தண்ணீருக்கு போராடும் நிலை உருவாகி விட்டது. அதே போல் பருவம் தப்பியதால் விவசாயத்தில் பெரிய இழப்பு ஏற்பட்டு வாழ்வாதாரத்திற்கே வேட்டுவைக்கிறது… எனக்கும் தான்.” என்று கடைசியில் அவளுக்கு கேட்காத குரலில் சொன்னான்.
“நீங்கள் சொல்வதும் சரி தான் மாமா. நாங்கள் கூட ஒரு ப்ராஜெக்ட் செய்தோம்… மரங்கள் நட்டோம்… ப்ச்… ஆனால் எங்கே அதை சரிவர பராமரிப்பது?” என்று சலித்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தாள்.
“ம்… இன்று இருக்கும் பிரச்சனையே அது தான்… பல காரணங்களுக்காக வெட்டப்படும் மரங்கள் மீண்டும் நடப்படுவதில்லை… அப்படியே நட்டாலும் அதில் பாதி விளம்பரத்திற்காக செய்கிறார்கள். அன்று நடுவதோடு சரி… சில நாட்கள் பராமரிப்பார்கள் பிறகு விட்டு விடுவார்கள்… மரம் நடுவதோடு இல்லாமல் நம்மால் முடிந்த அளவு ப்ளாஸ்டிக்கை குறைக்க வேண்டும்.” என்று பேசிக்கொண்டே காபியும் போட்டு விட்டான்.
“என்ன காலையிலேயே தத்துவமாக இருக்கிறதே?” என்றபடியே உள்ளே நுழைந்தாள் அனு.
“சும்மா தான்… இன்று ஏதோ வித்தியாசமாய் தெரிகிறாய். ஏதும் புது க்ரீம் போட்டாயா?” என்றபடி அனு முகத்தை ஆராய்ந்தாள் கயல். 
ஏற்கனவே நினைவுகள் அவளைப் போட்டுப் படுத்த கயல் இப்படி கேட்டதும் அவள் முகம் இன்னும் சிவப்பேறியது. என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் தன் நகங்களை ஆராய அவளை காப்பாற்றினான் ஆதி.
“புது லோஷன் போட்டாள் அதனால் தான்…” என்று அவன் பதில் சொன்னதும் கயல் ஏதும் கேட்க்கவில்லை.
“சரி… நீ என் ட்ரெஸ்ஸை ரெடி பண்ணு அக்கா… நான் போய் படிக்கிறேன்.” என்று அங்கிருந்து கிளம்பினாள் கயல்.
“வாருங்கள் மகாராணி… உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று புருவத்தை உயர்த்தினான் ஆதி.
“என்ன கிண்டலா!!” என்று இடுப்பில் கை வைத்தபடியே கேட்டாள் அவள்.
“இல்லை நக்கல்…” என்று கண்ணடித்தவன் கரம் அவள்  இடைத் தழுவி முன் இழுத்தன.
“வெட்கமெல்லாம் போய் விட்டதா மகாராணியாரே…”  என்று சிரித்துக் கொண்டே அவள் மூக்கை ஆட்டினான்.
“ம்… ம்… ஐயோ… கயல் யூனிபாஃர்ம்… இந்த மழை வந்து எல்லாவற்றையும் கெடுத்துவிட்டதே .” என்று திடீர் நினைவு வந்தவளாய் அனு தலையில் அடித்துக் கொள்ள “ஆமாம்… என் மொத்த திட்டத்தையும் நாசமாக்கிவிட்டது. ..” என்று முகத்தை தொங்க வைத்துக் கொண்டான்.
அவன் கூறிய கூற்றின் சாராம்சத்தை உணர்ந்தவள், “இந்த நினைப்பு நேற்றே இருந்திருக்க வேண்டும் மிஸ்டர். செய்வதையெல்லாம் நன்றாக செய்துவிட்டு இப்பொழுது என்ன…” என்று அவன் தாடையை அழுத்தமாகப் பிடித்து நிமிர்த்தினாள்.
“இன்று ஒரு மார்க்கமாய் தான் இருக்கிறாய் போல…” என்றுவிட்டு கேள்வியாய் புருவத்தை உயர்த்தினான்.
“ஆங்… அப்படியா…?” என்றாள் அவளும் விளையாட்டாய்.
“அப்படித்தான்…” என்றவனின் இதழ் தன் இணையுடன்  சேர்ந்தது.
அனைவரும் அவரவர் வேலைகளுக்கு கிளம்ப அனு முகம் தனிப் பொலிவில் மின்னியது. அதை பார்த்த கயலோ என்ன கிரீம் யூஸ் செய்கிறாய் பெயர் சொல்லு என்று திணறடித்துவிட்டாள்.
போதாததற்கு காலேஜில் வர்ஷினி வேறு கலாய்த்து தள்ளி விட்டாள். ஏன்டா வெளியே வந்தோம் என்று நொந்து கொள்வதை தவிர அனுவால் ஒன்றும் செய்ய முடியவில்லை.