கபிலன்,“இத்தனை நாளா நாம பக்கத்து பக்கத்து ஊருலதான் இருந்திருக்கோம்.. ஊரே ஒருத்தன நல்லவன், பொறுமையானவன், பொறுப்பானவன் நேர்மையானவன்னு சொல்லுதே.. அத நினைச்சு சந்தோசப்படாம உன்கிட்ட பொறாமை பட்டு என்ன வேலை பார்த்து வைச்சிருக்கேன் பாரு.. அப்ப நான் எவ்வளவு கேவலமானவன்..???”..
“ச்சீ ச்சீ நீயும் நல்லவன்தான்டா.. நீதான் என்னை அடிச்சன்னு நீ வந்து சொல்லும்போதே அது தெரியலையா..உண்மையை ஒத்துக்கவும் ஒரு நல்ல மனசு வேணும்டா.. விடு இனி அதப்பத்தி பேசவேண்டாம்.. இப்ப எங்க வேலைப் பார்க்கிற..??” அவனை அந்த குற்ற உணர்ச்சியிலிருந்து வெளியே கொண்டுவர வேறு திசையில் பேச்சை கொண்டு செல்ல,
“ப்பச் வேலை தேடிக்கிட்டு இருக்கேன் மச்சான் ஒன்னும் கிடைக்கலை.. இவ்வளவு ஸ்போர்ட்ஸ் சர்டிப்பிக்கெட் வைச்சு என்ன பிரயோசனம்..??’’
“மச்சான் எங்க ஸ்கூல்லயே ஒரு வேலை இருக்கு பார்க்கிறியா..??”
“என்ன வேலையா..?” ஆச்சர்யத்துடன் கேட்க..
“PT மாஸ்டர்தான்.. இப்ப ஒரு லேடிஸ்தான் வேலைப்பார்க்கிறாங்க.. வெளியூரெல்லாம் பசங்கள கூட்டிட்டு போக கொஞ்சம் பயப்படுறாங்க.. அதோட பசங்ச சேட்டையும் தாங்கமுடியலை.. நீதான் எல்லாத்திலயும் பெஸ்ட்டாச்சே நீ வந்தா நல்லாயிருக்கும்..”
“மச்சான் நீயும்தான பெரிய கபடி பிளேயர்..?”
“நான் கபடி மட்டும்தான் நல்லா விளையாடுவேன்.. ஆனா நீ புட்பால் ,வாலிபால்னு கலக்குவியே, எங்க குழுல எல்லாருமே உன்னோட பேன்தான்டா.. நானும்தான்.. நீ வீட்ல கலந்து பேசிட்டு எனக்கு போன் பண்ணு இல்லனா நான் போன்ல சொல்லிருறேன்.. பள்ளியின் பெயரை சொன்னவன் அங்க வந்து ஜாயின் பண்ணிக்கோ…”
“உண்மையிலே நீ ரொம்ப கிரேட் சக்தி.. இத்தனை வருசமா உன்னோட பழகாம இருந்ததே என்னோட தவறுதான்…??”
“கடவுளே மறுபடியும் முதல்லயிருந்தா.. போதும்டா..?” அவனை சாப்பிட போகச் சொன்னவன் திரும்பி பார்க்க இடுப்பில் கைவைத்தபடி தன்னை முறைத்தபடி நின்றிருந்தாள் ரமலி..
“என்னாச்சுடி பத்து நிமிசம் முடிஞ்சிருச்சா.. அப்ப மேடைக்கு போகாம என்னை ஏன் முறைச்சிட்டு போஸ் குடுக்கிற போ..?”
“நீயென்ன பெரிய மகாத்மாவா, இல்லை ஏசுநாதரா… ஒரு கன்னத்தில அடிச்சா மறுகன்னத்தை காட்ட.. என்னை மட்டும் என்ன பாடுபடுத்துற.. அவன்தான் உன்னை அடிச்சான்னு தெரிஞ்சம் மன்னிச்சு பத்தாததுக்கு வேலை வேற போட்டுக்குடுக்கிற.. அவன்தான் உன்னை அடிச்சிருக்கான்.. உங்க அம்மா இறந்ததுக்கு கொள்ளிவைக்க விடாம செஞ்சு இவ்வளவு நாள் பழசை மறக்கடிச்சிருக்கான்..
எல்லாத்துக்கும் மேல நம்ம கல்யாணமே அவனாலதான் நடந்திச்சு.. உங்கள பார்க்காம இருந்திருந்தா நான் வேற எதாவது வழி யோசிச்சு இருப்பேன்.. நீ வேணா அவன விடலாம் நான் விடமாட்டேன்.. இன்னைக்கு இருக்கு அவனுக்கு..!!” கோபமாக திரும்பியவளின் கையை பிடித்து இழுத்தவன் கையை விடாமல் அங்கிருந்த ஒரு அறையில் தள்ளி கதவை தாளிட,
“ டேய் விடுடா என்னை..!!” அவள் சக்தியிடமிருந்து திமிறியபடி வர அவளை விடாமல் இறுக கட்டி அணைத்திருந்தான்..சற்று நேரம் திமிறியவள் அவன் முகத்தை பார்க்க அது வாடிப்போய் இருந்தது போலிருந்தது.. அவன் முகத்தில் அப்படி ஒரு வேதனை.. அவன் முகத்தை பார்க்கவும் அப்படியே அவன் முதுகில் தட்டிக் கொடுக்க தன் முகத்தை அவள் கழுத்து வளைவில் புதைத்திருந்தான்..
“என்னாச்சு சக்தி..”
“ப்பச் விடு.. கொஞ்சநேரம் பேசாம இரு.. “சற்று நேரம் பேசாமல் இருந்தவன் அங்கிருந்த சோபாவில் அமர பக்கத்தில் கையை காட்டி அவளை அமரச் சொன்னான்..
“அவன் உங்கள அடிச்சது தப்பில்லையா…??”
“தப்புதான் ஆனா இதெல்லாம் இங்க சகஜமா நடக்கிறதுதான்..ஒரு சின்ன விசயத்தைக்கூட பெரிய பிரச்சனையாக்கி அடிதடியில இறங்குறது இங்க வழக்கம்தான்..நீங்க இருக்க மாதிரி நகரங்கள்ளதான் பக்கத்துவீட்ல என்ன நடந்தாலும் கண்டுக்காம ஆபிஸ்கிளம்பி போய்க்கிட்டே இருப்பாங்க.. ஆனா இங்கல்லாம் அப்படி இல்ல ஒரு சின்ன விசயம்கூட பெரிசா தெரியும்.. சண்டை போடுவாங்க அப்புறம் ஊருக்கு ஒன்னுனா ஒன்னு சேர்ந்துக்குவாங்க.. நான் கண்டுபிடிச்சவுடனயே போய் சண்டைபோட்டா என்னோட பிரண்ட்ஸ் விடமாட்டாங்க.. நாங்க அடிச்சா அப்புறம் அவனோட பிரண்ட்ஸ் அடிதடின்னு இறங்குவாங்க.. சாதாரண பிரச்சனை அப்புறம் ரெண்டு ஊர் பிரச்சனையா மாறிரும்.. அவன் பேசினது எல்லாமே உண்மைதான் எங்க அம்மா அன்னைக்கு இறப்பாங்கன்னு தெரிஞ்சிருந்தா அவன் தொட்டிருக்ககூட மாட்டான்.. அவனும் நல்லவன்தான் ரமலி..என்ன கோபம்தான் கொஞ்சம் அதிகமா வரும்..
எங்க அம்மாவுக்கு கொள்ளி வைக்காதது எனக்கு ரொம்பவும் வேதனையான விசயம்தான்..எங்க அம்மாவுக்கு நான்னா உயிர்.. கொஞ்சநேரம் கூட அவங்க இல்லாம நான் இருந்ததில்ல.. அவங்க கடைசி நேரத்தில என்ன பாடு பட்டாங்களோ கண்டிப்பா என்னை தேடிருப்பாங்க.. ஒருநாள் எங்க அப்பத்தாக்கிட்ட கேட்டுப்பாரு அன்னைக்கு என்ன நடந்திச்சுன்னு. நான் வராம இருந்தாலும் எங்க அம்மா என்னை மன்னிச்சிருவாங்க.. ஏதோ நடக்கபோகுதுன்னு தெரிஞ்சுதானோ என்னவோ வெற்றி கரெக்டா அங்க வர்ற மாதிரி எல்லாம் நடந்திருக்கு.. அவனும் வெளிநாடு போயிருந்தா எங்க அம்மாவுக்கு யார் கொள்ளி வைச்சிருப்பா நினைச்சுப்பாரு..”
சற்று தெளிந்தவன்,” அதோட இன்னைக்கு வெற்றி வெளிநாடே வேண்டாம்னு இங்க இருக்கிறதுக்கும் இவன்தான காரணம்.. மலரு இன்னைக்கு என் தம்பி மனைவியா இருக்கு.. வெற்றி மலர் கல்யாணம் நடக்கத்தான் அன்னைக்கு நான் வரமுடியாம போச்சோ என்னமோ அதோட..?” அவன் இழுக்க,
இவன் அடிச்சதால இவ்வளவு விசயம் நடந்திருக்கா அவன் இழுத்தபடி பேச்சை நிறுத்தவும் அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க,” இந்த சொர்ணாக்காவ கல்யாணம் பண்ணவும் இவன்தான் காரணம் இதுக்காகவே இவன நாலு போடனும்.. என்ன பண்றது என்விதி..?” விரலால் தன் நெற்றியில் கோடிழுக்க,
அவனை முறைத்தபடி நெருங்கியவள்,” நான் சொர்ணாக்கவா. .. என்னை இவ்வளவு இம்சையா தாங்க வேணாம் விட்டுன்னுதானே சொல்றேன்…??”
சட்டென முகம் மாறியவன்,” என்னை கல்யாணம் பண்ணினது அவ்வளவு கஷ்டமா இருக்கா.. நினைவு இருந்திருந்தா கண்டிப்பா இந்த கல்யாணத்தை நடத்தவிட்டுருக்க மாட்டேன்.. “
அவன் முகம் வாடவும் பொறுக்காதவள்,” நீ ரொம்ப நல்லவன்தான்.. நாம வேணா ஹஸ்பண்ட் ஒய்ப்பா இல்லாம நல்ல ப்ரண்ட்ஸா இருப்பமா..?”
தன் சுயத்துக்கு திரும்பியவன்,” பிரண்டா இருந்தா இப்படி கட்டிப்பிடிக்க முடியுமா..?? இல்ல இப்படி முத்தம் கொடுக்க முடியுமா..?? இல்ல இப்படி டூயட் பாட முடியுமா..??
“ பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும் ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும்
தென்றல் வந்து என்னை கண்டு மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா ஹோ ஹோய்…”
அவள் கையை சுற்றி அவள் கன்னத்தோடு கன்னம் வைத்து டூயட் பாடியவன்,” கொஞ்சம் பொறுடி இன்னைக்கு என்ன பிளேவர் லிப்ஸ்டிக் போட்டிருக்கன்னு பார்ப்போம்..!!” அவள் இதழில் முத்தமிட வந்தவனின் நெஞ்சில் கைவைத்து தள்ளியவள்,
“டேய் உனக்கு போய் பாவம் பார்த்தேன் பாரு.. உன்னை அனைக்கே ரோட்டுல விட்டுட்டு போயிருந்தா இவ்வளவு இம்சை வந்திருக்காது… இம்சை இம்சை..!!”
“ஹாஹாஹா நீ சும்மா இருந்தாக்கூட எனக்கு உன்னை கொஞ்சனும்னு தோனலைடி .. ஆனா நீ இப்படி என்னை முறைக்கும்போதுதான் என்னன்னமோ பண்ணத் தோனுது.. ம்ம் சரி சரி வா நேரமாச்சு நம்மள தேடப்போறாங்க..” அவள் இடுப்பில் விலகியிருந்த சேலையை தன் கையால் அழுத்தத்துடன் சரிசெய்தவன் அவள் தடுக்க தடுக்க அவள் இடுப்பிலிருந்த கையை விலக்காமல் கதவை திறக்கச் சென்றான்..
அங்கு வரவேற்பில் அமர்ந்திருந்த மலரின் சித்தி மனதிற்குள் மலருக்கு சாபம் கொடுத்துக கொண்டிருந்தார்.. வீட்டிலிருந்து கிளம்பும்போதே கணவர் சொல்லித்தான் அழைத்து வந்திருந்தார்.. வாயே திறக்கக்கூடாது என்று..!! கிரிதரன் ஆக்ஸிடென்டில் இறந்தபிறகு இவருக்கும் பிறந்த வீட்டு உறவென்று ஒன்றும் இல்லாமல் போக கடைசிவரைக்கும் தன் கணவர்தான் என்ற நிலை இப்போதெல்லாம் சற்று அடக்கியே வாசித்தார்..
ஆனால் இங்கு வந்து மலரை பார்க்கவும் வயிற்றெரிச்சல்.. வெற்றியின் கவனிப்பால் முகமெல்லாம் பூரிப்போடு சதைப்போட்டு, நிறம் கொஞ்சம் கூடி அவ்வளவு நகைகள் போட்டிருந்தால் அதை பார்க்க பார்க்க தாங்க முடியவில்லை.. ஐயோ ஐயோ எவ்வளவு நகை எல்லாம் என் பிள்ளைகளுக்கு வர வேண்டியது எல்லாம் போச்சே…!!
மலரின் தந்தைக்கு தன் மகளை பார்க்கவும் மனம் நிறைந்திருந்தது.. அதோடு அவள் ஹோட்டல் திறந்திருப்பது, அவள் கணவன் அவளோடு இங்கேயே தங்க முடிவெடுத்திருப்பது என அனைத்தையும் ராமலிங்கம் சொல்லியிருக்க அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..வரவேற்புக்கு வந்தவர் ராமலிங்கத்தோடு சேர்ந்து வேலைகளை பார்க்க ஆரம்பிக்க அவர் மனைவியோ எப்போது இந்த மலரிடம் தனியே பேசலாம் என நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்..
ரமலியும் மலரும் ஒரு அறைக்குள் நுழைவதை பார்த்தவர் சற்று நேரத்தில் ரமலி போனோடு வெளியில் செல்ல இவர் அறைக்குள் நுழைந்திருந்தார்.. தன் சித்தியை பார்க்கவும் மனதிற்குள் பயப்பந்து உருண்டாலும் முறைப்படி,“வாங்க சித்தி, தங்கச்சிங்க எல்லாரும் நல்லாயிருக்காங்களா..”..
“ஏய் வாய மூடு.. என் தம்பி செத்து போனதுக்கு நீதான காரணம்.. உன்பின்னாடி சுத்தித்தான் என் தம்பி இன்னைக்கு இல்லாம போயிட்டான்.. நான் இன்னைக்கு சொல்றேன் கேட்டுக்க நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட நாசமா போயிருவா..?? ஏண்டி உன்னை எத்தனை நாள் பட்டினியா போட்டிருப்பேன்.. அப்பல்லாம் சாகாம என் உசிர எடுக்க இப்ப வந்து நிக்குற.. என் புருசன்கிட்ட என்ன சொன்னியோ நகை எல்லாத்தையும் கொண்டு வந்து உன்கிட்ட கொடுத்திட்டாருல.. வா எப்பாவச்சும் நீ அங்கதான வரணும் உன்னை ஒருவழியாக்காம விடமாட்டேன்..”
“ச்சீ வாயமூடுங்க.. யாருக்கு யாரு சாபம் கொடுக்கிறது..?” வெற்றி ருத்ரமூர்த்தியாய் அங்கு வந்து நிற்க அப்பத்தாத்தான் இவர் அறைக்குள் நுழைவதை பார்க்கவும் வெற்றியை அனுப்பி வைத்திருந்தார்.. அவர் பேசுவதை கேட்க கேட்க வெற்றிக்கு கொலைவெறி வந்திருந்தது..
அங்கு மலர் அழுது கொண்டிருக்க,” நீங்களும் ரெண்டு பொம்பள பிள்ளைங்கள வைச்சிருக்கிங்க தானே.. எப்படி இப்படியெல்லாம் ஒரு பொண்ண பேச மனசு வருது.. மரியாதையா வெளியே போயிருங்க.. இனி எக்காரணத்தை கொண்டும் எங்கவீட்டு வாசப்படி மிதிக்கக்கூடாது.. நீயேன்டி அழுதுட்டு இருக்க.. உனக்கு பேச வாயில்லையா.. எவ்வளவு திமிரு..??” பல்லை கடிக்க அவர் சட்டென்று அறையிலிருந்து வெளியில் வரவும் வெற்றி தன் மனைவியை பாய்ந்து அணைத்திருந்தான்..
“அழாத அம்மு..?” அவள் முதுகை தட்டிக் கொடுத்தவன்,” அவங்க சொன்னது உண்மையா.. அவங்க உனக்கு சாப்பாடு போட மாட்டாங்களா..??” தன் மார்பில் முகம் புதைத்திருந்தவளின் முகத்தை தன்னை பார்க்க செய்தவன்,” ம்ம் சொல்லு வேற என்ன நடந்திச்சு.. யாரு அவங்க தம்பி சொல்லு எல்லாத்தையும் சொல்லு..??”
மலர் தன் தாய் இறந்ததிலிருந்து தான் அந்த வீட்டில் அடிமையாக இருந்தது, தன் படிப்பு போனது அந்த கிரிதரனின் தொந்தரவு, ராமலிங்கம் தன்னை அழைத்து வந்தது என அனைத்தையும் சொல்லி அன்று கோவிலில்கிரிதரன் தன்னை விரட்டியதை சொல்லி சக்தி வந்து காப்பாற்றியதையும் சொல்ல வெற்றிக்கு தான் என்ன மாதிரி உணர்கிறோம் என்றே தெரியவில்லை..
அவளை இன்னும் இன்னும் அணைத்தவன்,” ஸாரி.. ஸாரிடி .. அம்மு..”