கன்னத்தில் முத்தமிட்டால்.. நீ !
பகுதி 1
மேக மங்கை மஞ்சள் பூசி குளித்திருக்க, அதை கண்டு மோகப்பார்வை வீசிய அவளின் காதலனாம் பகவலனின் ஒளிக்கீற்றில், வெக்கம் கொண்டு செவ்வண்ணம் பூசி, தன் முகத்தை மறைக்க ஓடிக்கொண்டிருப்பவளை துரத்தியபடியே, மேலேலுந்து கொண்டிருந்தான் காலை கதிரவன்…
அந்த அழகான காலை வேளையில், தன் கூடத்திலிருந்த படியே, “ஏலோய் முருகா, இன்னும் என்னடா பண்ணிட்டு இருக்க. அங்க பாரு கன்னுக்குட்டி பாலுக்காக கத்திக்கிட்டு கிடக்கு..
போதுமுன்டா நீ கறந்தது. விட்டா மடியையே கழட்டிட்டு தான் விடுவ போலவே… அதோட குட்டிக்கும் மிச்சம் விடு. இல்ல நாளையில இருந்து வேற இடம் பார்த்துக்கோ” என்று, தனது வீட்டு பசுகளிலிருந்து பால் எடுத்து வியாபாரத்திற்கு கொண்டு செல்லும் முருகனிடம் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார் பஞ்சவர்ணம்.
அவர் தான் அந்த வீட்டின் மூத்த உறுப்பினர். அவரின் சொல்லுக்கு மிஞ்சி, யாரும் ஒரு வார்த்தை பேசிடவும் தயங்குவார்கள். அவரின் கணவர் உயிரோடு இருந்த வரையிலும் கூட, அவர் வார்த்தை தான் முதலும் கடைசியுமாக இருக்கும்.
அனைவரிடமும் கராராக நடந்தாலும் பாசத்திலும், கருணையிலும் அந்த கடவுளுக்கு நிகரானவர்.
நல்ல விசயத்தை பாராட்டுவதோடு, தப்பு என்றால் கண்டிக்கவும், அதை சுட்டிக்காட்டவும் எந்த நிலையிலும், யாரானாலும் தவறிட மாட்டார். அதனாலேயே, அந்த ஊரில் எந்த ஒரு பிரச்சனை என்றாலும் முதலில் அனைவரின் எண்ணத்திலும் உதிக்கும் பெயர் பஞ்சவர்ணம் தான்.
அவரிடம் தைரியமாய் வம்பு பேசுவதும், எதிர் கேள்வி கேட்டு விளையாடும் உரிமையும் கொண்ட ஒரே நபர், அவரின் செல்ல பேரன் மட்டுமே. வேறு யாராக இருந்தாலும் இவரின் சொல் மட்டுமே ஓங்கி ஒலிக்கும் அவ்விடத்தில்….
“ஆத்தா, எப்பவும் கறக்கற அளவு தான் கறந்திருக்கேன். நம்ம வீட்டுல மட்டும் தான் நாட்டு மாடு பால் கிடைக்கும். அத நம்பி குழந்தைகளுக்காகவே, வாங்கறவங்களுக்கு கொடுக்கமேன்னு தான். சட்டுன்னு வேற ஆள மாத்தி, என் பொழப்புல மண்ணை போடாதிங்க!” என்று பணிந்து போய் தனது கேனை காட்டி பேசிய முருகனிடம்…
“முருகா, நீ சொல்றது வாஸ்துவம் தான். எல்லாரும் அதிகமா பால் கொடுக்குமின்னு வியாதிய விலைக்கு வாங்கி வளர்க்கறாங்க. எத்தனை சொன்னாலும் பணம் காசுக்கு கொடுக்கற முக்கியதுவத்தை மனுஷங்க உயிர் மேலையும் வைக்கனும். ஊகூம்… அதெல்லாம் காலம் கடந்து போச்சு.. இனி சொல்லி திருத்த முடியாது. பட்டா தான் திருந்துவாங்க.
நீ சொன்னது எல்லாம் சரி தான். அதோட நான், உன் பொழப்புல கை வைக்க நான் நினைக்கல அப்பு. அந்த குட்டியோட பசிக்கும் யோசிக்கணுமேப்பா நீ. எப்பவும் கறந்துட்டு போற அளவுன்னு நீ நினைக்கற.
வளர வளர அந்த கன்னுக்குட்டி பசி அதிகமா இருக்குமின்னு, பசுவுக்கு தெரியாதா.. அந்த பாலை கரந்து எடுக்கும் போது, தன் கன்னுக்கு இல்லாம போயிடுமோன்னு, அந்த தாய் மனசு வேதனை படுமே … அதான் சொன்னேன். புரியுதா?” என்றவரின் வார்த்தையில் இருக்கும் விசயம் புரிய,
“இன்னொரு முறை இப்படி ஆகாது.. ஆத்தா, இனி பார்த்தே நடந்துக்கறேன்” என்றபடி அங்கிருந்து சென்றவன், தங்கள் வீட்டுக்காக கொடுத்த பாலோடு வந்தவரை பின்னாருந்து அணைத்துக்கொண்டான் அவரின் அன்பு பேரன் கார்முகிலன்.
“பாட்டி, சூப்பர் போங்க. கன்னுக்குட்டிக்காக இவ்வளவு தூரம் யோசிக்க உங்களால தான் முடியும்… யூ ஆர் கிரேட் பாட்டி… லவ் யூ சோ மச்..” என்று அவரின் கன்னத்தில் இதழ் பதித்தவனை புன்னகையும், சிறு வெக்கமுமாய் எதிர் கொண்டவர்,
“என்ன ராசா இது, இப்படி கன்னத்த எச்சி பண்ணிட்டு” என்றவர், “நேத்து வந்ததே நடுஜாமத்துல தானே ராசா, இன்னும் சித்த நேரம் தூங்கியிருக்கலாமே. இன்னைக்குமா இவ்வளவு சீக்கிரமா எழுந்திருக்கணும்..!” என்று பாசத்தோடு, அவனின் தலைமுடியை கோதியபடி கேட்க,
“பாட்டி, எந்த நாட்டுக்கு போனாலும், நம்ம ஊர்ல ஒரு மணி நேரம் தூங்கினாலே கிடைக்கற அந்த சுகமும், புத்துணர்ச்சியும் எங்கையும் வராது. அதான் எப்பவும் போல நேரமே எழுந்துட்டேன்.
அதோட நான் பாரின் போய், வாங்கின எக்கூப்மெண்ட்ஸ் பத்தி பேச நம்ம மாறனை சீக்கிரமே வந்து பார்க்கறேன்னு சொல்லியிருக்கேன். அவனோட டைமிங் பார்த்து தானே மீட் பண்ண முடியும். இல்லாட்டி சார் செம பிசியாகிடுவார். அவனுக்காக காத்திருக்கறவங்கள நம்ம டிஸ்டப் பண்ண கூடாது. ஈவினிங் சீக்கிரமே வந்து கொஞ்ச நேரம் சேர்ந்து ரெஸ்ட் எடுத்துக்கறேன். சரியா பாட்டி.
இப்ப என்ன செய்யறீங்க, நீங்களே கிச்சன் போயி ஹாட்டா.. என்னோட டேஸ்ட்டுக்கு ஒரு காபி ரெடி பண்ணுங்க. நான் நம்ம வீட்டை சுத்தி, ஒரு ஜாக் போயிட்டு வந்திடுறேன்..” என்றபடி சிரிப்போடு விலகி செல்பவனை பார்த்தவருக்கு தோன்றியதெல்லாம்,
ஆறு அடிக்கும் அதிகமான உயரத்தில், கிராமத்து இளைஞர்களுக்கே உரித்தான பட்டை மீசையோடு, உழைப்பும் உடற்பயிற்சியும் சேர்ந்து கொடுத்த அழகான உடலோடு, தென்னகத்துக்கே உரித்தான கோதுமை நிறத்தில், பார்க்கும் யாரையும் சில நிமிடத்திலேயே வசியம் செய்திடும் அழகான கூர்மையான விழிகளோடும் இருக்கும் தனது பேரன் வாழ்க்கை எப்போது தழைக்கும் என்பதே….
படிப்புக்காகவும், வேலை விசயமாகவும் பல ஊருக்கும், நாடுகளுக்கும் சுத்தி திரிந்தாலும், எந்த நிலையிலும் பெண்களிடத்தில் தவறாக ஒரு பார்வையில்லாது, அன்போடும் நட்போடும் மட்டுமே பழகுபவனிடம், தாங்களும் எத்தனையோ முறை திருமண விசயமாய் பேசிவிட்டாலும், இதுவரையிலும் அதற்கு சம்மதம் கூறாது விலகி ஓடுபவனை, எப்படி பேசி சம்மதம் வாங்க என தெரியாது இருக்கிறார் ஊரிலுள்ள அனைவரின் பிரச்சனைக்கும் தீர்வு காணும் பஞ்சவர்ணம்….
செல்லும் முகிலனையே, அன்பாக பார்த்தவர் ஒரு பெருமூச்சோடு, தனது பேரனின் விருப்பத்திற்கு தகுந்தாற் போல, தன் கையாலேயே காபியை தயாரிக்க சென்றார்.
அவர் சமையறைக்கு செல்லும் போதே அங்கு முகிலனின் அன்னை கலைவாணி, காலையே குளித்து முடித்து, அழகாய் தலை முடிந்து, நெற்றியில் குங்குமம் துலங்க, மகாலட்சுமி போல என்றும் மாறா புன்னகையோடு, காலை பலகாரத்திற்கான வேலையில் ஈடுபட்டிருக்க, தனது மருமகளின் தெய்வீக அழகை ரசித்தபடி, பாலோடு வந்து அடுப்படியில் நிற்பவரிடம்,
“அத்தை, எதுக்கு நீங்க இங்க வந்தீங்க. பாலை நானே வந்து வாங்கியிருக்க மாட்டேனா, ஒரு சத்தம் போட்டிருந்தா.. கொடுங்க” என்றவரே பாலை வாங்க கை நீட்டியவரிடம் தராது,
“அம்மாடி வாணி, என் பேராண்டிக்கு, என் கையால காபி தண்ணி போட்டு கொடுக்கணுமின்னு வந்தேன். நீ உன்னோட புருஷனுக்கு போடு.. நான் என்னோட ராசாக்கு போட்டுட்டு போயிடுறேன்..” என்றிட,
தனது மாமியாரின் பேரன் மீதான பாசமும், காலை தனது பாட்டி போடும் காபியை முகிலன் எவ்வளவு தூரம் விரும்புவான் என்பதையும் அறிந்தவர் என்பதால், பாலை மட்டும் காய்ச்சி கொடுத்துவிட்டு, வேலையாட்களுக்கு செய்ய வேண்டிய வேலையை சொல்லியபடி விலகி நின்றார் மகிழ்வோடே….
மாமியாரும், மருமகளும் அந்த வீட்டை பொறுத்த வரையிலும், தாய் மகளை விட கூடுதலான பாசத்தோடு இருப்பதால், எப்போதும் மற்றவரின் இடத்தையோ, உரிமையையோ பறிக்க நினைப்பதே இல்லை எனும்போது பிரச்சனைக்கும் வழியே இல்லை.
தனது ஜாக்கிங் முடித்து வந்த முகிலன், பாட்டி தந்த காபியை ரசித்து குடித்துவிட்டு, “பாட்டி உலகத்துலையை என்னோட டேஸ்ட் தெருஞ்ச ஒரே ஆள் நீங்க தான்…” என்றவரே, கன்னத்தில் முத்தமிட்டவன், துள்ளி குதித்து மாடியேறினான், தனது அலுவலை பார்க்க தயாராகவென..
அவனின் செயலில் எப்போதும் போல, ‘அந்த பயலுக்கு இதே வேலையா போச்சு, இதுக்காகவே சீக்கிரமா பேத்திய கூட்டிட்டு வந்திடனும். என்னோட ஊட்டுகாரர் கூட இத்தனை முத்தம் கொடுத்திருக்க மாட்டாரூ’ என்ற எண்ணத்தோடு, காலை உணவு தயாரா என பார்க்க சென்றார், பேரன் வரும் போது நேரம் தவறாது இருப்பதற்காக…
தனது அறைக்கு வந்த முகிலன், சில நிமிடத்திலேயே, குளித்து, தயாராகி, கம்பீரமாய் பார்மல் உடையணிந்து வந்தவன், ஏற்கனவே தனக்காக காத்திருந்த தந்தை, தனஞ்செயனை கண்டு சிறு புன்னகையோடு, “என்ன அப்பா, எனக்காக காத்திருக்காம நீங்க சாப்பிடுங்கன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். எப்ப பாரு இப்படியே வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க” என்றிட,
மகனின் அக்கறையில், மனதில் சந்தோஷம் இருந்தாலும், வெளியே, “என்ன முகிலா செய்யறது. நீ இருந்தா, உனக்கு சாப்பாட்ட கண்ணுல காட்டிட்டு தான், எனக்கு போடுவேன்னு என்னை பெத்த ஆத்தாவும், உன்னைய பெத்த ஆத்தாவும் ஒத்தக்கால்ல இல்ல நிக்கறாங்க. அப்புறம் காத்திருக்காம என்ன செய்ய….?!” என்று சோகம் போல சொல்லிய வேளை,
“ஏதோது, அத்தை கேட்டீங்களா.. உங்க புள்ள சொன்னத?! நாங்க சாப்பாடு போட மாட்டோமின்னு சொன்னோமா.. பையன விட்டுட்டு, ஒரு வாய் சோறு இறங்காது. அவன் வரட்டுமின்னு பிடிவாதம் பிடிச்சு உக்காந்துட்டு இப்ப பேச்ச பாரு..” என்ற படியே,
இருவருக்கும் பிடித்தமான காலை உணவுகளை டேபிளில் பரப்பியவாரே சொன்ன வாணிக்கு, அவர்களோட சாப்பிட தயாராய் அமர்ந்திருந்த பஞ்சவர்ணம், “அவன் கிடக்குறான் ஆத்தா, புள்ளைய பார்த்தா.. பெத்தவளும், கட்டுனவளும் கண்ணுக்கே தெரியாது இவங்க பரம்பரைக்கே … அதுல என் புள்ளை மட்டும் விதிவிலக்காவா இருந்திட போறான்! நாளைக்கே நம்ம முகிலனுக்கு வாரிசு வந்தா அவனும் இதையே தான் செய்ய போறான்” என்று தனது கணவர் உட்பட எல்லாருமே, தங்கள் பிள்ளைகள் மீது கொண்ட பாசத்தை, அங்கலாய்ப்பாய் சொல்வது போல சொன்னாலும், அதில் பெருமையே அதிகமாய் இருந்தது.
பாட்டியின் பேச்சில் சிரிப்போடு, தந்தையின் முகம் பார்த்த தமையனுக்கோ அவன் மீதான அனைவரின் பாசமும் எப்போதும் போல தெளிவாகிட, அதே நிறைவோடு தனது காலை உணவை உண்டு கொன்டிருந்தவன் கடைசியாக அவர் சொன்ன விசயத்தில் முகத்தில் இருந்த புன்னகை மறைந்து ஒரு வித இறுக்கம் ஆட் கொண்டது.
அவனின் முக மாற்றத்தை பார்த்தவாரே, உணவை தொடர்ந்த பஞ்சவர்ணம், முகிலன் உணவு வேளை முடிந்து கை கழுவ எழும்சமயம் சரியாக, “அப்பு, ராசா… மங்கைய போய் ஒரெட்டு பார்த்து வர்றலாமே.. அவளுக்கு யார் இருக்கா… உன் மேல உசுரையே வச்சிருக்கா… நீ வீம்புக்கு அவள போய் பார்க்காம, மாச கணக்கா திரியற… பாவம்ய்யா…!” என்றதும்…
“பாட்டி, தயவு செஞ்சு இந்த விசயத்தில நீங்க தலையிடாதிங்க.ப்ளீஸ்.. உங்க பேச்சை, இந்த ஒரு விசயத்துல மட்டும் என்னால கேட்க முடியாது…” என்று சொல்லிவிட்டு, தன் தந்தை மற்றும் தாயிடம் தலையாட்டி விடை பெற்றவன், விரைவாக சென்று தனது வாகனத்தை கிளப்பியிருந்தான்… அவனின் வாகனமோ, வேகம் பிடித்தது அவன் கோபத்தை உணர்ந்தது போல….