உன் வருகை… என் வரமாய்…
1
மாலைநேரம் மெல்ல விலக… கொஞ்ச கொஞ்சமாக இருள் சூழ தொடங்கியது… அப்போதுதான் தனது எமஹா ரேவை… அந்த பெரிய தோட்டத்து வீட்டின் முன், ஒரு தென்னை மரத்தின் கீழே, நிறுத்தினாள் வர்ஷினி. மணி இபோதுதான் மாலை 6:45. 
அந்த சத்தம் கேட்டு… வீட்டிலிருந்து  வெளியே வந்தார் செண்பகம்.. வர்ஷினி “என்ன… பாட்டி.. சீரியல் சத்தத்தையே காணும்… கரண்ட் போயிடுச்சா” என்றாள் கிண்டல் குரலில்.
அவர் ஒன்றுமே காதில் விழாதது போல… “டீ போடவா…” என்றார் கோப குரலில். கூடவே  “இந்தா, கேரட் சாலட், அவல் போட்டது இருக்கு… சாப்பிட்டு” என்றார் தலைகீழாய்.. வேறு பேசாது. ஒரு அறுபது வயதுக்கு மேல் இருக்கும்… நல்ல திடகாத்திரமாக இருந்தார். 
இந்த வீட்டின் அடிநாதம் அவர்… ஆனால், இவர் சொந்தமன்று, இவர்களுக்கு. எல்லாம் பழக்க வழக்கம்தான்.
செண்பகத்திற்கு கோவம்… இந்த வர்ஷினிதான் போன மாதம், கவர்மென்ட் கேபிள் சரியாக வருவதில்லை என, தனியார் கேபிள் கனெக்ஷன் ஒன்று புதிதாக வாங்கி போட்டிருந்தாள். 
ஆனால் அது இங்கே… சிக்னலே வருவதில்லை… அதுவும் கொஞ்சம் மேகமூட்டமாக இருந்தால் அவ்வளவுதான்… நோ சிக்னல் மெசேஜ் வந்துவிடும்… இப்போதும் அதே…
இவர்களின் வீடு… தோட்டத்தில் இருக்கிறது… உள்ளே தள்ளி… அதாவது… தோட்டத்தின் நடுவே.. வீட்டை சுற்றிலும் வயல்… மஞ்சள் காடு…. ஈரோட்டை அடுத்து உள்ள, ஒரு டவுன்ஷிப் பகுதி. இங்கு பாதிபேரின் ஆதாரம் மஞ்சள் விவசாயம்தான். கூடவே தென்னை.. பவானி ஆற்றுநீர் பாசனம்.
காலையில் அந்த சூரியக்ரணங்கள் பூமியை தொடும் நேரம்… காற்றோடு சேர்ந்து இந்த மஞ்சள் பயிரின் வாசமும் வரும்.. இதமாய். மஞ்சள் ஒளியும், மஞ்சள் வாசமும் என அந்த இடமே அப்போது தேவலோகம்தான்… 
அந்த நேரம் வர்ஷினிக்கு மிகவும் பிடிக்கும்… எனவே எப்போதும் காலையில் அந்த தோட்டத்தில் எங்காவது ஒரு மூலையில் நிற்பாள்.. அதனை ரசித்தபடி.. அது பனியோ, மழையோ.. எந்த பருவகாலமாக இருந்தாலும் சரி… 
இதே நேரம்.. வேறு ஒருத்தருக்கும் பிடிக்கும்… அவரும் வருவார்.. அதே நேரத்திற்கு, அவன்தான் வயலின்… சொந்தக்காரன்… இந்த தோட்டத்து வீட்டை சுற்றியுள்ள.. ஆறு ஏக்கர் நிலத்திற்கு பாத்தியபட்டவன்… சிவசுப்ரமணியன்.
இந்த வீட்டின் முன்புறம் உள்ளவற்றில் மஞ்சள் இரண்டு ஏக்கருக்கு போட்டிருந்தனர். பின்புறம் சுற்றிலும்… கடலை காடு… கூடவே பாதி.. செவ்வந்தி பூ செடிகள்… எல்லாம் பாதுகாக்க வேண்டிய பயிர்கள். எனவே அதற்கு தக்க ஆட்கள் வேலைக்கு வந்து விடுவர் காலையில், மாலையில் காவலுக்கு.. என இருவேளையும் ஆட்கள் இருப்பர்.. வடக்கு தெக்காக.
இன்னொரு மூலையில் சுப்புவின் பெரிய வீடு இருக்கும்… எனவே பாதுகாப்புதான் எந்த திசையிலிருந்து பார்த்தாலும். 
இப்போது வர்ஷினி… அந்த ‘அவலை’ கொறித்தபடி… அமர்ந்திருந்தாள் செண்பகம், டீயை அவளருகில் வைத்தார்… “நான்.. சுப்பு தம்பி, வீட்டுக்கு போறேன்… 
மணியாச்சு, அந்த நாடகத்த மட்டும் பார்த்துட்டு வரேன்… 
எங்கயும் போயிடாத… வந்திடுவேன்…” என சொல்லியவர்… கிளம்பிவிட்டார்… அந்த மஞ்சள் காட்டில்… குறுக்கு வழியில்… தூரத்தில் தெரியும் பெரிய வீடு நோக்கி… 
இந்த ஆடியில்தான் விதைத்திருந்தனர்… எனவே.. மேலெழும்பி.. லேசாக இப்போதுதான் சிறு செடிகளாக வந்துவிட்டிருந்தது… அதில் அவர் சரசரவென நடக்க தொடங்கிவிட்டார்… இந்த இருட்டு வேளையிலும்.. பழகிய இடத்தில்… பயம் இல்லையே…
வர்ஷினி “செம்பா ம்மா… நில்லு… நான் கூட்டி போறேன்… லேட் ஆகும்…” என சொல்லியதெல்லாம் அவரின் காதில் விழவேயில்லை போல, நடந்து கொண்டேயிருந்தார்.
வர்ஷ்னிக்கும்… ஐயோ என்றானது… நான் ஏன் கேபிளை மாற்றினேன்… தம்பி வந்ததும் சொல்லி பழையபடி போடணும் என நினைத்துக் கொண்டாள்… 
தனது போனில் பாடலை ஒலிக்கவிட்டு… இரவு… பூண்டு சட்னிக்கு தயார் செய்து கொண்டிருந்தாள்..
அடுத்த ஒருமணி நேரத்தில் தங்கள் இருவருக்கும் தோசை ஊற்றி… பூண்டு சட்னி அரைத்து வைத்துவிட்டு தன் தம்பிக்கு, போனில் அழைத்துக் கொண்டிருந்தாள்.
தம்பி கிரிதரன்… கோவையில் உள்ள கல்லூரியில்… அக்ரி செகண்ட் இயர் படிக்கிறான்.. இந்த வாரம் வருகிறானா… என கேட்பதற்காக அழைத்துக் கொண்டிருந்தாள்.. 
இரண்டு நாட்களுக்கு ஒருதரம் பேசுவார்கள் அக்கா தம்பி இருவரும்.. அடுத்த வாரம் தீபாவளி. எனவே… லீவ் எடுத்து சேர்த்து வருகிறானா, இல்லை இந்த வாரம் வருகிறானா என கேட்பதற்காக அழைத்துக் கொண்டிருந்தாள். கிரி போனை எடுக்கவில்லை.
வெளியே திண்ணையில் அமர்ந்து, போனை நோண்ட தொடங்கினாள்… பூச்சிகளின் சத்தம் தவிர வேறு ஏதும் இல்லை அங்கு.. பயமும் இல்லை வர்ஷினிக்கு… 
‘பயம்…’ அதெல்லாம் தங்களின் அப்பா அம்மா இறந்த போதே… விட்டுபோயிற்று.. எனவே, அந்த ஆளரவமில்லா… இடத்தில், தனிமையில்.. பூச்சிகளுடன் கூட்டணியிட்டு அமர்ந்திருந்தாள்.
ஒருமணி நேரம் கழித்து… சுப்புவின் வண்டி வரும் சத்தம் கேட்டது… சுற்றிலும் செடிகள் இருக்க.. ஒரு ரோடு போல மண் பாதை இருக்கும் இவர்கள் வீட்டை அடைய… இது சுப்பு வீட்டிற்கான தோட்டம். எனவே கம்பி வேலி போட்டு எப்போதும் பாதுகாப்பாகதான் இருக்கும். 
இரவில் இந்த இரு பெண்களுக்கும் துணையாய்… பைரவனும், வஜ்ரனும்… வருவர்.. சுப்பு கொண்டுவந்து விட்டு செல்வான் இரவு ஒன்பது மணிக்கு மேல். 
வண்டி சத்தம் வரவும்… வர்ஷினி, எழுந்து உள்ளே சென்றுவிட்டாள்.. வண்டி நிறுத்தி… சுப்பு, செண்பகத்திற்கு எல்லாவற்றையும் எடுத்து கொடுத்தான், அவர் உள்ளே செல்லவும்.. வீட்டை ஒரு சுற்று சுற்றினான் கையில் டார்ச் லைட்டுடன்.
பின்பக்கம் சென்று பார்த்தான்… ஒரே ஒரு லைட் மட்டும் எரிந்தது… மோட்டார் அறையின் அருகே லைட் எரியவில்லை… அதை போட்டுவிட்டான்… கையில் டார்ச் வைத்துக் கொண்டு… வரப்பில் இறங்கி பாதி தூரம் நடந்தான்.
அங்கிருந்து ஒரு சத்தம் கொடுத்தான் “ஏலே…. பாண்டி…” என.
அங்கிருந்தும் திரும்ப… “ஓவ்வ்வ்…. வந்துட்டேனுங்க…” என்றார் ஒருவர் எதிரொலியாய்..    
“ம்… சரி சரி…. பாத்துக்க…” என்றவன் மீண்டும் வீட்டின் பின்புறம் வந்தான்… அங்கிருந்த பூச்செடிகளின் நடுவே டார்ச் அடித்து பார்த்துவிட்டு… மீண்டும் ஒரு சுற்று, வீட்டை சுற்றிவிட்டு, வந்து திண்ணையில் அமர்ந்தான்.
செண்பாம்மா வந்து “தம்பி…” என சொல்லி டீ கொடுத்தார். வாங்கிக் கொண்டான். எங்கையோ வெறித்து பார்த்துக் குடித்துக் கொண்டிருந்தான். இப்போது வீட்டினுள் டிவி சத்தம் கேட்டது. அதில் அமர்ந்தார்.. செண்பா. 
வர்ஷினி வெளியே வந்தாள்… கையில் பூண்டு சட்னியுடன்… நின்றாள். இவள் வந்த தடம் உணர்ந்து… உடனே சுப்பு சொன்னான் “அந்த மோட்டார் ரூம் லைட்ட… போட்டுவிடு எப்போதும்…” என்றான் லட்சத்தி ஒன்றாவது தரமாக..
“ம்…. மறந்துட்டேன்” என்றாள் விட்டேத்தியாக… அவளும் லட்சத்தி ஒன்றாவது முறையாக. எப்போதும் அவன் சொல்லுவான்… இவள் இதே பதிலைத்தான் திரும்பவும் சொல்லுவாள்… இது இருவருக்கும் தெரியும்.
வர்ஷினிக்கு ‘நானெதுக்கு போடணும்… இவங்க வைச்ச ஆளா.. நானு… சொன்னா செய்யணுமா’ என எண்ணி வேண்டுமென்றே செய்யமாட்டாள். 
இது சுப்புக்கும் தெரியும்… ஆனாலும், இவன் சொல்லுவான்.. சலிக்காமல் சொல்லுவான்.. கோவமெல்லாம் வராது.. சொல்லிவிட்டு செல்லுவான்.
சுப்பு மீண்டும் “அம்மா போன் பண்ண சொன்னாங்க… அரைமணி நேரம் கழிச்சு பண்ணு… இப்ப வேணாம்…” என்றான் நிதான குரலில்.
இதற்கு ஏதும் பதில் சொல்லவில்லை… அவள். சுப்பு, திரும்பி பார்த்தான்… போனில் கை எதோ செய்து கொண்டிருந்தது… “பர்வதம்….” என்றான் அதட்டல் குரலில்.
“ம்…” என்றாள் கண்ணை அதிலிருந்து எடுக்காமல்… இப்போது கடுப்பாகியவன்… கையில் வைத்திருந்த கேட் சாவியை… அவளின் கை நோக்கி வீசினான்.. சரியாக அவளின் விரலின் முட்டியில் பட்டது.. போன் கீழே விழுந்தது கூடவே “ஐயோ….” என வர்ஷினியின் குரலும் அலற…
சுப்பு “இங்க பாரு… அம்மா, அரைமணி நேரம் கழித்து கூப்பிட சொன்னாங்க… சரியா… “ என்றவன்.
“கதவ பூட்டிக்கோ… நான் கேட்டிலேயே பைரவனையும்… வஜ்ரனையும் விட்டு போய்டுவேன்” என்றான்.
அவளும், இப்போது அவனை பார்த்து “ம்..” என்று, கையை அழுத்தி பிடித்துக் கொண்டு சொல்லி, கீழே விழுந்த போனையும் கேட் சாவியை எடுத்து கொண்டு, சாவியை அவனிடம் கொடுத்தாள்.
மீண்டும் தன்போல் அவனை பார்க்காது, போனை எடுத்து ஆன் செய்தபடி… அது வொர்க் ஆகுமா என பார்த்துக் கொண்டே… கதவை அவன் போகும் முன்னே, சாற்றி விட்டு சென்றாள்.
சுப்பு அதுவரை பொறுமையாக அங்கேயே நின்று… மீண்டும் எல்லாம் சரிபார்த்து வண்டி எடுத்து சென்றான்.
செண்பாக்கும் வர்ஷினிக்கும் பொழுது நன்றாக போனது டிவி உயிர் பெற்றவுடன்… அதுவரை கோவமாக இருந்த செண்பா… டிவி வரவும்… “இங்க பாரு, என்ன பாடு படுத்தறான்… அந்த புள்ளைய” என பேசியபடியே நாடகம் பார்க்க தொடங்கினார்.
இருவரும் உண்டு முடித்து சின்ன சின்ன வேலைகளையெல்லாம் செய்து அமர்ந்தனர்… மீண்டும் டிவி முன்பு. இப்போது நினைவு வந்தவராக செண்பா “பாரு…” என வர்ஷினியை அழைத்து… எதோ இரண்டு கட்டபைகளை எடுத்து காண்பித்தார்.
இவளும் எதையோ மென்றபடி அதை பார்த்தாள்… தனக்கு, தம்பிக்கு, செண்பாக்கு என தீபாவளி துணிகள் அது.
தனக்கும் செண்பாக்கும் ஒரே  மாதிரி… பூனம் புடவை… ‘ஒன்று பச்சை நிறம் இன்னொன்று… லேவண்டர் நிறம்… தம்பி கிரிக்கு அடிக்கவரும் பச்சை கலரில்    ஒரு சட்டை…’ தெரியும் இதுதான் வருமென… ஆனாலும் வாங்கிக் கொள்வார்கள்..
செண்பா “பாரு…” என்றார் வர்ஷினியை யோசனையாக பார்த்தபடியே.. இப்போது தள்ளி அமர்ந்து கொண்டாள், அதனை கையில் கூட தொட பிடிக்கதவளாக… 
மீண்டும் செண்பாம்மா… “இது உன் நிறத்துக்கு பொருத்தமா இருக்கும்ன்னு ஐயா எடுத்தாங்களாம்” என்றார். அவளின் முகத்தை பார்த்தபடி அவள் மடியில் அந்த புடவையை வைக்க…
வர்ஷினி, அதை தொடக் கூட பிடிக்காதவளாக, தன் விரல் நுனியில் பற்றி, தன் ஆள்காட்டி விரலாலும்… கட்டைவிரலாலும் சேர்த்து எடுத்து அந்தப்பக்கம் வைத்தாள். அதை பார்த்த முதியவருக்கு சிரிப்பு வந்தது… “சரி நான் வைச்சிக்கிறேன்” என்றார்… பெருந்தன்மையாய்… 
வர்ஷினி உடனே “வேண்டாம்… அவங்க வேலை செய்யறவங்களுக்கு வாங்கியிருப்பாங்க… நான் உங்களுக்கு வேற வாங்கித்தரேன்…. நீங்க அதை வைங்க…” என்றாள் சத்தமாக.
பெரிதாக தீபாவளி கொண்டாடுவதில்லை, சுப்பு வீட்டினர். பொங்கல்தான் அவர்களின் முக்கிய பண்டிகை… அதற்குதான் வேலையாட்களுக்கெல்லாம் துணியெடுத்து கொடுப்பர்… சிறப்பாக கொண்டாடுவர்..
தீபாவளிக்கு தங்கள் குடும்பம் வரை துணி எடுப்பது. அப்போது சுப்புவின் அப்பா… ஆத்மநாதன்…. இவர்களுக்கு, போனால் போகுதுன்னு எடுத்து தருவார்… ஆனால், இன்னமும், ஒருவருக்கு முன்னூறு ரூபாய்க்கு மேல் தாண்டமாட்டார்… 
அங்கிருக்கும் மூன்றுபேர்க்கும் ஆயிரம் ரூபாய்க்குள் முடித்துக் கொள்வார். வருடா வருடம் நடக்கும் இது. சுப்பு இதை கண்டுகொள்ள மாட்டான்… பொறுப்பாய் தீபாவளியன்று… கிரிதரனிடம் கேட்பான் ‘அப்பா வாங்கி தந்தத… மதியம் போட்டுகாட்டு’ என்பான்.. சிறுவனிடம்.
இப்போது இதெல்லாம் மனதில் உலா வந்தது வர்ஷினிக்கு… அவர்கள் எடுத்து தருவதை… அழகாக ஒதுக்க கற்றுவந்தால் வர்ஷினி. 
பள்ளி காலம் வரை, தெரியவில்லை… ஆனால் கல்லூரி செல்ல தொடங்கியதும்.. கொஞ்சம் விவரம் வந்தது… தான், எங்கும் அடிமையில்லை என புரிந்தது.. 
எனவே அவர்களின் உடை… மற்றும் இதர சேவைகளை… மறுத்து தாங்களே செய்து பழக்கிக் கொண்டனர் இருவரும். ஆம் ஆத்மனாதனை பொறுத்தவரை… இவர்களுக்கு, அவர் செய்வது… சேவை.. ஆனால்.. கூலி வாங்கும் சேவை. 
எனவே சுப்புவும் தீபாவளி முடிந்த, அவள் ஒதுக்கி வைக்கும் துணிகளை “உனக்கு வேண்டான்னா… வேறு யாருக்காவது கொடு… 
இல்லாதவங்களுக்கு கொடு,
தூக்கி போடாத” என்பான்.
வர்ஷினிக்கு கோவமே வரும் “அதை நீங்களே செய்திருக்கலாம்… 
எங்க குத்தகை கணக்கு, எனக்கும் தெரியும்… 
அது எடுத்து போய் கூட வாங்கியிருக்கலாம்… 
எப்படி இத காலேஜ் போட்டு போவேன்” என அவனிடம்தான் சண்டைக்கு நிற்பாள்.
அவனும் தலையை அசைத்துவிட்டு “அம்மா கூட போய் வேற வாங்கிக்க… நாளைக்கு கார் ஏற்பாடு பண்றேன்” என்பான் சின்ன குரலில்.
“எதுக்கு, அத சொல்லி… ஆறுமாசம் அத்தைய, என்கூட பேசவிடாம பண்ணவா… 
நானும் செண்பா பாட்டியும் போய் வாங்கிக்கிறோம், 
எங்க பணத்திலிருந்து கொடுங்க போதும்” என்பாள்.
அதற்குமேல் ஒன்றும் சொல்லாமல் காலை வந்து பஸ் ஏற்றிவிட்டு பணம் தந்து செல்வான் சுப்பு. கணக்கும் எழுதி வைப்பான்.. அவனின் அப்பா கேட்கும் போது சொல்லுவதற்கு ஏதுவாக.
எனவே தங்களின் உடை, தங்களின் தேவைகளை இப்போது இந்த மூன்று வருடங்களாக சுப்புவிடம் சொல்லி… கேட்டு வாங்கி பழக்கிக் கொண்டாள். அந்த இடத்தில் சுப்பு சற்று நல்லவனே வர்ஷினிக்கு. மற்றபடி.. சுப்பு எப்போதும் ஆத்மநாதனின் மகன் அவ்வளவே.
இப்போது… இவள் வேலைக்கு செல்கிறாள், இந்த ஒருவருடமாக.. மாதமானால் கூடவோ குறையவோ… தன் சம்பளம் என்ற ஒன்று வருகிறது.. அதில் தேவையானதை வாங்கிக்கொள்வாள். அதற்கு கிரியும் ஏதும் சொல்வதில்லை.
இதே யோசனையில் அடுத்த அரைமணி நேரம் செல்ல… சுப்பு சொல்லி சென்ற நேரம் முடிந்து விட்டது… இவள் போன் செய்ய மறந்துவிட்டாள். 
பொதுவாக அவன் சொன்னால் எதையும் செய்ய மாட்டாள், எப்போதும்.. இன்று உணமையாகவே போன் செய்ய நினைத்தாள்… ஆனால், நேரம் சென்றுவிட்டது.
அவசர அவசரமாக போனை எடுத்து… அழைத்தால். ரிங் போனது… அந்த பக்கம்.. எடுத்தான் சுப்பு… மெல்லிய குரலில் “எப்போ சொன்னேன்… அறிவில்லை” என்றான், அடுத்த வார்த்தை சொல்வதற்குள் இவள், வைத்துவிட்டால் போனை.
பத்து நிமிடம் சென்று அவனே அழைத்தான்… தன் அம்மாவின் கையில் போனை கொடுத்தான் “பேசு” என்பதாக சைகை செய்து நின்று கொண்டான். தன் குரல் கேட்டாள்.. வைத்துவிடுவாள்… என்று தெரிந்ததில்.
பானுமதி, சுப்புவின் அம்மா… “தங்கம்… வந்திடுடா… நாளைக்கு காலையில… ஏழு மணிக்கு கிளம்பறோம்டா…. காரில்… 
வெளிய நிக்கிறேண்டா… சரியா நில்லுடா.. வந்திடுவெல்ல தங்கம்” என்றார்.
நாளையும் சுப்புவிற்கு பெண் பார்க்க செல்கிறார்கள்… அது குறித்து ஏற்கனவே.. பானுமதி வர்ஷினியிடம் சொல்லியிருந்தார்.. இன்று மீனும் ஒரு தரம் நினைவுபடுத்த அழைத்தார்.
குழைந்தாள்… “த்த, நானெதுக்கு… மாமா ஏதாவது சொல்லுவாங்க த்த… நீங்கதான்.. எல்லோரும் போறீங்கல்ல…. பார்த்துட்டு வாங்களேன்…” என்றாள். 
“தங்கம்… என் சொந்தம் நீதானே டா… ஒரே ஒருதரம்…. உன் அத்தைக்காக… வந்துட்டு போம்மா…” என்றார் வாஞ்சையாய்.. 
மீண்டும் அவரே “இந்த இடமே அமைச்சிடும்… ஜோசியரே சொல்லியிருக்கார், கண்டிப்பா அமையும்ன்னு….
நீ மட்டும், சரியா நேரத்துக்கு நில்லுடா…. லேட் பண்ணிடாத..” என்றார்.
“ம், சரி… ஏழு மணிக்கா… நான் வந்து ஸ்கூலுக்கு போகணும்… பெர்மிஷன் தான் போட்டிருக்கேன்… லேட் ஆகாதே…” என்றாள்.
“தெரியலையே தங்கம்…. நீ ஒருநாள் லீவ் போட கூடாதா… இந்த சுப்பு மாமாக்காக….” என்றார் கொஞ்சலாக…
“ம்… நான் போட்ட எல்லா லீவும்… அவருக்கு பொண்ணு பார்க்க தானே… 
இனி லீவ் போட்டேன்… என்னை வேலையிலிருந்து தூக்கிடுவாங்க… இதுதான் கடைசி லீவ்….
உன் பையனுக்கு கல்யாணம் ஆகறதுக்குள்ள… என் ஜோலிய… முடிச்சிடுவீங்க போல… குடும்பமே சேர்ந்து…” என்றாள் கோவமாக…
“சரிடி.. சரி டி… என் தங்கம்… இது கிட்டத்தட்ட… முடிஞ்ச மாதிரிதான்… இதுதான் கடைசி… உன் மாமனும் சொல்லிட்டான்… 
ஆண்டவா… சென்னியப்பா… நீதான் கூட இருந்து எல்லாம் நல்லபடியா நடத்திக் கொடுக்கனும்…
ம்… சரி, தங்கம், வைக்க வா…. சாப்பிட்டியா…” என்று… கடவுளிடம் வேண்டுதல் வைத்து, தன் மருமகளையும் தாஜா செய்து… கடைசியாக தினப்படி வேலையையும் விசாரித்து.. என சராசரி பெண்ணார் பானுமதி… 
“ம்…” என்றாள் சின்னவள் சுரத்தே இல்லாமல்…
“சுனங்காதடி…. ஒரே ஒரு நாள்தானே…” என்றார் உரிமையாய்…
“சரி சரி… வரேன்… வை அத்த…” என்றாள் சலித்த குரலில்.
யார் வேண்டிக் கொண்டார்களோ இல்லையோ… பர்வதவர்தினி ஆகிய வர்ஷா வேண்டிக் கொண்டாள்… ‘ஆண்டவா… இந்த சுப்புக்கு, இந்த பொண்ணையே நிச்சையம் செய்திடு… என்னால, லீவ் போடா முடியல!’ என..