பௌர்ணமி 8:
அவளின் பதிலில் ஓராயிரம் வலிகளும்,வேதனைகளும் அடங்கியிருக்கும் என்று அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.சில நிகழ்வுகளின் போது அவன்… சம்பந்த பட்ட இடத்தில் இருந்திருந்தால்.. தன் காதலையே காப்பாற்றி இருப்பானே..! தன் காதலையும், காதலியையும் காப்பாற்ற முடியாமல் போன அவனுக்கு மற்ற நிகழ்வுகள் எப்படி தெரியும்…?
“நீங்க என்ன சொல்ல வரீங்க..? நிம்மதியா இருக்கான்னா..?” என்ற கேள்வியுடன் நிமிர்ந்தவன்….அங்கிருந்த மகாவின் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்தான்.
“இது எப்ப நடந்தது..?” என்று அவன் அதிர்ச்சியுடன் கேட்க….அப்போது அங்கு வந்த தேவகி மீண்டும் அழ ஆரம்பித்தார்.
“அம்மா பேசாம இருங்க..!” என்று மீனாட்சி சொன்னாலும் அவளின் கண்களும் கலங்கி தான் இருந்தது.
“ரெண்டு பொண்ணுங்களைப் பெத்தேன்…! ஒருத்தி உலகத்தை விட்டே போய்ட்டா..! இன்னொருத்தி இப்படி புருஷனை இழந்து நிக்குறாளே..!” என்று அவர் மீண்டும் ஒப்பாரியை ஆரம்பிக்க…
“அம்மா..! தயவுசெஞ்சு அமைதியா இருங்க..! அவர் வேற விஷயமா வந்திருக்கார்..! அவர் கிட்ட நம்ம கஷ்ட்டத்தை எல்லாம் சொல்லி.. அவரை ஏன் க்ஷ்ட்டப்படுத்தனும்..?” என்று அமைதியாக,அதே சமயம் அழுத்தமாக பார்க்க…தளர்ந்த நடையுடன் சென்றார் தேவகி.
“இந்த விஷயம் எனக்கு தெரியாது மீனாட்சி.பிரியா கூட என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லலை..!” என்றான்.
“ப்ரியாவுக்கே தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை..” என்றாள்.
“என்னாச்சு…?”
“என்ன என்னவோ ஆய்டுச்சு..! அதைப் பேசி இப்போ என்ன ஆகப் போகுது…?” என்றவள்…
“நேத்து சேகர் கேஸ் முடிஞ்சுடுச்சுன்னு சொன்னப்போ…நீங்க என்னைப் பார்த்த பார்வையில் ஏதோ ஒரு விஷயம் பாக்கி இருக்குன்ற மாதிரி பார்த்திங்களே..! அது என்ன விஷயம்..?” என்றாள்.
“நான் மனசுல நினைக்கிறதை எல்லாம் எல்லார்கிட்டையும் சொல்ல முடியுமாங்க..?” என்றான்.
“எனக்கு உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்..!” என்றாள் நகத்தைப் பார்த்தபடி.
“அதைத்தான் நானும் வந்ததில் இருந்து கேட்குறேன்..அதுக்கும் பதில் இல்லை…உங்கள் தங்கை சம்பந்தப்பட்ட கேள்வியிலும் பதில் இல்லை..” என்றான் கூர்மையாய்.
தேவகி அருகில் இருக்கிறாரா என்பதை பார்த்த மீனா..அவர் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு….
“சேகர் இறந்ததுக்கு நான் தான் காரணம்…அவர் மூச்சு முட்டி இறக்குறதுக்கும் நான் தான் காரணம்..! என்னால நிம்மதியா இருக்க முடியலை…அதான்..உங்ககிட்ட சொல்லி சரண்டர் ஆகிடலாம்ன்னு..!” என்று இழுக்க…
“ம்ம் அப்பறம்..?” என்றான்.
“என்னங்க சார்..! நான் என்ன கதையா சொல்லிட்டு இருக்கேன்..?” என்று அவள் கோபப்பட..
“கண்டிப்பா மீனாட்சி.நீங்க கதை தான் சொல்றிங்க..! அதுவும் உண்மை கதை..!” என்றான்.
“அப்போ உங்களுக்கு முன்னாடியே தெரியுமா..?” என்றாள்..தன் யோசனையின் படி.
“ஓரளவுக்கு” என்றான்.
“அப்பறம் ஏன்…இந்த கேசை குளோஸ் பண்ணிங்க..!” என்றாள் கேள்வியாய்.
“நானா வேணுமின்னு செய்யலை.போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் என்ன சொன்னதோ அதை சொன்னேன்..மத்தபடி இதில் நான் ஒன்னும் செய்யலை..!” என்றான்.
“என்மேல் உங்களுக்கு இருந்த சந்தேகத்தை சொல்லி இருக்கலாமே..?” என்றாள்.
“அப்ப உங்க மேல எனக்கு சந்தேகம் இருந்தது அப்படிங்கிற விஷயம் உங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கு…!” என்றான்.
“ஆமா…! ஒருத்தர் பார்வையை வச்சே சொல்லிட முடியாதா..? அப்படி பார்த்தா உங்க பார்வை ஆராய்ச்சியும்,சந்தேகமும் கலந்து தான் இருந்தது..அதான்..!” என்றாள்.
“ஒருத்தர் பார்வையை வச்சே…என்ன நினைக்கிறாங்கன்னு சொல்லிடுவிங்களா..?” என்றான்.
“ஓரளவுக்கு..” என்றாள்.
“அப்போ..! கடைசியாய் என்னை என் தங்கையுடன் பார்த்தப்போ…நான் பார்த்த பார்வைக்கும் அர்த்தம் விளங்கி இருக்கணுமே..!” என்றான்.
அவனின் கேள்வியில் விதிர்விதித்தவள்…”என்ன பேசுறிங்க..? நான் புருஷனை சாக கொடுத்து …இப்போ விதவை..!” என்றாள்.
“புருஷனை சாக கொடுத்து இல்லை…சாகடிச்சு..! அதே மாதிரி நான் உங்கள் கல்யாணத்து முன்னாடி பார்த்த பார்வையின் அர்த்தம் தான் கேட்டேன்..இப்போ அப்படி பார்த்து, அதற்கு அர்த்தம் கேட்கலை..!” என்றான் விடாப்பிடியாய்.
“எனக்கு தெரியாது..!” என்றாள்.
“தெரியாத மாதிரி நடிக்கிறன்னு சொல்லு..! நான் எதுக்காக உன்னைப் பார்த்தேன்னு உனக்குத் தெரியும். உன் மனசுல என்ன இருந்ததுன்னும் எனக்கு தெரியும்..!” என்றான்.’நீங்க’ என்ற வார்த்தையில் இருந்து ‘நீ’ என்ற வார்த்தைக்கு தாவியிருந்தான்.
“என் மனசில் எதுவுமில்லை..அப்பவும்,இப்பவும்,எப்பவும்..!” என்றாள்.
“இதே இடத்துல..வேற அதிகாரி இருந்திருந்தா இப்படி தான் கூப்பிட்டு உண்மையை சொல்லி இருப்பியா..?” என்றான்.
“கண்டிப்பா..” என்றாள் உறுதியாக.
“பொய்..!”
“இல்லை உண்மை..!”
“நூறு சதவிகிதம் உண்மை..! அது என்னன்னா…நீ என்னை காதலிச்சது உண்மை…கழட்டி விட்டது உண்மை..கல்யாணத்துக்கு அப்பறம் இந்த உண்மை தெரிஞ்சு உன் புருஷன் அட்டாக் வந்து செத்தான் அப்படிங்கறதும் உண்மை…!” என்றான்.
“இல்லை..இல்லை..!” என்று அவள் கத்த…
“அதைத் தான் நானும் சொல்றேன்…இல்லை தான்.ஆனா நான் இப்படி தான் வெளிய சொல்ல போறேன்..!” என்றான் கூலாக.
“உங்களுக்கு என்ன பைத்தியமா…?” என்று அவள் கத்த…
“ஆமாடி பைத்தியம்…உன்னை மனசில் நினைச்சேன் பாரு அப்ப இருந்து பைத்தியம்..! பார்க்குற பார்வையிலையே புரிஞ்சுப்ப அப்படின்னு நினைச்சு சும்மா இருந்தேன் பாரு நான் பைத்தியம்.இப்படி போய் அப்படி வரதுக்குள்ள.. ஒரு கல்யாணத்தைப் பண்ணிட்டு நின்ன பாரு…நான் பைத்தியம்.அது தெரிஞ்சும் எனக்குள் நானே உக்கி உருகுனேன் பாரு நான் பைத்தியம்..!உன்னை மறந்துட்டேன்னு நினைச்ச நேரத்துல..கேஸ் விசாரிக்கக் வந்த இடத்துல..உன்னை இப்படி விதவையா பார்த்தேன் பரு..நான் பைத்தியம்…
எல்லாத்துக்கும் கடைசியா..”நான் தான் என் புருஷன் சாவுக்கு காரணம்ன்னு நீ சொல்லியும் அதைக் கேட்டுகிட்டு பைத்தியம் மாதிரி நான் நிக்குறேன் பாரு…நான் பைத்தியம் தான்..!” என்று சொல்லி விட்டு அவன் மூச்சு வாங்க..!
அவனின் ஒவ்வொரு கேள்வி பதிலிலும் அதிர்ந்தாள் மீனாட்சி.அவன் பார்வையில் ஆர்வம் இருந்தது மட்டும் தான் அவளுக்குத் தெரியும்.மற்ற படி அவன் இந்த அளவிற்கு தன்னை விரும்பியிருக்க கூடும் என்று அவள் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை.
“சார்…நீங்க நினைக்கிற மாதிரி இல்லை..!” என்று மீனாட்சி எதையோ சொல்ல வர..
“தெரியும்…! இது எதுவுமே உனக்குத் தெரியாதுன்னு எனக்கும் தெரியும்.பட் இப்பவாவது சொல்லனும்ன்னு தோணுச்சு… சொல்லிட்டேன்..!” என்றான். அவனுக்கு மனசில் இருந்த பாரம் எல்லாம் குறைந்து லேசானதைப் போன்ற ஒரு உணர்வு.
அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க….
“இங்க பார் மீனாட்சி..! உன் சம்பந்தபட்ட எல்லா விஷயங்களிலும் எனக்கு லேசான சந்தேகம் இருந்தது.இப்போ அதை உறுதி பண்ண எனக்கு ஒரு நாள் போதும்.
இப்போ உனக்கு உண்மையை சொல்லி ஜெயிலுக்கு போக ஆசை வந்திடுச்சு…! அப்படி போகணும்ன்னா என்னோட மனைவியா தான் போகணும்..! வசதி எப்படி..?” என்றான் புருவத்தைத் தூக்கி.
“அது ஒரு நாளும் நடக்காது..!” என்றாள் வேகமாய்.
“அப்போ நீயும் உண்மையை சொல்லி ஜெயிலுக்கு போக முடியாது…! ஒழுங்கா வாயை மூடிகிட்டு இருக்குற வழியைப் பார்..!” என்றவன் கிளம்ப ஆயத்தம் ஆக…
“எனக்கு ஜெயிலுக்கு போகணும்ன்னு ஆசை இல்லை.எதுக்கு நீங்க உண்மை தெரிஞ்சும் அமைதியா இருக்கீங்க..? அந்த கேள்விக்கான பதிலை தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன்..!” என்றாள்.
“நேரம் வரும் போது கண்டிப்பா சொல்றேன்..! எதிர்காலத்துல ஒரு மனைவியை காப்பாத்த வேண்டிய சூழ்நிலை கணவனுக்கு வரலாம் இல்லையா…அதான் இப்ப இருந்தே முயற்சி பண்றேன்..!” என்றான்.
“நீங்க நினைக்கிறது ஒரு காலமும் நடக்காது…!” என்றாள்.
“நடக்காதுன்ற வார்த்தை என் அகராதியிலேயே இல்லை…நடத்திக் காட்டுவான் இந்த செந்தில் குமரன்..!” என்றபடி செல்ல..அவன் சென்ற திசையையே வெறித்துக் கொண்டு நின்றாள் சர்வ மீனாட்சி.
அவளுக்கு மனதில் பலவித எண்ணங்கள்.இந்த சூழ்நிலையை எப்படி கையாள வேண்டும் என்று அவளுக்குத் தெரியவில்லை.ஆனால் இன்னொரு திருமணத்தை அவளால் நினைவால் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.
“எதுக்காக எல்லாரும் இப்படி பண்றாங்க..? எனக்குன்னு சொந்த விருப்பு வெறுப்பு எதுவுமே இருக்க கூடாதா..? என்னோட உணர்வுகளுக்கு இங்கே யாரும் மதிப்பு தர மாட்டாங்களா..?” என்று அவள் நினைக்க…அவர்கள் இதுவரை பேசிய அனைத்தையும் தேவகியின காதில் விழுக செய்தது விதியின் செயலோ…இல்லை குமரனின் செயலோ..யார் அறிவார்.சில விஷயங்களுக்கு விடை தெரியாமல் இருக்கும் வரை தான் சுவாரஸ்யம் எல்லாம்.
தேவகிக்கு தான் இது அதிர்ச்சி.பெண்ணின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்று எண்ணி அவர் மறுகிக் கொண்டிருக்க…இந்த நிலைமைக்கு அவள் தான் காரணம் என்ற உண்மை அவருக்கு தெரிந்த வினாடி..அவர் உடல் வெறும் கூடு தான்.
ஒரு உயிரைக் கொல்லும் அளவுக்கு அவர் மகள் கொடூர மனம் கொண்டவள் இல்லை.ஆனால்…எதற்காக நடந்திருக்கும்..? ஏன் இப்படி செய்தாள் என்று யோசிக்க…தேவகியின் மனம் இறுகிக் கொண்டே சென்றது.
மீனாட்சியை விட்டு அவர் மெதுவாக விலக ஆரம்பித்தார் என்று கூட சொல்லலாம்.கோபாலனுக்கு இதைப் பற்றி எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.மகாவின் மரணத்தின் போதே அவருக்கு அட்டாக் வந்து காப்பாற்றி இருந்தனர்.அதனால் அவரிடம் இது போன்ற விஷயங்களை எல்லாம் இப்போது சொல்வதில்லை.
குமரன் சொல்லிவிட்டு சென்றதற்கு பிறகு..மீனாட்சியை சந்திக்க முயலவேயில்லை.அவளைத் தேடியும் வரவில்லை.தன் கூட்டிலிருந்து சிறுக சிறுக வெளி வந்து கொண்டிருந்தாள் மீனாட்சி.
நாட்கள் வாரங்களாக,மாதங்களாக உருண்டோடி..இறுதியாக வருடமாகவும் முடிந்திருந்தது.இந்த இடைப்பட்ட காலத்தில் நிறைய மாற்றங்கள்.நிறைய வளர்ச்சிகள்.
ராஜ்மோகனுக்கும்,செல்லம்மாவிற்கும் தான் ஒன்றும் புரியவில்லை.அன்று மீனாட்சியைத் தான் மணப்பேன் என்று சொன்னதோடு சரி.அதற்கு பிறகு அதைப் பற்றி அவன் ஒன்றும் பேசவில்லை.
அவர்கள் சம்மதத்திற்கு வேண்டி நிற்கிறான் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும்..ஏனோ அந்த சம்மதத்தை அவர்களால் தர முடியவில்லை.அதற்காக பிற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் என்றில்லை.சிறு தயக்கம்..அவ்வளவே..இன்றைய கால கட்டத்தில் இப்படி நடப்பது எல்லாம் சாதாரணம் என்றாலும்…செல்லமாவிற்கு யோசனை இருந்து கொண்டே இருந்தது.
அவர்களின் மனநிலையை சரியாக கணித்தான் குமரன்.அதனால் தான் இத்தனை மாதங்களாக அவர்களின் யோசனைக்கு மதிப்பளித்து அமைதியாக இருந்தான்.இனியும் பொறுக்க முடியாது என்ற முடிவுக்கு வந்திருந்தான்.
அன்றைய காலைப் பொழுதில் இருந்தே மனதில் ஒரு சின்ன உறுத்தல்.ஏதோ நடக்க கூடாத ஒன்று நடக்கப் போவதாய்.
ஒரு கேஸ் விஷயமாக இரண்டு நாள் வெளியூர் செல்ல வேண்டி இருந்ததால்.. அதைப்பற்றிய சிந்தனையில் இருந்தவனை கலைத்தது பிரியாவின் குரல்.
“அண்ணா..!”
“ஹேய் பிரியா…! வாடா…எப்படி இருக்கீங்க மேடம்..!” என்றான் அவள் காதுகளை பிடித்தபடி.
“நான் நேத்தே வந்துட்டேன்…நைட் எவ்வளவு நேரம் வெயிட் பண்ணேன்.. நீங்க தான் வரவேயில்லை.அப்பறம் தூக்கம் வரவும் போய் தூங்கிட்டேன்..!” என்றாள் தூக்கக் கலக்கத்துடன்.
“நைட் வரதுக்கு ரொம்ப நேரம் ஆகிட்டது.வந்து பார்த்தேன்..! தூங்கிட்டு இருந்தியா..அதான் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்ன்னு சொல்லி வந்துட்டேன்..!” என்றான்.
“காலேஜ் எல்லாம் எப்படி போகுது..?”
”நல்லா போகுதுண்ணா…உனக்கு தான் என்கிட்டே போன்ல பேசக்கூட நேரம் இல்லை…நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்..” என்றாள்.
“சாரிடா..கொஞ்சம் வொர்க் ஜாஸ்தி.ஒரு கேஸ் விஷயமா அலைஞ்சுகிட்டு இருக்கேன்..அதான்..! இதை முடிச்சுட்டா நான் பிரீ ஆகிடுவேன்..அப்பறம் எங்கையாவது கூட்டிட்டு போறேன் ஓகே வா..!” என்றான்.
“ஓகே அண்ணா..!” என்று கொட்டாவி விட்டபடி செல்ல..அப்போது தான் அவனின் மூலையில் உதித்தது அந்த யோசனை.
“பிரியா..”
“சொல்லுண்ணா..!”
“உன் பிரண்ட் மகா எப்படி இருக்கா…?” என்று அவன் கேட்க அதிர்ந்து நின்றாள் பிரியா.
“மகாவா…? அது வந்து..” என்று இழுத்தவளுக்கு தூக்கம் இருந்த இடம் தெரியாமல் பறந்து போயிருந்தது.
“அதான்..உன் பிரண்ட் மகா லட்சுமியை தான் கேட்கிறேன்…இப்போ எப்படி இருக்கா…நல்லா இருக்காளா..? எங்க இருக்கா..?” என்றான்..தன்னுடைய லேப்டாப்பை பைக்குள் வைத்துக் கொண்டே.
“ந..நல்லா இருக்கான்னா..!” என்று மென்று முழுங்கினாள் பிரியா.
“அப்படியா…?” என்றான் யோசனையுடன்.
“அப்போ சரி..! ஒரு நாள் போய் பார்த்துட்டு வரலாமா..?” என்றான்.
“என்னண்ணா திடீர்ன்னு?”
“என்னமா இப்படி கேட்குற…அவ உனக்கு பெஸ்ட் பிரண்டு தானா..? அதான் சொன்னேன்..! என்ன போய் பார்த்துட்டு வரலாமா..?” என்றான்.
“ச..சரிண்ணா..!” என்றவளுக்கு வியர்த்துக் கொட்ட..அதை பார்த்தும் பார்க்காததைப் போல் இருந்தான் செந்தில் குமரன்.
ஆனால் பிரியாவிற்கு தான்…நிம்மதி இருந்த இடம் தெரியாமல் போனது.அவள் நிம்மதியாகவும் இல்லை.சாதாரணமாகவும் இல்லை. அப்படி இருப்பதைப் போல நடித்துக் கொண்டிருந்தாள்.அந்த நடிப்பு இன்று ஒரு முடிவுக்கு வந்து விடுமோ என்ற பயத்தால் தான்…அவளுக்கு வியர்த்து ஊத்தியது.
“என்னடா இப்படி ஸ்வெட் ஆகுது? எனி பிராப்ளம்..!” என்றான் அக்கறையாய்.
“நோ அண்ணா..ஐயாம் நார்மல்.ஐயாம் ஓகே..!” என்றவள்..அந்த இடத்தை விட்டு காலி செய்ய..அவளை யோசனையுடன் பார்த்துக் கொண்டு நின்றான் அவன்.