பகுதி – 7
அனுவின் விழிகள் அவன் அறியாமல் ஆதியை படம் பிடித்துக் கொண்டிருந்தன. இவர் ஏன் என் மேல் இவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்கிறார்? நான் அவர் மனைவி என்பதனாலா இல்லை அவருக்கு என்னை பிடிக்க ஆரம்பித்து விட்டதா? சிறிது நாட்கள் கழித்து என்னை பிடிக்கவில்லை என்று கூறினால் என்ன செய்வது? இவருக்கு சற்றும் பொருத்தமில்லாதவள் நான். அப்படி இருக்க இவர் என்னை காதலுடன் ஏற்றுக்கொள்வரா அல்லது தாலி கட்டிய கடமைக்காக என்னை சகித்துக்கொள்வரா? அப்படி நடந்தால் என்ன செய்வது? என்னுடன் சேர்த்து அவர் வாழ்வும் அல்லவா பாழாகி விடும், என்று தீவிர யோசனையில் இருந்தவள் ஆதி தன்னையே உற்று நோக்குவதை கவனிக்கத் தவறினாள்.
“ஓய்…என்ன யோசனையெல்லாம் பலமா இருக்கு?” என்றான் அவள் தோலை உலுக்கி.
அவளோ முறுவலித்துவிட்டு ஒன்றும் இல்லை என தலை ஆட்டினாள். அதை நம்பாமல் அவள் விரல்களை தன் விரல் நெடுகில் அணைத்தவன், “நம்ம வாழ்க்கை எப்படி இருக்க போகுதுன்னு யோசிக்கிறியா?” என்று அவள் கண்களை பார்த்து கேட்கவும், திடுக்கிட்டு அவனை ஏறிட்டாள்.
“எப்படி கண்டுபிடிச்சிங்க?” என்று வந்து விழுந்தது அவளது ஆவல்.
சிரிப்பை மட்டுமே பதிலாய் தந்தவன் அவள் கேள்வியை தவிர்த்து முன்னேறி அவளை நெருங்கி அமர்ந்து எதிர் கேள்வி எழுப்பினான், “என்ன பயம் உனக்கு? என்னை பார்த்தா ஏன் அப்படியே வேறு எங்கோ உலகத்திற்கு சென்றுவிடுகிறாய்?”
அவன் நெருக்கத்தில் உடல் சிலிர்த்தவள் தன் விழியை கீழ்புறம் நோக்க, அவள் மடியில் இருந்த அவர்களின் இணைந்த கரங்களை தீவிரமாக நோட்டமிட்டபடி தன் சிவந்த கன்னங்களை மறைத்தாள்.
“வெட்கப்படுகிற உன் முகத்தை எனக்கு கொஞ்சம் காண்பி.” என்று அவன் குனிய அதிர்ந்தவள், “என்ன பண்றிங்க? நம்ப கோவில்ல இருக்கோம்.” என்று பதறி தன் தலையை நிமிர்த்தி படபடப்பாக சுற்று புறத்தை ஆராய்ந்தாள்.
அவளின் திடீர் படபடப்பு அவனை சிந்திக்கத் தூண்டியது, நாம் எதுவும் செய்யவில்லையே பின்னர் ஏன் இவள் இப்படி பயப்படுகிறாள் என்று எண்ணியவனுக்கு பொறி தட்ட குறும்பாய் அவளைப் பார்த்துக் கண் சிமிட்டினான், “நீங்க என்ன நினைத்தீர்கள் மேடம்?” 
பீட்ரூட் நிறத்தை அவள் சருமம் தத்தெடுக்க வெட்கத்தில் சிவந்த தன் முகத்தை அவன் தோளில் புதைத்துக் கொண்டாள் அனு. காதல் துளிர் விடும் நிலையில் இந்த ஜோடி இருக்க அக்கரையில் வேறு விதமாய் இருந்தது.
“உள்ளே போகலாம் வா.” என்று கயலை அழைத்த படி கதிரை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்து விட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான் முரளி. கயல் தன் அக்காவிற்கு எல்லாம் தெரியும் என்று கூறிய பின்பு, தான் என்ன செய்வது என புரியாமல் நின்றவன், ஆதியிடம் இதை பற்றி தெளிவாக பேசிக் கொள்ளலாம் என்றெண்ணினான்.
“இப்போது இதைப் பற்றி அக்காவிடம் கேட்காதிங்க. அவள் இப்போழுது தான் வாழ்க்கையை துவங்க போகிறாள். என் விஷயத்தால் அவள் கவலை படக்கூடாது.” என்று முரளியின் எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தாள் கயல்.
“இதில் கவலை படுவதற்கு என்ன இருக்கிறது? ஏற்கனவே அனுவிற்கு தெரிந்த விஷயம் தானே?” என்று கயல் கூறிய காரணத்தை சந்தேகித்து கேட்டான் முரளி.
“ஆங்…” என ஒரு நொடி திகைத்தவளை சந்தேகப் பார்வையோடு முரளி நோக்குவதை உணர்ந்த கதிர் தன் அமைதியை கலைத்து, “அவர்கள் எங்களை பற்றி கயல் படித்து முடிக்கும் வரை யாருக்கும் தெரியக்கூடாது என நினைக்கிறார்கள். அப்புறம் நாங்க பார்த்துக்க கூடாதுனு சொல்லி இருக்காங்க. உங்களுக்கு தெரியாததா ப்ரோ, இப்ப தான் ரொம்ப நாள் கழித்து இவளை பார்க்கிறேன். அதான்…” என்று அசடு வழிந்தான்.
அதை நம்பிய முரளி கயலை தன்னுடன் உள்ளே அழைத்து சென்றான். ஏதோ சிந்தனையில் இருந்த முரளி கண்ணில் படவில்லை கதிர், கயல் கையில் திணித்த சிறிய பையை. அவளும் சாமர்த்தியமாக அதை மறைத்து விட்டாள்.
முரளி வருவதை தொலைவிலிருந்து  கவனித்த அனு, தன் முகத்தை அவன் தோளிலிருந்து பிரிக்க, அப்பிரிவு உவகை தராததால் சிணுங்கினான் ஆதி. அவள் கண்ணால் முரளியை ஜாடை காட்டிய பிறகே அமைதியானான்.
“தண்ணீர் பாட்டில் வாங்கி வர இவ்வளவு நேரமா?” என்று வெடுக்கென்று பாட்டிலை பிடுங்கி முரளியை சினங்கொண்டான் ஆதி.
“ஒரு ஐந்து நிமிடம் தாமதம் ஆயிடுச்சி, அதுக்கு இவ்ளோ ஸீன். நீ நடத்து டா…” என்றவனை சற்றும் சட்டை செய்யாமல் அனுவிற்கு பாட்டில் மூடியை திறந்து கொடுத்தான் ஆதி.
அவள் குடித்து விட்டு அவனிடம் நீட்ட கயல் பக்கம் திரும்பியவள் “யாருடி வந்தா? உள்ள கூட்டிட்டு வர வேண்டியது தானே?”
“அது அவளுக்கு நேரம் ஆகுதாம், அதனால் சீக்கிரம் கிளம்பி விட்டாள்.” என்றாள் கயல் முரளியை தன் ஓரக்கண்ணால் பார்த்தபடி.
“இன்றைக்கு நீ மட்டும் தானே லீவு போட்டிருக்கிறாய், உன் தோழியுமா?” என்று சந்தேகித்து ஆதி கயலை குறுக்கிட்டான்.
“ஆங்…” என்று சற்று விழித்தவள் ஆமாம் என்று தலை ஆட்டினாள் அனுவை பார்த்த படி.
ஆதியின் கேள்வியில் சற்று நிம்மதி அடைந்தான் முரளி.
“சரி ரிஜிஸ்டர் ஆஃபீஸ்க்கு போகலாமா? நேரமாகுது சாப்பிட்டு விட்டு கிளம்பலாம்.” என்றபடி சாரதா அவர்களை நெருங்கி வந்து அவர்கள் குழுவை கலைத்தார்.
அனைவரும் அதை ஒப்புக் கொண்டு தங்களது சிற்றுண்டியை முடித்து, அவர்கள் திருமணத்தை பதிவிட்டு எல்லாம் முடிய மாலை ஆகிவிட்டது. மாலை அசதியுடன் வீடு வந்தவர்கள் சற்று இளைப்பாரி அடுத்த சடங்கிற்கு தயாராக கயல் தான் வைத்திருந்த பையை வார்ட்ரோபில் துணிக்கடியில் மறைத்து வைத்துவிட்டாள்.
“அண்ணி சூப்பரா இருக்கீங்க. அண்ணா அப்டியே பிளாட் ஆகப் போறாரு.” என சிலாகித்து கூறியபடி ஆனந்தி அனுவின் தலையில் பூ சூட்டிவிட்டாள்.
“ஏன் என்னை மூச்சிக்கு முன்னூறு தடவ அண்ணினு கூப்பிட்ரிங்க அக்கா. எப்போதும் போல அனுன்னு கூப்பிடுங்க. நான் உங்களை விட வயதில் குறைந்தவள் தான்.” 
“அதெல்லாம் முடியாது. எனக்கு ஆதி அண்ணாவும் முரளி போல தான், அவுங்க வைஃப் நீங்க சோ நான் அண்ணினு தான் கூப்பிடுவேன்.” என்று தன் கூற்றில் பிடிவாதமாக நின்றாள் ஆனந்தி.
“என்ன தயாராகிட்டியா புது பொண்ணு.” என்றபடியே பால் சொம்போடு உள்ளே வந்தார் சாரதா.
ம்… என்று தலை ஆட்டிவிட்டு தலை கவிழ்ந்து கொண்டாள் அனு.
“ஆனந்தி, முரளி உனக்காக வெளியில் நிற்கிறான். நீ அவனோடு வீட்டிற்கு போ. நானும் உன் அப்பாவும் நாளை வருகிறோம்.” என்று ஆனந்தியை சாரதா விரட்ட,
“நீங்க எதற்கு விரட்டுகிறீர்கள் என்று எனக்கு தெரியுமே!” என்று ஆனந்தி பழிப்பு காண்பித்துவிட்டு ஓடி விட அனு தான் சந்தோசம், படபடப்பு என ஒருசேர கையை பிசைந்தாள்.
“எதுவும் பயப்படத் தேவையில்லை அனுமா. ஆதி ரொம்ப நல்ல பையன், உன்னை நன்றாக பார்த்துக் கொள்வான். நீ இவ்வளவு நாள் சுமந்த பாரத்திற்கு விடிவு காலம் வந்துவிட்டது என நினைத்துக் கொள். அப்புறம் எதுவாக இருந்தாலும் அவனிடம் தயங்காமல் சொல்லு, இனி உன் வாழ்க்கை அவனுடன் தான். உனக்கு திருமணம் ஏற்பாடு செய்திருந்தார்கள் என முரளி சொல்லி நேற்று தான் எனக்கு தெரியும். ஏன் நீ என்னிடம் முன்னரே சொல்லவில்லை? எனக்கு தெரிந்திருந்தால் நானே தடுத்திருப்பேன். ஆனால் அதுவும் நல்லது தான், இல்லையென்றால் எவ்வாறு நீ ஆதியை சந்தித்திருப்பாய்!” என்று உவகை தழும்ப முடித்தார்.
“எனக்கே முந்தின நாள் தான் தெரியும் அம்மா. நானும் திருமணம் வேண்டாம் என்று எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தேன் அப்பா சம்மதிக்கவில்லை. அத்துணை நாட்கள் எனக்கு குடும்பம் ஒரு பாரமாக தெரிந்ததே இல்லை. ஆனால் அவர் அப்படி ஒரு நாற்பது வயது உள்ளவருடன் திருமணம் எனும் சொல்லும் போது வாழ்கையே வெறுத்து விட்டது. இன்னும் தெளிவாய் உண்மையை சொல்லப் போனால் அவர் என்னை… விற்றுவிட்டார்.” என்று கதறி அழ ஆரம்பித்தாள் அனு. சாரதா பதறிக்கொண்டு அவளை அணைத்துக் கொண்டார்.
“ஏன் அவருக்கு என் மேல் பாசமே இல்லை. நான் அவர் பெண் தானே, ஏன் அவர் அப்படி செய்தார்? நான் பாரமாக கூட இருந்தது இல்லை, வீட்டு செலவு எல்லாம் நான் தான் பார்த்துக் கொண்டேன். அவர் இன்னும் பணம் வேண்டும் என்று கேட்டிருந்தால் மேலும் இரண்டு வீடுகளிலோ இல்லை வேறு எங்கோ வேலை செய்து சம்பாதித்து கொடுத்திருப்பேன். அவருக்கு பணம், குடி இது மட்டும் தான் வாழ்க்கை. அதற்காக அவர் எப்படி என் வாழ்வை கெடுக்கலாம்.” என்று விம்மி விம்மி அழுதவளை சமாதனப்படுத்த சற்று அதிகமாகவே சிரமப்பட்டார் சாரதா.
“அழாதடாமா… இப்போது தான் எல்லாம் சரி ஆகிவிட்டதே.” என்றவரின் வார்த்தையை காதில் வாங்காமல், தான் இரண்டு நாட்களாக தேக்கி வைத்திருந்த துக்கத்தை கண்ணீரால் ஒரே நேரத்தில் வெளியேற்ற முயன்றாள் அனு.
“என் அம்மா இருந்திருந்தால் இப்படி நடக்க விட்டு இருக்க மாட்டார்கள். அவர் மட்டும் வர வில்லை என்றால் நான் இந்நேரம்…” என்று அனு வாயை பொற்றிக்கொள்ள தீடிரென்று யாரோ அவளை இழுத்து தன்னுடன் அணைத்ததை உணர்ந்த அனு நிமிர்த்து பார்க்க அங்கு ஆதி தான் அவளை தன்னுள் புதைத்திருந்தான். இவர்களுக்கு தனிமை கொடுக்கும் விதமாக சாரதா இவ்வளவு நேரம் பார்வையாளராக இருந்த கயலை கூட்டிக்கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்தார்.
“அவருக்கு ஏன் என்னை பிடிக்கவில்லை? கயலை அவருக்கு ரொம்ப பிடிக்கும் தெரியுமா? சிறு வயதிலிருந்தே என்னை கண்டால் அவர் கோபமாகி விடுவார், ஏன்?” என்று சிறு பிள்ளையாய் கேட்ட அனுவிற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் காற்று புகாத அளவுக்கு அவளை அணைத்தான் ஆதி.
தனக்கு பொருத்தமில்லாத திருமணத்தை ஏற்பாடு செய்தார் என்பதைவிட அவர் தன்னை ஏன் நேசிக்கவில்லை என்பதே அவளை அதிகம் பாதித்திருக்கிறது, என்பதை உணர்ந்தவன் அவளை அள்ளிக்கொண்டு தன் அறைக்கு சென்றான். இங்கு இருப்பதை விட அங்கு தனிமையில் இருப்பது நல்லது என்று தோன்றியது அவனுக்கு. மேலும் மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்க கூடாது என்பதிலும் உறுதியாய் இருந்தான்.
&*&*&