“மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா;
ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்;
நிர்விக்னதா ஸித்யர்த்தம்;
ஆதொவ் விக்னேஸ்வர பூஜாம் கரிஷ்யே ” ,
கணீரென குரலில் சாஸ்திரிகள் ஸங்கல்பம் சொல்ல… த்ரிவிக்ரமன், நங்கை இருவரும் தம்பதி சமேதராக மனையில் அமர்ந்து,  அவள் ஆரம்பிக்கப் போகும் மழலையர் விடுதிக்கான வீட்டில், கணபதி ஹோமத்தினை ஸ்ரத்தையுடன் செய்து கொண்டிருந்தனர். அன்று நல்ல முகூர்த்த நாள் என்பதால், அவள் வேலைக்கு சேர்த்திருந்தோரையும், நெருங்கிய உறவினர் வட்டம் மற்றும் நட்புக்களை அழைத்து, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் வளர்த்து, முறையாய் அவளது தொழிலை, இதோ துவங்கியே விட்டனர்.
ஊரில் இருந்து வந்திருந்த வைதேகி மற்றும் ஸ்ரீராமுலு, விடுமுறை இல்லாததால் அன்று இரவே கிளம்ப, “போனதறவ வந்தபோது டூர் முடிச்சிட்டு இங்க வரேன்னு சொன்னிங்க, நேரே சென்னைக்கு போயிட்டீங்க, இப்ப என்னடான்னா காலையில வந்துட்டு சாயங்காலம் கிளம்புறீங்க?”, என வைதேகியிடம் சண்டையிட்டாள். ” லீவ் இல்லம்மா, என்ன பண்ண சொல்ற?”, என்று எப்பொழுதும் பாடும் பாட்டை பாட, “முதல்ல வீஆர்எஸ் வாங்கிட்டு வேலையை விடுங்க, வயசான காலத்துல பசங்க பேரப்பசங்க கூட இல்லாம, எப்ப பாரு ஓடிட்டு இருக்கீங்க. போதும் நீங்க சம்பாதிச்சது”, உரிமையாய் சிறிது கோபத்துடனும் கேட்டாள்.  எப்போதும் அவரிடம் இவள் இலகுவாய் பேசுவாள் தானே?
“நீ மொதல்ல பேரப் பசங்களை ரெடி பண்ணு, அடுத்த நாள் இங்க வந்துடறோம்”, பாயிண்டோடு மெல்லிய சிரிப்புடன் பதிலளித்தார், சிறிது தாமதமாக புரிந்துகொண்ட வைதேகி. “ம்ஹும் …. அத்த…”, செல்லமாய் சிணுங்கினாள் மருமகள்..
சற்று தொலைவில் மோகனசுந்தரத்துடனும், மைத்துனனுடனும் பேசிக்கொண்டிருந்த திரிவிக்ரமனின்  பார்வையென்னவோ அன்னையிடத்துக்கும், நங்கையிடத்துமே. அன்று விசேஷ நாள் என்பதற்காக பட்டுடுத்தி மிக நேர்த்தியாய் தயாராகி இருந்தாள் நங்கை.  த்ரிவிக் -கின் பேச்சைக் கேட்டு அவன் மனம் கட்டுப்பாடோடு இருந்தாலும், கண்கள் அவள் வசம் செல்வதை தடுக்க இயலவில்லை அவனால்.
இப்போது அவனது அம்மாவிடம் சிணுங்கி செல்லம் கொஞ்சும் மனைவியைக் கண்டு, “ஹய்யோ கொல்றாளே, ராட்சஸி”, என மனதுக்குள் நினைத்து நீளமாக பெருமூச்சு விட்டான்.
நங்கையின் குடும்பமும் மறுநாள் காலை கிளம்புவதற்கு முன்பதிவு செய்திருந்தனர். நங்கை நல்லாள் கேட்டுக் கொண்டதற்காக,  ஒரு நாள் அவர்களது பிரயாணத்தை தள்ளி வைத்தனர். நங்கையின் வீட்டு நிர்வாகத்தில், அவள் அன்னையின் சாயலை கண்டு மகிழ்ந்தார் மோகனசுந்தரம்.
இதைத்தவிர, நங்கையே, மழலையர் விடுதியின் துவக்க முன்னேற்பாடுகள் மற்றும் அதில் பணிபுரியும் வேலையாட்கள் நிர்வாகம் என அனைத்தையும் செய்வதைப் பார்த்தவர், “ஏம்மா, மாப்பிள்ளைதானே செய்யப் போறார்? இதுல[நிர்வாகத்தில்] கொஞ்சம்கூட கலந்துக்கவே இல்லையே?”, என்று கேட்டார்.
நங்கை பதிலளிக்கும் முன், அடுத்த அறையில் இருந்து வந்த  த்ரிவிக், “நாந்தான் மாமா அவளே பாத்துக்கட்டும்-ன்னு விட்டுட்டேன். எனக்கும் பிசினெஸ் இருக்கில்லாயா ? நங்கை வீட்ல சும்மாத்தானே இருக்கா?, இந்த லைன் பழகிகட்டும், எங்க கணக்குப்படி, எப்படியும் ஆறு மாசத்துல நம்ம இன்வெஸ்ட்மென்ட் திரும்ப வந்திடும். நங்கைக்கு பிடிச்சா இன்னும் பெரிசா பண்ணலாம், இல்லன்னா, அவளுக்கு ஒரு நல்ல எக்ஸ்பீரியன்ஸ் கூடவே, வீட்ல தனியா இருக்கிறத விட குழந்தைகளோட இருக்கிறது அவளுக்கு நல்ல டைம் பாஸ்”, என நீளமாக பேசி அவரை சரிக்கட்டினான். நங்கை நல்லாளும், அதை ஆமோதிப்பது போல தந்தையைப் பார்த்து தலையசைத்து சிரித்தாள்.
திருமனம் செய்து மறுவீடு சென்ற மகள், அவ்வீட்டில் மலர்ந்த முகத்துடன், மதிப்புடன் சிறப்பாய் இருப்பதை காண்பதை விட,  வேறு எதுவும் பெற்றோருக்கு  மன நிம்மதியை தந்து விடுமா என்ன?  மிகுந்த மனநிறைவுடன் நங்கையின் பிறந்த வீட்டினரும் சென்னை செல்ல… தம்பதிகளின் வழமையான இல்லறம் தொடர்ந்தது.
முதல் நாள் மூன்று பிள்ளைகள் எனத் துவங்கிய இவளது விடுதி, ஒரே வாரத்தில் இருபத்தி ஏழானது. அவர்கள் வசிக்கும் குடியிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலேயே மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருந்தது … தவிர, இருபாலரும் வேலைக்குச் செல்வதென்பது, இக்காலத்தின் பொருளாதார நிர்பந்தமாய் இருக்க… இவளது விடுதிக் கோட்பாடுகளான “தரமான.. சத்தான  உணவு, பிள்ளைகளுக்கு கட்டாயமாக்கப்பட்ட வெளியரங்க/ உள்ளரங்க விளையாட்டுகள், யோகா, மருத்துவ ஆலோசனை மற்றும் பாதுகாப்பு “, போன்ற அம்சங்கள் பெற்றோரை காந்தமாய் ஈர்க்க…., இரு மாதத்திலேயே இவளது விடுதி மிகப் பிரபலமானது. தரமான சேவைக்கு
வாடிக்கையாளரே மிக நல்ல விளம்பரதாரர்.
விளைவு , franchise எனப்படும் ஏஜென்சி உரிமைக்காக, ஒரு சில .. ஏற்கனவே இயங்கும் மழலையர் விடுதியினரும், புதிதாய் துவங்கத் திட்டம் வைத்திருப்போரும் நங்கையை அணுகினர். அவள் த்ரிவிக்ரமனிடம் ஆலோசனை கேட்க, அவனோ பிரஜனிடம் கேட்டு சொல்வதாகக் கூறினான். ஏனெனில், ப்ரஜன் அதில் கரை கண்டவன். ப்ரஜன், இவளது விடுதியின் செயல்பாட்டை இரண்டு, மூன்று நாட்கள் வந்து மேற்பார்வையிட்டான். பிறகே அவன், ஆரம்பித்து சில மாதமே ஆன நிலையில், தற்போதே உரிமையை தர அவசரப்பட வேண்டாம் எனவும், தேவைப்பட்டால், கிளைகளை உருவாக்கிக் கொள்ளலாம் அல்லது பிற்பாடு ஏஜென்சி குறித்து ஆலோசனை செய்யலாம், எனவும் த்ரிவிக்-கிடம் தெரிவித்தான்.
ஆனால், இந்த கொள்கை முடிவால், நங்கை… சில விடுதி நிர்வாகிகளின் மறைமுக எதிரியானாள், அவளுக்குத் தெரியாமலேயே. ஏனெனில் அங்கிருந்த பிள்ளைகள் இவளது கரீச்சிற்கு மாறினர். அது அவர்களின் வருமானத்தை நேரடியாய் பாதித்தது.
†*********†**********†****†**†
குழந்தைகளின் உலகம் மிக அழகானது, சுவாரசியமானது. அதில் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு கிடையாது ஜாதி மத மாச்சரியங்கள் கிடையாது, உள்ளொன்று வைத்து புறமொன்று பேச அவர்களுக்கு நிச்சயமாய் தெரியாது. அவர்கள் தேசம் கடந்தவர்கள். உள்ளதை அப்படியே எடுத்துக் கொள்வதில் அவர்களுக்கு நிகர் எவருமில்லை. பூக்கள் பூக்கும் நந்தவனத்தில். மல்லிகையை ரோஜா பழிக்குமா என்ன?., அந்நந்தவனத்தில்  நங்கையின் அனுபவங்கள்  அழகானவை… சுவாரஸ்யமானவை…,  விவகாரமானவை…சில திகிலானவை.
ஒரு தமிழ் குழந்தை ஏழு வயதே நிரம்பிய பிள்ளை இவளது கிரீச்சில் சேர்ந்தது. பேச்சுவாக்கில், மங்கை தனக்குத் தமிழ் தெரியும் என்று சொல்லிவிட, “இவன் யு.கே.ஜி. வரைக்கும் தமிழ் படிச்சான். இப்போ இந்த ஒன்ற வருஷமா நான்தான் நேரம் கிடைக்கும்போது சொல்லித்தரேன். ஃப்ரீயா இருக்கும்போது கொஞ்சம் தமிழ் வேர்ட்ஸ் டிக்டேட் பண்ணுங்க ப்ளீஸ்”, என்று குழந்தையின் அம்மா சொல்லிவிட்டு சென்றிருந்தார்.
அவ்வாறு ஒருநாள் அக்குழந்தையை தமிழ் வார்த்தைகளை எழுதச் சொல்லும் போது, நங்கை கூறிய வார்த்தை பாராட்டு. அப்பிள்ளை பா எழுதி, பிறகு ரா-வையும் யோசித்து எழுதியது, அதற்கு மேல் அவனுக்குத் தெரியவில்லை. எழுதுகிறானா என்று பார்த்துக் கொண்டிருந்த நங்கை, அவன் திருதிருவென முழிப்பதைப் பார்த்து, ‘ட்’ போட்டு ‘டு’ போடு என்றாள். பிறகு அ டு ஃ எழுது என்றாள்.
நந்தகுமார் என்ற அந்த சிறுவனும் சட்டென எழுதி முடித்து இருந்தான். “இவ்ளோ சீக்கிரம் எழுதிட்டானா?”, யோசித்த நங்கை அவன் எழுதியதை சரிபார்க்க…..,  அப்பிள்ளையோ, “பாரா it 2” என்றும், “அ 2 ஃ” என்றும் எழுதியிருந்தான். அதை பார்த்த நங்கை முதலில் திகைத்தாலும்…. பின்னர் சிரிக்க ஆரம்பித்தாள். ட், டு என்று தமிழில் எழுதச் சொன்னால், அவன் ஆங்கிலத்தில் it-டையும்,  எண்களின் இரண்டையும் எழுதுவான் என்று கனவா கண்டாள்? அதையும்விட அ முதல் ஃ வரை எழுதச் சொன்னால்…. அ 2 ஃ என எழுதி, நங்கைக்கு “இப்பவே கண்ண கட்டுதே”, என்ற உணர்வை கொடுத்தான் அந்தப் பிள்ளை.
ஒரு சீக்கிய பெண் பிள்ளை, பெயர் குர்ஷரன் கவுர், கிரீச்-ல் உள்ள ஒரு இஸ்லாமிய குழந்தையுடன் விளையாடுவதை வழக்கமாகிக் கொள்ள, அவள் அடிக்கடி சொல்லும் “இன்ஷா அல்லா”,  குர்ஷரனையும் தொற்றிக் கொள்ள… அது வீட்டில் பிரச்சனையை  உருவாக்கி… விளைவு? மறுநாள் ..பெற்றோர், அவர்களது பெற்றோர் என அனைவரும் நேராய் நங்கையிடம் வந்து நின்றனர். அனைவரையும் அமர வைத்து என்ன விஷயம் என்று கேட்டாள்.
“நீங்க ஏன் முஸ்லிம் குழந்தைங்களோட எல்லாம் என் பிள்ளைய பழக விடுறீங்க, பாருங்க அவங்க பழக்கமும் இவளுக்கு வருது. வீட்ல முட்டி போட்டு தொழுகை பண்றா,  இன்ஷா அல்லா-ன்னு எப்ப பாரு சொல்றா”, என அவர்கள் புகாராய் சொல்லிக் கொண்டிருக்க.., நங்கையோ அப்பிள்ளையை பார்த்துக் கொண்டிருந்தாள். சற்றே வெளிறிய முகத்துடன், அன்னையின் கை பிடித்துக்கொண்டு அவரருகில்,  கொஞ்சம் பயத்துடன், புருவம் சுருக்கி உதடு பிதுக்கி அழுகத் தயாராக நின்றிருந்தாள், அச்சிறுமி.
நேரே அவள் அருகில் சென்று, “நீ ஷெரின் பண்ற மாதிரி வீட்ல நமாஸ் பண்ணினயாடா?”,  என்று கேட்க, அக்குழந்தை… அண்ணார்ந்து நங்கையைப் பார்த்து, “ம்ம்..” என்றது. அதற்குள்ளாகவே கண்களில் நீர் திரண்டு அழவே ஆரம்பித்தது.
“நோ பேபி அழக்கூடாது. இன்ஷா அல்லாவும் சொன்னீங்களா?”, என்று முட்டி போட்டு அப் பிள்ளையின் உயரத்துக்கு குறைந்து, குழந்தையின் கைபிடித்து அவளருகே இழுத்து வைத்துக்கொண்டு கேட்க..,  சற்று நம்பிக்கை வரப்பெற்ற அப்பிள்ளை இப்பொழுது அழுகையை நிறுத்தி இருந்தது. தேம்பிக் கொண்டே, “ம்ம்”, என மண்டையை உருட்டியது.
“வெரி குட். அதோட அர்த்தம் என்னன்னு ஷெரின் சொன்னாளே, அத அம்மா கிட்ட சொல்லலையா?, சொல்லியிருந்தா உன்னை திட்டி இருக்கமாட்டாங்க., சொல்லுங்க அதோட அர்த்தம் என்ன?”, என்று நங்கை கேட்டாள்.
“GOD  இஷ்டப்படி”, மிகச் சுருக்கமாய் அழகாய் கூறியது அக்குழந்தை. ஆம் அதன் அர்த்தம் அவ்வளவுதான்.. அப்பெண்ணிற்கும் (ஷெரின்) அவ்வாறே பயிற்றுவிக்கப்பட்டிருந்தது.
“இப்போ சொல்லுங்க இன்ஷா அல்லா சொல்றதுல என்ன தப்பு இருக்கு?”, என்று வந்திருந்த பெரியவர்களைப் பார்த்து கேட்டாள்.
பதிலளிக்க வார்த்தை ஏது?
“இவங்க சின்ன குழந்தைங்க, அவங்களுக்குள்ள இப்பவே மதத்தைப் புகுத்தி பிரிச்சு விட்டுடாதீங்க ப்ளீஸ், அல்லாஹ்-ன்னா உங்க பொண்ணுக்கு உங்க குருமார்கள் தான் ஞாபகம் வருவாங்க, நமாஸுக்கும், நம்ம பண்ற நமஸ்காரத்திற்கும் அதிக வித்தியாசமில்லை. விளக்கம் போதும்ன்னு நினைக்கிறேன்”, பெரிய விளக்கம் கூறி முடித்தாள் நங்கை நல்லாள்.
இன்னொரு குழந்தையின் விஷயம்… சற்று விவகாரமானது. பத்து வயது நிரம்பிய பெண் பிள்ளை, சற்றே போஷாக்கான பிள்ளையும் கூட. , வளர்ச்சியும் சற்று அதிகமே. பள்ளி முடிந்து மூன்று மணிக்கெல்லாம் வரவேண்டிய குழந்தை, சில நாட்களாய் தொடர்ந்து அரை மணி நேரம் தாமதமாக வருவதால்., காரணம் என்ன? என்று கேட்டாள் நங்கை. அச்சிறுமி தினம் ஒரு காரணம் கூற…, நங்கைக்கு சந்தேகம் வந்தது.
அவர்கள் குடியிருப்பில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது நங்கையின் நினைவிற்கு வர…. இவளது விடுதியின் முன் நடந்த பதிவுகளை காண வேண்டும் என்று குடியிருப்பு கண்காணிப்பாளரை கேட்டாள். அவரும் இவள் கேட்ட பதிவுகளைத் தர, பார்த்த நங்கைக்கு அதிர்ச்சி… அச்சிறுமி, அவளது கார் ஓட்டுனருடன் சற்று எல்லைமீறி பழகுவது தெரிந்தது. அவனும், அச்சிறுமிக்கு புத்திமதி சொல்லாமல், அப்பிள்ளையின் இனக்கவர்ச்சியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருந்தான்.
நங்கை இதைப்பார்த்து வெலவெலத்தாள் என்றுதான் சொல்லவேண்டும்.
உடனடியாக அவளது அம்மாவினை தொடர்பு கொண்டு, அச்சிறுமி பள்ளிக்கு சென்றிருந்த நேரத்தில் வந்து பார்க்குமாறு கூறியிருந்தாள். அப்பெண்மணியும் வந்தார். மேற்படி விஷயங்களைக் கூற…. முதலில் அவ்வாறெல்லாம் தவறான காரியங்களை மகள் செய்யமாட்டாள் என்று அறுதியிட்டுக் கூறியவர், நங்கை கேமரா பதிவினை காண்பிக்க… அமைதியானார்.
மகளை கண்காணிப்பதாகவும், இயன்றால் வேறு ஊருக்கு மாறுதலாகி போவதாகவும் சொன்ன அந்த அன்னை, மனதார நன்றி கூறி விடைபெற்றார். ஆனால், இந்த விவரங்கள், அந்த ஓட்டுனருக்கு எப்படியோ தெரிந்து, நங்கையின் மீது வெறியானான். அவளை எவ்விதத்திலாவது பழி வாங்க நேரம் பார்த்துக் காத்திருந்தான். முன்னேற்பாடாக, அருகிலேயே ஒரு வீட்டையும் வாடகைக்கு எடுத்து, அங்கே வேன் ஓட்டுநராக பணி புரியும் அவனது நண்பனையும் குடியமர்த்தினான்.
திரிவிக்கிரமன், நங்கை பகிரும் தினப்படி நிகழ்வுகளுக்கு பெரிய விசிறியாகி இருந்தான். அவனுக்கு  குழந்தைகளின் உலகம் புதிதுதானே? கூடவும், அவற்றை நங்கை விவரிக்கும்போது, அவள் முக பாவங்களில், உடல் மொழியில் மழலைகள் செய்வதை  தத்ரூபமாய் காண்பிப்பாள்.  அதில் கவரப்பட்ட அவன், ஒரு மாலை வேளையில், அக்குழந்தைகளை, அவர்கள் அடிக்கும் கொட்டத்தினை  நேரே சென்று காண்போம் என நினைத்து… அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குச் செல்லாமல் நேரே அவளது க்ரீச்சிற்கு சென்றான். எப்படியும் வீட்டில் தனியாகத்தான் இருக்க வேண்டும், நங்கை இரவு ஏழுமணிக்கு அல்லவா வீடு திரும்புவாள்? எனவே தனியாக இருப்பதை விட பிள்ளைகளோடு இருப்பது மேல் என நினைத்தான். தவிர, ப்ரஜன் அவனிடம் பகிர்ந்த ஒரு விஷயத்தை நங்கையிடம் கூறி, எச்சரிக்கை செய்ய வேண்டியிருந்தது
அங்கே அவன் கண்டது….பத்து பதினைந்து  பிள்ளைகளோடு பிள்ளையாக, அவனது மனைவி மைதானத்தில் கபடி ஆடிக்கொண்டிருந்தாள். ஒரு புறம், சற்று வளர்ந்த பிள்ளைகள்,.. தோராயமாக ஒன்பதிலிருந்து பனிரெண்டு வயதுவரை இருக்கும், இன்னொரு புறம் நங்கை மற்றும் ஆறிலிருந்து பத்து வயதுவரை இருந்த பிள்ளைகள், அவர்களுக்கு ஆட்டத்தினை பயிற்றுவித்தபடி…. மைதானத்தை இரண்டாக்கிக் கொண்டிருந்தார்கள். காரில் அமர்ந்திருந்தவனுக்கோ, தூசியும், வியர்வையுமாய்  டிராக் பேண்ட்.. டீ ஷர்ட்டில் விளையாடிய நங்கை .. பேரழகியாய் தெரிந்தாள். காரணம் வேறொன்றுமில்லை… அவளுக்கு பிடித்த உலகத்தில் அவளது வேலையை அமைத்துக் கொண்டிருந்ததால், அகமும் முகமும் மலர்ந்திருந்தாள்  நங்கை நல்லாள்.
பார்த்த அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை.. உடனடியாக வீடு திரும்பி, அவனும் விளையாட்டு உடைக்கு மாறி, மைதானத்துக்கு வந்து சேர்ந்தான். விளையாட்டில் மிக கவனத்துடன் இருந்த நங்கை, இவனை கவனிக்கவில்லை. “நானும் விளையாட வரலாமா?”, என்று த்ரிவிக் கேட்க, திடீரென்று கணவனின் குரல் கேட்டதில், தூக்கிவாரிப் போட திரும்பியவள்… அவனது சிரிப்பான முகத்தைக் கண்டு… உள்ளார்ந்து சிரித்து… “தாராளமா”, என்றாள்.
நங்கையின் எதிரணியில் ஒருவனாக சேர்ந்தவனுக்கு, அடுத்து வந்த ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை.. பிள்ளைகளுக்கும், நங்கைக்கும்தான்… விளையாட்டு முடிந்த பின்.. த்ரிவிக்ரமன், நேரே நங்கையிடம் வந்து, வியர்வையை துடைத்தவாறு  “தேங்க்ஸ் டியர், எப்போ இவ்வளவு ரிலாக்ஸ்சா நான் விளையாடினேன்-ன்னு ஞாபகத்திலேயே இல்லை.. ஐ தரொலி [thoroughly] என்ஜாய்ட். இனி டைம் கிடைக்கும்போதெல்லாம் வருவேன்.. கட்டாயம் என்னையும் கேம்-ல சேத்துக்கணும்.”, என்றான்.
“ஹ ஹ .. நிச்சயமா, நம்ம கேம்ஸ் டீச்சர் கிட்ட சொல்லி வைக்கிறேன், நீங்க விளையாட வருவீங்கன்னு… இன்னிக்கு அவங்க லீவ்.. அதான் நானே கிரவுண்ட்க்கு வந்துட்டேன்.”
என்ற நங்கைக்கு, சிறு பிள்ளைபோல பேசிய, விளையாடும்போது சற்றும் கோடு தாண்டாத,  குழந்தைகளோடு குழந்தையாக… அவர்களுக்கும் வாய்பளித்து, ஊக்குவித்து விளையாடிய கணவனை மிகவும் பிடித்திருந்தது.
அவள் கூறாமல் விட்டது,  விளையாட்டு ஆசிரியை இருந்தாலும் நங்கை  அடிக்கடி பிள்ளைகளோடு விளையாடுவது வழக்கம், என்பதைத்தான். கணவன் மனைவி இருவரும் ஆடி முடித்த களைப்பில் வீடு திரும்பினர். இன்றைய நிகழ்வு அவர்களது அன்னியோன்னியத்தை மேலும் அதிகமாக்கியது.
வீடு வந்து சேர்ந்த இருவரும் வியர்வை தூசு போக குளித்து வந்து.. இரவு உணவை எடுத்துக் கொண்டனர். பின்னர் படுக்கைக்கு சென்ற இருவருக்கும் அவரவர் யோசனை. நங்கை, த்ரிவிக்-கை குறித்து யோசனை செய்து கொண்டிருந்தாள். அவனது பிள்ளைப் பருவம் குறித்து, வைதேகி கூறியதை மனம் அசை போட்டது. படிப்பில் தீவிரமாக இருந்ததால்,  விளையாட்டு என்பதை, த்ரிவிக்…கிட்டத்தட்ட மறந்திருந்தானாம் அப்போது. அவ்வாறு படித்ததால் தான், இந்த நிலையை அடைந்துள்ளான், என்றும் அவர் கூறியிருந்தார்.
” நங்கை…”, என்று த்ரிவிக் கூப்பிட,  ” ம்..சொல்லுங்க”, என்றவாறே அவனை நோக்கித் திரும்பினாள். “நம்மகிட்ட franchise க்கு கேட்டவங்கள்ள ரெண்டு மூணு பேரு, உன்மேல ரொம்ப கோவமா இருக்காங்க, எப்படியாவது நம்ம க்ரீச்சை, மூட வைக்கணும் ன்னு ப்ளான் பண்றாங்களாம். ப்ரஜன் காதுக்கு நியூஸ் வந்தது, கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கச் சொன்னான்.”, பேசியவன் குரலில் கவலை இருந்தது.
” ம்ம்… என்ன பண்ணிடுவாங்க?”, கலவரமாகி கேட்டவள், “வேணும்னா அப்பாகிட்ட சொல்லட்டுமா?  இல்ல சின்னண்ணனை இங்கே வரச் சொல்லட்டுமா? அவர் ஒருத்தர் இருந்தா பத்து பேருக்கு சமம்”, கணவனிடம் ஆலோசனை கேட்டாள்.
“அதெல்லாம் தேவையில்லை, இப்போதைக்கு  க்ரீச்சுக்கு செக்யூரிட்டியை டைட் பண்ண சொல்லி இருக்கான். நீயும் எங்க போறதா இருந்தாலும் தனியா போக வேண்டாம், டிரைவர் போட்டுடறேன், ஓகே?”, என்றான் த்ரிவிக்.
இன்னமும் அவள் முகத்தில் பயம் தெளியாததை கண்டு, “உங்க சின்ன அண்ணனை வேணா வர சொல்லு, வரும்போது, முத நாள் எனக்கு ஒரு டிரிங்க் கொடுத்தாரு, சுத்தமா ஸ்மெல் இல்லாத ஏதோ ஒன்னு, அத குடிச்சிட்டு தான்… உன்கிட்ட பேசி… என்ன பத்தி சொல்லி…நமக்குள்ள அண்டர் ஸ்டாண்டிங் வந்ததக்கு அப்புறம்தான், ஃபர்தரா….. மூவ் பண்ணனும்னு நினைச்சிட்டிருந்தேன். பட், அது உள்ள போன உடனே… என் கண்ட்ரோல் எல்லாம் போச்சு.. “, எப்போதும்போல இடதுகையால் தலைமுடியை அளைந்தவன், நீளமாய் பெருமூச்சு விட்டபடி, தனக்குத்தானே பேசுவதுபோல சன்னமாக, “அன்னிக்கே பேசி இருக்கணும் உன்னையும் பேசி வச்சிருக்கனும்…ம்ப்ச்”, என்று தொடர்ந்தவன், சட்டென்று நங்கையைப் பார்த்து, பளிச்சென சிரித்து, “பட் அந்த  டேஸ்ட் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அவர் வந்தா எடுத்துட்டு வர சொல்லு, ஓகே?”, என்று முடித்தான்.
அதுவரை அவனை கண் இமைக்காமல் பார்த்து இருந்தவள், இப்போது முறைத்தாள். “ம்ம்ம்….அவர் வரவே வேண்டாம்…. நீங்க சொன்னதையே பண்ணிடலாம்”, விரைப்பாய் பதிலளித்து…. ரஜாய்க்குள் புகுந்து கொண்டாள்.
த்ரிவிக்கும், குறு நகையுடன் உறங்க ஆரம்பித்தான்.
+++++++++++++++++++++++++
“கள்வன் பெரிதா காப்பான் பெரிதா?”, என்று கேட்டால், கள்வனே பெரிது என்பர். அச்சொலவடைக்கு ஏற்றாற்போல்… அதிகப் படுத்தப்பட்ட பாதுகாப்பையும் மீறி…நங்கையின் க்ரீச்சில் இருந்து, ஒரு பெண் பிள்ளை காணாமல் போயிருந்தாள். அச்சிறுமியின் பெயர் குர்ஷரன் கவுர்.. ஆம் இன்ஷா அல்லாஹ், என்று வீட்டில் கூறிய அதே குழந்தைதான்.
அரிவை இந்த இக்கட்டில் இருந்து மீள்வாளா?