கண்ணில் குளிராய் ஏதோ படுவது போல் இருக்க, மெள்ள கண்களை திறந்த சுதா திகைத்துப் போனாள். அலங்கரிக்கப் பட்ட கோவில் மண்டபம். ஐயர் மந்திரம் சொல்லி கொண்டிருந்தார்.
நாதஸ்வர வாத்தியம்.. மேள சத்தம்.. திருமண மேடை..
தீபக் தோளோடு சுதாவைச் சாய்த்து, கண்கள் திறக்க, அவள் கன்னத்தை தட்டி எழுப்பினான். பூவை போல மென்மையாய் கையாண்டான்.
“சாரி சுதா.. ஆர் யூ ஆல்ரைட்? மைல்டு டோஸ் தான்… டைம் ஆச்சு.. மேடைல உக்காரணும்.. வரியா? இல்ல தூக்கிட்டே போகட்டுமா?” மென்மையாய் தேனொழுக கேட்டான். அவளுக்குத் தான் ஈரகுலை வரை நடுங்கிற்று!
சுற்றிலும் பார்த்தாள். எல்லாம் பார்த்துப் பார்த்து செய்யப்பட்டிருந்தது. திடீட் கல்யாணம் போல் இல்லை. கண்ணைப் பறிக்கும் மண்டப அலங்காரம், மலரால் அலங்கரிக்கப்பட்ட மணமேடை, மந்திரம் சொல்லிக்கொண்டிருக்கும் ஐயர், நாதஸ்வர இசைக் குழு.. எல்லாம் அவள் விரும்பும் தமிழ்நாட்டுப் பாணியில்! அவள் ஓடாமல் இருக்க நான்கு அடியாட்கள். தப்பிக்க வழி தெரியவில்லை.
ஏதோ பழைய கற்கோவில் எனபது மட்டும் புரிந்தது. என்ன கோவில் இது? ஏன் இங்கு யாரும் இல்லை? இதெல்லாம் எப்பொழுது ஏற்பாடு செய்தான்? எதற்கும் விடை தெரியவில்லை. அதை அறிந்து கொள்ளும் ஆவல் இல்லை. விட்டால் ஓடிவிடும் ஆவல் மட்டுமே!
“பாரு.. பிடிச்சிருக்கா? நம்ம குடும்ப கோவில் தான்.. கொஞ்சம் சின்னது தான்.. நீ அன்னைக்கு உன் ஃப்ரெண்டுட்ட சொன்னியே உன் மேரேஜ் தமிழ் நாட்டு ஸ்டைல்ல தான் இருக்கும்னு.. அதுக்கு தான்.. பிடிச்சிருக்கா?”
“பச்.. ஏன் தீபக் இப்படி எல்லாம் பண்ற?” தலையைப் பிடித்துக்கொண்டே அலுப்பாய் வினவினாள்.
“சாரி.. சாரி சுதா.. இது தான் கடைசி தடவ.. இனி மேல் சத்தியமா உனக்கு மருந்து தர மாட்டேன். எனக்கு வேற வழி தெரியலைச் சுதா. இத விட்டா இதே மாதரி அமையுமானு தெரியல.. அதனால தான் அவசரப் படவேண்டியதா போச்சு!
இன்னைக்கு ரொம்ப அருமையான முகூர்த்த நாள். நீயும் கல்யாணப் பொண்ணு மாதரி அழகா உடுத்தியிருக்க. இந்த ஜென்மத்தில நீயும், அப்பாவும் சம்மதிச்சு இந்த கல்யாணம் நடக்காது. இத நிறுத்த ஒருத்தனும் ஊர்ல இல்ல… அதனால தான்.. வா.. நேரம் ஆகுது!”
“புருஞ்சுக்கவே மாட்டேனு அடம் பிடிக்கர. நீ வேண்டாம் போ. எனக்கு இதுல விருப்பமில்ல தீபக். நான் உன் கூட.. நினைச்சு பார்க்கவே முடியல.. ப்ளீஸ்” அமைதியாக உறைத்துவிட்டு வாயில் நோக்கிச் செல்ல எத்தனிக்க..
அவள் விருப்பம் இல்லாமலே.. அவளை இழுத்துக் கொண்டு மணமேடையில் அமரவைத்தான்.
“நீ தான் புரிஞ்சுக்க மாட்டேன்ற! தாலி கட்டினா எல்லாம் சரி ஆகிடும்! அப்படி தானே எல்லாரும் சொல்றாங்க! ஒரு தாலிய கட்டிட்டா அப்பரம அவன் தானே அவளுக்கு எல்லாம்.. அப்படிச் சொல்லித் தானே உன்னையும் வளத்தாங்க.. அமைதியா இரு.. எல்லாம் சரி ஆகிடும்!”
“லூசு மாதரி உளராத! நீ என்னை..”
“ஷ்.. சுதா! நீ இல்ல. நீங்க! சொல்லிப் பழகிக்கோ.. புருஷனை பேர் சொல்லி கூப்பிடுரது, நீ வா போனு மரியாதை இல்லாம பேசுரது நமக்குச் சரி வராது.. இப்போ சொல்லு..” மென்மையான கண்டிப்புடன் கூறியவனிடம்
“என் புருஷன நான் அப்படி தான் தீபக் கூப்பிடுறேன்”
“நான் தாலி கட்டறேன்.. அப்பரம் யார் உன் புருஷன்னு நீயே சொல்லு!”
“கட்டாயப் படுத்தி நீ என் கழுத்தில தாலி கட்டினா, நான் அத அவுத்து உன் மூஞ்சிலேயே விட்டெறிஞ்சுடுவேன்”
“தாலி எனக்காக இல்ல.. உனக்காக.. அது உன் கழுத்துல இருந்தாலும் இல்லாட்டியும் ஒரு தரம் நான் கட்டிட்டா.. நீ எனக்குத் தான்! அப்பிடி தான் நம்ம சொசைட்டி சொல்லுது!”
ஐயரைப் பார்த்தவன், “இன்னும் எவ்வளவு நேரம்?” என்று எரிந்து விழுந்தான்
“இதோ.. ஆச்சு.. செத்த நாழி பொருத்துக்கோங்கோ..” என்று மீண்டும் அவர் வேலையைத் தொடர்ந்தார்
“நீ.. எனக்குக் கட்டாய தாலி கட்டினா.. நீ தூங்கும் போது உன்ன கொன்னுடுவேன்.. இல்ல சாப்பாட்டில விஷம் வச்சிடுவேன்.. என்னை விட்டுடு… ப்ளீஸ்.. நான் கண்ணனை ரொம்ப விரும்புறேன்.. அவர் தான் எனக்கு வேணும்.. நீ வேண்டாம்.. என்னை விட்டுடு.. எனக்கு உன்னை இப்போ சுத்தமா பிடிக்கல..”
“ஷ்ஷப்பா… கொஞ்சம் சும்மா இரு.. நான் செத்துப் போனாலும் அப்போவும் நீ என் விதவை.. மறந்திடாத.. நல்ல நாள் அதுவுமா என்ன என்ன பேச வைக்கர? பேசாம இரு சுதா! உன்ன எழுப்பினது தப்பா போச்சு!”
“உனக்கு புரியல.. எங்களுக்கு உடல் அளவு தாம்பத்தியம் ஒன்னு தான் நடக்கல.. என் மனசு பூரா அவர் தான். என் புருஷனா.. என் எல்லாமா.. அவர் மட்டும் தான் எனக்கு.. ப்லீஸ் தீபக் புரிஞ்சுக்கோ. அவரில்லாம நான் இல்ல தீபக்.. உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது?
தப்பு தான்! உன்ன நான் அரைஞ்சது தப்பு தான். மன்னிச்சிடு.. நீ ரொம்ப நல்லவன் தான்.. நான் தான் புரிஞ்சுக்காம ரொம்ப பேசிட்டேன்.. மன்னிச்சிடு.. உன் ஃப்ரெண்ட்ஸ் முன்ன மன்னிப்பு கேட்கணுமா? கேட்கறேன்.. என்னை விட்டுடு! திரும்பத் திரும்ப தப்பு செய்யாத.. இப்போவே, நீ கேக்கர இடத்துல எல்லாம் கையெழுத்து போடறேன்.. என் சொத்து பூரா எடுத்துக்கோ.. என்னை மட்டும் விட்டுடு.. ப்ளீஸ் தீபக்..
எனக்கு என் கண்ணன் தான் வேணும். நான் அவர் மனைவி.. என்னால அவர் இல்லாம முடியாது தீபக்.. என்னை விட்டுடு.. நான் இல்லேனா அவர் இல்லாம போய்டுவார்.. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ..”
அவள் என்ன கெஞ்சியும் செவிடன் காதில் சங்குதிய கதை தான்.. அவன் அவளை பொருட்படுத்தாமல் அமர்ந்திருக்க ஆவேசம் தான் அதிகமானது.
“இதையும் தாண்டி என் கழுத்தில தாலி கட்டினே, உன் சாவு என் கைல தான்.. நிச்சயம்!”
கெஞ்சுவதைக் கைவிட்டு ஆவேசமாய் அவள் எழ, அவள் கைகளை இருக்கமாய் பற்றி இழுத்துக் கொண்டே அவளை முறைத்து, “நீ அவன் தாலி கட்டாத பொண்டாட்டியா இருந்தது போதும்.. இனி என் தாலிய சுமக்குர பொண்டாட்டியா இரு! தாலி சரட பாரு இருபத்தி ஒரு பவனுக்கு வாங்கி வச்சிருக்கேன்.. கனமா.. நான் கட்டுர அது மட்டும் தான் உன் கழுத்தில இருக்கும்! அவன பத்தி பேசின அடுத்துப் பேச வாய் இருக்காது.. ஜாக்கரத..” அவன் கர்ஜிக்க
அவன் கையை அடித்து தன்னைவிட்டு அகற்ற முயன்றுகொண்டே, “டே..ய் அசிங்கம் பிடிச்சவனே.. உன் மரமண்டைக்கு புரியலையா நான் பேசரது? நான் இன்னொருத்தன் பொண்டாட்டி டா… கணவன் மனைவி உறவு இப்படி நீ கட்டுர கட்டாய தாலில இல்ல.. அது ரெண்டு மனசும் உயிரும் சம்பந்த பட்டது. என் மனசு உயிர் எல்லாம் அவர் தான். என்னை விடுடுடு..” என்று அவள் வீரிடவும்.. அங்கிருந்த அனைவருக்கும் பாவமாய் போனது.
“அவ மேல இருந்து கை எடுடா!” குரல் கேட்டு இருவரும் திரும்பி பார்க்க தீபக் முகத்தில் அப்படி ஒரு மாற்றம். முகத்திலிருந்த மென்மையும் அமைதியும் போன இடம் தெரியவில்லை.
தீபக் கை தானாய் அவளை விடவும், ஆவேசமாய் எழுந்தவள் அப்படியே அமர்ந்துவிட்டாள். போன உயிர் மீண்டது. அடைத்திருந்த மூச்சு சீராக.. முகம் கனிந்தது. அவ்வளவு நேரம் வராத கண்ணீர் மளுக்கென்று எட்டிப் பார்த்தது.
அவனே தான்.. அவள் கண்ணனே தான்! கண் இமைக்க மறந்தது. ஆறடி மனிதனை ஒரு இன்ச் கண்ணால் விழுங்கிக் கொண்டிருந்தாள் என்று தான் சொல்லவேண்டும்.
‘வந்துட்டீயா?’ என்ற பார்வை அவளிடமிருந்து. தொண்டை அடைத்து மூக்கு விடைத்தது.
‘நீ போனு சொன்னா எல்லாம் போக மாட்டேன்.. உன்ன விட மாட்டேனு சொன்னேனே..’ என்றது அவன் பார்வை.
சரியாய் ஒரு மாதம் ஆகிறது தன் தேவதையைப் பார்த்து! கண் எடுக்க முடியவில்லை; அவளைப் பார்க்கத் துடித்த கண்கள் மோட்சம் பெற்றது… அவளின் ஒரு பார்வை.. அவனை வசியம் செய்ய, தன்னை அவளுக்குள் தொலைத்துக் கொண்டிருந்தான். அந்த காந்த விழிகளின் இமைகளை அவள் மூடி திறக்க அதனுள் சிக்கி சின்னாப்பின்னாமாக துடித்தான்.
பாதி திறந்த செவ்விதழ்கள் ‘என்னைத் தனியே விட்டாயே’ என்று குற்றம் சாட்டிய பிரமை. ‘நேற்றும் கனவில் இனித்தாயே..’ இதயம் கூப்பாடு போட்டது.
முதன் முதலாய் சுதாவைப் புடவையில் பார்க்கிறான். வெண்பட்டும் சிகப்பு அலங்காரமுமாய்.. அவன் அவளுக்காக எடுத்த வைரமும் மாணிக்கம் போலிருந்தாள். அத்தனை அழகாய்… அவன் கண்ணிற்கு விருந்தாய்..
உடலுக்குள் ஏதோ பாய்ந்தது.. கண் கண்ட காட்சியில் இதயம் வெளிவந்து துடித்தது.. அவள் அவன் செந்தாமரை! அப்படி தான் தெரிந்தாள்.
அவள் விரிந்த வேல் விழிகள்.. அந்த மாய வலையிலிருந்து மீண்டு வந்தால், அவனை விழுங்கக் காத்திருந்து அவளின் பாதி திறந்த இதழ்கள்…
அவள் இதயம் ஏதேதோ கதைகள் பேசியது அவனிடம்..
‘உன்னைத் தொலைத்திருப்பேனே’ குற்றம் சாட்டியது அவள் இதயம்!
‘இல்லை என் மொத்தமும் உன் காலடியில்.. உன் நிழலாய்.. நீ நினைத்தாலும் பிரியமாட்டேன்’ அவன் இதயம் எடுத்துரைத்தது.
“அஷோக் ஒதுங்கிடு.. அவ என் மாமன் பொண்ணு.. எனக்கு அவ கழுத்துல தாலி கட்ட எல்லா உரிமையும் இருக்கு!”
‘ஒரு மனுஷன நிம்மதியா காதலிக்கவே விட மாட்டீங்களாடா? ஒரு மாசம் கழிச்சு பாக்கறேன்டா’ நினைத்தவன், கூலாய் உறைத்தான்.. “ப்ரதர்.. நீ தாலி கட்ட வேற யாரையாவது பார்த்துக்கோ.. சுதா என் மனைவி.. இனி உனக்கு சிஸ்டர்”
தோற்றுவிட்ட உணவு தீபக்கிற்கு.. அப்படி ஒரு சீற்றம் அவன் தொனியில்! “தாலி கட்டாம கூட வச்சிருக்கவளுக்கு வேற பேரு! நீ அவளை அப்பிடி தான் வச்சிருக்கியா?”
அஷோக் அந்த வார்த்தைக்கு அப்படியே நின்றுவிட்டான்.
அவன் அவளை மனைவியாய் நினைத்தாலும், தாலி என்ற ஒற்றை சரடு கழுத்தில் இல்லை என்றால் நம் சமுகம் அவளுக்கு ‘மனைவி’ என்ற அங்கிகாரம் கொடுப்பதில்லையே! இதற்கு தானே அவள் அப்படிச் சண்டையிட்டாள். ஒரு தாலி.. அதை அவன் கட்டியிருந்தால் இன்று அது அவளுக்கு வேலியாய் இருந்திருக்குமே..
சுதாவைப் பார்த்தான்.
மணப்பெண் கோலத்தில் அலங்கரிக்கப்பட்ட தங்கச்சிலையாய் ‘பார் என் நிலையை!’ என்ற பார்வையைத் தாங்கி அமர்ந்திருந்தாள்.
அவன் தீபக்கிடம் ஒன்றும் பதில் கூறவில்லை. ஒரு நொடி அவளை பார்த்தவன்.. தீபக்கைப் பார்த்து ஒரு ஏளன புன்னகை உதிர்த்தான். எந்த அலட்டலும் இல்லை. ‘பேசு டா.. பேசு…’ என்ற பார்வை மட்டுமே.
எல்லாம் சுதா பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே நடந்தது. ஏதோ கனவு போல..
அஷோக்கின் கடைக்கண் பார்வையில் தீபக்கின் ஆட்கள் அஷோக்கின் ஆட்களால் அங்கிருந்து அகற்றப்பட்டனர். வெளியே காத்திருந்த காவல் துரையின் உதவியால் ‘சுதாவை கடத்திய குற்றத்திற்காக’ அன்னைவரும் அப்புறப் படுத்தப்பட்டனர்.
சுதா மணமேடையிலிருந்து எழுந்திருக்க அவள் விழி பார்த்தவன் என்ன நினைத்தானோ…
”கொஞ்சம் நேரம்.. நான் சொல்ற வரைக்கும் அங்கையே இரு சுதா.. வரேன்” என்றுவிட்டு, ஐயரைப் பார்த்தான்.
அடுத்து என்ன என்பது போல் அவரும் இவனை பார்க்க, “பணம் வாங்கியாசா?” எனவும்
“ம்ம்” என்று மண்டையை ஆட்டினார்
“அப்போ வந்த வேலைய பாருங்க” என்று வெளியே சென்றான்.
“நான் யார் தெரியுமா” என்று தீபக் ஆரம்பிக்க
“கோவில் வாசல்ல வச்சு எந்த பேச்சு வார்த்தையும் வேண்டாம்.. கிளம்புங்க..” என்று எ.சி.பி தீபக்கையும் அவன் கையாட்களையும் அகற்றினார்.
“நான் இப்போ போறேன்.. ஆனா சுதா.. அவ கழுத்துல நான் தான் தாலி கட்டுவேன்..” கூறிவிட்டு சென்றுவிட்டான்.
திருமணம் என்பது சொர்கத்தில் நிச்சயிக்க பெறுவது! என்ன தான் உருண்டு புரண்டாலும் அவன் அவனுக்கு விதித்தது தான் ஒட்டும்! அது தீபக் இன்னும் அறியவில்லை போலும்!
“த்தாங்க்ஸ் டா விக்கி..” என்று அஷோக் அவன் காவல்துறை உதவி ஆணையாளர் நண்பனைத் தழுவிக் கொள்ள
விக்ரம், “உனக்கில்லாத உதவியா மச்சான்? என்ன டா.. அவன் மேல கேஸ் போடவா? கம்ப்ளைன்ட் குடுக்கரியா? எதனாலும் சீக்கிரம் செய்.. எனக்கு ரெண்டு நாள்ல ட்ரான்ஸ்ஃபர் காத்திட்டு இருக்கு! வசதியான ஆள் மட்டும் இல்ல பையனோட அப்பாக்கு இங்க நல்ல செல்வாக்கு இருக்கு.. யொசிச்சுக்கோ..”
“இல்ல டா வேண்டாம். பிடிச்சாலும் பிடிக்கலேனாலும் அவன் ஃபேமிலி ஆகிட்டான். ஒரு ரெண்டு மணி நேரம் கார்லயே வச்சுட்டு அனுப்பிடு! விஷயம் தெரிஞ்சா அவன் அப்பாவே இவன் மேல கம்ப்ளைன்ட் கொடுப்பார். அவனை விட்டுடு.
சுதா அவ மாமா அத்தை மேல ரொம்ப மதிப்பும் மரியாதையும் வச்சிருக்கா.. அவங்க மனசு கஷ்ட படுர விஷயத்தைச் செய்ய விட மாட்டா.. அந்த திமிர்ல தான் பய இந்த குதி குதிக்கரான்.. மோர் ஓவர் அவன் ஒன்னும் மோசமானவன் எல்லாம் இல்ல.. இவள பார்த்தா மட்டும் கொஞ்சம் மரம் கழண்டுடுது.. கூடவே கெட்ட சகவாசம்.. கடைசியா இருந்தவனும் போய்ட்டான். இனி திருந்திடுவான்.”
“அடுத்து என்ன?”
அஷோக் ஏதோ யோசனையோடு சுசிலாவிற்கு அழைக்க, அழைப்பு ஏற்க படவில்லை. பல முறை முயன்றும் பயனில்லை.
“விக்கி, நீ உள்ள போ டா.. நான் டு மினிட்ஸ்ல வரேன்”
பெட்டியோடு விமானநிலையத்திலிருந்து வந்திருந்தான். காரிலிருந்த அவன் பெட்டியைத் திறந்து, வெண்ணிற சட்டைக்கு மாறி, அவளுக்காக வாங்கி வைத்திருந்த கழுத்து சங்கிலியும் மோதிரத்தையும் எடுத்துக் கொண்டு கோவிலுள் நுழைந்தான்.
பின்னோடு மூன்று கார்கள் வந்து நிற்க அதிலிருந்து சுதாவின் நட்பு கூட்டங்கள் வந்து இறங்கினர்.
சுதா, “நீங்க எப்படி இங்க?” என்று பார்த்தாள். ஒரே நாளில் எத்தனை அதிர்ச்சிகள்?
“எ.சி.பி சார் தான்! பத்மா அப்பா மூலமா எங்கள காண்டாக்ட் பண்ணி உனக்கு பிரச்சினைன்னு இங்க வர சொன்னார்.. உனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே?”
“இனி இல்ல” என்றவள் பார்வை அஷோக்கின் மீதே.. அவன் வராமல் போயிருந்தால்? அவன் எப்படி இங்கே வந்தான்? அவள் எங்கிருக்கிறாள் என்று அவளே அறியாத போது?
ஐயர் என்ன செய்வதென்று முழிக்க, “நீங்க மந்திரம் சொல்லுங்க.. நல்ல நேரம் முடியரதுக்குள்ள என் பொண்டாட்டி கழுத்துல தாலி கட்டனும்” என்று அவன் எடுத்து வந்த தங்கச் சங்கிலியை ஐயரிடம் நீட்ட, “இது வேற மத தாலி ஆச்சே” என்று அவர் மீண்டும் முழிக்க
‘இது வேரையா.. அது ப்ளஸ் இல்லையா? க்ராஸ்சா?’ என்று முழித்தவன், “அப்போ ரொம்ப நல்லது ரெண்டு சாமியும் எங்கள ஆசீர்வதிக்கட்டும்.. நீங்க மந்திரம் சொல்லுங்க…” என்று திரும்ப, விக்ரமும் சுதாவும் அவனைத் தான் பார்த்திருந்தார்கள்.
அஷோக் விக்ரமிடம், “என்ன டா.. இவ்வளவு பேர் முன்னாடி தாலி கட்டினா போதும் தானே?” கேட்க
விக்ரம் தலை தானாய் ஆடியது.
சுதாவைப் பார்த்தான். அவள் முகத்தில் ஏகப் பட்ட உணர்வுகள்.. அவனுக்குமே சுசிலா தான் நினைவில். ‘அம்மா இருந்திருந்தால் நிறைவாய் இருந்திருக்கும்..’ அவன் மனம் வேரெதுவும் யோசிக்கவில்லை.. அம்மா இல்லையே என்ற ஏக்கம் மட்டும் தான். சுசிலாவிடம் எடுத்துக் கூறினால் புரிந்து கொள்வார் தான்.. இருந்தும் அவன் மனம் தாயைத் தான் தேடியது. மீண்டும் மீண்டும் அவரை அழைக்க, அழைப்பு ஏற்கப்படவில்லை.
அஷோக் என்ன சொல்லியும் திருமணத்திற்குச் சம்மதிக்காத சமயம்.. ஒரு முறை விளையாட்டாய் மகனிடம் சுசிலா கூறினார், “நீ கூட்டிட்டு வந்து கட்டிகிட்டாலும் சரி.. கட்டிட்டு கூட்டீட்டு வந்தாலும் சரி! கல்யாணம் செஞ்சு குடும்பமா வாழ்ந்தா சரி தான்!” என்று.. அவர் என்ன முகூர்த்தத்தில் கூறினாரோ…!?
மணமேடை வரை ஏறின சுதாவைக் கீழ் இறக்கி வெறுங்கழுத்தோடு அழைத்துப் போக மனம் இடம் கொடுக்கவில்லை.. இருவர் மனதிலும் ஆழப் பதிந்த உறவுக்குத் தவறான அர்த்தமோ பெயரோ வருவது அவனுக்குப் பிடிக்கவில்லை. உறவுக்கு ஏற்ற அங்கிகாரம் இல்லாமல் அவளை அழைத்துப் போனால் அது அவளுக்கு பெருத்த அவமரியாதை. அவனால் ஒரு நாளும் அனுமதிக்க முடியாது.
அவன் காது கேட்கத் தானே தீபக் உரைத்தான்.. “நீ அவன் தாலி கட்டாத பொண்டாட்டியா இருந்தது போதும்..” என்று?
அவள் தன்னைக் காத்துக் கொள்ள எப்படிப் போராடவேண்டி இருந்தது. கூறினாளே அவன் காது கேட்க.. “நான் இன்னொருத்தன் பொண்டாட்டி டா… என் மனசு உயிர் எல்லாம் அவர் தான்…” என்று.. இதற்கும் மேலும் அவளுக்கு அவன் மனைவி என்ற அங்கிகாரம் தராமல் இருப்பதா?
அவன் மனைவியாய் கோவிலில் தாலி கட்டி, அம்மா முன் திருமணத்தை பதிவு செய்துகொள்ளும் முடிவு எடுத்துவிட்டான்.
அவனிடம் அவள் விரும்பி கேட்ட ஒன்றே ஒன்று.. இவ்வளவு ஆன பின் அதைக் கூட கொடுக்காமல் செல்வதா?
சுதாவின் அருகில் அவன் அமரவும் இருவருக்கும் ஒரு புது வித உணர்வு.. ஒரு நிம்மதி.. அவர்கள் வாழ்வில் ஒன்றாய் இணையப் போகும் தருணம்.
எல்லா குழப்பங்களையும் ஓரம் கட்டி அவளை மட்டுமே உள்வாங்கி கொண்டான். அழகாக அலங்கரிக்கப் பட்ட மணமேடை. கண்ணையும் மனதையும் நிறைத்தவள்.. வாழ் நாள் முழுவதும் தனக்கே சொந்தமாக போகும் நேரம்.. இருவருக்கும் ஏதோ விவரிக்க முடியாத வார்த்தைகள் இல்லா உணர்வலைகள்.
நல்ல ஒரு முகூர்த்த நாளில், நல்ல நேரத்தில், மந்திரம் ஓசை நடுவில், மேளம் கொட்ட, நாதஸ்வரம் இசைக்க, ஐயர் “கட்டி மேளம் கட்டி மேளம்” சொல்ல… இதோ அவன் வாழ்வின் நிறைவாய், அவனின் உயிராய் உணர்வாய் போனவளைக் கோவில் மேடையில் அவர்கள் நட்புகள் சூழ தன் சரிபாதியாய் சுதாவை, அவள் ஆருயிர் கண்ணன் பொன் தாலியிட்டு மனைவியாக்கிக்கொண்டான்.
குங்குமத்தை அவள் நெற்றியில் வைக்க அவள் கண் குளமாக, இதழ் சிரிக்க அவனை உள்வாங்கிக் கொண்டாள்.
அவன் வாங்கி வந்த மோதிரத்தையும் அவள் சில்லிட்ட கையில் அணிவிக்க, இருவருக்கு வார்த்தைகள் மறந்தது. இறுகப் பற்றிக் கொண்டாள் அவன் கையை. காரை கிளப்பும் வரை அவள் கையை அவன் விட்டானில்லை.
அவன் அணிவித்த தாலி, அவளுக்காகவே செய்தது போன்ற உணர்வு.. ஏதிர்பாரா நேரம் கனவெல்லாம் நிறைவாக.. அவள் கண்ணனே அவள் கண் நிறைந்த கணவனாய்..
அவன் இதய கூட்டில் பட்டை தீட்டப் பெற்ற வைரமாய்.. மாணிக்கமாய் அவளிருக்க.. அதையே அவள் கழுத்திலும் அணிவித்திருந்தான், தாலியாய்.