மழை 23:
ஒரு வாரம் கடந்திருந்தது.. 
ஜெனிஷா மாலினி பற்றி அதன் பிறகு ராஜசேகரிடம் பேசவில்லை. அவள் தனக்காக தான் இந்த முடிவை எடுத்தாள் என்பதால் அவனுக்கு அவள் மேல் காதல் கூடியது. அதை உணர்ந்த ஜெனிஷா தனது முடிவு சரியே என்று புரிந்துக் கொண்டதோடு மாலினியை எதிரியை போல் பார்ப்பதை நிறுத்தினாள். தோழியாக எண்ணாவிடிலும் இப்பொழுது எதிரியாக எண்ணவில்லை. 
ஷங்கர் ஆர்லி முகத்தில் தோன்றும் வருத்தத்தை நம்ப தயாராக இல்லை.. முன்பை விட மோகனாவை அதிக கவனத்துடன் பார்த்துக் கொண்டான். ஆர்லி உள்ளுக்குள் எரிமலையின் சீற்றத்துடன் இருந்தாலும் வெளியே முகத்தை வருத்தமாகவும் பாவமாக வைத்துக் கொண்டு சுற்றினாள். அதை கண்டு மோகனா வருந்தினாலும் மாலினி மற்றும் ஷங்கரை மீறி பேச துணியவில்லை என்பதை விட அவர்கள் இவளை பேச கூடாது என்று அவளின் ஆழ் மனதினுள் நன்றாக உரு ஏற்றினர்.
சிவகுருவின் கலாட்டாக்களும் பிருந்தாவின் கொந்தளிப்புகளும் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.
செல்வராஜிற்கு மாலினி மேல் இருக்கும் கோபம் சற்று மட்டுபட்டிருந்த நேரத்தில் ஒரு நாள் அவன் அவளுடன் சாதாரணமாக பேசியதை பார்த்த உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுத் துறை ஆசிரியர்(P.T-சார்) அவனிடம் மன்னிப்பு(Apology) கடிதம் எழுதி வாங்கியதும் மட்டுப்பட்ட கோபம் திரும்பியது. இதில் மாலினி தவறு ஏதும் இல்லை என்ற போதிலும் செல்வராஜின் கோபம் அவள் மீது தான்.    
இந்த கல்லூரியில் தான் மாணவ மாணவிகள் பேசிக்கொள்ள கூடாது என்ற சட்டம் இருக்கிறதே அதனால் தான் இந்த மன்னிப்பு கடிதம். எப்படி எந்த விஷயத்தில் இவர்களை வருத்தெடுக்கலாம் என்று காத்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் இது போல் சின்ன சின்ன விசயத்தில் சிறு திருப்தி அடைந்தனர். இவர்களுக்கு பெரிதாக ஏதாவது செய்ய காத்துக் கொண்டு தான் இருக்கின்றனர். 
அன்று காலை தேநீர் இடைவேளை முடிந்து அடுத்த வகுப்பின் தொடக்கத்திற்கான மணி அடிக்கவும் ஐஸ்வர்யா உள்ளே வந்தார்.
அவரை பார்த்ததும் நந்தினி, “மதியம் தானே இவங்க பிரியட்.. இப்போவே வந்துட்டாங்க” என்று சிறு பதற்றத்துடன் கூறவும்,
பிருந்தா, “எப்போ வந்தா என்ன?”
“லன்ச் பிரேக்கில் தான் XXX படிக்கணும் நினைத்தேன்.. ”
“அந்த ஒன்னு மட்டும் தான் படிக்கலையா? ப்ரீயா விடு”
“என்னடி கூலா சொல்ற? முதல் டெஸ்ட் சரியா எழுதணும்.. நீ படிச்சிட்டியா?”
“ஹா.. ஹா.. ஹா.. இப்போ நீ சொன்ன பிறகு தான் டெஸ்ட்னு நியாபகமே வருது”
“..”
“அப்பறம் எப்படி இப்படி கூலா இருக்கிறேன்னு பார்க்கிறியா? மாலு இருக்க கவலை ஏன்?” என்று கூறி கண்சிமிட்டவும் நந்தினி முறைத்தாள். அதை கண்டுகொள்ளாமல் மாலினியிடம், “என்ன மாலு! நான் சொல்றது சரி தானே!” என்று வினவவும் புத்தகத்தில் கவனமாக இருந்த மாலினி இவளை பார்த்து புன்னகைத்தாள்.
ஐஸ்வர்யா, “டென் மினிட்ஸ் ரிவைஸ் பண்ணிக்கோங்க.. அப்பறம் டெஸ்ட் வைக்கிறேன்” என்றதும் மாணவிகள் சிலர் வேக வேகமாக புத்தகத்தை புரட்ட சில மாணவிகள் பயத்துடன் படிக்க முயற்சித்து தோற்றுக் கொண்டிருக்க ஒரு சிலர் பிருந்தா, ஜெனிஷாவை போல் அலட்டிக்கொள்ளாமல் இருந்தனர். மாணவர்களில் ஸ்ரீராமன் மட்டுமே வேக வேகமாக புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தான்.
பத்து நிமிடங்கள் கழித்து ஐஸ்வர்யா, “ஓகே ஸ்டுடென்ட்ஸ்.. டேக் தி பேப்பர்” என்றதும் மாணவிகள் காகிதத்தை எடுத்தனர். ஆனால் மாணவர்கள் பலர் எடுக்கவில்லை. முதலில் காகிதத்தை எடுத்த ஸ்ரீராமன், கிருஷ்ணமூர்த்தி, புழா, சக்திவேல், அனீஸ் மற்றும் சில மாணவர்களும் மற்ற மாணவர்கள் எடுக்கவில்லை என்றதும் காகிதத்தை உள்ளே வைத்துவிட்டனர். 
சில நொடிகள் பொறுத்திருந்த ஐஸ்வர்யா, “பேப்பரை எடுக்க சொன்னேன்” என்று அழுத்திக் கூறினார். அப்பொழுதும் மாணவர்கள் அசையவில்லை என்றதும் யோசனையுடன், “படிக்கலையா?” என்று வினவியதும் மாணவர்கள், “எஸ் மேம்” என்று ஒன்றாக குரல் கொடுத்தனர்.
ஐஸ்வர்யா, “யாரெல்லாம் படிக்கவில்லையோ எழுந்திறிங்க” என்றதும் மாணவர்கள் அனைவரும் எழுந்தனர்.
கிருஷ்ணமூர்த்தி படிக்கவில்லை என்றாலும் வகுப்பில் கவனித்ததை வைத்து எழுதும் திறமை கொண்டவன் தான் ஆனால் நண்பர்களுக்காக எழுந்து நின்றான். புழா முழுமையாக படித்திருந்தாலும் நண்பர்களுக்காக எழுந்தான். ஸ்ரீராமன் தலைப்புகளையும் துணை தலைப்புகளையும் மட்டுமே படித்ததினால் எழுந்து நின்றான். 
ராஜசேகரின் பார்வையில் ஜெனிஷா எழவும் மெல்ல ஒரு சில மாணவிகள் எழுந்தனர். 
மெல்லிய குரலில், “சிஸ்டர்” என்று அழைத்துப் பார்த்த ராஜசேகர் அது மாலினி காதில் விழவில்லை என்றதும் கிருஷ்ணமூர்த்தியை அழைத்து மாலினியை எழு சொல்லும்படி கூறினான்.
சரியாக அந்த நேரத்தில் எதேர்ச்சையாக மாணவர்கள் பக்கம் திரும்பிய மாலினி கிருஷ்ணமூர்த்தியின் பார்வையில் எழுந்து நின்றாள். முழுமையாக படித்திருந்தாலும் அவனது பார்வையில் எழுந்துக் கொண்டாள். அவள் எழுந்ததும் சற்றும் யோசிக்காமல் பிருந்தா எழ, மாலினியின் பார்வையில் நந்தினி அரை மனதுடன் எழுந்தாள்.
ஒரு சில நொடிகளிலேயே முதல் வரிசையில் அமர்ந்திருந்த தாரிக்கா குழுவினரை தவிர மொத்த வகுப்பும் எழுந்து நின்றது. பின்னால் திரும்பி பார்த்த தாரிக்காவின் தோழிகள் நாமும் எழலாம் என்று கூறியும் தனது முறைப்பில் அவர்களை அடக்கி திடமாக அமர்ந்திருந்ததோடு தோழிகளையும் எழ விடவில்லை.
தாரிக்காவின் இந்த செயலில் சக மாணவ மாணவிகளின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டாள் ஆனால் அதை அவள் அலட்சியப் படுத்தினாள்.
தாரிக்கா குழுவினரை பார்த்து, “வெரி குட் கேர்ள்ஸ்” என்று பாராட்டிய ஐஸ்வர்யா மற்ற மாணவர்களை பார்த்து திட்ட தொடங்கி பல அறிவுரைகளை சொல்ல தொடங்கினார்.
ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த சிவகுரு, “தண்ணியை குடி.. தண்ணியை குடி” என்று கூற, ஐஸ்வர்யா கோபத்துடன், “எவன்டா அது.. தைரியம் இருந்தால் முன்னாடி வந்து சொல்லு” என்று கத்தினார்.
மாணவர்கள் அமைதி காக்கவும் அவர் கோபமாக வெளியே செல்ல, அவர் சென்ற ஐந்தாவது நிமிடம் இரண்டு ஆசிரியர்களுடன் ஆசிரியர் ரவி உள்ளே வந்தனர்.
உள்ளே வந்த ரவி சார், “அடங்கவே மாட்டீங்களா டா! பழைய என்குவரியே முடியலை.. நேற்று சீனியர் கூட நடந்த பிரச்சனையில் ராகேஷும் செல்வராஜும் இந்நேரம் அடுத்த என்குவரியில் இருக்கான்க இதில் மறுபடியும் பிரச்சனையா! நீங்கலாம் படிக்க வரீங்களா பிரச்சனை பண்ண வரீங்களா? ஆர்ட்ஸ் காலேஜ்.. லாகாலேஜில் இருக்க வேண்டிய ஜந்துக்கள் எல்லாம் இங்கே வந்த எங்க உயிரை எடுக்குறீங்க!” என்று பொரிந்துக் கொண்டு இருக்க,
சிவகுரு ராஜசேகரிடம், “மச்சி இவன் சேர்மன் கிட்ட ட்ரைனிங் எடுத்திருப்பானோ!” என்று முணுமுணுக்க, ராஜசேகர், “மூடு டா” என்றான்.
சிவகுரு, “மூடிட்டு தானே இருக்கிறேன்” என்றதும் ராஜசேகர் அவன் காலை ஓங்கி மிதிக்க, கத்தியது என்னவோ சிவகுருவின் மறுபக்கம் அமர்ந்து இருந்த சக்திவேல். ராஜசேகர் திரும்பி பார்க்க காலை மடக்கி வைத்திருந்த சிவகுரு நமட்டு சிரிப்பு சிரித்தான்.
சக்திவேலின் அலறரில் அவனை பார்த்த ரவி சார், “நீ பஸ்ட் ரோ-வில் தானே உட்கார்ந்து இருப்ப?”
‘பஸ்ட் ரோ-வில் உட்கார்ந்து காபி அடிக்க முடியாதே!’ என்று கால் வலியுடன் மனதினுள் கூறிக் கொண்ட சக்திவேல் அமைதியாக எழுந்து நின்று, “எஸ் சார்” என்றான்.
“எதுக்கு கத்தின?”
அவன் பதில் சொல்வதறியாது திணற சிவகுரு, “ஏதோ கனவு னு சொல்லு மச்சி” என்று கூற அவன் சொன்னதின் அர்த்தம் புரியாமல், “ஏதோ கனவு சார்” என்று சொல்ல ரவி சார் அவனை கடுமையாக முறைக்கவும், தான் சொன்னதை நினைத்துப் பார்த்த சக்திவேல் மனதினுள் சிவகுருவை கெட்ட வார்த்தையில் திட்டினான்.
ரவி சார், “தூங்கி கனவு காண நான் என்ன தாலாட்டா பாடிட்டு இருக்கிறேன்?” என்று கடித்த பற்களிடையே வினவினார்.
சக்திவேல் ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும் தலையை ஆட்ட ஆசிரியர்களின் இரத்த கொத்திப்பு எகிறத் தொடங்கியது.
சக்திவேல், சிவகுரு, ராஜசேகர் மற்றும் இரண்டு மாணவர்களை அழைத்துக் கொண்டு ஆசிரியர்கள் வொர்க்-ஷாப் சென்றனர்.
அடுத்த சில நொடிகளில் வகுப்பின் உள்ளே வந்த ஐஸ்வர்யா மேடை மீது ஏறி பாடத்தை நடத்த தொடங்கினார்.
பிருந்தா, “வடை போச்சே!” என்று கூற மாலினி என்ன என்பது போல் பார்க்கவும் அவள், “இந்த பிரச்சனையை வைத்து இன்னும் ரெண்டு நாளுக்கு கிளாஸ் நடக்காதுன்னு நினைத்தேன்” என்று சோகமாக கூறவும் மாலினி மெலிதாக சிரித்தாள்.
சரியாக அந்த நேரத்தில் திரும்பி பார்த்த ஐஸ்வர்யா மாலினியை பார்த்து ஆள் காட்டி விரலை அசைத்து எழுந்து நிற்க சொன்னார்.
மாலினி எழுந்து நிற்க பிருந்தா மனதினுள் வருந்த நந்தினி பிருந்தாவை முறைத்தாள். 
ஐஸ்வர்யா, “எதுக்கு சிரிச்ச?”
“நான் சிரிக்கலை மேம்”
“பொய் சொல்லாத”
“நிஜமா தான் மேம்”
ஐஸ்வர்யா கோபத்துடன், “இனி கிளாஸில் சிரிக்க மாட்டேன்னு அபாலாஜி லெட்டர் எழுதி தா”
“மேம்……………….”
“டூ வாட் ஐ சே.. இல்லை வெளியே போ” என்று கடுமையான குரலில் கூறவும் மாலினி அமைதியாக அவர் கூறியது போல் கடிதம் எழுதி கொடுத்தவள், “சாரி மேம்” என்றாள்.
அவளது மன்னிப்பில் சிறிது சமாதானம் அடைந்த ஐஸ்வர்யா, “ஹ்ம்ம்” என்று கூறி இருக்கையில் உட்காருமாறு கையை காட்டினார். வானர படையினர் இல்லாத காரணத்தால் வகுப்பு அதன் பிறகு அமைதியாக நடந்தது. 
சிவகுரு, ராஜசேகர், சக்திவேல், மற்ற இரண்டு மாணவர்களுடன் ஆசிரியர் ரவியும் மற்ற இரண்டு ஆசிரியர்களும் வொர்க்-ஷாப் சென்ற நேரத்தில், அங்கே கோபத்துடனும் கடுப்புடனும் அமர்ந்திருந்த உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுத் துறை ஆசிரியர்(P.T-சார்),  “சொல்லு டா” என்று கர்ஜிக்க, அதில் சிறிதும் பாதிக்கப்படாமல் அவர் முன் ராகேஷும் செல்வராஜும் நின்று கொண்டிருந்தனர்.
செல்வராஜ், “ஏன் சார் சீனியர்ஸ்சை விட்டுட்டு எங்களை மட்டும் நொங்கெடுக்க முயற்சி பண்ணிட்டு இருக்கிறீங்க?”
கோபத்துடன் எழுந்த பி.டி சார், “எவ்வளவு நெஞ்சளுத்தமும் திமிரும் உனக்கு! முயற்சி பண்றேன்னு சொல்ற! உன்னையெல்லாம் சேர்மேன் கிட்ட அனுப்பி இருக்கணும்”
ராகேஷ், “அனுப்பியிருக்க வேண்டியது தானே!” என்று முணுமுணுக்க, 
“என்ன டா முணுமுணுப்பு? தைரியம் இருந்தா சத்தமா சொல்லு”
“அனுப்பியிருக்க வேண்டியது தானே னு சொன்னேன்” என்று ராகேஷ் சற்றும் யோசிக்காமல் கூற அவனது தைரியத்தில் மற்ற இரு ஆசிரியர்கள் சிறிது மலைத்தனர் ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. 
சிவகுரு அடக்கிய மென்னகையுடன் ராகேஷ் அருகில் சென்று நிற்க, மற்றவர்களும் அவன் அருகில் நின்றனர்.
பி.டி சார் ராகேஷ் சொன்னதை கண்டுகொள்ளாதது போல் இப்பொழுது வந்த மாணவர்களை சுட்டிக்காட்டி, “இவன்க என்ன பண்ணான்க?”
ரவி சார் முறைப்புடன், “ஐஸ்வர்யா மேடம் திட்டும் போது தண்ணியை குடி னு எவனோ கத்தி இருக்கிறான்”
சிவகுரு ராகேஷிடம், “குச்சி ஐஷை சொன்னதும் டக்லஸ்-கு கோபம் வந்திரிச்சு மச்சி” என்று முணுமுணுக்கவும் 
ஒரு ஆசிரியர், “என்னடா முணுமுணுப்பு?”
சிவகுரு அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு நிற்கவும் அவனை பற்றி அறியாத அந்த ஆசிரியர் தனக்கு ஒரு அடிமை கிடைத்த நினைப்புடன், “என்ன டா? என்ன சொன்ன?” என்று எகிறினார்.
சிவகுருவிடம் மீண்டும் அமைதியே..
அவர், “சொல்லுன்னு சொன்னேன்”
“ஐஸ்வர்யா மேடமை சொன்னதும் ரவி சாருக்கு ஏன் இவ்ளோ கோபம் வருதுன்னு சந்தேகம் கேட்டேன் சார்” என்று ஒன்றும் அறியாதவன் போல் கூறினான்.
மாணவர்கள் சிரிப்பை அடக்கிக் கொண்டு நிற்க, ரவி சார் சிவகுருவை விட்டுவிட்டு அந்த ஆசிரியரை முறைக்க அவரோ திணறினார். சிவகுருவின் கூற்றிற்கு காரணம் இல்லாமல் இல்லை.. ஆசிரியர் ரவிக்கும் ஐஸ்வர்யாவிற்கும் நட்பிற்கு மேற்பட்ட ஒரு மெல்லிய உணர்வு இலைமறை காயாக ஓடிக் கொண்டிருப்பது நிஜம்.
ரவி சார், “என்னடா வாய் ரொம்ப நீளுது?”
“சந்தேகம் கேட்பது தப்பா சார்?”
“இந்த அம்பி வேஷம் என்னிடம் வேண்டாம் டா.. நீ அந்நியனுக்கு மேல் நடிப்பவன்னு எனக்கு தெரியும்”
இரண்டு நொடிகள் மௌனத்திற்கு பிறகு ரவி சார், “சொல்லுங்க டா.. யாரு சொன்னது?”
“..”
“இந்த முறை சொல்லலைனா கண்டிப்பா சும்மா விட மாட்டோம்”
‘அப்போ சுமந்துட்டு விடுவீங்களா?’ என்று இந்த முறை சிவகுரு மனதினுள் கூறிக் கொண்டான்.
பி.டி சார் ராஜசேகரை பார்த்து, “என்ன டா அமைதியா நின்னுட்டு இருக்கிற? நீ தான் சொன்னியா?”
“இல்லை சார்”
“பொய் சொல்லாதே”
“நான் ஏன் சார் பொய் சொல்ல போறேன்?”
“அப்போ யாரு சொன்னது?”
“தெரியாது”
“அது எப்படி டா தெரியாம இருக்கும்?”
“…”
ரவி சார் சக்திவேலிடம், “உனக்கு தெரியும்னு எனக்கு தெரியும்.. சொல்லு யார் சொன்னது?”
“எனக்கு என்ன சார் தெரியும்?”
“உனக்கு எதுவும் தெரியாதா?”
சக்திவேல் உதட்டை தெரியாது என்பது போல் பிதுக்க, ரவி சார், “எதுவுமே தெரியாது?”
“தெரியாது சார்”
“அப்போ உன் மண்டையில் மூளைக்கு பதில் களி மண் தான் இருக்குதா?”
“தெரியலை சார்” என்ற பதிலில் அவனை முறைக்க மட்டுமே அவரால் முடிந்தது.
 
பிறகு பி.டி ஆசிரியர் சக்திவேல் அருகில் நின்றிருந்த மற்ற இருவரையும் நோக்கி, “நீங்க ரெண்டு பேரும் எந்த தப்பும் பண்ணலைனு எனக்கு தெரியும்.. இவன்க கூட சேர்ந்து சீரழியாதீங்க.. உண்மையை சொல்லிட்டு நல்ல பசங்களா இருங்க”
“…”
“பதில் சொல்லுங்க டா”
“எங்களுக்கும் தெரியாது சார்” என்றும் “எனக்கு தெரியாது சார்” என்றும் இருவரும் கூறினார்.
அவர், “இப்படி பொய் சொன்னா இவன்களுடன் சேர்ந்து உங்களுக்கும் டி.சி. தான் கிடைக்கும்.. பரவா இல்லையா?” என்றதும் ஒருவன் முகம் பயத்தை பிரதிபலித்தது.
அவனை பார்த்து அவர், “ஹ்ம்ம்.. சொல்லு.. உண்மையை சொன்னால் உன்னை விட்டுருவோம்” என்றதும் அவன் கலவரத்துடன் அவரையும் நண்பர்களையும் பார்த்தான்.