“அன்பு, ஒரு சின்ன ப்ராப்ளம், கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?”, மறுமுனையில் அறிவழகி.
” ஹ்ஹம். அறிவழகி? சொல்லு பரவால்ல”, தூங்கி எழுந்ததில் அன்பரசனுக்கு தொண்டை கரகரப்பாக இருந்தது. அன்பு என்ற அவளது தயக்கமான, சங்கடமான விளிப்பிலேயே முழு சுதாரிப்புக்கு வந்தவன் கேட்க..
“மாமா, மாமிக்கு பாஸ்போர்ட் ஏற்பாடு பண்ணனும். வீட்டுக்கு வந்து சர்விஸ் பண்றவங்க யாராவது இருந்தா அவங்க கான்டாக்ட் நம்பர் கொடுக்க முடியுமா?”
“ஹ்ம். ஆமா. “, பெருமூச்சோடு சொன்னாள். அந்த மனிதன் மாமா கூடவே இருந்துகொண்டு சுதர்ஷனை திட்டிக் கொண்டே இருந்தார், ‘புள்ளை கையால கொள்ளி வாங்க குடுத்து வச்சிருக்கணும், அண்ணிக்கு அந்த கொடுப்பினை இருக்கோ இல்லையோ’, என்று பேசியது அபத்தமாக இருந்தது. பல் கடித்து சகித்தாள்.
“ஓகே வச்சிடறே..”, என்று அன்பரசன் கூற, நடப்புக்கு வந்து, . அவனது பேச்சு இடையிட்டள்.
“வந்து… தொந்தரவு பண்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க, நான் இங்க இருந்தேன்னா நானே பாத்துப்பேன், அட்லீஸ்ட் பரோடா-னா, தெரிஞ்சவங்க இருக்காங்க. சொன்னா பண்ணிடுவாங்க. சுதா, ஐ மீன் சுதர்ஷன் பிசினெஸ் டூர்-ல இருக்காரு. ஃப்ரீயா இருந்தா அங்கிருந்தே ஏற்பாடு பண்ணிடுவார். இப்போ… “, சங்கடமாக பேசினாள்.
சுதர்ஷன்.. கணவனாக இருக்கும், என்று அன்பு யோசித்தபடி. பேச்சை மாற்றுவதற்காக, “ம்ச். லீவ் இட், எப்போ உனக்கு பிளைட்?”, என்று கேட்டான்.
“நாளைக்கு விடிகாலை மூணு மணி பிளைட், நைட் கிளம்பிடுவோம்”.
“ஓகே. டேக் கேர்.”, என்று வைத்து விட்டான்.
பாவம், இன்று நள்ளிரவு விமான நிலையம் சென்றால்தான், அறிவழகிக்கு அதிகாலை மூன்று மணி விமானத்திற்கு சரியாக இருக்கும், இந்த பெரியவர்கள் அதற்குள் மருத்துவ மனையில் இருந்து வீடு திரும்பி விடுவார்களா? அக்ஷியையும் வைத்துக் கொண்டு அவளுக்கு சற்று சிரமமாகத்தான் இருக்கும், என்று நினைத்தபடி, காலைக்கடன்களை முடிக்கச் சென்றான்.
குளிக்கும்போது திடீரென, ‘சுதாவுக்காக எதுவேணா செய்யலாம்’ அன்று திருப்பதியில் அறிவழகி சொன்னாளல்லவா? மிகப் பிடித்தம் போல. ஹ்ம்ம். காதல் திருமணம், உற்றார் பெற்றோரை எதிர்த்து, நாடு விட்டு நாடு செல்லுமளவுக்கு, காதல். பிடித்தம் இருக்கத்தான் இருக்கும்., என்று நினைத்துக் கொண்டான்.
உடை மாற்றும்போது, அலைபேசி அழைக்க, பார்த்தான். அவளேதான். ‘திங்க் ஆப் தி டெவில்’ வாய்க்குள் முணுமுணுத்து, தொடர்பை ஏற்படுத்தியதும், “ஆங். நான்தான், ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். இந்த போனை நான் கிளம்பும்போது மாமாகிட்ட கொடுத்துட்டு போறேன், உங்க நம்பரையும் கொடுத்திருக்கேன், ஏதாவது தேவைன்னா கால் பண்ணுவாங்க.”, என்றாள்.
“ஓகே, நோ ப்ராப்ளம் “
“தாங்க்ஸ், வச்சிடறேன்”,
“பை” , என்று விட்டு தொடர்பை துண்டித்தான்.
சாப்பிட என்ன இருக்கிறது என்று அடுக்களை செல்ல, அங்கே உணவு மேஜையில் ஹாட்பாக்ஸ்-ல் சூடாக அனைத்து உணவும் இருந்தது.
ஒரு கணம் சுசித்ராவை நினைத்து, முறுவல் வந்தது, அவன் சூடாகத்தான் சாப்பிடுவான் என்று தெரிந்து அனைத்தையும் தயாராக வைத்துள்ளாள். இன்று மட்டுமல்ல, என்றுமே அப்படித்தான். கோவையில் இருந்த வரை இவள்தான் முகம் பார்த்து உணவிடுவாள்.
அமர்ந்து நிதானமாக சாப்பிட்டு முடித்தான். சற்று நேரத்தில், அவனது அலுவலகம் விரைந்து அன்றைய தின வேலைகளை தொடங்கினான். கூடவே, அந்த கடவுசீட்டு முகவரின் [passport agent] எண்ணை அறிவழகிக்கு அனுப்பி வைத்தான். உடன் அந்த முகவரை, அறிவழகியை தொடர்பு கொள்ள சொன்னான்.
மாலை அலுவலகத்தில் இருந்து புறப்படும் நேரம், அறிவழகிக்கு அழைத்தான். அங்கே எடுத்ததும், “ஹலோ, ஏஜென்சி-கிட்ட பேச சொல்லி இருந்தேன். பேசினாங்களா? “
“யா. பேசினாங்க, ஐ டி, அட்ரஸ் ப்ரூப் காபி கேட்டாங்க. அனுப்பிட்டேன். தட்கல்-ல அப்ளை பண்றாங்க. ஆன்லைன் ப்ரொசீஜர் முடிச்சுட்டு அவங்களே வந்து வைஸாக் பாஸ்போர்ட் ஆபிஸ் கூட்டிட்டு போறேன் ன்னு சொல்லிட்டாங்க.”
“அக்ஷி, கால் ஃபார் யூ”, அறிவழகி சத்தமாக கூப்பிடுவது கேட்டது.
“ஐயம் பேக்கிங் பியூட்டி, கேன் யூ கம் ஹியர் ப்ளீஸ்?”, தூரத்தில் மழலையாய் மிழற்றி பதில் வந்தது. கேட்ட அன்பரசனின் முகத்தில் புன்னகை.
“தோ அவ கிட்ட தர்றேன்”, என்று இவனிடம் சொன்ன சில நொடி இடைவெளியில் போன் கைமாறியது தெரிந்ததும்,
“நாக். நாக் [knock knock] “, என்றான்.
“ஹ ஹ லவ்கிங்… “, அக்ஷி சிரித்தாள்.
“ரொம்ப பிசியோ? என்ன பண்ணிட்டு இருக்க?”
“என்னோட திங்ஸ், டெடிபியர்-ஐ பாக் பண்ணினேன்.”
“ஓகே, கேன்டீஸ் எடுத்துகோங்க, பசிச்சா சாப்பிடறதுக்கு. அப்பறம், காட்டன் மறக்காம எடுத்துக்கனும்”, காற்று அழுத்தம் மாறுபடுவதால், விமானத்தில் செல்லும்போது காதில் வலி ஏற்படும், காதில் பஞ்சு வைத்து அடைத்துக் கொண்டால், வலி மட்டுப்படும். அக்ஷி-க்கு பிரயாணிக்கும்போது வலி இருந்ததாகவும், விமான பணிப்பெண்ணிடம் பஞ்சு கேட்டு அறிவழகி வைத்து விட்டதாகவும் திருப்பதியில் இவனிடம் பேசும்போது கூறி இருந்தாள்.
“யா.. என் டாடியும் இங்க வரும்போது இதுதான் சொன்னாங்க, ஆனா நான் மறந்துட்டேன்” என்று சிரித்தாள்.
கூட சிரித்து, “மிஸ் யூ பேபி”, என்றதும்..
“ஐ’ல் மிஸ் யூ டூ”, அக்ஷி.
“பை”
“பை”, அக்ஷிக்கு விடைகொடுத்து மனதுக்குள், ‘ஒன்ஸ் ஃபார் ஆல், அறிவழகி குட் பை’, சொல்லி தொடர்பை துண்டித்தான். மனதிலிருந்தும் பழைய வடுக்கள், காயங்கள் போக வேண்டுமென வேண்டினான்.
பின் கணினியோடு ஐக்கியமாகிவிட, நேரம் போனதே தெரியாமல், அவனது புது தயாரிப்பின் டிசைனில் மூழ்கி இருந்தான். இரவு பத்து மணிவாக்கில் அலைபேசியில் அழைப்பு வர, பேசியது டிராவல் ஏஜென்சி ஸ்டீபன் , “ஹலோ சொல்லுங்க.”, என்க,
“சார், நீங்க சொன்ன உடனே அந்த மேடம் கிட்ட பேசினேன். இம்மீடியட்டா டீடெயில்ஸ் அனுப்பிட்டாங்க, இப்போ கொஞ்ச நேரம் முன்ன மறுபடியும் பேசினாங்க, அப்ளை பண்ற ரெண்டு பேசும் வயசானவங்க, நேர்ல வந்து கூடவே இருந்து ஃபார்மாலிடிஸ் முடிச்சு கொடுங்கன்னு சொல்றாங்க, நார்மலா அவங்கதான் நம்ம ஆபிஸ் வருவாங்க, ஆனா உங்க சிபாரிசுங்கிறதால சரின்னு சொல்லிட்டோம்”, என்று பயண ஏற்பாட்டினைக் கவனிக்கும் ஸ்டீபன், இவனுக்கு மிகவும் பழக்கமானவன் தான், கூறினான்.
“ஒரு நாள்தானே? அந்த பிரான்ச் ஆளுங்களை கூட்டிப்போக சொல்லுங்க. முடிஞ்சா நீங்களே போயிட்டு வந்துடுங்க, எல்லாத்துக்கும் சேர்த்து சார்ஜ் பண்ணுங்க. பட் உடனே ப்ராசஸ் பண்ணிடுங்க”
“எஸ் சார், இன்னொரு விஷயம்.. ரெண்டு பேர் அப்ளிகேஷன்க்கும் ரெபெரென்ஸ் உங்க பேரு போட சொன்னாங்க, எமர்ஜென்சி காண்டாக்ட் நம்பரா மேடமோடது கொடுத்திருக்காங்க”
புருவம் முடிச்சிட கேள்வியாய் அவனிடம், “சரி”, என்று இழுக்க…
“சார். அவங்க பேரு ஐ டி -ல அறிவழகி அன்பரசன்னு போட்டிருக்கு சார். உங்க வொய்ப்-ங்களா?”, வெகு தயக்கமாக கேள்வி வர…
அன்பரசன் பல்லைக் கடித்தான், “அது உங்களுக்கு தேவையில்லாததுன்னு நினைக்கறேன்” , சாதாரணமாகத்தான் சொன்னான், ஆனால் அதில் கண்டிப்பு இருந்தது.
“சார். சார். தப்பா எடுத்துக்காதீங்க, உங்க பாஸ்போர்ட்ல வொய்ப் பேரு அறிவழகின்னு இருக்குன்னு தெரியும்,அதனாலதான் சார் கேட்டேன். ரெகுலர் கஸ்டமருக்கு நம்ம சார்ஜஸ் கம்மியா இருக்கும்…..”, நல்ல எண்ணத்தில் தான் இந்த கேள்வி என்பதை உணர்த்தினான், ஸ்டிபன்.
ஆமாம், அன்பரசன் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்கும்போது, அவள் இவனின் மனைவிதானே? அப்படித்தானே எழுத முடியும்? இன்றுவரை பாஸ்போர்டில spouse என்று அறிவழகிதான் இருக்கிறாள். அப்போது ஆரம்பித்த வங்கி கணக்குகளில் கூட அவள்தான் நாமினியாக தொடர்கிறாள். ஆனால், இவள் ஏன் பாஸ்போர்ட்டில் என் பெயரை தரவேண்டும்? என்று குழம்பினான்.
“ஹும்.. யெஸ், நம்ம கம்பெனி மாதிரியே சார்ஜ் பண்ணுங்க.”
“நிச்சயமா சார்,”, என்று வைத்து விட்டான்.
மறுநாள் வழமையாய் விடிய, அப்பாவிடம் சென்று அறிவழகியைப் பற்றி தெரிவிக்க.. அவரது முகம் யோசனையாய் இருந்தது. ஆனாலும் மகனுடன் இரண்டொரு வார்த்தை பேசினார்.
“அலுவலகத்திற்கு செல்கிறேன்,”, என்று அன்பரசன் விடைபெற…,
“ப்ரவீணா மசக்கை சரியா போச்சுன்னா, அம்மாவை இங்க வர சொல்லலாம்னு இருக்கேன் அன்பு”, என்று விநாயகம் கூற, அவரைக் கேள்வியாய் நோக்கினான்.
“அறிவு பத்தின விஷயம் சொல்லி, அதுக்கப்பறம் ஆகவேண்டியதைப் பாக்கணுமில்ல.”, என்று கூறினார்.
அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிய, முகம் கருமை படர்ந்தது. வெறுமே தலையசைத்துவிட்டு வேகமாக அவ்விடத்தை விட்டு நீங்கினான்.
இதற்கிடையே, அன்பரசன் வேலை செய்த சுவிஸ் நிறுவனமும், அமெரிக்க கலிஃபோர்னியா நிறுவனம் ஒன்றும் கூட்டு சேர்வதாக முடிவு செய்திருப்பதாகவும், இரு வருடங்களுக்கு, இயந்திர பழுது முதலான சேவையை [சர்வீஸ்] மட்டும், சான் கேபிரியல்-லில் அவனால் பார்த்துக் கொள்ள முடியுமா என்று இவனிடம் அந்த நிறுவனத்தினர் கேட்டனர். ஏற்கனவே சிங்கப்பூரில் இதேபோன்றொரு ஒப்பந்தம் போட்டு வெற்றிகரமாக முடித்ததால் மீண்டும் இவனுக்கே வாய்ப்பு வந்தது.
நல்ல பயிற்சி பெற்ற மூன்று பேரை, இரு வருடத்திற்கு அனுப்பி வைப்பதாக ஒப்பந்தம் பேச, கணிசமான லாபம் இருந்ததால் சரியென ஒப்புக் கொண்டான். பேச்சுவார்த்தைகள் அனைத்தும் வீடியோ கான்ஃபிரென்சிங்-கில் நடக்க, ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு மட்டும் அங்கே போகவேண்டும், என்று இருந்தது.
அன்பரசன் இங்கே உள்ள வேலைகளை பகுத்து கொடுப்பது, தேவைப்படும் ஆட்களுக்கு இயந்திர செயல்பாடுகள் குறித்த சிறப்புப் பயிற்சி கொடுப்பது, என அதில் முனைப்பாக, இன்னமும் இரு வாரங்கள் ஓடியது.
பின் அவனது வேலை நிமித்த பயணங்கள் தொடர, கிட்டத்தட்ட ஒரு மாதம் போனது. மாமா, மாமியின் கடவுசீட்டுகள் வந்து விட்டதாக ஸ்டீபன் மூலம் தெரிந்து கொண்டான். அந்த மாமாவும், அதான் அக்ஷி தாத்தா, அவரும் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு போகும் அன்றும், அன்பரசனுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். பின் கடவுசீட்டுகள் கிடைக்கப் பெற்றது எனவும் தகவலளித்து நன்றி சொன்னார்.
அன்பரசனின் அமெரிக்க பயனத்தேதி மட்டும் முடிவாகாமல் இருக்க, அதைப்பற்றி விசாரிக்க அலுவலகம் வந்திருந்த ஸ்டீபன், “உங்களுக்கு தெரிஞ்ச அந்த மாமா, மாமி ரெண்டு பேரும் அடுத்த வாரம் எல்.ஏ போறாங்க சார். டிக்கெட்ஸ் நாங்கதான் ரெடி பண்ணினோம்.”, என்று பேச்சு வாக்கில் கூறினான்.
“ம்ம்.., “
“அவங்க மருமகளுக்கு டெலிவரி டைம், அதான் போறாங்க போல “
“ம்ம்.. “அசுவாரஸ்யமாக சொன்னவன், சட்டென அவனது பேச்சை உள்வாங்கி, “வாட்?”,என்றான்.
“சார்… என்ன?”, அன்பரசன் என்ன கேட்கிறான் என்பது புரியாது ஏஜென்ட் கேட்டான்.
சட்டென முகபாவத்தை இலகுவாக்கி, “இல்ல .. இப்போ என்னவோ சொன்னீங்களே? ம்ம்ம்.. அவங்க டாட்டர் இன் லாக்கு டெலிவரின்னா?”, என்று கேட்டான்.
“ஆமா சார், ரெண்டு வாரத்துல-ன்னு சொன்னாங்க”, என்று அவர் சொன்னதும்,
மனதில் குழப்பங்கள் தோன்றினாலும், அதை முகத்தில் காண்பிக்காமல், ஸ்டீபனுக்கு, “ஓகே முடிஞ்சா என்னோட டிக்கெட்ஸ்-ம் அதே தேதில போட்டுடுங்க”, என்று கூறினான்.
அன்பரசன், அந்த வைசாக் மாமாவிடம் பேசி சில விஷயங்களை தெளிவு படுத்திக் கொள்ள நினைத்தான். மணி பார்த்தான், இரவு பத்தரை. இப்போது பேசவேண்டாம் நாளை பேசுவோம் என முடிவெடுத்து அமைதியாக தூங்கினான்.
மறுநாள் காலை ஒன்பது மணி சுமாருக்கு, அறிவழகியின் எண்ணை அழைத்தான், அது தானே இப்போது அவரது எண்?மூன்றாவது ரிங்கில் எடுக்கப்பட, “ஹல்லோ யாரு?” கேட்டது மாமா.