“சொல்லு ண்ணா… நான் எதிரில இருக்க மால்ல தான் இருக்கேன். மூணாவது மாடி! ஸ்டார் பக்ஸ்-ல”
“..”
“அவசரம் இல்ல… இப்போ தான் லாட்டே சொல்லியிருக்கேன்.. பொறுமையா வாங்க.”
“…”
“சரிண்ணா..”
‘சரி அண்ணா…’ பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அண்ணன் சொல்லுக்கு மறு வார்த்தை பேசமுடிவது இல்லை. அண்ணன் என்றால் பயமா? இல்லை அவன் வெறும் அண்ணன் இல்லை… அவளின் அப்பா. இனி பார்க்கவே முடியாது என்றிருந்த அப்பா, இன்று அவளோடு.
மூன்று வருடம் ஆகியும் அண்ணனைக் கண்ட பூரிப்பிலிருந்து வெளிவரவில்லை. அண்ணனின் அரவணைப்பு ஒரு வித மாய வலை அவளுக்கு. அதனாலேயே டேனியேல் வாத்தைக்கு மறுமொழி கூறுவதில்லை சுதா.
அவனும் அப்படி எல்லாம் அவளை அதிகாரம் செய்வதில்லை. அவளிடம் செல்ல சண்டைகளும் போடுவான்.. அவள் அடம் பிடிக்க, விட்டுக் கொடுப்பான். அவள் தேவை.. பாதுகாப்பு.. என்று வரும்போது அவன் ஒருவர் பேச்சும் கேட்பதில்லை. அவன் முடிவே இறுதியானது.
தற்போது அவள் பாஸ்டனில் வாசம். அவர்கள் பெற்றோர் வாழ்ந்த வீட்டில் வசித்துவருகிறாள். அண்ணன் குடும்பம் இன்று சுதா வீட்டிற்கு விஜயம். இருதினம் இருந்துவிட்டுச் சென்றுவிடுவர்.
மாதத்திற்கு ஒரு முறை இவள் சென்றுவிடுவாள் இல்லை அவர்கள் வந்துவிடுவார்கள். விமானநிலையம் அருகிலிருந்த மாலில் காத்திருக்கிறாள் அவர்கள் வருவதற்காக.
பழக்கப்பட்ட இடம் போலும்.. பணிப்பெண், “ஹாய் சுடா… ஹவ் யூ டூயிங்” என்றாள் அமெரிக்கர்கள் பாணியில்.
“குட் சிண்டி..” என்று இரண்டு நிமிடம் பேசிவிட்டு, சிண்டி கொடுத்த ஃப்ராப்பசீனோ கேரமல் லாட்டேவுடன் அவளின் வழமையான இடத்தில் அமர்ந்துகொண்டாள்.
மூன்றாம் தளத்தின் காரிடரில் இருக்கும் இருக்கைதான் அவளுக்குப் பிடித்த இடம். அங்கிருந்து வேடிக்கை பார்த்தால் இரண்டாம் தளத்தில் இருக்கும் சிறுவர்களுக்கான விளையாட்டு இடம் தெரியும்.
எவ்வளவு நேரம் விளையாட விட்டாலும் பெற்றவர்கள் அழைத்ததும், “ப்ளீஸ்… ப்லீஸ்.. டூ மோர் மினிட்ஸ்’ என்று கெஞ்சும்.. அழும்.. ஆர்ப்பாட்டம் செய்யும் குழந்தைகள். அவளுக்குக் கேட்காது! பார்க்க ரசனையாய் இருக்கும்.
அவள் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது ஒரு இந்திய இளைஞனும், ஒரு சிறுமியும் உள்ளிருந்து கைபிடித்து வெளி வந்து கொண்டிருந்தனர். நான்கு வயதிருக்கும் அந்த குட்டி மகளுக்கு. அவன், அவள் தந்தையாக இருக்கவேண்டும் என்று தோன்றியது.
அந்த சிறுமி இடை வரை முடி கருகருவென்று புரண்டது. தன் அழகிய பெரிய விழியை விரித்து கைகளை ஆட்டி ஆட்டி ஏதோ கதை சொல்லிக்கொண்டிருந்தாள். ஆர்வமாய் கேட்டவன் அவளைத் தூக்கி முத்தம் கொடுத்து கீழே இறக்கி விட்டான்.
ம்ம்.. பெத்து குடு உன்ன மாதிரியே பெரிய கண்ணோட இப்பிடி அழகான முடியோட.. வயிற்றில் இதழ் பதித்துக்கொண்டே ‘அவன்’ உரைத்தான்.”
வயிற்றில் சில்லென்ற உணர்வு.
சம்பந்தம் இல்லாமல் முன் ஜென்ம நினைவுகள் வந்து போனது! கண்கள் கரித்தது. தானாய் கை வயிற்றைத் தொட்டுப் பார்த்தது. பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது.
‘இரண்டு பேருமே ரொம்ப அழகு, குழந்தை கூட ரொம்ப அழகா தான் இருக்கும்’ மனம் எடுத்துக்கொடுத்தது.
‘அவர் ஆசைப் பட்ட மாதிரியே பொண்ணா தான் இருக்கும்!’ மேசையிலிருந்த லாட்டே கப்பின் தலையில் ஆட்காட்டி விரலால் வரைந்து கொண்டே மனதோடு பேச ஆரம்பித்தாள்.
‘என்னை மறந்து போயிருப்பார்ல்ல…’ கேள்வி உடலில் ஒருவித நடுக்கத்தைக் கொடுத்தது.
‘மக்கு.. நினைவில இருக்கவங்களைத் தான் மறக்க முடியும். நீ தான் அவர் நினைவிலேயே இல்லையே.. அப்புறம் எங்க இருந்து மறக்க?’
பதில் பிடிக்கவில்லை. கையிலிருந்த கப்பை வீசி அடிக்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் உணர்வுகளை அவள் வெளிக்காட்டுவதில்லை. இனி அவள் உணர்வுகளை வெளிக் காட்டக்கூடாதென்ற கட்டுப்பாட்டுக்குள் வாழ்கிறாள். கப்பை எடுத்து ஒரு வாய் லாட்டேயை அருந்தினாள். அதன் சுவை தெரியவில்லை. மீண்டும் ஒரு வாய் உள்ளே சென்றது.. கசப்பாய்!
‘இதுக்கும் மேல.. நீ அவர பத்தி நினைக்கரதே தப்பு!’ என்றது புத்தி!
‘ஏனாம்?’
‘உனக்கே தெரியும்!’
அதன் பின் லாட்டே மட்டும் தான் அவள் கவனத்தில்.
பழைய விஷயங்கள் அவளை நொறுக்கி விடாதபடி டேனியும், கார்த்திக்கும் அவளுக்கு அரனாயிருந்தானர். இத்தனை வருடங்களில் அவள் தனிமையை உணரவில்லை. உணரவிட்டதில்லை.
நெருங்கிய நட்பாய் அண்ணி ஜான்சி! அவளோடு சிரிக்க… சில நேரங்களில் அவளின் கண்ணீர் துடைக்க! இரண்டு வருடமாக கண்ணீர் விட்டதாய் நினைவில்லை.
ஜான்சி அமெரிக்கா வந்த புதிதில் அவளை கூட்டி சென்று பல இடங்களைச் சுற்றிக் காட்டி தன் நேரத்தை கழித்தாள் சுதா. பின் ஜான்சியின் பிரசவம். வெண்பஞ்சு போன்ற சொர்கம் சுதாவின் கையில்.
“இல்லண்ணா நான் ஆல்ரெடி மேரிட். பிரிஞ்சுட்டேன்.” என்று பேரதிர்ச்சியை அவள் அண்ணன் தலையில் இறக்கினாள். எதுவும் நடவாவதது போல் பிள்ளையோடு விளையாடிக்கொண்டிருந்தவள் மேல் கோபப்பட வேண்டுமா இல்லை வருத்தப்பட வேண்டுமா என்று தெரியவில்லை தமையனுக்கு.
எத்தனை கேட்டும் கணவனைப் பற்றி ஒரு வார்த்தை கூறவில்லை, “அவர் நல்லவர்ண்ணா… ரொம்ப இஷ்டம் என் மேல அவருக்கு. ஆனா எனக்கு அவர் கூட வாழக் கொடுத்து வைக்கல. இப்போ அவருக்குனு ஒரு வாழ்க்கை அமைஞ்சு இருக்கு. அத நான் கெடுக்க மாட்டேன். முடிஞ்சு போன எங்க வாழ்கையைப் பத்தி பேச வேண்டாமே” என்று முடித்து விட்டாள்.
‘தாயில்லை, தகப்பனில்லை, கணவனில்லை! இனி நானும் அவள் அண்ணனும் தான்’ என்ற எண்ணமே ஜான்சியை சுதாவிடம் இன்னும் நெருக்கமாய் மாற்றியது.
அண்ணன் மகன், அருள் நாள் முழுவதும் சுதாவிடம் தான் இருந்தான். அதற்குத் தடையாய் ஒருநாளும் ஜான்சி இருந்ததில்லை. ஒருவேளை அவளுக்கும் கணவன் குழந்தையோடு வாழும் ஆசை வந்தால், கார்த்திக்கோடு சுதாவின் வாழ்வை இணைத்து விடலாமே என்ற நப்பாசை தான்!
அருளைப் பெற்று ஆறு மாதமானாபின் ஜான்சியின் கால் அறுவைசிகிச்சை நடை பெற்றது. அவள் சிறுவயதில் நடத்தப்பட்ட அறுவைசிகிச்சையின் குளறுபடி இதில் சரி செய்யப் பட்டது. விளைவு ஜான்சி இன்று அவள் மகனுக்கு இணையாய் ஓடுகிறாள்.
குழந்தை சுதாவோடு இருக்க, ஜான்சியை பார்த்துக்கொள்ள ஊரிலிருந்து அவள் பெற்றோர் வந்தனர்.
ஒரு சில மாதத்தில் அவர்களுக்கும் சுதாவைப் பிடித்துப் போக டேனியிடம் பெண் கேட்டனர். மிண்டுமாக டேனி சுதாவிடம் பேசினான். மீண்டும் மீண்டும் பேசினான். தனிமையில் இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. அடக்கி வைத்திருந்த வலி எல்லாம் அண்ணி மடியில் கண்ணீராய் வழிந்தது. இத்தனை சோகம் அவளுக்குள் எங்கிருந்தது? ஒருவருக்கும் அவள் சோகம் தாங்க முடியவில்லை. அதில் கார்த்தி அடக்கம். கணவனில்லாமல் அவள் வாழ்க்கையைக் கழிப்பதில் குடும்பத்தில் ஒருவருக்கும் உடன்பாடில்லை.
சுதாவிற்கு திருமணம் ஆகிவிட்டது தெரிந்தது. பின் ஒரு வார வாழ்க்கை தெரிந்ததும் ஜான்சி, அவள் அண்ணனிடம் கண்ணீர் சொறிந்து நின்றாள். இந்த ஒரு வருட காலத்தில் சுதாவும் ஜான்சியும் அதிக நெருக்கம் ஆகிவிட.. ஜான்சி சுதா வாழ்வின் நல்லது நடந்தே ஆகவேண்டும் என்ற முடிவிலிருந்தாள். இவர்கள் இருவரில் ஒரு பெண் கண்ணீர் விட்டாலே துடித்துப் போவான்… அவன் நிலை மிகவும் கவலைக்கிடமாய் போனது. சுதாவைக் கைபிடித்தால் அவளைப் பிரிய வேண்டாம். இன்று இல்லை என்றானாலும் அவள் பழைய வாழ்வை இவனால் கண்டிப்பாக மறக்க வைக்க முடியும். சுதா அவள் வாழ்வில் கண்ணீர் விடாமல் இவனால் பார்த்துக் கொள்ள முடியும்.
அன்று ஜான்சி முயற்சியை எடுத்திருந்தால், இன்று சுதா கண்ணீர் சிந்தியிருக்க மாட்டாளோ? அவளும் முயன்றாளே… விதி வலியதாய் போனது சுதா வாழ்வில். அன்றும் இன்றும்!
முடிந்து போன திருமணத்தைப் பிடித்துக் கொண்டு தொங்காமல் அவளை தங்கள் மருமகளாய் வரக் கேட்டனர்.
தங்கை வாழ்க்கை வீணே போவதை டேனியால் ஒத்துக்கொள்ளவே முடியவில்லை.
“சரி குட்டிமா… நீ உன் எக்ஸ்-சோட டீடெய்ல்ஸ் குடு… நான் பார்த்துட்டு வரேன்..” பிடிவாதம் பிடித்தான். அவள் அசந்தாளில்லை. அண்ணன் வேதனை முகம் பார்க்க முடியவில்லை. வீட்டில் அவளால் நிம்மதி இல்லை. உயிர்ப்பாயிருந்த வீடு அவளால் களையிழந்தது.
“நீ வாழாம இங்க இருக்கும் போது எனக்கு என்ன வாழ்க்கை வேண்டி கிடக்க!” ஜான்சி தேம்ப… சுதாவுக்குப் பயம் பிடிக்க ஆரம்பித்தது.
காதல் கசிந்த கண்கள் கண்ணீரைக் கசிந்தது. காதல் கணவன் மனைவி… இவளால் காதல் பார்வை கூட பார்ப்பதில்லை. வாழாமல் தங்கை வீட்டில் இருக்க அவனால் மனைவியைத் தொட முடியவில்லை.
வீட்டு சூழல் சுதா கழுத்தை நெரிக்க அவளுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.
வேறு ஒருவனுடன் வாழ்வா? தலை சுற்றியது. ‘ஏன் விபத்தோடு மறிக்கவில்லை. இப்படி கொஞ்சம் கொஞ்சமாய் மறிப்பதற்கா?’ என்ற வலி நிரந்தரமானது.
கட்டினவன் விபரம் சொல்ல மறுத்து… அவன் என்ன ஆனான் என்று தெரியாது என்று அவள் கூற, முந்தினவனோடு இவளுக்கு எந்த தொடர்பும் இல்லாத போது ‘இவள் எதற்காக அவனை நினைத்து தனியே வாழ வேண்டும்?’ என்று கார்த்தியும் யோசித்தான்.
கார்த்தியின் பெற்றோர்கள் ஊர் திரும்ப ஒரு மாதமே இருக்க… பேச்சு வார்த்தை வலுத்தது. நடு கூடத்தில் அண்ணன் கேட்ட கேள்விகளுக்குப் பதில் தெரியவில்லை சுதாவிற்கு. ஒன்று முன்னாள் கணவன் விபரம் கூறு… அது முடிந்து விட்டது என்றால்.. நான் சொல்லுவதைச் செய் என்றுவிட்டான். அன்று அவள் பேச்சை ஒருவரும் கேட்க விரும்பியதாகத் தெரியவில்லை. அனைவர் முன்னிலையில் அண்ணனோடு வாதிட முடியவில்லை, அண்ணனை எதிர்த்துப் பேச நா எழவில்லை.
“என்னைக் கேட்டால் போதுமா? கார்த்தியைக் கேள்..” என்று அவனை இழுத்து விட்டு தப்பிக்க நினைத்தாள். கார்த்திக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை என்ற தைரியத்தில் பேசிவிட்டாள்.
அவனும் அங்கு தான் அமர்ந்திருந்தான் கையில் ருபிக்ஸ் க்யூபை திருகிக்கொண்டு! கவனம் இவர்கள் பேச்சில் தான்… கண் மட்டும் பல வர்ண க்யூபை பார்த்துக்கொண்டிருந்தது.
கார்த்தி சுதாவைத் தான் பார்த்தான். அவன் சுதா… அவளோடு ஒரு வாழ்வா? அவள் துணையாக?
சுதா மூச்சு நின்றுவிட்டது. இதயம் வெளியே தெறித்துத் துடித்தது. அவன் பதிலோடு எல்லாம் முடிந்துவிடுமே…
கையிலிருந்ததைத் திருகிக் கொண்டே… “எனக்குச் சுதா சந்தோஷம் ரொம்ப முக்கியம்… அவளுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்…” என்றவன் க்யூபை எதிரில் இருந்த மேசை மீது வைத்துவிட்டு… சுதா அருகில் வந்தான்..
“நான் என்னைக்குமே சுதா வாழ்க்கைக்கு துணையா இருக்க விரும்பறேன்..” என்றான் அவள் கண் பார்த்து.