ஸ்ரீக்குட்டியோடு ஸ்ருதி தன் அறைக்குள் நுழைய அவள் தோழிகள் ஸ்ரீயை சூழ்ந்து கொண்டனர்.. அவனுக்கு வெந்நீர் வாங்கிவந்து உடம்பை துடைத்துவிட்டவள் வேறு உடையை மாற்றிவிட தோழிகள் அவளை ஆச்சர்யத்துடன் பார்த்திருந்தனர்..
“ஏய் எப்படிடி உன் குழந்தை மாதிரியே பார்த்துக்குற.. உன்ன பார்த்தா அப்படியே ஸ்ரீயோட அம்மா மாதிரி இருக்கு..”
அவள் அமைதியாக இருக்கவும் இன்னும் ஆச்சர்யம்,” ஏய் ஸ்ருதி நீயா இது..? என்னடி இவ்வளவு அமைதி.. உங்க ஹிட்லர் மாமா என்னமும் திட்டிட்டாரா.. முகம் வேற அழுத மாதிரி இருக்கு.. என்னாச்சுடி..?”
அப்போதும் பேசாமல் இருக்க மேகலா அவளை உலுக்க ஆரம்பித்தாள்..” ஏய் உனக்கு ஏதாவது பேய்கீய் பிடிச்சிருக்கா.. இவ்வளவு அமைதியா இருக்க..?” இப்போதுதான் தன்னை சுற்றி உள்ள சூழ்நிலையை உணர்ந்தவள் இவ்வளவு நேரம் சூழ்ந்திருந்த கவலையை வெளிக்காட்டிக்காமல் முகத்தை மாற்றிக் கொண்டு,
“ஆமா அவர் ஏண்டி என்னை திட்றாரு.. அப்படி திட்டினாலும் நான் சும்மா விட்டுருவனா.??”.
“அதானே ஸ்ருதி யாரு..கோவிலுக்கு மட்டும் போறேன்னு சொன்னவ இப்பதான் வர்ற வேற என்ன வாங்கின..?” ஸ்ருதியின் உடையை எடுத்துக் பார்க்க பேச்சு அப்படியே உடைப்பக்கம் போய் அவர்கள் சென்ற இடங்களை கேட்க ஸ்ருதியும் அவர்களோடு பேச்சில் கலந்து கொண்டாள்..
இரவு எட்டிருக்கும் அஸ்வின் ஸ்ருதிக்கு போன் செய்து,” எங்க இருக்க ஸ்ருதி.. குட்டி ரொம்ப அழுதானா..??”
அவள் இடத்தை சொல்ல அவர்கள் எப்போதும் சாப்பிடும் கையேந்தி பவன்..
“ம்ம் அங்கதான் வந்துட்டு இருக்கேன்.. இன்னும் பைமினிட்ஸ்ல வந்திருவேன்..”
அவன் அங்கு செல்லும் போது காலையில் மஞ்சள் உடையில் இருந்தவர்கள் இப்போது பிங்க் நிறத்தில் அவள் மட்டும் இல்லாமல் அவள் தோழிகளும் ஸ்ரீயும் அதே நிறத்தில்தான் உடை..!!
காரில் அமர்ந்தபடியே ஸ்ருதியையும் ஸ்ரீயையும் ரசித்தவன் ஸ்ருதியின் முகம் சற்று தெளிவாக இருக்கவும் அவளைப்பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருந்தவனுக்கு இப்போதுதான் நிம்மதி.. பிறந்தநாளும் அதுவும் அவளை அழவைத்துவிட்டோமோ என்று கவலையில் வந்தவன் ஸ்ருதியின் கலகல சிரிப்பில் தன்னை மறந்திருந்தான்.. அதைவிட ஸ்ரீயை ஒருவர் மாற்றி ஒருவர் கொஞ்சியபடி தூக்கி வைத்துக் கொள்ள அவனும் அவர்களுக்கு செல்லப்பிள்ளையாய் மாறியிருந்தான்..
அவர்கள் என்ன சொல்லித்தருகிறார்களோ அதை அப்படியே செய்து கண்ணடித்தால் கண்ணடிப்பது, முத்தமிட்டால் முத்தமிடுவது ,அடித்தால் அடிப்பது என செய்து கொண்டிருக்க பார்த்திருந்த அஸ்வினுக்கு சிரிப்பு.. இப்போதுள்ள பெண்கள் பார்க்க விளையாட்டு தனமாய் இருந்தாலும் பாசத்திலும் குறைவில்லாமல் இருந்தார்கள்.. தன் மகனின் சிரிப்பை தன்னை மறந்து பார்த்திருந்தான்..
மாமாவின் கார் அப்போதே வந்ததை கவனித்தவள் அவன் இன்னும் இறங்காமல் இருக்கவும் மாலை நடந்ததை மறக்கவில்லையோ என நினைத்து தோழிகளிடம் சொல்லிக் கொண்டு காரை நோக்கி வந்து கார் கண்ணாடியை தட்ட, மகனிடமிருந்து பார்வையை திருப்பியவன் காரை விட்டு இறங்கினான்..
இருவரும் ஒருவரை ஒருவர் ஆராய்ச்சி பார்வை பார்க்க இருவரின் முகமும் தெளிவாக இருந்ததால் இருவருக்கும் தன்னை அறியாமல் புன்னகை பூத்திருந்தது..பிங்க் நிற சுடிதாரில் ஒரு ரோஜாவை போலிருந்தவள்,
“வாங்க மாமா என்ன இங்கயே நிக்க போறிங்களா..??”
அவளோடு கூடவே நடந்தவனை ஸ்ருதியின் தோழிகள் அனைவரும் வரவேற்கும் விதமாக “வாங்கண்ணா..” ஸ்ரீக்குட்டி தந்தையை பார்க்கவும் அவனிடம் தாவி அணைத்துக் கொண்டான்..
மேகி “டேய் குட்டிப் பையா இவ்வளவு நேரம் எங்ககிட்ட தான இருந்த இப்ப அப்பாவ பார்க்கவும் எங்கள மறந்திட்டியா வா வா..” கையை நீட்ட மாட்டேன் என அவளுக்கு முதுகை காட்ட மற்றவர்களுக்கு சிரிப்பு தாளவில்லை..
“இங்க ஏம்மா சாப்பிடுறிங்க வாங்க ஏதாவது ஒரு பைஸ்டார் ஹோட்டலுக்கு கூட்டிட்டு போறேன் .”
பவித்ரா “அதெல்லாம் வேண்டாம்ணா.. நாங்க பர்ஸ்ட் இயர்ல இருந்து யாருக்கு பர்த்டேயா இருந்தாலும் இங்கதான் கொண்டாடுறோம்.. இங்க பணம் இருக்கிறவங்க இல்லாதவங்க எல்லாரும் ஒன்னுதான் ஒருத்திக்கிட்ட பணம் இருந்து பைஸ்டார் ஓட்டலுக்கு போயிட்டா மத்தவங்க கடன் வாங்கியாவது கூட்டிட்டு போகனும் அது சரிவராதுண்ணா..”
“நீங்க சாப்பிட்டிங்களா மாமா..??”
“எங்க எனக்கும் டிரீட் வைப்பன்னு பார்த்தா இப்படி கேட்கிற…??”
“ஒரு நிமிசம் இரு..” காரிலிருந்து கேக்கை கொண்டு வந்தவன் அங்கிருந்த ஸ்டூலில் வைக்க தோழிகள் அனைவரும் ஹோ….. வென கூச்சலிட்டு ஆர்பரிக்க ஸ்ருதி கேக்கை வெட்டினாள்.. முதல் துண்டை ஸ்ரீக்குட்டியின் வாயில் சிறிதளவு வைத்துவிட அதன் சுவையில் மயங்கியவன் நாக்கை சப்புக் கொட்டி சாப்பிட்டு ஸ்ருதி யாருக்கு கொடுக்கச் சென்றாலும் இவன் வாய்திறந்தபடிதான் இருந்தான்..
தோழிகள் அனைவரும் அவளுக்கு ஊட்டிவிட அஸ்வினும் அவளுக்கு கேக்கை ஊட்டிவிட்டான்.. அவளும் அனைவருக்கும் ஊட்டிவிட்டு அங்கிருந்தவர்களுக்கு கேக்கை கட்செய்து கொடுத்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டாள்.. அவரவருக்கு தேவையானதை ஆர்டர் செய்ய ஸ்ருதிக்குதான் ஏதோ போல் இருந்தது மாமாவுக்கு இந்த மாதிரி சாப்பாடு பிடிக்கிதோ என்னமோ அவன் முகத்தையே அவ்வப்போது பார்த்திருக்க அவள் அருகில் அமர்ந்திருந்தவனோ அவள் கையை அழுத்தி,
“ஏய் சாப்பாடு நல்லாதான் இருக்கு.. எதுக்கு என் முகத்தையே பார்க்கிற நீ சாப்பிடு..?”
அவன் சாப்பிட்டு கைகழுவ செல்ல” அண்ணா..” பின்னால் ஒரு குரல் திரும்பி பார்க்க சந்தியா நின்றிருந்தாள்..
“என்னமா..?”
சற்று தயங்கியவள்,” நான் ஒன்னு சொல்லனும்.. அவங்க அம்மா அப்பாட்ட சொல்லிருறிங்களா.. ??”
“என்னமா எதாச்சும் வேணுமா சொல்லுங்க நான் வாங்கிட்டு வர்றேன்..??”
“இல்லணா அதுவந்து நானும் ஸ்ருதியும் ஒரே ரூம்மேட்தான்.. இப்ப ஒரு மூனுமாசமா அவளுக்கு அடிக்கடி தலைவலி வருது.. இப்ப ஸ்டடிலீவ்க்கு போயிட்டு வந்ததிலயிருந்து தினமும் தலைவலியால அவதிபடுறா.. ஹாஸ்பிட்டலுக்கு வான்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறா.. அதான் அவங்க அம்மா அப்பாக்கிட்ட நியாபகமா சொல்லிருங்க.. நான் சொன்னேன்னு அவளுக்கு தெரியவேண்டாம்.. தெரிஞ்சா சாமியாடுவா.. மறந்திறாதிங்கண்ணா..” மேகலாவும் பவியும் கைகழுவ வர அஸ்வின் ஸ்ருதியை நோக்கி வந்திருந்தான்..ஸ்ரீக்குட்டியோடு நின்றிருந்தவளை நெருங்க அனைவரும் வந்திருந்தனர்..
அனைவரையும் காரில் ஏற்றியவன் அவர்கள் ஹாஸ்டல் நோக்கி வர அடிக்கடி அவன் பார்வை தன் அருகில் ஸ்ரீயோடு அமர்ந்திருந்த ஸ்ருதியை தொட்டுச் சென்றது.. ஹாஸ்டல் வரவும் அனைவரும் இறங்க ஸ்ருதி ஸ்ரீயை அஸ்வினிடம் கொடுக்க மனமில்லாமல் நின்றிருந்தாள்.. நொடிக்கொரு முத்தம் வைக்க அவனை பிரிய மனதில்லை..
“ஏய் இன்னும் ஒன்வீக்ல வீட்டுக்கு வந்திருவதான அப்புறம் ஏன் மூஞ்சிய இப்படி வைச்சிருக்க தலை ஏதாச்சும் வலிக்கிதா..??”
“மதியம்தான் மாமா வலிச்சிச்சு இப்ப இல்ல..”
“நாளைக்கு காலையில வர்றேன் ஹாஸ்பிட்டலுக்கு போவமா அடிக்கடி உனக்கு தலைவலி ஏன் வருதுன்னு செக்கப் பண்ணிருவோம்..?”
“இல்ல மாமா இப்ப வலிக்கல.. நாளைக்கு நாங்க பிரண்ட்ஸ் எல்லாம் அழகர் கோவிலுக்கு போகலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்.. இன்னும் ஒன்வீக்தான அப்புறமா அங்க வந்தவுடன பார்த்துக்கலாம் ..”
“இந்தாயிருக்க அழகர் கோவில்தான நானே ஒருநாளைக்கு கூட்டிட்டு போறேன் நீ நாளைக்கு ஹாஸ்பிட்டலுக்கு வர்ற..??”
ஸ்ரீயை மறு தோளுக்கு மாற்றியவள் அவன் கையை பிடித்தபடி,” ப்ளிஸ் மாமா இன்னும் ஒன்வீக்ல என்னோட காலேஜே முடிஞ்சிரும்.. அப்புறம் நினைச்சாலும் அப்படியெல்லாம் போக முடியாது.. ப்ளிஸ் ப்ளிஸ்..”
கண்ணைச்சுருக்கி இதழை சுழித்தபடி கெஞ்சியவளின் அழகில் அப்படியே வீழ்ந்தான்.. அவள் உச்சந்தலையில் கைவைத்தவன்” ம்ம் சரி போ ஆனா கண்டிப்பா அங்க வரவும் ஹாஸ்பிட்டலுக்கு வரனும் சரியா..?”
“ஓகே ஓகே தாங்க்ஸ் மாமா..” ஸ்ரீயின் இருகன்னத்திலும் அழுந்த முத்தமிட்டு அவனிடம் கொடுத்தவள்,” இப்ப நீங்க அப்பாவோட போவிங்களாம்.. சித்திமா இன்னும் ஒரு வாரத்தில அங்க வந்திருவனாம் சரியா குட்டி..” இவள் தலையை ஆட்ட குட்டியும் போட்டிக்கு ஆட்டியிருந்தான்..
ஸ்ரீயை வாங்கியபடி தன்பர்சை எடுத்து அதிலிருந்த பணத்தை அவளிடம் கொடுத்து “நாளைக்கு செலவுக்கு வைச்சிக்கோ..??”
அதை வாங்க மறுத்தவள் அவன் பர்சை வாங்கி அதிலேயே பணத்தை வைத்து அவனிடம் கொடுத்து,” வேண்டாம்.. மாமா.. பணம் எதுக்கு..?? எங்க அப்பா நான் போன்பண்ணி ஒருவார்த்தை சொன்னாப் போதும் எவ்வளவு வேணும்னாலும் போடுவாங்க.. இப்பவும் என்னோட அக்கவுண்ட்ல பணம் இருக்கு.. இன்னைக்குக்கூட பர்த்டேன்னு விஷ்பண்ணி மணி டிரான்பர் செஞ்சிருக்காங்க.. அதோட இந்த மாதிரி அடுத்தவங்ககிட்ட பணம் வாங்கினா அம்மாக்கு பிடிக்காது எனக்கும் பிடிக்காது.. பை மாமா..”
ஸ்ரீயை அஸ்வின் கையிலிருந்த படியே எட்டி அவன் கன்னத்தில் முத்தமிட்டு ஹாஸ்டலை நோக்கி ஓடினாள்.. அவள் மேலிருந்து வந்த நறுமணத்தை ஆழ்ந்து சுவாசித்தவன் இவ எப்ப குழந்தையா இருப்பா எப்ப குமரியா மாறுவான்னு கண்டுபிடிக்கவே முடியாது போலவே.. அவள் முத்தம் கொடுத்த கன்னத்திலேயே தன் மகனுக்கு தானும் முத்தமிட்டு காரை நோக்கி நடக்க ஆரம்பித்தான்..
இரண்டு நாட்கள் கழித்து அஸ்வின் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருக்க சந்திரனும் கோகிலாவும் வந்திருந்தார்கள்..” வாங்க மாமா வாங்க அத்தை..”
தன் பேரனை தன் மடியில் கொஞ்சிக் கொண்டிருந்தவர் ,”ஆமா மாப்பிள்ள..”
“சாப்பிடுங்க மாமா..” தன் தாயை டிபன் எடுத்து வைக்கச் சொல்ல,
“வேண்டாம் மாப்பிள்ள உங்க அத்தை உப்பில்லாம ஏதாவது செஞ்சு வைச்சிருப்பா..??” அவன் கோகிலாவை பார்க்க,
“ சுகர் வெவல் கொஞ்சம் அதிகமாயிருச்சு அதான் குறிஞ்சாக்கீரை சூப் வைத்திருக்கேன்.. மாப்பிள்ள..”