UD:25
அவனது கர்ஜனையில் உடல் சிலிர்க்க, மிரண்டு விழித்தாள் மஹா… 
இதுவரை அவனிடம் இப்படியொரு தோற்றத்தை அவள் கண்டதே இல்லை… அவனது இன்னொரு முகத்தை கண்டவளின் சப்தநாடியும் ஒடுங்கியது போல் இருந்தது அவளுக்கு… 
அவளை நோக்கி அழுத்தமான காலடியுடன் வந்தவனின் கண்களில் வழிந்த கோபமும், இறுகிய முகமும், கோபத்தை கட்டுப்படுத்த முயற்சித்துக் கொண்டு இருந்த கைமுஷ்டியும் பார்க்க மஹாவிற்கு இதுவரை அவனை கண்டோ, அல்லது அவனுடன் சண்டையிடும் போதோ வராத பயம் இப்பொழுது அவனுடயை இந்த தோற்றத்தில் வந்தது….
காலையில் இருந்து கோபத்தின் பிடியில் சிக்கி  இருந்த நந்தனிற்கு இப்பொழுது அவளிடம் அதை அடக்க வழித்தெரியாமல் காட்ட நேர்ந்தது…. 
அவள் அருகில் வந்தவன் பற்களை கடித்து , “யாரு டி அவன்… இந்த நேரத்துல ரோட்டுல அவன் உன் கையை பிடிக்குறான் நீயும் சும்மா இருக்க நல்லா நா…” அவன் பேசி முடியும் முன் அவனை கையுயர்த்தி தடுத்தவள்…
நிமிர்ந்து அவனை ஒரு உணர்ச்சியற்ற பார்வையை பார்த்தவள், அவனது விழியை நிமிர்ந்து பார்த்தாள் நேருக்கு நேராக… 
அவளது நேர்க்கொண்ட பார்வையில் ஒரு நிமிர்வு இருக்க உறுதியான குரலில்,” அவங்க பெயர் கண்ணன்…” அவளது வாக்கியத்தில் முகம் சுளித்த  நந்தன்…
‘கட்டுன புருஷன் எனக்கு என்னைக்காச்சும் மரியாதை குடுத்து இருக்காளா… எப்பவும் அனிமல்ஸ் பெயர்  தான்… ஆனா கண்டவனுக்கு மட்டும் மரியாதை தரா பாரு… திமிரு டி…’ மனதில் அவளை திட்டியப்படி  மேலே சொல்ல என்பது போல் பார்த்து வைத்தான்…
அவனது முக சுளிப்பு மஹாவிற்கு மனதை ரணமாக்கி  வலிக்க  செய்த போதும் மேலே தொடர்ந்தாள், “காலேஜ்ல என்னோட சீனியர்… படிக்கும் போதே என்கிட்ட  பிரப்போஸ் பண்ணினாங்க… நான் முடியாதுன்னு சொல்லிட்டேன் …அதற்கு  அப்புறம் இங்க ஆஃபிஸ்ல தான் மீட் பண்ணினோம்… இன்னைக்கு ஈவினிங் திரும்பவும் லவ் பண்ணுறதாகவும், எனக்காக காத்து இருக்குறதாகவும் சொன்னாங்க நான்   முடியாதுன்னு சொல்லிட்டேன்… உடனே கையை பிடிச்சு கெஞ்சுனாங்க… அப்புறம் தான் உங்களுக்கு தெரியுமே….” என்று முழுவதும் சொல்லி முடிக்கும் போது அவள்  குரலில்  நக்கல் வழிந்ததோ என்னவோ…
ஆனால் அதை கவனிக்கும் மனநிலையில் தான் நந்தன் இல்லையே…
“உனக்கு கல்யாணம் ஆச்சுன்னு சொன்னியா இல்லையா…”அடக்கப்பட்ட கோபத்தில் அவளிடம் கேட்க,
“சொன்னேன்…” ஒற்றை வார்த்தையில் பதில் அளித்துவிட்டு முகத்தை திருப்பி கொண்டாள்…
அவளது செயலில் கடுப்பானவன், “என்னடி சொன்னான்….?” கண்கள் சிவக்க கேட்டவனை பார்த்து,
“அவனை விட்டுட்டு என்கூட வந்துருன்னு சொன்னான்…”நமட்டு சிரிப்புடன் சொல்லி விட்டு முகத்தை திருப்பிக் கொள்ள,
“ஏய்ய்ய்….”என்று கர்ஜித்தவன் அவள் கழுத்தை தன் வலது கைக் கொண்டு இறுகிப் பிடிக்க, அவனது இச்செயலில் அதிர்ந்தவள்,
“டேய் காண்டாமிருகம் விடுடா…. விடுடா தடிமாடு…. அவன் அப்படி சொன்னதுக்கு நான் என்ன பண்ணுவேன்…” அவனது கையை தட்டி விட முயற்சித்து முடியாமல் போக அவனை அடித்துக் கொண்டே கத்தினாள்…
அவளது கூற்றில் இருந்த உண்மை உரைக்கவும், தன் கைகளை தளர்த்தினான் மெதுவாக…
தன் கோபத்தை அடக்க முயற்சி செய்ய அவளுக்கு முதுகு காட்டி நின்று தன் பின்னங் கழுத்தை அழுத்திக் கோதியபடி நின்றான்.,  
அவனது செயலில் மஹாவின் மனம் சுக்கு நூறாய் உடைத்து போக… அவனது முதுகை உற்று நோக்கியவள்… சட்டென தன் அறைக்குள் சென்று படுக்கையில் பொத்தென்று விழுந்தாள்…
மனம் முழுவதும் ரணமாகி இருக்க… அழக் கூட தோன்றவில்லை அவளுக்கு… ஏன் தனக்கு மட்டும் இவ்வாறு நடக்கிறது என்று யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் விளங்கியது….
அது இந்த பந்தம் காதலால் தொடங்காததே காரணம் என்று… நிபந்தனையின் பொருட்டு நடந்ததால் தான் இருவருக்கும் ஒத்து வரவில்லை என்று எண்ணினாள்… 
இதுவரை  இருவருக்கும் நடுவில் சண்டைகள் இருந்து வந்தது தான்… அவள் போட்ட  கண்டிஷனால் தன்னை அவன் வருத்தி இருந்த போதும் அவன் மீது மொட்டிட்ட காதலால் அதை பெரிது படுத்தவும்மில்லை, பெரிதுபடுத்த தோன்றவும்வில்லை மஹாவிற்கு…ஆனால் இன்று முதல்முறையாக அவன் மேல் ஆத்திரமும் எரிச்சலும் வந்தது… 
ஏன் இவ்வாறு செய்தான் என்றே யோசிக்க தோன்றியது… தான் என்னதான் கண்டிஷன்ஸ் போட்டாலும் அந்த சுழ்நிலையில் மனைவி என்று பார்க்க வேண்டாம் ஆனால்  ஒரு பெண்  என்று எண்ணியாவது நின்று இருக்கலாமே… ஆனால் நிற்காமல் போகும் அளவிற்கா  நான்   தகுதி இல்லாமல் போனேன் என்று எண்ணியவளுக்கு தன்மேலேயே கோபமாக வந்தது… 
‘என்ன  மாதிரியான வாழ்க்கையை வாழ்கிறோம்  திருமணத்தின் முன் அனைவரின்  செல்ல  இளவரசியாக  வலம் வந்தவள் இன்று தன்னுடைய ஈகோவினாலும் வீம்பினாலும் பட்டினியாக இருப்பதும் அல்லாமல் நிம்மதியில்லா ஒரு வாழ்க்கையை வாழ்ந்து தன்னையும்  வருத்திக்கொண்டு  நந்தனையும் கஷ்டப்படுத்துகிறோம்…’ என்று எண்ணியவளுக்கு அழுகையாக வந்தது… 
தன் அழுகையை விழுங்க முயற்சி செய்தவளுக்கு தொண்டை அடைப்பது போல் இருக்க….தன் துக்கத்தை அடக்கிக் கொண்டு தண்ணீர் அருந்துவதற்காக  வெளியே வந்தவள், சோஃபாவில் சாய்ந்து கைகளை தலைக்கு கீழ் குடுத்து, டீபாயில் கால்களை நீட்டி கண் மூடி அமர்ந்து இருந்தவனை பார்த்தவளுக்கு மேலும் துக்கம் தொண்டையை அடைக்க… அதற்கு மேல் அங்கு நிற்காமல் வேகமாக கிட்சனிற்கு செல்லும் போது டைனிங் டேபிளில் சிந்தி இருந்த பாலும், கீழே இருந்த பிரெட்டையும் கண்டவளுக்கு மேலும் அழுகை முட்டிக் கொண்டு வந்தது..,
பின் அவற்றை எல்லாம் சுத்தம் செய்துவிட்டு, தண்ணீரை அருந்தினாள் பசிக்கு…. ஆனால் அந்த தண்ணீரால் அவளது மனதில் இருந்த வெம்மையும், பசியும் அடங்காது போனது…
சண்டையிடும் போது மஹா தன் அறைக்குள் சென்றதும் திரும்பிப் பார்த்தவன், சோஃபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டு அடுத்து என்ன செய்வது என்று தீவிர யோசனையில் ஆழ்ந்தான்…  
சிறிது நேரத்தில் அவளது அறை கதவு திறக்கும் சத்தத்தில் லேசாக கண் விழித்து பார்த்தவன், மஹாவும் தன்னை பார்த்து விட்டு கிட்சன் செல்வதை கண்டு மனதில் ஒருவித வலியை உணர்ந்தான்…
பின் அவள் சிதறிய உணவை சுத்தம் செய்வதை பார்த்துவிட்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டான் அமைதியாக…
பின் வெகு நேர சிந்தனையின் முடிவாக, ஒரு முடிவு எடுத்தான் நந்தன்… 
அவள் மீண்டும் அறைக்குள் சென்று விட… 15 நிமிடங்கள் கழித்து நந்தன் மெதுவாக மஹாவின் கதவின் கைப்பிடியில் கை வைக்க சற்று தயங்கி நின்றவன், 
பின் ஒரு உறுதியுடன் அவளது அறை கதவை மெதுவாக திறந்து பார்க்க. அவன் யுகித்தது போல அவள் அறையில் இல்லாமல் குளியலறை இருந்தாள்… 
நீர் விழும் சத்தத்தில் அவள் குளிக்கின்றாள் என்று உறுதி செய்து கொண்டவன். அவசரமாக அவளது கைப்பையை எடுத்தவனுக்கு தாம் செய்வது தவறு என்று குற்றவுணர்ச்சி எழ, சற்று யோசிக்க தொடங்கியவன்,
‘அவ என் பொண்டாட்டி… சோ… எனக்கு எல்லா உரிமையும் இருக்கு யாரும் எதுவும் சொல்ல முடியாது…’ அவனது மனம் மூளையுடன் போர் புரிய… கடைசியில் அவனது மனமே வென்றது…
அதன் பின் அவசரமாக அவளது கைப்பையை முழுவதும் ஆராய்ந்து முடித்தவனுக்கு… அவனது கடைசி  நற்ப்பாசையும் பொய்த்து போக… கோபம்  கன்னாபின்னாவென்று எகிறியது… இதற்கு மேல் இங்கு இருந்தால் தாம் அவளை அடித்து விடுவோம் என்று அஞ்சி… விறுவிறுவென அவ்வறையை விட்டு வெளியேறி தன் அறைக்குள் புகுந்துக் கொண்டான்…
ஷவரில் வெகு நேரம் நின்றவளின் எண்ணம் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு நடந்ததை சுற்றி வந்தது…
எப்பொழுதும் போல் ஆஃபிஸில் இருந்து பேருந்தில் தன் ஸ்டாப்பிற்கு வந்த இறங்கியவளின் கண்ணில் கண்ணன் தென்பட, எதுவோ ஒன்று சரியில்லை என்று தோன்றியது மஹாவிற்கு…. 
காரணம் இன்று காலையில் இருந்து அவனது பார்வையும் பேச்சும் மஹாவிற்கு சரியாக படவில்லை… 
அவளுக்காக காஃபி எடுத்து  வருவதும் , உணவை பகிர்ந்து கொள்ளலாம் என்று கேட்டதும் , வேலையில் உதவி செய்வதாக சொன்னதும் என்று அவனது நடவடிக்கைகள் ஏதோ உரிமை காட்டுவது போல் இருந்தது ….
அதனால் அவனை கண்டுகொள்ளாமல் அவனை தாண்டி செல்ல… அவனும் அவள் பின்னோடு வந்து அவளை காதலிப்பதாக சொல்ல அதை மறுத்து தனக்கு திருமணம் ஆகி விட்டதாக கூறியவளை முதலில் நம்பாத பார்வை பார்த்து வைத்தான்.
அவனது நம்பாத பார்வையை புரிந்துக்கொண்டு கொண்ட மஹா, “லுக் Mr.கண்ணன் உங்களுக்கு புரிய வைக்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை… நம்புனா நம்புங்க  இல்லாட்டி விடுங்க… இதுக்கு   மேல இத பத்தி பேச வேண்டாம்ன்னு நினைக்குறேன்… இதோட எல்லாத்தையும் விட்டுருங்க…” என்றவள் அவனை கடந்து செல்ல, முதலில் அதிர்ந்தவன்…பின்பு மீண்டும் ஒருமுறை  தனக்கு நேர்ந்த காதல் ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் என்ன பேசுகிறோம் செய்கிறோம் என்றே தோன்றாமல் மீண்டும் அவள் பின் ஓடி சென்று அவள் வழியை மறைத்தார் போல் நின்று …
“பிளீஸ் மஹா என்னை வேண்டாம்னு சொல்லாத … நான் உனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்… உன்னை ராணி மாதிரி பார்த்துக்குவேன்… பிளீஸ் எனக்கு ஒரு சான்ஸ் குடு…”என்று கெஞ்ச, அதில் அருவருத்து போனவள்,
“வாட் ஸ் திஸ் கண்ணன்… உங்க கிட்ட இதை நான் எதிர் பார்க்கலை… எனக்கு மேரேஜ் ஆயிருச்சுன்னு சொல்லுறேன் ஆனா இப்படி பேசுறீங்க… வழிய விடுங்க கண்ணன்…” அவனை சுற்றி கொண்டு போக முற்பட,
“பிளீஸ் மஹா என் ஃபீலிங்ஸை புரிஞ்சுக்கோ… “அவளை போக விடாமல் தடுத்து பேசியவனை கண்டு எரிச்சலாக வந்தது மஹாவிற்கு…. 
அவளை நகர விடாமல் வழியை மறித்து  நின்று கெஞ்சிக் கொண்டே நின்று இருந்தான்… 
இவனிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்துக் கொண்டு இருந்தவள் தொலைவில் நந்தனின் காரை கண்டதும்  மனதில் நிம்மதி பரவ காத்திருந்தாள்.
ஆனால் நந்தனோ இவளை கண்டும் காணாததை போல் அவள் அருகில் வந்ததும் காரின் வேகத்தை கூட்டி அவர்களை கடந்து சென்றுவிட்டான் கோவத்தில்…
அவன் அவளை கண்டு கொள்ளாமல் தாண்டி செல்லவும் அதிர்ந்து நந்தனின் கார் செல்வதையே பார்த்துக் கொண்டு இருந்தாள் மஹா…