UD: 19
காலை 5.30 மணி….
தன் மீது பஞ்சு மூட்டை ஒன்றை வைத்து அழுத்தியது போல் இருக்க…. கண் விழித்து பார்க்காமலே அது என்னவென்று யூகித்தவன் சிறு புன்னகையுடன் லேசாக அணைத்து கொண்டு படுத்திருந்தான்.
‘இவளுக்கு தெரிஞ்சு தான் இப்படி தூங்குராளா இல்ல தெரியாமல் பண்ணுறாளா? ம்ம்ம்… ஏதோ ஒன்னு… அவளுக்கு தெரிஞ்சா சும்மா இருக்க மாட்டா கொசுக்குட்டி பஜாரிகுட்டி ஆயிரும்….‘ மனதில் எண்ணிக் கொண்டவன் ஐந்து நிமிடம் கழித்து அவளை தன்னை விட்டு விலகி படுக்க வைத்தான்.
பின் எழுந்து சென்று தன்னை சுத்த படுத்தி கொண்டவன் படுக்கையில் குழந்தையை போல் கால்களை சுருக்கி சப்புக் கொட்டி தூங்குபவளை கண்டு சிறிது நேரம் ரசிக்க. நேற்று வரவேற்பில் இருந்து வந்தது முதல் நடந்த வாக்குவாதம் அவன் நினைவில் வர, மீண்டும் கோபம் கண்ணை மறைக்க, கையில் இருந்த தூவாளையை சுற்றி அங்கு இருந்த நாற்காலியில் எறிந்து விட்டு தன் உடற்பயிற்சிக்காக சென்றுவிட்டான்.
காலை ஒன்பது மணியளவில் அனைவரும் டைனிங் டேபிலில், அந்த வீட்டின் மருமகள்களை தவிர மற்ற அனைவரும் அமர்ந்து இருக்க… அவர்களுக்கு உணவு பரிமாற பட்டது.
அப்பொழுது பத்மாநந்தன், “கண்ணா… இந்த வீக்குக்கு ஆபிஸ் ஒர்க் எதுவும் கமிட் பண்ணிக்காத….”
“வொய் பா…” என்று நந்தன் தந்தையின் முகத்தை பார்த்து கேட்க, களுக்கென்று சிரித்து விட்டாள் மஹா….
சூழ்நிலைக்கு சற்றும் பொருந்தாத அவளது சிரிப்பில் அனைவரும் அவளை பார்க்க, நந்தனின் பார்வை கூர்மை பெற்றது அவளை நோக்கி.
அனைவரும் தன்னை பார்ப்பதை உணர்ந்து, “சாரி… ” என்று அந்த இடத்தை விட்டு நகர போக,
“எதுக்கு பாப்பா சிரிச்ச?” கார்த்திகா கேட்க,
“இல்ல அது வந்து… ” பதிலை கூறினால் தன்னை தப்பாக நினைப்பார்களோ என்று பயந்தவளை கண்டு,
“சும்மா சொல்லுடா யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க… சொல்லு… ” என்று ஊக்குவிக்க,
“அது… ‘வொய் பா ‘ன்னு சொன்னதுக்கு தான் …” என்று இழுத்தாள்,
‘நினைச்சேன்… இவளுக்கு நம்மை அசிங்க படுத்தலைன்னா….. தூக்கமே வரதே….‘மனதில் அவளை வறுத்து கொண்டு இருக்க.
“இதுல என்ன இருக்கு மா…” வித்யா சந்தேகத்துடன் கேட்க,
“இல்ல அத்தை… ஒன்னு தமிழ்ல பேசணும் இல்ல இங்கிலிஷ்ல பேசணும்.. இரண்டும் இல்லாமல் பொங்கல்ல சிக்கன் குழம்பு விட்டு சாப்பிட்ட மாதிரி GM பேசவும் சிரிப்பு வந்துருச்சு…. தெரியாம சத்தமா சிரிச்சுட்டேன்…” நீண்டதொரு விளக்கத்தை கூறி முடிக்கவும்….
தண்ணீர் குடித்து கொண்டு இருந்தவனுக்கு கடைசி வார்த்தையை கேட்டு புரை ஏறிவிட, அருகில் நின்று கொண்டு இருந்தவள் பதறி. “அச்சச்சோ… தண்ணி குடிங்க….” தலையில் தட்டியப்படி தண்ணீர் கொடுக்கவும்….
இதை ‘பே‘ என அனைவரும் பார்த்துக் கொண்டு இருக்க…. அங்கு நிலவிய நிசப்தத்தை உணர்ந்து இருவரும் சுற்றி இருந்தவர்களை பார்க்க…
இவர்கள் இருவரையும் கண்டு அனைவரும் சட்டென சிரித்துவிட, “அண்ணி செம்ம போங்க…. நான் கூட நிறைய வாட்டி சொல்லி பார்த்துட்டேன் ஆனா அண்ணா கேட்கவே இல்ல… கேட்டா…. எனக்கு அம்மா, அப்பான்னு சொன்னா தான் பிடிக்கும்னு சொல்லுவான்… அப்ப ஏன் டா நடுவுல இங்கிலீஸை இழுக்கணும்னு கேட்டா… அது டிரென்டு அப்படின்னு சொல்லுவான் இனி அண்ணா இப்படி பேசுனா உங்க பொங்கல் சிக்கன் குழம்பு காம்பினேஷன் தான் நியாபகத்துக்கு வரும்…” என்று விட்டு அஹிலுடன் அனைவரும் சிரிக்க,
மஹாவும் அவன் கூறியதில் சிரித்து விட, எரிக்கும் பார்வை பார்த்து வைத்தான் அவளது மணாளன்….
“ஏய் கொசுக்குட்டி நீ மட்டும் தனியா சிக்குனேன்னு வை… உன்னை நசுக்காமல் விட மாட்டேன் டி…” அடிக் குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும்படி சொல்லியவனை கண்டு லேசாக அரண்டவள் பின் அவனால் என்ன செய்து விட முடியும் என்று முகத்தில் அலட்சியம் காட்ட.
அதைக் கண்டு நந்தனின் ரத்தம் அடுப்பில் கொதிக்கும் சாம்பாரை போன்ற இருந்தது.
“அதுசரி மா… GM ன்னு எதுக்கு சொன்ன?” வித்யா சந்தேகமாக கேட்க,
இந்த கேள்வியை சற்றும் எதிர் பார்க்காதவள், நந்தனை பார்க்க… அவன் கோபத்தை அடக்கிக் கொண்டு இருப்பது அவன் பல்லை கடிப்பதை பார்த்து அறிந்து கொண்டவள், ‘மஹா உனக்கு இன்னைக்கு நேரம் சுத்தமா சரி இல்ல… ஆர்வ கோளாறுல இப்படி உளறிட்ட சனி பகவான் நல்லா உச்சத்தில் இருக்காரு போல…‘ மனதில் எண்ணியவள்,
“அப்படியா சொன்னேன்…” முகத்தில் டன் கணக்காக அசடு வழிய கேட்க, ‘ஆம்‘ என தலையாட்டினார் வித்யா.
என்ன சொல்வது என்று புரியாமல் சில நொடிகள் முழித்தவள், பின்” அது வந்து அத்தை… எப்படி சொல்லுறது…” என்று இழுத்தவளை கண்டு நந்தன் ஓரக் கண்ணில் முறைத்து பார்த்தான்.
“சொல்லுங்க அண்ணி…” என்று அஹில் ஊக்குவிக்க,
“அது உங்க அண்ணா… ரொ..ரொம்ப…” திக்கியவளின் மண்டையில் லைட் எரிய,
“அது உங்க அண்ணா ரொம்ப சாப்ட்டு(soft), ரெஸ்பக்டெபல்(respectable) அதான் ஜென்டில்மேன்னு(Gentleman) பெயர் வச்சேன்.. அதை குறுக்கி GMன்னு சொன்னேன்….” வேகமாக ஒரு பொய்யை விட, நந்தன் வியந்து போய் அவளை நிமிர்ந்து பார்க்க…. அவளும் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
இதை பார்த்துக் கொண்டு இருந்த அனைவரும் ஒருசேர்ந்து“ஓ…” என உற்சாகத்தில் சத்தம் இட அதில் இருவரும் கலைந்தனர்.
சாப்பிட்டு முடித்து கை கழுவ சென்றவனின் பின்னோடு வந்தார் வித்யா.
அவரை கண்டு, “சொல்லுங்க சித்தி…” என்க,
“உண்மையாகவே உனக்கு ஏத்த ஜோடி தான் மஹா… உன் லைஃப் அவளால ரொம்ப கலர் ஃபுல்லா இருக்கும் பாரு… இரண்டு பேரும் சந்தோஷமா இருங்க…” தலையை தடவி மனதில் தோன்றிய அன்புடன் ஆசி வழங்கினார்.
அதற்கு சிறு புன்னகையை சிந்தியவன்,”தேங்க்ஸ் சித்தி..” என்றவனை பார்த்து புன்னகைத்து விட்டு செல்ல இரண்டு அடி எடுத்து வைத்தவர் இவன்புறம் திரும்பி,
“GMக்கு அவ சொன்ன விளக்கம் பொய்ன்னு தெரியும்… கண்டிப்பா அவ இப்படி எல்லாம் வைக்க மாட்டா… கரெக்ட்டு தானே? “என்று சொல்ல அதற்கு தன் பின்னந்தலையை கோதி அசடு வழிய நின்று இருந்தவனை பார்த்து சிரித்துவிட்டு சென்றார் வித்யா.
பின் ஹால் சோஃபாவில் தன் தந்தையுடன் அமர்ந்தவன்,”ஏன் பா 1 வீக் ஃபிரியா இருக்க சொன்னீங்க?” கேட்க,
“அது ஒன்னும் இல்ல கண்ணா… கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம் மறுவிடு, விருந்துன்னு இருக்கும் எல்லாத்தையும் முடிச்சுட்டு அப்புறம் வேலையை பார்க்கலாம்… ” என்று தன் தந்தை கூறியதை கேட்டு,
“இல்ல பா… பென்டிங் ஒர்க் நிறைய ஆயிரும்… இப்ப புதுசா பண்ண பாம்பே பிராஜக்ட் ஒர்க்கு நிறைய இருக்கு பா…” என்று இழுக்க, தன் மகனின் தோளில் கைப் போட்டவாறு சாய்ந்து அமர்ந்து,
“ஒர்க் எப்ப வேணும்னாலும் பண்ணலாம் பா…. ஆனா இது எல்லாம் ரொம்ப பிரிஸியஸான (precious) டைம்… நல்லா என்ஜாய் பண்ணு மேன்… லைஃப்ல இது எல்லாம் கூட என்ஜாய் பண்ணாமல் ஒர்க் பண்ணி ஒன்னும் பண்ண போறது இல்ல… ” என்று கூறியவரை புன்னகை முகத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தவன் தன் தந்தையை அணைத்து, “தேங்க்ஸ் பா….” என்க,
“ம்ம்ம்… பொங்கல்ல சிக்கன் குழம்பு…” என்று கூறிய தந்தையை பார்த்து பெரிதாக சிரித்தான் நந்தன்.
கிட்சனில் தன் அத்தைமார்களுடன் பேசியபடி வேலைகளை செய்து முடித்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் குட்டிபோட்ட பூனையை போல அவர்கள் பின்னே சுற்றிக் கொண்டு இருந்தாள் மஹா…
தன் தந்தையுடன் பேசிக் கொண்டு இருந்தாலும் அவனது விழிகள் தன்னவளையே பின் தொடர்ந்தது ஆச்சரியத்தில்….
“சரி பாப்பா நீ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு….” என்று கார்த்திகா கூற,
“இல்ல பரவாயில்லை அத்தை உங்க கூடவே இருக்கேன்… ” கார்த்திகாக்கு மறுப்பு தெரிவிக்க,
“சொன்னா கேளு பாப்பா… கொஞ்சம் நேரம் கழிச்சு நம்ம கடைக்கு போகணும்… தேவையான பொருள்கள் எல்லாம் வாங்கணும்… நாங்க முன்னாடியே வாங்கி இருப்போம் ஆனா உன் விருப்பப்படி வாங்கணும்ன்னு நினைச்சோம் அதான் வாங்கல…“என்றவரை புன்னகையுடன் பார்த்து இருந்தவளை,
“நாம எல்லாம் கொஞ்ச நேரம் கழிச்சு போலாம்… அதுவரை ஓய்வெடு பாப்பா…” என்று வாஞ்சையுடன் கூறியவருக்கு,
“சரிங்க அத்தை‘ஸ்….” என்று விட்டு தன் அறையை நோக்கி செல்லும் அவளையே சிரித்த முகத்துடன் பார்த்துக் இருந்தனர் கார்த்திகாவும்,வித்யாவும்.
தன் அறைக்கு வந்து படுக்கையில் படுத்தவளுக்கு தூக்கம் வரமால் புரண்டு படுத்துக் கொண்டு இருந்தவளின் மனம் முழுவதும் முன் தினம் அவன் பேசிய வார்த்தையிலே உழன்று கொண்டு இருந்தது.
‘என்னை பத்தி என்ன தெரியும்ன்னு நேற்று அப்படி பேசினான்… நான் அப்படி பட்ட பொண்ணு ஒண்ணும் இல்ல… எவ்வளவு அபாண்டமா என் மேல பழிய போட்டுட்டான்… ‘மனதில் புலம்பி கொண்டு இருந்தவள் பால்கனியின் புறம் திரும்பி படுக்க,
“ஐ…. ஊஞ்சல்….” மனதில் எழுந்த பரவசத்துடன் படுக்கையை விட்டு வேகமாக எழுந்தவள் பால்கனி நோக்கி ஓடினாள்.
இவள் கத்தவும், அவன் அறையினுள் நுழையவும் சரியாக இருந்தது.
அவள் ஊஞ்சலை கண்ட மகிழ்ச்சியில் அவனது வரவை கவனிக்கவில்லை…. ஓடி சென்று அந்த ஊஞ்சலில் அமர்ந்தவளுக்கு கால்கள் தான் எட்டாமல் போனது….
அது சற்று உயரமாக இருந்ததால், கால்களை ஊண்ணி அவளால் அதில் ஆட முடியாமல் போக திணறி போனாள்.
“சை… எவ்வளவு ஹைட்டா வச்சு இருக்கான்… லூசு காண்டாமிருகம்… இவனை மாதிரியே எல்லாரும் இருப்பாங்களா? கொஞ்சம் கீழ இறக்கி வச்சாதான் என்னவாம்.?” தன் கணவனை திட்டிக் கொண்டே ஊஞ்சலின் நுனியில் அமர்ந்து கால்களை எக்கி அதை ஆட்ட முயன்று தோற்றுக் கொண்டு இருந்தாள்…
இவள் பேசியதை பால்கனியின் நடைவாசலின் பின் நின்று இதை கேட்டு கொண்டு இருந்தவனுக்கு கோபம் வர,
“யாரு டி லூசு? நீ ஹைட்டு கம்மியா இருந்ததுக்கு நான் எப்படி பொருப்பாக முடியும்… கத்திரிக்கா சைஸ்ல இருந்துட்டு என்னை சொல்லுறீயா?”கோபத்தில் வெடிக்க,
“ஹேய்… என்ன நீ கத்திரிக்கான்னு சொல்லுற… திமிரா? எல்லாரும் யூஸ் பண்ணுற மாதிரி வச்சு இருக்கணும்… அது இல்லாமல் உன் சைஸ்ஸூக்கும், ஹைட்டுக்கும் ஏத்த மாதிரி வச்சது உன் தப்பு… செல்ஃபிஸ்(selfish)…” ஊஞ்சலில் இருந்து குதித்து அவனுடன் நேருக்கு நேர் சண்டைக்கு நின்றாள்.
“யாரு… நான் செல்ஃபிஸ்(selfish)? உன்னை விட நான் கம்மி தான்… நீ பண்ண வேலைக்கு…. எனக்கு வர கோபத்துக்கு ஏதாச்சும் பண்ணிடுவேன் பேசாம போயிரு…“கோபத்தில் ஏதேனும் பேசிவிட போகிறோம் என்று தன்னை கட்டுபடுத்த முயல,
அவனது மனையாள்,”நான் ஒன்னுமே பண்ணலை சும்மா என்னை ஏதாச்சும் சொல்லிட்டே இருந்த என்ன பண்ணுவேன்னு எனக்கும் தெரியாது… தள்ளுடா காண்டாமிருகம்…” செய்யாத தவறுக்கு தன் மேல் வீண்பழி சுமத்துவதும் இல்லாமல் தன்னை திட்டவும் செய்பவனை கண்டு கோபமும் அழுகையும் ஒருசேர வந்தது…
அதை அவன் முன் காட்டி தன்னை பலவீனப்படுத்தி கொள்ள விரும்பாதவள் அவனை சுற்றி கொண்டு அறையினுள் நுழைந்தாள்.
அவள் மீது முழு தவறும் இல்லை என்று தெரிந்துதான் இருந்தான். இருந்தும் நேற்று நிகழ்ந்ததற்கும், நிகழ போவதற்கும் அவளும் சம்பந்தம் உள்ளது என்ற ஒன்றே அவனை அவள் மீது கோபம் வர காரணமாக அமைந்தது.
தன்னை காண்டாமிருகம் என்று கூறி சென்றவளின் மீது கொலைவெரி எழ, “ஏய்… இனி நீ காண்டாமிருகம்ன்னு சொன்ன பல்லை தட்டி கைல குடுத்துடுவேன்…“அவள் பின்னேயே சென்றவன் அவளை எச்சரிக்க,
அதற்கெல்லாம் நான் அசருபவளா என்பதை போல் அவனை திரும்பி மிதப்பாக பார்த்துவைத்தாள்….
“என்னடி ஓவரா லுக் விடுற?”மனையாளின் பார்வையை கண்டு கடுப்பானான் நந்தன்.
“என் கண்ணு நான் பார்க்குறேன் உனக்கு என்ன வந்துச்சு… காண்டாமிருகம்…” கடைசியாக ‘காண்டாமிருகம்‘ என்னும் வார்த்தையை அழுத்தி சொல்ல. இங்கு இவனது ரத்த அழுத்தம் அதிகம் ஆனது.
“ஏய்…என்னடி ஓவரா போற… காலைல எல்லார் முன்னாடியும் இப்படியே சொல்லுற… இது மட்டும் அவங்களுக்கு தெரிஞ்சா என்னை பத்தி என்ன நினைப்பாங்க…?” கடுப்பின் உச்சியில் அவன் கத்த, அவளோ கூலாக,
“அதான் உன்னோட உன்மையான பெயரை சொல்லாமல் பொய் சொல்லி சமாளிச்சுட்டேனே… அப்புறம் என்ன போ போய் வேலையை பாரு தம்பி…” படுக்கையில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு கூலாக பேசியவளை கண்டு ஏகத்திற்கும் கடுப்பானவன்….
“உன்னை…” அவளை நோக்கி ஓர் அடி எடுத்து வைக்கவும் அறை கதவு தட்டவும் சரியாக இருந்தது.
தான் பேசியதில் கோபம் கொண்டு ஏதாவது திட்டுவான் என்று எதிர்பார்த்து இருந்தவளை காப்பதற்கு என்றே அறையின் கதவு தட்டபட்டது போல் இருந்தது அவளுக்கு…..
படுக்கையின் அருகில் நின்று கொண்டு இருந்தவனுக்கும் படுக்கைக்கும் நடுவில் இருந்த இடைவெளியில் நுழைந்து ,அவனை இடித்தும் இடிக்காதது போல் அறை கதவினை நோக்கி பாய்ந்தாள்.
அவளது செயலில் சற்று தடுமாறி கீழே விழ போனவன் இரண்டடி பின் சென்று தன்னை சமாளித்து நின்றான்.