மைதிலியிடம் இருந்து வந்த போனை பார்த்ததும் அதிர்ந்து விழித்த கண்ணன் “இது கனவா? நனவா?”, என்று நினைத்து தன் கையையே கிள்ளிப் பார்த்துக் கொண்டான்.
“இவ நமக்கு கால் பண்ண மாட்டாளே? ஒரு வேளை அதிக நாள் அவ கூட டைம் ஸ்பெண்ட் பண்ணதுனால மனசு மாறிட்டாளா?”, என்று யோசித்தவன் அடுத்த நொடி “வாசு அண்ணா”, என்று அலறி இருந்தான்.
வீட்டில் பொண்டாட்டி சமைக்காததால் வேறு வழியில்லாமல் கேண்டீன் இட்லியை விழுங்கிக் கொண்டிருந்த வாசுதேவன் கண்ணன் அழைத்ததும் “உலகத்துல என்ன வேலைனாலும் பாக்கலாம் பா. ஆனா ஒரு பெரிய மனுசனுக்கு அல்லக்கையா மட்டும் இருக்கவே கூடாது”, என்று நினைத்து கொண்டு கண்ணன் முன் நின்றான்.
“என்ன ஆச்சு சார்? எதுவும் பிரச்சனையா?”, என்று கண்ணனைப் பார்த்து கேட்டான்.
“எதுக்கு சார் பயம்? என்ன பயம் பயந்தாலும் நடப்பதை மாத்தா முடியுமா?”
“வாசு அண்ணா!”
“சே, நான் ஒரு லூசு. சாரி சார். அதெல்லாம் நீங்க பயப்படுற மாதிரி எதுவும் நடக்காது. அவங்க பிரண்ட்ஸ் ஏதாவது சொல்லிருப்பாங்க. அதான் பண்ணுவாங்க”
“அப்படியா?”
“ஆமா சார், இத்தனை நாள் பண்ணாதவங்க. இப்ப பண்றதுக்கு அது தான் காரணமா இருக்கும். நீங்க பேசுங்க”
“சரி, எதுக்கும் நீங்க இங்கயே இருங்க”
அங்கிருந்த இட்லியை ஒரு பார்வை பார்த்து விட்டு கண்ணன் அருகில் அமர்ந்தான் வாசு.
இந்த கலவரத்தில் மைதிலி போன் கட் ஆகி விட்டது.
“பெரிய இதுல போன் பண்ணு பண்ணுனு சொன்னான். பண்ணா அட்டென்ட் பண்ண மாட்டிக்கான். மூஞ்சையும் முகரையும் பாரு. இத்தனை நாள் மாதிரி பண்ணாமலே இருந்துருக்கணும். இவங்க பேச்சை கேட்டு பண்ணது தப்பு”, என்று வாய் விட்டே புலம்பிக் கொண்டிருந்தாள் மைதிலி.
அப்போது அவளை அழைத்தான் கண்ணன். “உடனே எடுக்க கூடாது. இவன் மட்டும் எடுத்தானா?”, என்று இவள் புலம்பும் போது அங்கே கண்ணனோ “அண்ணா, எடுக்க மாட்டிக்காளே “, என்று புலம்பிக் கொண்டிருந்தான்.
“அவங்க போன் பண்ணி நீங்க எடுக்காம இருந்தீங்கள்ல? அதான் அவங்களும் அப்படி இருக்காங்க. இப்ப பேசுவாங்க”, என்று வாசு சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் அழைப்பை ஏற்று விட்டாள் மைதிலி.
எடுத்ததும் “நான் போன் பண்ண உடனே எடுக்க மாட்டியோ?”, என்று கடுப்புடன் கேட்டாள் மைதிலி.
அதே கேள்வியை கேட்க அவனுக்கும் ஆசை தான். ஆனால் காதல் மனைவியை அப்படி அவனால் கேட்டு விட முடியுமா?
“இல்லை மைத்தி உன் போன் வரும்னு எதிர் பார்க்கவே இல்லையா. கைலே வச்சு அதிர்ச்சியா பாத்துட்டே இருந்தேன். கட் ஆகிட்டு. எப்படி இருக்க?”
“அது அது வந்து.. சும்மா தான். சரி நீ என்ன சாப்பிட்ட?”
“பேச்சை மாத்தாத. நான் போன் பண்ணதே, உன்னைப் பத்தி விசாரிக்க தான்”
“என்னது என்னைப் பாத்தியா? என்ன விசாரிக்க போற?”
“உன் பேர் கண்ணன். நீ டாக்டர்னு மட்டும் தான் தெரியும். வேற எல்லாம் தெரியனும்ல?”
“எதுக்கு?”
“எதுக்கா? நான் உன் வொய்ஃப் தான? அப்ப தெரிஞ்சிக்கணும் தான?”
எச்சில் விழுங்கியவன் “இத்தனை நாள் இல்லாம இன்னைக்கு ஏன் கேக்குற? ரூம்ல இருக்குற குட்டிச்சாத்தான் எதுவும் கேக்க சொல்லுச்சா?”, என்று கேட்டான்.
“இவன் எப்படி கண்டு பிடிச்சான்?”, என்று அவள் ஒரு நொடி யோசிக்கும் போதே அவனுக்கு உண்மை விளங்கியது.
“என்னை யாரும் எதுவும் கேக்க சொல்லலை. நானா தான் கேக்குறேன். சரி சொல்லு. உங்க வீடு எங்க இருக்கு? வீட்ல யாரெல்லாம் இருக்கா? அப்பா அம்மாவெல்லாம் என்ன செய்றாங்க?”, என்று கேள்விகளை அடுக்கியவளை எப்படி சமாளிக்க என்று தெரியாமல் வாசுவைப் பார்த்தான்.
வாசுவோ, கண்ணன் எப்ப போனை வைப்பான், என்று நினைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.
கேள்விகளின் நாயகியோ “சரி சரி இதெல்லாம் போன்ல நான் தெரிஞ்சிக்க வேண்டாம். அடுத்த வாரம் நான் ஊருக்கு வரேன். அப்ப தெரிஞ்சிக்கிறேன்”, என்று அவனுக்கு யோசிக்க அவகாசம் கொடுத்தாள்.
“அடுத்த வாரம் வரியா? எப்பன்னு சொல்லு நான் கூப்பிட வரேன்”
“சரி சொல்றேன். ஆனா ஒரு கண்டிஷன்”
“என்ன மைத்தி?”
“என்னை கூப்பிட வா. ஆனா திருப்பி கொண்டு வந்து விட வர வேண்டாம்”
“என்ன நீ? நேர்ல பாத்தா அப்படி உருகுற? இன்னைக்கு நானே போன் பண்ணிருக்கேன். நீ பேச மாட்டிக்க?”
“அட பாவி நானே நீ என்ன கேள்வி கேட்டு சாகடிப்பன்னு பயத்துல இருக்கேன். இப்ப போல இப்படி எல்லாம் பேசுறாளே”, என்று நினைத்தவன் “இல்லை வீட்ல போய் பேசலாம்னு நினைச்சேன்”, என்றான்.
“வீட்டுக்கு போக எவ்வளவு நேரம் ஆகும்?”
“ஒரு மணி நேரம் ஆகும்”
“வீட்டுக்கு போக ஒரு மணி நேரம், நீ ரெப்ரெஷ் ஆக ஒரு மணி நேரம். மணி இப்பவே ஒன்பது. அதெல்லாம் என்னால அவ்வளவு நேரம் வெயிட் பண்ண முடியாது. சரி எனக்கு ஒரு டவுட். அதுக்கு மட்டும் பதில் சொல்லிட்டு வச்சிரு”
“அடுத்து என்ன கேள்வி கேக்க போறான்னு தெரியலையே”, என்று நினைத்தவன் “என்ன டவுட் மா? கேளு”, என்றான்.
“நான் அன்னைக்கு பாட்டுப் பாடின நாள், உனக்கு இந்த அளவுக்கு மூளை இருக்கான்னு அனுப்பிருந்தியே ஏன்?”
“அதுவா? அன்னைக்கு நீ இது எனக்கு சொந்தமான பாட்டுன்னு சொன்னல்ல? அதை புரிஞ்சிக்கிற அளவுக்கு மூளை இருக்கான்னு கேட்டேன்”, என்று சொல்லிக் கொண்டே வந்தவன் “ஐயையோ உளறிட்டேனே”, என்று நினைத்து நாக்கை கடித்துக் கொண்டான்.
“ஏய், அப்ப அன்னைக்கு நீ இங்க வந்துருந்தியா?”, என்று அதிர்ச்சியாய் கேட்டாள் மைதிலி.
“ஹ்ம் ஆமா”
“என்னைப் பாக்கவா?”
“இல்லை, நான் எழுதிக் கொடுத்த பாட்டை நீ எப்படிப் பாடுறன்னு பாக்க. படுத்து தூங்கு”, என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டான்.
“அப்பாடி, கட் பண்ணிட்டேன்”, என்று புன்னகையுடன் வாசுவைப் பார்த்தான் கண்ணன்.
“ஊருல இருக்குற எல்லா ஆம்பளையும் பொம்பளைக்கு பயந்து தான் ஆகணும் போல?”, என்று எண்ணிக் கொண்டு “என்ன சொன்னாங்க சார்?”, என்று கேட்டான் வாசு.
“கொஞ்சம் சிக்கல் தான் சார். நாளைக்கு என்ன பண்ணலாம்னு யோசிப்போம். நீங்க வீட்டுக்கு போங்க”
“சரி நீங்க வீட்டுக்கு போகலையா?”
“சாப்பிட்டு போகணும் சார்”
“பாதி சாப்பாட்டுல எழுப்பிட்டேனா? சாரி அண்ணா?”
மனதுருகிய வாசு தேவன் “பொண்டாட்டி ஊருக்கு போய்ருக்கா சார். அதான் சாப்பிட்டு கிளம்பலாம்னு இருந்தேன். இன்னும் சாப்பிட ஆரம்பிக்கல. நான் மெதுவா போய்க்கிறேன். நீங்க கிளம்புங்க”, என்றான்.
கண்ணன் கிளம்பி சென்றதும் அவனை பற்றியே யோசித்துக் கொண்டிருந்த வாசு தேவன் சாப்பிட மனதில்லாமல் காய்ந்த இட்லியை அங்கிருந்த நாய்க்கு வைத்து விட்டே வீட்டுக்கு சென்றான்.
அங்கே ரூமில் முகம் சிவக்க அமர்ந்திருந்தவளை கண்ட பிரேமாவும் ஆர்த்தியும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
“ஏய், நீ காதல் கவிதை எல்லாம் பேசி அப்படியே வெட்கத்துல முகம் சிவந்து உக்காந்துருப்பேன்னு பாத்தா கோபத்துல இருக்க? அண்ணா என்ன சொன்னாங்க?”, என்று கேட்டாள் பிரேமா.
“பேசிட்டு இருக்கும் போதே, கட் பண்ணிட்டாங்க. அதான் கோபம் வந்துட்டு”, என்று பாவமாய் சொன்னாள் மைதிலி.
“ஐயையோ! எதுக்கு வச்சிட்டாங்க. என்ன பேசுனிங்கன்னு சொல்லு”, என்று கேட்டாள் ஆர்த்தி.
“அதெல்லாம் வீட்டுக்கு வரேன்னு எல்லாம் சொல்ல மாட்டா வாசு அண்ணா”
“அப்புறம் என்ன? ஈஸியா சமாளிச்சிறலாம்”
“ஹிம் சரி. ஆனா எனக்கு யோசனை எல்லாம் அவளைப் பத்தியே இருக்கு”
“நீங்க பயப்படுற மாதிரி எதுவும் நடக்காது”
“சரி நீங்க உங்க வேலையை பாருங்க”
“ஹிம் சரி”, என்று சொல்லி விட்டு எழுந்து கொண்ட வாசு இரண்டடி எடுத்து வைத்து விட்டு “சார்”, என்று அழைத்தான்.
“சொல்லுங்கண்ணா”
“ஏற்கனவே பயந்து போய் இருக்குற உங்களை மேலும் பயமுறுத்துறேன்னு நினைக்காதீங்க. ஆனா நம்ம நினைக்கிற மாதிரி இல்லாம மைதிலிக்கு எல்லாமே நினைவு வந்துருச்சுன்னா?”
“இதற்கு பதில் அந்த கடவுள் கிட்ட தான் இருக்கு அண்ணா. என் விதியை எழுதுனது அவர் தான?”, என்றவன் ஒரு விரக்தி சிரிப்பை உதிர்த்தான்.
அவனுடைய சோகத்தை காண முடியாமல் அங்கிருந்து சென்று விட்டான் வாசுதேவன்.
“எப்படியும் ஒரு நாள் நான் அனைவர் முன்னிலையிலும் குற்றவாளிக் கூண்டில் நின்று தான் ஆக வேண்டும்”, என்று எண்ணிக் கொண்டவனின் கண்களில் கண்ணீர் வந்தது. அவன் உதடுகள் “அம்மா”, என்று முணுமுணுத்தது.
மைதிலி தன்னை விட்டுச் சென்றால் மொத்த சாம்ராஜியமும் சிதைந்தே போய் விடும். சென்று விடுவாளா? அவள் மனதில் எப்படியும் இடம் பிடிக்க வேண்டும். இடம் பிடித்தே தீர வேண்டும்.
அவளிடம் பேசப் போகும் விஷயங்களை கோர்வையாக யோசித்து வைத்தான். ஆனால் அவள் கேட்கப் போகும் கேள்விகளுக்கு முன்னாடியே அவனால் விடையை சிந்திக்க முடியுமா? விடை அளிக்க முடியாத கேள்விகளை அவள் கேட்க கூடாது என்று கடவுளிடம் மனுப் போடுவதைத் தவிர வேறு வழி இல்லை அவனுக்கு.
அங்கே மைதிலியின் எண்ணமோ இன்று கிளாசில் எல்லாரும் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை நினைத்தே இருந்தது.
இத்தனை நாள் பேசாமல் இருந்து சாகடித்தவர்கள் இனி என்ன செய்வார்களோ?
ஆனால் அவள் கிளாசுக்கு சென்ற போதோ அவளை பற்றிய கேள்விகளை விட கண்ணனைப் பற்றியே அதிகம் இருந்தது.
எல்லாருக்கும் பதில் அளித்தவள் “மாயக்கண்ணன், ரெண்டு நாள்ல எல்லாரையும் மயக்கிட்டான்”, என்று எண்ணிக் கொண்டாள்.
அதன் பின் நாட்கள் அதன் போக்கில் சென்றது. அவனுக்கு அதன் பின்னர் மைதிலி போன் செய்யவும் இல்லை. அவனும் அவளை அழைக்க வில்லை. ஆனால் எப்போதும் போல் மெஸ்சேஜ் மட்டும் அனுப்புவான் கண்ணன்.
என்னவெல்லாம் கேட்க வேண்டும் என்று அவள் கேள்விகளை லிஸ்ட் போட்டாலும் அவள் தோழிகளும் பல சந்தேகங்களை கிளப்பினார்கள்.
உன்னோட தாலி எங்க? உங்க கல்யாண போட்டோ இருக்கா? இப்படி பல கேள்விகளை கேட்டு அவளை சாகடித்தார்கள் என்றால் அவனை சாகடிக்க அவள் பல விடை தெரியா கேள்விகளுடன் அந்த வார வெள்ளிக் கிழமை காலையில் அவனை அழைத்தாள்.
வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தவன் அவள் அழைப்பைப் பார்த்ததும் அவசரமாக எடுத்து காதில் வைத்தான்.
“சொல்லு மா எப்படி இருக்க?”
“ஹிம் நல்லா இருக்கேன். அப்புறம் சாயங்காலம் என்னை கூப்பிட வரியா? இல்லைன்னா வேலை இருந்தா சொல்லு. நான் பஸ்ல வரேன்”, என்று மைதிலி சொன்னதும் அவளைக் காண போகிறோம் என்று சந்தோஷமாக இருந்தாலும், அவள் கேட்க போகும் கேள்விகளை நினைத்து பயந்தவன் “உன்னைக் கூப்பிட வரதை விட எனக்கு வேற வேலை இல்லை”, என்றான்.
“சரி கிளாசுக்கு டைம் ஆச்சு வச்சிரவா?”
“ஹிம் சரி, சாப்பிட்டுட்டு போ”
“சரி”, என்று சொல்லி போனை வைத்தவள் இவன் யாரு நான் யாரு இவன் எப்படி ஏன் வாழ்க்கையில வந்தான் என்று யோசித்த படியே காலேஜ் செல்ல கிளம்பினாள்.
“கடவுளே இன்னைக்கு என்னை காப்பாத்து”, என்ற வேண்டுதலோடு அன்றைக்கு செய்ய வேண்டிய வேலைகளை மனதுக்குள் பட்டியலிட்டான் கண்ணன்.